/

கவிதை என்பது தனிமனிதனை அவனுக்கு எதிரான அத்தனை விசைகளிடமிருந்தும் காப்பாற்றும் கேடயம்: சார்லஸ் சிமிக்

நேர்கண்டவர் – மார்க் ஃபோர்ட் தமிழ் மொழியாக்கம் - ஜனார்த்தனன் இளங்கோ

கவிஞர் சார்லஸ் சிமிக், யுகோஸ்லோவியாவில் உள்ள பெல்கேரியாவில் மே 9, 1938 அன்று பிறந்தார். அவர் குழந்தைப்பருவம் நாஜி ஆக்ரமிப்பினால் பாதிக்கப்பட்டிருந்தது. அவரது பல முக்கியமான கவிதைகள், அந்த காலகட்டத்து நினைவுகளால் விளைந்தவை. உதாரணமாக “இரண்டு நாய்கள்” கவிதையில் 1944 ம் வருடம் ஜெர்மானிய படைவீரகள் தன் வீட்டை தாண்டி அணிவகுத்து சென்றதை அவர் இவ்வாறு நினைவுகூர்கிறார்:

“பூமி நடுங்குகிறது, மரணம் தாண்டிச்செல்கிறதுவீதிக்கு வந்த குட்டி வெள்ளை நாயொன்று
வீரர்களின்
கால்களுக்கிடையே சிக்கிக் கொண்டது.  ஒரே உதை. சிறகுகள் கொண்டது போல நாய் பறந்தது. அதையே நான் திரும்ப திரும்ப காண்கிறேன்!
சரிந்து வரும் இரவு. சிறகுகளோடு ஒரு நாய்.”

பலமுறை கைதுசெய்யப்பட்டுள்ள சிமிக் -இன் தந்தை, கடைசியில் 1944 ம் வருடம் யுகோஸ்லோவியாவில் இருந்து இத்தாலிக்கு தப்பிச் சென்றார். அங்கு மீண்டும் சிறைபிடிக்கப்பட்டார். போரின் இறுதிக்கட்டத்தில் அவர் விடுதலை அடைந்தபோது த்ரியஸ்டெ நகரில் ஐந்து ஆண்டுகள் வசித்தபின் அமெரிக்கா சென்றார். அதன் பின் அவர் தன் மனைவி மற்றும் இரு மகன்களை விட்டு 1954 ஆம் ஆண்டுவரை பிரிந்திருக்க வேண்டிவந்தது.

செர்பியாவின் தலைநகரான பெல்கிரேட் நகரில் சிமிக் தொடக்கக் கல்வி பயின்றார். போருக்கு பிந்தைய யுகோஸ்லோவியாவில் இருந்து தப்பிக்க பல்வேறு வழிகளை மேற்கொண்ட அவர் தாய் ஹெலன், சிலகாலம் கம்யூனிஸ்ட் அதிகாரிகளால் தன் இரண்டு மகன்களோடு சிறையில் இருக்க நேர்ந்தது. 1953ம் ஆண்டு ஒருவழியாக அவர்களுக்கு பாஸ்போர்ட் கிடைத்தது. பாஸ்போர்ட் ரத்தாகிவிடும் அச்சத்தில், ஹெலென் குடும்பத்துடன் அன்றிரவே பாரிசுக்கு ரயிலில் புறப்பட்டார். பல தடங்கல்களுக்கு பின்னர் அமெரிக்காவிற்கான விசா கிடைத்து 1954ம் ஆண்டு கடல் மார்க்கமாக நியூயார்க் வந்து சேர்ந்தார்கள்.

அவர்கள் குடும்பம், நியூயார்க்கில் ஒருவருட காலம் இருந்து பின் சிகாகோவில் குடியமர்ந்தது. முழு நேர கல்லூரிக்கு செல்ல பணமில்லாததால் சிமிக், சிகாகோவின் சன்-டைம்ஸ் பத்திரிக்கையில் கடைநிலை ஊழியராக பணி புரிந்து இரவு நேர கல்லூரியில் படிப்பை மேற்கொண்டார். 1958ம் வருடம் மீண்டும் நியூயார்க் திரும்பியவர் விற்பனைப் பிரதிநிதி, பெயிண்டர், குமாஸ்தா, பார்சல் கட்டுபவர் என பல வேலைகளில் இருந்துகொண்டே இரவில் படிப்பதும் கவிதை எழுதுவதுமாக இருந்தார்.

1961 ஆம் ஆண்டு சிமிக் ராணுவத்தில் சேர்க்கப்பட்டு இரண்டு வருடம் ஜெர்மனியிலும் பிரான்சிலும் ராணுவ போலீஸ் அதிகாரியாக பணியமர்த்தப்பட்டார். அங்கிருந்து திரும்பிவந்து நியூயார்க் பல்கலைக்கழகத்தில் மொழியியல் படிப்பை முடித்தபின் ஆடை வடிவமைப்பாளரான ஹெலன் டுபின்-ஐ மணந்தார். அவரின் முதல் தொகுதியான “என்ன சொல்கின்றன புற்கள்” 1967-இல் வெளிவருகிறது. 1973-இல் நியூ ஹாம்ப்ஷயர் பல்கலைக்கழகத்தில் அவருக்கு இணை பேராசிரியர் பணி கிடைக்க, கடைசிவரை அப்பணியிலேயே அவர் நீடித்தார்.

அவர் மேல் நம்பிக்கையுடைய பெரும் வாசக பரப்பினைக் கொண்டிருக்கும் சிமிக், வியக்கத்தக்க எண்ணிக்கையில் புத்தகங்கள் எழுதியிருக்கிறார். கவிதை நூல்களும் விமர்சனத் தொகுப்புகளுமாய் எழுதிக் குவித்திருக்கிறார். வருடத்திற்கு ஒரு புத்தகம், ஏன் இரண்டு புத்தகங்கள்கூட அவர் பெயரில் பிரசுரமாகியிருக்கின்றன. அத்துடன் மொழிபெயர்ப்புகளும் செய்துள்ளார்.  வஸ்கொ போப்பா, இவன் லலியா, அலெக்சாண்டர் ரிஸ்ட்டோவிச் மற்றும் தாமஸ் ஸலாமுன் போன்ற சைபீரிய கவிஞர்களின் ஆக்கங்களை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து அவர்களின் மேல் ஆங்கில வாசகர்களின் கவனம் பெற வழிவகுத்தார். அதுபோல அவரின் சொந்த கவிதைகளும் தொடர்ச்சியாக பல ஐரோப்பிய மொழிகளுக்கு ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

பின்வரும் நேர்காணல், நவம்பர் 2004-ஆம் வருடம் லண்டன் ஹைபரியில் உள்ள என்னுடைய இல்லத்தில் நடைபெற்றது. சிமிக் அவருடைய “தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்:1963-2001” நூலினை விளம்பரப்படுத்துவதற்காக அங்கு வந்திருந்தார். லண்டன் அவருக்கு பரிச்சசயமான நகரம் ஆதலால் அவருக்கு நிறைய நண்பர்கள் இருந்தனர்.

நீண்டகாலமாக நான் பெருமதிப்போடு ஆராதிக்கும் கவிஞர், சிமிக் அவர்களுடன், ஒரு மதிய பொழுதில் உரையாட கிடைத்த வாய்ப்பை மகிழ்ச்சியோடு எண்ணுகிறேன். அவரது வாழ்க்கை, கலை, அரசியல் இவற்றுடன் உணவு சார்ந்த எல்லா விஷயங்கள் குறித்தும் அவர் கொண்டிருந்த திடமான அபிப்பிராயங்கள் பற்றியும் – குறிப்பாக அன்று நான் அவருக்கு அளித்த ரில்லேட்ஸ் எனப்படும் வேகவைத்த இறைச்சி துண்டுகள் பற்றி – நீண்ட நேரம் ஆர்வமாக உரையாடியது இனிய நிகழ்வு.

கேள்வி: முதலில் பெல்கிரேட்இல் உங்கள் குழந்தைப்பருவத்தை பற்றி சிறிது உரையாடலாம் என்று விரும்புகிறேன்உங்கள் பெற்றோர் என்ன மாதிரியானவர்கள், அவர்கள் எப்படி சந்தித்துக் கொண்டார்கள்?

சிமிக்: என் தந்தை தொழிலாளர் வர்கத்தை சேர்ந்தவர்.  அவர் குடும்பத்தில் முதன் முதலாக கல்லூரிக்கு சென்ற நபரே அவர் தான். மறுபுறம் என் அம்மாவோ பழைய பெல்கிரேட் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர்கள் குடும்பத்தினர் இரண்டு தலைமுறைகளாக அங்கேயே வாழ்ந்து வந்தார்கள். 19-ம் நூற்றாண்டின் இறுதிவரை செல்வசெழிப்பாக இருந்து பின் அனைத்தையும் இழந்திருந்தனர். என் அம்மாவின் தாத்தா ஒரு ராணுவ வீரர். அவர் எல்லா செல்வத்தையும் சூதாட்டத்தில் இழந்திருந்தார் என்று பின்னாட்களில் தெரிந்து கொண்டேன்.

கேள்வி: உங்கள் குடும்பத்தில் இந்த இருவகையினரும் எவ்வாறு பொருந்தினார்கள்?

சிமிக்: உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் இரு குடும்பத்தினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக வெறுத்தனர். என் அம்மா அவ்வெறுப்பை தொடர்ந்து வெளிப்படுத்தினார். என் தந்தைவழி உறவினர்களை பார்த்து பெருமூச்செறிவது, கண்களை உருட்டிப் பார்ப்பது, மறைமுகமாக குத்திக்காட்டுவது என அவர் வெறுப்பை ஜாடைமாடையாக காட்டினார் என்றால், என் தந்தையின் பக்கத்தில் அது நேரடியாக வெளிப்பட்டது. அவர்கள் போக்கிரிகளாகவும், பெரும் குடிகாரர்களாகவும் இருந்தனர். நான், என்னை அவர்களுடனேயே தொடர்பு படுத்திக் கொண்டேன். என் அம்மாவின் குடும்பத்தினர் பயந்தவர்களாகவும் கமுக்கமானவர்களாகவும் சித்தப்பிரம்மை பிடித்தவர்கள் போலவும் இருந்தனர். செல்வத்தையெல்லாம் இழந்து விட்டிருந்தமையால் கௌரவமான தோற்றத்தை தக்கவைக்க கவலையோடு போராடினர். அறவே நகைச்சுவை உணர்வின்றி இருந்தனர். வேடிக்கை என்று எதுவுமே இல்லை. என் தந்தையின் குடும்பத்தினரோ உணவருந்தும் கூடத்தில், காபரே குழுவினரைப்போல் நடந்து கொள்வார்கள். என் அம்மா அவர்கள் நடுவே எவ்வளவு பரிதாபகரமான நிலையில் இருந்திருப்பார் என நீங்கள் கற்பனை செய்து கொள்ளலாம்.

கேள்வி: நாசிசக் குழிவினரின் அல்லது கம்யூனிஸ ஆதரவாளர்களின் கருத்தியல் நிலைப்பாடுகள் குறித்து அப்போது எந்த அளவுக்கு தெரிந்து வைத்திருந்தீர்கள்?

சிமிக்: நிறையவே அறிந்திருந்தேன். ஆனால் அறிவுபூர்வமாக அல்ல. என்னைச்சுற்றிலும் எப்போதும் அரசியல் விவாதிக்கப்பட்டு கொண்டே இருந்தது. என் தந்தை அரசு குடும்பத்தின் ஆதரவாளராக இருந்தார். என் தாய் வழி தாத்தா – சூதாடி சொத்தையெல்லாம் இழந்தவர் – முதல் உலகப்போரில் மதிப்புமிக்க ராணுவ அதிகாரியாக இருந்தவர். கூட்டணி நாடுகள் எப்படியும் நம்மை காலை வாரிவிடும்; எனவே நாம் போரிலிருந்து விலகியிருக்க வேண்டும் என அவர் கருதினார். கடைசியில், யால்டா மாநாட்டில் அவர் எண்ணியதுதான் நடந்தது.

என் அம்மாவை பொறுத்தமட்டில், செர்பியர்கள் அரசியலில் முழு முட்டாள்கள் என்றும் எது எப்படியானாலும் அவர்கள் தவறான முடிவுகளையே எடுப்பார்கள் என்றும் வாழ்நாள் முழுக்க நம்பினார். அதை வெளிப்படையாக சொல்லவும் செய்தார். 

என் தந்தையின் குடும்பத்தில் உள்ள இளம் தலைமுறையினர் எல்லோரும் இடதுசாரிகளாகவும் கம்யூனிச ஆதரவாளர்களாகவும் இருந்தனர்.  என் அம்மாவின் குடும்பத்தையொத்த வர்க்கத்தினரை ருஷ்யர்கள் வந்து சுட்டுத்தள்ளி, எல்லோருக்கும் சுதந்திரம் பெற்றுத்தருவார்கள் என்று அவர்கள் எதிர்பார்த்திருந்தனர். அதனால் நீங்களே மேலும் கற்பனை செய்து கொள்ளலாம் – எங்கள் வீடு நிறைய சண்டைகளோடும், சச்சரவுகளோடு, கண்ணீரோடும் இருந்தது என்று.

கேள்வி: அந்த நாட்கள் எவ்வளவு கடினமானதாக இருந்தது உங்களுக்கு?

சிமிக்: எங்கள் குடும்பத்தில் ஒரு கதை சொல்லப்படுவதுண்டு. போர் முடிவு பெற்ற 1945ம் ஆண்டு மே 9ம் நாள் தற்செயலாக என் பிறந்தநாளாகவும் அமைந்துவிட்டது. நான் அந்நேரம் வீதியில் விளையாடிக்கொண்டிருந்தேன். பிறகு தண்ணீர் குடிப்பதற்காக வீட்டிற்கு சென்றேன். அப்போது என் அம்மாவும், மற்ற குடியிருப்புவாசிகளும் ரேடியோ கேட்டுக்கொண்டிருந்தனர். போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அவர்கள் சொன்னார்கள். நான் குழப்பமாக அவர்களை பார்த்து சொன்னேன் “இனிமேல் எந்த விளையாட்டும் இருக்காதே!”

