நெருங்கின பொருள் : வெற்றிராஜா

‘வேண்டுவன’ என தலைப்பிட்டு, பாரதியின் கையெழுத்தில், ‘மனதில் உறுதி வேண்டும்’ என்று துவங்கும் பாடல், கைபேசியில் ஒரு செய்தியாக வந்து இருளில் ஒளிர்ந்தது. மகாகவியின் கையெழுத்தும், சொற்களை பிரித்து பிரித்து அவர் எழுதியிருந்த விதமும் வசீகரிக்க, வரிகளை உச்சரித்து வாசிக்கையில் அது ஒரு கானமாகவே மனதுள் ரீங்கரித்தது. கவிதைக்குள் சறுக்கி சுழன்று ஊஞ்சலாடிய மனம், ”நெருங்கின பொருள்” என்ற வாக்கியத்தில் மீண்டும் மீண்டும் சென்றமர்ந்தது. ”நெருங்கின பொருள் கைப் பட வேண்டும்”. இந்த வாக்கியம் ஒரு ஆப்த வாக்கியமோ? என்ன சொல்ல வருகிறார் பாரதி? பொம்மையை விரும்பும் குழந்தையாய், பணத்தை விழைகின்ற வியாபாரியாய், உன்னதத்தை தேடும் கலைஞர்களாய், நாம் விரும்பும் பொருள் ஒன்றை நோக்கி நெருங்கி செல்கையில் அது கைக்கு கிடைக்க வேண்டும் என்கிறாரா? அதை எந்த சாதாரண கவிஞரும் சொல்லி விட இயலும். பாரதி மகாகவியாயிற்றே. அவர் கூறுவதை புரிந்து கொள்ள நாம் அவரிடம் சரணடைந்து, அவரது உலகினுள் நுழைய முற்பட வேண்டும். நமது அற்ப கூடாரங்களை நோக்கி பாரதியை இழுத்தல் பயனற்றது.

பாரதி பன்மொழி வித்தகர். அவருக்கு உலக இலக்கியங்கள் பரிச்சயமுண்டு. காசி கங்கை நதிக்கரையில் வேதங்கள் பயின்றவர். பகவத் கீதைக்கு அவர் எழுதிய தமிழுரை இன்றும் தேடி வாசிக்கப்படுகின்றது. தான் கற்றதையும் பெற்றதையும் தமிழர்களுக்கு தமிழ் மொழி வழியே அளித்து விட வேண்டுமென்ற ஆவல், அவரது எல்லா படைப்புகளிலும் எதிரொலிக்கிறது. அந்நிய படையெடுப்புகளால் நமது அறிவுத்தரப்பு தேங்கி நின்றுவிட, கல்வியறிவு கிடைக்காமல் அடித்தள சமூகம் அடிமைகளாய் அவதிப்பட்ட காலகட்டத்தில் எழுதியவர் பாரதி. வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவில் சுதந்திரத்துக்காக போராடிய மக்கள், கவிதைகளை இலக்கியத்தை ஆடம்பரமாக நினைத்திருக்க கூடும். அதனால்தான் என்னவோ பாரதி சொற்களை வைத்து சிலம்பாட்டம் ஆடாமல், வார்த்தை குப்பைகளில் உருண்டு புரளாமல், களத்தை புரிந்துகொண்டு போரிடும் வீரன் போல, தனது கவிதைகளை பெரும்பாலும் சூட்சும மந்திரங்களாக, ஆப்த வாக்கியங்களாக கட்டமைத்து மக்களுக்குள் செலுத்தியிருக்கிறார்.

‘’காக்கை சிறகினிலே நந்தலாலா’’ பாடலை எடுத்து கொள்வோம்.
காக்கை சிறகினிலே நந்தலாலா – நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா – நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா
கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா – நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா – நின்னை
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா
ப்ருகதாரண்யக உபநிடதத்தில் ”அஸதோமா ஸத் கமய, தமஸோமா ஜ்யோதிர் கமய, மிருத்யோர்மா அமிர்தம் கமய” எனும் மந்திரத்தை ”தீமையிலிருந்து நன்மைக்கு, இருளிலிருந்து ஒளிக்கு, மரணத்திலிருந்து மெய்மைக்கு’’ என்று பொருள் கொள்ளலாம். மானுட மரபும், பண்பாட்டு வளர்ச்சியும், கலை இலக்கியம் யாவுமே ”இருளிலிருந்து ஒளிக்கு” என்ற உன்னதத்தில் செயல்பட்டு, நம் சிந்தனையை செப்பனிட்டு, ஒரு மேம்பட்ட சமூகத்தை நோக்கி முன்னேறுதலையே இலக்காக கொண்டுள்ளது.

