/

சரிவு: மயிலன் ஜி சின்னப்பன்

ஓவியம்: செயற்கை நுண்ணறிவு

அமுசு செத்துப்போய் பதினாறாவது நாள் காரியமும் முடிந்தாகிவிட்டது. செந்திக்கு இப்போதே பேச்சையெடுப்பதுதான் நல்லதெனப் பட்டது. நாள் விட்டுப்போனால் பால்ராசு எப்படி பல்ட்டியடித்துப் பேசுவான் என்பது தெரிந்த கதை. செந்தி, பெரியப்பனையும் பங்காளி வீட்டு பசங்களையும் கூட்டிவைத்து விஷயத்தை சொன்னான். முகங்கள் சங்கடத்தில் கோண ஆரம்பித்தன – சாவு வீட்டில் போய் எப்படி இந்தப் பிரச்சனைக்கு பஞ்சாயத்துப் பண்ண ஆரம்பிப்பது. கூடுமானமட்டும் செந்தியைப் பேசி தாஜாபண்ணப் பார்த்தார்கள் – அவன் முறுக்கிக்கொண்டு நின்றான். அவனுடைய பதைப்பிலும் நியாயமில்லாமல் இல்லை. இப்படியும் அப்படியுமாக பேசிப்பார்த்து, ஒருமனதாக அடுத்த நாள் காலை பால்ராசையும் மில்லுக்கு வரச்சொல்லி பிரச்சனையை முடித்துக்கொடுப்பதென உறுதியானது.

ஒழுங்கையில் நின்றவாக்கில் கால்களைக் கழுவிக்கொண்டிருந்தவனிடம் கோமளா போனக் காரியத்தை விசாரித்தாள். ‘பாத்துக்கலாம்’ என்பதைப் போல தலையசைத்துவிட்டு செந்தி வீட்டுக்குள் நுழைந்தான். சாப்பாடு உள்ளே இறங்கும்வரை வேறு சொல்லில்லை. பரிமாறிவிட்டு பக்கத்தில் உட்கார்ந்திருந்தவளின் மனசு அவனுக்குத் தெரியும். கொழுந்தனுக்குப் பாவம்பார்த்து எவ்வளவு பட்டும் திருந்தாத மனசு. அமுசுக்காகத்தான் இத்தனை காலம் செந்தியும் பொறுத்துப்போயிருந்தான். இப்போது அந்த உசுரும் இல்லையென்றாகிவிட்டது.

“மொவரைய தூக்கிவெச்சிக்கிட்டேதான் இருக்கப் போறியா..?” வழித்தத் தட்டிலிருந்த முருங்கைச் சக்கையை மீண்டும் எடுத்து மென்றபடி கேட்டான்.

“நா என்னத்த தூக்கிவெச்சு என்னவாக போகுது? நீங்க யோசிச்சத செய்ங்க..” கோமளா குவளைகளை அடுக்க ஆரம்பித்திருந்தாள்.

அவளுமே இப்படிப் பேசுவதைத்தான் அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பட்ட அடிகளுக்கெல்லாம் நேரடி சாட்சியாக இருந்தவள். எங்கிருந்து பொங்குகிறது இந்தக் கனிவு. பசி வெயிலெனப் பாராமல் ஓடாய் தேய்ந்து குருவி சேர்ப்பதைப் போல சேர்த்த காசு. போனால் போகுதென அவளிருப்பது அவனுக்கு பொத்துக்கொண்டு வந்தது.

“பாவம் பாக்குற விசயமாடி இது.. ஒரு வா சோத்துக்குக் கூட வழியில்லாம போயிருக்கும் குடும்பம் நா புடிச்சு நிறுத்தலேன்னா.. எதோ நீ கொண்டுவந்தத தூக்கி தாரவாக்குற மாதிரி சொல்ற.. ”

“சாமி.. எதும் சொல்லலய்யா.. நீங்களாச்சு ஒங்க தம்பியாச்சு.. பஞ்சாயத்து பேசுங்க பாடையில போங்க.. வேளாவேளைக்கு வடிச்சு கொட்றதோட வாய கட்டிக்கிறேன்.. எதும் சொல்லல..”

