“கண்ணாடி
மிக அதிகமான
பதிப்புகள் வெளிவந்த
பெஸ்ட் செல்லர்
ஒவ்வொரு வீட்டிலும்
ஒன்றுக்கும் மேற்பட்ட பிரதிகள் கொண்ட
என்றென்றைக்குமாக வாசிக்கப்படும் நூல்
பைபிளைவிட அதிகமாக
ஸ்தோத்திரம் செய்யப்பட்ட
புனிதமான நூல்.“
(நிழலை கைப்பற்றுதல் – கல்பற்றா நாராயணன்)
கண்ணாடிக்கு பச்சைத்தண்ணீரின் நிறம். பிரதிபலித்தல் என்ற ஒரே ஒரு நோக்கத்திற்காக மீண்டும் மீண்டும் உருவாக்கப்படும் நீலநிற நீர்த்தேக்கம் (Now I am a lake mirror- Sylvia Plath). நார்ஸிஸஸ் தன் நீர்ப்பிம்பத்தால் ஈர்க்கப்பட்டு மூழ்கி மறைந்த தடாகம் ஒவ்வொருமுறை நான் கண்ணாடி பார்க்கும்போதும் எழுந்துவருகிறது. மனிதர்கள் அதில் நீந்தித்திளைக்கிறார்கள். அதில் மூழ்கி தங்களை தொலைத்தும் விடுகிறார்கள். கண்ணாடியைவிட ஈர்ப்பான வேறு எந்த பொருளையும் மனிதன் படைக்கவில்லை.‘ கண்ணாடியைப் பார்த்து வாங்கமுடியாது/ கண்ணாடி பார்ப்பவர்களாக ஆகிவிடுவோம்’. கண்ணாடி மாட்டப்படாத வீடு எது? அங்காடிகளில் ’இது ஒரு வீடு’ என்ற உணர்வை ஏற்படுத்துவதற்காக கண்ணாடிகள் பொருத்தப்படுகின்றன.
நீரில் பிரதிபலித்த ’சுயரூபம்’ தான் மனிதனில் தன்னுணர்வை உருவாக்கியது. தன் சொந்த நீர்ப்பிம்பத்திலிருந்து உருவாகிவரும் தன்னுணர்வை விவரிக்கும் உருவகக்கதை ஒன்றுண்டு: நிறைமாத கர்ப்பிணியான புலி மேய்ந்துகொண்டிருக்கும் ஆடுகளை பதுங்கியிருந்து தாக்குகிறது. ஆடுகள் தப்பிவிடுகின்றன. வேகமாக பாய்ந்தது கீழே விழுந்த அதிர்வில் புலி குட்டியை ஈன்றுவிட்டு பிரசவத்திலேயே இறந்தும் விடுகிறது. ஆடுகள் அனாதையான புலிக்குட்டியை தங்களுடன் எடுத்துச்சென்று வளர்த்தன. அது ஆடுகளுடன் புல்லை உணவாக சாப்பிட்டது. ஆடுபோல கனைத்து, மிகமெதுவாக நடந்து புல்மேய்ந்து வாழ்ந்தது. ஒருநாள் ஆடுகளுடன் இருந்த அந்த புலிக்குட்டியை இரை தேடிவந்த புலி ஒன்று பார்க்கிறது. புலியைப்பார்த்ததும் ஆடுகள் ஓடி மறைந்துவிடுகின்றன. பயத்தில் ஸ்தம்பித்து நின்ற புலிக்குட்டியை புலி ஆசுவாசப்படுத்தியது. ‘ நீ என் உறவினன். நீ ஆட்டுக்குட்டி அல்ல புலிக்குட்டி. நீ வளர்ந்து பெரிதாகும்போது என்னைப்போல ஆவாய். நாம் புல் சாப்பிட வேண்டியவர்கள் அல்ல. ஆட்டிறைச்சியும் முயலிறைச்சியும்தான் நமது உணவு. என்னுடன் வா, உனக்கு உன்னை யார் என்று காட்டித்தருகிறேன் ’ என்று சொல்லி புலிக்குட்டியை அருகே உள்ள ஆற்றிற்கு அழைத்துச்சென்றது. ஆற்றங்கரையின் ஓரத்தில் தன்னுடன் நின்ற புலிக்குட்டியிடம் ஆற்றை பார்க்கச்சொன்னது புலி. புலிக்குட்டி சிறியது என்றாலும் பார்க்க புலிபோலவே இருக்கும் தன் நீர்ப்பிம்பத்தை பார்த்தது. தன்னை அழைத்துவந்த புலியை பார்த்தது, தன்னால் எவ்வளவுமுடியுமோ அவ்வளவுக்கு தன்னையே பார்த்துக்கொண்டது, தன் நீர்ப்பிம்பத்தை பார்த்தது. மாறிமாறி பார்த்ததுக்கொண்டே இருந்தது. ஒருகட்டத்தில் புலியாக ஆகக்கூடிய உயிர்த்துடிப்பு தன் உடலில் நிறைந்திருப்பதை உணர்ந்துகொண்டது. தான் புலிதான் என்று அதற்கு நம்பிக்கை வரத்தொடங்கியது என்றாலும் புலியின் உருமல் அதை அச்சுறுத்தியது. ’வா இது முடியவில்லை. உன்னை இன்னும் நீ அறியவேண்டியிருக்கிறது’ என்று சொல்லி புலி ஒரு முயலை வேட்டையாடி புலிக்குட்டிக்கு கொடுத்தது. புல் சாப்பிட்ட பழகிய புலிக்குட்டி முதன்முறையாக சுவை என்றால் என்ன என்பதை அறிகிறது. புலி மட்டுமே அறிய சாத்தியமான தீவிரமான சுவை. தீப்பற்றியது போன்ற உன்மத்தத்தில் அது முயல் இறைச்சியை கடித்து கிழித்து உண்டது. அது தன்னையறியாமலேயே உருமியது. மறைந்திருந்த தேற்றைப்பற்களும் நகங்களும் வெளியே வந்தன. என் பருவடிவம் புலியாக ஆகிக்கொண்டிருக்கிறது. தானாக ஆதல் என்பது எவ்வளவு கம்பீரமான அனுபவம்!