மகாபாரதத்தில் கௌரவர்களின் தந்தை திருதராஷ்டிரன் குருடர். இருட்டில் வாழ்பவர். குருக்ஷேத்திரத்தில் நிகழும் யுத்தத்தை அவரது ஆலோசகர் சஞ்சயன் நேரடி ஒளிபரப்பு செய்வார். போர்க்களத்தில் சண்டையிடுவதை நிறுத்திவிட்டு அர்ஜுனன் குழப்ப இருளில் மூழ்கி கிருஷ்ணனை நோக்கி சந்தேக வினாக்கள் தொடுக்கிறான். அப்போது பகவான் கிருஷ்ணர் அருளுகின்ற பகவத் கீதையின் பதினெட்டு அத்தியாயங்களின் கட்டமைப்பும் ”இருளிலிருந்து ஒளிக்கு” என்ற ரீதியில்தான் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது.

எத்தனையோ பறவைகள் இருக்க, இந்த கவிதையை காக்கையின் சிறகிலிருந்து துவங்குகிறார் பாரதி. சிறகின் நிறம் இருள், குழப்பம், அஞ்ஞானம் போன்றவற்றை குறிப்பிடுகிறது. அங்கிருந்து ஒரு பயணம் துவங்குகிறது. கண்ணால் பார்த்து, மரங்கள் போல மௌனமாய் தவங்கள், தியானங்கள் செய்து, செவிக்கு மந்திர ஒலிகளை உணவிட்டு, அக விசாரணைகள் செய்து, தீயை ஸ்பரிசித்து, கடவுளை தரிசித்து ஒளியுடன் நிறைவடைகிறது. ஆரம்ப வரிகளில் மூன்று முறை ”நின்றன்” என எழுதிய பாரதி, கடைசி வரியில் கடவுளை நெருங்கியவுடன் ”நின்னை” என்று உரிமையுடன் ‘டா’ போட்டு அழைத்து விடுகிறார். (‘சொல்லடி சிவசக்தி’ என்று அவர் கடவுளை ‘டி’ போட்டு அழைப்பதும் உண்டு ). ஒரு எஜமான் அல்லது மன்னர்களுக்கு தரப்படும் மரியாதை கலந்த விலகல், ”தோன்றுதையே” என்றும் ”நின்றன்” என்றும் கவிதையின் துவக்கத்தில் கொடுக்கப்படுகின்றது. ஆத்மாவுக்கும் பரமாத்மாவுக்கு நடுவே இருக்கின்ற இடைவெளி கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து, ‘அகம் ப்ரம்மாஸ்மி’ அதாவது ‘நான் கடவுள்’ போன்ற ஒரு கணத்தை, ‘நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா’ என்று பரவசத்துடன் பதிவு செய்து விடுகிறார்.

