காலத்தை மீறிய படைப்புகள் எதிர்கொள்ளும் முதன்மையான சவால் எதுவென்றால், அப்படைப்புகளின் வாசகர்களும் எதிர்வினைகளும் இருப்பது எதிர்காலத்தில் என்பதே. பாரதியை, புதுமைபித்தனை புரிந்து கொள்ள நம் சமூகத்திற்கு குறைந்தபட்சம் நூறு ஆண்டுகளாவது தேவைப்படுகிறது. பேரிலக்கியத்தை படைத்துவிட்டு காத்திருக்கும் படைப்பாளியின் நிலையென்பது, அடைகாக்கும் ஒரு பறவையை போன்றதே. சில சமயங்களில் படைப்பாளி மறைந்த பின்னரும் கூட, ரகசியங்களையும் ஆச்சரியங்களையும் தன்னுள் ஒளித்து வைத்தபடி படைப்புகள் நீண்டதொரு காலவெளியில் நீந்தியபடி காத்திருக்கின்றது.
அதிர்ஷ்டவசமாக நாம் ஜெயமோகன் எனும் மாபெரும் கலைஞனுடன், அவரது சமகாலத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். ஒரு படைப்பை அணுகக்கூடிய சாத்தியங்களையும், முறைமைகளையும் தொடர் உரையாடல்கள் மூலம் அவர் கற்று தருவதால், நமது வாசிப்பின் தரமும், வாசிப்பனுபவமும் செறிவடைந்து இலக்கிய பாதையில் நம்மால் முன்நகர இயல்கிறது. வாசகர்கள் அருகே நெருங்குவதின் வாசனையை முகர்ந்து விட்டால், படைப்பாளி அடுத்த கட்ட ஆட்டத்துக்கு தாவி விடுகிறார். ஆகவே வாசிப்பவர் என்றுமே படைப்பாளியின் பாதச் சுவடுகளை மட்டும்தான் காண முடிகிறதென்பதால், இந்த தேடுதல் கண்டடைதல் எனும் விளையாட்டு காலந்தோறும் இலக்கிய வெளியில் களிப்புடன் நிகழ்ந்தபடியே உள்ளது.
ஜெயமோகனின் ‘படையல்’ சிறுகதையை ஒரு புதையல் வேட்டை என்றே கூறலாம். நவரத்தின பொக்கிஷக் குவியலாய் பல வண்ணங்களில், அடுக்குகளில், திசைகளில் மின்னுகிறது இக்கதை. இருளிலோ ஒளியிலோ எப்படி உருட்டி பார்த்தாலும், படையல் எனும் புதையல் திறக்கும் சாளரங்கள் முடிவற்றவை.
1. வரலாறு
கதை பதினேழாம் நூற்றாண்டு தமிழ் மண்ணில், அரசாங்கமற்ற கட்டுபாடற்ற ஒரு குழப்பமான காலகட்டத்தில் நிகழ்கிறது. மராட்டியர்களும் நாயக்கர்களும் இஸ்லாமியர்களும் போரிட்டபடி தமிழ் மண்ணின் மீதான தங்களது ஆதிக்கத்தை இழக்க துவங்க, ஆங்கிலேய மற்றும் ஃபிரெஞ்சு படைகள் உள்ளே நுழைய, கதை நெடுகிலும் குருதிப்புனல் வழிந்தோடுகிறது. சோழ, சேர, பாண்டிய நாடுகளின் வரலாற்று பதிவுகள் நம்மிடம் ஏராளமாய் இருந்தாலும், இக்கதை அதிகம் பரிச்சயமில்லாத நடுநாடு என்றழைக்கபடும் ப்ரதேசங்களை மையமாய் வைத்து சுழல்கிறது.