அவள் பேசிமுடிப்பதற்குள்ளேயே செந்தி வேப்பநிழலுக்கு கட்டிலைத் தூக்கிவிட்டான். இளஞ்சூடான அந்தக் காத்துக்கு மூணாவது நிமிசத்தில் கண்ணைக் கொண்டு சொருகிவிடும். இப்போது இமை பொருந்துவேனா என்கிறது. கோமளாவை நினைக்க நினைக்க பொசபொசவென வந்தது. ஏமாந்த சிறுக்கி.. எவளாச்சும் இப்புடி இருப்பாளா.. பொருமிக்கொண்டிருந்தான். அவளைக் கட்டிக்கொண்டு வந்த நாளில் பால்ராசு எட்டாங்கிளாஸ் பெயிலாகி மேற்கொண்டு பள்ளிக்குப் போவதில்லையென மட்டம்போட்டிருந்தான். அத்தாச்சிக்காரியின் அடுப்படியில் ஒத்தாசைக்கு நிற்பான். அப்போது உயிரோடிருந்த அப்பாரோடு கொல்லைவேலைக்குப் போவதாகச் சொல்லிவிட்டு சுந்தாயிக் கிழவியின் தோப்பில் லாக்கடிக்கப் போயிருப்பான். மரமேறி ஒட்டுமாவைத் திருடி கூட்டாளிகளோடு பங்குபோடுவான். விரட்டிவிடும் கிழவி லாக்குக் குழியில் ஒன்னுக்கடிப்பதோடு நிறுத்தாமால் வீட்டு வாசலில் வந்து வாச்சாப்பு போட்டுப்போவாள். அவனைவிட மூணு நாலு வயசு சின்னப்பயல்கலோடுதான் சகவாசமெல்லாம். சோத்துக்கு தேடிப்பிடித்துக் கொண்டுவருவதே பெரும்பாடாக இருக்கும். வந்தாலும் அத்தாச்சி முந்தானைக்குள் ஒளிந்துகொள்வான். கோமளா அத்தாச்சி என்பது எப்படியோ கோமளாச்சி ஆனது அவனுக்கு. கோமளாச்சி மட்டும் வந்து குறுக்கே விழுந்திருக்காவிட்டால், காசாங்குளத்துப் பக்கம் கஞ்சா பீடியிழுத்த நாளில் செந்தியிடம் மிதிவாங்கியே செத்துப்போயிருப்பான். பதினேழு வயசு அப்போது பால்ராசுக்கு. 

அத்தாச்சி சொன்னப் பேச்சுக்கு எதிர்ச்சொல்லில்லாமல், ராமு மேஸ்த்திரியுடன் பால்ராசு செண்ட்ரிங் வேலைக்குப் போக ஆரம்பித்தான். வேலை நாலு மாசத்துக்கூட தாங்கவில்லை. டேஸ்ட்டு பேக்கரியில் ரெண்டு மாசம், ரமணி மெடிக்கலில் இருபது நாள், சாமியப்பா டிராவல்ஸில் ஒரு மாசம் என வைத்த இடமெல்லாம் பாசிக்கால்தான். காட்டுவேலை முடித்தக் களைப்போடு செந்தி வரும்போது இவன் குறட்டையடித்தபடி திண்ணையில் மல்லாந்து கிடப்பான். முறைத்துக்கொண்டு நிற்பவனை கோமளா உள்ளே தள்ளிக்கொண்டுப் போவாள். ‘செருபுள்ளதான.. அதுக்கா பொறுப்பு வரும்’ என்பாள். மூட்டுக்கு மூட்டு தினவெடுத்து வந்து உட்கார்ந்திருப்பவனுக்கு அவனைக் குருத்தோடுச் சேர்த்துவைத்து மிதிக்கவேண்டும் போலிருக்கும்.

ரெட்டைவடச் சங்கிலியையும் ஒரு கொத்து வளவியையும் எடுத்துக்கொடுத்து பால்ராசுக்கு சிங்கப்பூர் காண்ட்ராக்ட் வேலைக்கு டிக்கெட்டெடுக்க வைத்தவள் கோமளாதான். ‘ஊருக்குள்ள வேலன்னுதொட்டுதான் ஓடி ஓடி வந்துருது.. அங்க போயிட்டா கெட்டியா நின்னுக்கும்’ என்றாள். ஆறாவது மாசம் சீனனொருவனை அடித்து கேஸாகிப் போனதற்கு இருபதாயிரம் வெள்ளி நட்டம் கட்டி இவனை அங்கிருந்து மீட்டுக்கொண்டுவருவதே பெரும்பாடாகிப்போனது. செந்திக்கு அத்தோடு ச்சீ என்றாகிவிட்டது. கோமளாவுக்கும் மேற்கொண்டு பேச துணிச்சலில்லை. பால்ராசு சோத்துவேளைக்கு மட்டும் வீட்டுக்கு வருவதும் மத்தநேரத்தில் கம்மாய் கட்டைப்பாலமென கூட்டாளிகளோடு உட்காருவதுமாக காலத்தை ஓட்டினான். நாளுக்கு இரண்டு குளியல். வேட்டி வெளுப்பு இம்மி குறையாது. கழுத்தில் மூன்று சுற்று பாசிமாலை. பார்ப்பவர்கள் செந்தி கையாலத்தான் இவன் சாவப்போறான் என்றார்கள்.

யாரும் எதிர்பாராத ஒரு நள்ளிரவில், பால்ராசு அத்தை மகள் அமுசை அழைத்துக்கொண்டு ஓடிவிட்டான். மாமங்காரன் அடிக்க ஓடிவந்ததில் அப்பா கீழே தள்ளப்பட்டு புறமண்டையில் எட்டு தையல் போட்டதுதான் மிச்சம். பழனியில் வைத்து தாலிக்கட்டி பத்துநாள் சென்று கூட்டிவந்தவனை கோமளாச்சிதான் மறுபடியும் குறுக்கே விழுந்து காப்பாற்ற வேண்டியிருந்தது. தலைக்கட்டு பிரிப்பதற்குள் அப்பா சொத்தைப் பங்குபோட்டு சின்னவனைத் தலைமுழுகத் தயாரானார்.

