/

பரிசுத்த ஆதி பற்றிய நினைவேக்கப் புனைவுகள்- கள்ளம்கபடமற்ற விவசாயி: இளவேனில்

மனிதர்கள் நினைவுகளின் வழி இயங்கப் பழக்கப்பட்டிருக்கின்றனர். நேற்று எனும் நினைவின் மீதான நிகழ்வுகளாக இன்றும் நாளையும் உருக்கொள்கின்றன அல்லது உருக்கொள்வதாக மனிதர்கள் நம்புகிறார்கள். கடந்த காலம் பற்றிய மனிதர்களின் நினைவுகள் இரண்டு வகையில் புரிந்துகொள்ளப்படுகின்றன. நேற்று எனும் காட்டுமிராண்டி நரகத்தை விட்டு நீங்கி நாளை எனும் பொருள்முதல்வாத சொர்க்கத்தைச் சென்று சேரும்  ஹாப்ஸிய நம்பிக்கை அல்லது பரிசுத்த ஆதியை விட்டு நீங்கித் தப்பிக்க முடியாத புதைக்குழிக்குள் மாட்டிக்கொண்ட ரூஸோவியப் புனைவுகள். 

இன்றைய தமிழ்ச் சூழலில் ஹாப்ஸியக் கதையை காட்டிலும் ரூஸோவின் புனைவு அதிகப் பிரபலமானது; பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளதக்கது. இதற்கு வரலாற்றுக் காரணியாகக் காலனியம் இருக்கக்கூடும். முகலாய/ஐரோப்பிய வருகைக்கு முன்னான சில நூறு வருடங்கள் புறக் காரணிகள் அதிகம் இல்லாமல் ஒரு சீராக இயங்கிய சாதி ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த சமூக இயக்கத்தில் காலனியத்தின் தாக்கம் மிகவும் தீவிரமானது. வெளிக் காரணிகள் என்பதை ஐரோப்பியமைய ‘தேசியம்’ எனும் கருத்தாக்கத்தைக் கொண்டே இந்திய நிலப்பரப்பை நான் அணுகுவதைக் குறிப்பட்ட வேண்டி இருக்கிறது.

காலனியத்துக்கு முன்னான தமிழ் அல்லது இந்தியச் சூழலில் எதுவுமே மாறிவிடவில்லை அல்லது எல்லாம் பல ஆயிரம் வருடங்களாக அப்படியே இருந்தன என்று தட்டையாக முடிவு எழுதுவது இதன் நோக்கமில்லை – எடுத்துக்காட்டாக இந்திய உணவு முறையில் முகலாய/பெர்சிய/அரேபிய உணவுகளின் தாக்கம் முடிவற்றது. இந்திய உணவுகள் என்று பெருமை பொங்க அடையாளப்படுத்தபடும் பல வட இந்திய உணவுகளின் தோற்றம் துருக்கி, லெபனான் பகுதிகளாக இருப்பது தற்செயல் நிகழ்வு அல்ல. மாறாக ஐரோப்பியக் காலனியம் ஏற்படுத்திய பாரிய மாற்றங்களின் எல்லைகளும் விளைவுகளும் இன்று வரையிலும் உலகில் இருக்கும் அனேக சமூகங்கிலும் அதிகப்படியான தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன. அது கிழக்கு x மேற்கு எனும் துருவங்களின் சமூகக் கலாச்சார பொருள்முதவாத முரண்களாக மட்டும் பரிணமிக்காமல், அகிலம் முழுவதையும் ‘மேற்காக’ மாற்றிய மாபெரும் வரலாற்றுச் செயல்பாட்டையும் நிகழ்த்திக்காட்டியது.