போர் நாட்களில் பெற்றோர்களின் கண்காணிப்பு இருக்காது. பெரியவர்கள் அவர்களுடைய தினசரி இன்னல்களில் மூழ்கி இருப்பார்கள். குழந்தைகளுக்கோ கொண்டாட்டம் தான். சில வருடங்களுக்கு முன்னர் போஸ்னியா போர் பற்றிய இரண்டு பெரிய புகைப்பட புத்தகங்களை புரட்டிக்கொண்டிருந்தேன். எல்லா முகங்களிலும் சோகம் கப்பி இருந்தது – குழந்தைகளைத் தவிர. அவர்கள் முகத்தில் தவழ்ந்த குதூகலமோ “இது எவ்வளவு நன்றாக இருக்கிறது, எவ்வளவு பிரமாதம், இல்லையா” என்று கூறுவது போல் இருந்தது. அந்த முகங்களை பார்த்தபோது நான் நினைத்ததேன் – இது நானும் என் நண்பர்களும்தான் என்று.

அப்புறம் போர் முடிந்த பின்னரும் எங்கள் கேளிக்கை தொடர்ந்தது. ஆம், எங்களிடம் வறுமையும், கம்யூனிச போதனைகளும் இருந்தன. அதே சமயம் ரேடியோவில் அமெரிக்க திரைப்படங்களும், ஜாஸ் இசையும் இருந்தன. வீதிகளில் குழுச் சண்டைகள் இருந்தன. நான் பெலக்ராட் நகரின் மையப்பகுதியில் நெரிசலான குடியிருப்பு பகுதியில் வசித்தேன். அவ்விடம் ஒருபோதும் மந்தமாக இருந்ததில்லை. பள்ளியில் எல்லா கரும்பலகைகளிலும் டிட்டோ, ஸ்டாலின் மற்றும் லெனின் படங்கள் இடம்பெற்றிருக்கும். அவர்கள் எங்களை கண்காணித்துக் கொண்டிருக்க, நாங்கள் பாடம் படித்தோம். உலகிலுள்ள எங்களை போன்ற எல்லா குழந்தைகளுக்கும் இந்த மூவரும் மகிழ்ச்சியை கொண்டுவருவதாக எங்கள் ஆசிரியர்கள் தினமும் கூறினர். எனக்கு எதை நம்புவதென்று தெரியவில்லை.  என் வீட்டிலோ இவர்களெல்லாம் கெட்டவர்களென்றும் என் தந்தை வீட்டை விட்டு வெளியேறியதற்கு இவர்களே காரணமென்றும் கூறினார்கள்.

கேள்வி: நீங்கள் பிரான்ஸ் வந்தபோது அங்குள்ள அதிகாரிகள் நீங்கள் ஒருஇடமாற்றம் செய்யப்பட்ட நபர்” என்று சொன்னார்கள். இடமாற்றம், புலம்பெயர்தல், அகதி வாழ்க்கை இவையெல்லாம் உங்கள் கவிதைகளில் தொடர்ந்து வரும் பாடுபொருட்கள். பாரீஸில்தான் நீங்கள் இந்த நிலமற்ற தன்மையை தீவிரமாக உணர்ந்தீர்களா?

சிமிக்: ஆம் என்றுதான் நினைக்கிறேன். எனக்கு பிரான்ஸை பிடித்திருந்தது. ஆனால் அவர்கள் எங்களை இழிவு செய்ய விரும்பினார்கள். சில மாதங்களுக்கு ஒரு முறை எங்கள் அனுமதி ஆவணத்தை நாங்கள் புதுப்பிக்கவேண்டி இருந்தது. அதற்காக மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருப்போம். இறுதியில் ஏதாவது ஒரு ஆவணம் இல்லையென்று அவர்கள் சொல்வார்கள். கொள்ளுப்பாட்டியின் பிறப்புச் சான்றிதழ் போல. நாங்கள் அந்த ஆவணத்தை உடனே யுகோஸ்லோவியாவில் இருந்து வரவழைத்து கொடுத்தால், அது தேவையில்லை என்பார்கள்.

பாரீசில் ஒருவருட காலம் ஒரு சிறிய விடுதியறையில் எங்கள் தந்தை அமெரிக்காவிலிருந்து அனுப்பிய பணத்தை வைத்து வாழ்ந்தோம். எங்களுக்கு விசா எப்போது கிடைக்கும் என்று தெரியாமலேயே இருந்தது. அதுவரை பாரிஸ் நகர் முழுக்க நடந்து அலைந்தோம். படங்களுக்கு சென்றோம். ஆங்கிலம் கற்றுக்கொண்டோம். என் அம்மா லைப், லுக் மற்றும் இதர அமெரிக்க நாளிதழ்களை வாங்கிவருவார். அவற்றில் நீச்சல் உடை அணிந்த பெண்களையும், புதிய வகை கார்களையும், குளிர்சாதனப்பெட்டி நிரம்பிய உணவுகளையும் நானும் என் சகோதரனும் தேடி தேடி பார்ப்போம்.

பாரிசில் பள்ளியில் படிக்கும் போதுதான் எனக்கு முதல்முறையாக கவிதையில் ஈடுபாடு வந்தது. நாங்கள் போதிலியர், வர்லைன், ரம்பொ போன்றவர்களின் கவிதைகளை, மனப்பாடம் செய்து வகுப்பில் எல்லோர் முன்னிலையிலும் சொல்லவேண்டும். என் உச்சரிப்பின் காரணமாக அது எனக்கு பீதியூட்டும் அனுபவமாக இருந்தது. அதே நேரம், அக்கவிதைகள் எனக்கு கண்ணீரையும் வரவழைத்தன.

கேள்வி: நியுயார்க்கே உங்களுக்கு மிக பிடித்தமான நகரம் என்று அடிக்கடி குறிப்பிட்டிருக்கிறீர்கள். அது கண்டதும் தோன்றிய காதலா?

சிமிக்: ஆம். 1954 -இல் நியூயார்க் அபாரமான தோற்றத்தினை கொண்டிருந்தது. ஐரோப்பா மங்கலாகவும் நியூ யார்க் பிரகாசமாகவும் இருந்தது. அவ்வளவு வண்ணங்களோடு விளம்பரங்களும் மஞ்சள் டாக்சிகளுமாய் அது நிறைந்திருந்தது. கடல் வழியில் வெறும் ஐந்துநாள் தொலைவில் தான் அமெரிக்கா இருந்தது. ஆனால் இப்போதைய சீனா அளவுக்கு தூரத்தில் இருப்பதாய் தோன்றியது. ஐரோப்பிய நகரங்கள் பழங்காலத்து ஓபரா நாடக அரங்குகள் போலிருந்தன.  மறுபுறம் நியூயார்க் நகரமோ வண்ணம் தீட்டப்பட்ட திருவிழா காட்சி அரங்கு போலிருந்தது.  தாடி வைத்த பெண், வாளை முழுங்கும் வீரர்கள், பாம்பாட்டிகள் மற்றும் மந்திரவாதிகள் நிறைந்த காட்சி அரங்காய் தோன்றியது.

கேள்வி: கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்து உங்கள் தந்தையை நீங்கள் மீண்டும் சந்தித்த பிறகு, உங்களிடையேயான உறவு எப்படி இருந்தது?

சிமிக்: பிரமாதமாக இருந்தது. எனக்கு அவரிடம் என்ன எதிர்பார்ப்பதென்று தெரியவில்லை. அவர் சம்பிரதாயமான தந்தை மகன் உறவை விரும்பவில்லை. அது அப்படி இருக்க சாத்தியமுமில்லை. அவர் ஜாஸ் கிளப்களுக்கு, பார்களுக்கு, உணவகங்களுக்கு செல்ல பெரிதும் விரும்பினார். நான் நியூயார்க் வந்த முதல் நாள் இரவு என்னை ஒரு ஜாஸ் கிளப்பிற்கு அழைத்துச்சென்றார். அவரிடம் சொல்ல நிறைய கதைகள் இருந்ததால் அவருடனான உரையாடல் வேடிக்கையாக இருந்தது. அத்துடன் அவர் நிறைய படித்தார்: வரலாறு, இலக்கியம், அரசியல், மேலை மதங்கள், மறைஞானம், தத்துவம் இவற்றுடன் நாளிதழ்களில் விளையாட்டுச் செய்திகளும் கிசுகிசு பக்கங்களும்கூட அவர் படித்தார். பெரிய கேள்விகளுக்கு விடைகாண முயன்றபடியே இருக்கும் ஒருவராகவே அவர் இருந்தார். அவரிடமிருந்த ஒரு நல்ல விஷயம் அவர் எப்போதும் செவிகொடுக்க தயாராக இருந்தார் என்பது. யார் சொல்வதையும் ஆர்வத்தோடு கேட்டார். எனவே அவரோடு இருப்பது எனக்கு எளிதாக இருந்தது. நீண்ட வருடங்களுக்கு பிறகு என்னுடைய கவி நண்பர்கள் ஜேம்ஸ் ததே மற்றும் மார்க் ஸ்ட்ராண்ட் ஆகியோரும் என் தந்தையை சந்தித்தபின் அவரைப்பற்றி இதே அபிப்ராயத்தை அடைந்தார்கள்.

கேள்வி: ஆனால் உங்கள் அப்பாவும் அம்மாவும் சுமூகமாக இருக்க முடியவில்லை இல்லையா?

சிமிக்: இல்லை. எங்கள் குடும்பம் ஒன்றுசேர்ந்து இரண்டு வருடங்களிலேயே அவர்கள் ஒருமித்த விருப்பத்தோடு விவாகரத்து பெற்றுக்கொண்டனர். பத்து வருட பிரிவு தான் முதன்மைகாரணம். மேலும், நான் சிறுவயதிலேயே உணர்ந்த எளிய உண்மை என்னவென்றால் அவர்கள் இருவருக்குமிடையே, ஒத்துபோகக்கூடிய விஷயம் என்று எதுவுமே இல்லை. நம்பமுடியாத அளவு துணிவும் நாணயமும் கொண்ட ஒரு பெண்மணி, என் அம்மா. என் தந்தையைக் காட்டிலும் அவர் தெளிவும், தீர்க்கதரிசனமும் பொருந்திய அரசியல் கருத்துக்களை கொண்டிருந்தார். எனினும் அவருடன் தினமும் இருப்பது சோர்வளிக்கக் கூடியதாக இருந்தது. அவர் எல்லாவற்றிலும் மோசமான விளைவையே எதிர்பார்த்தார். அருகிலிருக்கும் கடைக்கு என்னை பால் வாங்கிவர அனுப்பினால், எனக்கு நிகழ வாய்ப்புள்ள அத்தனை மோசமான விஷயங்களையும் அவர் கற்பனை செய்துகொள்வார். பின்னர் நான் ஒழுங்காக பால் வாங்கி வந்ததை கண்டு பெரிதும் ஆச்சர்யப்படுவார. போரின் திகிலும் பயங்கரமும் எல்லோரையும்விட அவளிடத்தில் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தியிருந்தது. எங்கள் தந்தை எதையும் தீவிரமாக பொருட்படுத்துவதில்லை என்றும் எங்களுக்கு நடந்தவற்றை அவர் புரிந்து கொள்ளவில்லை என்றும் அடிக்கடி கூறுவார். ஒருபுறம் என் தாய் நாங்கள் வீழ்ந்துவிட்டதாக நினைத்தார், மற்றொரு புறம் என் தந்தையோ தோல்வியை ஒப்புக்கொள்ள தயராக இல்லை. என் தாய் அவர்கள் வாழ்க்கை போரினால் அர்த்தமற்றதாக மாறிவிட்டதாக நினைத்தார்.

கேள்வி: நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? வரலாற்றால் ஒடுக்கப்பட்டதாக கருதுகிறீர்களா?

சிமிக்: என்னுடைய இளமையில் அப்படி நினைக்கவில்லை. ஆனால் இப்போது உறுதியாக எதுவும் சொல்லமுடியவில்லை. என் சிறுவயதில், உலகத்தை போரினால் அர்த்தமற்றதாக மாற்றிய பைத்தியக்கார மனிதர்களை போன்றோர் இன்னமும் உலகில் இருக்கிறார்கள். அவர்களுக்கு நிறைய போர்களும், சிறைகளும் கொலைகளும் தேவைப்படுகின்றன. இந்த நிலை நன்கு பரிச்சயமானது. சோர்வளிக்கக்கூடியது. மேலும் பயங்கரமானது. அதில் எனக்கு சந்தேகமில்லை.

கேள்வி: சிகாகோ பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சிமிக்: ஏரி பார்த்த மேன்ஷன்கள் மற்றும் நகர்ப்புற சேரிகளின் பளபளக்கும் படங்களோடு, சிகாகோ காபி மேஜைக்காக வடிவமைக்கப்பட்ட கம்யூனிச அறிக்கை போல இருந்தது. ஒருபுறம் மிச்சிகன் அவென்யூ பகுதியில் பகட்டான விடுதிகளும், ஆடம்பரமான கடைகளும் இருந்தன. சற்று அப்பால் மறுபுறம் மிச்ச நகரமும் புகைசூழ்ந்திருக்க, தொழிற்சாலை ஊழியர்கள் கரிப்படிந்த முகங்களுடன் பேருந்துக்காக காத்திருப்பார்கள். புலம்பெயர்தவர்களின் சொர்க்கம் என்று அதை சொல்லலாம். எல்லோருக்கும் வேலைவாய்ப்பு இருந்தது. இருபத்திநான்கு மணி நேரமும் ரீங்கரிக்கும் பெரிய தொழிற்சாலைகளுக்கு மிக அருகிலேயே அழகான கடற்கரையும் அதில் அமர்ந்து காம்யூவும் சார்த்தரும் வாசிக்கும் அழகிய ஜோடிகளும் அங்கே இருந்தார்கள். எனக்கு நண்பர்களாக ஸ்வீடன், போலந்து, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களும் கூடவே யூத மற்றும் கறுப்பினத்தவரும் இருந்தனர். எல்லோரும் மாறிமாறி அமெரிக்கா என்றால் என்னவென்று எனக்கு விளக்க முயன்றுகொண்டிருந்ததனார். நான் மூன்று வருடங்களே வசித்த சிகாகோ தான் எனக்கு முதன்முதலில் அமெரிக்க அடையாளத்தை வழங்கியது. அங்கு எனக்கு கிடைத்த எல்லா அனுபவங்களும் என்னுள் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியன.

கேள்வி: எந்த மாதிரி என்று கூறமுடியுமா?

சிமிக்: எல்லாமே எனக்கு புதிதாக இருந்தது. வேலை தேடியது, தினமும் வேலைக்கு சென்றது, என்னைவிட வயதில் மூத்தவர்களை வேலையில் சந்தித்தது, அவர்களில் சிலருடன் தினமும் இரவில் பாருக்கு சென்றது, அங்கு அவர்கள் தங்களின் பலதரப்பட்ட வாழ்க்கையை என்னிடம் சொன்னது என எல்லாமும் எனக்கு புதிதாக இருந்தது.

