/

தொல்வினைக்கட்டு: இசை

நாட்படு தேறல்

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர்

நாழி முகவாது நானாழி- தோழி

நிதியும் கணவனும் நேர்படினும் தம்தம்

விதியின் பயனே பயன்.

மூதுரை- அவ்வையார்

“தோழி!  ஆழ்கடலில் சென்று  எவ்வளவுதான்  முக்கி முக்கி எடுத்தாலும் , ஒரு படியானது  நான்கு படி நீரை முகவாது. பெருஞ்செல்வம் வாய்த்து, நல்ல கணவனும் வாய்த்து விட்டாலும் என்ன?  விதிப்படியே நிகழும்  யாவும். 

“நாழி முகவாது நானாழி” என்கிற வரி தெய்வத்தின் சத்தியம் போல் ஒலிக்கிறது. அதன் முன்னே மனிதன் நடுநடுங்கிச் சாகிறான். 

நமது நாட்டுப்புறச் சொலவடைகள் உண்மையில் வாழ்வின் சாறு இறங்கிய மருந்துக்குளிகைகள். நெஞ்சோடணைத்து நம் கண்ணீரைத் தேற்றுபவை.  ஆனால் நாம் அதை சொல்லிச் சொல்லித் தேய்ப்பதில் அதன் ஒளி மங்கிவிடுகிறது. நமக்கு மட்டும் ஆசையா என்ன? அப்படித் தேய்த்துக் கிழிக்கிற அளவில் கிடக்கிறது நம் வாழ்வு. மேற்காணும் பாடலைப் படிக்கும் போதெல்லாம் எனக்கு நினைவு வரும் ஒரு சொலவடை ” என்னதான் ஒடம்புபூரா எண்ணெயத் தேய்ச்சுட்டு மண்ணுல படுத்துப் பொரண்டாலும் ஒட்ற மண்ணுதானே ஒட்டும்?”

 ‘ஊழ்வலி’என்பது தமிழ் இலக்கியத்தில் தொல்காப்பியத்தில் இருந்தே துவங்கிவிடுகிறது. 

” ஒன்றே வேறே என்றிரு பால்வயின்

  ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின்

  ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப”

என்கிறது சூத்திரம். சிக்கலான இச்சூத்திரத்தின் முழுமைக்குள் செல்ல வேண்டாம். ” பால்” எனில் ஊழ். ” பாலது ஆணையின் ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப” என்கிறது. அதாவது ஒரு ஆணும் பெண்ணும் சந்தித்துக் கொள்வதில், காதல் கொள்வதில் ஊழின் பங்கு முக்கியம்  ” என்கிறது. ” ஊழது ஆணையின்” என்று அழுத்திச் சொல்கிறது.

குறுந்தொகையின் 229 வது பாடல்… சிறு பிராயத்தில் சண்டைக் கோழிகளாக,  தலைமயிர் பற்றித் தாக்கிக் கொண்ட இருவர்,  பின்நாளில் காதல் வயப்பட்டு உடன் போக்கு நிகழ்த்தும் காட்சியைக் காட்டுகிறது. அவர்களை அப்படியாக்கிய ஊழை வாழ்த்துகிறது. காதல் பிராயத்தில் “காசறு விரையே! கறும்பே!  தேனே! ” எனக் கொஞ்சிக் கொண்டவர்கள்,  பின்நாளில் நடுத் தெருவில் தலைமயிர் பற்றிப் புரண்டதை குறுந்தொகை காட்டவில்லை. ஆனால் நாம் நிறையப் பார்த்துவிட்டோம். 

 புறநானூற்றிலும் இம்மை, மறுமை கருத்தாக்கங்களை காண முடிகிறது.  இம்மையில் செய்த நல்வினையின் பயன் மறுமையில் கிடைக்கும் என்று கருதி அறம் செய்வது அறமாகாது. அது ” அறவிலை வணிகம்” என்கிறது.

” மறுமை நோக்கின்றோ அன்றே

பிறர் வறுமை நோக்கின்று அவன் கை வண்மையே! 

என்று பேகனைப் பாடுகிறார்  பரணர். ” நீர்வழிப்படும் புணை போல் முறைவழிப்படும் உயிர்” என்பது கணியன் சொல்லும் பாடம். 

“ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.” என்கிறார் வள்ளுவர். ஊழினை வென்று விடலாம் என்று நாம்  ஏதாவது திட்டம் திட்டினால் ஊழ் அதை விட பெரிய திட்டமாகத்  தீட்டிவிடும் என்கிறார். எல்லா வலியினும்  ஊழின் வழியே பெருவலி என்கிறார். ஆனால் இன்னொரு அதிகாரத்தில் இன்னொரு  மாதிரி பேசுகிறார்..

” ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

 தாழாது உஞற்று பவர் ” 

சோராது துணிந்து வினை செய்பவர்கள் ஊழை கூட புறமுதுகு காட்டச் செய்து விடுவார்கள் என்பது பொருள். ஏன் இப்படி மாற்றி மாற்றிப் பேசுகிறீர்கள்? என்று அய்யனோடு சண்டைக்குப் போகலாகாது. அய்யன் அரசியல்வாதி அல்ல.அவர் நம்மிடம் வாக்குக் கேட்டு வரவில்லை. அவரிடம் நம்மை கொள்ளையடிக்கும் திட்டங்கள் ஒன்றுமில்லை. ஒரே ஒன்றை விடாப்பிடியாக மாற்றாமல் ஒப்பிப்பதுதான் நேர்மை என்றும் நீதி என்றும் நாம் நினைக்கிறோம். நாம்  அப்படியில்லை ஆனால் நீதி அப்படியிருக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.  வாழ்வு அப்படி ஒருபடித்தானதாக,  தெளிவானதாக இல்லை. கலங்கிக் கிடக்கும் வாழ்வைப் பேச ஒரே ஒரு நீதி போதாது. எண்ணற்ற தடைகளுக்கும், கடும் துரதிர்ஷ்டங்களுக்கும் இடையே துணிந்து போராடுகையில் ” ஊழையும் உப்பக்கம் காண்பர்” என்கிற குறளைப் பற்றிக் கொள்ள வேண்டும். அரும்பாடுபட்டு அயராது  முயன்றும்  விருப்பங்கள் தவறிவிடுகிற கையறு நிலையில் ” ஊழிற் பெருவலி” மேல் சாயந்து கொண்டு மீள எழ வேண்டும். 

இப்பவும் நான்  வண்டியை எடுக்கும் போது  என் அம்மா ஓடோடி வந்து  குழந்தைக்குச் சொல்வதைப் போல் சொல்கிறாள்..  ” பார்த்து….பத்திரம்”. தாயே! அந்த எட்டுவழிச்  சாலையில் நான் மட்டுமா போகிறேன்? முன்னே ஒருத்தன் போகிறான். பின்னே ஒருத்தன் போகிறான். எதிரே ஒருவன் வருகிறான். நான்கு முனைச்சந்திப்பில் பத்து பேர் சந்திக்கிறார்கள். தவிர நமது தேசத்தில் நாயும் மாடும் குறுக்கே போகின்றன. யாரும், யாவும் பத்திரமாக இருக்கும் பட்சத்தில் நானும் பத்திரமாகத் திரும்பி விடுவேன் தாயே! மனிதன்தான் எவ்வளவு அப்பாவியாகத்  தன்னைத் தனி என்று எண்ணிக் கொள்கிறான்? மகளை மணமுடித்து அனுப்பும் தகப்பன் அத்தனை சாத்தியங்களின் முன் நின்றுதான் அப்படிக்  கண்ணீர் வடிக்கிறார். 

ஊழை ஆகூழ், போகூழ் என்று இரண்டாகச் சொல்கிறார் அய்யன். அதாவது நல்வினை, தீவினை. யாவையும்  ஆக்கித் தரும் ஊழ் ஆகூழ். போக்கிவிடும் ஊழ் போகூழ். ஆனால் போகூழை நினைக்கும் அளவு மனிதன் ஆகூழை பொருட்படுத்துவதில்லை. ஆகூழின் போது அவன் அந்தரத்தில் மிதக்கிறான்.  மகிழ்ச்சி தன் பிறப்புரிமை என்று அவன் உறுதியாக நம்புவதால் அப்போது ஊழைக் குறித்தெல்லாம் அவன் சிந்திப்பதில்லை. போகூழின் போது அவன் பாதாளத்தில் கிடந்து கண்ணீர் வடிக்கிறான். ஏன்? ஏன்? ஏன்? என்று எட்டுத்திக்கும் நோக்கி கேள்வி எழுப்புகிறான். எல்லாவற்றுக்கும் பொறுப்பென்று சொல்லப்பட்டும் , ஏனென்று  சொல்லாத  அந்த ஒரு ஆட்டுவிப்பு அருளிச் செய்த சொல்லோ இந்த ஊழ்?ஏன்  என்ற கேள்விக்கு ஊழ் என்ற பதில் சொன்னால் மனிதன்  அமைதி கொண்டுவிடுகிறான். எதற்கும் தான் பொறுப்பல்ல என்கிற விடுதலையுணர்வு அவனை அவ்வளவு ஆசுவாசப்படுத்தி விடுகிறது. 