“இன்னும் அந்த நாயிக்கு சொத்து வேற குடுக்கறதா இருக்கியளா.. சீரழிச்சுட்டு நிக்கிறான் குடும்பத்த..” செந்தி பொரிந்து தள்ளினான்.

“அவன கூடயே வெச்சு ஊட்டி ஊட்டியே உருப்படாம அடிச்சுருவா ஒம் பொண்டாட்டிக்காரி.. பரதேசிப்பயல முன்னாடியே அத்துவிடாமப் போனது தப்பா போச்சு..”

“இத்தினி வருசம் நின்னு வளத்த காட்டுல.. வந்து எட்டிப்பாத்துருப்பானா அங்குட்டு.. இப்ப அந்த சுன்னிக்கு பங்குமசுரு வேற அதுல.. வித்து திண்ணு கூத்தடிச்சிட்டு போவறதுக்கு..”

“அவன் விக்கட்டும்.. தெருவுல போவட்டும்.. நாளைக்கு பிச்சகேட்டு வந்து ஒன் வாசல்ல நின்னா காவயித்து கஞ்சிகூட ஊத்தாம செருப்பால அடிச்சு பத்திவிடு.. நிச்சயம் நிப்பான் வந்து.. பாரு “

சொத்து பிரிப்பதென சேதி போனதும் மாமா சட்டம்பேசி சமப்பங்காக பிரித்துக்கொண்டார். இருக்கும் வீடு செந்திக்கு எழுதப்பட்டது. பதிலுக்கு பால்ராசுக்கு இரண்டு மனைக்கட்டுகள் எழுதப்பட்டன. நஞ்சையைப் பிரிக்கும்போது, போர்செட்டு இருக்கும் பக்கம் செந்திக்கு ஒதுக்கப்பட, அமுசுவின் அப்பா அதற்கான ரேட்டில் பாதியை செந்தி ரொக்கமாக தரவேண்டும் என்றார். செந்தி கையை ஓங்கப்போக ஊர்க்காரர்கள் அவனுக்கு எதிராகத் திரும்பிவிட்டார்கள்.

எல்லாம் முடிந்து எட்டு வருடங்கள் ஓடிவிட்டன. அப்பா மாமா எல்லாம் செத்துப்போய்விட்டார்கள். எதிர்ப்பார்த்தபடியே பால்ராசுடைய பங்குநிலம் தரிசாகி, நாசமாகி, கைமாறி, இப்போது வீட்டுமனைகளாக பிரிக்கப்பட்டுவிட்டது. வித்துத் தின்றே வருடங்களை ஓட்டிவிட்டான். அமுசு கொஞ்சம் கெட்டிக்காரக் குட்டிதான். இவனுடைய விடியாமூஞ்சி வழிவிட்டதுதானே மிஞ்சும்.

சாயுங்காலம் பெரியப்பா வீட்டுக்கு வந்திருந்தார். அடுத்த நாள் பேச்சுவார்த்தையை வைத்துக்கொண்டு கிழடு இப்போது இங்கே வருகிறதென்றால் என்ன வியாக்கியானம் பேசுமென செந்திக்குக் தெரியும். அவர் வந்ததும் கோமளாவின் முகத்தில் உதித்த மலர்ச்சியையும் சேர்த்தே கவனித்திருந்தான். அவரும் டீத்தண்ணி தொண்டையைத் தாண்டும் முன்னரே நீட்டிமுழக்காமல் பேச்சையெடுத்துவிட்டார். அமுசு முகத்திற்குத்தான் பால்ராசுக்கு ஏதோ கொஞ்சநஞ்சமாச்சும் வண்டி ஓடியது; அவளே அல்ப்பாயுசில் போய்சேர்ந்து குடும்பமே நொடித்துப்போன சமயத்திலா சட்டம் பேசவேண்டுமென பெரியவர் விசனப்பட்டார். மற்ற பங்காளியாட்களும் தயங்குவதாக ஒரு மாதிரி மென்னுமுழுங்கி எடுத்துச் சொன்னார். செந்திக்கு இவர்களின் திடீர் கரிசனம் அருவருப்பாக இருந்தது. எதிர்த்து ஏதாச்சும் சொன்னால் சைடுமாத்திப் பேசத் தயங்கமாட்டார்கள். அவனவனுக்கு பின்னாடி ரத்தம்போனாத்தான் தெரியுமென புழுங்கினான். டீ டம்ளரை தரையில் ஓங்கிவைத்ததை கோமளா திசைமாற்றி என்னவோ பேசி இட்டுக்கட்டினாள். பெரியப்பா புறப்பட்டுப்போன நெடுநேரத்திற்கு செந்தி எதுவுமே பேசவில்லை. கோமளா பக்கத்திலேயேதான் உட்கார்ந்திருந்தாள்.