கேள்வி: அங்கு தான் நீங்கள் முதல்முதலில் கவிதை எழுத ஆரம்பித்தீர்களா?

சிமிக்: உண்மையில் என்னுடைய முதல் ரகசிய லட்சியம் ஓவியராக வேண்டும் என்பதாகவே இருந்தது.

கேள்வி: நீங்கள் என்ன வகையான ஓவியராக இருந்தீர்கள்?

சிமிக்:  என்னுடைய பதினைந்தாவது வயதில் போஸ்ட்-இம்ப்ரெஸ்ஸினிஸ்ட் பாணியில் ஓவியங்கள் வரையத் தொடங்கினேன். பிறகு சூட்டின் (Soutine), வளமினிக் (Vlaminck) மற்றும் ஜெர்மானிய எக்ஸ்பிரஷனிஸ்டுகள் மாதிரி வரைந்து பார்த்தேன். முப்பதாவது வயதில் ஓவியம் வரைவதை நிறுத்தும்போது நான் ஒரு அப்ஸ்ட்ரக்ட் எக்ஸ்பிரஷனிஸ்டாக, டீ கூனிங் (de Kooning) மற்றும் குஸ்டோன் (Guston) ஆகியோரை அவ்வப்போது பிரதி செய்துகொண்டிருந்தேன். உன்மையை சொல்லவேண்டுமென்றால் எனக்கு ஓவியம் வரையும் திறமை மிகக்குறைவாகதான் இருந்தது.

கேள்வி: எப்போது தீவிரமாக எழுதத்தொடங்கினீர்கள்?

சிமிக்: ஓக் பார்க் பள்ளி இறுதியாண்டில் எழுத ஆரம்பித்தேன். ஆனால் தீவிரமாக இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக கவிதைகள் எழுதினேன். எனினும் வரைவதியிலேயே அப்போது ஆர்வம் கொண்டிருந்தேன்.

கேள்வி: ஓக் பார்க்கில் நீங்கள் பள்ளி கல்வி முடித்தவுடன் உங்களுக்கு சிகாகோ சன் டைம்ஸ் பத்திரிகையில் அலுவலக பணியாளராக வேலை கிடைத்துவிட்டது. நீங்கள் கல்லூரி செல்வது குறித்து அப்போது யோசிக்க வில்லையா?

சிமிக்: நிச்சயமாக, அதுபற்றி நிறைய யோசித்தேன். நியூயார்க் பல்கலைக்கழகத்திலும், சிகாகோ பல்கலைக்கழகத்திலும் எனக்கு இடம் கிடைத்தது. ஆனால் சேர்வதற்கு வழி இருக்கவில்லை. பண விஷயங்களில் என் தந்தை முற்றிலும் பொறுப்பற்றவராக இருந்தார். நிறைய சம்பாரித்து அதில் கடைசி நாணயம் வரை உடனடியாக செலவழித்து முடித்தார்.

கேள்வி: நீங்கள் எப்போது வீட்டை விட்டு வெளியேறினீர்கள்?

சிமிக்: என்னுடைய பதினெட்டாவது வயதில். சன் டைம்ஸில் என்னுடன் பணியாற்றிய நண்பர் ஒருவரின் வீட்டிற்கு அருகில், லிங்கன் பார்க்கில் எனக்கு தங்குவதற்கு இடம் கிடைத்தது. அச்சமயம் சிக்காகோ யுனிவர்சிட்டியில், அந்த நண்பர் தத்துவத்தில் பட்டப் படிப்பை முடிக்கவிருந்தார். என் கவிதையின் முதல் தீவிரவாசகர் அவர்தான். ஆதர்ச வாசகரும் கூட. ஏனென்றால் அவர், கற்பனையின் மேல், ஒரு தர்க்கபூர்வமான மனிதரின் புரிந்துக்கொள்ளக்கூடிய, சந்தேகம் கொண்டிருந்தார். உருவகத்தை விட தர்க்கத்திற்கே அவர் மதிப்பு கொடுத்தார். எப்படி ஒரு நோயாளிக்கு மயக்க மருந்து கொடுப்பது போல, ‘மாலை நேரத்தை’ அறுவை சிகிச்சை மேஜையில் படுக்கவைத்து மயக்க மருந்து கொடுக்க முடியும் என்று அவர் கேட்பார். நான் தன்னளவில் வெளிப்படையானது என்று அனுமானித்த எல்லாவற்றையும் அவர் கேள்விக்குள்படுத்தியதன் வழியாக என்னை கவிதை குறித்து தீவிரமாக யோசிக்க செய்தார். அவர் பிற்பாடு என் வாழ்வில் முக்கியமான ஒருவராக மாறினார். நாங்கள் நண்பர்களாக 45 ஆண்டுகளுக்கு மேல் நீடித்தோம்.

கேள்வி: என்ன மாதிரியான கவிஞர்களை நீங்கள் அப்போது வாசித்தீர்கள்?

சிமிக்: ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நவீனத்துவ கவிஞர்களான பவுண்ட் (Pound), எலியட் (Eliot), வில்லியம்ஸ் (Williams), ஸ்டீவன்ஸ் (Stevens), அப்போலினர் (Apollinaire), ப்ரெக்ட் (Brecht), ரில்கே (Rilke) முதலியோரை வாசித்தேன். ஒருமுறை நான் ராபர்ட் லோவலின் (Robert Lowell) தொகுதியை கையில் வைத்திருப்பதைப் பார்த்துவிட்டு, சிகாகோவில் எனக்கு ஓரளவு பரிச்சயமுள்ள நாவலாசிரியரான நெல்சன் அல்க்ரென் (Nelson Algren) “சிமிக், இதுபோன்ற குப்பைகளை படிக்காதே! நீ புதிதாக வந்திறங்கியிருக்கும் ஒரு சிறுவன், நீ படிக்கவேண்டியது கார்ல் சான்ட்பேர்க் (Carl Sandburg) மற்றும் வாசெல் லிண்ட்சே (Vachel Lindsay)” என்றார். கிழக்கு கடலோர பகுதிகளின் அறிவார்ந்த உயர்குடிகள் மேல், மத்தியமேற்கு பகுதிக்கு, அதன் வெகுஜன பண்பாட்டின் காரணமாக, ஒவ்வாமையும் சந்தேகப் பார்வையும் இருந்தது. அவர்கள் ராபர்ட் பிரோஸ்ட்-ஐ (Robert Frost) காட்டிலும் ராபின்சன் ஜெபர்ஸையும் (Robinson Jeffers), வாலன்ஸ் ஸ்டீவன்ஸ்-ஐ (Wallace Stevens) காட்டிலும் எட்கர் லீ மாஸ்டர்ஸையும் (Edgar le masters) தங்களுக்கு உகந்தவர்களாக நினைத்தார்கள். என் ஞாபகத்தில் எனக்கு முதன்முதலில் பிடித்த கவிஞராக ஹார்ட் கிரேன் (Hart Crane) இருந்தார். புதிரான அவருடைய கவிதைகள் எனக்கு கவர்ச்சி ஊட்டுவதாக இருந்தன. மர்மமான அவருடைய கவிதைகள் மேலானவை என்று நினைத்தேன். அந்த மர்மங்களுக்கு அடியில் என்ன அர்த்தம் பொதிந்துள்ளது என்று கண்டுபிடிக்க அப்பொழுது எனக்கு விருப்பம் இருக்கவில்லை. அவரைப் போலவே நிறைய கவிதைகள் எழுதிப் பார்த்தேன். அடிக்கடி அகராதியை புரட்டி அதிகம் புழக்கத்தில் இல்லாத வார்த்தைகளை எடுத்து சேர்த்து யாருக்கும் புரியாத வகையில் கவிதையாக எழுதினேன். நல்ல வேளையாக அவை எல்லாவற்றையும் அழித்து விட்டேன்.

கேள்வி: உங்களின் நிறைய கவிதைகள் விளிம்பு நிலை மனிதர்கள் பற்றியவையாக இருக்கின்றன. உங்கள் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் தணியர்கள், குடிகாரர்கள், இலக்கற்றவர்கள், பொறுப்பற்றவர்கள், தெருவோர சித்தர்கள், பாழடைந்த விடுதிகளில் நீண்ட நாள் குடியிருப்பவர்கள்… நீங்கள் உங்கள் இருபதாம் வயதில் நியூயார்க் நகரத்தில் கழித்த வருடங்கள், அத்தகைய வாழ்க்கைக்கு நெருக்கமானவை என்று சொன்னால் அது சரியாக இருக்குமா?

சிமிக்: ஆம். நான் நியூயார்க் நகரத்திற்கு 1958 ஆம் வருட கோடையில் வந்த பொழுது தனியாகவே இருந்தேன். சிக்காகோவில் இருந்த அத்தனை நண்பர்களும் ஆச்சரியத்துடன், நீ எதற்காக நியூயார்க் செல்ல விரும்புகிறாய் என்று கேட்டார்கள். ஆனால் நியூயார்க்கில் எனக்கு பிடித்தமான விஷயங்கள் நிறைய இருந்தன. நிறைய திரைப்படங்கள். நிறைய ஜாஸ் விருத்திகள். நிறைய புத்தகக் கடைகள். பகலில் பல்வேறு வேலைகள் புரிந்தபடொ, இரவில் பல்கலைக்கழகத்தில் படித்தேன். பல்பொருள் அங்காடியில் சட்டைகள் விற்றேன், புத்தக கடையில் வேலை செய்தேன், வீடுகளுக்கு வண்ணம் அடித்தேன், கணக்கியல் குமாஸ்தாவாக இருந்தேன், ஊதியம் வழங்கும் துறையில் பணியாளனாக இருந்தேன், இப்படி இன்னும் சில வேலைகள். நான் படிக்காத அல்லது வேலையில்லாத நேரங்களில் பார்களுக்கும் படங்களுக்கும் சென்றேன். குறைவாக உறங்கி, நிறைய படித்து, அடிக்கடி காதல் வயப்பட்டேன். இப்போது திரும்பிப் பார்க்கும்போது தோன்றுகிறது, நான் அப்போது மிகுந்த மகிழ்ச்சியோ மிகுந்த துயரோ இல்லாமல் இருந்தேன் என்று. பள்ளிக்கு நடந்து செல்லும் வழியில், தெரு கம்பத்தில் தூக்கிலிடப்பட்ட மனிதர்களை பார்க்க நேரும் சூழ்நிலையில் ஒருவர் வளர்வதில் உள்ள ஒரு நன்மை – வளர்ந்த பிறகு, வாழ்க்கையை பற்றி முணுமுணுவென குறை சொல்வது இல்லாமல் ஆவது.

கேள்வி: நீங்கள் அப்போதைய சூழலில் கவிதை பற்றிய உரையாடல்களில் பங்கெடுத்தீர்களா?

சிமிக்: ஆம். பங்கெடுத்தேன். அப்போது நான் நிறைய கவிதை வாசிப்புகளுக்கு சென்றேன். 50களின் இறுதியிலும் 60களின் தொடக்கத்திலும் கவிதை வாசிப்பு என்பது அதிகமும் பிரபலம் இல்லாத ஒரு செயல்பாடு. ஐந்து அல்லது ஆறு கவிஞர்கள், இரண்டு அல்லது மூன்று ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர்கள், மற்றும் மேலும் சிலர் –அவர்களுடைய விரோத போக்கை வைத்து அவர்கள் கவிஞர்களாக முயல்பவர்கள் என அறியலாம்- இப்படி குறைந்த எண்ணிக்கையிலேயே ஆட்கள் வருவார்கள். அவ்வளவுதான். ஆலன் டேட் (Allen Tate), லோவல் (Lowell), பெரிமேன் (Berryman), ஜேம்ஸ் ரைட் (James Wright), ஓகாரா (O’Hara). க்ரீலி (Creely), லெவல் டவ் (Levertov) மற்றும் பலரின் கவிதைகளை அங்கு நான் கேட்டிருக்கிறேன். அங்கு வாசிக்கப்பட்ட அனைத்தையும் விமர்சன நோக்கிலேயே நான் அணுகிறேன். அங்கு உள்ளுக்குள் எரிந்தபடியே அமர்ந்திருந்தேன். அப்படித்தான் எதிர்கால கவிஞர்கள் பலரை அங்கு கண்டேன். நான் யாரிடமாவது எதைப்பற்றியாவது சொல்ல ஆரம்பிப்பேன். பின்னர் நாங்கள் இருவரும் அதைப் பற்றி விவாதிக்க ஆரம்பித்து கடைசியில் பீர் அருந்த செல்வோம். சிலர் என்னைவிட மூத்தவர்களாக இருந்தனர். என்னை காட்டிலும் நிறைய தெரிந்து வைத்திருந்தனர். அவர்களால் ஆன மட்டும் எனக்கு சில விஷயங்களை தெளிவுபடுத்தினார்கள்.

கேள்வி: உங்களுடன் தொடர்பில் இருந்த கவிஞராகும் முனைப்புக் கொண்டிருந்தோர் யார்? அவர்களுடன் எதைப் பற்றி எல்லாம் விவாதித்தீர்கள்?

சிமிக்: கவிதையின் மேல் பெரும் ஆர்வம் கொண்டிருந்தவர்களோடே அப்போது நான் உரையாடலில் இருந்தேன். அவ்வப்போது சிறுபத்திரிக்கைகளில் ஓரிரு கவிதைகள் பிரசுரித்தவர்கள், பிற்பாடு எந்த தடயமும் இல்லமாலானார்கள்.  நாங்கள் படித்த புத்தகங்களை வைத்தும் பத்திரிக்கைகளில் படித்தவற்றை கொண்டும் கவிதையில் என்ன நிகழ்கிறதென்று புரிந்து கொள்ள முயன்றோம்.

கேள்வி: பத்திரிக்கைகளுக்கு கவிதைகளை பிரசுரிக்க அனுப்பினீர்களா?

சிமிக்: ஆம். சிகாகோ ரிவியூ இதழில் என் ஆரம்ப கவிதைகள் 1959-ஆம் ஆண்டு பிரசுரமாயின. அமெரிக்கா வந்து நான்கு கழித்து, 1958 பிற்பகுதியில் அவற்றை நான் அனுப்பியிருக்கவேண்டும்.

கேள்வி: நீங்கள் ஆங்கிலத்தில் எழுதினீர்களா?