2. ஆன்மீகம்
இப்ரபஞ்சம் மற்றும் சகல ஜீவராசிகளும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாசம் எனும் ஐம்பூதங்களால் ஆனது. இக்கதையின் துவக்கத்திலேயே இருண்ட ஆகாயமும், வீசுகின்ற காற்றும், பஞ்சும் நெருப்பும், மழைநீர் தூறலும், போரினால் உழவு செய்யப்படாமல் கைவிடபட்ட நிலம் என ஐம்பூதங்களின் குறியீடுகள் வருகிறது. அதன் பிறகும் கதை நெடுக பஞ்ச பூதங்கள் பல்வேறு தளங்களில், வெவ்வேறு வடிவங்களாய் படிமங்களாய் தொடர்ந்து வந்தபடி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.
இந்து மதத்தில் பஞ்சபூதங்கள், சிவனுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. இக்கதை நிகழும் களங்களின் அருகமைந்த புண்ணிய ஸ்தலங்கள் அனைத்தும் ஐம்பூதங்களை குறிக்கும் ஐந்து சிவன் கோவில்களே. நிலத்தின் அம்சமான காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர், நீரின் அம்சமான திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில், நெருப்பின் அம்சமான திருவண்ணாமலை, காற்றின் அம்சமான காளஹஸ்தி, ஆகாசத்தின் அம்சமான சிதம்பரம் என கதையின் ஆன்மீக முடிச்சுகள் அனைத்தும் மிக அழகாய் அவிழ்கின்றன.
3. மதம்
மதம் பிடித்த யானைகளாய் இந்து, இஸ்லாம், கிறித்தவம் என பல மதங்களும், அதனை சார்ந்த அரசமைப்புகளும் மூர்க்கமாய் மோதிக் கொள்கின்றன. மதத்தின் கீழ் தளங்களில் சாம்பிராணி மஸ்தானும் முகம்மது நாயினாரும் இருக்க, மேலடுக்கில் எறும்பு பாவா அமர்ந்திருக்கிறார். தேடியலைபவராக சிவனடியாரும், கண்டடைந்ததை சொல்பவராக ஆனைபிள்ளை சாமியும் வருகிறார்கள். இந்து மெய்ஞான மரபும் இஸ்ஸாமிய சூஃபி மரபும் இணைந்து எழுகின்றது இந்திய ஞானத்தின் அழகியதோர் சித்திரம். எந்த ஒரு கேள்விக்கும் “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” என்று பதிலாக சொல்லும் எறும்பு பாவா, கடைசியில் கேள்வியே எழாத கணத்தில் ஒற்றை மந்திரத்தை சொல்வது கதையின் உச்சம். கேள்வியும் பதிலும் ஒன்றாகி போன நிலையில் கேள்வியேது பதிலேது?
4. திசைகளின் நடுவே (Directionality)
திசையற்ற அளவுகோலை ஸ்கேலார் (Scalar) என்பர். திசையுள்ள விசையை வெக்டர் (vector) என்பர். இலக்கிய அளவுகோல், ஆன்மீக அளவுகோல் என்று ஒரு சில அளவுகோல்களை மட்டும் வைத்துக் கொண்டு இக்கதையை மதிப்பிடுதல் கடினம். ஒரு அளவுகோல் முடிகின்ற இடத்தில் அடுத்த அளவுகோலின் தேவை வந்துவிடுகிறது. அத்தனை அளவுகோல்களையும் மீறிக்கொண்டு, வகைமை முறைமை எதற்கும் சிக்காமல் சீறியபடி செல்கிறது கதை.