ஐரோப்பிய/முகலாய வருகைக்கு முன்பு,கடந்த காலம் குறித்து உரையாடிய தமிழ்க் கலை வடிவங்களில் பெருமிதங்கள் ஆட்கொண்டிருந்தன. மொழி, கடவுள்/இறைமை, சாதி, ஆட்சிமை, போர் வெற்றிகள், ஆண் வீரம், எதிர்ப்பாலீர்ப்பு காதல், பெண்மையின் மகிமை(!), சமூக ஒழுக்கம் ஆகிய கலாச்சாரப் பெருமைப்பீத்தல்களாகவே வெளிப்பட்டன. இந்தப் பெருமைப் பீத்தல்களே இன்றளவும், “நாங்கள் எல்லாம் அந்தக் காலத்தில்” எனும் பெருமிதச் சொற்தொடரின் மூலம் ஆகும்.  நிற்க, வரலாற்றின் சில பகுதிகளும் அதன் நிகழ்வுகளும் கலை வடிவங்களும் வழமையான ஆட்சியாளர்களுக்கு, அதிகாரங்களுக்கு தேவையான வடிவத்தில் மாற்றப்பட்டன, அழிக்கப்பட்டன என்பதையும் கருத்தில் கொள்க.

ஐரோப்பிய வருகைக்கு பின், குறிப்பாக இந்திய ஒன்றிய விடுதலைக்குப் பின்னான தமிழ்ப் புனைவு வெளிகள், குறிப்பாக எழுத்து, திரைப் பிரதிகள்  தொடர்ந்து இறந்த காலம் குறித்த நினைவேக்கங்களை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. அப்படி வெளிப்படும் நினைவேக்கம் ஐரோப்பியக் காலனியத்தின் வழி ஆழமாக வேரூன்றிய முதலாளித்துவப் பொருள்முதல்வாதச் சிந்தனையுடன் மோதிப் பெருவெடிப்பாக வெளிப்படுகிறது. இந்த எழுச்சியின் காரணமாக மையநீரோட்ட நினைவேக்கச் சிந்தனைகள் முதலாளித்துவப் பொருள்முதல்வாத நிலைக்கு எதிரான  நிலப்பிரபுத்துவ/சாதிய ஆண்டான் அடிமை முறையின் சிந்தனைகளாக மீள் உருவாக்கம் கொள்கின்றன. 

நம் காலத்தில், நேற்று குறித்த நினைவேக்கங்கள் வெகுஜன ஊடக வெளிகளைக் கடந்து மெய்நிகர் வெளிகளையும் பெருமளவு ஆக்கிரமித்திருக்கின்றன.இணைய உலகம் குறிப்பிட்ட அளவில் பொன்னுலகக் கதைகளால் நிரம்பி இருக்கின்றது. உலகமயமாக்கல் காலத்தில் இறந்த காலமென்பது இழந்துவிட்ட பூர்விகக் கதைகளின்மீது கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது.பூர்விகம்என்பதன் பொருள் உணவு, உடை, சமூக ஏற்றத்தாழ்வுகள், மொழி, போர், கலை, வழிபாட்டுமுறை என்று அனைத்தையும் உள்ளடக்கிய மொத்த வாழ்முறையை குறிக்கிறது. இவை அனைத்திலும் உணவுமுறை குறித்த மகிமை கதைகள் இணைய வெளியில் அதிகப்படியான கவனம் பெறுகின்றன. அப்படியான முக்கியத்துவம் பல நேரங்களில் அறிவியல் மறுப்பு வாதங்களாக பரிணமிக்கின்றன [1].

இணையம், வெகுமக்கள் ஊடகங்களில் உணவு முறைமீது கட்டி எழுப்பப்படும் புனிதக் கதையாடல்கள், உணவு உற்பத்தியின் மூலமான விவசாயத் தொழிலையும் இணைத்தே புனிதப்படுத்துகின்றன. மேலும் அப்புனைவுகளின் மையப் பாத்திரமாக ‘கள்ளம்கபடமற்ற விவசாயி’ எனும் புனித ஆத்மாவையும் கட்டமைக்கின்றன. விவசாயம், விவசாயி குறித்த பரிசுத்த அடையாளங்கள் புதியவையல்ல, திருக்குறள் முதல் இன்றைய கலைப் படைப்புகள் வரை அதற்கான எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்.  மனிதர்களின் மதம் சார் அற விழுமியங்கள் கட்டமைத்த நன்மை X தீமை, பரிசுத்தம் X அழுக்கு  கதையாடல்கள் இயற்கையின் அளவீடுகளில் அர்த்தமற்றதாக இருப்பதால், விவசாயம் அல்லது விவசாயி புனிதமானவர்களா எனும் அபத்தமான வினாக்களை விடுத்து, ஏன் இந்தப் புனித பிம்பங்கள் தேவைப்படுகின்றன எனும் கேள்வியைக் கேட்க வேண்டி இருக்கிறது.