அப்பாவுக்கு கொள்ளிவைக்கக்கூட இந்தப் பயலைச் சிரமப்பட்டுத்தான் கொண்டுவரவேண்டியிருந்தது. சீட்டாடுமிடத்தில் கைக்கலப்பாகி அசால்ட்டுக் கேசில் தூக்கி உள்ளே வைத்துவிட்டார்கள். ஊர்க்காரரான செந்தாமரை போலீசில் இருப்பவர், அவரிடம் யாரோ எப்படியோ பேசி அவனை கொண்டுவந்து சேர்க்கும்வரை சவம் நாலு மணிநேரத்துக்கு காயக்கிடக்க வேண்டியிருந்தது. சாத்தியிருந்த பந்தக்கலியையெடுத்து அடிக்கப் பாயந்த செந்தியின் காலைக் கட்டிக்கொண்டு அமுசு கதற ஆரம்பித்தாள். பால்ராசு எதுவுமே நடக்காததைப் போல அப்பன் பிணத்தைக் குளிப்பாட்டப் போனான்.

எவ்வளவு சொத்தை விற்றிருக்கிறான். பஜ்ஜிக் கடை போட்டு, ஃப்லெக்ஸ் ப்ரிண்ட்டிங் கடை போட்டு, வாடகைப் பாத்திரக் கடை போட்டு அத்தனையிலும் போண்டியானதில் வயக்காடு சல்லிசல்லியாகச் சிதறிப்போனது. உட்கார்ந்து வியாபாரம் பண்ண யோக்கியதை வேண்டுமே. பச்சப்புள்ளையை இடுப்பில் வைத்துக்கொண்டு எண்ணெய்ச்சட்டியின் முன்பு அமுசுதான் வேர்த்து ஊறிக்கிடந்தாள். இந்தத் தூத்தேறியை கடைப்பக்கம் பார்த்ததாகவே கேள்வியில்லை. அமுசையும் சும்மா சொல்லக்கூடாது. இந்தப் பயலைப் பிடித்துக் கெட்டிப்பண்ணிவிடலாமென எப்படியெப்படியோ போராடிப்பார்த்தாள்தான். வியாபாரமெதுவும் சுத்தப்படாமல்போக, கோமளா சொல்லிக்கொடுத்துதான் சீட்டுப் பிடிக்க ஆரம்பித்தாள். அவளுடைய முகராசியோ மிச்சமிருந்த புண்ணியமோ.. ஓரளவுக்கு அதுதான் அந்தக் குடும்பம் மண்ணாகிவிடாமல் காபந்து பண்ணியது. ரெண்டே வருசத்துக்குள் சுத்தலுக்கு விடும் வட்டத்தை பெருசாக வளைத்துப் பிடித்திருந்தாள். அதுதான் இப்போது வினையாகியும் நிற்கிறது.

சீட்டுப் பிடிப்பதும் வட்டிக்கடன் கொடுத்துவாங்குவதுமாக இருந்த அமுசு காசுப் புழக்கத்திற்கு அவ்வபோது செந்தியிடம் கைமாத்து வாங்கிக்கொள்வாள். மூணு வட்டிக்கு வெளியே போவதை ஒன்னு ஒன்னரையென வைத்து செந்தியிடம் திருப்பிக்கொடுப்பாள். அத்தான்தானே என நாள் தப்பமாட்டாள் – வட்டியோ அசலோ தேதிக்கு வந்து நிற்கும். செந்திக்கு அதுதான் அச்சாரம். அவனுக்கும் மூணு லட்சம் அஞ்சு லட்சமென காசு சுத்தலுக்குப் போவதும் வருவதுமாக இருந்தது. அமுசு ஒத்தையாளாக எல்லாத்தையும் கணக்காக செஞ்சுவர, பால்ராசுக்கு டீக்கடை சாராயக்கடையென குந்தியெழுவது செளகரியமாக இருந்தது.

ஒன்றரை மாசத்துக்கு முந்தி அமுசு செந்தியிடம் பதினெட்டு லட்சம் முடியுமாவென வந்து நின்றாள். செந்திக்குத் தூக்கிவாரிப்போட்டது. மறுத்துவிட்டான்.

“சின்னதா போறதோட வெச்சிக்க.. கூட ஆம்பளயும் செரியில்ல.. எங்குட்டாவது குடுத்து ஏமாந்து சந்தியில நிக்காத..”

“யத்தான்.. ஒரே ஆளுக்கு இல்ல.. பிரிச்சுதான் போவுது.. ஒன்னா வந்து நிக்குதுவ.. மனக்கட்டு பத்தரத்த தாறேன்.. அடவு வெச்சு வாங்கிக்குடேன்..”

“குடுத்த சொத்துல அது ஒன்னுத்தான் பாக்கியிருக்கு.. அள்ளிப்போட்டு அதயும் முழுங்கலாமுன்னு முடிவு பண்ணிட்ட..” சிடுசிடுத்தவன் பாதிப்பேச்சில் கெளம்பிவிட்டான். அமுசு கோமளாவிடமும் விசயத்தைச் சொல்லி வைத்தாள்.

“நீயே வேணா குடுத்தான்.. ரெண்டா வெச்சு திருப்பி தாறேன்..” மறுபடியும் சாயந்தரம் அதே பேச்சையெடுத்தாள்.