சிமிக்: நான் எப்போதும் ஆங்கிலத்திலேயே எழுதினேன்.நான் காதலிக்கும் பெண்களும், என் நண்பர்களும் என் கவிதைகளை புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக.

கேள்வி: பிரசுரகமாகாத உங்கள் ஆரம்ப கால படைப்புகளை எல்லாம் அழித்துவிட்டீர்கள் என அறிகிறேன். ஏன்?

சிமிக்: இது நான் ராணுவத்தில் இருந்த காலகட்டத்தில் நடந்தது. நான் ராணுவத்தில் 1961 ஆம் ஆண்டு சேர்ந்தேன். பின் பிரான்ஸ்-க்கு அனுப்பப்பட்டேன். சுமார் ஒரு வருடம் கழித்து ஒரு நாள் என் சகோதரர் ஒரு அட்டைப்பெட்டி நிறைய என்னுடைய கவிதைகளை அங்கு அனுப்பினார்.  அப்போது படித்து பார்த்தபோது அவை எல்லாமே மோசடியானவை என்று தெரிந்தது. அவ்வளவும் வெறும் பிரதியெடுக்கப்பட்டவை, மோசமானவை, தவறானவை என்று உணர்ந்தேன். நான் என் வாழ்வில் அவ்வளவு அவமானமாக உணர்ததேயில்லை. இரவோடிரவாக அவற்றையெல்லாம் கிழித்து ஒரு வித மகிழ்ச்சியுடன் குப்பையில் கொண்டு கொட்டினேன்.

கேள்வி: பனிப்போரில் வாழ்ந்த எல்லோரும் ஒரு விதத்தில் இரக்கமற்ற போராளியாகவே இருந்தனர்.ஆனால் கியூபா மிஸ்ஸில் போன்ற பிரச்சனைகளில் நீங்கள் போர் முனைக்கு வெகு அருகில் இருந்தீர்கள் இல்லையா?

சிமிக்: ஆம். எப்போது வேண்டுமானாலும் போர்-குறிப்பாக அணு ஆயுத போர்- துவங்கலாம் என்ற நிலையில், நாங்கள் எப்பொழுதுமே எச்சரிக்கையாக இருந்தோம். கியூபா நெருக்கடி உச்சத்தில் இருந்தபொது, பாதுகாப்பாக மூடப்பட்டிருந்த ஒரு ரகசிய பெட்டகத்தை எங்கள் உயரதிகாரி வெகு சிரத்தயுடன் உடைத்து திறந்தார். அதன் மேல் “போர் அன்றி மற்ற நேரத்தில் திறக்க கூடாது” என்று எழுதி ஒட்டப்பட்டிருந்தது. எனவே போர் வந்துவிட்டது என எண்ணினோம். எங்களுக்காக விதிக்கப்பட்டிருந்த ஆணைகள் படு முட்டாள்தனமாக இருந்ததன. எங்கள் உயரதிகாரிகளே வாயடைத்து போயிருந்தார்கள். எனக்கான ஆணை இது: முதக் நிலை சிப்பாயாகிய நான் தனியாக ஜெர்மனி-பிரான்ஸ் எல்லைப்பகுதிக்கு செல்ல வேண்டும். ரஷ்ய படைகளிடமிருந்து தப்பி வரும் வெளிநாட்டினரிடம் நேட்டோ ஒப்பந்தத்தின் படி அந்த சாலையை அவர்கள் உபயோகிக்க கூடாதென்றும், அமெரிக்க வீரர்கள் மட்டும் அந்த வழியில் செல்லவேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும். அவர்கள் உடன்பட மறுத்தால் என் துப்பாக்கியை பயன்படுத்த வேண்டும். மற்ற ஆணைகளும் இது போலவே நிறைவேற்றும் சாத்தியம் இல்லாதவை. நல்ல வேளையாக நெருக்கடி சில நாட்களில் முடிவுக்கு வந்து, நான் முட்டாள்தனமான எதுவும் செய்ய தேவையில்லாமல் போயிற்று.

கேள்வி: நீங்கள் அந்த நாட்களில் கவிதைகள் எழுதினீர்களா? அம்மாதிரி சூழலில் உங்களுக்கு எழுத வாய்ப்பிருந்ததா?

சிமிக்: வாய்ப்பிருந்தது. ஆனால் எனக்கு கவிதை எழுத விருப்பம் இருக்கவில்லை. சில மாதங்கள் வரை தினமும் நாட்குறிப்புகள் எழுதினேன். அது தவிர நான் படித்த புத்தகங்களை பற்றியும் சில குறிப்புகள் எழுதினேன். ஒட்டுமொத்தமாக அந்த காலகட்டத்தில் மிகக்குறைவாகவே எழுதினேன்.

கேள்வி: “இறைச்சிக் கடை” (The Butcher Shop) கவிதையிலிருந்தே உங்களின் தேர்ந்தெடுத்த கவிதைகளின் மறுபிரசுரங்கள் எப்போதும் தொடங்குகின்றன. அந்த கவிதையை உங்கள் கவியுலகின் நுழைவாயில், அதாவது உங்கள் சொந்தக் குரலை கண்டடைந்த கவிதை என்று நினைக்கிறீர்களா?

சிமிக்: நான் அதுவரை எழுதியவற்றில் சேமித்து வைக்க வேண்டும் என்று நினைத்த முதல் கவிதை அது. 1963- இல் அதை எழுதினேன். அப்போது பதிமூன்றாம் கிழக்கு வீதியில் குடியிருந்தேன்.  நகரின் அந்த பகுதிகளில் போலிஷ் மற்றும் இத்தாலிய இறைச்சி கடைகள் இருந்தன. அவற்றில் இறைச்சிகள், பன்றியின் முழங்கால்கள், வெட்டப்பட்ட ஆடுகள் மற்றும் கோழிகள் இவை எல்லாம் அற்புதமாக காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். என் வாழ்வில் அத்தகைய இறைச்சி கடையை நின்று உற்று நோக்காமல் ஒருபோதும் தாண்டிச் சென்றதில்லை. ஆம், அது ஐரோப்பாவையும் எனது இளமைக்காலத்தையும் ஞாபகப்படுத்தும் காட்சி. நான் சிறுவனாக இருந்தபோது கோழிகளை வெட்டியிருக்கிறேன். பன்றிகளின் கழுத்து அறுபட்டு வெட்டப்படுவதை பார்த்திருக்கிறேன்.

கேள்வி: அந்த கவிதையின் இறுதி வரிகள் ஒரு வகையில் வன்முறையையும் படைப்பூக்கத்தையும் தொடர்புறுத்துவதாக சொல்லலாமா?

“எலும்புகளை நொறுக்குவதற்காய் ஒரு மரக் கட்டை இருக்கிறது
தேய்த்து கழுவப்பட்டு சுத்தமாய் – ஒரு நதி வற்றுகிறது தன் படுகை வரை
அங்குதான் எனக்கு உணவு புகப்பட்டது
அங்குதான் ஆழமான இரவில் எனக்கு ஒரு குரல் கேட்கிறது.”

சிமிக்: அப்படிதான் நினைக்கிறேன். ஆனால் அந்த கவிதை எழுதும்போது எந்த அளவுக்கு அது சார்ந்த பிரக்ஞையோடு இருந்தேன் என்பது பற்றி தெரியவில்லை. பிரக்ஞையோடு இல்லை என்றே நினைக்கிறேன். இறைச்சி கிடங்கில் வளர்ந்தது எனக்கு நினைவில் எழவே, பல வருடங்கள் கடக்க வேண்டியிருந்தது. பெல்கிரேட்டை சேர்ந்த பால்யகால நண்பர்கள் சிலரை மீண்டும் சந்தித்த பிறகே அது எனக்கு புலப்பட்டது. நாங்கள் சிறுவயதில் வெவ்வேறு விஷயங்களில் மூழ்கியிருந்தோம். அத்துடன் நிறைய தரப்புகள் ஒன்றோடு ஒன்று மோதிய உள்நாட்டு போரும் அப்போது நடந்தது. தெருவில் காணக்கிடைத்த குருதி ஒரு பேசு பொருளாகக்கூட இருக்கவில்லை. ஆனால் நான் மீண்டும் மீண்டும் பார்த்த விஷயம் அது. சந்தேகத்திற்கு இடமின்றி அவையெல்லாம் என் வாழ்க்கை பார்வையை வடிவமைத்தன என்று சொல்லலாம். அப்பாவி மனிதர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதுதான் என் வாழ்வின் ஆரம்பப்பாடம். அதை ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்ட அல்லது கொல்லப்படக்கூடிய வெறும் போர் என்று படிக்கும்போதெல்லாம் என் உடலுக்குள்ளிருந்து நான் வெளியே குதித்து விடவேண்டும் என்று தோன்றும்.

கேள்வி: வெளித்தோற்றத்திற்கு அவ்வளவு கவித்துவமாக தென்படாத விஷயங்கள்கூட உங்களை ஈர்த்தன இல்லையா? உதாரணத்திற்கு கரப்பான்பூச்சி

சிமிக்: அது என்னுடைய இன்னொரு ஆரம்பகால கவிதை. நான் வசித்த நியூயார்க் நகர் முழுக்க கரப்பான்கள் மண்டியிருந்ததே காரணம். நாள் முழுவதும் என்னுடைய விருந்தினர் அவையே. அந்நியர்களிடம் தன்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் முதியோர்களுக்கு சாலையை கடக்க உதவி செய்யவேண்டும் என்றும் சொல்லித் தரப்பட்டு நான் வளர்க்கப்பட்டேன். அதனால் கரப்பான்களைக் கண்டால் நான் செய்கிற காரியத்தை நிறுத்திவிட்டு அவற்றிடம் நலம் விசாரிப்பேன்.

கேள்வி: பூச்சிகள் உங்கள் படைப்பில் நிறைய இடம்பெற்றிருக்கின்றன. நீங்கள் எறும்புகளையும் விரும்பினீர்கள் இல்லையா, குறிப்பாக ஜாக் ஸ்ட்ரா கவிதையில்?

சிமிக்: உண்மை. என் நண்பர்கள் அந்த புத்தகத்தை வாசித்துவிட்டு கேட்டார்கள், சிமிக் நீ நிறைய குடிக்கிறாயா, இது என்ன இவ்வளவு பூச்சிகள்? உண்மையில், தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருக்கும் சிறு ஜீவராசிகளின் மேல் எப்போதும் பேரார்வம் கொண்டிருந்தேன். ஈக்கள் பரபரப்பாக இருக்கும். அந்துப்பூச்சிகள் பைத்தியம் போல இருக்கும். போலவே, அழகென்றால் வண்ணத்துப்பூச்சிகளை வெல்ல ஆளில்லை. எறும்புகள் வெகு சாந்தமாக இருக்கும். சிறுவயதில் போக்கிரித்தனத்தினாலும் அல்லது காரணமேயில்லாமலும் அவற்றை மிதித்து நசுக்குவேன். ஆனால் இப்போது என்னை கடிக்கும் பூச்சியைக்கூட என்னால் துன்புறுத்த முடியாது.

கேள்வி: “கரப்பாண்பூச்சிகள்” “இறைச்சி கடை” மற்றும் “முட்கரண்டி” ஆகிய ஆரம்பகால கவிதைகள், அறுபதுகளில் வாசகர்களிடம் என்னமாதிரியான எதிர்வினைகளை ஏற்படுத்தியன?

சிமிக்: இரண்டு பத்திரிக்கை ஆசிரியர்களுக்கு அந்த கவிதைகளை நான் காட்டியபோது அவர்களிடம் அவை ஒருவகை எரிச்சலை ஏற்படுத்தின. நான் என்னை புத்திசாலியாக காட்டிக்கொள்ள நினைப்பதாக அவர்கள் கூறினார்கள். அத்துடன் அவை அவ்வளவு தகுதியுடைய பேசுபொருட்கள் இல்லை என நினைத்தார்கள். ஆனால் என் நண்பர்களுக்கு அவை பிடித்திருந்ததன. நான் பல் குச்சிகளை பற்றியும், சமையலறை குழாய்களை பற்றியும் காவியங்கள் எழுத வேண்டுமென்று விரும்பினார்கள்.

கேள்வி:  குறிப்பிட்டு சொல்லும்படியாக யாருடைய செல்வாக்கும் அந்த கவிதைகளில் இருந்ததா?

சிமிக்: வேண்டுமானால் “இறைச்சி கடை” கவிதைக்கு அப்போலினைரே (Apollinaire) சொல்லலாம். உருவகக் கவிதைகளுக்கு வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் (William Carlos Williams) மற்றும் பிரெஞ்சு சர்ரியலிஸ்டுகளை சொல்லலாம். அவர்கள் கவிதைகளை படித்துவிட்டு உடனே அதுபோல கவிதை எழுதவேண்டும் என்று எழுதியது கிடையாது. எழுதும் போது நினைவில் எங்கோ ஒரு இடத்தில் அவர்களின் கவிதை இருந்தது என்று சொல்லலாம். அது எனக்கு ஒரு திருப்புமுனை. இன்னாருக்கு பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்று கவைலைப்படாமல் நன் இதைத்த்தான் இனி செய்யப்போகிறேன் என்று எனக்குள் எண்ணிக்கொண்டேன்.

கேள்வி: நிறைய விமர்சகர்கள் உங்களின் ஆக்கங்களை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய செல்வாக்குகளின் கலவை என்று குறிப்பிடுகிறார்கள். நீங்கள் அப்படி பார்க்கிறீர்களா?

சிமிக்: அதற்க்கு எப்படி பதிலளிப்பது என்று தெரியவில்லை. நான் நிறைய ஐரோப்பிய கவிஞர்களை வாசித்தேன். போலவே அமெரிக்க சமகால கவிஞர்களையும் வாசித்தேன். ஐரோப்பியர்களை நான் வாசித்த கோணம் என்னுடைய பின்னணி காரணமாக முற்றிலும் வேறுபட்டது என்பது உண்மை தான். மற்றோரு புறம் செர்பியர்கள் என் கவிதை அவர்களுக்கு அந்நியமானது என்று சொல்வார்கள். “அவர் எங்களைப் போலில்லை” என்று அவர்கள் ஆத்திரத்திலும் ஏமாற்றத்தில் சொல்வதை கேட்கிறேன். அகதி என்றோ புலம்பெயர்ந்தவர் என்றோ சரியாக வகுத்திட முடியாத ஒரு விந்தையான வகை மாதிரியாய் என்னை கருதுகிறேன். ஆனால் இதைப்பற்றி எல்லாம் நான் கவலைப்படுவதில்லை. இன்னமாதிரி வாழ்க்கையை வாழப்போகிறேன் என்றோ இன்ன மாதிரியான கவிஞராக ஆகப்போகிறேன் என்றோ நான் தேர்வு செய்யவில்லை. அது தன்னிச்சையாக நடந்தேறியது அவ்வளவுதான்.

