/

அம்மை தழுவக்குழையும் அத்தன்: கமலதேவி

நதியில் விழுந்து மறையும் மழைத்துளிகளைப் போன்று நெல்லை மனிதர்களால் பெருகும் நாவல் கம்பாநதி. நூற்றிபத்து பக்கம் உள்ள இந்தநாவலில் நூற்றுக்கும் மேற்பட்ட மனிதர்கள் வருகிறார்கள். நாவலின் ஒரு சில இடங்களில் ஒரு பக்கத்தில் பத்துமனிதர்கள் கூட வருகிறார்கள். கண்ணாடியில் விரல்களைக் கொண்டு வரையும் ஒரு ஓவியமுறை உண்டு. அனைத்து விரல்களையும் தூரிகைகளாக மாற்றும் ஓவியமுறை. வரையும் கைழுவதும் அந்தநிறம் இருக்கும். முதலில் கோடுகள், புள்ளிகள், நெளிவுகள் போல பல வடிவங்கள் கண்ணாடியில் எழுந்துவரும். சற்று நேரத்தில் அவை எல்லாம் ஒரு பெரிய இயற்கைகாட்சியின் மரங்கள், புதர்கள், அருவிநீர் என்று மாறும். அதே போல கம்பா நதியை வாசிக்கத்தொடங்கும் போது ஒரு திருவிழா கூட்டத்தை பார்க்கும் திசையழிந்த நிலை முதலில் வந்து நம்மை அலைகழிக்கும். ஆனால் ஒரு பத்துப்பக்கத்திற்குள்ளாகவே அதனுள் சென்று விடலாம். எதார்த்த களம் சார்ந்த நாவல் என்பதால் அத்தனை மனித நெருக்கடியிலும் நாவலுக்குள் நம்மால் நுழைந்துவிட முடிகிறது.

கண்ணாடி ஓவியம் போல இந்த நாவலில் ஒரு அத்தியாயத்தின் துவக்கத்தில் வண்ணநிலவன் திருநெல்வேலியின் ஒரு கதாப்பாத்திரத்தை எடுத்தார் என்றால்  ஒரு தெருவே வந்துவிடுகிறது. ஆண்களும் பெண்களும் குழந்தைகளுடனும் இணைந்து ஊர்களும், திருநெல்வேலியின் குறுக்குத்துறையும், பாலங்களும் அதனதன் இயல்புடன் நம்மை கடந்து சென்று கொண்டே இருக்கின்றன. நாவலின்  இந்த அம்சமே இந்த நூறுபக்கமே உள்ள சிறிய நூலை நாவலாக்குகிறது.

சங்கரன் பிள்ளையை தெற்கு புதுத்தெருவின் வாகையாடி முக்குத்திருப்பத்தில் நள்ளிரவில் சந்திக்கிறோம். குறுக்குத்துறையின் ஈசானமடத்தில் நிலா வெளிச்சத்தில் குடிபோதையில் அவர் தெருவில் கிடக்க நாவலில் இருந்து வெளியே வருகிறோம். ஒரு அமர்வில் வாசித்து முடிக்க வேண்டிய நாவல் என்று நினைக்கிறேன்.

நாவலில் மனிதர்களின் வாழ்க்கை ஒருநதிபோல தொடர்ந்து நகர்ந்து சென்று கொண்டே இருக்கிறது.  தவறெது, சரியெது என்ற விளக்கங்கள் இன்றி அதன் குப்பைக்கூலங்களுடன் சென்றாலும், அந்தபெருக்கில் எதற்கும் பொருள் இல்லாமல், அந்தப்பெருக்கை மட்டுமே தான் கொண்ட பொருளாய் நாவல் கையாள்கிறது. இது நாவலின் சிறப்பம்சம். மனிதத்திரள் மற்றும் அந்தத்திரள் நிலைகொண்டு செயலாற்றும் களம் என்ற இரண்டும் நாவலை கலையம்சம் கொண்டதாக மாற்றுகிறது. தனிமனிதனின் சலிப்பான அன்றாடத்தை ஓரிரு வார்த்தையில் கடப்பதன் மூலம் அது திரளின் அன்றாடமாக மாறுகிறது. திரளின் அன்றாடம் என்பது மடக்குபனைவிசிறியைப் போன்றது. இரண்டு புறமும் சுற்றி மடக்கலாம். ஒற்றையாய் சுருட்டி மடித்து வைக்கலாம். இருபுறமும் சிறகுகளைப்போல விரித்து இணைக்கலாம். இந்த சாத்தியங்களை நாவல் தருகிறது. இதில் எதுவும் ஔித்து வைக்கப்படவில்லை. தொட்டு தொட்டு செல்பவற்றை நாம் விரித்துக்கொள்ளும் சுவாரஸ்யத்தை நாவல் நமக்கு அளிக்கிறது. படைப்பு கோரக்கூடிய கூரிய கவனத்தை நாம் அளித்தாக வேண்டும். ஒரு வரியை தவறுதலாக விட்டோம் என்றால் ஆனித்திருவிழாவையோ,சண்முகம் அத்தையையோ, கீழப்புதுத்தெருவையோ இழந்துவிடலாம் என்ற சாத்தியம் நாவல் வாசிப்பை தீவிரமாக்குகிறது.

