நமது தத்துவ தரிசனங்களை அறிவியலுடன் உரசிப் பார்ப்பதில் தவறில்லை: சங்கரன் ரவிச்சந்திரன்

உரையாடல்: ரா.கிரிதரன்

கேள்வி: கார்லோ ரொவெல்லி ஏன் உங்களுக்கு முக்கியமானவராகத் தெரிகிறார்?

பதில் :   தத்துவமும் கோட்பாடு அறிவியலும்  எதிரெதிர் எல்லைகளில் இருப்பவை.  ஆனால் இவ்விரண்டின் இறுதி இலக்கு என்பது ஒன்றே –  எறும்பு இமயமலையை முற்றாக அறிய முயலும் எத்தனத்திற்கு நிகராக , பிரபஞ்சத்தை அதன் அத்தனை விரிவுடனும்  ஆழத்துடனும் அறிவது. முதல் முடிவற்ற ஆடவல்லானின் அடிமுடி தேடலில், முடி தேடி மேல்நோக்கி செல்லும் நான்முகனை தத்துவம் என்றும், அடி தேடி அகழ்ந்து சென்று கொண்டிருக்கும் விண்ணளந்தோனை கோட்பாடு அறிவியல் என்றும் கூறலாம்.

தத்துவம் ‘ஏன்’ என்பதிலேயே குறியாக இருக்கும். அறிவியல் ‘எப்படி’  என்பதில் தன்னைக் குவித்திருக்கும்.  தத்துவத்திற்கு  மையப்படுத்துதல் அவசியம். அந்த மையத்திலிருந்து அனைத்தையும் விளக்க முற்படும். அறிவியலுக்கு விதிவிலக்குகளே முக்கியம். அந்த விதிவிலக்குகளை வைத்து மையத்தை மதிப்பிட்டு வரையறுக்க முயலும். ஆனால் இந்த வரையறை  அறுதியானதல்ல.  ‘ஏன்’ மற்றும் ‘எப்படி’ என்பது பல தளங்களில் , பல அர்த்தங்களில் இயங்கும் ஒன்று‌‌. நடைமுறை ஆய்வுத்தளத்தில்  ‘ஏன்’ என்பது ‘எப்படி’ என்பதில் இயல்பாக சென்று நிற்கும். இதன் நேர்மாறும் அவ்வாறே. ‘எப்படி’ என தொடர்ந்து ஆராய்வது ‘ஏன்’ என்பதில் இயல்பாகவே வந்து நிற்கும்.  பருவுலகத்தை நேரடியாகவே ஆராயும் இயற்பியலில் இவற்றிற்கிடையேயான விளையாட்டு மிக சுவாரஸ்யமானது.  இந்த சுழல் பல தளங்களில் சுழன்று வளரக்கூடிய ஒன்று.

கார்லோ இயற்பியலின் நோக்கில் அந்த சுழலின் ஒரு மெல்லிய தடையத்தை அழகாக பதிவு செய்திருக்கிறார்.  அதனூடாக நம்மையும் அதில் இழுத்து விடுகிறார். மேலைத் தத்துவத்தில் குறிப்பாக அனாக்ஸிமேண்டர் மற்றும் டெமாகிரீடஸில் மிகுந்த ஈடுபாடுள்ளவர்.  எனவே சிக்கலான  விஷயங்களை வீரியம் குறையாமல் எளிய நடையில் விளக்க அவரால் இயல்கிறது.  சில இடங்களில் அவரது வரிகள் கவித்துவம் நோக்கியும் செல்கிறது.

கேள்வி :  ஏன் ஐன்ஸ்டைனிலிருந்து இந்நூல் தொடங்குகிறது?

பதில் : இயற்பியலின் நடைமுறைத் தளத்தில், பருவுலகின் கூறுகளை கையாள கற்றுத் தந்தவர்களுள்  நியூட்டனே முதன்மையானவர். அவரது ஈர்ப்பு விசை குறித்த தேற்றமும், மூன்று விதிகளும், புத்தம் புதிய கணித முறையும் மானுடத்தின் பெரும் பாய்ச்சலுக்கு வழிவகுத்தன. ஈர்ப்பு விசை – விசை ஆகியவை குறித்து ‘எப்படி’ என்பதை கச்சிதமாக கையாண்ட பெருந்தந்தை அவர். ஆனால் ‘ஏன்’ என வருகையில் அமைதியானார்.  மூன்று நூற்றாண்டுகள் கழித்து, பருவுலகின் எல்லையை அடைந்த பிறகு முன்செல்ல இயலாதவாறு  இயற்பியலை அசையாமல் நிறுத்திய அந்த அமைதியை உடைத்தவர் ஐன்ஸ்டைன்.  அதன் வழியே ஒரு மாபெரும் நகர்விற்கு வழிகோலினார்‌.  அவ்வகையில் ஐன்ஸ்டைனே முக்கியமானவர்.   அவரது மூன்று கொள்கைகளும் உண்மையிலேயே இயற்பியலில் புரட்சி என்று சொல்லத் தக்கவை. அவற்றை கார்லோ விவரிக்கும் விதம் அபாரமானது.