எந்த உருவகக்கதையையும்போல இந்த கதையிலும் புலி புலி அல்ல. இந்த கதையில் நிகழ்வதுபோல இம்மாதிரியான புறவயமான தூண்டுதலால் புலிக்குட்டி புலியாக ஆவதில்லை. தன் நீர்ப்பிம்பத்தை கண்டுகொள்ளவோ, அந்த கண்டுபிடிப்பை மாற்றத்திற்கான தூண்டுதலாக ஆக்கவோ புலியால் முடியாது. ஆனால் அந்த ஆற்றல் கொண்ட மனிதனின், அவன் பரிணாமத்தின் கதையாக மாற இந்த புலிக்கதையால் முடியும். மனிதப்பரிணாமத்தின் பொதுத்தன்மையை விவரிப்பதற்காக மட்டுமல்ல அதன் நுட்பமான தனி இயல்புகளையும் சொல்ல இந்த கதையால் முடியும். நரேந்திரனில் விவேகானந்தரை கண்டுகொண்டு அதை நோக்கி அவரை செலுத்திய ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் கதையும் ஒருவகையில் இந்த புலிக்கதைதான். குழந்தைப்பருவத்தில் மனித சிசு தாண்டிவரும் ஒரு இக்கட்டை நாடகீயமாக இந்த கதை கையாண்டிருக்கிறது. எப்போது என்று உறுதியாக சொல்லமுடியாத தொல்பழங்காலத்தில், இன்றைய நவீன மனிதனின் பண்பாட்டு வளர்ச்சியுடன் ஒப்பிட்டால் அதன் குழந்தைப்பருவத்திலிருந்த மனிதன் தன் தோற்றத்தை/’சுய’ ரூபத்தை நீர்ப்பிம்பத்தில் கண்டுகொண்டுதான் அவனாக ஆகத்தொடங்குகிறான். அது நீர்ப்பிம்பமாக இருக்கலாம் அல்லது பிளாட்டோ சொல்வதுபோல எரியும் நெருப்பிற்கு பின்புறம் உள்ள குகைச்சுவற்றில் பதிந்த நிழலாக இருக்கலாம். அதில் மனிதன் முதல்முறையாக தன்னை நேரடியாக பார்க்கிறான் (ஒருவகையில் எல்லா புகைப்படங்களும் நீர்ப்பிம்பங்களின் பதிலிவடிவங்கள் அல்லவா?). நீர்ப்பிம்பத்தில் தன்னை கண்டடைந்து அதுவழியாக தன்னுணர்வு உருவாகி வருவதன் புறவயமான சித்திரம் இந்த கதையில் வெளிப்பட்டிருக்கிறது. இந்த உருவகக்கதை மிகப்பழையது. ‘கண்ணாடிப்பருவம் (mirror stage)’ என்ற லக்கானின்(Jacques Lacan) உளவியல்ரீதியான கண்டுபிடிப்பிற்கு பல காலம் முன்பே இந்த கதையில் அந்த கருதுகோள் தோற்றம் மாறி நம்மிடம் வந்துசேர்ந்துவிட்டிருக்கிறது. ஒருவகையில் ஆன்மிகமான தேடலில் தன்னை அறிதல்(Realisation) நிகழ்வதற்கு முன்பு கடக்கவேண்டிய தடையையும் அந்த கதை சுட்டிக்காட்டுகிறது.
ஸ்ரீநாராயண குரு தான் நிறுவிய கோவில்களில் கண்ணாடியை பிரதிஷ்டை1 செய்தது தன்னுணர்வு கொண்ட மனிதனை உருவாக்குவதற்காகத்தான் (’ஆத்மவிலாசம்’ என்ற பெயரில் நாராயணகுரு ஒரு வசன கவிதை எழுதியிருக்கிறார். அதில் கண்ணாடி பற்றிய அவருடைய அகத்தரிசனங்கள் வெளிப்பட்டிருக்கின்றன. எவ்வளவு விளக்கங்கள் அளித்தாலும் தீராத அர்த்த சாத்தியங்களுடன், அதற்குமேல் செறிவாக்கவே முடியாத அளவுக்கு அடர்ந்த மொழியில் அந்த கவிதை எழுதப்பட்டிருக்கிறது).
புல்தின்று ஆடுகளுடன் வாழ்ந்த அந்த புலிக்குட்டியைப்போல மனிதன் என்ற போதம் இல்லாமல் வாழ்பவர்களை தன்னுணர்வு கொண்டவர்களாக ஆக்குவதற்காகத்தான் நாராயணகுரு கண்ணாடியை பிரதிஷ்டை செய்தார். கண்ணாடியில் நீ உன் உடலைப்பார். இது மனித உடல். ஈழவன் என்றோ, தலித் என்றோ பிராமணன் என்றோ உள்ள பிரிவினைகளுக்கு அப்பால் உள்ளது மனித உடல். எந்த மனிதனிலும் உள்ள எண்ணற்ற சாத்தியங்கள் உன்னிலும் உண்டு. கண்ணாடியில் உன்னைப்பார். உன்னில் இருப்பது சாதி முத்திரையில்லை, மனிதன் என்ற முத்திரை மட்டும்தான். கண்ணாடியில் உன்னைப்பார், ஒரே ஒரு சாதியும் ஒரேயொரு மதமும் ஒரே ஒரு தெய்வமும்தான் இருக்கிறது, அது எந்த வகைபேதங்களும் அற்ற ’மனிதனை’த்தானே காட்டுகிறது? தன்னுணர்வை உருவாக்கும் கண்ணாடி என்ற ஊடகத்தை வழிபாட்டிற்கு உரியதாக ஆக்குவது வழியாக ’மனிதனை’ உருவாக்கியெடுக்கிறார் நாராயணகுரு. மனிதன் அல்லாத மற்ற எந்த உயிரினத்தாலும் அறிந்துகொள்ளமுடியாத தன்னுணர்வை நாராயணகுரு அழுத்தமாக சொல்கிறார். உண்மையில் நாராயணகுரு கண்ணாடி பிரதிஷ்டை செய்யவில்லை, கண்ணாடியில் மனிதனை அவர் பிரதிஷ்டை செய்திருக்கிறார்.