செந்தி பெருமூச்சு விட்டபடி அமுசுவைப் பார்த்தான். துடுக்கானக் குட்டி. நினைச்சத சாதிக்காமல் விடமாட்டாள். “நானே தாறேன்.. எப்பயும் போல ஒன்னர வெச்சு தா போதும்.. பத்தரத்தெல்லாம் தூக்கிட்டு திரியாத எங்கயும்..”. செந்தி இறங்கிவருவானென கோமளாவே எதிர்பார்த்திருக்கவில்லை. ராத்திரி படுக்கப்போகும்போது அமுசுவின் நீட்டலுடன் அத்தான் அத்தானென அவனை வம்பிழுத்தாள். செந்தியின் வெட்கத்தைப் பார்க்க அவளுக்கு சிரிப்பாக இருந்தது.

அடுத்த நாள் அவள்தான் காசைக் கொண்டுபோய் வீட்டில்வைத்து அமுசுவிடம் கொடுத்தாள். பால்ராசு பக்கத்தில்தான் உட்கார்ந்திருந்தானெனினும் எதற்கு இவ்வளவு காசு என ஒரு கேள்வி கிடையாது. அந்த முகத்தில் அவ்வளவு பணக்கட்டுகளை ஒரே நேரத்தில் பார்க்கும் சிறிய மலைப்புக்கூட இருக்கவில்லை.

“கெட்டியா வெச்சுக்கடி.. ஒங்கத்தானுக்கு மனசு வந்ததே பெரிய அதிசயந்தான்.. கைமாத்துற ஆளு யாரு..” என கோமளா கேட்டுமுடிப்பதற்குள்ளேயே பால்ராசு குறுக்கிட்டு “அதெல்லாம் நா பாத்துக்குறேன் கோமளாச்சி.. இவளுக்கு ஒரு மைரும் தெரியாது.. சும்மா தெரிஞ்சமேரி மிணுக்குவா..” என்றான். கோமளாவும் அமுசுவும் ஒருத்தரையொருத்தர் பார்த்து வாய்க்குள்ளேயே சிரித்துக்கொண்டார்கள். வீட்டில் வந்து இதைச் சொன்னப்போது செந்தி காறித் துப்பிவிட்டு தலையில் அடித்துக்கொண்டான்.

அன்றிலிருந்து சரியாக நாலாவது வாரத்தின் ஓர் அதிகாலையில் தஞ்சாவூர் மீனாட்சியில் கொண்டுபோய் சேர்க்கும்போது அமுசு ஏற்கனவே இறந்திருப்பதாகச் சொல்லிவிட்டார்கள். முந்தைய இரண்டு நாட்களும் காய்ச்சலெனச் சொல்லி வடசேரிமுக்க மெடிக்கலில் அவளே டானிக்கும் மாத்திரையுமாக வாங்கி முழுங்கியிருக்கிறாள். காலையில் பல்லுத்தேய்க்கும்போது ரத்தமாக வந்திருக்கிறது. சுருண்டு படுத்தவளுக்கு மதியத்தில் மூணு முறை வயிற்றுப்போக்கு, அதிலேயும் மூணாவது முறை கருப்பாகப் போயிருக்கிறது. கோமளா ஆஸ்பத்திரிக்கு போகலாம் என்றதற்கு சாவக்கறிதான் ஒத்துக்கல சரியாயிருமென அமுசு மறுத்துவிட்டாள். ராத்திரி மயக்கமாகி பெரியாஸ்ப்பத்திரிக்கு தூக்கிப்போனபோதுதான் டெங்கு காய்ச்சலென சொல்லி தஞ்சாவூருக்குப் போகச் சொல்லியிருக்கிறார்கள். சாவு வீட்டுக்கு வந்தவர்களிடமெல்லாம் நடந்தவற்றை அதே வரிசையில் அழுதபடி சொல்லிக்கொண்டிருந்த பால்ராசைப் பார்க்க பார்க்க கொலைவெறி தலைக்கேறியது.

பேச்சுவார்த்தைக்கு பங்காளியாட்கள் தயக்கம் காட்டியதைத்தொட்டு செந்தியால் ஒரு மாசம் வரை பொறுமையாக இருக்கமுடிந்தது. பால்ராசு எப்பயும் போல சீட்டாட்டம் மரத்தடி கேரம்போர்டு என ஆரம்பித்திருந்ததைப் பார்த்த செந்திக்கு ஆத்திரம் பிடுங்கிக்கொண்டு வந்தது. பிள்ளையைக் கொண்டுபோய் அமுசுவின் அம்மாவிடம் விட்டுவிட்டு மேயக் கிளம்புவதை வழக்கமாக்கியிருந்தான் பால்ராசு.

“அந்தப் பயலா பொண்டாட்டி செத்த துக்கத்துல இருக்கான்.. அவனுக்கு பரிஞ்சுபேசிட்டிருக்கீங்க நீங்க.. ஒங்க வார்த்தைக்குதான் இத்தன நாள் பொறுத்தது.. ஒலுங்கா வந்து நீங்களே பேசிவுடுங்க..” பெரியப்பனிடம் செந்தி எரிச்சல்பட்டான்.

“அவனுக்கு தெரியுமா மொதல்ல நீ அவளுக்கு காசு கொடுத்தது..”

“யோவ்.. ஒன்னய பேச கூப்ட்டதுக்கு நீயே பாயிண்ட்டெடுத்து குடுப்ப போல அவனுக்கு..”

“தெரியாதுன்னு சொன்னான்னு வையி..”