திருச்சி திசையிலிருந்து தியாகதுருவம் வழியே கின்னேதார் கிருஷ்ணாராவ் மராட்டிய படை திருவண்ணாமலை திசை நோக்கி செல்ல, காஞ்சிபுரம் திசையிலிருந்து வந்தவாசி வழியே நவாபின் இஸ்லாமிய படைகள் திருவண்ணாமலை திசை நோக்கி வருகிறார்கள். காலஹஸ்தி திசையிலிருந்து சிவனடியாரின் ஊழ் அவரை சுழற்றியடித்து திருவண்ணாமலை திசை நோக்கி உந்துகிறது. கதையின் மற்ற களங்களில் நிகழும் செயல்களுக்கு கதையின் மைய களமான திருவண்ணாமலையில், அவ்வினைகளின் பலன் வெளிப்படுகிறது. சிவனடியார் திருவண்ணாமலையிலிருந்து தான் அடுத்து செல்ல வேண்டிய திசை சிதம்பரம் நோக்கி என்கிறார். படைப்பாளி எழுதிய கதை முடிந்தவுடன், அதை வாசிப்பவர் மனதில் கதை துவங்கும் என்பார்கள். இக்கதையின் முடிவில் சிதம்பர ரகசியமான ஆகாசத்தை காண்பித்துவிடுவதால், வாசிப்பவர் மனதில் இக்கதை முடிவிலியாய் விரிவடைந்துக் கொண்டே இருக்கின்றது.
5. ரஷோமான் விளைவு (Rashomon effect)
1950-ல் அகிரா குரசோவாவின் ‘ரஷோமான்’ திரைப்படம் வந்த பிறகு காலத்தையும் களத்தையும் கலைத்து போட்டு கதை சொல்லும் உத்தியை ரஷோமான் ஸ்டைல் என்றே பெயரிட்டு விட்டனர். அகிராவை சிறப்பிக்கும் வகையில் அவருக்கு ட்ரிப்யூட் (tribute) போலவே ஒரு மழைநாளில் துவங்குகிறது படையல்.
ரஷோமான் உத்தி என்றதும் கமல்ஹாசன் அவர்களின் ‘விருமாண்டி’ ஞாபகம் வந்தாலும், அவரது ‘தேவர் மகனில்’ ரத்த படையல் மிக அதிகம். அதில் பல ஆண்டுகளாய் மூடியிருக்கும் ஒரு கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு, பின்னர் உடைத்தவரின் கை பலியாகி முதல் படையல் துவங்கும். பிறகு கண்மாய் உடைந்து வெள்ளம் பாய்ந்து உழவு நிலத்தில் விதைக்கப்படும் குழந்தையின் பிணம். கோவில் தேர் வெடித்து நெருப்பில் எரியும் உடல்கள். மரணங்களும் பிணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்லும்.
படையல் கதையில் இஸ்லாமிய படைகளின் ஆக்ரமிப்பால், திருவண்ணாமலை கோவில் பூஜை ஏதும் இல்லாமல் கைவிடப்பட்டு, தீபம் ஏற்ற கூட ஆளின்றி பூட்டியே கிடக்கின்றது. எந்தவொரு கோவிலுக்கும் உள்ளே உறைந்திருக்கும் பிரம்மம், வெளியே இருக்கும் மனிதர்களை சோழிகளாய் உருட்டி விளையாடவே விரும்புகின்றது போலும். அது நினைத்தால் கோவிலை பூட்டிக் கொண்டு பல காலம் உறங்குகிறது. அது விழித்தெழுந்தால் பூட்டை உடைத்து, உயிர்களை பலியிட்டு தன் படையலை தானே நிகழ்த்திக் கொள்கிறது. வந்தவாசி பள்ளிவாசலில் 178 தலைகள் உருள, அதன் எதிர்வினையாய் திருவண்ணாமலை கோயில் உள்ளே 750 தலைகள் உருள்கிறது. செய்கின்ற செயல் மட்டுமே மனிதர்களின் கையில். அச்செயலின் பலாபலன்கள் அனைத்தும் பிரம்மத்தின் கையில்.
