/

சுரேஷ் பிரதீப்பின் பொன்னுலகம்: கீரனூர் ஜாகிர்ராஜா

சுரேஷ் பிரதீப்பின் பொன்னுலகம் கதைகளை வாசித்து முடித்தபோது அவர் புதுப்புது உலகங்களுக்குள் பிரவேசிக்க முயல்கிறார் என்பதை உணர இயன்றது. ‘எனக்கு விதவிதமான கதைகளை எழுதுவதில் ஆர்வம் இருந்ததில்லை. அப்படி ஒரு கட்டாயத்துக்கு உட்படுவதுகூட எழுத்தைச் செயற்கையாக மாற்றிவிடும் என நினைக்கிறேன். ஆனால் இயல்பாக என் கதைகள் இத்தொகுப்பில் வேறுவேறு களங்களுக்குள் பயணித்திருப்பதையும், கதைமொழி அதற்கு ஏற்றதுபோல தன்னை மாற்றிக் கொண்டிருப்பதையும் காண்கிறேன்’ என்று அவர் அதைத்தான் தன்னுடைய முன்னுரையிலும் குறிப்பிடுகிறார்.

2017 -இல் ‘ஒளிர்நிழல்’ நாவலின் மூலமாகத் தனது எழுத்து வாழ்க்கையைத் துவங்கியவர் ‘பொன்னுலகம்’ தொகுப்புடன் சேர்த்து மொத்தம் நான்கு சிறுகதை நூல்களை வெளியிட்டுள்ளார். இது ஓர் சீரான இடைவெளிகளற்ற இயக்கம் என்றே கருதுகிறேன். ஒரு எழுத்தாளனின் துவக்கம் இப்படித்தான் இருக்க வேண்டும். தடையில்லாமல் இயங்குவதற்கு அவருடைய அரசுப் பணியும் முக்கியமான காரணம். தொடக்கம் சரியாக இருந்து பிறகு பொருளாதார நெருக்கடிகளால், லௌகீக சிக்கல்களால் எழுத்தைத் தொடர இயலாமற் போன பல நல்ல படைப்பாளிகளை நான் அறிவேன். சுரேஷ் பிரதீப்க்கு இவ்வித இடையூறுகளெதுவும் இல்லாமலிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

‘பொன்னுலகம்’ தொகுப்பின் வாயிலாகத்தான் நான் அவருடைய எழுத்தை முதன்முதலில் வாசித்தேன். ‘இன்னும் சற்று முன்னதாகவே என்னை நீங்கள் வாசித்திருக்கலாம்’ என்று மெலிதாகக் குற்ற உணர்வுக்கு நம்மைத் தள்ளிவிடும் எழுத்து. ஜானகிராமனின் பாதிப்பில்லாமலே ஜானிகிராமனை நினைவூட்டும் நவீன தஞ்சாவூர் எழுத்து. தி.ஜா.வின் படைப்புகளில் நுங்கும் நுரையுமாய்க் காவிரி ஆறு எங்கும் வருவதுபோல் சுரேஷின் எழுத்தில் அவருக்கேயான, பங்குனியிலும் நீர் நிறைந்திருக்கும் பாண்டவையாறு தேவையான நேரங்களில் எல்லாம் குறுக்கிடுகிறது. தன் நிலத்தில் ஓடும் ஆறு வாய்க்கால்களைப் பற்றிய பொருட்படுத்தலின்றி , அங்கு காலகாலமாக கிளைபரப்பி நிற்கும் விருட்சங்களைக் குறித்த பிரக்ஞையின்றி, புள்ளினங்களின் சிறகசைப்பின்றி, மண்ணின் நெடியின்றி புற்றீசலாய்க் கிளம்பி வரும் புதுவிதமான இச விஷமான எழுத்துக்களுக்கு மத்தியில் ,மேற்கூறியவற்றை இயல்பாய் தன் எழுத்தில் முன் வைக்கும் சுரேஷ், ஆறுதல் அளிக்கிறார். உருண்டைக் குழம்பும் , பொன்னாங்கண்ணிக் கீரைக்கூட்டும் தஞ்சாவூருக்கேயான பிரத்தியேகச் சுவையென்றால் தன்னைவிட பதினெட்டு வயது மூத்தவளான பூரணியிடம் காமம் கொண்டு தவிப்பதும், இறுதியில் நிறைவேற்றிக் கொண்டு , அவளுடைய ஒளி மங்காதிருக்கும் நீலநிறப்புடவையை மூன்று வருடங்கள் கழித்து எடுத்துப் பார்ப்பதும் கூட ஜானகிராமனின் ‘டச்’ தான்.

