/

அமுதம் உண்க அடிகள்: சப்னாஸ் ஹாசிம்

முள் முருங்கையின் மீது அடர்ந்தேறிய கொடி உருண்டு உருண்டு காய்த்திருந்ததில் சரடு பாரித்து கொடி மூடியிருந்தது. மிளகுக்காக வைக்கப்பட்ட முள் முருங்கைகள் கிளையொடிந்து தடித்த கணுக்களோடு இருளில் கொடி சுற்றிப் பாவையாக நின்றிருந்த இடைவெளிகளில் தப்புக்கூட்டிய சருகுகள் எழுந்ததில் கன்று வெட்ட விடப்பட்ட கொடிகள் மறைந்து கிடந்தன. முற்றிய மூன்று வயது கொடிகளை பக்கத்திலிருந்த ஈரப்பலாவில் சுற்றி விட்டதில் இலையும் சரடுமாகத் துளிர்த்துப் பூரித்துக் கிடந்தது மிளகுக் காடு. வயது போன நாட்டான்கள் இருமுவதோடும் சிறிய வானொலிப் பெட்டிகள் மலையிடுக்குகளுக்கிடையில் சிங்களப் பாடலொன்றைக் கடினப்பட்டு இரைச்சலோடு இழுத்துவருவதோடும் மிளகுக்காடு ஒற்றிக் கிடந்தது. மெலிந்த கைகளின் மீது முறுக்கேறிய தசைக் கட்டுகள் புகையிலைச் சுருள் போல எலும்புகள் மீது ஓடிக்கிடந்தது ஆரியதாச கைகளைக்கூப்பியதும் எண்ணெய் விளக்கேற்றிய வெளிச்சத்தில் தெரிந்தது. மரத்தடிகளை நாருரித்து கால்களாய் நட்டி குச்சிகளால் கூடமைத்து குருத்தோலை வேய்ந்தமைந்த ஆளுயரமுள்ள சிறிய கூரையினுள் பச்சைத் தேங்காய் சீவிப் பொத்தல் இட்டு எண்ணெய் நிரப்பித் திரிவைத்திருந்தார். வணங்கும் கூடமது. கரிப்புகை பட்டு தளத்தில் கிடந்த தென்னம் பாளைப் பூவும் குருத்தோலையும் வாடிக்கிடந்தன. உயர்ந்த மரமொன்றில் ஆந்தையொன்று றெக்கைகளை உசுப்பிவிட்டு ஏறக்குறைய இன்னும் சிறிது நேரத்தில் சன்னதமெழுந்து ஒற்றைக்காலில் ஆடத்தயாராவது போல சப்தமெழுப்பி நின்றதை தினவு அடர்ந்த கண்கள் நிரம்ப போகம்பர தெய்வத்தின் பிரசன்னமென நினைத்துக் கொண்டார் ஆரியதாச முதியன்சலாகே. பௌர்ணமி நாளின் பூசையன்றை நினைக்க நினைக்க அவருக்குப் பித்துப்பிடித்தது போல ஒரு முகத்தை ஒரு ஆகிருதியை சிந்தையில் வரத்தடுக்கும் பிடிவாதம் போல் சக்கராகாரமான இருளொன்று துரத்துவது போல அவர் உயரத்திலிருந்து சில சென்ரி மீற்றர்கள் அடிக்கடி துள்ளிக் கொண்டார். அடர்ந்த இரவின் வெம்மையில் காற்றை ஆடவிடாது மலையும் மரங்களும் பிடித்திருப்பது போலவும் பூச்சிகளும் சேர்ந்து சூள் எடுத்திருந்தது போலவும் மென்னிரைச்சல் வடியக் கிடந்தது குடிசை முற்றம். ஒரு வீசை அரிசி மாவுக்குத் தேவையான ஊறிய அரிசி பழஞ்சீலை முடிச்சில் தொங்கியபடி