மனிதன் தவிர்த்த உயிர்க்குலங்கள் அனைத்தும் இயற்கை என்ற மென்பொருளில் நிம்மதியாக வாழ்கின்றன (மனிதன் அந்த சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டவன்). மனிதன் தான் சுயமாகவே உருவாக்கிக்கொண்ட, ஆனாலும் அவனுக்கு போதுமானதாக இல்லாத மென்பொருளில் இயங்குகிறான். இதைப்பற்றிய கற்பனையம்சம் நிறைந்த விவரணை கிரேக்க தொன்மமான எபிமெதீயஸ்(Epimetheus) ப்ரோமெதீயஸ்(Prometheus) என்ற இரட்டையர்களின் கதையில் இருக்கிறது. மனிதன் தவிர்த்த பிற உயிரினங்களுக்கு எபிமெதீயஸ் தன்னிடம் இருக்கும் அரியவற்றை வரமாக கொடுக்கிறான். அடர்ந்த தோல், உடலின் மேற்பரப்பில் குளிர்தாங்கும் அடர்ந்த ரோமங்கள், குளம்பு, நகம், தேற்றைப்பல், கொம்பு, பல அடுக்குகள் கொண்ட குடல், பார்க்க அழகான புறவுடல், அதிக வேகம், உடல்வலிமை, தீவிரமான புலன்கள் என உயிர்வாழ்க்கைக்கு அவசியமானவற்றையெல்லாம் உயிர்களுக்கு எபிமெத்யூஸ் அளிக்கிறான். மனிதனின் முறை வரும்போது தன் கைவசம் இருப்பதையெல்லாம் எபிமெத்யூஸ் கொடுத்து தீர்த்துவிட்டிருந்தான். பிறர் உதவியில்லாமல் வாழமுடியாத, மிகமிக கைவிடப்பட்டவனான மனிதன் முன் எபிமெத்யூஸ் தன்னிடம் எதுவும் இல்லை என கையை விரித்துவிட்டான். மனிதனுக்கு நல்ல உடையைக்கூட எபிமெதீயஸ் அளிக்கவில்லை. மனிதன் மேல் இரக்கம் கொண்ட ப்ரோமெதீயஸ் தேவலோகத்திலிருந்து நெருப்பை கவர்ந்துவந்து அவனுக்கு அளிக்கிறான். நெருப்பை எரிபொருளாக ஆக்கி தான் உயிர்வாழ்வதற்குரிய மென்பொருளை தானே உருவாக்கிக்கொண்டான் மனிதன். முதல்முறையாக நீரில் உற்று பார்க்கும்போது அதில் இருக்கும் பிம்பம் தன் சொந்த நிழல்தான் என்பதை மனிதன் கண்டடைகிறான். ப்ரோமெதீயஸ் அவனுக்கு அளித்த நெருப்பின் முதல் ஒளிர்வு அந்த தருணத்தில்தான் நிகழ்ந்திருக்க வேண்டும். அந்த தருணத்திலிருந்து தன்னைத்தானே பார்த்துக்கொள்ள முடியாத- கண்டுகொள்ள முடியாத- ஆரம்பகட்ட உயிரினங்களிலிருந்து மனிதன் உயர்கிறான். அதுவரை கடவுளைத்தவிர யாராலும் அறிய முடியாத அவனுடைய பிம்பத்தை, நிழலை மனிதன் முதன்முறையாக காண்கிறான். ஆத்மவிலாசம் என்ற கவிதையில் ‘இந்த கண்ணாடிதான் நம் கடவுள்’ என்று நாராயணகுரு சொல்கிறார். ’ நம்மை நாம் நேருக்கு நேராக பார்க்கமுடிந்ததில்லை’. இதோ இப்போது அதற்கான வழிமுறை உருவாகியிருக்கிறது. ‘கடவுள் என்பது பரிசுத்தமான கண், அது கண்ணாடியாகவும் ஆகியிருக்கிறது’. கண்ணாடியை கடவுளின் சதுர வடிவமான கண் என்கிறார் சில்வியா பிளாத். பயணத்திற்கு கிளம்பும் மனிதன் கண்ணாடிமுன் நின்று விடைபெற்றுசெல்வதுபோன்ற ஓவியம் ஒன்றை வரைவது வழியாக ஒட்டுமொத்த மனித வளர்ச்சியின் நுண்வரலாற்றை ஒவியனால் சித்தரித்துக்காட்டிவிடமுடியும். மலையாள நாவலாசிரியரும் இதழாளரும் ஆன எம்.பி.நாராயணபிள்ளையின் ‘நினைவுகூர்தல்’ என்ற சிறுகதை கண்ணாடியைப்பற்றிய கண்டடைதல்கொண்ட நல்ல சிறுகதை. அந்த சிறுகதையில் கதைசொல்லி ஒரு கடிதமெழுதி முடித்து அடியில் கையெழுத்துப்போடும்போது சட்டென அவனுக்கு தன் பெயர் நினைவுக்கு வராது. எவ்வளவு முயற்சித்தாலும் பெயர் நினைவுக்கு வராது. ஒருவன் இல்லாத இடத்தில் அவனை பிரதிநிதித்துவப்படுத்துவது அவன் பெயர்தான். ஒருவனை நேரில் பார்த்தேயிராதவர்களுக்கு அவனுடைய பெயர் மட்டும்தான் அவனாக இருக்கிறது. பெயர் என்பது மனிதனைவிட விரிவானது, அவனுடைய பதிலி. ”ஒருவனின் உண்மைத்தன்மை அவனுடைய பெயர்தான் இல்லையா? பெயர் இல்லாவிட்டால் தன்னால் இந்த கடிதத்தை முழுமையாக்க முடியுமா? யாரிடமாவது கேட்க முடியுமா தன் பெயர் என்ன என்று? அதுவும் இந்த இரவில்? (பெயரிடுவதற்கு முன்பு உள்ள இன்மையை, இருளை இந்த இரவு நினைவுபடுத்துகிறதோ?) என் முகத்தை பார்த்தால் ஒருவேளை பெயர் நினைவுக்கு வரலாம். அதை பார்க்கலாம்….. மெழுகுவர்த்திக்கு நேராக உள்ள கண்ணாடிக்கு நேராக நடக்கிறான். நல்ல பரிச்சயம். பரிசயமுள்ளவர்களை பார்க்கும்போது சிரிக்கவேண்டும் அல்லவா. சிரித்தேன். கண்டுபிடித்துவிட்டேன். ஓ, இது வேலப்பன் அல்லவா?”