இளமையிலே கணவனை இழந்து , முதுமையில் தன் ஒரே மகனையும் சாலை விபத்தில் பறி கொடுத்துத் துடித்துக் கொண்டிருந்த ஒரு தாயை திருநீறு கொடுத்து தேற்றும் நித்திய சைத்தன்ய யதியை எங்கோ படித்திருக்கிறேன். சிவமும், யதியும் என்று பெரியோர்களாக சேர்ந்து நடத்திய நாடகம். ஆயினும் அவசியமான நாடகம்.

தமிழின் புகழ்பெற்ற காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை இரண்டிலும் ஊழின் பங்கு உண்டு.  ” ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்” என்கிற சிலப்பதிகார வரி பள்ளிப் பருவத்தில் என்னை பயமுறுத்திய ஒரு வரி . இப்போது அந்த வரியைக் கொஞ்சம் நிதானமாகப் பார்க்கமுடிகிறது. அதனுள் தென்படும் விரக்தியையும், விரக்தியுள் தென்படும் அமைதியையும் ஆசுவாசத்தையும்   இப்போது பார்க்கமுடிகிறது. 

பிறவி துன்பமயமானது என்று சொல்லும் நமது பக்தி இலக்கியங்கள் பிறப்பறுக்கச் சொல்லி இறைவனிடம் மன்றாடுகின்றன.   ”  எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்” என்று உருகுகிறார் மாணிக்கவாசகர். ” மீண்டு வாரா வழி அருள் புரிபவன்”  என்று இறைவனைப் போற்றிப் பாடுகிறர். 

 இன்னொரு திருவாசகப் பாடல்..

“நாயிற் கடைப்பட்ட நம்மையும்  ஓர் பொருட்படுத்துத்

தாயிற் பெரிதும் தயாவுடைய தம் பெருமான்

மாயப் பிறப்பறுத்து ஆண்டான் என் வல்வினையின் 

வாயில் பொடி அட்டிப் பூவல்லி கொய்யாயோ!

நாயிற் கடைப்பட்ட நம்மையும் ஓர் உயிராய்ப்  பொருட்படுத்தி , தாயிற் சிறந்த தயாவான எம்  பெருமான்  மாயப் பிறப்பை அறுத்து அருளினான். நமது வல்வினையின் வாயில் மண் அள்ளிப் பூசிவிட்ட அவன் புகழைப்  பாடிப்பாடி   பூக் கொய்வோமாக! 

“பிறவித்துன்பம்” என்கிற சொற்கட்டு சாமானியர் நாவிலும் சாதாரணமாகப் புழங்கக் கூடியது

ஆயினும் சாமானியன் வாழவே விரும்புகிறான் என்று நினைக்கிறேன். அவனை  உயிராசை பற்றிப் படர்ந்துள்ளது. சந்ததி தொடர்வது என்பது ,தான் தொடர்வதுதான். இறந்த பின்னும் தன் பேங்க் பேலன்ஸை தானே அனுபவிக்க நல்லதொரு உபாயம் மக்கட்பேறுதான்.  இவ்வளவு துன்பங்களுக்கு மத்தியிலும் இங்கு எதையோ அவன் கண்டுவிட்டான். வாழ்வு ருசி கண்டுவிட்டது அவனுக்கு.

கம்பனின்  காவியத்தில் பல இடங்களில் ஊழ் பேசப்படுகிறது.சீதையை இராவணன் கவர்ந்து சென்ற பிறகு  இராமனுக்கு சடாயு கூறும் ஆறுதல் மொழிகள் இவை..

அதிசயம் ஒருவரால் அமைக்கல் ஆகுமோ?
“துதி அறு பிறவியின் இன்ப துன்பம்தான்
விதி வயம்’ என்பதை மேற்கொளாவிடின்,
மதி வலியால் விதி வெல்ல வல்லமோ? 

ஒரு அதிசயத்தையும் மனிதனால் ஆக்க இயலாதெனில் , அவன் இங்கு என்னதான் புடுங்கிக் கொண்டிருக்கிறான்? அவன் சிந்தை ஓயாமல் ஓடி ஓடி உழைக்கிறதே, அதற்கெல்லாம் என்னதான் பொருள்?

‘தெரிவுறு துன்பம் வந்து ஊன்ற, சிந்தையை
எரிவுசெய்து ஒழியும் ஈது இழுதை நீரதால்;
பிரிவுசெய்து உலகு எலாம் பெறுவிப்பான் தலை
அரிவு செய் விதியினார்க்கு அரிது உண்டாகுமோ?