6. இயற்கை/தத்துவம்
இக்கதையை வாசித்து முடித்தவுடன் தோன்றிய ஒரு விஷயம் இதிலுள்ள பாத்திரங்கள் அனைவரும் ஆண்கள் மட்டுமே. இதில் ஏன் பெண்களே இல்லை? இக்கதை ஆண் பெண் இரு பாலினத்தையும் கருத்தில் கொண்டு சமநிலையில்தான் பயணிக்கிறதா? முதல் வாசிப்பில் பிடிபடாத பல அம்சங்கள் மீள் வாசிப்பில்தான் புலப்படுகிறது. “எல்லாம் ஒரே இருட்டுதான்… அம்மையிருட்டுக்கு ஆயிரம் குட்டி இருட்டு” ஆனைபிள்ளைசாமி சொல்வது அனைத்துமே மிக முக்கியமான வரிகள். இயற்கையெனும் ப்ரக்ருதியே பெண் சக்தியாகவும், படையலின் களமாகவும் அமைந்து விடுவதால், அந்த ஆடுகளத்தில் சிவசக்தியின் நடனம் இடைவிடாது நிகழ்கிறது.
“சாம்பிராணிவச்ச பஞ்சு… சமைஞ்சபுள்ள சிரிக்கிறாப்பிலே பத்திக்கிடும்.”
”தண்ணி கொதிச்சு அதுக்குப் பின்னாடி அரிசிபோடுவாளுக குடும்பஸ்த்ரீகள்”
“ஆறுமுக புருசனென்றால் அடுக்குமோடி எம்மகளே- ஏய்
அடுக்குமோடி எம்மகளே?
ஆறுமுகத்தால் வேவுபாத்தால் எம்மகளே- நீ
அடுத்தமனை பாக்க ஏழுமுகம் வேணுமேடி! ”
கதை முழுவதும் ஆண் பெண் சீண்டல்கள் மறைமுகமாய் தொடர, இயற்கையெனும் மாபெரும் பலிபீடத்தில் ரத்த படையல் அரங்கேறிக் கொண்டேயிருக்கிறது.
7. கவிதை
இறைவனுக்கும் மனிதர்களுக்கும் இடையில் இருப்பவர்களே கவிஞர்கள். இருவேறு உலகங்களை இணைக்கும் பாலமாக திகழ்வதே கவிதை. பட்டினத்தார் பாடல்கள், அருணகிரிநாதர், திருப்புகழ், திருவாசகம், சூஃபி பாடல்களின் நோக்கமெல்லாம் மானுடத்தை இறைவனடியில் கொண்டு சேர்ப்பதற்கே. படையலில் வரும் கவிதைகள் அனைத்துமே பிரம்மத்தின் மிக அருகில் அமர்ந்திருப்பவை. தன் புனைவுக்கு தேவைப்படும் பாடல்கள் மற்றும் கவிதைகளை பெரும்பாலும் ஜெயமோகனே எழுதிவிடுவதால், மாபெரும் கதைசொல்லியாக மட்டுமில்லாது, அவர் ஒரு அற்புத கவிதைசொல்லியாகவும் பரிணமிக்கிறார்.
8. இலக்கியம்
கால யந்திரம், மெட்டாவெர்ஸ் என்பதெல்லாம் அறிவுத்துறையின் வருங்கால கனவுகள். தொழில்நுட்பங்கள் அளிக்கத் திணறும் அனுபவங்களை, இலக்கியத்தின் மூலம் தர முடியும் என்பதற்கு படையல் ஒரு சிறந்த சான்று. காலயந்திர பயணிகளைப் போல் வாசகர்கள் இக்கதையின் கால வெளியில் பறந்து திரியலாம். க்ராஃபிக்ஸ், அனிமேஷன், விஷ்வல்களால் காண்பிக்க இயலாத பஞ்ச பூதங்களின் தன்மைகளை எழுத்து வடிவத்தில் விஸ்தாரமாய் சித்தரித்து விடுகிறார் ஆசிரியர்.