கேள்வி: ஐரோப்பியர்களை நீங்கள் வாசித்த கோணம் உங்களுடைய பின்னணி காரணமாக முற்றிலும் வேறுபட்டது என்று சொன்னீர்கள், அது எப்படி?

சிமிக்: வெளிப்படையான காரணங்கள்தான். எனக்கு சில ஐரோப்பிய மொழிகள் தெரிந்திருந்ததன. மேலும் அங்கு வாழ்ந்த நேரடி அனுபவத்தினால் ஐரோப்பா எப்படி இருந்தது என்று தெரிந்திருந்தது. இதனால் நான் வாசித்த கோணம் வேறுபட்டது.

கேள்வி: தாய்மொழி அல்லாத ஒரு மொழியில் எழுதுவதை நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்?

சிமிக்: நான் என்னுடைய தாய் மொழியில் எதுவுமே எழுதியதில்லை. அதனால் இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. ஆங்கிலத்தில் எழுதும்போது உள்ளளவில் எனக்கு எவ்விதமான தடுமாற்றமும் இருந்ததில்லை.

கேள்வி: யுகோசுல்லோவிய கவிஞர்களான வஸ்கொ போப்பா (Vasko Popa) மற்றும் இவன் லலிக் (Ivan LaliÄ) ஆகியோரை வாசித்த அனுபவம் எத்தகையது? நீங்கள் எழுத விரும்பிய கவிதை பற்றிய சிந்தனைக்கு எவ்வளவு முக்கியமானதாக இருந்ததது?

சிமிக்: அவர்களை மொழிபெயர்த்த அனுபவம் என் சிந்தையில் கலவையாக இடம் பெற்றிருந்தது. மொழிபெயர்ப்பு என்பது கவிதையை மிக நெருங்கி வாசிக்கும் வழி. ஆகையால் அதன் தாக்கத்தை தவிர்க்கவே முடியாது. அவர்கள் இருவரும் வேறு வேறு வகை கவிஞர்கள். போப்பா பிரெஞ்சு சர்ரியலிசம் மற்றும் செர்பிய நாட்டுப்புறவியல் பின்னணியிலிருந்து வருபவர், மறுபுறம் லலிக்கின் வேர்கள் ஹோல்டேர்லின் மற்றும் ரில்கேவில் இருந்தன. அவர்களை மொழிபெயர்த்ததன் வழியாக இவ்விதம் முற்றிலும் வேறுபட்ட வழிகளில் எவ்வாறு கவிதைகளை எழுதமுடியும் என்று கற்றுக்கொண்டேன். இது நான் நாற்பதாண்டுகளாக செய்த மற்ற மொழிபெயர்ப்புகளுக்கும் பொருந்தும். நான் எல்லாவகையான கவிஞர்களையும் மொழிபெயர்த்து அதன் வழியாக கவிதைகள் எவ்வாறு உருவாகின்றன என்று தெரிந்துகொண்டேன். இன்னும் முக்கியமாக, மொழிகளை பற்றி, குறிப்பாக என் முதல் மற்றும் இரண்டாம் மொழிகளுக்கு இடையிலான உறவு பற்றி தெரிந்து கொண்டேன். ஒரு மொழியில் கச்சிதமாக பொருள்படும் வார்த்தையை, வரியை அல்லது கவிதையை உங்களால் மற்றோரு மொழிக்கு மொழிபெயர்க்கவே முடியாமல் போகும் என்பதை நீங்கள் கண்டுகொள்ளும் தருணம் பிரம்மிபூட்டுவது. இந்த புதிருக்கான விடை எதுவானாலும் அது அனுபவத்திற்கும் மொழிக்கும் இடையான தொடர்பில் உள்ள ஏதோவொன்றாகத் தான் இருக்க வேண்டும். அத்துடன் ஒரு மொழி எவ்விதமான உலகப்பார்வையை உள்ளடக்குகிறது என்பதும் ஒரு காரணியாக இருக்க வேண்டும். சொல்லப்போனால், இக்கேள்வி கவிதைக்கு மட்டுமானதில்லை, தத்துவமும் சிந்திக்க வேண்டிய ஒன்று.

கேள்வி: மொழிபெயர்க்க முடியாத ஒரு வார்த்தையையோ கவிதையையோ உதாரணமாக சொல்லமுடியுமா?

சிமிக்: வாலஸ் ஸ்டீவன்ஸ்-இன் (Wallace Stevens) “பைன் மரக்காட்டின் கோழிகள்” (Bantams in Pine wood) கவிதையில் உள்ள முதல் இரு வரிகளை சொல்லலாம். ஒரு கவிதை தன்னை வெளிப்படடுத்த எந்த அளவுக்கு மொழியை சார்ந்திருக்கிறதோ, அந்த அளவுக்குஅதை மொழிபெயர்ப்பது கடினம். அதாவது பாடல் தன்மை கொண்ட கவிதைகளில் உள்ளடக்கமென்று எதுவும் இல்லை. அதன் சொல்வளத்தின் அழகும், பாடல் தன்மையும்மே எல்லாமுமாக இருக்கிறது. மொழிபெயர்க்க முடியாத வார்த்தைக்கு உதாரணம் கூறவேண்டுமானால், நான் சந்தித்த ஒரு நபர் குறிப்பிட்டது போல “பிரட்”(Bread) ஐ குறிக்கும் வார்த்தையை எந்த மொழியிலிருந்தும் மொழிபெயர்க்க முடியாது. அகராதியில் அதற்கு இணையான வார்த்தையை கண்டுபிடிக்கலாம், ஆனால் அந்த மற்றோரு வார்த்தை, நாம் “பிரட்” என்று தெரிந்து வைத்திருக்கும் வார்த்தையை ஈடு செய்ய முடியுமா என்ன?

கேள்வி: டூடலே பிட்ஸ் (Dudley Fitts) அவர்களின் சமகால லத்தீன் அமெரிக்க கவிதைகள் தொகுப்பு உங்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக சொல்லியிருக்கிறீர்கள். அந்த தொகுப்பில் தான் நீங்கள் முதலில் பாப்லோ நெரூதா (Pablo Neruda) மற்றும் ஸீஸர் வல்லேஜோ (Cesar Vallejo) ஆகியோரின் படைப்புகளை வாசித்ததாக குறிப்பிட்டீர்கள்.

சிமிக்: ஆமாம், எனக்கு தெரிந்த அற்புதமான புத்தகங்களில் அதுவும் ஒன்று. அந்த கவிஞர்கள் நான் அதுவரை வாசித்திராதவர்கள். தென் அமெரிக்க கவிதைகள் அதன் எல்லைத்தன்மை, பரந்த நிலப்பரப்பு மற்றும் மாகாணத்தன்மை காரணமாக ஒரு வகையில் ஐரோப்பிய கவிதைகளை விட அமெரிக்க கவிதைகளுக்கு நெருக்கமானவை. பிரெஞ்சையோ அல்லது ஜெர்மனையோ விட்மனோ அல்லது டிக்கின்ஸனையோ என்னால் கற்பனை செய்ய இயலாது. ஆனால் அர்ஜென்டினாவில் அல்லது பிரேசிலில் உள்ள கிராமத்தில் கற்பனையில் என்னை பொருத்திக்கொள்வதில் எந்த சிரமும் இருப்பதில்லை. எங்களுக்கும் தென் அமெரிக்காவினருக்கும் இடையே ஆழமான வேறுபாடுகள் உண்டு. எனினும் 1959 களில் அவற்றை படிக்கும்போது அவற்றை நெருக்கமாகவும், முன்மாதிரியாக கொள்ள தகுதியுடையதாகவும் கருதினேன்.

கேள்வி: அறுபதுகளில் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பிரிவில் எந்த பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து படித்தீர்கள்?

சிமிக்: மொழியியயல், குறிப்பாக ரஷ்ய மொழியில். நான் டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, செக்கோவ் ஆகியோரை மூலத்தில் வாசிக்க வேண்டி ரஷ்ய மொழியை தேர்ந்தெடுத்ததாக சொல்வேன். ஆனால் அது உண்மையான காரணம் அல்ல. மொழிகளை பற்றி கற்பது என்னுடைய எழுத்திற்கு பயனளிக்கும் என்று நினைத்தேன். அதோடு எனக்கு ஏற்கனவே ரஷ்ய மொழி ஓரளவு தெரியுமென்பதால் சுலபமாக இருக்குமென்று எண்ணினேன். அப்படி நினைத்தது முற்றிலும் தவறாக இருந்ததது. இறுதியில் நான் பால்டிக் மொழியில் வினைச்சொற்களையும், பழைய ரஷ்ய மொழியின் பெயர்ச்சொல்களையும் மனப்பாடம் செய்யும்படியான நிலைவந்து அதை வெறுத்தேன். வேறெதையும் கற்க சோம்பல் கொண்டு வலுக்கட்டாயமாக அதையே படித்து முடித்தேன்.

கேள்வி: ஒரு கவிஞர் கற்கவேண்டும் என்று எவற்றை பரிந்துரை செய்வீர்கள்?

சிமிக்: கவிதைக்கு எந்த தயாரிப்பும் கல்வியும் தேவையில்லை. ஒரு நல்ல கவிதை தொகுப்பையோ, தத்துவ நூலையோ நான்கு வருட காலம் உங்கள் பையில் வைத்திருந்து தீவிரமாக வாசித்தீர்களென்றால் அது எந்த பல்கலைக்கழக படிக்குப்பும் ஈடானதே.

கேள்வி: நியூயார்க் பள்ளியை சேர்ந்த கவிஞர்களின் படைப்புகளை எப்போது வாசித்தீர்கள்? அவர்கள் உங்களில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு உண்டுபண்ணினார்களா?

சிமிக்: எனக்கு தெரிந்து நான் முதன் முதலாக அவர்களை வாசித்தது அவர்கள் வெளியிட்ட “லோகாஸ் சோலஸ்” என்னும் சிறுபத்திரிகை வாயிலாக. அது எப்போது என்று தெரியுமா?

கேள்வியாளர்: 1961-1962

சிமிக்: ஒருமுறை பிராங்க் ஓ’ஹாரா (Frank O’Hara) வின் கவிதை வாசிப்பிற்கு மெட்ரோ என்னும் இடத்த்திற்கு சென்றேன். அத்துடன் “என் உணர்ச்சிகளின் நினைவாக” என்னும் அவர் கவிதையை நினைவு கூர்ந்து, இதுவரை எழுதப்பட்டதிலேயே மிகச்சிறந்த கவிதை அது என்று நினைத்தேன். நாங்கள் இருவரும் ஒரே பார்களுக்கு சென்றதால், ஒருவொருக்கொருவர் பார்த்து தலையசைத்துக் கொள்ளும் அளவிலேயே பரிச்சயம் இருந்தது. அதைத்தவிர குறிப்பாக வேறெதுவும் நினைவில் இல்லை. ஏனென்றால் அப்போது நிறைய சிறுபத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருந்தன. அவற்றில் நிறைய பேரின் கவிதைகளை வாசித்தேன். ஆஷ்பெரியின் (Ashberry) கவிதைகள் எனக்கு அவ்வளவாக தெரியாது. கோச்-இன் (Koch) கவிதைகள் கொஞ்சம் கூடுதலாக தெரியும். அவ்வளவுதான். தொடக்க காலத்தில் அவர்களை அப்படி தனித்த குழுவாக நான் நிச்சயம் பார்க்கவில்லை. அவர்களை அப்படி பார்ததேல்லாம் வெகு பின்னர் தான்.

கேள்வி: அந்த காலகட்டத்தில் பிரபலமாக இருந்தத ராபர்ட் லோவல் (Roert Lowell), ஜான் பெர்ரிமன் (John Berryman)?

சிமிக்: அவர்களை அப்போது நான் குனிந்தே நோக்கினேன். பல வருடங்களுக்கு பின் என் அபிப்ராயத்தை மாற்றிக்கொண்டேன். ஆனால் அந்த காலகட்டத்தில் அவர்களின் கவிதைகளை பொருட்டாக எண்ணவில்லை, அத்துடன் அவர்கள் என் நட்பு வட்டத்திலும் இருக்கவில்லை.

கேள்வி: அது ஏன்? அவர்களின் படைப்புகள் ஏன் உங்களுக்கு பிடிக்கவில்லை? பின்னர் எது உங்கள் அபிப்ராயத்தை மாற்றியது?

சிமிக்: அவை மிகுந்த சுய உணர்வு கொண்டதாகவும், கூடவே சிறந்த கவிதையை எழுதிவிடவேண்டும் என்ற எத்தனம் மிகுந்திருந்ததாகவும் நினைத்தேன். பிற்பாடு தான் பெர்ரிமன்-இன் கச்சிதமான பாடல்தன்மையையும், மொழி வளத்தையும், லோவல்-இன் வரலாற்று பார்வையையும் பேச்சுவழக்கு திறமையையும் பொருட்படுத்தி மதிக்க துவங்கினேன்.

கேள்வி: இப்போதைய புகழ்பெற்ற கவிஞர்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? சமகால கவிதையின் நிலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சிமிக்: இன்னுமொரு நூறு வருடம் கழித்து என்னிடம் கேளுங்கள்.

கேள்வி: உங்கள் படைப்புகள் இரண்டு பெரும் பிரிவுகளிலும் உள்ள கவிஞர்கள் மற்றும் விமர்சகர்களால் கொண்டாடப்படுகின்றன. இரண்டு பிரிவு என நான் சொல்வது மரபான அமைப்பு சார்ந்த / புதுமையான, வெளிற்தோல் / சிகப்புத்தோல், சமைக்கப்பட்டது/பச்சையானது என்ற அர்த்தத்தில். இந்த கவிதை மோதல்கள் குறித்து எவ்வளவு தூரம் விழிப்புணர்வோடு இருந்தீர்கள்?