விக்னேஷுக்கும் அவனுடைய அக்கா புவனாவுக்குமான சுதந்திரமான, விகல்பமற்ற உறவைப் பற்றி ‘பூரணி’ கதையில் இன்னும் சில பக்கங்களை சுரேஷ் எழுதியிருக்கக்கூடாதா என்றிருந்தது. விக்னேஷ் – புவனா இருவரின் பந்தம் என்பதை வெறுமனே குடும்பங்களில்,வீடுகளில் நிகழும் சாதாரண அக்கா – தம்பி போட்டிக்கதையாகச் சித்தரிக்காமல் உளவியல் சார்ந்த நுண்ணிய தளங்களுக்கு எடுத்துச் செல்ல அவரால் இயன்றிருக்கிறது. ‘எனக்கு மனித அகத்தின் நுண்ணிய வண்ண மாறுபாடுகள் முக்கியமானதாகப் படுகின்றன. என் கதைகளில் நான் அவற்றைக் கூர்ந்து பார்க்கவே விழைகிறேன்.’ என்று கூறும் சுரேஷ் , இத்தொகுப்பின் சில கதைகளில் (குறிப்பாக ‘பூரணி’, ‘முதல் அடி’, ‘மலர்கள்’, ‘நறுமணம்’) நுட்பமாக அந்த உத்தியைக் கையாண்டுள்ளார். எனவே ‘இத்தொகுப்பின் கதைகளை வாசிக்கும்போது அகச்சித்தரிப்பிலிருந்து இக்கதைகள் வெளியே போயிருப்பதை உணரமுடிகிறது’ என்று அவர் முன்னுரையில் குறிப்பிடுவதை ‘ஒருவித சுயசமாதானம்’ ஆகவே நம்மால் எடுத்துக் கொள்ள முடிகிறது. சுரேஷின் உரையாடல்களை விடவும் விவரணைகள் விசேஷமானவை. அவற்றில் தான் அவர் தன் மொழியை,புனைவுத் தருக்கத்தை,தத்துவார்த்தத்தை,தனக்கேயான சகல வித்தைகளையும் பரீட்சார்த்தம் செய்து பார்க்கிறார். ‘பூரணி’ கதையின் துவக்கத்தில் விக்னேஷ் உறக்கம் இழந்து தவிப்பதிலிருந்து இது தொடங்கிவிடுகிறது.

‘அதிக சத்தமெழுப்பும் கொலுசுகளை அணியும் பெண்கள் சற்று கனமான சரீரம் கொண்டவர்களாகவும் சகஜமாகப் பழகக்கூடியவர்களாகவும் சற்று மந்தத் தன்மையும் பழகுவதில் ஒரு கபடமற்ற தாராளத்தன்மையும் கொண்டவர்களாக எனக்குத் தோன்றினர். ஆனால் குறைவாக ஓசையெழுப்பும் கொலுசுகளை அணிகிறவர்கள் அல்லது கொலுசு குறைவாக ஓசை எழுப்பும்படி நடக்கிறவர்கள் நாசூக்கு நிறைந்தவர்களாக ஆண்களுக்கு இணையாக ஆணவமோ தன்மதிப்போ கொண்டவர்களாக சற்றுக் கடினமானவர்களாக எனக்குப் பட்டனர்.’ என்று விக்னேஷ் கண்டுபிடித்து பூரணியை இரண்டாவது ரகத்தில் சேர்க்கிறான். பூரணியும் அப்படித்தான் நாசூக்குமிக்க தன்மதிப்பு கொண்டவளாகவே சுரேஷ் பிரதீப்பால் சித்தரிக்கப்படுகிறார். வாசகனும் விக்னேஷை சுரேஷ் பிரதீப்பாக அடையாளங்கண்டு கொள்கிறான். இதுவே ஒரு படைப்பாளிக்கும் அவனுடைய படைப்புக்குமான ஆத்மார்த்தமான பந்தம். ஒரு புனைவை, இது புனைவல்ல நிஜமாகத்தான் இருக்கும் போல என்கிற வாசக அபிப்ராயத்தை உருவாக்க திராணியுள்ளவனே கலைஞன்.