நீரைச் சொட்டியது. களிமண்ணால் வேய்ந்த சுவர் மழைக்குக் கரைந்த இடங்களில் உள்ளேயிருந்த குச்சிகள் பல்லிளித்தபடி வெளியே தெரிந்தன. குடிசையினுள் மரக்கட்டிலில் சாய்ந்து கொண்டதும் குடிசைக் கூரையில் கரையான் அரித்த கம்புகளிடையே செருகிய பொலிதீன் பை, லைட்டர், அருவாக்கத்தி, கடியன் தூள் பொட்டலம், பழைய டார்ச் பெட்டரிகள் என எல்லாம் நன்கு தெரிந்தன. குதிரையென்பின் மேல் புடைத்துக் கறுத்திருந்த நாளங்களிடையே அரிப்பேற்பட்டது போல அடிக்கடி அதுவாகச் சொறிந்து விட்டன விரல்கள். ஆரியதாசவுக்குப் பழுத்த உடல். தோலும் தசைகளும் எப்போதோ பிரிந்தன மாதிரி கட்டிலில் தோல் பரப்பிழுவையுற்று வடியப் போவது போலிருந்தது. மெல்ல மெல்லத் தொற்றிய நடுக்கக் கிலேசம் அவரைத் தூங்க விடாமல் உன்னியபடி இருந்தது. இந்தப் பிறவி வினையா இது? ஜென்மங்களாக பிறப்பெடுத்து முன்சென்ம பலனொன்றின் நிறுத்தம் போலவெண்ணிக் கொண்டார். ரத்தோட்டவின் மலைகளுக்கிடையே அழகிய குளிர்ந்த ஓடையினருகில் இன்றும் உலவியபடியிருக்கும் போகம்பர தெய்வத்தின் சொரூபத்தின் புஜங்களிலும் மார்பிலும் மின்னும் ஆபரணங்களால் கண்களைக் கூசிக் கொள்வதைப்போல கால்களை உள்ளிழுத்து உரசிக் குனுகிக் கொண்டார். வடக்கோ மேற்கோ கிழக்கோ தெற்கோ போகம்பர திசாவையின் ஆட்சியும் வாக்கும் வழுவாதென்று அவருக்குத் தெரியும். தெய்வமாகவே பிறந்த மாவீரனின் கணக்கு கணக்குத்தான். அதற்குப் பிசிறல் பிசகலில்லை. துருது போயா தினத்திற்கு சில தினங்களே இருந்தன. அதற்குள் நிலவு வளர்ந்து வந்து மலைக்கு மேலே கிளம்பி விடுமோ என்றிருந்தவருக்கு. போகம்பர திசாவை தெய்வமானவர் தான். வாழும்போது அவர் மனைவியின் முகத்தினால் துர்பலன்கள் ஏற்படலாமென்று ஜோசியர்கள் சொல்லி வைத்தனர். கன்னியாக இருந்தவரைக்கும் எந்த கெட்ட விசயங்களும் நிகழாமலிருந்தது. திருமணமான பின்னர் அவளுக்கிருந்த தோஷத்திற்கு பரிகாரமே இருக்கவில்லை. அதனால் தங்கத்தினாலான அழகிய அலங்காரங்களை நறுவிசாகப் பொருத்தப்பட்ட உலோக முகமூடியொன்றை அவள் எப்போதும் அணிந்திருந்தாள். இறந்த பின்னும் பேயாக இன்னும் மலைக்காடுகளில் உலவுவதாகவும் அவளது முக உருவத்தைக் கண்டாலோ நினைவிலெடுத்தாலோ துர்பலன் கிட்டுமென்ற ஐதீகம் இப்போதும் இந் நாட்டான்களிடையே இருப்பதை ஆரியதாச நினைத்துக் கொண்டார்.

