/

எண்கோண மனிதன்! ஒரு மனிதன், பலகதைகள்: சப்னாஸ் ஹாசிம்

நவீன இலக்கிய நாவலாசிரியர்கள் இலக்கியத் தரமான சிந்தனையோடு சமநிலையற்ற உலகை எழுத்தின் மூலமாகப் பகிர்ந்து கொள்கிறார்கள். இலக்கியமாக்குவது பற்றிய செயலில் நம்பிக்கையற்றவர்கள் போல சுயத்தின் மீது தீவிரமான கரிசனை கொண்டவர்களாக பல்கோணங்களிலிருந்து யதார்த்தத்தை முன்வைக்கிற தன்முனைப்போடு இயங்குகிறார்கள். மார்ஷல் ப்ரொவ்ஸ்ட், ஜேம்ஸ் ஜாய்ஸ், காஃப்கா, வூல்ஃப், பால்க்னர் என அவர்களுக்கிருந்த உன்னதமான கவலையே இந்த உலகம் எப்படி உணரப்படுகிறது என்பதே. அல்லது அதைவிடவும் இந்த உலகை ஏற்றுக் கொள்ளும்படியான தளத்தில் அல்லது ஒரு பிரபஞ்ச உண்மையின் பால் எப்படி உணரவைக்கலாம் என்பதே. அசோகமித்திரன், கரிச்சான் குஞ்சு, எம். வி.வி, பைரப்பா, புனத்தில், எம். டி வாசுதேவநாயர், கிருத்திகா, பெருமாள் முருகன், ப. சிங்காரம், ஆதவன், எஸ். ரா, சோ. தர்மன், சோபா, மனோஜ் குரூர், பென்யாமின், டி. டி ராமகிருஷ்ணன், எஸ்.பொ என்று எனக்குப் பிடித்த நாவலாசிரியர்களுக்கும் இத்தேடல் இருந்ததென்றே சொல்லலாம். இதே முனைப்போடு யுவன் சந்திரசேகர் எழுதிய நாவல் தான் எண்கோண மனிதன். இந்த நாவல் யுவனின் தங்குதடையற்ற சரளமான நடையோடு விரிந்தடுக்குவது தெளிவற்ற கனவு ( ambiguous dream ) நிலையிலன்றி முரண்படுகிற நினைவுகளை மீளழைத்துக் கொள்கிற நனவுக் கோர்ப்பைத்தான். சோமன் என்கிற ஒரு மனிதரைத் தேடுகிற காவலதிகாரியான சம்பந்தமூர்த்தியின் நினைவுகளோடு இந்த நாவல் கதைசொல்லியான கிருஷ்ணனின் வழியாகத் தொடர்கிறது. மனிதர்கள் சம்பவங்கள் அவற்றிற்கிடையான காரணகாரியத் தொடர்புகளோடு சோமனைத் தேடுகிற சம்பந்தமூர்த்தி பதிவு செய்த ஒலிக்கோர்ப்புகளின் வழியேவும் நேரடி சம்பாஷணைகளினூடும் கிருஷ்ணன் இந்தக் கதையை நேரியல்பற்ற ( non linear ) சொல்முறையில் சொல்வதாக வருகிற நாவலில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களோடும் திருப்பங்களோடும் அந்தத் தகவல்களின் பகுப்பாய்வை மிக எளிய உண்மைகளைக் கொண்டு நிறுத்துகிற இடங்களும் ஒரு தேர்ந்த எழுத்தாளனுக்குரிய ஆளுமையைச் சுட்டுபவன. 