சிமிக்: இதைப்பற்றித்தான் நாங்கள் எப்போதும் உரையாடினோம். நாங்கள் விவாதிப்பதற்கு பீட்ஸ் (Beats), சார்லஸ் ஆல்சன்-இன் (Charles Olsen) செய்யுள் வடிவம் மற்றும் ராபர்ட் ப்லை –இன் (Robert Bly) “அறுபதுகள்” நாளிதலில் வெளிவந்த “அமெரிக்க கவிதைகள் பரிந்துரை” என்று நிறைய இருந்தது. நான் சரியாலிச கவிஞர்களான மெர்வின் (Merwin), ஜேம்ஸ் ரைட் (James Wright) மற்றும் ப்லையின் (Bly) பேரில் ஈர்க்கப்பட்டேன். ஆனால் வேறுவகையான கவிதைகளும், கவிதை குறித்த கருத்துகளும் என்னை ஈர்த்தன. எது நல்ல கவிதையை உருவாக்குகிறது என்னும் பிரச்சனை அவ்வளவு எளிதான ஒன்றாக இல்லை. நம் நூறு வருட இலக்கிய வரலாறு எதையேனும் நிரூபிக்கிறதென்றால் அது இது தான். எனக்கு பிராஸ்ட் (Frost), கூடவே ராபர்ட் கிரீலே-யும் (Robert Creely) பிடிக்கும். அதுபோல கெர்ட்ருடேஸ்டீன் (Gertrude Stein), கூடவே டொனால்ட் ஜஸ்டிஸ் –உம் (Donald Justice) பிடிக்கும். இன்று நாம் விவாதித்து சண்டையிட, மொழிக் கவிஞர்கள் என்று சொல்லப்படுகிறவர்களும், புதிய தலைமுறை வடிவவாதிகளும் இருக்கிறார்கள்.  ஆனால் நான் அவற்றை கால விரயம் என்றே நினைக்கிறேன்.

கேள்வி: உங்கள் முதல் இரு புத்தகங்களான “புற்கள் என்ன சொல்கிறது” மற்றும் “நம்மிடையே எங்கோ ஒரு கல் குறிப்பெடுத்து கொண்டிருக்கிறது” ஆகியவை சான்பிரன்சிக்ஸ்கோ வில் உள்ள கயாக் என்னும் ஒரு சிறு பிரசுரத்தால் வெளியிடப்பட்டது. அது எப்படி வெளிவந்தது, என்ன மாதிரியான எதிர்வினை இருந்தது?

சிமிக்: கயாக் கலிஃபோர்னியாவை சேர்ந்த கவிதை இதழ். அது பெரும்பாலும் சர்ரியலிஸ கவிஞர்களையே பிரசுரித்தது. அதன் ஆசிரியர் ஜார்ஜ் ஹிட்ச்காக் ஒரு மேடைநாடக நடிகர், மற்றும் பிரட்டன்(Breton), பேர்ட் (Peret) ஆகியோரால் தாக்கமுற்ற ஒரு கவிஞர். இரண்டு மூன்று வருடங்கள் என் கவிதைகளை இதழில் பிரசுரித்த பின்,  அவற்றை ஒரு புத்தகமாக கொண்டு வர சொன்னார். நான் வெகுவாக மகிழ்ந்தேன். மலிவாக பிரசுரிக்கப்பட்டாலும், கயாக் பரவலாக படிக்கப்பட்டு மதிக்கப்பட இதழ். “புற்கள் என்ன சொல்கிறது” 1967 இல் வெளிவந்தது, அது அந்த இதழ் கொண்டுவந்த இரண்டாவது புத்தகம். அது வெளிவந்த நாள், என் கண்களால் அதை நம்பவே முடியவில்லை. புத்தகம் வெளிவந்ததில் மகிழ்ச்சி அடைந்திருந்தாலும், அது அசிங்கமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தேன். அதை யாரிடமும் காண்பிக்க வெட்கினேன். வேடிக்கை என்னவெனில் அந்த புத்தகம் தான் என்னை பிரபலப்படுத்தியது. அதை கின்ஸ்பேர்க் –இன் (Ginsberg) வெற்றிபெற்ற ஹௌல் –ஐ (Howl) வெளியிட்ட “சிட்டி லைட்ஸ்” நிறுவனம் விநியோகித்தது. அதனால் எங்கும் கிடைத்தது. நிறைய நேர்மறையான மதிப்புரைகள் வெளிவந்தன. கிட்டத்தட்ட எல்லா கவிஞர்களும் அதை வாசித்திருந்தார்கள், அதனால் அவர்களோடு இனைந்து என் அடுத்த புத்தகமான “நம்மிடையே எங்கோ ஒரு கல் குறிப்பெடுத்து கொண்டிருக்கிறது” -ஐ கொண்டு வந்தேன். முன்னை காட்டிலும் அது பார்க்க நன்றாயிருந்ததது, எனினும் தேர்ச்சியடையாத வகையிலே தயாரிக்கப்பட்டது. எனினும் முன்னரே சொன்னது போல நான் பிரபலமடைந்தேன்.

கேள்வி: உங்கள் தேர்தெடுத்த கவிதைகள் தொகுப்பின் புது பதிப்பில் உங்கள் நீண்ட கவிதையான “வெள்ளை” இடம்பெறவில்லை, முந்தைய பதிப்பில் இடம்பெற்ற்றிருந்தாலும் அது இப்போது இல்லை. நீங்கள் அந்த கவிதையை இப்போது ஏற்கவில்லையா?

சிமிக்: இல்லை. அந்த பதிப்பை சிறிய கவிதைகளை வைத்து மட்டும் கொண்டு வர வேண்டும் என நினைத்தேன். “வெள்ளை” எனக்கு மிக பிடித்தமான கவிதை தான். அதில் இப்போது சிறுசிறு மாற்றங்கள் செய்ய வேண்டும் என நான் விரும்பினாலும்.

கேள்வி: “வெள்ளை” கவிதைதான் நீங்கள் முயன்ற ஒரே நெடுங்கவிதையா?

சிமிக்: நான் இளமையில் வேறு பல நெடுங்கவிதைகளை எழுதியிருக்கிறேன். உதாரணத்திற்கு 1957-58 இல் ஸ்பானிய ஆக்கிரமிப்பு பற்றிய ஒரு கவிதை எழுதி  அதை நான் விட்டெறிந்து விட்டேன். வேறு சில முயற்சிகளும் அப்போது செய்தேன் அனால் அதெயெல்லாம் மறப்பதே நல்லது என நினைக்கிறேன். குறைவாகவும் கச்சிதமாகவும் எழுத விரும்பும் இடத்திற்கு வளர்ந்து வந்து விட்டேன். என் புத்தகத்தில் குறைவே அதிகம். நான் எப்போதும் கத்தரித்து கொண்டே இருக்கிறேன், கொஞ்சம் அதிகமாகவே.

கேள்வி: செப்பனிடுதல் உங்கள் எழுத்தில் எப்படி இருக்கிறது? நீங்கள் ஒரே மூச்சில் கவிதைகளை எழுதிவிடுவது உண்டா அல்லது மீண்டும் மீண்டும் திருத்துவீர்களா?

சிமிக்: நான் கல்லறையில் படுத்திருக்கும் போதும் என் கவிதைகளை திருத்திக்கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். பிரசுரித்த கவிதைகளையும் நான் விட்டுவைப்பதில்லை. அரிதாகவே ஒரே மூச்சில் சரியாக எழுதி இருக்கிறேன். பெரும்பாலும் முடிவின்றி மாற்றிக்கொண்டேயிருப்பேன். கவிதையின் பழைய பிரதிகளை நான் வைத்துக்கொள்வதில்லை. ஆனால் சில வேளைகளில் ஒரு கவிதைக்கு நூறு பிரதிகள் வரை சென்றிருக்கும் என்று ஊகிக்கிறேன். அப்படி முடிவில்லாமல் திருத்துவதில் ஒரு அபாயம் உள்ளது. அப்படி செய்து நிறைய கவிதைகளை நாசம் செய்திருக்கிறேன். அவற்றை அதன் வடிவிலேயே சீரற்ற வகையில், உளறலாக, பொருத்தமற்றதாக இருக்கவிடாமல் இடையறாது திருத்தி அதன் ஆன்மாவை காலி செய்திருக்கிறேன். சில வேளைகளில் அது போன்ற பலவீனங்கள் தான் கவிதைக்கு அதன் பொலிவை கொடுக்கிறது, ஆனால் திருத்த முயன்றால் ஒழிய ஒருவர் அதை கண்டடைவது அவ்வளவு எளிதல்ல.

கேள்வி: உங்கள் கவிதைகளில் குறிப்பிடத்தக்க ஒரு அம்சம், எதிர்பாராத படிமங்களை சுருக்கமான, வெட்டப்பட்ட கூறுமுறையுடன் பிணைப்பது. இந்த இறுக்கம் எவ்வாறு வளரச்சி அடைந்தது?

சிமிக்: வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் என்னில் மிகப்பெரிய பாதிப்பை செலுத்தினார். என்னுடைய வடிவமானது கிரேன் (Crane) மற்றும் ஸ்டீவன்ஸ் –ஐ (Stevens) ஆரம்பகாலத்தில் பிரதியெடுத்ததிலும் அவர்களுக்கு எதிர்வினையாற்றிய வகையிலும் உருவானது என நினைக்கிறேன். கலையற்றதும், சாதாரணமானதுமான விஷயத்தை வைத்து அதை மீறிய ஒன்றை வாசகர்களிடம் கடத்தி அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்க நினைத்தேன். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், என் கவிதை ஒரு நாய்க்குக்கூட புரியும் வகையில் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அத்துடன் நான் ஒழுங்கற்ற வார்த்தைகளையும், வினோதமான உருவகங்களையும், துணுக்குற வைக்கும் படிமங்களையும், செழிப்பான மொழிவளத்தையும் விரும்பினேன். எனவே நான் விபச்சார விடுதியில் ஒரு துறவி போல இருந்தேன். வாயில் காய்ந்த ரொட்டி துண்டை மென்று கொண்டு, பெண்கள் மது அருந்துவதையும் பூப்பின்னல் வைத்த உள்ளாடைகளில் அவர்கள் அணிவகுத்து செல்வதையும் பார்த்துக் கொண்டிருக்கும் துறவி.

கேள்வி: போருக்கு பிந்தைய அமெரிக்க கவிதை வரைபடத்தில் உங்களை பொருத்தவேண்டும் என்றால் சார்லஸ் ரைட் (Charles Wright) மற்றும் ஜேம்ஸ் டேட் (James Tate) ஆகியோருக்கு அருகில் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன், அது சரியா?

சிமிக்: கண்டிப்பாக. அவர்கள் எப்போதுமே எனக்கு அணுக்கமானவர்கள். நான் சார்லஸ் ரைட்-ஐ சந்தித்தது 1963-இல் பிரான்சில் ராணுவத்தில் இருந்த போது. அப்போதிலிருந்து இன்றுவரை நாங்கள் நண்பர்களாவே இருக்கிறோம். முப்பது வருடங்களுக்கு முன், நாங்களெல்லாம் நவ-சர்ரியலிஸ கவிஞர்கள் என்று முத்திரை குத்தப் பட்டு அறிவுத்தரப்பு எதிராக, அர்த்தங்களற்ற, சுய மோக கவிதைகளை எழுதுவதாக வசைபாடப் பட்டோம். இம்மாதிரி முத்திரைகளை நாங்கள் பொருட்படுத்தவே இல்லை. சர்ரியலிஸம் அது நீடித்தவரை வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் இருந்தது. ஆனால் அது எப்போதே மரித்துப் போய்விட்டது. நாங்கள் நிறைய படிமங்களை கவிதைகளில் பயன்படுத்தி அதன்வழி கணிக்கமுடியாத அளவு முன்நகர்ந்தோம். எனினும் அது ஒரு பெரிய விஷயமாக இருக்கவில்லை. அதை நிரூபிக்கும் பொருட்டு நியூயார்க் பொது நூலகத்தில் 1963-64 களில் அமெரிக்க நாட்டுப்புறவியல் பற்றி ஒரு சிறு ஆய்வு செய்தேன். அதில் குறிப்பாக மாயாஜால கூறுமுறைகளில், குழந்தைப் பாடல்களில், மூடநம்பிக்கைகளில், புதிர்களில், பழமொழிகளில் ஆர்வம் கொண்டிருந்தேன். “வெள்ளரி பழங்களில் இருந்து சூரிய ஒளிகளை பிரித்தெடுத்தல்” போன்ற சொற்றோடர்களை கவனித்து தனியே ஒரு குறிப்பேட்டில் எழுதி வைப்பேன். அத்தகைய பூர்வீக சர்ரியலிஸ உருவக குறிப்புகளை தொகுத்தது வெளியிட்டு, ஒன்றும் தெரியாத இலக்கியவாதிகளின் வாயை அடைத்து எங்களை தனியே விட்டுவிட செய்யலாம் என்று எண்ணினேன். அந்த குறிப்பேடு முழுக்க நிரம்பியபின் ஒரு நாள் அதை நடைபாதையில் தொலைத்துவிட்டேன், அதனால் அது நிறைவேறவில்லை. அதை கொண்டு யாருக்கும் நிரூபிக்க முடியவில்லை. எனினும் என்னக்கு நானே நிரூபித்துக் கொண்டதில் நிறைவடைந்தேன்.

கேள்வி: நிறைய இலக்கியவாதிகள் ஆழ்படிம கவிஞர்களான மெர்வின்(Merwin), ப்லை(Bly), மார்க் ஸ்டராண்ட் (Mark Strand) மற்றும் ஜேம்ஸ் ரைட் (James Wright) ஆகியோரின் வாரிசாக உங்களையும் டேட்டையும் (Tate)  குறிப்பிடுவது  எனக்கு புதிராக இருக்கிறது. அவர்களை எல்லோரையும் விட உங்கள் கவிதைகள் நகைச்சுவை அதிகமும் இடம்பெறுகிறது.

சிமிக்: ஸ்ட்ராண்டின் கவிதைகளில் நகைச்சுவை உண்டு. ஆனால் நாங்கள் அவர்கள் பள்ளியை சேர்ந்தவர்கள் இல்லை. எங்கள் கவிதைகளில் உள்ள விளையாட்டுதனமும், வேடிக்கையும் எங்களை நியூயார்க் பள்ளிக்கே மிக நெருக்கமாக ஆக்குகிறது. எங்களுக்கு கற்பிக்கவென்று எதுவும் இல்லை. நாங்கள் இயற்கையை வழிபடுவதில்லை போலவே வாசகர்களிடம் நாங்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டோம் என்று கூறுவதும் கிடையாது. டேட் ஓரிடத்தில் இப்படி குறிப்பிடுகிறார் “அது ஒரு துயரமான கதை, ஆனால் அதுதான் அதிலுள்ள வேடிக்கையே”. அதை நானும் ஒப்புக்கொள்கிறேன்.தங்களை பற்றியும், உலகத்தை பற்றியும் அறிவீனமான விஷயங்களை நம்பும் லட்சக்கணக்கான முட்டாள்களால் நிரம்பியது எங்கள் நாடு. ஆனால் கவிதையென்று வரும்போது தீவிரத்தன்மையே கணக்கில் கொள்ளப்படும். வேடிக்கை அமெரிக்கத்தன்மைக்கு அந்நியமாக ஆகிறது. டேட்டிடம் எனக்கு பிடித்த விஷயம் என்னவெனில், மலைமுகடில் ஒரு ஜூன் மாத மாலையில் சூரியன் மறையும் வேளைதான் என்று இல்லாமல், மனிதர் புரிந்து கொள்ளக்கூடிய எந்த சூழ்நிலையிலும் கவிதை பிறக்கவியலும் என்னும் கற்பனையில் அவர் கொண்டிருக்கும் முழு நம்பிக்கை. அவர் பண்பற்ற, அறிவார்ந்த, என்னைக்காட்டிலும் துணிவுகொண்ட கவிஞர். அவரின் உதாரணங்களையே என்னால் எட்ட முடியும்.