கடவுளுக்கும் மனிதர்களுக்கும் நடுவில் இருப்பவர்கள் கவிஞர்கள். மானுடத்தை இறைவனடிக்கு சென்று சேர்க்கும் பாலமாக செயல்படுவதே கவிதை. அதிலும் மகாகவி பாரதி எந்நேரமும் தனது கவிதைகள் மூலமாக கடவுள் மற்றும் மனிதர்களோடு தொடர் உரையாடல்களை நிகழ்த்திக் கொண்டேயிருக்கிறார். மக்களை நோக்கி ‘’கேளடா மானிடவா! எம்மில் கீழோர் மேலோர் இல்லை’’ என்று கூறி விட்டு, சட்டென்று கடவுள் பக்கம் திரும்பி ‘’வல்லமை தாராயோ, இந்த மானுடம் பயனுற வாழ்வதற்கே’’ என வேண்டுகிறார். பாழாய் போன சமூகம் தன்னை அங்கீகரிக்க மறுத்தாலும், சமூகத்துக்காக வாதாடும் வக்கீல் போல ஜில்லா கோர்ட், உயர்நீதி மன்றம், சுப்ரீம் கோர்ட் சென்று சிறிய கடவுள், பெரிய கடவுள் என அத்தனை கடவுள்களின் முன்பாக நின்று, குரலற்றவர்களுக்காக குரல் கொடுக்கிறார். அதே சமயம் தெய்வம் தனக்குள் புகுந்து சன்னதம் கூறுவது போல (Poetic Utterance) , அந்த தெய்வத்தின் குரலையும் சமூகத்தை நோக்கி வீசுகிறார். பாரதியின் ஒவ்வொரு சொல்லும் ஒரு விதை. அவை நமக்குள் விருட்சமாக, அர்த்தங்கள் கிளை விரித்து வளரக்கூடியவை. நமது கதவுகள், ஜன்னல்களை உடைத்து புதியதொரு உலகத்தை காண்பிக்க வல்லவை.

உணவின்றி பசியில் துடிக்கும் நண்பனை கண்டு தவித்து ‘’தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில், இந்த ஜகத்தினை அழித்திடுவோம்’’ என்கிறார் பாரதி. ‘’இனியொரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்’’ என மாற்றத்துக்கு வித்திடுகிறார். பாரதி சிறு வயதில் தன் தாயை இழந்தவர். அன்னையின் நினைவாக அவரிடம் ஒரேயொரு புகைப்படம் மட்டுமே இருந்தது. ஒரு கட்டத்தில் அந்த படமும் தொலைந்து போய் விடுகிறது. அந்த வேதனையில் அவர் எழுதிய பாடல்தான்:

ஆசை முகம் மறந்து போச்சே -இதை
யாரிடம் சொல்வேனடி தோழி
வண்ணப் படமுமில்லை கண்டாய் – இனி
வாழும் வழியென்னடி தோழி?

புகைப்படம் தொலைந்து போனதை, பாடலின் இறுதி வரியில் புலம்புகிறார். உணர்ச்சிகள் கொந்தளிக்கும் கவிஞர் பாரதி. குழந்தைகளுக்காக அவர் எழுதிய பாடல், ஓடி விளையாடு பாப்பா. ஆனால் இந்த பாடல் முழுவதையும் நாம் நமது குழந்தைகளுடன் பேசி விவாதிப்பதில்லை. ஒரு சமூகம் என்பது பலவகை அடுக்குகள் நிறைந்தது என்பதை குதிரை, மாடு, காக்காய் என அழகாக விளக்குகிறார்.

வண்டி இழுக்கும் நல்ல குதிரை
நெல்லு வயலில் உழுது வரும் மாடு
எத்தித் திருடும் அந்தக் காக்காய்
அதற்கு இரக்கப்பட வேணும் பாப்பா
சாதிகள் இல்லையடி பாப்பா
குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்

குழந்தையெனும் சிறு புள்ளியில் துவங்கி, வீதிக்குள் இறங்கி, சமூகத்தை சித்தரித்து , பிறகு தேசத்தை காண்பித்து, தன்னறம், சமூக அறம், பிரபஞ்ச அறம் என தாவிச் செல்கிறது கவிதை. பாரதியின் கவிதைகளை வாசித்து வளரும் இன்றைய குழந்தைகள் எதிர்கால சமூகத்துக்கு பெருங்கொடை.

பாரதியின் கவிதைகளை வாசிப்பது அற்புதமான பயணங்களை மேற்கொள்வது போன்றது. ‘’நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே’’ என நம்மை சட்டென்று தரையிலிருந்து வானத்து மேகங்களுக்கு அழைத்து செல்வார். ”மலை இனிது, கடல் இனிது, ஆறுகள் இனியன” என்றபடி தட தட வென ஓடும் நதி நீரை அள்ளி நம் மீது தெளிப்பார். “ஆங்கொரு கல்லை வாயிலில் படியென்றமைத்தனன் சிற்பி மற்றொன்றை ஓங்கிய பெருமைக் கடவுளின் வடிவென்றுயர்த்தினான்” என்று வாயிற் படியாக இருக்கும் கல்லையும், கடவுள் சிலையாக மாறுகின்ற கல்லையும் ஒரே நேரத்தில் காண்பிப்பார். அவருடன் இணைந்து பயணிக்க தயாரென்றால் பேரின்பமும் பரவச அனுபவங்களும் நிச்சயம் உண்டு. அவரது ”மனதில் உறுதி வேண்டும்” கவிதைக்குள் பயணிக்கலாமா?

