/

தீக்குடுக்கை : உலோகமாகிப்போகும் உளவியல்

எரிமலைகள் இரண்டு வகை. செயலிழந்து போனவை அல்லது உயிர்ப்புடன் இருப்பவை. செயலிழந்த எரிமலைக்கு சுற்றுலா சென்று புகைப்படம் எடுத்தல் இறந்த நாகத்தை அடிப்பது போன்றது. உயிர்ப்புடன் சீறியெழும் எரிமலையில் ஏறிடவே சாகசம் தேவை. இனவெறி சிக்கல்கள், உள்நாட்டு கலவரம், போர் சூழல் நிறைந்த ஒரு தேசமும் எரிமலை போலத்தான். சுதந்திரத்துக்கு முன்பு பாரதமும் எரிமலையாய் கொந்தளித்துக் கொண்டிருந்தது. லண்டனில் சட்டம் பயின்று தென்னாப்பிரிக்காவில் வேலை கிடைத்து வெளிநாட்டில் வசிக்க வாய்ப்பிருந்தும் காந்தி ஏன் தாயகம் சென்று தோட்டாக்களை ஏற்று இறந்தார்? அமெரிக்காவில் படித்த அம்பேத்கர் லண்டனில் மேற்படிப்பு முடித்து ஏன் மீண்டும் தாய் மண் திரும்பினார்? மரணம், தோல்வி, அவமதிப்பு போன்ற பரிசுகளே நிச்சயமென தெரிந்தும், வேர்களைத் தேடி அவர்களை செலுத்திய சித்தாந்தம் எது? விட்டில் பூச்சிகளை விளக்கு ஒளி நோக்கி உந்துகின்ற விசை பிழையான ஒன்றா? லண்டனில் ஆங்கிலேய பிரஜையாக பிறந்து வளர்ந்து, கல்லூரியில் ஆங்கில பெண்ணை காதலித்து, சொர்க்கம் போன்று அமைந்த ஒரு வாழ்வை துறந்து, ஈழம் சென்று விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் இணைந்து போராடிய ஈழ வம்சாவளி இளைஞனை மையமாய் வைத்து எழுத்தாளர் அனோஜன் பாலகிருஷ்ணன் படைத்திருக்கும் நாவல் ‘தீக்குடுக்கை’.

அனோஜன் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். கல்லூரி மேற்படிப்புக்காக இங்கிலாந்துக்கு புலம் பெயர்ந்தவர். ‘அகழ்’ இலக்கிய இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவர். ‘சதை’, ‘பச்சை நரம்பு’ , ‘பேரீச்சை’ சிறுகதை தொகுப்புகளுக்கு பின் அவரது முதல் நாவலாக வந்துள்ளது ‘தீக்குடுக்கை’. அனோஜனின் பால்ய காலம் முழுவதும் ஈழ யுத்தத்தின் சுவடுகளால் நிரம்பியவை. போரின் கொடிய அம்சங்களை, அதீத காமத்தை, உளவியல் சிக்கல்களை, இருத்தலியல் நெருக்கடிகளை பேசுபொருளாக கொண்டவை இவரது சிறுகதைகள். குறிப்பாக ‘யானை’ சிறுகதை இவரது எழுத்துப் பயணத்தில் ஒரு திருப்புமுனை. தனி மனித காமத்தை காத்திரமாய் எழுதிக்கொண்டிருந்த போக்குகளிலிருந்து விலகி சமூகநீதி, அழகியல், கவிதை நடை, லட்சியவாதம் நோக்கி அவர் நகர்ந்தது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. மிருகங்களில் நினைவாற்றல் மிகுந்தது யானை. காட்டு யானை தனது காலில் சங்கிலியுடன் கோவிலில் நின்றாலும், சாலையில் பிச்சையெடுத்தாலும், சர்க்கஸ் கூடாரத்தில் ஆடினாலும் அதன் கனவில் என்றும் கானகத்தின் கிளைகள் பூத்து வளர்ந்தபடியே இருக்கும். ‘தீக்குடுக்கை’ நாவல் ஒரு வனம் என்றால், இந்த வனத்தில் வளர்ந்து விரிந்துள்ள விருட்சங்களின் விதைகள் யாவும் ‘யானை’ சிறுகதையில் உள்ளது.