கேள்வி: நீங்கள் 1970-இல் கலிபோர்னியாவில் ஆசிரியராக பணியில் சேர்ந்து பின்னர் 1973 ஆம் வருடம் நியூ ஹாம்ப்ஷயர் பல்கலைக்கழகத்திற்கு பணியாற்ற சென்று இறுதிவரை அங்கேயே ஆசிரியராக இருந்தீர்கள். கவிதையை கற்றுக்கொடுக்கும் இந்த சமாச்சாரம் உங்கள் எழுத்தை எவ்விதமேனும் பாதித்ததா?

சிமிக்: அது நிறைய இலக்கிய ஆக்கங்களை படிக்கவும், மீள்வாசிப்பு செய்யவும் வைத்தது. கூடவே வகுப்புகளில் கருத்துகளை உருவாக்கி சொல்லவும், அக்கருத்துகளை புத்திசாலி மாணவர்கள் மறுக்கும்போது என்னை மறுசிந்தனையில் ஈடுபடவும் வழி செய்தது. என் கற்பித்தல் பணியை விட, அத்துணை வருடங்கள் நான் மேற்கொண்ட அபரிதமான வாசிப்பே என் எழுத்தை பாதித்தது.

கேள்வி: கடந்த முப்பது வருடங்களாக நீங்கள் பிரித்தானியராக இருக்கிறீர்கள். பிரிட்ட்டிஷ் எழுத்தாளர்களில் உங்களுக்கு முக்கியமானவர்களாகப் படுபவர்கள் யார்?

சிமிக்:  எமிலி டிக்கின்ஸன் (Emily Dickison), எமர்சன் (Emerson), ஹாத்ரோன் (Hawthorne) மற்றும் பிராஸ்ட் (Frost) ஆகியோரைச் சொல்வேன். இங்கிலாந்து வரும் வரை பிராஸ்ட்-ஐ அவ்வளவாக நான் கருத்தில் கொண்டிருக்கவில்லை. ஆனால் இங்கு வந்த பிறகு அவர் கவிதைகளில் உள்ள இயற்கை காட்சிகளில்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் என்பதை உணர்ந்தேன். நான் ஜன்னலுக்கு வெளியே காணும் எல்லா மரமும், பறவையும்  அவர் கவிதையில் பேசப்பட்டிருப்பதை பார்க்கிறேன். அப்புறம் அவரும் பிற பிரிட்ட்டிஷ் எழுத்தாளர்களும் எழுப்புகிற அனைத்து வகையான தத்துவ, அழகியல் கேள்விகளோடும் நான் ஒத்துப்போகிறேன். நான் வசிக்கும் இடத்தில் வசிக்கும் ஒருவரால் அவருடனான உரையாடலில் இல்லாமல் இருக்கவே முடியாது. நான் காட்டிற்குள் நடை செல்லும்போது, என்னுடன் வரும் நாயும் ஹென்றி டேவிட் தோரோவின் (Henry David Thoreau) எழுத்துகளுக்கு பரிச்சயமானது போலவும் அவரின் குறிப்பிட்ட சில கருத்துகளை பற்றி என்ன என்ன அபிப்ராயம் கொண்டிருக்கிறேன் என்று தெரிந்து கொள்ள அது ஆவல் கொண்டிருப்பது போலவும் தோன்றும்.

கேள்வி: வாலஸ் ஸ்டீவன்ஸ் (Wallace Stevens) குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

சிமிக்: ஸ்டீவன்ஸ் ஒரு மகத்தான கவிஞர். புத்திசாலியான மனிதர் கூட. ரொமான்டிக்ஸ், எமர்சன், விட்மன், வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் போன்றோர் எதை மையப்படுத்தினார்கள் என்று அவருக்கு புரிந்திருந்தது. அதாவது கவிதை பற்றிய எந்த வரையறையும் இறுதியில் யதார்த்தம் பற்றிய வரையறை தான் என்று. எனக்கு ஆர்வமூட்டும் தத்துவ வரையறைகள் கொண்டிருக்கும் கவிதைகளை பிடிக்கும். எனவே அவரின் கவிதைகளையும் பிடிக்கும். டிக்கின்ஸன், பிராஸ்ட் மற்றும் ஸ்டீவன்ஸ் இடையே இருந்த பொது அம்சம், அவர்களால் ஒரு சாதாரண அனுபவத்தை கொண்டு, பாடல் தன்மை கொண்ட, அதே சமயம் எல்லா வகையான மீபொருண்மை கேள்விகளையும் உள்ளடக்கிய கவிதையை உருவாக்க முடிவது தான். ஸ்டீவன்ஸின் “பனி மனிதன்”, டிக்கின்ஸன் -இன் “ஒளியின் ஒரு குறிப்பிட்ட கோணம்” மற்றும் பிராஸ்டின் “ஒரு வயோதிக மனிதனின் குளிர்கால இரவு” இவையெல்லாம் எனக்கு பிடித்தமான கவிதைகள்.

கேள்வி: ஜோசப் கார்னெல் (Joseph Cornell) உங்கள் மீது செலுத்திய தாக்கம் பற்றி பேசலாம் என்று நினைக்கிறேன். 1992-இல் நீங்கள் எழுதிய “டைம்-ஸ்டோர் அல்கெமி” கவிதை ஒருவகையில் அவருக்கான அஞ்சலி. அவரை எப்போது கண்டடைந்தீர்கள்?

சிமிக்: 1950 களில் நான் தொடர்ந்து சர்ரியஸிஸ புத்தகங்களை வாசித்த போது அவரை முதலில் கண்டடைந்தேன். சர்ரியலிஸ எழுத்தாளர்களில் அவர் மட்டுமே அமெரிக்காவை சேர்ந்தவர். எனவே அவர் தனித்து தெரிந்தார். அவர் கலை வேலைப்பாடுகளாஅன தன் பெட்டிகளை எப்படி உருவாக்குகிறார் என்று நான் புரிந்து கொண்ட போது, அவர் என் ஆன்ம சகோதரர் என்று தெரிந்துகொண்டேன். நகர் முழுக்க சுற்றியலைந்து முற்றிலும் பயனற்ற வினோதமான பொருட்களை அவர் சேகரித்து வருவார். கார்னெல்-இன் பெட்டி என்பது ஒரு கவிதை போல முற்றிலும் சம்பந்தமற்ற விஷயங்கள் ஒன்று சேர்ந்து பார்வையாளருக்கு ஒரு அழகியல் அனுபவத்தை கொடுப்பது. கார்னெல்-இன் கலைகளில் அழகு என்பது ஒருவர் கண்டடைவது. அவரை நான் சந்தித்ததில்லை. ஆனால் அவருக்கு பரிச்சயமுள்ளவர்களை எனக்கு தெரிந்திருந்ததது. கார்னெல் இப்படி சொல்வார், இருபத்தியெட்டாம் சாலையில் உள்ள ரயில் நிலையத்தில் உடைந்த கண்ணாடியுடன் ஒரு அற்புதமான மிட்டாய்கள் விநியோகிக்கும் இயந்திரம் உள்ளது; அது மிக அழகான இருக்கிறது. நியூ யார்க் நகரை அந்த வகையில் பார்க்கும் முறை எனக்கு சரியானதாய் பட்டது.

கேள்வி: உங்கள் கவிதைகளில் இடம்பெறும் நகர் சார்ந்த காட்சிகள் இருண்ட Noir திரைப்படங்களின் தன்மையை கொண்டிருக்கின்றன. “ஹோட்டல் இன்சோம்னியா” ,”ஹோட்டல் ஸ்டார்ர்ரி ஸ்கை” இரண்டையும் உதாரணங்களாக சொல்லலாம். திரைப்படங்களுடனான காதல் உங்களுக்கு எப்போது ஏற்பட்டது?

சிமிக்: எனக்கு பத்து அல்லது பதினொன்று வயது இருக்கும் போது. அதற்கு முன்னும் நிறைய படங்களை பார்த்திருக்கிறேன். ஆனால் Noir படங்களை பார்க்கிறவரையில் ஒரு நகரத்தின் கவித்துவத்தை நான் அறியவில்லை. நான் வளர்ந்த பெல்கிரேட் ஒரு இருளார்ந்த நகரம். போரின் போதும் போருக்கு பின்னரும் ஆபத்தான ஒரு நகரம். தூக்கமற்ற இரவுகளில் ஜன்னலுக்கு வெளியே பார்க்கும்போது தெரியும் மழையில் நனைந்த தெருக்களின் தொடர்ச்சியாகவே இவ்வகை அமெரிக்க திரைப்படங்கள் இருக்கின்றன. என் நெருங்கிய நண்பர்களுக்கு இந்த திரைப்படங்கள் எனக்கு பிடித்த அளவு பிடிக்கவில்லை என்று தெரிந்துகொண்டபோது உணர்ந்த வலியை இப்போது நினைவுக்கூர்கிறேன். அது எப்படி சாத்தியம் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

கேள்வி: உங்களுக்கு பிடித்த திரைப்படங்கள் எவை?

சிமிக்: தி அசபால்ட ஜங்கிள் (The Asphalt Jungle), தி நேக்கட் சிட்டி (The Naked City), தி ப்ளூ டாலியா (The Blue Dahlia), அவுட் ஆப் தி பாஸ்ட் (Out of the past), லாரா (Laura), மற்றும் பல.

கேள்வி: கவிதையை தாண்டி உங்களுடைய பிற ஆர்வம்-அமெரிக்க இசை. குறிப்பாக ஜாஸ் மற்றும் ப்ளூஸ். அதைப்பற்றி கூறுங்கள்.

சிமிக்: பெல்கிரேட் நகரத்தில் நான் ரேடியோ-வில் நிறைய ஜாஸ் இசை கேட்டிருக்கிறேன். க்ளென் மில்லர் மற்றும் பிக்-பேண்ட் ஜாஸ் யூகோஸ்லோவியாவில் மிக பிரபலம். பாரிசுக்கு சென்ற பின்னர் சார்லி பார்க்கர், மோங்க், டேவிஸ் மற்றும் பட் பவல் ஆகியோரை கண்டுகொண்டேன். நியூயார்க்கில் என் தந்தையுடன் நேரிடையாக ஜாஸ் நிகழ்வுகளுக்கு சென்றிருக்கிறேன். அத்தோடு பலமணி நேரங்கள் ரேடியோவில் ஜாஸ் கேட்டிருக்கிறேன். என்னிடம் ஏராளமான சேகரிப்புகள் இருந்தன. ஒரு விஷயத்தில் ஆர்வம் வந்துவிட்டால், அதுபற்றி எனக்கு அனைத்தையுமே தெரிந்துகொள்ள வேண்டும். 1920 முதல் 1960 வரை பதிவுசெய்யப்பட்ட அத்தனை ஜாஸ் பாடல்களையும் கிட்டத்தட்ட கேட்டிருப்பேன் என்று துணிந்து கூறுவேன். ப்ளூஸ் இசையை பொறுத்தவரையிலும் அதே மாதிரி தான். பால் ஹோவர்ட் (Paul Howard) -இன் குவாலிட்டி செரென்டெர்ஸ் (Quality Serenaders), ஜெபா ஸ்மித் (Jabbo Smith), கிரிப்பில் கிளாரென்ஸ் லோப்டன் (Cripple Clarence Lofton) போன்றவற்றை எவ்வளவு பேர் கேட்டிருப்பார்கள்? வெகு சிலரே. இவை என் கவிதையில் தாக்கத்தை ஏற்படுத்தினவா? இருக்கலாம். ஆனால் எந்த வழியில் என்று எனக்கு தெரியாது.  அமெரிக்காவின் இதயம் எங்கிருக்கிறதென்று தெரியவேண்டுமானால் நீங்கள் ப்ளூஸ் பாடல்களையும் நாட்டுப்புற இசையையும் கேட்க வேண்டும். ப்ளூஸ் இசையின் ஆகச்சிறந்த விஷயம் சிக்கனமான வரிகளில் சிக்கலான மனித நாடகங்களை கடத்துவது தான். ஒரு உதாரணமாக,

“நன் சொன்னேன், இனிய காலை வணக்கம் மிஸ்டர் அடகுக்கடை காரரே!
சொன்னவாறே கடைக்குள் நுழைந்தேன். இந்த காலையை மோசமாக உணர்கிறேன்.
கண்டிப்பாக என்னுடைய .44. எனக்கு வேண்டும்
நேற்றிரவு பார்ட்டிக்கு சென்றிருந்தேன்
நள்ளிரவு இரண்டு மணி வரை இருந்தேன். இன்று இரவும் மீண்டும் அங்கு செல்வேன்
நான் சிலவற்றை சுட வேண்டி இருக்கலாம்”

இது 1929 ஆம் ஆண்டு ரூஸ்வெல்ட் ஸ்கைஸ் (Roosevelt Sykes) பியானோ வாசித்தது பாடி பதிவு செய்தது. பாடல் வரிகள் இன்னமும் இருக்கின்றன. எனினும் இதுவே நான் சொல்ல விரும்பும் சித்திரத்தை அளித்துவிடும்

கேள்வி: நான் ஒருமுறை ஆலன் கின்ஸ்பேர்க்-ஐ பேட்டி கண்டபோது, அவர் ஏன் இப்படி தான் எழுதுகிற விதத்தில் எழுதுகிறார் என்று. அதற்கு அவர் “ஏனென்றால் நான் அப்படி தான் எழுதுகிறேன்” என்று பதில் சொன்னார். ஏன் இப்படி ஒரு குறிப்பிட்ட விதத்தில் எழுதுகிறீர்கள் என்ற கேள்விக்கு கவிஞர்கள் விளக்கி சொல்வதற்கு மேலதிகமாக ஏதாவது இருக்கிறதா?

