/

எரிமலை வழிந்தோடும் பாதை: வெற்றிராஜா

மாபெரும் எரிமலையொன்று வெடித்து விண்ணை தீண்டிட விழையும் காட்சியை நேரில் பார்த்திராதவர்கள், அந்த எரிமலையின் வீச்சையும் விசையையும் அறிவதற்கு, அது சிதறி சென்று வீழ்ந்த தூரங்களை அளந்தும், அது வழிந்தோடுகின்ற பாதைகளை வைத்தும்தான் உணர முடியும். உருகி ஓடுகின்ற எரிமலையின் அக்னி வெகு விரைவில் குளிர்ந்து விடுவதில்லை. ஆறாத ஒரு வடு போன்று, வெப்பம் தணிய தேவைப்படும் காலத்தை அது நிதானமாகவே தீர்மானித்துக் கொள்கிறது. இணைய உரையாடல் ஒன்றில் எழுத்தாளர் அ.முத்துலிங்கம் ஐயா சொன்னது, ‘ஈழத்தின் சரித்திரத்தை ஒரு படைப்பாளியால் மட்டுமோ அல்லது ஒரே ஒரு படைப்பின் மூலமாகவோ முழுவதுமாய் காண்பித்து விட ஒருபோதும் இயலாது. ஈழ யுத்தம் என்பது பல்லாயிரம் நபர்களால் சொல்லப்படும் பல கதைகளை தொகுத்து நாம் உணர வேண்டிய பெருஞ்சித்திரம்’. இப்படி பல அகதிகளால் தீட்டப்படுகின்ற ஈழமெனும் கீற்றோவியத்தில், புதியதொரு கீற்றாக வெளிவந்துள்ளது வாசு முருகவேலின் “மூத்த அகதி” நாவல். 

அகதிகளின் வாழ்க்கை ஈழத்தில், மண்டபத்தில், சென்னையில், தமிழகம், உலகம் முழுவதும் என பரவியிருந்தாலும், வாசு முருகவேல் தனது காமிராவை சென்னையை நோக்கி திருப்பியுள்ளார். ஐம்பது அத்தியாயங்கள். இருநூற்றி முப்பது பக்கங்கள். துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட தோட்டா வேகத்தில் பறக்கிறது கதை. எரிமலை வெடித்த பின் வந்து விழும் கற்களாய் துவாரகன், வாசன், ஈசன், ரூபன், பாலன், இந்திரன், கமல், கஜன் என பாத்திரங்கள் முளைத்துக் கொண்டே இருக்கிறார்கள். பெயரே தெரியாத மேலும் பல அகதிகளின் வாழ்க்கையும் சொல்லாமல் சொல்லப்படுகிறது. நாவலில் முதன்மை பாத்திரம், துணைப்பாத்திரம் என்று எவருமில்லை. அகதிகளாய் வரும் அனைவருமே கதையின் நாயகர்கள் தான். மையம் விளிம்பு என சகல சட்டகங்களிலும் சுழன்று கதையை காட்சிகளாய் நகர்த்துகிறார் ஆசிரியர். ட்ராலி ஷாட்டுகள் வழியே எம்ஜிஆர் நகர், கேகே நகர் , வடபழனி சந்து பொந்து சாலைகளில் புகுந்து வெளிவருகிறார். ட்ரோன் ஷாட்டுகள் அகதி கெஸ்ட் ஹவுஸின் மேல் தளத்துக்கும் கீழ் தளத்துக்கும் ஒரு இலவ மரத்தின் வழியே ஏறி இறங்குகிறது. மாண்டேஜ் ஷாட்டுகளால் கோபாலபுரம், லாயிட்ஸ் ரோடு, அமெரிக்கன் எம்பஸி, மவுண்ட் ரோடு, மீனம்பாக்கம் விமான நிலையம், கிழக்கு கடற்கரை சாலை, புதுவை பஸ் ஸ்டாண்டு, ஃப்ரான்ஸ் எம்பஸி என கதையின் களங்கள் மிக நேர்த்தியாய் கோர்க்க பட்டுள்ளன.  