மனதிலுறுதி வேண்டும்.

மனதில் உறுதி வேண்டும் என ஏன் வேண்டுகிறார்? மனம் உறுதியற்றது என்பதாலா? ஆம், மனம் ஒரு குரங்கு. கிளைக்கு கிளை தாவி நிலையற்று, அலைபாய்ந்து சிதறி கலைவது மனம். உடல் என்பது ஒரு சமயத்தில் ஒரு நாற்காலியில் மட்டுமே அமர்வது. ஆனால் மனம் என்பது ஒரே நேரத்தில் பலவாக பிரிந்து நூறு நாற்காலிகளில் அமரக் கூடியது. குரங்கை கயிற்றால் கட்டுவது போல மனதை உறுதியாய் நிலை நிறுத்த வேண்டும். வேறொரு பாடலில், ‘’அசைவறு மதி கேட்டேன்’’ என்ற வரியும் இதையே வேண்டுகிறது.

வாக்கினி லேயினிமை வேண்டும்.

தியான மனதில் ஏற்படும் மெளனத்தால் வாக்கு சுத்தமாகும். காய் போன்ற கசப்பு மறைந்து, கனி போன்ற இனிமை பிறக்கும். மனதிலும் சொல்லிலும் கனிவு பொழியும்.

நினைவு நல்லது வேண்டும்.

மனம் உறுதியாகி, வாக்கும் இனிமையானால், எண்ணங்களும் நினைவுகளும் நல்லவையாகி விடும். தீயவை தீய்ந்து, தீர்ந்து போய் விடும்.

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்

பாரதி “நெருங்கின பொருள்” என்று ஆத்மாவைக் குறிப்பிடுகிறார்!
ஆத்ம சாக்ஷஆத்காரம் (Self- realisation). நம்முள்ளேயே இருப்பது, மிக மிக அருகில் இருப்பது ஆன்மா. எல்லாமாய் எங்கும் இருப்பதால் அது தான் “நெருங்கின பொருள்”.

மனதிலுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
என்ற படிகளிலே ஏறப்பயின்றால்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்; கைப்படும்.

நெருங்கின பொருள் மீது நமது கை படுமா? அல்லது நெருங்கின பொருளின் கை நம்மை தொட்டு ஆசீர்வதிக்குமா? எல்லாமே ஒன்றாகி போகின்ற அத்வைத நிலையில் எது நிகழ்ந்தாலும் பரவசமே.

கனவு மெய்ப்பட வேண்டும்

யோகிகளுக்கு விழிப்பும் உறக்கமும் ஒன்றே. இரட்டை நிலை அழியும்போது கனவும் மெய்யும் ஒன்றாகி விடுகின்றது. கொடிய கனவுகள் மறைகின்றது. செயல் செயல் என சிந்தனையும் செயலும் ஒன்றாகி இயங்குகின்ற கர்ம யோகிகளுக்கு தொட்டதெல்லாம் வெற்றியே.

கைவசமாவது விரைவில் வேண்டும்

வயதான பின் உடல் சோர்வு, மூளைச்சிதைவு போன்ற உபாதைகள் உண்டு. பெரும் சாதனைகள் இளம் வயதில் தான் நிகழ்கிறது. ஆகவே நாளை நாளை என காரியங்களை தள்ளி போடாமல் இன்றே இப்பொழுதே என செயல்படுவது நல்லது.

தனமும் இன்பமும் வேண்டும்

அறம் தழைக்கும் இடத்தில் பொருளும், இன்பமும் சேர்வது இயற்கையின் நியதி. அறம் பெருக பெருக, தனமும் இன்பமும் பெருகும்.

தரணியிலே பெருமை வேண்டும்

அறம், பொருள், இன்பத்தால் தரணியிலே பெயரும், புகழும் பெருமையும் திகழ்கையில், ஆணவம் நம் கண்களை மறைத்து விட வாய்ப்புகள் உண்டு. ஆணவ மலத்திலிருந்து விடுபட அகக்கண் திறந்திட வேண்டும்.