2

தமிழ் சினிமாவில் புனிதக் கதையாடல்கள்

2010க்கு பின்னான தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தகுந்த அறைக்கூவலாக மாசற்ற பழைய வாழ்கை முறைக்கு திரும்புவோம் எனும் முழக்கம் இருக்கிறது. விவசாயம் பற்றிக் குறிப்பாக இயற்கை விவசாயம் குறித்துத் திரைக்குள்ளும், திரைக்கு வெளியேயும் தமிழ் சினிமாக் கலைஞர்கள் தொடர்ந்து உரையாடுவதை அவதானிக்க முடியும். ஆனால் இரண்டு இலட்சம் சொச்சம் ஹோமோ செப்பியன் வரலாற்றில் மாசற்ற பழங்காலம் எது என்பதே அடிப்படைச் சிக்கல். மேலும், ரூஸோவின் ஆதி எனும் பொன்னுலகின் தாக்கத்தில் வெளிப்படும் இந்தப் பார்வைகள், ரூஸோவியச் சிந்தனையின் அடிப்படையைப் புறந்தள்ளுகின்றன.

இன்றைய மானுடவியல், தொல்லியல் உலகின் தாரக மந்திரமான, “விவசாயத்துக்கு முன், விவசாயத்துக்குப் பின்” எனும் மனித வரலாற்றுக் காலஅளவு, “விவசாயத்தைக் கண்டுபிடித்ததே மனிதர்கள் செய்த மாபெரும் தீங்கு” எனும் ரூஸோவின் கருத்திலிருந்து உருவானது. இக்கருத்தே இன்றளவும் நாம்  நம்பும் – ஆதியில் மனிதர்கள் கள்ளம்கபடமற்ற அப்பாவிகளாக இருந்தார்கள், எனவே, அந்த அற்புதமான பொன்னுலக வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் எனும் நம்பிக்கைக்குமான மூலமாக இருக்கிறது. ரூஸோவின் அல்லது ஹாப்ஸின் சிந்தனை முறைகள்மீது முடிவற்ற கேள்விகளை எழுப்ப முடியும் அல்லது வரலாற்றுத் தரவுகளைக் கொண்டு நிராகரிக்க முடியும் என்பது ஒரு புறம் என்றாலும் அது இந்தக் கட்டுரைக்கான மூலமாக இருக்கவில்லை.

விவசாயம் எனும் மையத்தைக் கொண்டு நிகழும் தமிழ் திரைப்படக் களங்களும் ரூஸோவின் சிந்தனை வழியே பரிசுத்த ஆதி எனும் கருத்தாக்கமாகவே உருவாகி இருக்கிறது, இதற்குக் காரணம் மேலே சொன்னது போல் ரூஸோவின் மூலமான இறந்தகாலப் பொன்னுலகம் தமிழ்ச் சமூகத்தில் பெரிதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கருத்தியலாக இருக்கிறது. 

இறந்தகால பொன்னுலகம் எனும் கருத்தியல் தமிழ் சமூகத்தில் இரண்டு நிலைகளில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது 1)வெள்ளந்தியான மனிதர்கள் நிரம்பிய பொன்னுலகம் மற்றும் 2)தமிழ் அரசர்களின் பெருமைமிகு ஆட்சி. நாம் நம்புவதுப்போல் மனிதர்கள் நிஜமாகவே பொன்னுலகில் அப்பாவிகளாக வாழ்ந்தார்கள் – பொண்ணுலகம் என்ற ஒன்று இருந்திருக்கிறதா அல்லது அது செமடிக் மத நிறுவனங்களின் இருமைகளின் வழி உருவனதா என்று சிந்திக்க வேண்டி இருக்கிறது. அல்லது நாம் நமக்கு சொல்லித்தரப்பட மையநீரோட்ட வரலாற்றின் ஊடாக நம்புவதுப் போல் தமிழ் அரசர்கள் பொற்கால ஆட்சியை நடத்தினார்கள் என்ற கேள்விகள், திரவத்தன்மையில் அணைத்து திசைகளிலும் பாய்ந்தோடும் பல பதில்கள் கிடைக்கக்கூடும். 