கேள்வி : ஐன்ஸ்டைன் அளவிற்கு ஏன் மற்ற விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்புகளை நிகழ்த்த முடியவில்லை.

பதில்: ஐன்ஸ்டைன் மாமேதை என்றாலும் அவர் மட்டுமே பெரும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தவில்லை. அவரது சமகாலத்தில் பலரும் அவர் உழைத்த அதே விஷயத்தில் உழைத்திருக்கிறார்கள். ஒரு வகையில் ஓட்டப் பந்தயம் என சொல்லத்தக்க இந்நிகழ்வில் ஐன்ஸ்டைன் சற்று மயிரிழையில் முந்தி விட்டார்.  அவருக்குப் பிறகு வந்த நீல்ஸ் போர், ஹைசன்பர்க், டிராக் போன்றோர் ஐன்ஸ்டைனுக்கு முற்றிலும் நிகரானவர்கள்.   ஆனாலும் இயற்பியலின் பருவலகு ஆய்வு முற்றி நுண்ணலகிற்கு வரும் வரலாற்றுக்கணத்தில் சரியான திறப்பை அளித்த வகையில் ஐன்ஸ்டைனே மேலானவர்.

கேள்வி : துளிம இயக்கவியல் (Quantum Mechanics) சார்ந்து ஐன்ஸ்டைனின் ஒவ்வாமையை எப்படி பார்ப்பது?

பதில்: ஐன்ஸ்டைன் வரையிலான காலத்தில் அறிவியலில் குறிப்பாக இயற்பியலில் கட்புலனாகும் நிச்சயத்தன்மையும், அளவும்,  காரண-காரிய விதியும் மீள முடியாத ஒன்று.  காண இயலாத, குறைந்த பட்சம் அதன் விளைவை நேரடியாக காண இயலாத, துல்லியமாக அளக்க இயலாத  எதையும் இயற்பியல் விலக்கிவிடும்.  கவிதை என்பது மரபு இயற்பியலைப் பொறுத்தவரை பொய் / தவறானது- ஏனெனில் கவிதை முற்றிலும் அகவயமானது. ( ஆனால் நவீன தகவல் கொள்கை கவிதையை உண்மைகள் செறிந்த அடர் தொகுதியாக பார்க்கிறது).

நியூட்டனிலிருந்து ஐன்ஸ்டைன் நிகழ்த்திய பாய்ச்சல் என்பது அறிவியலின் வழமையான மிகக் கறாரான நோக்கில் முற்றிலும் புதிய திறப்பை அளித்தது.  நம்மைச் சுற்றியுள்ள வெளி வளைகிறது – வளைந்திருக்கிறது என்பதும், பொருட்கள் அந்த வழுக்கலில் நிகழும் நகர்வு என்பதே ஈர்ப்புவிசை என்பதும் இப்போது நினைத்தாலே நம்மை அசைத்துப் பார்க்கக் கூடிய விஷயம். மேலும் அதை கறாரான அறிவியல் முறைப்படி நிரூபிக்கவும் ஐன்ஸ்டைனால் இயன்றது.  ஆனால் அந்த கறார்தன்மையையே துளிம இயக்கவியல் அசைத்துப் பார்த்தது.   நுண் துகள்களின் இருப்பு ஏதேனும் ஒரு தொடர்பு – பரிமாற்றத்தின் போது மட்டுமே ‘கிட்டத்தட்ட’ உறுதியாகத் தெரியும்  – மற்ற நேரத்தில் அதைப் பற்றி உறுதியாக எதுவும் தெரியாது என்பதோ, ஒரு சமயத்தில் துகளின் ஒரேயோரு பண்பினை மட்டுமே அளக்க இயலும் என்பதோ மரபு இயற்பியலுக்கு சற்றும் ஏற்புடையதல்ல‌.  மாமேதை ஐன்ஸ்டைனே தத்தளித்து தடுமாறி‌ய இடம் அது. அவரது கடும் எதிர்ப்புக்கான காரணமும் அதுவே. ஆனாலும் இயற்பியல் அவரைத் தாண்டி தன்போக்கில் வளர்ந்து சென்றது.  அறுதித்தன்மை என்பதிலிருந்து  நகர்ந்து, இருக்கும் வாய்ப்புகளுள் உச்சகட்ட சாத்தியங்களில் திகழ்வது என்பதே  இயற்பியலின் அசலான மாபெரும் பயணம். 