ப்ரிஸ்டல் பல்கலைகழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவன் ஆதன். புலம் பெயர்ந்த பிறகும் பூர்வீக மண்ணின் வேர்களை கெட்டியாய் பிடித்து வாழ்கின்ற ஆதனின் தாயார். ஆதனுடன் கல்லூரியில் படிக்கும் ஆங்கிலேயப் பெண் எரிகா. நட்பு காதலாகி கர்ப்பம் வரை செல்கிறது. இலங்கையிலிருந்து முறையான விசாவில் வரும் காந்தன் லண்டன் விமான நிலையத்தில் இறங்கியவுடன் தன்னை அகதியாய் அறிவித்துக் கொள்கிறான். ஈழத்தின் சரித்திரமோ, புலிகளின் விடுதலை போராட்டமோ எதுவும்அறியாமல் வாழ்கின்ற ஆதனுக்கு காந்தன் மூலமாக ஈழத்தின் பின்புலம் தெரிய வருகிறது. திடீரென்று காணாமல் போன ஆதனை கண்டுபிடிக்க காந்தனிடம் உதவி கேட்டு வருகிறாள் எரிகா. நாவலின் ஆரம்ப பகுதிகளில், மாயமாய் மறைந்த ஆதனை தேடும் படலங்கள் ஒரு ‘டிடெக்டிவ் த்ரில்லர்’ வாசிக்கும் உணர்வை அளிக்கின்றன.

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவல் ஐந்து பாகங்கள் கொண்டது. முதல் பாகம் முழுக்க கதையின் நாயகன் பொன்னியின் செல்வரின் பராக்கிரமம் விதந்தோதப் பட்டாலும், அந்த பாத்திரத்தின் அறிமுகம் இரண்டாவது பாகத்தில்தான் நிகழும். இலங்கையில் ஒரு யானைப் பாகனாக பொன்னியின் செல்வர் நாவலுக்குள் ஏற்கனவே நுழைந்த விட்ட கணத்தை வாசகர்கள் பிற்பாடுதான் அறிவார்கள். இலங்கையில் யுத்த களத்தில் நிகழும் ஆதனின் அறிமுகம், பொன்னியின் செல்வனின் அறிமுக உத்தியை நினைவு படுத்தியது. இது போன்ற பல சுவாரசியமான உத்திகள் நாவல் முழுவதும் அமைந்துள்ளதால் ‘தீக்குடுக்கை’ சிறப்பானதொரு வாசிப்பனுபவத்தை தருகிறது.

ஒரு craft ஆகவும் ‘தீக்குடுக்கை’ கலைவெற்றி அடைகிறது. ஈழத்தில் விடுதலைப்புலிகள் இயக்கமும் சிங்கள ராணுவமும் மோதிக்கொள்ளும் கொடூர போர்க் காட்சிகளை, தன்மை (First Person Narration) உத்தியில் விவரிக்கிறார் ஆசிரியர். லண்டனில் நிகழ்கின்ற சம்பவங்களை படர்க்கை (Third Person Narration) வழியாக நகர்த்துகிறார். ஒவ்வொரு அத்தியாயமும் இப்படி மாற்றி மாற்றி பயணிப்பது ஒரு Roller coaster அனுபவம். இப்படி யோசியுங்கள். 2009ல் ஈழப்போர் உச்ச கட்டத்தை அடைந்த சமயம், இடது கையில் அசோகமித்திரனையும், வலது கையில் தி.ஜானகிராமனை பிடித்துக்கொண்டும் யுத்த களத்தில் நடந்து செல்கிறீர்கள். அங்கு நிகழும் வன்முறைகளை, மரண ஓலங்களை, உணர்ச்சிகள் மேலோங்கிய மொழியில் தி.ஜா சித்தரிக்கக் கூடும். அதே சமயம் அசோகமித்திரனோ போர் குற்றங்களை, குருதியின் வீச்சத்தை, வன்புணர்வுகளை உணர்ச்சிவசப்படாமல் உள்ளதை உள்ளபடி பதிவு செய்யக்கூடும். ஆசிரியர் அனோஜன் இந்த இரண்டு வித உத்திகளையும் ஒன்றாக இணைத்து நம் மீது எறிந்துவிடுவதால், ‘தீக்குடுக்கை’ இரு மடங்கு விசையுடன் நமக்குள் வெடித்து சிதறுகிறது.