நாவல் துவங்கி ஒரிரு அத்தியாயங்களில் விசாவுக்காக நடத்தப்படும் ஒரு திருமணத்தையும், அதில் நிகழும் அபத்தங்களையும் பகடி தெறிக்க விவரித்து நம்மை நாவலுடன் ஒன்ற வைத்துவிடுகிறார் ஆசிரியர். அயல்நாட்டில் தனது பதின்பருவ பையன்களை கண்டித்து உதைக்க இயலாத தந்தை ஒருவர், மீனம்பாக்கம் விமான நிலையம்  இறங்கியவுடன், காரை ஓரமாய் நிறுத்த சொல்லி, மகன்களை ஆசைதீர அடித்து விளாசுகிறார். போத்தீஸ் கடையில் லட்ச ரூபாய்க்கு உடைகள் வாங்கினாலும் ஆட்டோக்காரர்களுடன்  பேரம்பேசி தகராறு செய்கிறார் இன்னொருவர். பல காலமாய் ஏர்போர்ட்டுக்குள் நுழைய இயலாத அகதி ஒருவர், பாஸ்போர்ட் விசா காகிதங்கள் தயாரித்து உள்ளே சென்று விசாரணையில் பிடிபட்டு வெளியே வந்து, “நல்ல முன்னேற்றம்” என முயற்சியை தொடர்கிறார். இந்தியாவும் இலங்கையும் மோதும் கிரிக்கெட் போட்டி டிவியில் நேரடி ஒளிபரப்பாக, எவர் எந்த அணியை ஆதரிக்கிறார்கள் என டிவிக்கு வெளியே மற்றொரு களியாட்டம் நிகழ்கிறது.

மூத்த அகதியுடன் சேர்ந்து இளைய அகதிகள் மது அருந்தியபடி பாடுகிறார்கள். ஆடுகிறார்கள். கைப்பேசியை நோண்டுகிறார்கள். டிவியில் ஃபேஷன் ஷோ பார்க்கிறார்கள். பள்ளி மாணவிகளின் பின்னே அலைகிறார்கள். மீண்டும் குடி. மீண்டும் டான்ஸ். இளமையின் வேகத்தில் கதை நகர்ந்தாலும், இந்நாவலின் நோக்கம் பிடிபடாமல் திணறும் கணத்தில் அறிமுகமாகிறார்கள் வாசனின் தாயும் தந்தையும். இழப்புகள், துரோகங்கள், ரணங்கள், ரத்தங்கள், பலிகள், வலிகள், மற்றும் கொடுங்கனவுகளை சுமந்தலையும் ஈழ அகதிகளின் பிரதிநிதியாய் வருகின்றனர் வாசனின் பெற்றோர். பெருங்கடலாய் பொங்கி வாழ்ந்த நிலத்தை பிரிந்து, குப்பிக்குள் சிறு துளியாய் சுருங்கி சீரழிகிறது அகதிகளின் வாழ்க்கை. தந்தையை ஆம்புலன்ஸில் வைத்து வாடகை வீடு மாற்றுவது, காவல் நிலையத்தில் அகதிக்கான காகிதங்களுக்கும் அனுமதிக்கும் அலைவது, மருத்துவரையும் முடி திருத்துபவரையும் வீட்டுக்கே அழைத்து வந்து தனது நோயாளி தந்தையை கவனிப்பது என வாசனின் பாத்திர படைப்பு மிளிர்கிறது. தந்தையின் மூத்திரப் பையில், சிறுநீரை விட குருதியின் அளவு கூடிக் கொண்டே போவதை கண்டு, செய்வதறியாது திகைத்து நிற்கும் வாசனின் கையறு நிலை, யதார்த்தத்தின் குரூர முட்கள் கிழித்த கீறல்களால் நிறைந்தவை.

எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் ஈழப் போராட்டத்துக்கு கிடைத்த உதவிகளும் பயிற்சிகளும் ராஜிவ் காந்தி இறந்த பிறகு திசை மாற, ஈழ யுத்தம் உச்சத்தை அடைந்த போது கருணாநிதியின் ஆட்சி ஒன்றிய அரசுடன் இணைந்து எடுத்த நிலைப்பாடுகள் வேறாக, இன்று இந்த நாவலில் அகதிகளின் வாழ்க்கைப் போராட்டம் எம்ஜிஆர் நகருக்கும் கே.கே நகருக்கும் இடையே பகடையாய் உருளும்படி ஆனது விதியின் விசித்திர விளையாட்டு. இந்த விளையாட்டின் விசித்திர விதிகளை எவர் நிர்ணயிக்கின்றனர்? நடப்பவை யாவற்றுக்கும் சாட்சியாய்  நாவல் முழுவதும் வருகின்றது ஒரு இலவ மரம். இலவு காத்த கிளியாய் காத்திருக்கின்றனர் இளைய அகதிகள். சட்டைக்குள் மறைக்கப்பட்ட பனியனில் புகைப்படமாய் புழுங்குகிறார் சே குவாரா. ஒரு அகதியின் சாவு ஊர்வலத்தில் யார் வருகிறார்களோ இல்லையோ, மழை வந்து ஈரத்தை அள்ளித் தெளிக்கின்றது. வாசல் கோலத்தின் மீது உதிர்ந்த முருங்கை பூக்களையும், முருங்கை மரத்தின் மீது மாட்டி வைத்துள்ள ரப்பர் செருப்பையும் காண்பித்துவிட்டு , தாயகத்தின் பரந்த பசுமையான  தோட்டத்தின் நினைவுகளில் மூழ்கி பெருமூச்சு விட்டபடி, அக்கனவுகளை அயல் நிலத்தில் நனவாக்கும் நம்பிக்கையுடன் நகர்கிறது கதை. நாவலில் பெண் அகதிகளின் குரல்கள் பெரிதாக ஒலிக்கவில்லை. அவர்களது தரப்பும் சற்று வலுவாக அமைந்திருந்தால் நாவலின் சமநிலை சிறப்பானதொரு உச்சத்தை சென்றடைந்திருக்கும்.