2026 சென்னை புத்தக கண்காட்சியில் வாங்க விரும்பும் நூல்கள்:

  • காவியம் – ஜெயமோகன்
  • உறங்கும் அழகிகளின் இல்லம் (மொழிபெயர்ப்பு) – அரிசங்கர்
  • ஒரே நிழல் (மொழிபெயர்ப்பு) – சிறில் அலெக்ஸ்
  • ஜல்லிக்கட்டு – பேரா. டி. தர்மராஜ்
  • சுவாமி சகஜானந்தர் வாழ்க்கை வரலாறு – சட்டமன்ற உரைகள் – ம. வெங்கடேசன்

கேள்வி : நிச்சயத்தன்மை என்பதிலிருந்து நிகழ்தகவுத்தன்மை என்பதற்கு இயற்பியல் நகர்ந்து விட்டதால் மரபு இயற்பியல் வழக்கொழிந்து விட்டதா?
பதில்: முழுவதுமாக இல்லை.  பருவுலகத்தை கையாள மரபு இயற்பியலால் மட்டுமே இயலும்.  எக்காலத்திலும் நியூட்டனின் விதிகளே  இயந்திரவியலுக்கு அடிப்படை.  ஆனால் இயற்பியல் மற்றும் தத்துவத்தின் அடிப்படை நோக்கம் பிரபஞ்சத்தை அதன் முழு வீரியத்துடன் விளக்கும் அறுதி விதியை கண்டடைவது.  எனவே ஒரு கண்டுபிடிப்பு நிகழ்ந்ததும் அதை ஒரு தேற்றமாக்கி, பல அளவுகளில் பரிசோதிக்க முயல்வதும், பிழைகள் ஏற்பட்டால் அதை சரி செய்ய தேற்றத்தை மாற்றுவது, அதன்வழியாக கிடைக்கும் புதிய திறப்பு என அறிவியல் முன் செல்லும். இந்த ஆய்வுப் பாதையில் ஒவ்வொரு அடியிலும் அளவு என்பது மிக முக்கியமானது.   அந்த வகையில் கோட்பாட்டுத் தளத்தில் மரபு இயற்பியல் மறைந்து விட்டது.

கேள்வி : நுண்ணலகில் காலம் மற்றும் இடம் என்பது என்ன?

பதில் : பருவுலகிலேயே காலம் மற்றும் இடம் என்பது சிக்கலான வரையறைகளை உடையவை. காலியான வெட்ட வெளி என எதுவும் இல்லை என ஐன்ஸ்டைன் நிரூபித்தார்.   வெளியின் வளைவே ஈர்ப்பு விசையை உருவாக்குகிறது. எனவே அது நாமறியாத ‘எதனாலோ’ ஆக்கப்பட்டிருக்கலாம் . அது போலவே முழு முற்றான காலம் என தனியாக இல்லை. அது இடத்தையும் அங்குள்ளவற்றுடனும் தொடர்புடையது.  இனி ஒளியின் வேகம் சார்ந்து, முழுமுற்றான நிகழ் – எதிர் – கடந்த காலம் என்னும் பிரிவினையும் இல்லை என ஐன்ஸ்டைன் நிறுவினார். நாம் இப்போது பார்க்கும் விண்மீன் ‘அதன்’ கடந்தகாலத்தையது‌. அதன் தற்போதய நிலையை  நாம் நமது எதிர்காலத்தில் மட்டுமே அறிய‌ முடியும். விண்மீனுக்கும் நமக்கும் இடையிலுள்ள தொலைவே இந்த கால-விலகலை உண்டாக்குகிறது. ஆக , காலம் – வெளி என தனித்தனியாக இல்லாமல் கால-வெளி என்றே ஐன்ஸ்டைன் கூறுகிறார்.