கதைசொல்லிக்கு வேலப்பன் என்ற தனித்தன்மையை அளித்த மனிதப்பண்பாடு அதன் பயணத்தை தொடங்கியது கண்ணாடிப்பிம்பத்திலிருந்து உடைத்து வெளிவந்த தன்னுணர்விலிருந்துதான் இல்லையா? கண்ணாடிக்கு முன் நின்றவுடன் எவ்வளவு வேகமாக கதைசொல்லி தன்னை அறிந்துகொள்கிறான், எவ்வளவு சீக்கிரம் அவனுக்கு அவன் பெயர் நினைவுக்கு வருகிறது! “இந்த கண்ணாடிப்பிம்பம் வழியாகத்தானே நான் வேறுபட்ட இருப்பாக ஆகியிருக்கிறேன்? வேறு ஒரு இருப்பான ’கையெழுத்து’ இப்போது என்னுடையதாக ஆகிவிட்டது. ‘ வி.வேலப்பன். இது போதும். இனி கையெழுத்திடலாம். வி.வேலப்பன் என்று ஆங்கிலத்தில் எழுதி அதற்கடியில் ஒரு கோடு வரைந்து இரண்டு புள்ளிகள்”
நீர்ப்பிம்பத்தில் தன்னை கண்டுகொண்டதால் மட்டும் மனிதன் விலங்காக அல்லாமல் ஆவதில்லை. மேலும் தன்னுணர்வு இல்லாததை விலங்குகளும், பறவைகளும் மோதாமையாகவும் உணர்வதில்லை. அவை இயற்கையின் மென்பொருளில் பாதுகாப்பாக தொடர்வதற்கு அந்த அறியாமை அவசியமானது. ‘செயற்கை நுண்ணறிவால்’ உருவாக்கப்பட்ட, தானாகவே இயங்கும் வாகனம் ஓட்டுநரால் இயக்கப்படும் வாகனத்தைவிட பாதுகாப்பானதாக இருப்பது போல இயற்கையின் பிடியில் உள்ள விலங்குகளின் நிலை நாம் இருக்கும் நிலையைவிட பாதுகாப்பானது. செயற்கை நுண்ணறிவில் இயங்கும் வாகனத்திற்கு முன்னே ஆபத்துகள் எதுவும் இல்லை, வளைவில் சட்டென எதிர்ப்படும் வாகனங்கள் அதிர்ச்சியடையச் செய்வதில்லை, தற்செயல்கள் இல்லை, நாளை இல்லை, நேற்று இல்லை, மரணம் இல்லை. அந்தந்த கணங்கள் மட்டும். தன்னால் நிறைந்த தான் மட்டும்.
தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் முயலை மனிதக்கற்பனையில் பிறந்த கதைகளில் மட்டும்தான் பார்க்கமுடியும். ஒரு தனிவிலங்கிற்கு தனக்கு மட்டுமேயான எந்த பொறுப்பும் இல்லை, எந்த பதற்றமும் இல்லை. எந்த விலங்கும் தனித்தன்மை கொண்டதல்ல. தனித்தன்மையை அடைவதற்கு அவசியமான வீழ்ச்சியையோ உயர்வையோ அவற்றின் பரிணாத்தில் எதிர்கொள்ளவில்லை. ஒன்றாம் நூற்றாண்டின் நரிக்கும் இருபத்தியொன்றாம் நூற்றாண்டு நரிக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. சான் பிரான்ஸிஸ்கோவில் உள்ள நரிக்கும் கொயிலாண்டியில் உள்ள நரிக்குமிடையே எந்த வித்தியாசமும் இல்லை. அவற்றிற்கு கால-இடம் இல்லை. தன் நிழலை தன்னுடையதுதான் என்று கண்டடைவதற்கான அறிவு அவற்றிற்கு அருளப்பட்டிருந்தால் அவை இயற்கையின், பாதுகாப்பின் மென்பொருளிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கும். கண்ணாடியுடன் தங்களால் உரையாட முடிவதில்லை என்பதை விலங்குகள் போதாமையாக உணர்வதில்லை. விலங்கு தன் சொந்த நிழல் தன்னுடையதுதான் என்பதை அறிய நேர்ந்தால் அவை நார்ஸிஸஸ் போல மனம் பிறழ்ந்துவிடும். நீரில் தெரியும் பிம்பம் தன்னுடையதுதான் என்று அவை அறிந்திருந்தால், அந்த பிம்பம்மீது கண்மூடித்தனமாக காதலிக்க ஆரம்பித்திருக்கும். அந்த காதலின் மிக மோசமான நிலையைத்தான் நாம் நார்ஸிஸஸில் பார்க்கிறோம். நார்ஸிஸஸிற்கு மனிதன் தவிர்த்த உயிரினங்களுக்கு உள்ள பாதுகாப்பு கவசம் (இயற்கையை நாம் அப்படியும் அழைக்கலாம்)இல்லாமலாகிறது, தனக்கென சுயமான பாதுகாப்பு கவசத்தை படைப்பதற்கான ஆற்றலும் அவனுக்கு இல்லை. தன்னுணர்வாக கனிவடைவதற்கு முன்பு உள்ள குருட்டுத்தனமான சுயமோக நிலை. இயற்கை அளித்த பாதுகாப்பின் கூட்டை உடைத்து வெளியே வந்த தன்னை எல்லாம் மறந்து கட்டித்தழுவிக்கொள்கிறான் நார்ஸிஸஸ்.