நீரின் அம்சம் சந்து பொந்து சுரங்கத்துள் எல்லாம் நுழைந்து மேலெழுவது. நீர் கோவில் திசையிலிருந்து வெள்ளமாய் பொங்கி வரும் கின்னேதார் கிருஷ்ணாராவின் மராட்டிய படைகள், திருவண்ணாமலை ரகசிய பாதாள சுரங்கத்துள் புகுந்து கோவில் வளாகத்தில் மேலெழந்து நவாப்பின் படைகளை கொன்று குவிக்கிறது. காற்றின் அம்சம் அலைந்து திரிவது. நெருப்பு எரிய தேவைப்படுவது. சிவனடியார் காலஹஸ்தியிலிருந்து காற்றாக அலைந்து திரிந்து கடைசியாய் கதையின் மையத்துள் வந்து சேர்கிறார். கருவுக்குள் நுழையும் பல விந்துகளில் ஒன்று மட்டும் உயிர் ஜனித்து பிறவியெடுத்தல் போல, நவாப் படைகளின் பிண குவியலுக்குள் ஊர்ந்து ரத்த வெள்ளத்தில் நீந்தி கர்ப்பகிரகத்துள் நுழைந்து தீபமேற்றி, சிவனடியார் எடுப்பது மறுபிறவியே. நிலத்தின் அம்சமான திசையிலிருந்து ரத்த அரிசி விளைந்து வருகிறது.
புறத்தில் நிகழும் காட்சிகள் அகத்தை தொட்டு செல்ல, அகத்தின் கிளர்ச்சிகள் அகப்புறத்தில் ப்ரதிபலிக்க, அகம், புறம், அகப்புறம், புறப்புறம் என்று எல்லா நிலைகளையும் கலைத்து விளையாடுகிறது இலக்கியம்.
9. ஆனந்தம்
நாணயத்தின் ஒரு புறம் பஞ்சபூதங்கள் என்றால் மறுபுறம் பஞ்ச கோசங்கள். அன்னத்தை உண்டு செரிக்கின்றது ஸ்தூல சரீரம். உடலுக்கு சோறு என்றால் மனதுக்கு சொற்கள். படையல் கதையை வாசித்தலே ஒரு யோகம்தான். இக்கதை நமது சூட்சும சரீரமான பிராணன், மனம், அறிவு மூன்றையும் தாண்டி ஆனந்தமயமான காரண சரீரத்தை நோக்கி நகர்த்தி விடுகிறது. அந்த பரவச அனுபவத்தை எழுத்தில் சொல்வதென்றால் “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்”.
இவ்வருடம் ஜெயமோகன் தன் அறுபதாம் அகவைக்குள் நுழைந்துவிட்டார். அவரது படைப்புகளை இலக்கிய உலகமே கொண்டாடி மகிழ்கிறது. நம் எண்ணங்களை சீராக்கி வாழ்வையே மாற்றவல்ல படைப்புகளை பொழிந்து கொண்டேயிருக்கும் மகத்தான கலைஞன் ஜெயமோகனுக்கு இன்றைய சமூகமும் நாளைய சமூகமும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது. ஜெயமோகனை கொண்டாடுதல் என்பது நமது முன்னோர்கள் தவறவிட்ட பாரதியை, புதுமைபித்தனை கொண்டாடுவதும் கூட. ஆகவே படையலையும் படைத்தவனையும் கொண்டாடுவோம்.
வெற்றிராஜா
புதுச்சேரியைச் சேர்ந்த வெற்றிராஜா தற்சமயம் இங்கிலாந்தில் வசித்துவருகிறார். மதிப்புரைகள், விமர்சனம், புனைவுகள், அல்புனைவுகள் என்று பரந்த தளத்தில் எழுதிவருகிறார்.
மிகச் சிறந்த கட்டுரை..ஆழ உழும் உரைநடை..தெளிவும் வெளிப்பாடும் ஒளிரும் உணர்நுட்பம்..வாழ்த்துகள் ராசா!
வெற்றிராஜா, தன் விமர்சன பார்வையை இலக்கு தெரிய ஆரம்பிக்கும் துரத்தில் துவங்கி வாசகரை தன் நுண்ணோக்கி பார்வை தளத்தில் அழைத்து செல்கிறார். இதுவே இந்த விமர்சன கட்டுரையின் வெற்றியாக அமைகிறது. வாசகரை அந்த நூலின் வாசனையை காட்டி நூலை வாசிக்க தூண்டுகோலாக அமைகிறது. வெற்றிராஜாவுக்கு வாழ்த்துக்கள்.