இதில் இன்னொரு ஆர்வமூட்டும் விஷயம் உள்ளது. காலம் நகர்வதையும் அது ஒருபோதும் பின்னோக்கி செல்லாததையும் காண்கிறோம்.  ஆனால் இடத்தைப் பொறுத்து முன்னும் பின்னும் நம்மால் செல்ல இயலும்.  காலத்தின் இந்த ‘சிறப்புத்தன்மை’க்கு என்ன காரணம் இருக்கவியலும்?  இதே போன்று பின்னோக்கி நிகழாத ஒன்று வெப்பம்.  வெந்நீர் இயல்பாகக் குளிர்வது போல குளிர் நீர் தானாகவே சூடாவதில்லை. அவ்வாறு ஆகக்கூடாது என எந்த விதியும் இல்லை ‌என்றாலும் குளிர் நீர் இயல்பாகவே வெப்பமடையாததற்குக் காரணம், அதற்கான சாத்தியக்கூறு மிகக்குறைவே என்கிறது அறிவியல்.  உள்மீதுறாதிருகல் அல்லது குலைவி ( Entropy) என வெப்பவியலில் இதைக் குறிப்பிடுவார்கள்.  காலத்தில் உள்மீதுறாதிருகலின் தாக்கம் குறித்தும் கார்லோ இந்நூலில் ஆராய்கிறார்.

துளிம இயற்பியல் மற்றும் அதன் பிறகான நுண்துகள் இயற்பியல் மற்றும் பொது மாதிரி கொள்கையின் வரவிற்குப் பிறகு வெளி என்பதே நுண்நுண் துகள்களால் ஆனவை என்றும், அவை வெளியின் ‘துளிம’ பண்பினால் ஆனவை என்றும், காலம் என்பது இத்துகள்களுக்கு இடையே நிகழும் ஊடாட்டம் எனவும் நிரூபணமாகாத ஒரு கருதுகோள் உள்ளது.  உறுதியான ஒரு வரையறை என எதுவும் இல்லை.

சங்கரன் ரவிச்சந்திரன்

கேள்வி: காலமும் வெளியும் முழுமுற்றானது அல்ல என்றால் அவற்றில் இருந்து கொண்டிருக்கும் நமது தன்ணுணர்வு என்பது என்ன? அது எதைச் சார்ந்திருக்கிறது?

பதில் : அறிவியல் எதிர்கொள்ளும் ‘கறை பிரதேச’ங்களுள் (gray area) இது முக்கியமானது.   இயற்பியல் பொதுவாக தன்ணுணர்வை பொருளின் ஒரு பண்பாகவே சொல்கிறது. தன்னுணர்வு என்பது அனந்த கோடி நியூரான்களிடையே நிகழும் தொடர் மின்னூட்டங்களது ஊடாடத்தின்  ஒரு விளைவு என்று கார்லோ சொல்கிறார்.  இனி, ஒரு மனித மூளையை அதன் முழு விரிவுடனும் ஆழத்துனுடம் செயற்கையாக நாம் உருவாக்கி இயக்க முடிந்தால் அதில் தன்ணுணர்வு இயல்பாகவே உருவாகி வருமா?  இக்கேள்விக்கும் அறிவியலின் விடை – சாத்தியமுள்ளது ஆனால் உறுதியாகக் கூற‌ இயலாது என்பதே.  குளிர் நீர் தானாகவே சூடாவதன் சாத்தியமே தன்ணுணர்வு ‘தானாகவே’ உருவாவதற்கும் உள்ளது.  அறிவியல் தத்துவத்தின் எல்லைக்குள் வரும் பகுதி இது ‌.

தன்ணுணர்வு என்பதை தன்னைச் சுற்றி இருப்பவற்றையும் நிகழ்பவனவற்றையும் ,  இவற்றையெல்லாம் விட தன்னைத்தானே உணரும் ஒரு தன்னிலை என வைத்துக் கொள்வோம்‌.  ஒரு பொருளைக் காண்கிறோம்.  நாம் காண்பது அப்பொருளுடைய அந்த கணத்தினுடைய தோற்றம்.  நாம் காண்பதற்கு முன்பும் பின்பும் அது எப்படி இருந்தது – இருக்கும் என்பது உறுதியாகத் தெரியாது.

