அகழ் இருமாத இதழாக ஆரம்பிக்கப்பட்டாலும், காலப்போக்கில் காலாண்டு இதழாக வெளிவந்தது. எமது அழகியல் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தவாறு ஆக்கங்களைத் தேர்வு செய்வதில் உள்ள காறார்தன்மை, விவாதங்களைக் கோரும் நேர்காணலைச் செய்தல் மற்றும் மொழியாக்கங்களைக் கண்டறிதல் என்பவற்றிலுள்ள தாமதம் இதழ்களை பிந்தச் செய்தது. இருப்பினும் இந்த ஆண்டு முதல் மாதம் தவறாமல் இதழைக் கொண்டுவர நாம் உறுதியுடன் முயல்கிறோம்.

ஜனவரி இதழைத் தொடர்ந்து பெப்ரவரி இதழ் தற்சமயம் வெளியாகின்றது. அமெரிக்கவை சேர்ந்த புலிட்செர் பரிசு பெற்ற கவிஞர் சார்லஸ் சிமிக் ஜனவரி 9 அன்று மறைந்தார். இருபத்திற்கும் மேற்பட்ட கவிதை தொகுப்புகள், ஏழு கட்டுரை தொகுப்புகள், ஏராளமான மொழிபெயர்ப்புகள் என வாழ்நாள் முழுவதும் நிறைய எழுதியவர். உலக இலக்கியத்தில், கடந்த ஐம்பது வருடங்களின் மிகச் சிறந்த கவிஞர்களில் ஒருவராக அவர் கருதப்படுகிறார். அவரது  நேர்காணலும், கவிதைகளும் இந்த இதழில் வெளியாகியிருக்கின்றன.

*

சென்னை புத்தகக்கண்காட்சியை ஒட்டி வழமைபோலவே நிறையவே புதிய புத்தகங்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் சிறுகதை தொகுப்புகள், கவிதைத் தொகுப்புகளுக்கு நிகராக நிறையவே நாவல்களும் வெளியாகியுள்ளன.

அதேநேரத்தில் நாவல் எழுத வேண்டும் என்பது ஒரு பொது அழுத்தமாகவும் எழுத்தாளர்களிடம் உருவாகிவருகிறதோ என்ற ஐயமும் வருகின்றது. இரண்டு எழுத்தாளர்கள் சந்தித்துக் கொண்டால் உடனே நாவல் எழுதுகிறீர்களா? என்று கேட்பது இலக்கிய உலகில் ஒரு சம்பிரதாயம். இப்படி சம்பிரதாயமாக யாராவது கேட்க ஆரம்பித்தால் சிலர் கையோடு கேட்டவரை பிடித்துவைத்து,  நாவலின் முழுக் கதையையும் அத்தியாயம் அத்தியாயமாகச் சொல்லி திணறடிக்கும் சம்பவங்கள் கவிக்கோ அரங்கில் நடப்பதாக பாதிக்கப்பட்ட சாட்சி ஒருவர் சொல்லியதையும் கேட்க முடிந்தது. சிறுகதைகள், கவிதைகள் எழுதப்படும் அளவுக்கு நாவல்கள் எழுதப்படுவது குறைவுதான். என்றாலும் இந்த வருடத்தில் பல நாவல்கள் வெளியாகியுள்ளன. நகுலாத்தை, உட் துறைமுகம், பர்தா, தாய்லாந்து, ஆக்காண்டி, அதர் இருள், காந்தப்புலம் என்று இலங்கைத் தமிழ் இலக்கியத்திலிருந்தும் கணிசமான நாவல்கள் வெளிவந்துள்ளன. வரவேற்கப்பட வேண்டிய விஷயம். இவை பற்றிய உரையாடல்கள் தீவரமாக நிகழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எங்களுக்கும் உள்ளது.

சில நாட்களுக்கு முன் ஓர் இளம்வயதிலுள்ள பெண்ணொருவர் தமிழ் இலக்கியவாதிகளை சீண்டும் அல்லது தரக்குறைவாகக்கம் செய்யும் வகையில் காணொளி ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்தக் காணொளியில் இலக்கியம் பற்றி நம் சூழலில் நிலவும் அறிவின்மைதான் வெளிப்பட்டது. ஆனால் இதுபோன்ற நிகழ்வுகளை பல எழுத்தாளர்கள் கனிந்த தந்தை மனநிலையில் எதிர்கொள்ளத் தயாராகி விட்டனர். அப்படி அதைப் பார்க்கக்கூடாது என்றால் பார்க்கலாம்தான். எல்லாமும் சமம் எல்லாமும் பகடிக்கு உட்பட்டது என்ற முதிர்ந்த பார்வைதான் நமக்கு வந்துவிட்டதே. ஆனாலும் இலக்கியம் இதுமாதிரியான ‘டிரெண்ட்’ மனநிலையை எக்காலத்திலும் நம்பி இருந்ததோ அதைத் தொடர்ந்து பயணித்ததோ இல்லை. எப்போதும் எது நல்ல கதை என்ற எளிய கேள்வியை நோக்கியே அது சென்று கொண்டிருக்கிறது. பிரச்சினை என்னவென்றால் இந்த எளிய கேள்விக்கு பதில் சொல்கிறவர்கள் நம்மிடம் ரொம்பவும் குறைவாகத்தான் இருக்கிறார்கள். இன்னொரு பிரச்சினை எதிர்காலத்தில் அப்படி குறைவானவர்களின் குரல் மட்டுமே பொருட்படுத்தப்படும். ஆகவே அந்தக் குரல்களுக்கு செவிகொடுப்பதும் அவற்றுடன் விவாதிப்பதுமே ஓர் இலக்கியவாதியின் முதல் பணி.