“சொல்லுவான்.. அத்தோட வெட்டி கொல்லைலயே பொதச்சுட்டு போயிருவேன்..”

“பாயாதடா கெடந்து.. பேசி வாங்கிடலாம்..” பெரியப்பா சிரித்துக்கொண்டே சொன்னபோது செந்திக்கு கோவத்தில் வயித்தைக் கலக்கியது.

செந்தியும் பெரியப்பனும் முன்வரிசையில் உட்கார்ந்திருந்தார்கள். பால்ராசுக்கு எதுகுறித்து பேசவந்திருக்கிறார்களென ஏற்கனவே சொல்லப்பட்டிருந்தது. செந்தி ஏற்பாடாக கோமளாவையும் முன்னே நிறுத்தியிருந்தான். பால்ராசு அத்தாச்சிக்கு ஸ்டூல் எடுத்துப்போட்டான். மறுத்துவிட்டு ஓரமாக தரையில் உட்கார்ந்துகொண்டாள்.

கூடியிருந்தவர்கள் பயந்ததற்கு மாறாக, அமுசு பதினெட்டு லட்சம் வாங்கியதை பால்ராசு அவனே முன்வந்து சொல்லிவிட்டான். செந்திக்கு ஒரு மாசம் கழித்து அப்போதுதான் முழுமையான மூச்சே வெளிவந்தது. கோமளா பால்ராசைப் பரிதாபமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

இனி உங்களுக்குள்ள பேசிக்கோங்க என வந்தவர்கள் விலகப்போனபோது பால்ராசு பேச்சைத் தொடர்ந்தான். ஆனால் அமுசு யாராருக்கு வட்டிக்குக் கொடுத்திருக்கிறாளென தனக்குத் தெரியாது என இழுத்தான். சீட்டுக் காசு யாருக்கு எவ்வளவு பாக்கியென்பதை மட்டும் டைரி போட்டு எழுதி வைத்திருக்கிறாள் என்றான். இரண்டு சீட்டுகளுக்கு முழுமையாக அவளே பைசல் பண்ணிவிட்டதாகவும் ஒன்று மட்டும் முடிய இன்னும் ஆறு மாசம் இருப்பதாகவும் நெறைய பேர் ஏற்கனவே தள்ளிவைத்து காசு வாங்கிவிட்டதாகவும் எஞ்சியவர்களுக்கு அவனே எப்படியாச்சும் புரட்டிக் கொடுப்பதாகவும் சொன்னான். கூட்டத்தில் அமுசுவிடம் சீட்டு போட்டிருந்த ஐந்தாறு பேர் இருந்தனர். அவர்கள் கண்களில் தெரிந்த வெளிச்சத்தை செந்தி கவனித்தான்.

“அவ யாருக்கு குடுத்தான்னு தெரிலேன்னா அது ஒம்பாடு.. காசு நா குடுத்துருக்கேன்.. ஒரு மாசத்துல எனக்கு திருப்பிறனும்..”

“அவ்வளோ காசுக்கு எங்கிட்ட இப்ப வழியில்ல..” பால்ராசு மொட்டையாகச் சொன்னாலும் செந்திக்கு அதிலொரு பிடிவாதம் தெரிந்தது. ஏதோ தீர்மானத்துடன்தான் பேசுகிறான் என்றிருந்தது.

“வழியில்லயா.. என்ன சொல்லவர்ற நீயிப்ப..”

“வட்டிக்கு வாங்குன ஆளுக யாராச்சும் வந்து குடுத்தா நானே கொண்டாந்து தந்துடுறேன்.. எங்கிட்ட அத்தினி காசு இல்ல..” இத்தனை நிதானத்துடன் எப்போதேனும் அவன் பேசியதாக அங்கிருப்பவர்கள் எவருக்கும் நினைவில்லை.

செந்தி பெஞ்சிலிருந்து விடைத்துக்கொண்டு எழுந்தான். “அடியொல்க்கக்குடுக்கி.. தெரியும் நீ எங்க வர்றன்னு.. தேச்சுவுட்றலான்னு இருக்கியோ.. வெட்டிப்பொளந்தூட்ரூவேன்…”

“தரலன்னு சொல்லல செந்தி.. எங்கிட்ட இல்ல எதுவும்.. வாங்குனவன் குடுத்துட்டா ஒங்காச வெச்சி நா என்ன பண்ண போறேன்..” பதற்றமேயில்லாமல் சொன்னான்.

அடிக்கத்தாவிய செந்தியை சுற்றியிருந்தவர்கள் பிடித்துக்கொண்டார்கள்.

“அடிக்கவேணா அடிச்சுக்க.. போலீசுக்கிட்ட வேணா புடிச்சு குடு.. என்கிட்ட காசு இல்ல.. வேற என்னத்த நா சொல்றது ஒங்கிட்ட..”

பெரியப்பனும் மூணு நாலு இளவட்டப் பயல்களும் செந்தியை அழைத்துக்கொண்டு போய் தனியே நின்று பேசினார்கள். அங்கிருந்து கூட்டத்துப் பக்கம் அவன் பார்த்தபோதெல்லாம் பால்ராசு அசையாமலும் முகத்தில் எந்தவொரு குறிப்பும் இல்லாமலும் உட்கார்ந்திருந்தான். இவனுக்கு நெருப்பு தலைக்கேறியது.