முழுமையான பொருள்முதல்வாத தத்துவமான சாங்கிய தத்துவத்தின் படி  பொருளின் இருப்பு என்பது நம் பார்வையைப் பொறுத்தது அல்ல. ஒரு பொருளை அதன் குணத்தைக் கொண்டு அறிகிறோம். அதிலும் ஆதிசாங்கியத்தின் படி குணமே குணத்தை அறிகிறது. எனவே தன்னிலை என தனியாக எதுவும் இல்லை. பிற்கால சாங்கியம் மஹத் என்னும் பிரபஞ்ச தன்னிலையைப் பற்றி பேசுகிறது. மஹத் என்பதும் பொருளின் ஒரு இயல்பே. தன்னைத் தானாக உணரும் மஹத், நான் என உணர்வதே அகங்காரம்.  ஒரு பொருளின் அறிதலுக்கான பண்பாகிய அதன் தன்மாத்திரைகளை அகங்காரம் சந்திக்கையில் ஐம்பூதங்களும் மனமும் உருவாகி அறிபடுபொருள் என்னும் பிரகிருதியைக் கண்டடைகிறது என்கிறது. ஆயினும் இந்த அறிபவன் / அறிபடுபொருள் பிரிவினை என்பது சிந்தனைத்தளத்தில் மட்டுமே – அதாவது முற்றான தூய தன்னுணர்வு என எதுவும் இல்லை என்கிறது.

இந்தியாவின் அணுக்கொள்கையான வைசேஷிகத்தின்படி அனைத்து பொருட்களும் அணுக்களால் ஆனவை. ஒரு பொருளின் இயல்பு என நாம் அறிவது அதன் அணுக்களின் இயல்பபையே.  இந்த அணுக்களுக்கு தோற்றமும் மறைவும் இல்லை. இவை உண்டாவதற்கு எந்தவொரு வெளித் தூண்டுதலும் இல்லை.  ஒவ்வொரு பொருளும் திரவியம்(பருவடிவம்) , குணம் ( இயல்பு), கர்மம் (செயல்), சாமான்யம் ( பொதுத்தன்மை), விஷேசம் (தனித்தன்மை) , சமவாயம் ( இணைவுமுறை) என ஆறு பதார்த்தங்களைக் கொண்டுள்ளது. இதில் முதல் ஐந்தும் காலமின்மையில் திகழ்பவை. ஆறாவதான சமவாயம் என்பது அடிப்படை இணைவு எனவும் அதன் மீதான மற்ற இணைப்புகள் சம்யோகம் என்றும் கூறுகிறது.  ஐன்ஸ்டைன் நிகழ்த்திய கால – வெளி இணைவை சமவாயம் எனவும் அதன்மீது அமைந்திருக்கும் மற்ற இணைவுகளை சமயோகம் எனவும் கூறலாம்.

இனி, வானம், காற்று, நீர், நெருப்பு, நிலம் என்னும் ஐம்பருப்பொருட்கள் முறையே செவி, தோல் ( உணர்வுறுப்பு), வாய், கண், மூக்கு என்னும் ஐம்பொறிகளை உருவாக்குகின்றன. அவை முறையே ஓசை, உறு, சுவை, ஒளி, நாற்றம் என்னும் ஐம்புலன்களாக உருவெடுக்கின்றன.  ஐம்புலன்கள் மனத்தையும் மனம் ஆன்மா என்னும் தன்னிலையையும் உருவாக்குகிறது. அதாவது பொருளே தன்னிலை / தன்ணுணர்வை உருவாக்குகிறது.

கருத்துமுதல்வாதமான வேதாந்த தத்துவத்தின் பிரம்மம் – மாயை குறித்து பரவலாக அனைவருமே அறிந்திருக்கிறார்கள். இங்குள்ள அனைத்துமே பிரம்மம் என்னும் இரண்டற்ற ஒன்றின் வெளிப்பாடே.  காணும் இப்பிரபஞ்சம் பலவாறாக தோன்ற காரணம்  மாயை. இங்கு மாயை என குறிப்பிடப்படுவது பொய் அல்ல. நிதர்சனத்தின் கண்கண்ட சித்திரத்தையே மாயை என்கின்றனர். எந்தவொரு பொருளும் தன்னிலிருந்து விலகி தன்னைத்தானே பார்த்துக் கொள்ள இயலாது. எனவே  நமது தன்ணுணர்வு என்பது பிரம்மத்தின் மீச்சிறுதுளியான ஆன்மாவின் ஒரு வெளிப்பாடு மட்டுமே.  எனவே பொருளின் இருப்பு  என்பது ஆன்மா அறியும்போது மட்டுமே என்கிறது.  அறிவு – அறிபவன் – அறிபடுபொருள் இம்மூன்றும் ஒன்றே என்கிறது வேதாந்தம்.