வெளிநாடு என்றாலே உல்லாச உலகம், ஆடம்பர வாழ்க்கை என்கிற பிழையான பிம்பம் பொதுவெளியில் உள்ளது. தாய்நாடோ, வெளிநாடோ, எந்த நாட்டிலும் செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்கள் ஆவதும், ஏழைகள் மேலும் ஏழைகள் ஆவதுமே உண்மை. புலம் பெயர்ந்தவர்கள் ஓரளவு பணம் சேர்த்ததும் மதம், மொழி, சாதி சார்ந்த சங்கம் துவங்கி தீபாவளி பொங்கலுக்கு தாய்நாட்டிலிருந்து பிரபலங்களை அழைப்பார்கள். பட்டிமன்ற பேச்சாளர்கள், பாடகர்கள், இலக்கியவாதிகள், நடிகர்கள், சாமியார்கள், அரசியல்வாதிகள் இப்படி யாரேனும் வந்து ‘ஒரு நாள் முதல்வர்’ போல அதிரடி அறிவுரைகள் தெளித்து செல்வர். பிறந்த நாட்டில் கைவிடப்பட்டு புலம் பெயர்ந்த அகதிகள் இது போன்ற உல்லாச சொகுசுகளை அடைவதற்கு சில பல தலைமுறைகள் தேவைப்படும். இந்த பிரியாணி, டான்ஸ், பாட்டு கச்சேரி, சுற்றுலா, உல்லாச கலாச்சாரத்தின் பின்னே ஒரு கசப்பான உலகமும் சுழல்கிறது. வெளிநாடு ஹோட்டல்களில் பாத்திரம் கழுவுபவர், மீன் கடைகளில் மீன் வெட்டி சுத்தம் செய்பவர், மளிகை கடைகளில் சுமை தூக்குவோர், முடி வெட்டுவோர், இரவும் பகலும் வண்டி ஓட்டுபவர், கல்வி கற்று வேலை கிடைக்காமல் தவிப்பவர், பகுதிநேர வேலைகள் செய்வோர், விபச்சாரம் செய்பவர்கள், பிச்சை எடுப்பவர்கள் என சமூக அடுக்குகளின் கிழே அவதிப்படும் அகதிகள் ஏராளம். ‘தீக்குடுக்கை’ நாவல் வெளிநாட்டு வாழ்வின் இன்னொரு பக்கத்தையும், இருள் நிறைந்த அவ்வுலகத்தின் அவலங்களையும் மன அழுத்தங்களையும் அடிக்கோடிட்டு காண்பிக்கிறது.