தாமிரபரணி நாவல் முழுக்க நம்முடன் ஓடியும் நடந்தும் உடன் வந்து கொண்டிருக்கிறது. கோடையில் தாமிரபரணியின் சித்திரம் வாசித்தப்பின் மனதில் நிற்கிறது. ஆண்களும் பெண்களும் அதிகாலையில் குளிப்பதற்காக ஆற்றை நோக்கி வந்துகொண்டே இருக்கிறார்கள். அங்கிருந்து ஒவ்வொருவரின் முழு வாழ்க்கையும் ஒரு நான்கு ஐந்து வரிகளில் கண்முன்னே வந்துவிடுகிறது. நமக்கு தெரிந்த மனிதர்களைப் பற்றி ஒருவர் பேசுவதப்போலவே வண்ணநிலவன் இயல்பாக தாமிரபாரணியின் மக்களின் வாழ்க்கைபாடுகளை நம்மிடம் சொல்கிறார்.

இந்த சின்னஞ்சிறு நாவலுக்குள்  திருநெல்வேலி அதன் நெருக்கடியான சந்துகளுடன், அங்கனத்து வீடுகளுடன் ஒரு சித்திரம் போல விரிகிறது. தாமிரபாரணியை நோக்கிச்செல்லும் அதிகாலை திருநெல்வேலி மனத்திற்கு நெருக்கமாக உள்ளது.

1979 ல் நாவல் வெளியாகியிருக்கிறது. ‘எழுபதுகளின் திருநெல்வேலியும் அதன் மனிதர்களும்’ என்று நாவலை சொல்லலாம். ஆனால் கம்பா நதி என்ற தலைப்பு அப்படி சொல்லவிடாமல் நாவலை இன்னொரு தளத்தில் நிற்க வைக்கிறது. கம்பாநதி என்ற நதியின் நினைவாக நிற்கும் ஒரு மண்டபம் நாவலில் வருகிறது. சங்கரன் பிள்ளையும் அவரது சகாக்களும்  திருட்டுத்தனமாக கோவில் காட்சி மண்டபத்தில் சீட்டு விளையாடுகிறார். அப்பொழுது தன் சகாக்களுக்கு அந்த நதியைப்பற்றி தன் பால்ய நினைவிலிருந்து சில வார்த்தைகள் சொல்கிறார். கம்பாநதியானது மண்ணுள் மறந்து போன தாமிரபரணியின் ஒரு துணை நதி என்று நம்பப்படுகிறது.  அதை நினைவுபடுத்த ஒரு கல்மண்டபம்.

இன்று ஐப்பசிமாதம் நெல்லையின் காந்திமதி அம்மையின் திருக்கல்யாணம் நடக்கும்போது இங்கு செயற்கையாக குளம் உருவாக்கப்பட்டு அது கம்பாநதியாகக் கொள்ளப்படுகிறது என்பதை நாவலின் துணைவாசிப்பாகத் தேடி அறிந்து கொண்டேன். தலைப்பை பற்றிய ஆவல்தான் காரணம். ஆனால் அந்த துணை வாசிப்பு நம் நாவல் வாசிப்பை வேறுதளத்திற்கு கொண்டு செல்கிறது.