சோமனைத் தேடுவதன் வழியாக சந்திக்கிற மனிதர்களின் முரண் மனநிலையையும் அதன் வழியாக சம்பந்தமூர்த்தி கண்டடைகிற சோமனின் பல பரிமாணங்களையும் இருண்ட பக்கங்களையும் சாமர்த்தியமாக இந்த நாவல் அதற்குரிய இடங்களில் வைத்திருக்கிறது. ஒவ்வொரு கதைசொல்லிகளும் சோமனுக்குள்ள தொடர்பை விவரிக்கிற இடங்களில் அந்தக் காலத்தையும் அதன் மனவுணர்வையும் சம்பந்தமூர்த்தியோ கிருஷ்ணனோ அந்தக் கதைசொல்லியைச் சந்திக்கிற காலத்திலிருந்து பின்னோக்கி எழுகிற நினைவுத் தருக்கத்தையும் அது பின்னியிருக்கிற stream of consciousness ஐயும் வேறுபடுத்த வாசகனுக்குக் கொடுக்கிற அவகாசமே இந்த நாவலின் வெற்றி என்று படுகிறது. கதைசொல்லிகளோ கதாபாத்திரங்களோ சொன்ன நிலைத்தகவல்களோ நினைவடுக்குகளோ அதே காலத்திலன்றி சேகரமாக்கப்பட்ட ஒலிநாடாவிலிருந்தோ சம்பந்தமூர்த்தியின் முதுமைப்பிராயத்தின் தடுமாற்றங்களிலிருந்தோ கிருஷ்ணனின் இளம்பிராய முதிராப்பதிவுகளிலிருந்தோ சொல்லப்படுகிறது. இது தீர்க்கமான நேரடியான கதையிலிருந்து ஒரு தற்காலிக விலகலை ( temporal distortion ) வாசகனுக்குக் கொடுக்கக் கூடியதென்றாலும் அதுவே நாவலின் சுவாரசியத்தைக் கூட்டுகிறதென்பேன். நாவலுக்கு இன்னது தான் விஷயம் என்று ஒன்றை யாரும் சொல்லிவிட முடியாது, அதே போல ஒரே விஷயத்தை மட்டுமே வைத்து நாவலைக் கொண்டுவரவும் முடியாது என்பார் க நா சு. இந்நாவலின் மையம் என்பது சோமனா சோமனைத் தேடுகிற சம்பந்த மூர்த்தியா என்பதில் யுவனுக்கு ஒரு தெளிவிருந்திருக்கிறது. நாவலின் மையத்தை ஒரு நீரோடையின் இரு மருங்கையும் அகலித்துப் பரப்பி விட்டுத் தளர விடுவதும் ஒடுக்கிப் பீறிட விடுவதுமாய் மாறி மாறி முன்பின்னாகக் கையாண்டிருப்பது தெரிகிறது. சோமன் பற்றிய பிரம்மையை விரித்துக் கொண்டு போய்  சரியவிடுகிற புள்ளி ( யானையாக நினைத்தது எருமையாகச் சிறுத்ததாக நாவலிலேயே வரும் ) சரியாகக் கனகச்சிதமாக பொருந்தி வருகிறது. அல்லது சோமனின் ஆளுமையின் நல்ல கெட்ட பகுதிகளிற்கிடையிலான விகிதத்தை சரிவர நாவலில் பதிவு செய்திருப்பதால் வாசிக்கும் போது வருகிற அயர்ச்சியைத் தவிர்த்திருக்கிறார் யுவன். 