ஆதனுக்கு பள்ளி நாட்களில் அடையாள நெருக்கடி உருவாகும்போது, தன்னை ஒரு ஆங்கிலேயனாக நினைத்தபடி, தமிழ் பேசுவதை தவிர்த்து, ஆங்கிலம் மட்டுமே பேசி, மேற்கத்திய கலாச்சாரத்தில் ஊடுருவி தனது பதின்பருவத்தை கடக்கிறான். காந்தன் பாத்திரமோ உறவினர்கள் இருந்தும் தன்னை அகதியாய் அறிவித்துக் கொண்டு சமூக சிடுக்குகளில் நீந்தி மேலே செல்ல விரும்புகிறது. ரிமாஸ் பாத்திரம் தமிழர்களின் மளிகை கடைகளில் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகி, வீதிகளில் வெள்ளையரின் இனவெறியால் தாக்கப்படுகிறது. ஒரு தீவிலிருந்து இன்னொரு தீவுக்கு அகதியாய் தப்பி வந்தாலும் இனவெறியும் வன்முறையும் ரிமாஸை பின் தொடர்ந்து வருவது பரிதாபமானதொரு சித்திரம். ரிமாஸ் மட்டுமல்ல, அவனிடம் நெருங்கி பழகும் லித்துவேனியா நாட்டுப் பெண் அகதியும், அவளது பாட்டியின் பாத்திரம் மூலமாக ஐரோப்பிய அகதிகளின் வாழ்வையும் பதிவு செய்கிறார் ஆசிரியர். ஈழப்போர் நிகழும் காலகட்டத்தில், ‘சிலோன் தேயிலைத்தூள் முன்பு போல சுவையாக இல்லை’ என்று சலித்துக்கொள்கிறார் எரிகாவின் தாயார். அவரிடம் கோபமாய் சீறுகிறான் ஆதன். மலையும், மலை சார்ந்த பிரதேசங்களையும், மலையேற்றப் பயணங்களை விரும்பும் எரிகா, தனது காதலில் கடைசி வரை மலை போல் உறுதியாய் நிற்கிறாள். கடலின் அலைகள் போல கொந்தளிக்கும் ஆதன், லட்சியவாதத்தால் உந்தப்பட்டு இயக்கத்தில் இணைந்துவிடுகிறான். நான்-லீனியர் வடிவத்தில் செல்கின்ற ‘தீக்குடுக்கை’ நாவலின் பாத்திரங்கள் ஒவ்வொன்றும், அதன் தனித்துவ குணாதிசயங்களை, அவை சந்திக்கும் அகச்சிக்கல்களை மிகச்சிறப்பாக முன்வைக்கின்றன.

நாவலின் துவக்கத்தில் சின்னஞ்சிறு பெண் போராளி உடலில் வெடிகுண்டு அணிந்து வெடித்து சிதறுகிறாள். முகாம்களில் புலிகளின் தீவிர பயிற்சி முறைகள், பீரங்கி, நீர்மூழ்கிக் கப்பல்கள், வான் படை, மனித வெடிகுண்டுகள், ஏவுகணை தாக்குதல், பதுங்கு குழிகளை வெட்டுவது என புலிகளின் செயல்பாடுகள் அனைத்தும் நுட்பமாக விரிகிறது. அறையில் RDX கலவை சூடு ஏறி வெடித்து இறக்கும் மாஸ்டர், போராளிகளுக்கு உணவு கொண்டு வரும் பெண், சிங்கள எறிகணை வீச்சில் தலை துண்டிக்கப்பட்டு உருண்டு செல்ல, மூடாமல் வெறிக்கும் அவளது விழிகள், ஒரு மாடு கண்கள் சிதைந்து, கால்கள் முடமாகி நடந்து செல்வது, இப்படி பல பக்கங்களில் தீக்குடுக்கை வெடித்து மனதை சிதைக்கிறது. ராணுவ பயிற்சியோ, புரட்சி இயக்கங்களின் பயிற்சியோ, இரண்டிலுமே De-Humanisation என்பது முக்கியமான அம்சம். மனிதத்தன்மையை சீராக இழந்து கடைசியில் யந்திரமாகிப்போகும் உளவியலை மிகத் தத்ரூபமாக விவரிக்கிறது இந்த நாவல். புலிகள் சரணடையும்போது, அவர்களை நிர்வாணமாக்கி, பெண்களின் தாலியில் தங்கம் இருப்பதால், தாலி கயிற்றை அறுத்து சிங்கள ராணுவம் தங்கள் கழுத்தில் கட்டிக் கொள்கிறது. கருப்பு முகமூடி அணிந்து, கழுத்தில் நூற்றுக் கணக்கான தாலிக்கொடிகள் சுற்றிய அந்த சிங்கள ராணுவத்தின் முகம், இனி வாசகர் நெஞ்சை விட்டு அகற்ற இயலாத கொடுஞ்சித்திரம்.