திரும்பி வந்தவன், “அமுசு அன்னிக்கு காசு கேட்டப்ப மனக்கட்டு பத்தரத்த வெச்சிதான் காசு வாங்கித்தர சொன்னா.. நாதான் கைக்காச குடுத்தேன்.. ஒன்னால இப்ப காசு பொறட்ட முடியாதுன்னா அந்தப் பத்தரத்த வெச்சு வாங்கி குடு..” திட்டவட்டத்துடன் சொல்லி முடித்தான்.

பால்ராசு சில நொடிகளுக்கு எதுவுமே பதில் சொல்லவில்லை. பின்னாடியிருந்த தன் பிள்ளையைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு சுனக்கமான குரலில் ஆரம்பித்தான், “வியாபாரம் பண்ணப்போனதுல, பிரிச்சு வாங்குனதெல்லாம் முழுவிப்போச்சு.. ஒன்னு நிக்கல கையில.. இந்த புள்ளைக்குன்னு இப்ப இருக்க ஒரே சொத்து மனக்கட்டு மட்டுந்தான்.. நா அத வைக்கமாட்டேன்.. சத்தியம் பண்ணி சொல்றன், வாங்குன ஆளுங்க குடுத்ததும் அடுத்த நிமிசம் ஒங்காசு ஒங்கிட்ட வந்துரும்..” மடியிலிருந்த பிள்ளை வெதுக்குவெதுக்கெனக் கூட்டத்திலிருந்த எல்லோரையும் பார்த்து முழித்தது.

பால்ராசு மிகக் கச்சிதமாக ஒரு காரியத்தைச் செய்துமுடித்துவிட்டான் என செந்திக்குத் தோன்றியது. இன்னொன்றையும் செந்தி கவனித்திருந்தான் – அவ்வளவு நேரமும் பால்ராசு கோமளாவின் கண்களைமட்டும் பார்க்கவேயில்லை.

கலைந்துபோகும்போது ஆளாளுக்கு ஒன்றைச் சொன்னார்கள் – சிலர் செந்தியிடம் நேராக, சிலர் முதுகுக்குப் பின்னால்..

‘கொஞ்சம் விட்டுப்புடி செந்தி.. போட்டு நெருக்குனா என்ன பண்ணுவான் அவனும்..’

‘அமுசு இல்லாம இந்த புள்ளய காவந்து பண்ணவே அவனுக்கு வலக்கமில்ல.. பெயாம அவன விட்டுத் தொல.. ’

‘அந்த புள்ள மொகத்த பாரு.. பர்தாம நிக்கிது.. இவனுக்குத்தான் புள்ளையில்ல.. அதுக்கு ஒன்ன செஞ்சதா நெனச்சுக்கிட்டு உடவேண்டியதுதான்..’ – ‘புள்ள இல்லாதவனுக்குத்தான பணத்தாச நெறய இருக்கும், நீ வேற..’

‘இவனுக்கு என்ன காசா இல்ல.. தொலையுது சனியன்.. நல்லாருக்கட்டும்ன்னு நெனச்சுட்டு போவலாம்..’

செந்திக்கு பொழுதுச்சாய்ந்தும் ரோசம் அடங்காமல் கொதித்துக்கொண்டிருந்தது. அத்தனை தலைகளையும் திருகிப்போடவேண்டுமென பரபரத்த கை ஓயவில்லை. என்னவோ ஆகாதது நடக்கப்போகிறதென கோமளா பயந்துபோயிருந்தாள். வெறியேத்திவிட வேண்டாமென வாயைப் பூட்டிக்கொண்டுவிட்டாள். செந்திக்கு ராத்திரிச்சோறு ஒத்தை பருக்கை உள்ளே இறங்கவில்லை. சப்பளாங்கால் போட்டுக்கொண்டு மேல்தொடையை நடுக்கம்போல உதறியடித்துக்கொண்டிருந்தான். வெளியே வானம் உடைத்துக்கொண்டு ஊற்றியபடி இருந்தது. ‘அடிக்கவேணா அடிச்சுக்க.. என்கிட்ட காசு இல்ல’.  அம்முகத்தின் சாமர்த்தியமான அமைதி – செந்தியால் இப்போதும் நம்பவே முடியாதது அதுதான். யோசிக்க யோசிக்க காதுக்கு மேல் விண்ணுவிண்ணென வலி தெறித்தது.

உள்ளே சென்று பேட்டரிக்கட்டையையும் உரச்சாக்கையும் எடுத்துக்கொண்டு வந்தான். கோமளா பதறியடித்துக்கொண்டு எழுந்தாள். அடுப்படிக்குள் போனவன் ஊதாங்குழலையெடுத்து இடுப்பு முடிச்சுக்குள் சொருகிக்கொண்டான். கைவேகத்துக்கு வாகாக ஆப்பிட்டது அதுதான். சாக்கை தலையில் கவுத்துக்கொண்டவன் மழைக்குள் புகுந்து ஓட்டநடை போட ஆரம்பித்தான். கோமளா பின்னாலிருந்து கத்துவதை காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை. கொஞ்சதூரம் ஓடிவந்தவளுக்கு மேற்கொண்டு விரட்ட முடியவில்லை. தலையிலும் மாரிலும் அடித்துக்கொண்டு அங்கேயே உட்கார்ந்துகொண்டாள்.