கடற்கரை முழுதும் கிளிஞ்சல்களைப் பொறுக்கிச் சேர்த்து மணல்வீட்டினை அழகுபடுத்தும் சிறுமிபோல வாழ்க்கை கொண்டுவந்து சேர்த்திருந்த விவேகத்தின் அழகு மட்டுமே மிளிர்ந்த மூத்த எழுத்தாளர் அசோகன் ஒரு மதுச்சாலையில் தன்னைச் சந்தித்த இளைய தலைமுறை எழுத்தாளனிடம் இப்படியெல்லாம் சொல்கிறார்:

‘…என்னைக் கேட்டா அனுபவத்தைத்தேடி எழுத்தாளன் அலையக்கூடாதுன்னு சொல்வேன்…அவன் தேடலில் எழுத்துக்கான விஷயம் சிக்குமான்னு அலையிறதுல ஒரு சின்ன ஆபாசம் இருக்கிறதா எனக்குத் தோன்றது…’

‘எழுதணும் எழுதணும்னு உள்ளுக்குள்ள நீங்க அவஸ்தை படுறது உங்க எழுத்துல தெரியறது…’

‘நல்லா யோசிச்சுப் பாருங்கோ. நீங்க எழுதத் தொடங்கினப்போ எழுதுறதுக்கு ஏத்த மாதிரிதான் உங்க மனம் இருந்திருக்கும். எதையும் யோசிக்காததா,எந்தக் கள்ளமும் இல்லாததா,பயமும் பணிவும் கொண்டதா உங்க மனம் இருந்திருக்கும் சரியா?’

‘நீங்க எழுதத் தொடங்கினப்போ உங்களிடம் ஒரு கனவு இருந்தது. அது மட்டும்தான் இருந்தது. இன்னிக்கு இருக்கிற அளவு அறிவோ பகுத்துப் பார்க்கும் திறமையோ இழப்புகளோ இழப்புகள் கொடுக்கிற கவலையோ இருந்திருக்காது. இன்னிக்கு அதெல்லாம் குப்பையாட்டம் சேர்ந்து உங்க ஓட்டத்த தடுக்கிறது. உங்க கண்ணுக்கு பாறையா படறது..’

‘முதல் அடி’ கதை புதிய விஷயமில்லைதான். குடிக்காமலே இருவரும் இவ்வளவு பேசிக் கொள்கிறார்களே; ஒருவேளை அவர்கள் குடித்திருந்தால் ,சுரேஷ் இந்தக் கதையை ஒரு குறுநாவலாகவேனும் எழுத வேண்டியிருந்திருக்கலாம் என்று தோன்றியது. ‘முதல் அடி’யில் முழுக்கவே உரையாடல்கள் தான். கொஞ்சம் மதுச்சாலை மற்றும் நுகர்வோர் குறித்த விவரணைகளும் இடம்பெற்றிருந்தால் கதை இயல்பான இடத்தை அடைந்திருக்கும்.அவ்வகையில் சுரேஷ் பிரதீப்புக்கு மதுச்சாலை-மதுப்பிரியர்கள் குறித்த போதிய அவதானிப்பு இல்லை என்று நிறைய ‘குடிக்கதைகள்’ எழுதிய நான் குற்றம் சாட்டுகிறேன்.