‘பாண்டியராசா காலத்துல கம்பாநதின்னு ஒரு ஆறுபோச்சாம்….அந்த மண்டபத்துக் கீழ பாத்தியன்னா கசங்கணக்கா தண்ணீ கெடக்கும்’ என்று சங்கரன்பிள்ளை சொல்கிறார்.  எனக்கு நம் புராணத்தில் உள்ள சரஸ்வதி நதி நினைவிற்கு வந்தது. எப்படியோ நாம் மறைந்து போன நதிகளைக்கூட நம் நினைவில் பெயராகவோ, இடமாகவோ, சடங்காகவோ பாதுகாத்து வைத்திருந்து இதுவரை கொண்டு வந்துவிட்டோம். இங்கு கம்பா நதிக்கு சாட்சியாக ஒரு குட்டி மண்டபம் நிற்கிறது. அங்கு ஆண்டு தோறும் காந்திமதிஅம்மையின் தவத்தை முடித்து வைக்க நெல்லையப்பர் எழுதருள அம்மை கம்பாநதியில் குளித்து கரை ஏறும் வைபவம் நடக்கிறது.

 ஒருமுறை கம்பாநதியில் வெள்ளம் பெருக்கெடுத்து கட்டுக்கடங்காது வந்த பொழுது அம்மை எழுப்பியிருந்த மண்ணாலான ஈசன் கரையாமலிருக்கும் பொருட்டு அவரை தழுவிக்காத்தாள் என்று புராணகதை சொல்கிறது. அத்தனின்   பெயர் ‘தழுவக்குழைந்தபிரான்’.

 புராணநிகழ்வை நடத்திப் பார்க்க நதியின் மறைவு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். அல்லது அப்படி ஒரு நதி புராணத்தில் மட்டுமே  உருவாகி இருக்கலாம். அன்னையில் தழுவலின் தழும்பை ஏற்ற அத்தனின் உணர்வுபூர்வமான கதையை காலந்தோறும் நடத்திப்பார்க்கும் ஊரில்தான் சங்கரன்பிள்ளை மனைவியான மரகதத்தையும், இரண்டாம் துணையான சௌந்தரத்தையும் உணராதவராக இருக்கிறார்.

இந்தக்கம்பா நதி என்ற படிமமும், நெல்வேலியின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் மனிதர்களும் இணைந்து நின்று என்றென்றைக்குமான சில விஷயங்களை நமக்கு காட்டுகின்றன. சங்கரன் பிள்ளை என்ற வசதியான குடும்பத்துப்பிள்ளை குடும்பத்தின் செல்வத்தை அழிக்கிறார். இது அனேகமாக செல்வ குடிகளில் நடப்பது தான்.

அதிலிருந்து புதுத்தளிராக பாப்பய்யா போன்ற மகன்கள் எழுந்து வருகிறார்கள். வேலைத்தடி நேர்முகத்தேர்வுகளுக்கு அலைந்து திரியும் பாப்பய்யா நாவலின் அந்த காலகட்டத்தின் வேலைத்தேடும் இளைஞர்களின் பொதுபிம்பத்தின் முக்கியமான சரடு. தந்தையின் பொறுப்பின்மையால் திருமணம் நடக்காமல் தள்ளிச்செல்ல வேலைக்குச் சென்று குடும்பத்தின் பொருளாதாரத்தை பிடித்து நிறுத்தும் சிவகாமி ஒரு சரடு. தமிழ்குடும்பங்களின் நசுக்கப்பட்டு எப்போதும் புலம்பிங்கொண்டு, வாழ்க்கைப்பற்றிய பதட்டத்துடன், கணவர்களின் சகிக்கமுடியாத பிழைகளையும் மன்னித்தபடி அவர்களை விட்டு விலகமுடியாத மனநிலையாலும், குடும்ப சூழலாலும் அல்லல்படும் பெண்பாத்திரங்களின் கண்ணீரின் தடம் போல கம்பாநதி நாவலில்  காய்ந்து கிடக்கிறது. சிவகாமி இந்த பாத்திரங்களுக்குள் இருந்து எழும் மாற்று பெண்பிம்பம். ஆண்களுக்கான திருநெல்வேலியும், பெண்களுக்கான திருநெல்வேலியும் நாவலில் அழகாக வந்திருக்கிறது. அறைவீட்டின் மணம் நாவல் முழுக்க வீசுகிறது.