இந் நாவலில் யுவன் கையாண்டிருக்கிற முக்கிய உத்தியாக அடிக்குறிப்புகளைச் (footnotes ) சொல்ல முடியும். கதை சொல்லியாக கிஷ்ணையாவே ( கிருஷ்ணனை சம்பந்தமூர்த்தி அழைக்கும் விதம் ) வருகிறபடியால் கதை நகரும் போது அடிக்குறிப்புகளாக வருகிற விளக்கங்களோ, ஏற்கனவே சம்பந்தமூர்த்தி சொன்ன தகவல்களோ, கதைசொல்லிகளின் வாக்குமூலத்திலிருந்து முன்னைய பிந்தைய தகவல்களிலிருக்கும் முரண்களையோ கிருஷ்ணனின் சந்தேகங்களோ நாவலின் மையக்கதையிலிருந்து வாசகனை, நாவல் மீதான அவனது பிடியைச் சீராக்குவதாக (rectifying) நாவலின் தத்துவ அழுத்தத்தைச்( இந்நாவலின் தத்துவ விசாரம் என்பது ஆழமானதும், சிக்கலானதும் கூட. அதை இக்கட்டுரையின் பிற்பகுதியில் பார்க்கலாம். ) சரிவர ஊடுகடத்துவதாகவிருக்கின்றன. அனுபவம் அல்லது தேடலைச் சொல்லுகிற போது அனுபவித்தவனின் பிரக்ஞையே கதையையும் அதன் உத்திகளையும் தீர்மானிக்கிறது . வடிவ ஊர்ஜிதங்களை, கதைப் போக்கை ஈரிழையாக சோமனின் இரு நிலைகளின் தருக்கம் நிலைநிறுத்துகிறது என்பேன். அதுவே கதை மையத்தின் நேர்நிலையைக் கட்டுப் படுத்துகிறது. இவ்வகைக் கதையிலும் ஒரு மனிதனின் வாழ்வும் மாறுபட்ட காலப்பக்கங்களும் அந்தப் ப்ரக்ஞை நம்மை ஏற்கனவே பாதித்த நாவல்களின் குழப்பத்திற்கு கொண்டு செல்லலாம். கரிச்சான் குஞ்சுவின் பசித்த மானுடம் கணேசனையோ, எம் டி வாசுதேவநாயரின் நாலுகெட்டு அப்புண்ணியையோ ஓவி விஜயனின் கசாக்கின் ரவியையோ தஞ்சைப் ப்ரகாசின் திலகராஜுவையோ இந் நாவலில் ஊடும்பாவுமாக எழுகிற ஒருமைத்தன்மை, கதைகளுக்கென்று இருக்கக்கூடிய நிரந்தரத்தன்மை மீளழைக்கலாம். இப்படியான கதைகளின் அடிப்படையம்சத்தை மீறும் முயற்சிகள் அவ்வப்போது நடந்துள்ளன தான். அப்படி இக்கதையிலும் பல கதைசொல்லிகளின் வாயிலாக ஆதாரமையமாக எழும் கதையை சம்பந்தமூர்த்தி ஒரு புள்ளியில் நிறுத்துவதை அவ்வகை மீறலாகச் சொல்ல முடியும். கதாபாத்திரங்களின் நினைவடுக்கு வழியே ஒட்டுமொத்த நாவலும் விரிகிறதென்பதால் அவர்களுக்கிடையேயான விலகலை, தனித்தன்மையை அவசியம் ஒரு தேர்ந்த நாவலாசிரியன் பிரித்துக் காட்டுவான். அப்படித்தான் யுவனும் அன்சாரி, மூக்கரை ஜோசியர், கஞ்சிரா தனவேல் பிள்ளை, அலமேலு, லட்சுமணன், கூத்து வாத்தியார், தேவநாத சர்மா, லைட்போய் மகாமுனி, அப்துல் வஹாப், வங்காளத் துறவி என்று அத்தனை மனிதர்களையும் அவர்களுடனான சம்பாஷனையோடு அந்த கதாபாத்திரங்களின் உயிர்விசையை சொல்நேர்த்தியோடு கடத்தியிருப்பார்.

கதாபாத்திரங்களின் வழியே அவற்றின் படைப்பெழுச்சி தெரியாத வாழ்வின் கண்டோட்டங்களின் மிகச் சாதாரண, எளிய வழிமொழிதல் வழியே யுவன் கையாண்டிருக்கிற மாறுபாடுகள் ( variations) முக்கியமாக இந்நாவலை சுவாரசியமான புத்துணர்வான வாசிப்புக்கு உட்படுத்துகிறது என்பேன். 