“ என் போகம்பர தெய்யனே ..”.

“ உன் மனைவியின் முகத்தை அவன் பிள்ளைக்குக் கொடு..”.

தளும்பிக் கிடந்த குளிரிலும் முகம் வியர்த்தது போல துடைத்துவிட்டார். இன்னும் ஆழ்மனதில் அந்த வடுவேறி ஏமாற்றப்பட்ட முகத்தின் தொங்கலாய் இருந்ததவருக்கு. வாசனகம விகாரையிலிருந்து உமா ஓயாவைக்கடந்து யாலகம, யொம்பானவென்று நடந்து மஸ்பன்ன வருவதற்குள் அத்தனை பெரிய மிளகுக்காடு மலையைப் போர்த்தியபடி இருந்ததவருக்கு. இன்றைக்கு பல நூறு கோடிகள் தேறும். அப்போதே ஆறேழு வயதுக் கொடிகள் சூல் நிரம்பி பணமாய்ப் பன்னீர்க்குடமுடைந்து காடு முழுக்கப்படர்ந்தோடியிருந்தன. அவரது தோட்டங்களிலிருந்து மாட்டு வண்டில்கள் மிளகு மூட்டைகளோடு உமா ஓயாவுக்கு இறங்குவதில் பள்ளத்து ஊர்களுக்கு குடி நீரில் கொஞ்சம் காரம் ஏறியிருக்குமென்பர். அவரது மிளகு மண்டிக்கு நாடெங்கிலுமிருந்தும் வியாபாரிகள் வண்டில்களோடும் லாரிகளோடும் மிளகு வாங்கிச் சென்றனர். ஐரோப்பாவுக்கு ஒரு கப்பல் முழுக்க மிளகு அனுப்பிய காலத்தில் ஆரியதாச பிராந்தியம் முழுவதும் பிரசித்தி பெற்றிருந்தார். இப்போது எல்லாமே விட்டுப் போய் இந்தச்சிறிய மலையின் ஒரு பகுதியில் எஞ்சிய காடும் குடிசையும் மட்டுமென்றாகி அவரைப் பிடித்து வைத்திருந்தன.

0

“ எத்தின தரம் கோல் எடுத்தேன், ஏன் தூக்குறேளில்ல. “

“ ம் சொல்லு புள்ள.”.

“ கதைக்கனும் உங்களோட “

“ ஏன் ஜானு அவசரமா”.

“ மூனு நாளா நான் படுத்துட்டுக் கிடக்கன். ஆனா வேலைக்கும் போயிருக்கேன். ஃபிங்கரும் வெச்சன். இண்டைக்கும் நாலுமணிக்கு எழும்பினன். சாமி கும்பிட்டன். என்னவெல்லாம் நடக்குதெண்டு ஒரு கொப்பியில எழுதி வெக்கிறன். அதுக்கு பிறகு தெரியா. எனக்கு உங்களோட சரியான விருப்பம். உங்கள, தேவி டீச்சர, அம்மாவ, பிருந்தாவ எல்லாரயும் பிடிக்கும். உங்களெல்லாரோடயும் இருக்கனும் போல. “.

போர்வைக்குள்ளிருந்து காலை இழுத்து வெளியே விட்டதும் பாவாடை வெக்கையினின்றும் தப்பிய சருமம் மட்டும் சில்லிட பிசுபிசுத்து ஒட்டியிருந்த கால்மயிர்கள் ஒவ்வொன்றாக கழன்றெழ மொத்தமாக சுருட்டி உட்கார்ந்து கொண்டாள் ஸீனா. வழக்கமான ஜானு இல்லை பேசியது. அவளுக்குப் பழகிய ஜானு வகுப்பறையில் ஜொலிப்பவளாய் வால்வெள்ளி எரியாமல் நம்மோடே கதைத்துத் திரிவது போல ஜாஜ்வல்யம் சுற்றியிருந்தவள். குரல்தொனி ஜானுவுக்கு மாறியிருந்தது. தூக்கக் கலக்கத்திலும் இந்தப் பித்து தலையிலடித்துத் தொந்தரவு தரத்துவங்கியது. எழுந்து உட்கார்ந்து தலைமாட்டில் சாய்ந்ததும் இறுக்கமற்ற பாலைப் பலகைகள் அதன் உலோக இணைப்புகளிலினின்றும் க்றக் என அசைந்து பின் சுவரில் மோதின.

