முஹம்மத் அல் மகூத் கவிதைகள்

ஆங்கிலத்திலிருந்து சப்னாஸ் ஹாசிம்

முற்றுகை

~

நெடுங்காலமாய் வானத்தையே

உற்றுப்பார்த்துக் கொண்டிருந்ததால்

எனது கண்ணீர் நீலநிறமாகியது.

நெடுங்காலமாய் செல்வச் செழிப்பைக்

கனவு கண்டதால்

என் கண்கள் மஞ்சளாகின.

படைப்பிரதானிகள் போருக்குப் போகட்டும்.

காதலர்கள் அடர்காடுகளுக்குப் போகட்டும்.

விஞ்ஞானிகள்

ஆய்வுகூடங்களுக்குப் போகட்டும்.

ஆனால் நான்..

என் பழைய வேலையைத் தீர்க்க

ஒரு செபமாலையையும்

ஒரு புழுதி படிந்த நாற்காலியையும்

தேடவேண்டும்:

எல்லாப் புத்தகங்களும், சாசனங்களும்

மதங்களும் வலியுறுத்துவதாய்

துயரத்தின் கடவையில்

ஒரு வாயிற்காப்போனாக,

பட்டினியாலோ

சிறையிலோ நான் இறந்துவிடலாம்.

நிழலும் நண்பகல் சூரியனும்

~

உலகின் எல்லா விளைநிலங்களும்

இரு சிறிய உதடுகளோடு முரண்படுகின்றன.

வரலாற்றின் அனைத்துத் தெருக்களும்

இரு வெறும் கால்களோடு முரண்படுகின்றன.

அன்பே,

அவர்கள் பயணப்பட நாம் காத்திருக்கிறோம்.

அவர்களிடம் தூக்குமரங்களிருக்கின்றன.

கழுத்துகள் நம்மிடம் இருக்கின்றன.

அவர்களிடம் முத்துக்கள் இருக்க

நம்மிடம் வெய்யிலாற் கன்றிய பொட்டுக்களும் மச்சங்களுமிருக்கின்றன.

இரவையும் விடியலையும்

பிற்பகலையும் சூரியனையும்

பகலையும் சொந்தமாக

அவர்கள் வைத்திருக்க

நாம் தோலையும்

என்புகளையும் உடைமையாய்

வைத்திருக்கிறோம்.

நாம் மதியச் சூரியனின் கீழ் பயிரிட

அவர்கள் நிழலிலிருந்து உண்ணுகிறார்கள்.

அவர்களது பற்கள் அரிசியைப் போல

வெண்மையாயிருக்கின்றன.

நம் பற்கள் தரிசான காடுகளைப் போல

இருண்டிருக்கின்றன.

அவர்களது முலைகள் பட்டுத்துகில் போல மென்மையாயிருக்கின்றன.

நமது முலைகள்

கொலைபீடங்களைப் போல

புழுதிபடிந்திருக்கின்றன.

இன்னும் நாம் தான்

உலகின் அரசர்கள்.

அவர்களது வீடுகள்

விலைப்பட்டியல்களிலும் கணக்குகளிலும்

புதைக்கப்பட்டிருக்கின்றன.

நமது வீடுகள்

இலையுதிர்கால இலைகளில்

புதைக்கப்பட்டிருக்கின்றன.

அவர்கள்

அவர்களது சட்டைப் பையில்

திருடர்களது துரோகிகளது

முகவரிகளைச் சுமந்து திரிகிறார்கள்.

நம்முடையதில் நாம்

நதிகளினதை இடிமுழக்கங்களினதைச்

சுமக்கிறோம்.

அவர்கள் சன்னல்களை வைத்திருக்கிறார்கள்.

நாம் காற்றை வைத்திருக்கிறோம்.

அவர்கள் கப்பல்கள் வைத்திருக்கிறார்கள்.

நாம் அலைகளைக் கொண்டிருக்கிறோம்.

அவர்கள் பதக்கங்கள் வைத்திருக்கிறார்கள்.

நாம் சேற்றை வைத்திருக்கிறோம்.

அவர்கள் சுவர்களை துருத்துமாடங்களை

வைத்திருக்கிறார்கள்.

நாம் கயிறுகளை பட்டாக்கத்திகளை

வைத்திருக்கிறோம்.

இப்போது அன்பே வா,

நடைபாதைகளின் மேல் தூங்குவோம்.

Muhamed Al-Magut

முகமூடிகளின் இலையுதிர்காலம்

~

வழிப்போக்கர்களே!

எல்லாக் கன்னியர்களினதும்

முகத்திரையிட்ட பெண்களினதும்

தெருக்களை காலி செய்யுங்கள்.

நான் நிர்வாணமாக

வீட்டை விட்டு வெளியேறுவேன்.

இனி என் காட்டுக்கு எவ்விதத்திலும்..

எவ்விதத்திலும்

திரும்ப மாட்டேன்.

பாலைநிலத்தில் ஒரு நதியாய்,

கடலில் ஒரு படகாய்,

அல்லது ஒரு காட்டில்

பச்சைக் கனிகளைப் பறித்து

சிரித்தபடியும் கைகொட்டியபடியும்

சுற்றுலாப்பயணிகளின்

தலைகளின் மேல் வீசும்

குரங்காகவே

என்னை நான் கற்பனை செய்கிறேன்.

அது கிளைக்குக் கிளை தாவுவதாய்

என்னிடம் ஒரு அடையாள அட்டையோ

என் ஞாபகத்தில் ஒரு நியமனமோ இல்லை.