ஆனாக்கெ, நல்ல

சுத்தமான பேப்பர்லெ கறுப்புப்புள்ளியெ வச்சவொடனே, மொத்த வெள்ளையும் கலங்கிடற மாதிரி, ஒரு க்ஷணம் கறுப்பு மின்னல் வெட்டும் அந்த மொகத்திலெ. அவ்வளவுதான், மொத்தமாக் கொட்டிப் பரவற இருட்டுலேர்ந்து தப்பிக்க, விதவிதமான காரியங்கள்லெ ஈடுபடுவேன். குதிரை ஓட்டறது, குடிக்கறது, சங்கீதம் கேக்கறது, ட்ராயிங் போடறதுன்னுஅப்பறம், மிஸ். ஸின்ஹாவோடெ பேசிண்டிருக்கறது. ஒரு கிழவனார்ட்டெ தபலா வாசிக்கக் கத்துக்கப் போனேன். மாவா அதக்கிக்கக் கத்துண்டு

வந்தேன்…! ஒரே மாசம்தான். தலையாலெ நின்னு போராடி அந்தப் பழக்கத்தை நிப்பாட்டிப்பிட்டா சீதா. ‘இருபத்நாலு மணிநேரமும் பைப்போடெ நாத்தம் இருக்கே, போறாதா. ஒண்ணொண்ணாச்

சேத்துண்டு போறயேன்னு ஒரே அழுகை.”

என சம்பந்தமூர்த்தி நாவல் முழுக்க பேசுகிற இடங்களில் கதையின் ஆன்மாவை அவ்வுணர்வுகளின் ஒட்டுமொத்த மதிப்பீடுகளைக் கொண்டே பேசியிருப்பார் யுவன். 

என்னமோ அததும் போக்குலெதாம் எல்லாம் நடக்குற மாதிரி நாம நெனைச்சிக்கிர்றோம். ஆனா, கண்ணுக்குத் தெரியாத ஏதோ கணக்கு இருக்குங்க சாரு. கண்ணெக் கட்டி, இருட்டுக்குள்ளாறெ கூட்டிக்கிட்டுப் போகுது. முளுசா அதும்பேர்லெ நம்பிக்கையைப் போட்டுப் போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதேன். திமிறுனம்ன்னா, நமக்குத்தான் சேதாரம். வீணா அங்கங்கே சிராய்ச்சு வைக்கும்.” என உச்சகட்ட புனைவுத்திறமையைக் காட்டுகிறேன் என்றெல்லாம் யதார்த்தத்தை மீறிய இடைச்செருகல் இல்லாமல் பலம், பலஹீனம் என்ற இரு அப்பாலைகளுக்குள் பாமர, அறிவாளி என்கிற இரு ப்ரக்ஞை நிலைகளுக்குள்ளிருந்து கதாபாத்திர உணர்வைக் கடத்தியிருக்கிறார். 