கண் திறந்திட வேண்டும்

இங்கே கண் என்று அகக்கண்ணை குறிப்பிடுகிறார் பாரதி.

காரியத்தி லுறுதி வேண்டும்

பற்று நீக்கி தொழில், அதாவது செய்கின்ற காரியம் மட்டுமே நம் கையில், அதன் பலாபலன்கள் அனைத்தும் பிரம்மத்தின் கையில் என்று காரியத்தில் உறுதி வேண்டும்.

பெண் விடுதலை வேண்டும்

மண்ணில் விதை முளைப்பது போல கர்ம வினைகள் மீண்டும் மீண்டும் இப்புவியின் மாய வலைகளை நோக்கி இழுக்கக் கூடியவை. பொருள் சார்ந்த இவ்வுலகத்திலிருந்து விடுதலை வேண்டும். இல்லையேல் அருள் சார்ந்த அவ்வுலகம் இல்லை.

பெரிய கடவுள் காக்க வேண்டும்

கடவுள் மனிதர்களை படைத்தாரா? மனிதர்கள் கடவுள்களை படைக்கின்றனரா? மனிதர்கள் உருவாக்கி விளையாடுகின்ற பல்வேறு சிறிய கடவுள்களுக்கு மேலே இருக்கின்ற ஒரேயொரு பெரிய கடவுளிடம் நாம் சரணடைய வேண்டும். அது நம்மை காக்க வேண்டும்.

மண் பயனுற வேண்டும்

‘’மண்ணில் தெரியுது வானம், அதுநம் வசப்பட லாகாதோ?’’ என்று சோர்வின்றி இலக்கை நோக்கி நம்பிக்கையுடன் முன்னேறினால், மண்ணில் மேன்மைகள் நிச்சயம்.

வானகமிங்கு தென்பட வேண்டும்

விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும் நம்மிலும் இருக்கும் ஒளியை உணர்ந்து, தன்னை வென்றால் எந்தவொரு வெற்றியும், வரங்களும், பெருமைகளும் சாத்தியம் என்கிறார் பாரதி.

உண்மை நின்றிட வேண்டும்

நமது முன்னோர்கள் உரைத்த உண்மையை முற்றுமுணர்ந்த பின்னும்
தன்னை வென்றாளும் திறமை பெறாதிங்கு தாழ்வுற்று நிற்போமோ? என்கிறார். அந்த உண்மை என்றென்றும் நின்றிட வேண்டும்.

ஓம் ஓம் ஓம் ஓம்

இந்த கவிதை பாரதியின்
வேதாந்த சிந்தனையின் வெளிப்பாடு.
ஓம். ஓம். ஓம். ஓம். என்று கவிதையின் முத்தாய்ப்பையும் இடுகிறார்.

கார்த்திகை மாதத்தில், அதாவது டிசம்பர் பதினொன்றாம் தேதி பாரதியின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. கார்த்திகையில் தான் திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றி நாம் ஒளியை வழிபடுகின்றோம். தீபத்தை லட்சக்கணக்கானோர் நேரிலும், கோடிக்கணக்கான மக்கள் நேரலையிலும் கண்டு பரவசமடைகின்றனர். அந்த தீபம் வெறும் புறத்தில் ஏற்றப்படும் தீபம் மட்டும்தானா? தீபத்தை காண்போரின் அகத்தில் எரிகின்ற சுடர் முக்கியம் அல்லவா? பாரதி ஓர் பேரொளி. பேரொளியை இருட்டில் ஒளித்து வைக்க முடியுமா என்ன? அதை கோபுரமோ அல்லது மலையுச்சியிலோ வைத்து, சமூகமே பார்க்கும்படி தான் கொண்டாட வேண்டும்.