“ இப்ப ஒங்கொளோட ஆரு இருக்கிற பக்கத்துல “.

ஸீனாவிடமிருந்து நிச்சயமாக அது அக்கறையான கேள்வியாக எழவே இல்லை. ஒரு சோம்பலயர்ச்சியோடு ஜானுவைத் துண்டித்து மீண்டும் இரவை போர்வைக்குள் அமிழ்த்தும் ஒரு அவசர நடவடிக்கையாயிருந்ததைப் பற்றி அதற்கு அடுத்த நாளே துயருற்றாள். அந்த அநாதரவான நேரத்திலும் அவளோடு பேச முடியாமல் முடுக்கியெழும் சுயநலத்தின் மீது அதன் உள்ளிருப்பின் மீது அத்தனை கோபமிருந்தது.

“ ஆரணி தெரியுமா, திருக்கோவில். என்னோட க்ளாஸுக்கு வாரவள்.. அவளும் என்னோடான் வேலைறாள்..”.

“ குடுங்கோ போன ஒள்ளுப்பம்.”.

“ ரெண்டு நாளா இப்புடித்தான் கதச்சிக்கிட்டு இருக்காவு..”.

“ அவட அம்மாட்ட சொல்லிட்டேன். வாறாவு விடியச்சாமம்“.

“ பாரு மணி கொஞ்சம்.”.

எங்களூரில் வாஞ்சையாக கொஞ்சம் மணி சேர்த்துப் பேசுவதுண்டு. அப்படிச்சொன்ன போதுதான் அந்த அவ மனம் கரைந்து அவள் மேல் பரிதாபங்கலந்த பரிவு நிரம்புவது போல ஸீனா பெருமூச்சு விட்டாள். கோழி கூவி விடியத்துவங்கும் போது பாலப்பம் விற்பவர் படலையைத் தட்டும் போது தான் திரும்ப விழிப்பு வந்ததவளுக்கு. உம்மா நாலு சோடி பாலப்பம் கேட்பதும் அவரோடு பேசுவதும் சிறு ஒலிகளாக கேட்டதும் படுக்கையை சரி பண்ணி போர்வையை மடிக்கத் துவங்கினாள். அவள் வீட்டில் வாப்பா உம்மா மட்டுமல்ல, அவள் வளர்க்கிற மஞ்சள் பூனையும் பாலப்பப் பிரியர்கள் தான். அரிசிமாவில் தேங்காய் நீர் அப்பச்சோடா விட்டு புளிக்கவிட்ட கலவையை சட்டியில் மென்படலமாகச் சுற்றிப் படரவிட்டு மூடி அவிய விடுவர். சிறிது வேகும் போது வெல்லங்கலந்த தேங்காய்ப்பாலை ஊற்றி பிறகு பாலப்பத்தை பரிமாறும் போது சீனி இட்டுச் சாப்பிடுவர். இவர்கள் வீடு போல பலருக்கும் கலந்தர் காக்கா கொண்டுவருகிற பாலப்பம் தினமும் அதிகாலை வந்துவிடும். பெரும்பாலும் தெவிட்டத் தேன் போல சீனியிட்டதும் தேங்காய்ப்பால் படலம் கரைந்து வடியும். சிலபோது பச்சைத்தண்ணீர் போல உப்பென்று இருக்கும். அப்போது மஞ்சள் பூனை கூட அப்பத்தை அண்டாது. காலையில் திண்ணையில் உட்புறமாக கீழே உட்கார்ந்து கீரைகளை சுத்தம் பண்ணச் சுளகு கொண்டு வந்ததும் ஜானுவின் ஞாபகம் வந்தது.

