/

பா.அகிலன் கவிதைகள்

வீடு திரும்புதல் – 01

நிணங்களின் பேராற்றங்கரைகளில்

கொத்தாய் எரிந்தார் நினைவுகள் கலக்கின்றன

படைக்கலன் தாங்கிக்  நடந்தார்

படுகளங்களில் ஆசை பகிர்ந்து கணத்தில்  மறைந்தார்

எவருமில்லாப் பாலையிற் திரும்புகிறேன்

கரைக்காத அம்மாவின் தேகச் சாம்பல்

தொண்டைக் குழியில் அடைத்துக் கிடக்கிறது

முதுமையில் தனிமையில்

மரக்கால்களை ஊடுருவி தைக்கும் முள்ளேற்று நடக்கிறேன்

பின்னால் பிறந்தவள்

 ‘எப்போது வருவாய்’ எனக் கேட்டுச் சலியாதவள்

புதைந்த இடமும்  அறியாது திரும்புகிறேன்

உறவோர் சிதறி வெறுமையுற்ற வெளிகளில்

குறிச்சியும், பகுதியும், கிழக்கும் ,மேற்கும்

முறிந்து வேறாகிக் கிடந்த நிலத்தில்

சன்னம் தைத்த சுவர்களிலிருந்து வெடியோசை கிளம்பி

தேகத்தை விடாது துளைக்க

வீடு திரும்புகிறேன்

வீடில்லா ஊருக்கு, ……………

ஊரில்லாக் காட்டுக்கு………………………..

நட்சத்திரங்கள் நடுங்குகின்றன

வெறுமை முகில்கள் கனக்கின்றன

இந்தப் பிறப்பில்

இனியொரு நாளில்

யாரை மறுபடி காணுதல் கூடும்?

எதனை மறுபடி பெறுதல் கூடும்?

வீடு திரும்புகிறேன்

நள்ளிராவெனும் பெரும்பொழுதில்

வெட்டையும்,பாழடைவும் கண்டற் சிதலும் மூண்ட

காயப் பெருந்திணைக்கு

வீடு திரும்புதல்  – 02

அங்கு யாருமில்லை

புதிதாய் வந்தவர்களை அறிந்தேனில்லை

செவ்வண்ணத்தில் வளைந்தோடும்

புதிய தெருக்களால்

முட்கம்பி எல்லைக் கட்டைகளால்

மின்னும் தகரங்களின் புத்தொளியால்

புதிதாய் ஒரு நிலம் வரையப்பட்டுள்ளது

அதன் பெயர் 3356 சதுர கிலோமீற்றர்

ஆனால் அறுத்து பிரித்தெடுக்கப்பட்ட

அதன் பிறிதொரு பாதியை

என் பூட்டனிலும் முதிய ஆலமரத்தை

நிலப்படமாய்

உனது மேசையின்  பின்னாற்

கண்ணாடிச் சட்டகத்திற்குள் காண்கிறேன்

முன்னாற் பறக்கிறது உனது தேசத்துக்கொடி

நொடிந்த மனதில்

வெண்கரு முகில்கள் போல விரிகிறது பாலியம்

அங்குதான்

எங்கள் வீடும்

துரவும்

வயல்களும் இருந்தன

மூன்றரை தசாப்தங்கள் கழித்து அனுமதிக்கப்பட்டிருக்கிறேன்

‘உன்னுடைய ஊரென்றார்

‘வாழ்க்கை ஒளிபெறும் இனி’ என்றார்

ஆச்சரியமானேன்

உண்மையைக் கூறுங்கள்

யாருடைய ஊர் இது?

எங்கென் மயானம்?

காலங்களையுண்ட  சாம்பற் காடு திரள்கிறது

வீடு திரும்புதல்  – 03

மூன்று தசாப்தங்களிற்குப் பின்னால் இருக்கிறது வீடு

எண்ணங்கள் அதற்கு பின்னால்

வளைந்து

சிதறி

மடங்கி

முள்ளடர்ந்து

ஒடிந்து நீள்கிறது மேலும்  விரிந்து

இப்போது திரும்புகிறேன்

இரத்தச் சிவப்பில் ஒரு குளம்

பாலைக்கும் மாலைக்கும் நடுவில் ஒரு பொழுது

இருளல்ல பகலுமல்ல

வெறுமையின் பேரிரைச்சல் காண்கிறேன்

வீடு நினைவாகிக் கரைகிறது

நீ அழுத கண்ணீர்

பெருநதியாய் பெருக்கெடுக்கிறது பல்லாண்டுகள் கழிந்தும்

துப்பாக்கிச் சன்னங்கள் சீறும் பொழுதிலும்

எப்போதும் என்பால் திரும்பும் வசீகர விழிகளை

இதயத்திற் பொத்தியபடி நகர்ந்துள்ளேன்

ஏதுமில்லை

காலமெனும் கொடுமை ஏற்று நடக்கிறேன்

முறிந்த மொட்டைப் பனையிலிருந்து

பெயர் அறியாப் பறவை பறக்கிறது

இப்போது எங்குள்ளாய்?

எந்த நாட்டில்?

இன்னும் அந்த அடங்கா நேசத்தை

யாருமறியாது

எனக்கு கட்டளையிடும் அந்தப் பெரிய விழிகளை

புயல் சென்று முடிந்த காலமெல்லாம் காத்து வைத்திருந்தாயா?

வருகிறேன்

அதே நிலங்களை கடக்கிறேன்

அவை  அவையல்ல

எல்லாமே புதிதாயுள்ளன

விட்டுச் சென்றவற்றைத் தேடித் தோற்கிறேன்

ஒரு முறை

ஒரே ஒரு முறை

உனைக் காணுதல் நிகழுமா?

நீங்க மறுத்து நீங்கிச் செல்லும் உன் கண்களை

பட்டொளி வீசும் உன் குரலை

இப்போதும் அமைதியில்லை…

பாலை பொழிகிறது

எதைத் தேடி உயிர் காக்கிறேன் அன்பே?

பா.அகிலன்

யாழ்பாணம் நல்லூரைச் சேர்ந்த பா. அகிலன் ஈழத்தின் நவீன கவிதையாளர்களில் ஒருவர். இவரது தொகுப்புகள் பதுங்கு குழி நாட்கள், சரமகவிகள், அம்மை, Then there no witnesses , Tea: concoction of dissonance  (collaborative) என்ற தலைப்புகளில்  தொகுக்கப்பட்டுள்ளன. யாழ்.பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றுகிறார்.

1 Comment

  1. சொற்களினாலேயே நிலவும் வெறுமையை தத்தளிப்பை வீடு திரும்பும் தருணங்களை கண்முன் காட்சிப்படுத்துதலே கவிதையின் வெற்றி சிறப்பு ஐயா

உரையாடலுக்கு

Your email address will not be published.