அக்னி குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்

எத்தனை அழகான கற்பனை. பறவையின் சிறு குஞ்சுகள் மரத்தின் பொந்துகளில் கீச் கீச்சென்று கத்துபவை. பாரதியின் சொற்கள் ஒவ்வொன்றும் ஒரு அக்னி குஞ்சு தான். அவனது சொல் ஒரு பிரபஞ்சத்தையே திறந்து விடுகிறது. கவிதை வரிகளால் அவன் ஏற்றிய தீபம், வாசிப்பவர்கள் அகங்களில் பற்றி பரவி, சுடர் விட்டு எரிகின்றது. கச்சா பொருளாகிய நம்மை சுத்திகரித்து பரம்பொருளை நோக்கி நகர்த்துகிறது. சொல்லப்போனால் பாரதியின் படைப்புகளும் பரம்பொருளும் ஒன்றே. பாரதியை நெருங்குவதென்பது பரம்பொருளை நெருங்குவதற்கு நிகர். ஆம், நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.

வெற்றிராஜா

புதுச்சேரியைச் சேர்ந்த வெற்றிராஜா தற்சமயம் இங்கிலாந்தில் வசித்துவருகிறார். மதிப்புரைகள், விமர்சனம், புனைவுகள், அல்புனைவுகள் என்று பரந்த தளத்தில் எழுதிவருகிறார்.

6 Comments

  1. அன்புள்ள “வெற்றி”ராஜா அண்ணாவுக்கு,

    பாரதியின் சிறந்த கவிதைகளுக்கு உங்கள் அறிவுபூர்வமான விரிவான விளக்கத்திற்கு எனது அன்பான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    ஓவ்வொரு கவிதையின் அர்த்தத்தின் ஆழமான புரிதலும், அதை தெளிவாக வெளிப்படுத்தும் உங்கள் திறனும் இன்று தமிழ் இலக்கிய ஆர்வலர்களை உண்மையிலேயே செழுமைப்படுத்தியுள்ளது.

    உங்கள் விளக்கத்திற்கு முன், இந்த கவிதைகளின் நுணுக்கங்களைப் புரிந்துகொள்வதில் எனக்கு சிரமம் இருந்தது, அவற்றின் உண்மையான அழகு எனக்கு மறைந்திருந்தது. இருப்பினும், உங்கள் அற்புதமான புதிய “உறை” , புரட்சி கவிஞரின் சிந்தனைகளின் ஆழத்தையும் அவர்களின் வார்த்தைகளால் வெளிப்படும் சக்தியையும் அருமையாக வெளிப்படுத்துகிறது.

    கவிஞர் பயன்படுத்திய குறியீடு மற்றும் உருவகங்களின் உங்கள் முழுமையான விளக்கத்திற்கு நான் குறிப்பாக நன்றியுள்ளவனாக இருக்கிறேன். உங்கள் நுண்ணறிவு விளக்கங்களால் கவிதைகளின் உள்ள பொருளின் அடுக்குகளை என்னால் காண முடிந்தது, இப்போது நான் அவற்றை முற்றிலும் புதிய ஒளியில் பார்க்கிறேன்.

    பாரதி மேல் நீங்கள் வைத்திருக்கும் உங்கள் அன்பை உங்கள் ஒவ்வொரு வார்த்தையிலும் காண முடிகிறது. உங்கள் முயற்சிகள் நிச்சயமாக எனக்குள் தமிழ் கவிதைக்கான புதிய ஆர்வத்தைத் தூண்டியுள்ளன, மேலும் நம் மதிப்பிற்குரிய பாரதியின் படைப்புகளில் இன்னும் ஆழமாக ஊடுருவ நான் ஆர்வமாக உள்ளேன்.

    மீண்டும் ஒருமுறை, உங்கள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள பதிவுக்கு மிக்க நன்றி.

    அன்புடன்,
    பாலாஜி

  2. நண்பரே,

    நன்றுரைத்தீர் நன்று. தங்கள் எழுத்தும் கவிதைத்தான். அவர் ஒரு சித்தர் என்பார்கள். அதையும் எள்ளி நகையாடியோர் உண்டு. அப்பப்பா! காளியையே கண்டவர் அவர்.

    இறைவன் புதிரானவன். பொருளுலகில் வாழும் மக்களிடையே இவரை வாழவத்தது புதுமையே. அரிசி பொருக்கி பறவைகளுக்கு கொடுப்பத? இவர் மனைவி எங்கனம் வாழ்ந்தாள்?

    இவரின் எழுத்துக்கள் கொடுக்கும் வீச்சை அருமையாக வெளிப்படைத்தியுள்ளேர்.
    பாராட்டுக்கள்.