ஒரு மதுவிடுதியில்

நான் உட்கார்ந்ததில்லை.

தெருக்களில் வீணாய்ச்

சுற்றித்திரிந்ததுமில்லை.

சுவரின் விரிசல்களில்

என் பாற் பற்களைப் புதைக்க

என் உடலை நீட்ட

வரும் சிரமங்களைச் சமாளித்தபடி

நானொரு குழந்தையாயிருக்கிறேன்.

நானொரு கிழவன்.

வயது எனக்கொரு கூனைத் தந்திருக்கிறது.

வழிப்போக்கர்கள் எனக்கு உதவியும்

செய்கிறார்கள்.

நானொரு ஆட்சியாளன்.

இதோ என் வாள்

தொங்கிக் கொண்டிருக்க

என் குதிரை மலைகளின் மேல் கனைக்கிறது.

நானொரு பிச்சைக்காரன்.

நான் என் பற்களை

நடைபாதைகளின் மேல் கூராக்கியபடி

வழிப்போக்கர்களை

தெருவுக்குத் தெரு பின்தொடர்கிறேன்.

நானொரு நாயகன்.

எங்கே எனது சனம்.?

நானொரு துரோகி.

எங்கே எனது தூக்குமரம்.

நானொரு பாதம்.

எங்கே எனது வீதி?

குன்று

~

விதியே, என்னை அறையாதே,

ஏற்கனவே பல மீட்டர்களில்

இடி என் முகத்தை மூடியிருக்கிறது.

இதோ நான்,

காற்று தெருக்களில் வீசும்போது

புத்தகங்களிலிருந்தும் அகராதிகளிலிருந்தும் மதுவிடுதிகளிலிருந்தும்

அப்படியே அகழிகளிலிருந்து சிப்பாய்கள்

வெளியேறுவது போல

விரைந்து வெளியேறுகிறேன்.

ஓ நூற்றாண்டுகளே,

ஒரு பூச்சியைப் போல

புயலுக்குப்பதில் ஒரு காற்றாடியைக் கொண்டு

எரிமலைக்குப் பதில் தீப்பெட்டிகளைக் கொண்டு

என்னை வழிமாற்றினீர்.

உங்களை ஒருபோதும் நான்

மன்னிக்கப்போவதில்லை.

அவசியப்பட்டால்

என் கிராமத்துக்குக் கால்நடையாகவே

நான் திரும்புவேன்.

வந்ததும் உங்களைப் பற்றிய

அவதூறுகளை நான் பரப்புவேன்.

அகழிகளுக்குப் பக்கமாக

சண்டைக்குப் பின்னர்

முற்றும் சோர்வடைந்த படைவீரனைப் போல

நான் புற்றரை மேல் விழுந்து கிடப்பேன்.

நெருப்பு வளையங்களைத் தாண்டுகிற

பழக்கப்பட்ட நாய்களைப் போல

நான் இக்கதவுகளை, சன்னல்களை

இந் நீள்கைச் சட்டைகளை, கழுத்துப் பட்டைகளை கடப்பேன்.

ஒரு பருந்தைப்போல

கன்னியர்களின் வெட்கத்திற்கு மேலாகவும்

தொழிலாளர்களின் துயரங்களுக்கு மேலாகவும் பறக்கிறேன்.

ஒரு குடிசைக்கோ

ஒரு அரண்மனைக்கோ

ஒரு ஆட்சியாளருக்கோ

ஒரு யாசகனுக்கோ

மெலிதாகப் பக்கத்திலிருக்கும்

ஒரு கன்னி நிலத்தைத் தேடி

அந்திப் பொழுதுகளில்

என் இறக்கைகளை

தகைவிலாங்குருவியைப் போல

நான் விரிக்கிறேன்.

ஒரு சேணத்தைத் தொட்டபடி

ஒரு காட்டுக் குதிரையாய்

காற்றில் குதிப்பேன்.

என் நோட்டுப் புத்தகங்களைத் தவிர

இருந்திராத, இனியும் இராத

ஒரு நிலம்.

எல்லாம் சரி, நூற்றாண்டே

என்னை வீழ்த்திவிட்டீர்.

என்னை எல்லாக் கீழ்த்திசையிலும் காணமாட்டீர்.

ஆனால் நான்

என் சரணடைவின் கொடியை

உயர்த்துமொரு மாநாட்டில் காண்பீர்கள்.

…………..

சிரிய கவிஞரும் எழுத்தாளரும் நாடகாசிரியருமான முஹம்மத் அல் மகூத், அரபு புதுக்கவிதையில் புரட்சி செய்தவர்களுள் ஒருவர். 1934ல் சிரியா சலாமியாவில் பிறந்த இவர் சிரிய சமூக தேசியவாதக் கட்சியில் அங்கம் வகித்ததால் பல முறை சிறையிலிருந்தார். இவரது கவிதைகள் முடியாட்சி உலகின் புலம்பெயர்ந்தலைதலை நெருக்குவாரங்களை தெருட்சியை தீவிரமாகப் பேசின. அவை அரபுலகின் ஒத்திவைக்கப்பட்ட கனவை, அவரது அங்கதத்தோடு கவி மொழியின் கூருணர்வோடு வெளிக் கொணர்ந்தன.

அப்து வாசின் ( லெபனீசிய கவிஞர் )

சப்னாஸ் ஹாசிம்

சப்னாஸ் ஹாசிம், அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர். ‘நிணக் கவிதைகளில் அப்பிய சொற்கள்’ என்ற கவிதைப் புத்தகத்தின் ஆசிரியர்.

உரையாடலுக்கு

Your email address will not be published.