கண்ணன் என்ற உடல்நலம் குன்றிய குடும்பத்தின் முத்தமகன் கதாப்பாத்திரம் போல சிறிய பாத்திரங்கள் நாவல் முழுக்க நிறைந்திருக்கிறார்கள். சினிமா மக்களின் பொதுவான மனவிடுதலைக்கான இடமாக இருப்பது நாவல் முழுக்கவே அங்கங்கே சொல்லப்பட்டிருக்கிறது. பெண்கள் மாவரைக்கப்போடுவதும், தண்ணீர் பிடிக்க செல்வதும், ஆற் றுக்கு கும்பலாக கதை பேசியபடி  சென்று வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். சிவகாமி போன்ற சில பண்கள் வேலைக்காக வெளியேற தொடங்கிய மாறுதலிற்கான காலக்கட்டம் இயல்பாக நாவலில் வருகிறது.

சிவகாமி கோமதி போன்று  திருமணத்திற்கு காத்திருக்கும் பெண்களும், மரகதம் போன்று கணவர்கள் சரியில்லாத பெண்களும், சௌந்திரம் போன்ற தடுமாற்றம் உள்ள பெண்களும் வெள்ளைமடத்தாட்சி போன்று மற்ற பெண்களை அரவணைக்கும் வயோதிக பெண்களும், கணவனை இழந்த சங்கரவடிவு போன்று ஆதரவின்றி முதுமையை நெருங்கிக்கொண்டிருக்கும் பெண்களும், நீலா போன்ற குழந்தைகளும் நாவலை நிறைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஏக்கங்களுடன், கண்ணீருடன், இயலாமைகளுடன் நடக்கும் பெண்களின் ஆற்றை நோக்கிய காலடித்தடங்கள் நாவலில் நிறைந்து கிடக்கிறது. குழாய் பம்பில் நீர் அடிக்கும் சத்தம் எப்போதும் நாவலின் அடிநாதம் போல கேட்டுக்கொண்டிருக்கிறது.

ஆற்றுக்கு குளிக்கச்செல்லும் ஒரு பெருங்கூட்டமாக ஆண்கள் அறிமுகமாகிறார்கள். அவர்களின் கதைகள் ஒரு வரியில் தொட்டுக்காட்டப்படுகிறது. பாப்பய்யாவின் நண்பர்கள் வரிசையாக வருகிறார்கள். படித்துமுடித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்கள். வேலை கிடைத்த நண்பர்களை அடுத்தடுத்து ரயில் ஏற்றி விட்டப்பின் மனபாரத்துடன், தங்களுக்கு எப்போது அமையுமோ என்ற கவலையுடன் ரயில் நிலையத்தில் அவர்கள் நடக்கும் சித்தரம் நம் மனதிற்குள் தங்குகிறது.

அந்த இளைஞர்களின் வெகுளித்தனங்கள் நாவல் நெடுகவும் உள்ளன. நேர்காணலுக்கு செல்லும் போது லாரி வந்தால் வேலைகிடைக்கும். இன்னாரை பார்த்தால் வேலை கிடைக்கும். மழைபெய்தால் வேலைக்கிடக்கும் என்று மனதிற்குள் சிறுபிள்ளைத்தனமான விளையாட்டு எதிர்பார்ப்புகளுடன் நேர்காணலிற்கு கும்பல் கும்பலாக நிற்கும் இளம்பெண்களும் பையன்களும் நாவலை உயிர்ப்புள்ளதாக்குகிறார்கள். ஒரு மழை நாளில் பிரிட்டிஷ்காலத்து கட்டத்தில் நடக்கும் நேர்காணல் நாவலில் அழகாக விவரிக்கப்பட்டுள்ளது. அப்போதுள்ள உளநிலைகள்,சுயநலமாக தன் எண்ணங்கள் மாறுவதை தாங்களே வினோதமாக காணும் இளைஞர்கள் என்று அந்த அத்தியாயம் மனதில் நிற்பது. இடையில் ஒரு மெல்லிய இதழ் விரிக்கப்படாத மலரைப் போன்று பாப்பய்யா கோமதியின் காதல்.