உலகைப் படைத்தவனான பிரம்மனும் ஊழின் பிடியிலிருந்து தப்ப இயலாது. அவனது தலையும் ஊழ் வலியால் சிவபெருமானால் கிள்ளப்பட்டதல்லவா?

தமிழின் மகாகவியான பாரதி “லீலை இவ்வுலகு” என்கிறார். அவனுக்கு யாவும் சக்தியின் விளையாட்டு. புரட்சியைப் பாடும் போதும் அவனுக்கு பராசக்தியும் , அவளது கடைக்கண் பார்வையும் தேவைப்படுகிறது.

“இன்னும் ஒரு முறை சொல்வேன், பேதை நெஞ்சே!

எதற்கும் இனி உளையாதே, ஏக்கம் தீர்வாய்!

முன்னர் நமது இச்சையால் பிறந்தோம் இல்லை;

முதல் இறுதி இடை நமது வசத்தில் இல்லை”

முதலும் இறுதியும் விடு, இடை கூடவா நம் வசம் இல்லை சுப்பிரமணியா? ” தொல்வினைக்கட்டு” என்கிற பாரதியின் சொற்சேர்க்கையை வாசித்த நாளில் நெடுநேரம் அதன் முன் பேச்சற்று அமர்ந்திருந்தது நினைவில் இருக்கிறது.

தொல்காப்பியத்தில் துவங்கிய ஊழ் நவீனக் கவிதையிலும் தொடர்கிறது.

மரணத்தின் லாரி

இன்னுமா டிபன் கட்டவில்லையென

பணிக்குச் செல்லும் பரபரப்பில்

மனைவியிடம்

சலித்துக் கொள்பவனின்

மரணத்தின் லாரி

டீசல் நிரப்பிக் கொண்டிருக்கிறது

அரைமணி நேரத்தில்

முடிஞ்சிடும் என

அதன் ஓட்டுநர் பேசிக் கொண்டிருந்தது

பிரபஞ்சத்திடமா?

-இளங்கோ கிருஷ்ணன்

இந்தக் கவிதையின் கடைசி வரி ஒரு உளறல். ஆனால் அழகான சரியான உளறல்.

விளையாட்டு என்பது மனிதர்கள் ஆடுவது. அது விதிமுறைகளுக்கு உட்பட்டது.  ” திருவிளையாடல்” கடவுள் ஆடுவது. அதற்கு ஒரு விதியும் இல்லை. அது தனிக்கணக்கு. அங்கு கேள்வி கிடையாது. கேட்டாலும் பதில் கிடையாது. 

திருவிளையாடல்

நெஞ்சு வெடித்துச்

சாகப் போகுமுன்

அவன் கேட்டான்

” என் தெய்வமே

எனக்கு மட்டும்

ஏன் இப்படி?”

காதில் விழாதது போல

பாவனை செய்த கடவுள்

கடமையே கண்ணாக

தனது அடுத்த

அற்புதத்தை நிகழ்த்த

புதியதொரு

பூஞ்சையான இதயத்தை

தேடத் தொடங்கினார்.

– க மோகனரங்கன்

” உன் பாட்டனும், பூட்டனும் சொல்வது இருக்கட்டும் நீ என்ன சொல்கிறாய் இசை ஊழ் பற்றி? “

“எல்லா மருந்தும் தீர்ந்துவிட்டு பிறகு எஞ்சியிருக்கும் ஒரு மருந்து இதுதான் என்பதால் அதை ஸ்டெப்னியாக வைத்துக்கொள்வதில் தவறொன்றுமில்லை தம்பி”

இசை

கவிஞர் இசை தமிழில் நவீனக்கவிதைகளை எழுதி வரும் கவிஞர். மென்மையான நகையுணர்வு கொண்டவை இவருடைய கவிதைகள். உறவுகளின் சிக்கல்களையும் சமகாலத்தின் அரசியலையும் கேலி இல்லாமல் புன்னகையுடன் கூறுபவை.

நன்றி : தமிழ் விக்கி

4 Comments

  1. மிகச் சிறந்த கட்டுரை..வாழ்த்துகள்

  2. மிகவும் சிறப்பாப கட்டுரை. உணர்வின் மொழி உச்சம். வாழ்த்துகள் இசை.

    • திறம்பட யோசி. எல்லாம் அவன் செயல். நன்றிகள் பல எழுத்தரே. இதுவும் ஒரு வகை ஊழ்தானா

  3. சிறப்பான கட்டுரை எனப் படிக்கவும்../ சிறப்பாப../ என சொல் விழுந்தது கண்ணூழ் தான் போல..!!

உரையாடலுக்கு

Your email address will not be published.