படையல் பற்றி வெற்றி ராஜாவின் விமர்சனம் மிகவும் அருமை. பஞ்ச பூதங்களும் அதனுடைய செயல்களும் மிகத் தெளிவுடன் விளக்கப்பட்டுள்ளன. மனிதனால் செயலை மட்டுமே செய்ய முடியும், ஆனால் வெகுமதி இறைவனால் தீர்மானிக்கப்படுகிறது. மதிப்பாய்வின் அடிப்படையில் இது ஒரு சிறந்த முன்னோக்கு. வாழ்த்துகள் வெற்றி ராஜா. வரும் நாட்களில் இதுபோன்ற குறிப்பிடத்தக்க மதிப்புரைகளைத் தொடர்ந்து வெளியிடுங்கள்
அருமையான பதிவு. படையல் கதையை நவரத்தினம் என்று குறிப்பிட்டு, ஒன்பது பரிமாணங்களில் காண்பித்தது புதுமை. ஒன்பது வாசல் குடிலில் குடியிருக்கும் அலகிலா ப்ரம்மத்தை அளவுகோல்களால் மதிப்பிட இயலுமா என்ன? வெற்றிராஜா தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.
It was fascinating to read Vetri Raja’s ‘Padaiyal Enum Pudhaiyal’. I enjoyed his prolific writing style and felt refreshed by his narration. The narration was extremely well thought through. Truly no less than a Treasure hunt.
In my recent memory, a narration which I found so eloquent and beautifully presented was in a movie by Parthiban ‘Otha seruppu size 7’. Raja takes readers to different world with his effortless story telling style. The narration hooks you to the content, and encourages readers to embark on a journey to an unseen world. Its like diving deep ocean for pearl hunting and return to the shore with a pearl. It is one of those writings you keep want to come back and read again and again.
I’ve watched Virumandi and enjoyed Kamal’s acting but never knew about Kurosawa or Rashomon effect. I just learned today that Virumandi movie inspires Rashomon effect on story telling. Happy to know.
Raja’s mention of Sufi tradition, ‘Bismillah-ir-Rahman-ir-Rahim’ and Sufi songs in couple of instances is refreshing..
In the spiritual dimension, I enjoyed the portrayal of five elements of life..
Raja’s mention about time machine, metaverse in Literature and portrayal of Directionality shows how he can simplify technology in a way everyone can understand. Amazing..
In the end I feel refreshed and young on reading ‘Padaiyal Enum Pudhaiyal’. Great effort!!
தெள்ளிய நதியில் நீராடுவது போன்று புத்துணர்ச்சி தரும் எழுத்து. படித்த கதைதான், மீண்டுமொருமுறை ஆற அமர படிக்கும்படி தூண்டுவது உங்களின் எழுத்தின் சிறப்பு. இன்று, இப்போதுதான் முதன் முதலாக நீங்கள் எனக்கு அறிமுகம். முதல் பந்தே சிக்சர் என்பதுபோல் அட்டகாசமான அறிமுகம்.
நன்றியும், வாழ்த்துக்களும் 🙏🙏🙏
மிக அருமையான விமர்சனம் திருவெற்றிராஜா.ஜெயமோகன் என்னும் இலக்கிய ராஜா வாழும் இக்காலத்தில் வாழ்வதே நாம் செய்த புண்ணியம்.
அருமையான விமர்சனத்திற்கு மிக்க நன்றி அய்யா. இதை முடித்துவிட்டு நான் படையலை இதுவரை நான்கு தடவை வாசித்து விட்டேன். இன்னும் அதிக முறை வாசிக்க தோன்றுகிறது. ஒவ்வொரு தடவையும் ஏதோ புதிய கண்டுபிடுப்புகளை காண்கிறேன்.