இத்தனை குறைவான பக்கங்களுக்குள் வாயில் புடவை கட்டிய கருப்பு பாசி அணிந்த இளம் பெண்களை,வேட்டிக்கட்டிய ஒல்லியான பையன்களை கண்முன்னால் நாவல் கொண்டு வந்துவிடுகிறது. ஒன்றிரண்டு வார்த்தைகளில் மரகதம் எப்படி இருப்பாள், சிவகாமி எப்படி இருப்பாள், சௌந்தரம் எப்படி இருப்பாள்,சங்கரன் பிள்ளை எப்படி என்று நம்மால் கற்பனை செய்யக்கூடிய அளவிற்கு விவரணைகளை நாவல் தருகிறது. இது நாவலின் ஆகப் பெரிய பலம். பெயர்களாக மனிதர்கள் கடந்து சென்று கொண்டே இருக்கும் இந்த  நாவலில் மனித உருவங்களை சட்டென்று நம்மால் மனதிற்குள் கொண்டு வர முடிவது வண்ணநிலவனின் எழுத்தின் பலம் என்று சொல்லலாம். ஏழுபதுகளின் நாயகநாயகிகள்.

கூச்ச சுபாவமும், மென்மையான நடத்தையுடனும், ஆழத்தில் விளையாட்டுதனமும், ஏக்கங்களுடனும் மௌனியான பாப்பய்யா.  ராணுவத்திற்கு ஆள் எடுப்பதாக கேள்விப்பட்டு செல்கிறான். அங்கு எங்கெங்கிருந்தோ ஆயிரக்கணக்கான ஆட்கள் ஏற்கனவே வரிசையில் நிற்கிறார்கள். அனைவரும் சட்டை பேண்ட்டை கழட்டி விட்டு நிற்பதைக்கண்டு பதட்டம் கொள்கிறான். வரிசையில் நிற்கும் இவனிடம் ஏற்கனவே நிற்பவர்கள் ‘சட்டையெல்லாம் கழட்டிடுங்க’ என்கிறார்கள். சுற்றிலும் பார்த்துவிட்டு ஒரு நிமிச தயக்கத்திற்கு பின் ஆடைகளை கழந்துவிட்டு உள்ளாடையுடன் பாப்பய்யா வரிசையில் நிற்கும் இடத்தில் நாவல் சட்டென்று ஒரு தரிசனத்தை தருகிறது. வாசிக்கும் நம்மை ஒரே சமயத்தில் கண்கலங்கவும், மகிழ்ச்சி கொள்ளவும் வைக்கும் தருணம் அது. வேலகிடைத்து அவசரஅவசரமாக அம்மா கடன் வாங்கிக்கொடுத்த ஐம்பது ரூபாயுடன் பக்கத்துவீட்டு அம்மாக்கள் உதவி செய்ய ராணுவவண்டியில் கிளம்பி சென்ற  பாப்பய்யாக்கள் நம் ஊரில் எத்தனை எத்தனை என்று நினைத்துக்கொண்டேன். தந்தையின் குடியால் அழிந்த  குடும்பத்தின் பிள்ளைகள் உள்ளூரில் என்ன செய்வது என்று தெரியாமல் கிளம்பிச் செல்வதை இன்றுவரை பார்த்துக்கொண்டே இருக்கிறோம்.

மனைவிகளின் துயரங்கள், பெண்மக்களின் வாழ்க்கை, பையன்களின் எதிர்காலம் என்று எந்தக்கவலையும் இன்றி குடி, சீட்டாட்டம் என்று சங்கரன்பிள்ளை  போன்று குடும்பத்தை  அழிக்கப்பிறந்த தந்தைகள் இன்றும் இங்கு ஏராளம். எழுபதுகளை விட இன்று இந்த சிக்கல் தீவிரமாகவே உள்ளது. வாசித்து முடித்தப்பின்  இன்றைக்கான நாவல் என்று நினைத்துகொண்டேன்.

இத்தனைக்கும் நடுவில் வண்ணநிலவன் தன் எழுத்தின் ஈரத்தை காத்து வைத்துள்ளார். சிவகாமி வாசலிற்கு தண்ணீர் தெளிப்பதை பாப்பய்யா காதுகளால் கவனித்தபடி இருக்கும் அதிகாலை,ரெய்னீஸ் ஐயர் தெருவை கோடையில் பார்த்தாலும் அப்போது தான் மழை முடித்த தெருமாதிரி  இருக்கும் என்பது மாதிரியான வர்ணனைகள் நாவலில் வருகிறது. மேலும் மனிதசுபாவங்கள் பற்றிய விவரிப்புகளும் மனதில் படிந்துவிடுகின்றன.