பொன்னுலகம் எனும் வார்த்தையிக்கு அதற்கான பொருளை தரும், பொன் எனும் சொல்லின் மூலமான ‘பொன்’ என்ற உலோகத்தின் அளவீடே புனைவுகளால் உருப்பெற்ற ஒன்றாக இருக்கும்போது அதன் உவமையான வாழ்க்கைமுறை மட்டும் புனிதமான ஒன்றாக இருந்தது என்று நம்புவது அபத்தமானதாக இருக்கமுடியும்.  

வெள்ளந்தியான அப்பழுக்கற்ற மறைகள் எடுத்துரைக்கும் ஒழுக்க பண்புகள் அனைத்தையும் ஒருங்கே கொண்ட கருனைமிக்க இறையின் மனித வடிவமாக காட்சி படுத்தப்படும் விவசாய திரைப்படங்களின் விவசாயிகள் இன்றைய தமிழ் சமூகத்தின் ஒடுக்கப்படும் முகமாக முன்வைக்கப்படுகிறது ஏன் எனும் கேள்வி கேட்க வேண்டி இருக்கிறது.

சாதிய/நிலப்பிரபுதுவ அடையாளங்களை முற்றிலும் நிராகரித்து, உபரிமுறை அடையாளங்களை மட்டுமே சார்ந்திருக்க வேண்டியதின் அழுத்தமே 21ஆம் நூற்றாண்டு மனிதர்களை இழந்துப்போன அடையாளங்களை மீட்டெடுக்கும் நிர்பந்தங்களை கொடுக்கிறது. இந்திய சூழலில் சாதி சமூக இயக்கத்தின் ஆணிவேராக இருப்பதால் பழமை மீதான ஏக்கத்தையும் சாதியே தீர்மானிக்கிறது. மேலும் ரூஸோவின் மறுமலர்ச்சி கால சிந்தனையில் ‘நேற்றையை பொன்னுலக’மாக விவசாயத்துக்கு முன்பான வேட்டை சமூகங்கள் இருந்த நிலையில், கூட்டு முதலாளித்துவ 21ஆம் நூற்றாண்டில் ‘நேற்றையை பொன்னுலக’மாக நிலப்பிரபுதுவ கால விவசாயமிருக்கிறது. இன்னும் சில நூறு ஆண்டுகள் கழித்து மனிதர்களுக்கு ‘நேற்றையை பொன்னுலக’மாக  கூட்டு முதலாளித்துவ 21ஆம் நூற்றாண்டு இருக்கக்கூடும். 

நேற்றைய மனிதர்களின் கதைகள் இந்திய சமூக அமைப்பில் இயல்பாக சாதியையும் இணைத்துக்கொண்டு உருக்கொள்கிறது. இன்று வரையிலுமே இந்திய சமூகத்தில் சாதி நீக்கம் செய்யப்பட்ட வெளியை உருவாக்கும் சமூக கலாச்சார பிரதிகள் அர்த்தமற்ற வெற்றிடத்தை மட்டுமே உருவாக்கும். சாதியின் எந்த துருவத்தில் ஒரு பிரதி தன்னை நிறுத்துகிறது என்பதினுடாகவே அப்பிரதியை அணுக முடியும். விவசாயி எனும் அடையாளத்தை முதலாளித்துவ பொருளாதாரத்தில் மூன்றாக நிலைநிறுத்தும் சாதி, ஒரு முனையில் ஒடுக்கப்பட்ட நிலமற்ற விவசாய கூலிகளையும் மறுமுனையில் குறு/சிறு இடைநிலை சாதி விசாயிகளையும், இன்னொரு துருவத்தில் ஆண்டைகளான நிலக் கிழார்களையும் நிலைநிறுத்துகிறது. இதில் இன்றைய தமிழ் காட்சி வெளிகள் யாரை மையமாக கொண்டு உருவாக்குகின்றன?