“ கோவலன் கெட்டவர் எண்டு தெரிந்தும் ஏன் கண்ணகி அமுதம் உண்க அடிகள் எண்டுறாள்..”.

பாடத்திட்டத்தில் ஊர்காண்காதை தான் சிலப்பதிகாரத்தில் அவர்களுக்கிருந்தது. ஆனால் அவள் கேட்டதோ கொலை களக்காதை. அந்த வயதில் ஜானுவிற்கு எப்படித் தெரிகிறது இவையெல்லாமென பள்ளியாக் குளத்துத் தடித்த வேலிக்குச்சிகளில் நெடுநேரமாய் நிற்கும் நீர்க்காகம் போல பலசயமயம் வகுப்புகளில் திகைத்தபடி ஸீனா உறைந்திருக்கிறாள். வகுப்பென்றால் பெரிய பீடிகைகளற்று மேல்மாடியில் பாய் விரித்து நடப்பதுதான். அதற்கு நீரூற்றிய மண்முட்டியும் கொஞ்சம் கிளாசுகளும் பக்கத்து வீடு இர்சானாவின் கணவனிடம் கறுப்பு பெயின்ட் பூசிய பழைய மஸ்கனைட்டு சீலிங் பாளமொன்றும் தேவைப்பட்டது. குழப்ப காலங்களில் தமிழ்வட்டையிலிருந்து பெரிய பள்ளிப்பக்கமாக வரும் தமிழர்கள் குறைந்து போயினர். பின்னர் தொழில்நிமித்தமாக வருவதோடு நின்றுகொண்டனர். அவ்வப்போது ஒரு சிலர் வருவது போல அவளது வீட்டுக்கு பிள்ளைகள் பாடத்திற்கு வந்து போயினர்.

முன்னர் ஸீனா நன்றாக படித்துக் கொண்டிருந்த போதே வாப்பா போக வேண்டாமென நிறுத்தப் பார்த்தார்.

“ சும்மா இருந்த புள்ளைக்கு மூடுபர்தாவையும் ஹபாயாவையும் போட்டு உட்டேள். நல்லா படிக்கிறவள ஏன் பள்ளிக்கொடத்த உட்டு நிப்பாட்டப் போறேள். “.

உம்மாவோடு அவளும் கண்ணீரோடு நான்கு நாட்கள் உண்ணாமலிருந்து காரியத்தைச் சாதித்த போது உயர்தரம் மட்டும் படிக்கலாமென்று பிடியைத் தளர்த்தினார் வாப்பா.

“ இந்த வகுப்புகளுக்கு கொமர்கள் போன பொறவு தான் சீரழிஞ்சது ஊர்..”.

இப்படி புறுபுறுத்துக்கொள்ளும் அவர் ஒன்றும் அவ்வளவு மார்க்க ஈடுபாடுடையவரில்லை. இஹ்தார் சில நாட்களுக்குள் இஹ்தார் ஹாஜியான போது சில மாதங்களுக்குள் ஓட்டு வீடு மாடி வீடான போது ஜுப்பாவையும் தொப்பியையும் அவராக மாட்டிக்கொண்டார். போலியான பாவனைப் புன்னகையொன்றை முகத்தில் கொழுவிக் கொண்டதும் இது நம் வாப்பாவே இல்லையென்றிருந்தவளுக்கு. சில நாட்களில் இஹ்தார் திடீரென டீவி வயர்களை பிடுங்கி எறிந்தார். துணி வாங்கி வந்து மூடுபர்தா தைத்துப் போடச் சொன்னார். பூப்படைந்ததிலிருந்து அவள் முகத்திரையோடு தான் வெளியேறுவாள். பெண்களிடத்திலும் அப்படியே வெளிப்பட்டாள். அவளுக்குப் பழகியிருந்தது. வாப்பாவுக்கு இறைபக்தியாலும் அருளாலும் தான் நிறையச் செல்வம் பெருகியதென நம்ப வைக்க ஒரு அவசரத் தேவையிருந்தது போல. அதனாலென்னவோ வாழ்வின் மீது ஊறியிருந்த பழக்கப்பட்ட நிறம் கோடையின் மழை நாள் வானம் போல ஒரேயடியாக மாறியிருந்தது.