சிமிக்: இருக்காதென்று நினைக்கிறேன். கடவுளை எரிச்சலூட்டவும், மரணத்தை சிரிக்க வைக்கவும் நான் எழுதுகிறேன். என்னால் மிகச் சரியாக எழுத முடியாததால் எழுதுகிறேன். உலகிலுள்ள அத்தனை பெண்களையும் என்மேல் காதல் கொள்ள செய்வதற்காக நான் எழுதுகிறேன். ஒருவர் இதுபோல புத்திசாலித்தனமாக சொல்லலாம். ஆனால் கடைசியில் எல்லாமே கின்ஸ்பேர்க் சொன்னதில்தான் முடியும்.

கேள்வி: நாற்பதாண்டுகளாக கவிதை எழுதுவதில் ஆரம்பத்திலிருந்து இப்போது வரை உங்கள் குரல் எவ்வாறு முதிர்ச்சியடைந்து வந்துள்ளது என்று விளக்க முடியுமா?

சிமிக்: என் ஆரம்ப கவிதைகளில் ஓசை நயத்தை பொருட்படுத்தாமல், முழுக்க முழுக்க எளிமையான சொற்களாள் படிமங்களை உருவாக்குவதே என் நோக்கமாக இருந்ததது. அங்கிருந்து படிப்படியாக கவிதையின் மொழி மற்றும் ஓசை நயம் மேல் என் கவனம் நகர ஆரம்பித்திருப்பதாக நினைக்கிறேன். பிறகு நிறைய சுயசரிதை கூறுகளும் நிறைய விவரணைகளும் வந்திருக்கின்றன. நகர்ப்புற கவிஞனான அதேயளவு கிராமிய கவிஞனாகவும் ஆனேன். இயல்பாக என்னிடம் எனக்கேயுரிய பிடிவாதங்கள், கெட்ட பழக்கங்கள், காணத் தவறும் விஷயங்கள் எல்லாம் இன்னமும் உண்டு. இவ்வளவு காலம் எழுதிய எல்லா கவிஞர்களைப் போல என்னிடமும் கூறியது கூறல் உண்டு. அது. இல்லாமல் இருந்திருக்க விருப்பம் தான். அதே நேரம் ஒரேவகையான பழைய விஷயங்களை தினம் தினம் இரவு தூக்கமில்லாமல் நான் நினைத்துப் பார்ப்பதுண்டு.

கேள்வி: சமீபத்திய அரசியல் காட்சிகள்- குறிப்பாக யோகோஸ்லோவியாவில் நடந்தேறிய நிகழ்வுகள்- இரவில் உங்களை தூங்கவிடாமல் எண்ணச் செய்யும் விஷயமாக இருந்திருக்க வேண்டும். தொன்னூறுகளில் பல்கன்ஸ் இல் வெடித்த பல்வேறு குழப்பங்களை நீங்கள் எதிர்பார்த்திருந்தீர்களா?

சிமிக்: அது ஒரு வினோதமான உணர்வு. அவை நடக்குமென்றும் எதிர்பார்த்திருந்தேன். அதே போல நடக்காது என்றும் எதிர்பார்த்திருந்தேன். தேசியவாதம் எல்லா இடத்திலும் முன்னணியில் இருந்தது. செர்பியாவில் மிலோஸ்விக் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய கொள்கைகள் ரத்த வெள்ளத்திற்க்கே இட்டுச்செல்லும் என்று தெரிந்தித்திருந்ததது. எனினும் எல்லாரையும் போல அவர் உண்மையில் இன்னும் அறிவார்ந்தவர் என்று நினைத்திருந்தேன். எல்லா சமூகத்திலும் கொல்லக்கூடியவர்களும் உண்டு, கொல்ல இயலாதவர்களும் உண்டு. என் கணிப்பு தவறாய் முடிந்தது. ஸ்ரெப்ரெனிக்கா படுகொலையை யாரால் கணித்திருக்க முடியும்? கண்மூடித்தனமான ஆதரவாளர்களாக மாறிய பல நண்பர்களின் நட்பை நான் இழந்தேன். அது ஒரு மோசமான காலகட்டம். தேசியவாதம் ஒட்டுமொத்தமாக ஒரு முட்டாள்தனம். சுயமோகத்தின் ஒரு வடிவம். லட்சக்கணக்கான மக்கள் ஒரு கற்பனையான கண்ணாடியின் முன் தங்களை கடவுளின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்வது அது. அவர்களின் மகிழ்ச்சி மற்றவர்களின் துக்கத்திலிருந்து மட்டுமே வரமுடியுமென்பதால் மற்றவர்களை துன்புறுத்துகிறார்கள். கொலையும் செய்கிறார்கள். அதே நேரம் அதில் ஒரு தற்கொலை தன்மையும் உண்டு. இறுதியில் அவர்களுக்கு ஒரு மோசமான முடிவே எஞ்சுகிறது. பல்கன்ஸ் தேசியவாதத்தின் கதை என்னவென்றால், எல்லோரும் அவர்களுக்கு இழைக்கப்பட்டதை ஞாபகம் வைத்திருந்தார்கள். ஆனால் அவர்கள் மற்றவர்களுக்கு செய்ததை மறந்து விட்டிருந்தார்கள். நான் தொடர்ந்து அவர்களுக்கு ஞாபகமூட்டிக்கொண்டே இருந்தேன். அவர்கள் என்னை தொடர்ந்து துரோகி என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

கேள்வி: கடைசியாக நீங்கள் பெல்கிரேட் சென்றது எப்போது?

சிமிக்: 1982-இல் அங்கு சென்றிருந்தேன். எனக்கு புல்ப்ரயிட் பெல்லோவ்ஷிப் கிடைத்து ஒரு கோடை முழுவதும் எல்லா இடங்களுக்கும் பயணித்தேன். அது எனக்கு மகிழ்ச்சியான ஒரு பயணமாக இருந்தது. ஆனால் 1972 ஐ விட அப்போது இன்னும் அந்நியமாக உணர்ந்தேன். பெரும்பாலான எழுத்தாளர்களும், அறிவுஜீவிகளும் தங்களை கம்யூனிஸ்ட்களாகவோ அல்லது குறைந்த பட்சம் மார்க்சிஸ்ட்களாகவோ பாவித்துக் கொண்டார்கள். அதனால் அங்கு சில விஷயங்களை ஒருவர் கேள்வி கேட்கவோ விமர்சிக்கவோ முடியாமல் போனது. எப்போதும் போல உரையாட முடியாமல் போய் ஒரு கட்டத்துக்கு மேல் சோர்வடைந்துவிட்டேன். மிலோஸ்விக் ஆட்சியில் இருந்த சமயத்தில் சூழல் அப்படி இருக்கவில்லை. ஆளும் அரசுக்கு எதிரான பத்திரிக்கைகளில் நான் – மற்ற மேற்குலக இடங்களைக்காட்டிலும்- சுதந்திரத்துடனும், தைரியத்துடனும் எழுதினேன்.

கேள்வி: நீங்கள் வரலாற்று நெருக்கடிகளையோ பேரழிவுகளையோ நேரடியாக எழுதுவது இல்லை. எனினும் உங்கள் கவிதைகளான “வரலாற்றை வாசித்தல்” மற்றும் “பேரரசுகள்” பல்கன்ஸ்-இல் நடந்த போரை கருத்தில் கொண்டு தொன்னூறுகளின் துவக்கத்தில் எழுதப்பட்டவை இல்லையா?

சிமிக்: கண்டிப்பாக அந்த கவிதைகளில் அது அடிநாதமாக இருந்தது. சீன, இந்திய வரலாறு பற்றி ஏராளமான புத்தகங்களை படித்தபின் எழுதப்பட்டது தான் “வரலாற்றை வாசித்தல்” கவிதை. ஒவ்வொரு புத்தகத்திலும் ஒவ்வொரு சில பக்கங்களுக்கும் திரும்ப திரும்ப படுகொலையும், அட்டூழியமும், பெரும் கொலைகள் நிகழும் போர்களும் வந்து கொண்டே இருப்பது என்னை யோசிக்க வைத்தது. “பேரரசுகள்” கவிதை என் தாய் வழி பாட்டியை பற்றியது. அவர் 1948-இல் எனக்கு பத்து வயதாக இருந்தபோது இறந்தார். சிறு வயதிலிருந்தே என் பெற்றோர் வேலையாக இருந்தபோதெல்லாம் அவர்தான் என்னை பார்த்துக்கொண்டார். ஹிட்லர், ஸ்டாலின், முசோலினி போன்றவர்களின் பேச்சுகளை அவர் ரேடியோவில் எப்போதும் கேட்பார். எனக்கு அப்போது எதுவும் புரியவில்லை. பாட்டிக்கு பல மொழிகள் தெரிந்திருந்தன. அவர் மிகுந்த விரக்தியிலும் இருந்தார். தான் கேட்ட பொய்களிலிருந்து அவரால் வெளியே வர முடியவில்லை. இந்த உலகிற்கு என்ன ஆயிற்று என்று எல்லோரையும் கேட்டுக் கொண்டேயிருப்பார். அதுவொரு நல்ல கேள்வி. அதற்கு நான் இன்னும் விடை தேடிக்கொண்டிருக்கிறேன். என் வாழ்நாளில் நிறைய போர்களும் கொலைகளும் நிகழ்ந்தன. நானும் என் பாட்டியை போலவே எதையும் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கிறேன். அத்துணை எளிதாகவும் குரூரத்துடனும் அவ்வளவு மனிதர்களை மரணத்திற்கு தள்ளியது இப்போது வரை என்னை வியப்பில் ஆழத்துகிறது. எதோ வரலாற்றில் இதற்க்கு முன் இருந்திடாதது போன்று, படுகொலை மூலமாக உலகத்தை மேம்பட்டதாக மாற்றிவிடலாம் என்னும் கருத்து அமெரிக்க அறிவுஜீவிகளிடையே பிரபலமாக இருக்கிறது. இதுப் பற்றியெல்லாம் நான் எப்போதும் யோசிக்கிறேன்.

கேள்வி: “எனக்கிருப்பது குரல் மட்டுமே, கண்ணில் கட்டப்படும் பொய்யை அவிழ்ப்பதற்கு” என்று ஆதன் “செப்டம்பர் 1, 1939” கவிதையில் எழுதுகிறார்.எனினும் அவர் அந்த கவிதையை திரும்பபெற்றுக் கொண்டார். எனக்கென்னவோ உங்கள் கவிதைகள் பெரும்பாலும் நம் கண்களில் கட்டியிருக்கும் பொய்யை அவிழ்க்க, அல்லது குறைந்த பட்சம் அரசியல்வாதிகளும் அறிவுஜீவிகளும் நம்மிடமிருந்து மறைக்கும் சிக்கல்களை அம்பலப்படுத்துவதற்கு விரும்புவதாக படுகிறது.

சிமிக்: அவ்வாறு நடக்கவேண்டும் என்றே நானும் விரும்புகிறேன். என்னை பொறுத்தவரை கவிதை என்பது தனிமனிதனை அவனுக்கு எதிரான அத்தனை விசைகளிடமிருந்தும் காப்பாற்றும் கேடயம். ஒவ்வொரு மதமும், சித்தாந்தமும், சிந்தனை முறையும் மனிதனுக்கு கற்பித்து, அவனை வேறொருவனாக மாற்றவே விரும்புகிறது. எல்லோரும் ஒரே பாடலை பாடுவது தான் குறிக்கோள். ஓர் உண்மையான தேசபக்தன் தனக்காக சிந்திப்பதில்லை என்றே அவை சொல்லும். அதிகாரத்திடம் உண்மையை பேசாமல், அதற்கு மாறாக அடிபணியும் நீண்ட மரபு ஒன்று கவிதையில் இருப்பதை நான் அறிவேன். ஆனால் அதில் எனக்கு உடன்பாடில்லை.

கேள்வி: மறுபுறம், என்னை பொறுத்தவரையில் உங்கள் படைப்புகளில் உள்ள தலையாய இன்பம் என்பது, வாழ்க்கையின் அன்றாட சந்தோஷங்களை நினைவுறுத்துவதும், முடிந்தமட்டிலும் அவற்றை அனுபவிப்பதும் தான். உதாரணத்திற்கு பொறித்த இறால், உருளைக்கிழங்கு, வறுத்த ஆட்டிறைச்சி, சிகப்பு வைன்….

சிமிக்: வெங்காயமும் உருளைகிழங்கும் சேர்த்து வதக்கிய கொத்துக் கறியை மறந்துவிடாதீர்கள்! கூடவே, ஒன்றோ இரண்டோ தத்துவவாதிகளை கையில் வைத்திருப்பது இன்னும் நல்லது. பன்றிக்கறியை வேகவைக்கும்போது கூடவே பிளாட்டோவிலிருந்து இரண்டு பக்கங்கள். ஒரு கப் கடல் சிப்பிகள் சேர்த்த பாஸ்தாவுடன் விட்கன்ஸ்டைனின் ட்ராக்டட்ஸ். இப்படி எதிரெதிர் விஷயங்களை ஒன்றாக இணைக்கும்போதே நாம் சிறப்பாக சிந்திக்கிறோம். எல்லா நடைமுறைகளும் ஒன்றோடொன்று ஒருவகையில் தொடர்புடையது என்பதை உணர்கிறோம். அப்படிதான் கவிதையிலும் தத்துவத்திலும், அவற்றுக்கு அவசியமான விந்தையும் வியப்பும் உருவாகின்றன. அன்றாட வாழ்க்கை இன்பங்களிலிருந்து துண்டித்து சுத்திகரிக்கப்பட்ட ஒர் “உண்மை” பிரயோஜனமற்றது என்பது என் கருத்து. எல்லா மகத்தான சிந்தனைகளும், மேலான உணர்ச்சிகளும் முதலில் சமயலறையிலும் பின்னர் படுக்கையறையிலும் பரிசோதிக்கப்பட வேண்டும்.

ஜனார்த்தனன் இளங்கோ

ஜனார்த்தனன் இளங்கோ, மென்பொருள் பொறியியலாளர். சொந்த ஊர் திருவாரூரைச் சேர்ந்த திருத்துறைப்பூண்டி. இலக்கியம் தவிர தத்துவம், கட்டிடக்கலை, பறவையியல் ஆகிய துறைகளில் ஆர்வமுண்டு.

உரையாடலுக்கு

Your email address will not be published.