ஒரு நாவலின் இலக்கணத்தையும், அதை அணுகக் கூடிய முறைமைகளையும், அது தருகின்ற தரிசனங்களை பற்றி அறுபது ஆண்டுகளுக்கு முன்பே மலையாளத்தில் பி.கே.பாலகிருஷ்ணன் “நாவல் – சித்தியும் சாதனையும்” என்று எழுதிவிட்டார். அதன் சாராம்சத்தை வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு வடிவத்தில் (நல்ல நாவலும் மகத்தான நாவலும் – நீல. பத்மநாபன்), (நாவல் கோட்பாடு – ஜெயமோகன்), (நாவல் ஒரு சமையல்குறிப்பு – ஜெயமோகன்), (நாவலெனும் கலைநிகழ்வு – அழகிய மணவாளன்), (நாவலெனும் பிரம்மாண்ட உலைக்களம் – ஷங்கர்ராமசுப்ரமணியன்), தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இன்றும் விவாதங்கள் தொடர்கின்றன. கோட்பாடுகளால் ஒரு நாவலை எத்தனை கூறு போட்டாலும் கடைசியில் அதை வாசித்து முடிப்பவருக்கு என்னவாக மிஞ்சுகிறது என்பதும் முக்கியம். பல இலக்கியவாதிகளின் முதல் நாவல்கள் ஜவ்வு மிட்டாய் மாதிரி இழுத்தபடி, கலை வடிவமற்று, அதன் பெறுமதியை இழந்து இன்று காலாவதியாகி இளிக்கின்றன. அதை கணக்கில் கொண்டு பார்த்தால், இளம் வயதில் அனோஜன் எழுதியுள்ள இந்த முதல் நாவல், உலகளாவிய கருப்பொருளுடன், காலத்தை வெல்லும் ஒரு முத்திரைப் படைப்பாகவே வந்துள்ளது. இனி அவர் எழுதப்போகும் படைப்புகளில் வெளிவரக்கூடிய நம்பிக்கை ஒளியின் கீற்று இப்போதே தெரிகிறது. ஆசிரியருக்கு வாழ்த்துகள்.

நாம் பிறந்த சமூகத்தின் நிலை எப்படி இருந்தது என்பதை விட, ஒரு மேம்பட்ட சமூகத்தை அடுத்த தலைமுறைக்கு உருவாக்கி தந்து செல்கிறோமா என்பதே கேள்வி. ஈழத்தில் நிகழ்ந்த போரிலிருந்து மீண்டு வந்த புதிய தலைமுறை அதன் தரிசனங்களை இன்று முன்வைக்கிறது. உலகம் முழுவதும் உள்ள சமூகங்கள் நுண்மையாய் பிளந்து மறைமுகமான போர்கள் இன்றும் தொடர்கின்றன. அடுத்த தலைமுறையின் கரங்களில் அமைதி, வன்முறை ஆகிய இரு ஆயதங்கள் மீண்டும் தரப்படுகின்றன. அவர்கள் ஒருபோதும் வன்முறையை தெரிவு செய்யக்கூடாதென நாம் பிரார்த்திப்போமாக!

வெற்றிராஜா

புதுச்சேரியைச் சேர்ந்த வெற்றிராஜா தற்சமயம் இங்கிலாந்தில் வசித்துவருகிறார். மதிப்புரைகள், விமர்சனம், புனைவுகள், அல்புனைவுகள் என்று பரந்த தளத்தில் எழுதிவருகிறார்.

1 Comment

  1. தீக்குடுக்கை விமர்சனம் நாவலின் பல்வேறு பகுதிகளான வடிவம், உள்ளடக்கம், உணர்வுகள் போன்றவற்றை விரிவாகத் தொடுகிறது. கருப்பு முகமூடியில் தாலிகளைச் சுற்றிக்கொண்டு துப்பாக்கிகளோடு திரியும் சித்திரங்கள் திகைப்பூட்டுகின்றன.

    அருமை வெற்றிராஜா. ⁩ வாழ்த்துக்கள் அனோஜன்.

உரையாடலுக்கு

Your email address will not be published.