“ புள்ள மூணு ஏ எடுத்திருக்காள். எப்புடியும் லோ ஃபெகல்டி கிடைக்கும். ஏன் டப்பா அனுப்பாம இருக்காய்.”.

பலரும் சொல்லிப்பார்த்தனர். எந்த உண்ணாவிரதமும் வெற்றியளிக்கவுமில்லை. வாப்பா இந்த விசயத்தில் கடுமையாக இருந்தார். உடுப்புச் சாமான்களை பெட்டியில் கட்டி வைத்து வீட்டை விட்டுப் போய் விடுவேனென மிரட்டினார். அதற்குப் பிறகு எல்லாமே தணிந்தது. திடீரென கொள்ளிகளைப் பிரித்து தண்ணீர்விட்ட அடுப்புப் போல நின்று விட்டது.

“ என்னடி இது அக்கரப்பத்துல இல்லாத புதினம்..”.

“ இருந்தாலும் இந்த தப்லீக் காராக்களுக்கு ஒரம் தான்.”.

ஆமினா டீச்சர் ஸீனாவுக்குச் சொல்லியனுப்பினார். அவள் வகுப்புச் செய்யத் துவங்கியதும் பிள்ளைகள் வரத்துவங்கினர். கறுத்த சீலிங் பாளத்தில் கறுத்த முகத்திரையோடு பாடம் நடத்தினாள். தமிழ், சீலைத்துணியில் வடிகட்டுண்டு இன்பம் குன்றாது வழிந்தது. அப்படித்தான் அந்த நாட்களில் ஜானு ஆரணி, பிருந்தாவெல்லாம் வரத் துவங்கினர். வகுப்பு முடிந்து மேல் விறாந்தையில் பள்ளியாக்குளத்தை அதன் மேல் மசியும் பின்னேரச் சூரிய வாளிப்பைப் பார்த்தபடி பேசிய நாட்களை நினைத்துக் கொண்டாள். கொஞ்சம் கொஞ்சமாக ஜானுவோடு திரையில்லாமலே பேசவும் பழகவும் செய்தாள். அந்த விநாயகபுரக் கொஞ்சு தமிழ் அவளைக் கட்டிப் போட்டிருந்தது.

“ நீங்க நல்ல வடிவு என..”. ஜானு கொஞ்சும் போது விநாயகபுரத்து பப்பாளிப் பழங்களை கிள்ளி விட்டாற் போல சிவக்கும் கன்னத்தை தொட்டுப் பார்ப்பாள். அவளை அவ்வளவு கிட்ட ஜானு அளவுக்குப் பார்த்தது யாருமே இல்லை தான்.

“ ஆரது நடுச்சாமம் டெலிபோன் எடுக்கிற, மனுசன் படுக்கிறல்லயா.”.