நிலக்கிழார் x ஒடுக்கப்பட்ட விவசாய கூலிகள் என்ற முரண்கள் எண்பதுகளின் தமிழ் சினிமாவின் முக்கிய கதைக்களமாக இருந்தது. ஒடுக்கப்பட்ட நாயகன் x ஒடுக்கும் ஆண்டை என்ற துருவங்களில் நிகழ்வுகளாக திரைக்கதைகள் உருவாக்கப்பட்டன. அதன் பின் 90களின் சினிமாக்கள் ஆண்டை/ இடைநிலை சாதி பீற்றல்களாக வெளிவந்தன. இந்த திசை மாற்றம் கடைசி விவசாயி என்ற   திரைப்படம் குறித்து பேராசிரியர் தர்மராஜ் எழுதிய குறிப்புகள் ஊடக அணுகுவது எளிமையாக இருக்கும்.

கடைசி விவசாயி திரைப்படத்தை அசலான திராவிட சினிமா என்று சொல்லும் தர்மராஜ், அது பிராமண நீக்கம் செய்யப்பட்ட முதல் திரைப் பிரதி என்கிறார். மேலும் தர்மராஜ் முன்வைக்கும் திராவிட x பிராமண முரணை இரண்டு நிலைகளில் அணுகலாம். 1) நவீனத்துவத்துக்கு தன்னை தகவமைத்துக்கொண்ட பிராமணீயம் x இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டுக்கு வர மறுக்கும் திராவிடம். ஆனால் திராவிடம் பழமைவாத கொள்கையா? அல்லது பழமை அடையங்களை மறுமலர்ச்சி கால சிந்தனைகள் வாயிலாக மீட்டுருவாக்கம் செய்து, பிராமணீயத்தின் அதிகார மைய தவமைப்புக்கு எதிராக உருவான குறுந்தேசிய அதிகார மையமா? 2) இங்கு குறிப்பிடும் திராவிட x பிராமண முரண் மையநீரோட்ட இடைநிலை x உயர் என்ற இரண்டு ஒடுக்கும் சாதிகளுக்கான முரணா? திராவிட சிந்தனையின் அடையாளம் இந்த முரணா அல்லது அது ஓட்டு அரசியல் சார்ந்த திராவிட கட்சிகள் உருவாக்கிய முரணா?

இது எதுவாக இருந்தாலும், இயல்பாக விவசாயத்தையும், விவசாயிகளையும் புனிதப்படுத்த முனையும் தமிழ் சினிமா, தமிழ் சமூகத்தின் ஒரு பெரும் திரளான மக்களான நிலமற்ற விவசாய கூலிகளை புறந்தள்ளுகிறது. மேலும் 100 நாள் வேலை திட்டம் போன்றவற்றை விமர்சிப்பதின் மூலம் அதன் பயனாளிகளையும்  சமூகத்தின் மையநீரோட்ட உலகை காக்கும் புனிதமான விவசாயி என்ற சிந்தனைக்கு எதிராக நிலை நிறுத்துகிறது.       

இரண்டாயிரங்களுக்கு பிறகு உலகமையமாக்களின் வருகை, இணையம் மற்றும் மெய்நிகர் வெளிகளின் தோற்றம் தமிழ் கதைகளின் நிகழ்வு எல்லைகளை மேலே சொன்ன இரண்டின் தாக்கத்தின் ஊடாக கட்டமைக்கின்றன. மேலும் உலகமைய பொருளாதாரம் உருவாக்கிய நகரம் சார்ந்த பொருளாதாரம் பெரும்பான்மையான ஒடுக்கிய சாதிகள் மற்றும், குறைந்த அளவிலான ஒடுக்கப்பட்ட சாதிகளை கிராமங்களிலிருந்து நகரங்களை நோக்கி நகர்த்தியது, குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் சார் பணிகள் இந்த நகர்வை எளிமை, விரைவாக்கின. நகரங்கள் ஒடுக்கிய சாதிகளின் பெருமித அடையாளங்களை முழுமையாக இல்லை என்றாலும் ஓர் அளவுக்கேனும் சிதைதன. குறிப்பாக சென்னையில் சூத்திர சாதி அடையாள அனுகூலங்கள் நிர்மூலமாக்கபட்ட மனிதர்கள் தங்களின் இழந்த அடையாளங்களை புனைவுகளில் தேட ஆரம்பித்ததின் விளைவாக, நினைவேக்க பிரதிகள் கலை வெளிகளில் உருவாகின. ஒரு நிலையில் முதலாளித்துவ பொருளாதாரத்துக்கு எதிரான அல்லது கேள்விகேட்ட படைப்புகள், அதற்கு எதிரான நிலப்பிரபுத்துவ வாழ்வு முறைக்கு திரும்பி இழந்துப்போன அனுகூலங்கள் திரும்ப பெறுவதற்கு முனைந்தன. 