மிகச் சிறந்த நாவல்கள் அதன் தனித்தன்மைகளால் நினைவில் வைத்துக்கொள்ள படுகின்றன. மீண்டும் பல முறை வாசிக்கவும் விவாதிக்கவும் படுகின்றன. பொன்னியின் செல்வனை அதன் கட்டற்ற கற்பனைக்கும் விஸ்தாரமான வர்ணனைக்கும். ஜே.ஜே சில குறிப்புகளை, கொரில்லாவை அதன் கச்சிதங்களுக்கும் குறிப்புகளுக்கும். விஷ்ணுபுரத்தை தத்துவ விசாரணைகளுக்காக. கிழவனும் கடலும் நாவலை அதன் சாகசத்துக்கு. இந்த நாவல் தத்துவ விசாரணைகளின் உள்ளே நுழையவில்லை. ஒவ்வொரு கதாபாத்திரங்களும் பெரிய அளவில் தங்களுக்குள் முரண்பட்டு அகவய உரையாடல்களை நுட்பமாய் பதிவு செய்யவில்லை. இருந்தும் மூத்தஅகதி ஒரு கலைப்படைப்பாக வெற்றியடைவதின் காரணம், இது வாசக பங்கேற்புக்கான களத்தை விரிவுபடுத்தி, வாசக மனங்களில் பல அகதிகளின் கதைகள் முகிழ்வதற்கான விதைகளை தூவியபடி செல்வதனால். தரவுகள் எந்நேரமும் நம்மை வந்து சூழ்கின்ற இன்றைய நவீன கால கட்டத்தில், தெரிந்த தரவுகளால் கட்டமைக்கப்படும் கதைகள் சலிப்பை தருகின்றன. அறியாத புள்ளிகளை படைப்பாளி தொட்டு காண்பித்தால் போதும், வாசிப்பவரால் அப்புள்ளிகளை இணைத்து கோலம் போட்டு விட இயலும். வாசு முருகவேல் தரவுகளை தவிர்த்தபடி மீதரவுகளால் (metadata) புனைவை நகர்த்தி சென்றுள்ளார். ஒரு நாயகனை முதன்மை படுத்தியோ அந்த நாயகனின் சாகச பயணத்தையோ ஆசிரியர் முன் வைக்கவில்லை. மாறாக நாயகத்தன்மை எனும் பிம்பத்தை உடைத்து, அகதிகள் அனைவரையும் நாயகர்களாக்கி அவர்களது வாழ்க்கைத் துண்டுகளை இப்படைப்பு ப்ரதிபலிக்கிறது. எந்தவொரு அகதியும் தன் கடந்த காலத்தை பற்றி அதிகம் பேச விரும்பாத நிலையில், பாத்திரங்களின் அக புற உரையாடல் என்பது ஒற்றனிடம் ரகசியத்தை பிடுங்குவது போன்றது. ஒரு அதிமானுடன் தோன்றி அகதி சமூகத்தை மீட்க போவதில்லை என்பதை புரிந்த கொண்டவர்களாய், அகதிகள் தங்களுக்குள் கை கொடுத்து உதவியபடி முன்நகர்கிறார்கள். அவ்வகையில் இந்நாவலின் பாத்திரப்படைப்பும் , தொகுத்து காட்டி தாவிச் செல்லும் கதை நேர்த்தியும், ஒரு இளைய எழுத்தாளரிடமிருந்து நல்லதொரு முன்னெடுப்பு. 

யுத்தம் ஒரு கொடிய விலங்கு. அதை வசியபடுத்தி அடிமையாக்கும் செயலில், மனிதன் தானும் ஒரு விலங்காக மாறுவதை அறிவதில்லை. ஆயுதமேந்தி போராடும் வீரர்களை மரணத்தால் அடித்து வீழ்த்துகிறது யுத்தம். அது கொள்கைகளை நிர்வாணமாக்கி லட்சியத்தின் எல்லை எதுவரை என சோதிக்க வல்லது. மரணங்களால் சிதைந்து, உறவுகளை இழந்து, அகதிகளை உருவாக்கி, வாழ்வு சிக்கலாகி வீழும் ஒரு தலைமுறையை தாங்க வேண்டிய பொறுப்பும், எதிர்காலத்தை எதிர்கொள்ள வேண்டிய பதற்றமும் ஒருசேர அகதி தலைமுறையை  அழுத்துகின்றது. தப்பிச் செல்பவர்கள், பொறுப்பை ஏற்பவர்கள், நடுவில் ஊசலாடுபவர்கள் என வெவ்வேறு வலிகளை பதிவு செய்கிறது ‘மூத்த அகதி’. ஒரு எரிமலை மீண்டும் வேறு வடிவத்தில் வெடிக்குமா அல்லது செயலிழந்து போகுமா என்பதை இயற்கைதான் முடிவு செய்கிறது. எரிமலைக்கு முந்தைய காலகட்ட நிகழ்வுகளை மு.தளையசிங்கம், தெளிவத்தை ஜோசப் போன்ற எழுத்தாளர்கள் மூலம் நாம் சென்றடையலாம். எரிமலை வெடித்த கணங்களை ஷோபா சக்தி, சயந்தன் ஆகியோரின் படைப்புகள் பதிவு செய்தன. எரிமலை வழிந்தோடும் பாதைகளை  இளைய எழுத்தாளர்கள் அனோஜன் பாலகிருஷ்ணன், அகரமுதல்வன், தெய்வீகன், வாசு முருகவேல் அனைவரும் மிகச் சிறப்பாக எழுதுகிறார்கள். காலத்தின் நீண்ட சரடாக ஆலம் விழுதுகளாய் அனைவரையும் அணைத்துக் கொள்கிறது அ.முத்துலிங்கம் அவர்களின் எழுத்துகள். அவர் கூறியதுபோல் மேலும் பல கதைகளை எழுதியும் வாசித்தும்தான் இலங்கையில் நடந்ததை நம்மால் கடக்க முடியும். 