வாப்பா அதட்டியதும் நினைவு திரும்பியது அவளுக்கு. சுளகோடு சமையலறைப்பக்கமாகச் சென்றதும் கிள்ளிக் கழித்த கீரைக்கழிவை இர்சானாவுக்கு கொடுக்கலாமென்று ஒரு கோப்பையில் போட்டாள். இர்சானா கோழிக்குப் போடுவாள். உம்மா வெளிக்கிட்டிருந்தாள். ஆசியா மாமியின் பேர்த்திக்குப் பல்லுக் கொழுக்கட்டை சொரிகிற நாளென்று கிளம்பியிருந்தாள். சிறுவயதில் ஸீனா பல்லுக் கொழுக்கட்டைக்குப் போயிருக்கிறாள். சிறிய கொழுக்கட்டைகள், பூ பிஸ்கட்டுகள், டென்டா டொஃபி சகிதம் காசுகளை பெரிய அண்டாவில் கலந்து பல்முளைத்த பிள்ளையின் மேல் சொரிவார்கள். சுற்றி வர உட்கார்ந்திருக்கும் பெண்களும் பிள்ளைகளும் ஏட்டிக்குப் போட்டியாக அவற்றைச் சேகரிப்பார்கள். கொழுக்கட்டை நைந்து உள்ளிருந்த தேங்காய்ப்பூவும் பயறும் பாகும் பிசுபிசுத்த அத் தரையில் ஓடியாடுவது அந்த வயதுகளில் அலாதிப்பிரிமயவளுக்கு. இப்போது சொந்தங்களோடு அவ்வளவாக அண்டிக் கலந்து புழங்குவதில்லை அவள். ஸீனா அவர்களது வீட்டுக்குப் போகும் போதெல்லாம் என்னடப்பா புதுப்பணக்காராக்கள் இஞ்சாலப்பக்கம் என சாடையாக உறவினர்கள் குத்திப் பேசிய போதெல்லாம் அவளுக்குக் கலக்கமாயிருக்கும். அப்படியென்ன புதுப்பணம்? எங்கே இருந்து வந்திருக்கும் ?.

“ இன்னா இரிக்கிற இஹ்தாரப் பாருங்கோ, சும்மா மார்கெட்டுக்க மொளகு யாவாரம் தான், பதுளைல மொளகு வாங்கிக்கு வந்து ஹோல் சேல் செஞ்ச, பொறகு எப்படிப் பணக்காரன் ஆனானெண்டு அல்லாஹ்க்குத்தான் வெளிச்சம்..”. எனக் காதுபடச் சனம் பேசுவதுண்டு.

காலப் போக்கில் எல்லாம் மாறியிருந்தது. வாப்பா படுக்கையானார். மூத்திரப்பைகளோடு ஒத்தாசைக்கு உம்மா இருந்தாகவேண்டியிருந்தது. வாயில் புற்று வந்து வாற்கோலை போல உருண்டு கறுமை நிறத்தில் பொக்குளங்கள் தடித்து வந்தன. அவரே கண்ணாடியில் பார்த்து நல்ல ரெண்டு வருசக் கண்டுல மொளைச்ச மொளகு போலானிருக்கி என கண்ணீரோடு சிரித்துக் கொண்டார். ஏனிந்தப் பணமெல்லாம் இப்படிக் கரையவேண்டும் ? அந்தப் புதுப்பணக்கலக்கம் உள்ளெழுந்து சீழ்படும் போதெல்லாம் ஒரு நாள் இரவு வெள்ளைத்துணி போர்த்தி வாப்பா எதையோ கொண்டு வந்தது ஞாபகத்திலறையும் அவளுக்கு. அதைக் கீழே வைத்துச் சாத்தும் போதெல்லாம் கிண் கிண்ணென்ற உலோகச் சத்தம் மாடியை அதிரச் செய்யும். அதை அவரோடு வைத்திருப்பது போல கண் விலத்தாது விழித்திருந்தார். இப்போது இப்படி நோயில் தீர்ந்து போகும் பணம் அந்த வெள்ளைத் துணியில் என்னவாகவிருந்தது?

கவுந்தியடிகள் சொன்னது போல அடவிக்கானகத்தில் இடையிருள் யாமத்தில் எதை விட்டு வந்தார்? கட்டிக்காத்த நேர்மையையா? தீமைபயக்கும் ஊழ்வினை இப்படித் துரத்த என்ன காரணம்?