இலக்கிய விமர்சனம் என்பதை நாம் ஏதோ கண்டிப்பான வாத்தியார் தேர்வுத்தாளுக்கு மதிப்பெண் அளிப்பது போன்ற ஒன்று என நினைத்து விடுகிறோம். எழுத்து , வாசிப்பு, விமர்சனம் மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய நிகழ்வுகள். ஒன்று இன்னொன்றை பாதிக்கும் தன்மை உடையவை. பரந்துபட்ட வாசிப்பும், விமர்சன நோக்கும் கொண்ட வாசகர் எழுத்தாளரிடம் இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறார். எழுத்தாளர் தன் எழுத்து வாசிக்கப்படும் போது அடையும் உற்சாகம் மற்றும் விமர்சிக்கப்படும்போது அடையும் தொந்தரவு (எரிச்சல்?!) வழியாக மேம்படுகிறார். ஆகவே ஒரு படைப்பைப் பற்றி அசலாக (அது அபத்தமாகவும் இருக்கலாம்) எதையாவது எழுத்தாளிரிடம் சொல்வது அவசியம். பரஸ்பரம் சக எழுத்தாளர்களின் புத்தகங்கள் வெளியாகும்போது, மாறி மாறி தங்களுக்குள் சிறிய பாராட்டுக் குறிப்புகளை குறிப்பிட்ட டெம்பிளேட்டுக்குள் எழுதுவது ஒரு வழமையாக சமூக வலைத்தள சடங்காக நிகழ்வதைத் தாண்டி விரிவான கட்டுரைகள் எழுதப்படுவது குறைந்து செல்கிறது. நம்முடைய இன்றைய சூழலில் குறைந்திருப்பது இதுதான். நூல் வெளியீடு, அவ்வெளியீட்டுக்கு பிரபலங்களை அழைப்பது, வாசகர்களுடன் மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது எல்லாமும் நல்ல விஷயங்கள்தான். அது கொண்டாட்ட மனநிலையையும், தொடர்ந்து எழுதுவதற்கான உற்சாகத்தையும் கொடுக்கிறது. இது மாதிரியான செயல்களால் நூல் விற்பனை கூட சற்று கூடுகிறதுதான். ஆனால் ஆண்டுத் தொடக்கத்தில் வெளியாகும் நூல்கள் பற்றி ஆண்டு இறுதிவரை பொதுச்சூழலில் பெரிய அளவில் விவாதமும் நடப்பதில்லை. பொதுச்சூழல் என்று சொல்லக் காரணம் புத்தகக் கண்காட்சி என்ற பொதுச்சூழலை இலக்கியம் பயன்படுத்திக் கொள்கிறது. ஆகவே புத்தக கண்காட்சிகளில் நூல் வாங்கும் அதே உற்சாகத்துடன் வாசிப்பதும் உரையாடுவதும் நம்முடைய குறைபாடுகளை ஒத்துக் கொண்டு மேற்கொண்டு தேடிச்செல்வதும்தான் இலக்கியச் சூழலை ஆரோக்கியமான ஒன்றாக வைத்திருக்கும்.

ஆசிரியர் குழு – அனோஜன் பாலகிருஷ்ணன், சுரேஷ் பிரதீப், செந்தூரன்

அனோஜன் பாலகிருஷ்ணன்

தமிழில் இளைய தலைமுறைப் படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்க சிறுகதை ஆசிரியர். இரண்டு சிறுகதைத் தொகுப்புக்கள் வெளியாகியிருக்கின்றன. இலக்கிய விமர்சன, மதிப்பீடுகளிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகிறார். தற்போது இங்கிலாந்தில் வாழ்கிறார்.

சுரேஷ் பிரதீப்

தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தொடர்ச்சியாக புனைவுகள், விமர்சனங்கள் எழுதிவருகிறார். அழகியலை முன்னிலைப்படுத்தி எழுத்தாளர்களின் சிறப்பியல்புகளை நுட்பமாக மதிப்பிடுபவர். ஒளிர் நிழல் என்ற நாவலும் இரண்டு சிறுகதைத் தொகுப்புக்களும் வெளியாகியுள்ளன.

செந்தூரன் ஈஸ்வரநாதன்

இலங்கைச் சேர்ந்த செந்தூரன் ஈஸ்வரநாதன் தற்சமயம் நாகர்கோவிலில் வசித்துவருகிறார். இதழியல் துறையில் பணியாற்றிவரும் இவர், பல்வேறு சிறுகதைகளும் எழுதியுள்ளார்.

1 Comment

உரையாடலுக்கு

Your email address will not be published.