90களில் சாதி பெருமை பேசிய தமிழ் சிமாக்களின் நீட்சியாக விவசாய பெருங்குடி சினிமாக்கள் “நாங்கள் எல்லாம் அந்த காலத்தில் எப்படி இருந்தவங்க தெரியுமா” என்ற நினைவேக்க பீற்றல்களை வெளிப்படுத்துகின்றன. தேவர் காலடி மண்ணையும், எஜமான் காலடி மண்ணையும் தீண்ட மறுக்கும் இன்றைய மக்களை 100 நாள் வேலை திட்டத்தின் வாயிலாக உலகுக்கே சோறு படைக்கும் விவசாயத்தை அழிக்கும் கயவர்களாக போகிற போக்கில் சொல்லிவிட்டு போய்விட முடிகிறது. அல்லது, தங்கள் அடையாளங்களை அதன் அனுகூலங்களையும் அழித்த நகரத்தை பற்றி, கயவர்களும், பொருக்கிகளும் நிறைந்த ஊர் என்ற வெறுப்பை வெளிப்படுத்த விளைகின்றது. 

மீண்டும், தங்களின் சாதிய அனுகூலங்கள் நிறைந்த நிலப்பிரபுத்துவ வாழ்வுமுறைக்கு திரும்புதல் எனும் பிரகடனம், இயல்பாக அதற்கான நியாங்களையும் சேர்த்தே கட்டமைக்கின்றன். அந்த நியாயங்களை தாங்கள் அறிந்த, தங்களுக்கு சொல்லப்பட்ட, மெய்நிகர் ஊடகங்கள் கடத்தும் புனைவுகள் வாயிலாக “தங்கள்” வரலாற்றை நியாயங்களாக கட்டமைக்கின்றனர். அப்படி கட்டமைக்கப்படும் நியாயங்களை நாளை உலகை காப்பற்ற ஒரே வழியாக முன்னிருதப்படுகிறது.

முதலாளித்துவ அமைப்புமுறை மனிதர்களை தனித்து விட்டவர்களாக மாற்றி இருப்பதை பற்றி, சமூகத்தின் ஆன்மாவை சிதைத்து பற்றி, இயற்கையை உபரியின் வேட்கையை கொண்டு அழித்ததை கேள்வி கேட்பதென்பது, சாதிய ஏற்ற தாழ்வுகள் நிரம்பிய நிலப்பிரபத்துவ வாழ்கைக்கு திரும்பி செல்வதாகாது. சாதி எலோருக்குமான பொன்னுலகமாக இல்லாத போது அதை நிராகரித்து மனிதர்கள் அனைவரும் இயந்து வழ தேவையான மாற்று/புதிய வாழ்வு முறைகளை தேடுவதும் அதற்கான முன்நகர்வுகளாக விவசாயம் குறித்து பேசும்போது பஞ்சமி நில மீட்பு, கடந்த காலங்களில் ஆண்டை சாதிகள் நிகழ்த்தி சாதிய ஒடுக்குமுறைகளை ஒப்புக்கொல்வதும், போகிற போக்கில் சமூக நீதி திட்டகங்கள், இடஒதுக்கீடுகள் பற்றிய அபத்த வாதங்களை முன்வைக்காமல் இருப்பதும் இருக்க முடியும்.  

இளவேனில்

இளவேனில் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். கடந்த எட்டு ஆண்டுகளாக புதினங்கள், கட்டுரைகளை எழுதி வருகிறார். ‘உரையாடல்கள்’ எனும் சிறுகதை தொகுப்பு வெளியாகி இருக்கிறது.

உரையாடலுக்கு

Your email address will not be published.