நார்ஸிஸஸின் கதை தொல்பழங்காலத்தில் எங்கேயே நிகழ்ந்த சம்பவமோ, அந்த சம்பவத்தின் அடிப்படையில் உருவான கதையோ அல்ல. வெளிப்படாமல் இருக்க சாத்தியமில்லாத, இந்த ஒரு வடிவத்தில் அல்லாமல் வேறெப்படியும் வெளிப்படமுடியாத ஒரு கண்டடைதல்தான் நார்ஸிஸஸின் கதை. நம் வழியாக, நம்மையும் கதாப்பாத்திரங்களாக ஆக்கி இன்னும் தொடரும் ஒரு கதை (அதை முழுமுற்றாக பகிர்ந்து முடிக்க முடியாததால் அதை நாம் ‘தொன்மம்’ என்று சொல்கிறோம்). நாம் இன்னும்கூட நார்ஸிஸஸுக்கு தீவிரமான விழைவை ஏற்படுத்திய தற்பிம்பத்தை வெறுக்கக்கூடியவர்களாக ஆகவில்லை. தன்னை எவ்வளவு வரைந்தாலும், எவ்வளவு புகைப்படங்கள் எடுத்தாலும், இதோ இன்று தொடர்ச்சியாக தற்படங்கள் எடுத்தாலும் மனிதனுக்கு நிறையவில்லை. அசாதாரணமான கோணங்களில் தற்படம் எடுப்பதற்காக அபாயகரமான இடங்களில் தவறிவிழுந்து இறப்பவர்கள் என உலகம் முழுக்க தினம் ஒருவர் என்ற கணக்கில் நார்ஸிஸஸ்கள் நிகழ்ந்துகொண்டிருக்கிறார்கள். முன்பு வகுப்பறைகளில் புத்தகங்களுக்கு கீழே மறைத்துவைத்த கண்ணாடியில் பார்த்து உதடு, கண், மூக்கு இவற்றையெல்லாம் மனதில் பதியவைத்துக்கொண்டவர்கள் இன்று செல்ஃபி எடுக்கும் வசதி உள்ள கைபேசியை நெஞ்சில்வைத்து உறங்குகிறார்கள். எந்த மனிதனும் நார்ஸிஸஸ் விழுந்து இறந்த தடாகத்தில் நீராடி நிறைவடைந்தவர்கள் அல்ல. ‘ நண்பர்களுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தில் மற்ற யாரையும் நான் பார்க்கவில்லை’ எதிலும் படியும் தற்பிம்பத்தை தான் என்று நினைத்து மயங்கும் ஒவ்வொரு கணமும் நாம் நார்ஸிஸஸாக ஆகிவிடுகிறோம். தான் வடித்த சிற்பத்தின் அழகில், முழுமையில் பித்தாகி தற்கொலை செய்துகொண்ட சிற்பியும் நார்ஸிஸஸ் அன்றி பிறிதொருவன் இல்லை. கதையில் என்பதுபோல கணநேரத்தில் நாடகீயமான மரணம் எதுவும் நிகழாமலிருக்கலாம். ஆனால், ஒட்டுமொத்தமாக அழிக்கக்கூடிய சில அம்சங்கள் ஆழமான சுயமோகத்தில் உள்ளது. தற்பிம்பத்தை பார்த்து ’அது நான்தான்’ என்று நம்மை அறியாமலேயே நாம் உணரும்நிலை தன்னறிதல் அல்ல. தற்பிம்பத்தை பார்த்து அது தன் பிம்பம்தான் என்ற கண்டடைதலிலிருந்துதான் (realisation) தன்னை அறிதல் நிகழ்கிறது. ஒன்றை அது மட்டுமாகவே பார்ப்பவர்களும் நார்ஸிஸ்டுகள்தான். நேரடியான பொருளில் (Literal reading) இலக்கியத்தை வாசிப்பவர்களும் நார்ஸிஸ்ட்டுகள்தான். வெறும் ஆடிப்பிம்பம் என்பதிலிருந்து தொடங்கி தன்னை அறிதல் நோக்கி உயர்ந்தும் படிநிலைகளில் முதல்படி நாராயணகுரு கோவில்களில் நிறுவிய ’கண்ணாடி’. கண்ணாடி பிம்பத்தில் ஒருவன் தன்னை பார்த்து, அதன் அடுத்த படியாக அது மனிதனின் பிம்பம் என்பதை உணர்ந்து, அதற்கு அடுத்த படியாக அது சாராம்சமானதோ, முழுமுடிவானதோ அல்ல நிழல்தான் என்று அறிந்து அதன்வழியாக ‘ அறியும் தன்னிலை’யை கண்டடையும் ஒரு மனிதனைத்தான் நாராயணகுரு உத்தேசித்தார். பிம்பமாக ஆவது எது? என்பதை அறியும் உயிரை (mortal). ‘நம்மை மட்டுமில்லை, நம்மால் காணப்படுவது அனைத்தையும் பிம்பமாக ஆக்குவதற்கான வாய்ப்பை கடவுள் நமக்கு அளித்திருக்கிறார்’ (ஆத்மவிலாசம்)
கண்ணாடியில் தன்னை காண்பதற்கும் கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்ப்பதற்கும் பெரிய வித்தியாசம் உண்டு. முகத்தில் ஏற்பட்ட காயத்தில் உள்ள ரத்தத்தை கண்ணாடியில் தெரியும் முகத்தில் துடைப்பதற்கும் கண்ணாடியை பார்த்து சொந்த முகத்திலிருந்து துடைப்பதற்கும் இடையேயான வேறுபாடு. நார்ஸிஸஸ் நீரில் தன்னை பார்த்து அதனால் ஈர்க்கப்பட்டு அதை கட்டியணைக்க முயன்றபோது அது தான் அல்ல, தன் நீர்ப்பிம்பம் என்று அவன் அறியவில்லை (அது நிழல், அது ஜடம் என்கிறார் நாராயணகுரு). சுயமோகத்தில் தன்னுணர்வின்மை உண்டு என்றும் அது ஆன்மாவை ஒட்டுமொத்தமாகவே அழிக்கக்கூடியது என்றும் நார்ஸிஸஸ் நமக்கு கற்றுத்தருகிறான். ‘சுயமே உருவாக்கிய தடைகளை’ இல்லாமலாக்குவது எளிதல்ல. ராமாயணத்தில் உள்ள சாயாக்ரஹணி கதை மனிதசுயம் கடக்கவேண்டிய தடை பற்றிய உருவகக்கதை. ராமாயணத்தில் சீதையைக்காண அனுமன் இந்திய பெருங்கடலை கடக்கும்போது சாயாக்ரஹணி என்ற அரக்கியிடம் அகப்படுகிறான், அவள் உயிர்களை கொல்வது அவற்றின் நிழலை கைப்பற்றுவது வழியாக. அவளிடம் அகப்பட்ட அனுமன் கொஞ்சநேரம் சஞ்சலமடைந்துவிடுகிறான். பின் தன் சுயத்தை மீட்டெடுத்து சாயாக்ரஹணி என்ற அரக்கியை அழித்துவிட்டு ராமனுக்காக தான் ஆற்ற வேண்டிய பயணத்தை அனுமன் தொடர்கிறான். இந்தியப்பெருங்கடல் நீரில் பிரதிபலித்த தன் நீர்ப்பிம்பத்தில் தன் சொந்த