இந்நாவலின் தத்துவமென்பது புனைவுத்தளத்திற்கு வெளியே இருந்து எடுத்துக் கொள்ளும் கோடல்களிலிருந்து உருவேறுவது தான் என்று நினைக்கிறேன். கதாபாத்திரங்களின் உள்ளுணர்வுகளினூடே எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டுப் போகிற மனநிலையை குறுக்குவெட்டாக சோமனுக்குச் சார்பான மாட்டேற்றுத்தளத்தில் அவரவருக்குத் தெரிந்த மனத்தளத்திலிருந்து பேசுவது தான் இந்நாவல் பொருந்த நினைக்கும் தத்துவத்தின் ஊற்றுக்கண் என்று படுகிறது. சமூக மதிப்பீடுகளின் வழியேயும் அதற்குரிய அல்லது அதற்கு நிகழத்தக்க எல்லாச் சாத்தியக்கூறுகளின் வழியேயும் சோமனின் வாழ்வையும் தொலைதலையும் அதற்கு நிகரான சம்பந்தமூர்த்தியின் அலைதலையும் மேல்கீழாக ஒரு கோட்டில் பங்கேற்கச் செய்வதிலிருந்து எல்லையற்ற காலத்தின் கேள்வியோடு அவற்றை முடிச்சிடுவது வரை இந்நாவல் அதன் தத்துவ விசாரத்தை கடைசிச் சொட்டுவரை தந்துவிடுகிறது. ஆனால் இந்நாவல் ஏறக்குறைய முழுமையாக அகவயமான சொல்லாடலைக் கொண்டது தான். அவ்வப்போது வருகிற விவரணைகள் தவிர கால வித்தியாசங்களைச் சொல்லுகிற காட்சி மொழி இன்னும் இருந்திருக்கலாமென்று படுகிறது. பிற்பகுதியில் வருகிற கிராமங்களும் ( சடையம்பட்டி) சம்பந்தமூர்த்தியின் வீடும் மட்டுமே வாசிப்பின் பின்னர் தனிப்பட்ட முறையில் எனக்கு எஞ்சுகிறது. சூழல்ச் சித்தரிப்பு அல்லது புவியியல் கூறுகளைப் பதிவு செய்ய வேண்டிய தேவை கதையாக இல்லாவிட்டாலும் கதைக்குள் வாசகனைத் தங்க வைக்க அது உதவக்கூடும். இந்தியச் சாதியத்தின் மீதும் அதன் படிநிலைகள் மீதும் இருக்கிற விமர்சனங்களை, அவை எழுத்தினிலும் கதைகளிலும் வகிக்கிற பாத்திரத்தை உன்னிப்பாகக் கவனிப்பவர்களுண்டு. ஐயர் காரர்கள் எங்கள் வீட்டில் கை நனைக்க மாட்டீர்கள் என்ற இடமாகட்டும் இன்றைக்கு வீட்டில் கவிச்சி என்று பக்கத்திலிருக்கும் பார்க்கிற்கு சென்று பேசுகிற இசுலாமியராகட்டும் அவை நாவலில் இடம்பெறும் அவசியத்தைப்பற்றி ஐயமெழுப்பாமல் இல்லை. அல்லது யுவனின் ( கிருஷ்ணனின் ) மதிப்பீடுகள் அப்பகுதிகளில் இல்லாது தனிப்பட்ட கதாபாத்திரங்களின் வசனங்களோடு மட்டும் நின்றுவிடுவது ஏமாற்றம் தராமல் இல்லை. தமிழில் பல நாவல்கள் முன்வைக்கும் பொருளை அதன் காலப் பரக்ஞையோடு சுருக்கிக் கொள்வன. அந்தக் காலவெளிக்கு அப்பால் அதில் எடுத்துக் கொள்ள எதுவுமிருக்காது. ஆனால் எண்கோண மனிதன் அந்த வகைப்பாட்டிலிருந்து விடுபட்டு கதையாக ஒரு பிரபஞ்ச சலனத்தைப் பேசியிருக்கிறது. இந்நாவலின் புனைவுத் தருக்கமும் அலைவும் சலிப்பும் ஒரு நல்ல நாவலுக்குண்டான சிறப்பைத் தந்துவிட்டன. அந்தளவிலும் இறுதியில் வரும் பின்னிணைப்பின் சாரம்சத்திலும் ஒரு மனிதன் பலகதைகள் என்ற குழப்பத்தை யுவன் மிக நுண்ணிய எதிர்வினையாடல்களோடு நவநாவலாகப் படைத்திருக்கிறார். 

சப்னாஸ் ஹாசிம்

சப்னாஸ் ஹாசிம், அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர். ‘நிணக் கவிதைகளில் அப்பிய சொற்கள்’ என்ற கவிதைப் புத்தகத்தின் ஆசிரியர்.

1 Comment

உரையாடலுக்கு

Your email address will not be published.