மின்னலுக்குள் வெட்டி வெட்டி ஓடியவன் பால்ராசுடைய வீட்டில் போய் நின்றான். கதவு திறந்தே கிடந்தது. இவன் போய்சேருவதற்கு ரெண்டு நிமிசத்துக்கு முந்திதான் மின்சாரம் துண்டாகியிருந்தது. பேயிருட்டு. பக்கத்தில் நிற்பவன் பேசுவதுக்கூட கேட்காதளவிற்கு மழையிரைச்சல். பேட்டரிக்கட்டையை வீட்டுக்குள் அடித்துப் பார்த்தான். திறந்துபோட்டு தம்பிக்காரன் எங்கேயோ கூத்தடிக்கப் போயிருக்கிறான். ஆத்திரம் பொங்கிக்கொண்டுவர, ராவோடு ராவாகத் தேடிப்போய் வெட்டவேண்டும் போலிருந்தது. காலுக்குள் வந்து மண்டிய நாயை எட்டி உதைத்தான். திண்ணையில் கிடந்த தட்டுமுட்டு சாமான் அத்தனையையும் அள்ளி இறைத்துவிட்டபோது அவனுக்கு இன்னுமின்னும் அதிகமாக என்னவாச்சும் செய்யணும் போலிருந்தது. வாசலையொட்டிய முன்வரிசை ஓட்டுகளைச் சரித்துவிட்டதில் ஒரு ஓடு காலில் விழுந்தது. வலி அடங்குவதற்குள் பால்ராசு கையில் சிக்கினால் தேவலாம் என்றிருந்தது.

திரும்பும் சமயத்தில் கூசிப்போகும்படியான பளீர் மின்னல் – சுதாரிப்பதற்குள் வேட்டுச்சத்தத்தையொத்த பெரிய இடி. திடீரென வீட்டுக்குள்ளிருந்து பிள்ளை அழும் குரல் கேட்டது. துணுக்குற்று லைட்டை மறுபடியும் உள்ளே அடித்துப்பார்த்தான். அழுகுரல் மெல்ல வாசல் பக்கம் வருவதைப் போலிருந்தது. தூங்கிவிழித்து தேம்பி தேம்பி அழுதபடி அந்த அஞ்சு வயசுப் பிள்ளை கதவருகே வந்து நின்றது. செந்தி வீட்டுக்குள்ளே குறுக்கேநெடுக்கே தேடிப்பார்த்தான். பால்ராசு நிச்சயம் வீட்டிலில்லை. பிள்ளை லைட்டைப் பின்தொடர்ந்து இங்குமங்குமாக ஓடிவந்தது. செந்தி திரும்பி வாசலுக்கே வந்த நொடி, மழை மறுஉடைப்பெடுத்தது. தட்டிச் சரித்துவிட்ட ஓட்டிடுக்கிலிருந்து தண்ணீர் கோக்குமாக்காக ஊத்தியது. நடுக்கிக்கொண்டிருந்தாலும் தண்ணிக்குள் கால்வைக்க பிள்ளை தடுமாறவில்லை. லைட்டு வெளிச்சத்தைப் பிடித்துக்கொண்டு வாசலுக்கு வந்துநின்று அழுகையைத் தொடர்ந்தது. ‘பச்சப்புள்ள பர்தாம நிக்கிது பாரு.. அது மூஞ்சிக்காச்சும் விட்டுத்தொலையுறானா பாரு..’ கூட்டத்தில் அப்பன் மடியில் வந்து உட்கார்ந்த அந்த முகம் எதிரில் வந்தது – பால்ராசு அதைப் பொத்தி உட்காரவைத்துக்கொண்ட பாங்குதான் – பச்சாதாபத்தைக் கோர போதுமான காட்சி. மொத்தமாகச் சுருட்டிச் சாய்த்துவிட்டான். அழுகையொலி லேசாகத் தணிவதைப் போலிருந்தது. அந்த முகத்தைப் பார்த்துக்கொண்டேயிருந்த செந்தி, சட்டென லைட்டை அணைத்தான். பிள்ளை மிரண்டு வீறிட்டுக் கதற ஆரம்பித்தது. இருளுக்குள் நுழைந்தவன் விருவிருவென வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான். மழைச்சத்தத்தில் அழுகையொலி மறையும் தூரத்தை சீக்கிரத்திலேயே எட்டியிருந்தான்.

மயிலன் ஜி சின்னப்பன்

மயிலன் ஜி சின்னப்பன், பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம் என்ற நாவலின் ஆசிரியர். சமகாலத்தில் தொடர்ச்சியாக சிறுகதைகள் எழுதிவருகிறார். இவரது ‘நூறு ரூபிள்கள்’ என்ற சிறுகதைத் தொகுதி பரவலான கவனத்தைப் பெற்றது. கூர்ந்த வாசிப்புக்குரிய படைப்பாளியாக மதிப்பிடப்படுகிறார்.

உரையாடலுக்கு

Your email address will not be published.