சென்ற ஆண்டு ஸீரோ டிகிரி பதிப்பகம் நடத்திய நாவல் போட்டியில் இரண்டாம் பரிசை வென்றது ‘முத்த அகதி’. அந்த போட்டியில் நடுவராக பங்குபெற்ற இலக்கிய முன்னோடி ஜெயமோகனின் வரிசைப்பட்டியலில் முதல் இடத்தை வகித்தது. ஒரே நேரத்தில் முதல் இடத்தையும், இரண்டாம் இடத்தையும் பெற்று விட்டதால், அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூலாகவும், தமிழிலக்கியத்தின் ஒரு முக்கிய நாவலாகவும் ஆகிவிட்டது வாசு முருகவேலின்  ‘முத்த அகதி’. 

வெற்றிராஜா

புதுச்சேரியைச் சேர்ந்த வெற்றிராஜா தற்சமயம் இங்கிலாந்தில் வசித்துவருகிறார். மதிப்புரைகள், விமர்சனம், புனைவுகள், அல்புனைவுகள் என்று பரந்த தளத்தில் எழுதிவருகிறார்.

2 Comments

  1. வெற்றிராஜாவின் மூத்த அகதி பற்றிய விமர்சனம், நாவலைப் படிக்கவும், அதைப் பற்றி மேலும் அறியவும் வாசகர்களுக்கு நிச்சயம் உதவும். பல வாசகர்களால் விரும்பப்படும் மற்ற முக்கியமான நாவல்களுடன் இந்த நாவலை அவர் ஒப்பிட்டுள்ளார். இலங்கைத் தமிழ் அகதிகளின் பரிமாணத்தின் மூலம் ஒவ்வொரு பாத்திரத்தின் முக்கியத்துவத்தையும் அவர் விவரித்திருந்தார். உதாரணமாக நாவல் கே.கே.நகர் மற்றும் எம்.ஜி.ஆர் நகரில் நடந்த சம்பவங்கள் மற்றும் நிகழ்வுகளை மேற்கோள் காட்டுவதன் மூலம், எம்.ஜி.ஆரும் கலைஞரும் இலங்கைத் தமிழ் அகதிகள் பிரச்சினையை எவ்வாறு ஆதரித்தார்கள் மற்றும் பார்த்தார்கள். இந்த அருமையான விமர்சனத்தை உருவாக்கும் உங்கள் முயற்சிக்கு வெற்றி ராஜாவைப் பாராட்டுகிறேன். குறிப்பிடத்தக்க நாவல்களுக்கு இதுபோன்ற விமர்சனங்களை தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்

  2. அன்புள்ள வெற்றிராஜா
    கதையைப் படிக்கும் முன்பே தங்கள் கட்டுரை அந்த கதையை பற்றி ஒரு பரவசத்தை உண்டாக்கி விட்டது…
    இப்போது நாள் தோறும் கடல் போல் குவிந்து வரும் கதைகளில் இது போன்ற முத்தாய்ப்பான கதையை தேர்ந்தெடுத்து அதை படிக்க தூண்டும் கட்டுரை எழுதியதற்கு மிக்க நன்றி🙏

உரையாடலுக்கு

Your email address will not be published.