உடலின் கம்பீரத்திலும், அழகிலும் ஈர்க்கப்பட்டு சிந்தையற்று நின்றுவிட்ட அனுமன் தன்னை சூழ்ந்த நார்ஸிஸ சுழலில் சிக்கிக்கொண்டதன் கதையைத்தான் சாயாக்ரஹணி என்ற உருவகம் வழியாக வால்மீகி சித்தரித்திருக்கிறார். அது தான் அல்ல, தன் நிழல்தான் என்று அறிந்தபோது கைகூடிய தன்னறிதலுடன், அதிக தேஜஸுடன் அனுமன் சமுத்திரத்தை கடக்கிறான். ராமனுக்கு செய்யும் சேவையாக இலங்கை போகும் அனுமன் அழித்தது சுயமோகத்தைத்தான். நார்ஸிஸஸை வென்ற அந்த அரக்கி, அனுமனை கொஞ்ச நேரத்திற்கு குழப்பிய, சொந்த நீர்ப்பிம்பத்தின் முன் ஸ்தம்பித்து நிற்கச்செய்த அந்த அரக்கி, கண்ணாடி என்ற இந்த நீர்ப்பரப்பில் எப்போதும் இருக்கிறாள். சில்வியா பிளாத்தின் Mirror என்ற கவிதையில் தன் இளமையை கொஞ்சகொஞ்சமாக விழுங்கும் அந்த அரக்கியை தெளிவில்லாமல் என்றாலும் நம்மால் காணமுடிகிறது. தன் ஆடிப்பிம்பம் தன்னுடையதுதான் என்று எண்ணுபவர்களை அந்த அரக்கி மிகமிக எளிதாக கைப்பற்றிவிடுகிறாள். பெண் தன்னை கண்ணாடியில் பார்க்காமலிருக்கக்கூடிய தைரியத்தை அடையும்போதுதான் அவள் விடுதலை அடைகிறாள் என்று எழுத்தாளர் மாதவிக்குட்டி சுட்டிக்காட்டுவது பெண்களை இன்னும் சுவைத்து உண்ணும், கண்ணாடியில் இருக்கும் சாயாக்ரஹணி என்ற அரக்கியின் இருப்பைத்தான்.
‘ நிழலை பிடித்துவைத்த இந்த அரக்கியை/ வீட்டு சுவரில் மாட்டியது ஏன்/ இப்போது எதற்காக என்றாலும் இந்த மூதேவியிடம் முகம் காட்டவேண்டும்/ வெளியே போகும்முன் முதலில் அவள் என்னை உடல்பரிசோதனை செய்து முடிக்கவேண்டும்/ கண்ணாடியில் தெரியும் முகங்களெல்லாம்/ அவள் உறிஞ்சிவிட்டதால் இரத்தம் வற்றிய முகங்கள்’
சுயமோகம் உலகம் மீதான காதலாக மாறும்போது இந்த அரக்கி பலவீனமானவளாக ஆகிவிடுகிறாள். ‘ அவனவன் சுயவிருப்பத்திற்காக செய்யும் விஷயங்கள் பிறரும் மகிழ்ச்சியடைவதாக ஆகும்போது’ அவள் இல்லாமலாகிவிடுகிறாள். இந்த பரிணாமத்தை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்திய படைப்பு ஆற்றூர் ரவிவர்மாவின் ‘அர்க்கம்’ என்ற கவிதை. கவிதைசொல்லிக்கு தன் ஆடிப்பிம்பத்திலிருந்து கண்ணை விலக்க முடியவில்லை ‘ காலையில் வேலைக்கு கிளம்பும்போது எவ்வளவுமுறை கண்ணாடி பார்த்தும் நிறைவதில்லை’ கண்ணாடியில் மட்டுமல்ல நண்பர்களுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்திலும் கவிதைசொல்லி தன்னைத்தவிர மற்ற யாரையும் பார்ப்பதில்லை. ஆனால் அது தான் அல்ல தன் நிழல் மட்டும்தான் என்றும், கண்ணாடியை விட்டு வெளியேறிவிட்டால் அது இல்லாமலாகிவிடுகிறது அதற்கென தனி இருப்பு இல்லை என்பதையும் கவிதைசொல்லி உணர்ந்துகொள்கிறான். எவ்வளவுமுறை பார்த்தாலும் தன் முகம் எப்படியிருக்கிறது என்பதை அறியமுடிவதில்லை. ஆடிபிம்பம் காட்டிய சுயத்தால் நிறைவடையாத கவிதைசொல்லி வீட்டைவிட்டு வெளியேறி, கோகர்ணத்திற்கும் கன்யாகுமரிக்கும் செல்கிறான். ஆன்மவிடுதலையை அளிக்கக்கூடிய நிலங்கள். பலரின் கொந்தளிக்கும் கேள்விகளுக்கு பதில் கிடைத்த இடம். ஆனால் அங்கு எங்குமே கவிதைசொல்லி ‘தன்னை தனக்கு காட்டவில்லை’ என்று உணர்கிறான். கீழை மரபை விடுத்து மேற்கத்திய நவீன சிந்தனையில் வழி தேடுகிறான். பீஜிங்கிற்கும் மாஸ்கோவிற்கும் செல்கிறான். பலருக்கு புதியவகையான சுயகண்டடைதலை அளித்த இடங்கள். காடு முழுக்க தேனைத்தேடி அலைந்தவன் கடைசியில் வீட்டிமுற்றத்தின் எருக்கங்செடியில் தேனை கண்டுடைவதுபோல தன் வசிப்பிடத்தில் தன் சூழலிலேயே அவன் தன் சுயத்தை கண்டடைகிறான். அப்போது அது தன்னில் மட்டும் இல்லை என்பதையும் அறிகிறான். தூரத்தில் உள்ள கடலின் நீலநீர்ப்பெருக்கும், அதன் விளிம்பில் உள்ள தொடுவான்கோடும், கீழே உள்ள நுரைக்கும் அலைவெளியும் கரையும் நான்தான். தன்னை வெல்வது, தன்னை கடப்பது என்பது தன் நிழல் மீதான, தன் பிம்பம் மீதான வெற்றிதான். தன்னை வென்றவனுக்கு பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே பிரதிபலிக்கும்தன்மையை அடைந்துவிடுகிறது. இந்த கவிதையில் அப்பட்டமான அழகு இல்லாத, யாருடைய கவனத்தையும் ஈர்க்கக்கூடிய வசீகரம் இல்லாத, அதனாலேயே தேன்கூடு கட்டும் தேனீக்களை ஈர்க்கக்கூடிய, சுயமாகவே மருத்துவகுணங்கள் கொண்ட எருக்கங்செடியில் கவிதைசொல்லி தன்னை கண்டடைகிறான். ’ நான் ஒரு எருக்காக நிற்கிறேன்’ ஒருவேளை மலையாளத்தில் மிக குறைவாக கண்ணாடிபார்த்த கவிஞர் ஆற்றூர் ரவிவர்மாவாகத்தான் இருக்க வேண்டும். ஆற்றூர் ரவிவர்மாவை ஒரு தாவரமாக ஆக்கினால் அவர் எருக்குச்செடியாகத்தான் நின்றுகொண்டிருப்பார்.