    அனந்தநாராயணன்
    கோவை
    தமிழ்நாடு, பாரதம்.
    9944635159.

  3. அன்புள்ள வெற்றி ராஜா, மகாகவியின் பல்வேறு கவிதைகளைப் பற்றிய உங்கள் கருப்பொருளைப் படித்து மெய்மறந்திருக்கிறேன். மகாகவி கவிதைகளை வேதத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் உங்கள் திறமையை நான் பாராட்டுகிறேன். பாரதியின் பிறந்தநாளில் அவருக்கு நீங்கள் அளித்த மிகப் பெரிய பரிசு இது என்று நினைக்கிறேன். நீங்கள் ஆராய்ந்து எழுதிய விதம் எனக்குப் பிடித்திருந்தது மனத்தில் உறுதி வேண்டும் என்ற கவிதையில். இந்த குறிப்பிட்ட கவிதையை வரிக்கு வரியாக உங்கள் பார்வையில் நான் வெவ்வேறு பரிமாணங்களைப் பெற்றேன். நான் பெருமைப்படுகிறேன் இந்த கட்டுரையில் நீங்கள் பயன்படுத்திய உங்கள் சுத்திகரிக்கப்பட்ட மற்றும் துல்லியமான வார்த்தைகள். வெற்றி ராஜா அவர்களுக்கு நன்றிகள் மேலும் வரும் நாட்களில் மேலும் இது போன்ற ஆழமான கட்டுரைகளை எழுத வாழ்த்துக்கள்.

  4. The theme ‘Darkness to Light’ reflects consistently everywhere in the article. In the beginning, the mobile phone pops up from darkness, and the climax Thiruvannamalai Deepam ‘light’. Nicely written and lovely interpretations of Bharathi. Best wishes.

  5. Vettriraja, This is a great masterpiece. I thoroughly enjoyed it. I could see and experience your journey..

    Firstly, I remembered my childhood days. I use to visit my grandparents’ home in a village named ‘Keela Eral’ multiple times a year. ‘Ettaiyapuram’ is 6kms from this village. There is a big cattle market in Ettaiyapuram where cattle are sold in bidding. It’s quite a unique experience to see how they negotiate using towel. Traders from many parts of Tamil nadu come here to sell/buy cattle. My grandfather takes me to kadaiveedhi and get me karuppatti mittai which is quite famous there. One day he took me to Bharathi manimandapam. I relived my past as I read your masterpiece.. holding my grandfather’s hand walking around the neighborhood.. We reached home late that evening. It was a fun experience.

    I don’t have words to explain my feeling as I read the simplified yet deep meaning behind each line in ‘Manadhil Urudhi Vendum’. Even though I have lived and walked around the same neighborhood Bharathi has lived a century ago, before reading this, I could just experience in physical realm. With great determination, you’ve researched and gone so deep beyond one can imagine.. You take the readers from physical realm to Bharathi’s world as you explain ‘Nerungina Porul Kai pada vendum’ and connect us with Paramporul.

    The way you related ‘Ninnai Theendum Inbam Thondrudhada nandalala’ with ‘Naan Kadvul’ was extraordinary. I keep thinking and enjoy the same..

    Enjoyed Vandi Ilukkum nalla kudhirai… meaning

    ‘Aasai muham marandhu poche’ brought tears in eyes.

    It is not just Poets who are in between humans and god. It is people like you who simplify the poetry and make the luxury accessible to everyone are the real ones who connects humans with god.

    It is really a marvelous effort to perform this level of research and write. Happy writing!! I hope you have great things for us in 2024.

  6. மகாகவி பாரதியார் நந்தலாலாவை நின்றன் நின்றன் என்று அழைத்துவிட்டு, கடைசியில் நின்னை என்று சொன்னது போலவே, கட்டுரையின் ஆசிரியர் ஆரம்பத்தில் பாரதியை அவர் அவர் என்று அழைத்துவிட்டு கடைசி பத்தியில் அவன் அவன் என்று எழுதிவிட்டார். கட்டுரை சிறப்பாக உள்ளது. வாழ்க பாரதி. வாழ்த்துக்கள் ஆசிரியருக்கு.

உரையாடலுக்கு

Your email address will not be published.