***

இன்று துருது போய தினம். மணவர்த்திகள் புகையாகச் சுருள உடுக்கை உருவேறி சன்னதமாடிக்கொண்டிருந்தார் ஆரியதாச. போகம்பர தெய்வத்தின் பெயர் உடுக்கைத் தாளத்தோடு அடிப்புற்று மலைகளைத் தின்று விடும் போலிருந்தது. அந்த ஐம்பொன் சிலை காவல்தெய்வம் போல அவர்கள் குடும்பத்து சௌபாக்கியங்களைக் காத்து வந்தது. இன்றும் அரக்கியாக அலையும் போகம்பர திசாவையின் மனைவியின் தீங்குகளை விட்டும் அவளது முகத்தின் துர்பலன்களை விட்டும் அவர்களைப் பாலித்து வந்தது. அது திருடு போன நாளை நினைக்க உதறல் கூடியது. இன்று சாபம் தீரும் கடைசி நாளென்று தெரிந்ததவருக்கு. கணக்கு முடியும் நாளில் அவருக்கு உச்சாடனம் பெருகி மதமேறிக் கண்கள் பிதுங்கி வெளியே வந்தன. சுற்றி நின்ற நாட்டான்கள் பின்னே சில அடிகள் தள்ளிப் போயினர். கால்விரல்களில் பழுப்பு மண்ணும் உராய்ந்த இடங்களில் குருதியும் ஒட்டிக் கோளங்களாக உருண்டு அப்பிக் கிடந்தன. கண்களில் அவரது மொத்தக் காடும் வண்டில் மாடுகளும் மனக் காட்சியாய் விரிய மஸ்பன்னவின் தெருக்களில் கதறியழுத படி ஓடிய நாளை நினைந்து மூர்க்கமாக ஆடத் துவங்கினார்.

பெரிய கூடத்தில் ஓதுவதற்கென்று பெண்கள் வந்து நிறைந்திருந்ததில் அடைத்த வெக்கையை ஜன்னலைத் திறந்து அப்புறப்படுத்தினாள் ஸீனா. இஹ்தார் மரணப்படுக்கையிலிருந்தார். உம்மா இடிந்து உட்கார்ந்த படி அவரது வாயைத் துடைத்துக் கொண்டிருந்தாள்.

“ நல்லாத்தான் கதைச்சார் பேசினார், மறுவா இண்டைக்கு பேச்சு மூச்சு இல்ல..”.

நாடியில் கைவைத்தபடி சிரேஷ்ட பெண்கள் விசிறியோடு பேசிக் கொண்டிருந்தனர். வெளியில் ஜமாத்தினர் திரண்டிருந்தனர். இஹ்தார் ஹாஜியாரின் நினைவுகள் அங்கே தேநீரோடு கொஞ்சம் அலைமோதித் தேயிலைத்தூள் போல அடியில் கசந்து கிடந்தன. ஸீனா கரண்டியில் அன்னம் பருக்கினாள். கன்னமகற்றப்பட்டு கழுத்தின் பின்பகுதித் தோல் வைத்துத் தைக்கப்பட்ட வாப்பாவின் முகம் உருவழிந்து சோர்ந்து தள்ளாடிக் கொண்டிருந்தது. அவள் நிலைகுலையாது நேர்குத்திய படி கரண்டியை வாயில் திணித்தபடி இருந்தாள். எங்கோ மூலையில் மெதுவான குரலில் ஜானு அமுதம் உண்க அடிகள் என்று திரும்பத் திரும்பச் சொல்லுவது போலிருந்தது.

கடியன் – எறும்பு

ஒள்ளுப்பம் – கொஞ்சம்

தப்லீக் – இஸ்லாமிய மார்க்க குழுவொன்றின் பெயர்

வாற்கோலை – வால்மிளகு

மறுவா – பிறகு

சப்னாஸ் ஹாசிம்

சப்னாஸ் ஹாசிம், அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர். ‘நிணக் கவிதைகளில் அப்பிய சொற்கள்’ என்ற கவிதைப் புத்தகத்தின் ஆசிரியர்.

உரையாடலுக்கு

Your email address will not be published.