புத்தனாக உருமாறிய சித்தார்த்தனின் வாழ்க்கையைப் பாருங்கள். சுயமோகம் கொண்டவனுக்கு நிம்மதியாக வாழ தேவையானதெல்லாம் சித்தார்த்த இளவரசனுக்காக மாளிகையில் அவன் தந்தை ஏற்பாடு செய்திருந்தார். அரசர்களின் வழக்கமான திரைக்கதையிலிருந்து அவன் திசைதிரும்பிவிடாமலிருக்கத் தேவையான எல்லாம். தன் அழகை புகழ சுவரெங்கும் கண்ணாடிகள்; தன் கவர்ச்சியை பிரதிபலிக்க நிறைய அழகிகள்; தன் கனிவை,அன்பை காட்ட அழகிய நல்லியல்புகள் கொண்ட மனைவி; தன் தகுதிகளை வாழ்த்திப்பாடும் நிறைய துதிபாடிகள், அவனின் சுவைவுணர்வை கொண்ட பல்வேறுவகையான உணவுகள், தன் அதிகாரத்தை நினைவுறுத்த பணியாட்கள், காட்டிலிருக்கும் உணர்வை தனக்காக அளித்த மலர்வனங்கள் அனைத்தும் அவனுக்கு இருந்தது… அரண்மனையில் தன்னை மகிழ்விக்கும், தன்னை துதிக்கும் இந்த கண்ணாடிகளிலிருந்து வேறுபட்ட ஒரு கண்ணாடி வெளியே இருந்தது. தன் இருபத்தி யொன்பதாம் வயதில் சித்தார்த்தன் அந்த கண்ணாடி முன் நிற்கிறான். அதில் சித்தார்த்தன் ஆழமான நிலைகுலைவை ஏற்படுத்தக்கூடிய காட்சிகளை பார்க்கிறான். முதுமையை, நோயை, வறுமையை, மரணத்தை. ஜரா-நரை பாதித்த அந்த மனிதனில் தன்னை மட்டுமல்ல தான் உட்பட உள்ள, இனி பிறக்கப்போகும் ஒவ்வொரு மனிதனையும் காத்திருக்கும் ஒன்றை ஆடிப்பிம்பமாக சித்தார்த்தன் பார்க்கிறான். நோயாளியின் நசிந்த உடல் யாரும் எப்போது வேண்டுமானாலும் ஆகச் சாத்தியமான நிலை ஒன்றை அவனுக்கு சுட்டிக்காட்டியது. இறந்தவிட்ட மனித உடல் ஒவ்வொரு மனிதனையும் காத்திருக்கும், யாராலும் தவிர்க்கமுடியாத நிலையை அறிவுறுத்தியது. அவையெல்லாவற்றை பிரதிபலித்த கண்ணாடியில் மிக மிக நிலைகுலைந்த ஒருவனின் பிம்பத்தை புத்தனாக ஆகிவிட்ட சித்தார்த்தன் காண்கிறான். அரண்மனையில் கண்ணாடியில் மாயை காட்டிக்கொண்டிருந்த வசீகரிமான ஆடிப்பிம்பம் சித்தார்த்தனுக்கு உவப்பில்லாததாகவும், பொருத்தமற்றதாகவும் ஆகிவிட்டது. மகிழ்பவர்கள், திருஷ்ணையில்(விழைவுகளில்) திளைத்திருப்பவர்கள் சுயமோகத்தில் மூழ்கியிருக்கிறார்கள். ஒட்டுமொத்தமான நிலையின்மை கொண்ட , அனைத்திலும் அழிவின் நிழல் கொண்ட உலகத்தில், அறியாமை மட்டும்தான் மனிதனின் நிம்மதிக்கு காரணம். மனிதப்பிரக்ஞையில் மரணமோ நிச்சயமின்மையோ அழிவோ உட்படவில்லை என்றும் அதனால்தான் மனிதன் எந்த யதார்த்தமும் இல்லாத மகிழ்ச்சியில் வாழ்கிறான் என்பதையும் சித்தார்த்தன் அறிகிறான். எந்த ஒன்றும் அது மட்டுமே அல்ல என்றும் அதன் இருப்பு அதை மட்டுமே சார்ந்தது இல்லை என்பதையும் சித்தார்த்தன் அறிகிறான். சித்தார்த்தன் அரண்மனையிலிருந்து இரவில் வெளியேறி பலவகையான தடைகளை தாண்டி புத்தனில் சென்றுசேர்கிறான்.