‘மலர்கள்’ கதைக்கு பிரத்யேகமான உழைப்பை தந்திருக்கிறார் சுரேஷ். படித்துவிட்டு உடைந்த கண்ணாடிச்சில்லுகளில் ஒன்றாகத்தான் நானும் கிடந்தேன். தமிழ் ஈழத்தில் ஆர்வமுள்ள எனக்கு இக்கதை வேறோர் கோணத்தில் துலக்கமாகியது‌. ‘நறுமணம்’ கதைபோலவே எனக்கும் ஓர் அனுபவம் இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் எழும்பூர் ரயில் நிலையத்தில் தஞ்சாவூருக்குப் பயணச்சீட்டு எடுத்துக்கொண்டு கும்பலிலிருந்து வெளியே வந்த என் மேல் அந்தப் பனிமலர் உரசிச் சென்றது. ஆம்..அவளொரு திருநங்கை. அத்தனைப் பேரழகு. பெண்ணின் ஸ்பரிசத்தை உணர்ந்தவன் தான். ஆனால் எந்தப் பெண்ணின் தேகத்திலும் இத்தனை குளிர்ச்சி இருக்குமா? அறியேன். ‘நறுமணம்’ வாசித்தபோது,நாம் காலங்கடத்திவிட்டோம்; சுரேஷ் முந்திக் கொண்டார் என்று பட்டது. ‘மெல்லிய இடர்’ மட்டும் தான் இத்தொகுப்பில் அளவில் சிறிய கதை. தனியார் மருத்துவமனையொன்றில் அமர்ந்துகொண்டு மருத்துவரைக் கண்டு ஆலோசனை பெற்றுவரும் நோயாளிகளைக் குறித்த அவதானிப்பாக தட்டையாக இக்கதையை புரிந்து கொள்ள முடியாது. சுரேஷின் எல்லா கதைகளிலுமே ஒருவித உளவியல் சார்ந்த அணுகுமுறை உண்டு. மெல்லிய இடரில் வெற்றிகரமாகத் தொழிற்பட்டிருக்கிறது. ‘தேவதைத் தன்மை பூசப்பட்ட செவிலியர்கள்’ என்ற வர்ணனையை எந்த நர்ஸிடமாவது ஞாபகம் வைத்துச் சொல்ல வேண்டும்.

‘பொன்னுலகம்’ தலைப்புக் கதை சமகால கணினி யுகக் கற்பனை. ஹரிப்ரஸாத் ஒரு மனிதனல்ல கணினி நிரல் மட்டும்தான் என்று வைஷ்ணவி அறிந்து கொள்வதுடன் கதை முடிந்துவிடும் என்று பார்த்தால் , சுரேஷ் ஒரு படி மேலே போய், அவள் கணவனை விவாகரத்து செய்து ஹரி என்கிற கம்ப்யூட்டர் உருவாக்கிய கற்பனை படிமத்துடன் வாழ முடிவு செய்வதுவரை நீட்டித்து மற்றொரு அதிர்வையும் வாசக மனத்தில் உருவாக்கி விடுகிறார்.

21-ஆம் நூற்றாண்டுச் சிறுகதைகள் எப்படியெல்லாம் இருக்கும் என்பதற்கு உதாரணம் போலிருக்கின்றன சுரேஷ் பிரதீப்பின் கதைகள். தீவிர வாசிப்பின் மூலம் அவருக்கு அவருடைய மொழி வசப்பட்டிருக்கிறது. தன் புனைவுகளின் வழியே தர்க்கித்து விவாதித்து தீர்வைக் கண்டடையவும் அவற்றை வாசகனுக்கு உரிய விதத்தில் விளம்பவும் அவர் முயற்சிக்கிறார். இக்கதைகளை வாசிக்கையில் சுரேஷின் நகைச்சுவை உணர்வு குறித்து சிறு ஐயம் எழுகிறது. பின் நவீனத்துவ எழுத்து முறையில் ‘பகடி’யும் ஒரு பங்கு வகிக்கிறது. இதை அவர் கவனத்தில் கொள்ளலாம். அதற்காக வலிந்து செய்யத் தேவையில்லை. எப்படி அவர் தன் எழுத்தின் அடிநாதமாக வெகு இயல்பாக காமத்தைக் கையாள்கிறாரோ அவ்வாறு அங்கதமும் வெளிப்படலாம். தவறில்லை.

சமீபமாக எழுத வந்தவர்களில் சுரேஷ் பிரதீப் மீது எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

கீரனூர் ஜாகிர்ராஜா

கீரனூர் ஜாகிர்ராஜா இஸ்லாமிய அடித்தள மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எழுதிவரும் முதன்மையான படைப்பாளி. நாவல், சிறுகதை, விமர்சனம்,தொகை நூல்கள், சிறார் இலக்கியம் என கால் நூற்றாண்டுக்கும் மேலாக தொடர்ந்து இயங்கி வருகிறார்

1 Comment

  1. கட்டுரையைப் படித்ததும் கதைத் தொகுப்பை உடனே வாசித்துவிட வேண்டும் என்ற ஆர்வம் எழுகிறது.பார்ப்போம்.

உரையாடலுக்கு

Your email address will not be published.