பொருளின் இருப்பு குறித்த துளிம இயக்கவியலின் கூற்று வேதாந்தத்தின் பொருள் குறித்த கூற்றுடன் சற்று ஒத்துப்போவதைக் காணலாம்.  மேலும், ஒளித்துகள் மின்காந்த புலத்தின் துளிமத்’தன்மை’யைக் கொண்டிருப்பது போல் ஒவ்வொரு நுண்துகளும் கூழாங்கல் போன்று உறுதியாக அல்லாது அவற்றினது புலத்தின் துளிமத்’தன்மை’யைக் கொண்டிருக்கிறது என்று துளிம இயக்கவியல் கூறுகிறது.  துளிமத்’தன்மை’ என இங்கு குறிப்பிடப்படுவது ஒரு குணம் அல்லது இயல்பு என்பதற்கு சமானமானது எனலாம்.   உண்மையில் துகள்கள் என குறிப்பிடுவது, அதற்கு கீழுள்ள ஆதார அடுக்குகளின் சிறு கிளர்ச்சி மட்டுமே – தனியாக பொருண்மை என எதுவும் இல்லாதது. அதனால் தான் ஒரே சமயம் அலையாகவும் துகளாகவும் இருநிலைகளில் திகழ்கிறது.  எதனாலோ அல்லது எதாவதாலோ பார்க்காத போது அதற்கு இருப்பு என எதுவும் இல்லை. எதிர்மின்மம் ( electron) குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்டவாறு மட்டுமே தோன்ற முடியும் எனவும் எதனுடனாவது தொடர்பு கொள்கையில் மட்டுமே அது தோற்றத்திற்கு வருகிறது எனவும் கார்லோ சொல்கிறார். பருப்பொருளைப் போன்று  துகளை முழுமையாக உறுதியாக அளவிட இயலாது என்றும் துகள் அறிவியல் சொல்கிறது.  அதாவது, நாம் காணும்போது மட்டுமே துகள் தோற்றத்திற்கு வருகிறது. காணாத போது அது இருக்கிறதா இல்லையா என்பதை ‘உறுதியாக’ சொல்ல இயலாது. பொருட்களால் அல்ல  நிகழ்வுகளால் ஆனதே இப்பிரபஞ்சம் என்றும் துளிம இயக்கவியல் கூறுகிறது.   திரையில் மிகச்சிறிய ஒளிப்புள்ளிகள் தோன்றியும் அணைந்தும் ஒரு திரைப்படம் தோன்றுவது போல  கணந்தோறும் உருவாகி மறையும் பலகோடி துகள்களால் உருவாகும் பருப்பொருளையே நாம் ஸ்தூலமாகக் காண்கிறோம்.  திரைப்படத்தை காண மட்டுமே இயலும், ஆனால் பருப்பொருளை தொடவும் கையாளவும் இயல்கிறது என்பதே வேறுபாடு.   அப்படியெனில் யாரும் பார்க்காத போது திரையில் காட்சி தோன்றுமா தோன்றாதா என்பதை சொல்ல இயலாது. திரையும், திரையில் ஓடும் காட்சியும் அதனதன் இயல்புப்படியே நிகழ்கிறது எனவும்  அந்த இயல்புப்படியே பார்வையாளர்களையும் உருவாக்கும் என சாங்கியமும் வைசேஷிகமும் கூறுகிறது. திரையும் திரைக்காட்சியும் தனித்தனி பார்வையாளர்களும் பெரும் பார்வையாளன் ஒருவனின் நிகழ்த்துகலை என வேதாந்தம் கூறுகிறது.  இவ்விரண்டு எல்லைகளுக்கு இடையே அறிவியல் நின்று கொண்டிருக்கிறது.  கார்லோவின் கூற்றுப்படி ‘தொன்மங்களும் அறிவியலும் ஒன்றையொன்று ஊட்டி வளர்க்கின்றன’ . நாம் நமது தத்துவ தரிசனங்களையும் அறிவியலுடன் உரசிப் பார்ப்பதில் தவறில்லை.