கதிரேசன் மாதிரியான மென்மையான மனதுள்ள ஆண்களால் நாவல் ஈடு செய்யப்பட்டுள்ளதால் நாவல் சமநிலைத்தன்மையுள்ளதாக உள்ளது.

தாமிரபரணி நீரில் தன்நாயகன் கரைந்து விடாமலிருக்க தன் உடல் தடமும் முலைத்தடமும் பதிய அத்தனை அன்னை அணைக்கும் இடம் கம்பாநதி என்று புராணம் சொல்கிறது. மகரகதமும் சௌந்தரமும் கூட சங்ரகன்பிள்ளையை இந்த ‘தீர்த்தத்தில்’ இருந்து அவர் கரைந்து விடாமல் எப்படி காப்பது என்பதை அறியாது அல்லப்படுகிறார்கள்.

பெண்களின் இந்தத் துயரம் என்றும் தீராதது. ‘உலகத்தில் நடக்காததா.. பிழையே இல்லை’ என்று சொல்லித் திரிந்தாலும் பெண்களுக்கு குடி எப்போதும் பிழையாகவே தெரிகிறது. இரவு அகாலம் வரை காத்திருப்பதும், தெருவில் குடித்துவிட்டு கிடக்கும் கணவனை என்ன செய்வது என்று தெரியாமலும் இன்றும் பெண்கள் ஏதோ ஒரு கம்பாநதிக்கரையில் நல்ல கணவர்களுக்கான எதிர்பார்ப்புகளுடனும்,பிறக்கப்போகும் பிள்ளைகளுக்காவேனும் குடியில்லாத கணவர்களுக்காகவும், அவர்கள் தான் சம்பாதிக்கும் பணத்தையேனும் விட்டுவைக்க வேண்டும் என்ற  வேண்டுதல்களுடனும்  காத்திருக்கிறார்கள். அதை  கொஞ்சமேனும் உணர்ந்து கொள்ளும் தேவை இந்த நாவல் எழுதப்பட்ட காலத்தை விட இன்று அதிகமாக உள்ளது.

தனனமனம் ‘தழுவக்குழைந்த பெருமானாக’ இருப்பவர்களுக்காக அன்னைகள் தவமிருந்தார்கள். இனியும் இருப்பார்கள். இங்கே கன்னி என்று குறிப்பிடவே இல்லை என்பதை கவனிக்க வேண்டும். கன்னிகளுக்கு காதலர்கள் மட்டுமே. அன்னைகளுக்கு தான் அத்தனும், மைந்தனும், பெயர்மைந்தனும், மறுமகன்களும் என்று அத்தனை ஆண்களும் அவர்களின் கணக்கிற்குள் வருகிறார்கள். இந்த உலகம் புரக்கப்படுவது அன்னைகளால்…அவர்களின் மனம் தழுவக்குழைபவர்களாக அவர்களின் அனைத்து ஆண்களும் இருக்க வேண்டும் என்பதே அவர்களின் லட்சியக்கனவு.

அம்மையின் மனம் தழுவக்குழைவதனாலயே அத்தன் நமக்கு ஆண்டவன். இந்தத்தளத்தின் புராணக்கனவுகளுடன் இணைந்து நிற்கும் எதார்த்த வாழ்க்கை சித்திரம் கம்பாநதி. கம்பாநதி என்பதே இல்லாமலும் இருக்கலாம். என்றோ மறந்த நதி மண்ணிற்குள் ஊற்றாகவும் ஓடிக்கொண்டிருக்கலாம். மறைந்தும் போயிருக்கலாம். ஆனால் அது என்றும் நம் சமூகத்தின் மனதில் இருக்க வேண்டிய தேவை இருக்கிறது. கம்பாநதிக்காக எழுத்தாளர் வண்ணநிலவன் அவர்களுக்கு என்  பேரன்பு.

கமலதேவி

கமலதேவி தொடர்ந்து தமிழில் சிறுகதைகளையும் கட்டுரைகளையும்ம் எழுதி வருபவர். மாறி வரும் உறவுநிலைகளை விலகல் தன்மையுடன் கதைகளாக்கி வருகிறார். திருச்சி சுற்று வட்டார காவேரிக்கரை கிராமங்களின் வாழ்க்கைச் சித்திரங்களை கதைகளின் ஊடாக அளிக்கிறார்.

தமிழ் விக்கி

உரையாடலுக்கு

Your email address will not be published.