புனுயேலின்(Luis Bunuel) இயக்கிய மில்கி வே(Milky way) என்ற திரைப்படத்தில் உள்ள ஒரு காட்சியால் உந்தப்பட்டு பால் சக்கரியா ‘ கண்ணாடி பார்க்கும்வரை’ என்ற பெயரில் சிறுகதை ஒன்றை எழுதியிருக்கிறார். கிருஸ்து கண்ணாடியை எதிர்கொள்ளும் காட்சி. அந்த காட்சியின் தரிசனரீதியான ஆழத்திற்கு சக்கரியா பொருத்தமான கதைவடிவத்தை தந்திருக்கிறார். கிருஸ்துவிற்கு நன்றாக பொருந்தக்கூடிய வடிவம் (அவரை வேறு ஒரு வடிவில் நாம் கற்பனை செய்வதில்லை) நீளமான முடியும் தாடியும் மீசையும்தான். அதை வெட்டுவதற்காக கிருஸ்து நாவிதரின் கடைக்கு செல்கிறார். நாவிதர் அங்கே புதிதாக மாட்டப்பட்ட கண்ணாடியை பார்க்க சொல்கிறார். அதுவரை கிருஸ்து தன்னை எதிர்கொண்டதில்லை. அவர் சஞ்சலமடைகிறார். ‘ வேண்டாம் வேண்டாம்’ கிருஸ்து மிகமெல்லிய ஒலியில் கண்ணாடியிடம் சொல்கிறார். ‘ நீ என்னை எனக்கு காட்டவேண்டாம். அதில் நான் எதைப்பார்க்கப்போகிறேன் என்பதை இப்போது என்னால் ஊகிக்கமுடியவில்லை; எனக்கு பயமாக இருக்கிறது. கண்ணாடி மணிமுழங்குவது போன்ற ஒலியில் “ வா, கிருஸ்து வா… உனக்கு தெரியாதா? நீ எனக்குள்ளே இருக்கிறாய்; இரண்டே இரண்டு அடி முன்னால் வந்து கொஞ்சம் குனிந்து பார்த்தால்போதும், நாம் மூவரும் ஒன்றுதான் ‘. கிருஸ்து சொன்னார்.’ இல்லை இல்லை. நான் பார்க்கவிழைவதை நீ காட்டமுடியுமா? இல்லை, இல்லை’ தன் நீண்ட அங்கியில் வியர்வை வழிவதை உணர்ந்தார். கடும்புயலில் சிக்கியதுபோல தள்ளாடினார். அவர் எதை அஞ்சினார்? தன்னை தன் புறவயமான வடிவத்தில் பார்ப்பதையா? தன் தெய்வாம்சத்தை இழந்துவிடுவோம் என்று பயந்தாரா? தன்னை சூழ்ந்திருக்கும் ரகசியத்தன்மையை சோதித்துப்பார்ப்பதில் உள்ள அச்சமா? மனிதர்களை சரியான திசையில் செலுத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தெய்வகுமாரன் தனித்தன்மையை, தனிமையை அஞ்சினாரா? இன்று நாம் காணும் கிருஸ்துவின் மழிக்கப்படாத முகம் (கண்ணாடியையே பார்த்திராத முகம்) அவரின் ஆரம்பகால ஓவியங்களில், சிற்பங்களில், மொழியில் வெளிப்படவில்லை (பைபிளில் கிருஸ்துவின் உருவம் சார்ந்த விவரணைகளே இல்லை. கிருஸ்துவின் ஆரம்பகட்ட சிற்பங்கள் ஒன்றில் christ with St.Paul (389 AD) மழிக்கப்பட்ட முகம்கொண்ட கிருஸ்துதான் இருக்கிறார். புனுயேலும் சக்கரியாவும் சித்தரித்திருக்கும் கிருஸ்துவின் சஞ்சலத்தைவிட அவரை தாடி மீசையுடன் சித்தரிக்கவேண்டுமா கூடாதா என்ற குழப்பத்தில் அவரை வரைந்த ஓவியர்கள் சஞ்சலம் அடைந்திருப்பார்கள். மழித்த முகம் கிருஸ்துவிற்கு பொருந்தக்கூடியதா? மழித்தலில் ஒரு பிரத்யேக காலம் இருக்கிறது. சவரக்கத்தி உண்டு. இன்றைய நம்முடைய வழக்கப்படி முன்னால் ஒரு கண்ணாடி உண்டு. பரமபிதாவின் மகன், எல்லாகாலத்திற்குமான மகன், அவருக்கு மழித்த முகம் பொருத்தமானதா? இந்த ஒரு பதற்றத்தைதான் சக்கரியா தன் சிறுகதை வழியாக நமக்கு பகிர்கிறார். கிருஸ்துவின் உருவம் பல நூற்றாண்டுகள் அழிவின்மையின் குறியீடாக நிலைநிற்க தாடி மீசை கொண்ட இயற்கையான தோற்றம் போதும் என சில கலைஞர்கள் முடிவெடுக்கிறார்கள். பின்னர் அதை யாரும் கேள்விக்கு உள்ளாக்கவில்லை. ஆனாலும் கண்ணாடி முன்னால் புயலில் சிக்கித்தவித்ததுபோல தடுமாறிய கிருஸ்துவை முதன்முதலாக கற்பனைசெய்த கலைஞன் எத்தனை இரவுகள் தூக்கமிழந்திருப்பான்? கடைசியில் அவனுடைய கிருஸ்து எந்த சஞ்சலமும் இல்லாமல் கண்ணாடியை நிராகரிக்கிறார்.
——————————————————————————————————————–
- கேரளம் முழுக்க நாராயணகுரு சாதிமத பேதமில்லாமல் அனைவரும் வழிபடுவதற்கான கோவில்களை நிறுவினார். ஒவ்வொரு கோவிலிலும் கண்ணாடியையும் பிரதிஷ்டை செய்தார். எங்கு நிறைந்திருக்கும் கடவுளுக்கு வருணாசிரம பிரிவினை இல்லை, அவர் எல்லா மனிதர்களின் அகத்தில் இருக்கிறார். கடவுளை வழிபட வருபவர்கள் கண்ணாடியில் தன் ஆடிப்பிம்பத்தை காண்பதுவழியாக தன்னையும், தன்னில் உள்ள கடவுளையும் உணர்ந்துகொள்ள முடியும் என்பதால்தான் கண்ணாடியை பிரதிஷ்டை செய்தேன் என்கிறார் நாராயணகுரு.
ஈரோடு பெருந்துறையை சேர்ந்த அழகிய மணவாளன், கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். நாவல் கலை பற்றிய மலையாள நாவலாசிரியர் பி.கே.பாலகிருஷ்ணனின் விமர்சன நூலை "நாவலெனும் கலைநிகழ்வு" எனும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். இலக்கியத்திற்கு அப்பால் நிகழ்த்துகலையான கதகளியில் அவருக்கு ஆர்வமுண்டு.
மெச்சத்தக்க பணி மிஸ்டர் அழகிய மணவாளன். குருகு இதழுக்காக நீங்கள் எடுத்த நேர்காணலையும் வாசித்தேன், கடும் உழைப்பும் பொறுப்பும் தெரிகிறது. நன்றி.
நன்றி
இதே பேசுபொருளில் கூடுதல் வாசிப்புக்கு ஜெயமோகனின் இக்கட்டுரையும் படிக்கலாம். தற்சிறை -https://www.jeyamohan.in/140774/
Simple…but very deep.!!! நல்ல மொழிபெயர்ப்பு.