000
இயற்பியலின் ஏழு சுருக்கக் குறிப்புகள் – எதிர் வெளியீடு.

பின் குறிப்புகள்:
1. வைசேஷிகம்
2. சாங்கியம்

ரா.கிரிதரன்

“காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை” என்ற சிறுகதை தொகுப்பு, காற்றோவியம் என்ற கட்டுரைத் தொகுப்பு ஆகியவற்றின் ஆசிரியர். வளர்ந்தது புதுச்சேரியில். தற்சமயம் லண்டனில் வசிக்கிறார்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

2 Comments உரையாடலுக்கு

  1. தத்துவமும், அறிவியலும் எதிரெதிர் கருத்தாக்கங்கள் அன்று என்பதை சமூக வரலாற்றுப் பின்புலத்தில் அவற்றைப் பொருத்திப்பார்க்கும்போது ஓரளவு நமக்கு விளங்கும்.

    துவக்க காலத்தில் பிரபஞ்சத்தை விளங்கிக்கொள்ள நமக்கு தர்க்க அடிப்படைகள் கிடையாது; ஆக, தத்துவப்பார்வைகள் வழியாகவே பிரபஞ்சத்தை உள்வாங்கிக்கொள்வதற்கு எத்தனித்தோம்.
    பிற்காலத்தில் தர்க்க அடிப்படைகள் நம் கைவசம் இருக்கின்றன; ஆக, அறிவியல் தொழில்நுட்பம் எனப் பேசுகிறோம்.

    தத்துவமும் அறிவியலும் தேடுதலை விரும்புபவை. என்றாலும், தத்துவம் அறிவியலைப்போல ‘திறந்ததாக’ இல்லை. காரணம், தத்துவங்களை நாம் சமயக்கோட்பாடுகளாக உறையச் செய்து விட்டோம். அறிவியலையும் அதற்குத் துணைக்கு அழைத்து தத்துவமே ஆகச்சிறந்த அறிவியல் எனச்சொல்லும்படியான சொல்ஜாலங்களையும் சமகாலத்தில் நிகழ்த்த ஆரம்பித்திருக்கிறோம்.
    அறிவியலாளர்களும் சளைத்தவர்களா என்ன, அவர்கள் அறிவியலைப் புனிதபீடத்தில் அமர வைப்பதற்கான முயற்சிகளில் ஓரளவு வெற்றியும் கண்டிருக்கிறார்கள்.

    இப்படியான சூழலில், தத்துவம் எதிர் அறிவியல் என்பதான இருமையோ.. அறிவியலே அல்லது தத்துவமே எனும் ஒருமையோ நமக்குச் சரியான புரிதலைத் தராது. இரண்டின் வழியாக பிரபஞ்சத்தைப் பார்ப்பதன் அல்லது கவனிப்பதன் வரலாற்றுப்பின்புலத்தை விளங்கிக்கொள்வது ஓரளவு நமக்கு பயன் தருவதாக அமையக் கூடும்.

    சங்கரன் ரவிச்சந்திரன், கிரிதரன் ஆகியோர்க்கு நன்றி.

    – தமிழ்மொழி சக்திவேல்

    • மன்னிக்கவும் உங்களது பின்னூட்டம் முற்றிலும் பிழையாக இருக்கிறது. நீங்கள் மதத்தையும் தத்துவத்தையும் குழப்பிக் கொள்கிறீர்கள் என நினைக்கிறேன் . தத்துவமும் மத – சமயக் கோட்பாடுகளும் வேறு வேறு. தத்துவம் எந்தக் காலத்திலும் இறுக்கமாக மாறாது இருந்ததில்லை. நான்காயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து தத்துவ அறிஞர்கள் வந்து கொண்டே தான் இருக்கிறார்கள். அதே போல்
      தத்துவத்துடன் தர்க்க அடிப்படைகள் சேர்ந்த பிறகு தான் அறிவியல் வந்தது என்பதும் மிகத் தவறானது .

      தத்துவம் மற்றும் அறிவியலின் செயல்முறை தான் நேர் எதிராக இருப்பது. அவற்றின் இறுதி இலக்கு என்பது மெய்மையே . வில் டுரண்டின் ‘ ஸ்டோரி ஆப் பிலாசபி’ மற்றும் ஜெயமோகனின் ‘ இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள் ‘ நூலை பரிந்துரை செய்கிறேன் .

      நன்றி .

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

கடந்தவை

Go toTop

Don't Miss