“அகழ்” மார்ச் இதழ் வெளியாகிறது. காலாண்டினை நிறைவு செய்திருக்கும் நிலையில் இதுவரையிலான இதழ்களுக்கு வாசகர்கள் அளித்த எதிர்வினைகள் எங்களுக்கு உற்சாகமூட்டுகின்றன. “அகழ்” இதழின் தீவிரத்தன்மையின் மேல் சூழலில் உருவாகிவரும் நம்பிக்கை தொடர்ந்து இயங்குவதற்கான உந்துசக்தியாக இருக்கிறது.
பொதுச் சூழலால், கண்டுகொள்ளப்படாத விஷயங்களின் பேரில் கவனம் கொண்டு வருவதற்காகவே சிற்றிதழ் இயக்கம் துவங்கியது. ஒத்த சிந்தனை உடையவர்கள் இணைந்து பங்காற்றுவதற்கான களமாக சிற்றிதழ்கள் இருந்தன. “அகழ்” இதழும் இந்த நோக்கங்களின்பால் உறுதியோடு நிற்கிறது. தமிழ்ச் சூழலில் அதிகம் விவாதிக்கப்படாத இந்திய தத்துவயியல், புகைப்படக் கலை ஆகிய துறைகள் சார்ந்து படைப்புகள் வெளியிடுவதில் எங்களுக்கு மகிழ்ச்சி. அப்படைப்புகள் உருவாக்கும் கவனத்தை அறியும்போது திருப்தியாய் உணர்கிறோம்.
“அகழ்” இதழ் தொடர்ந்து மொழிபெயர்ப்புகளும் வெளியிடுகிறது. “கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” என்பது நம் முன்னோடி பாரதியின் கட்டளை. நவீன தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியில் மொழிபெயர்ப்புகளுக்கு ஒரு முக்கிய பங்கிருக்கிறது. அதன் தொடர்ச்சியாகவே நாங்களும் மொழிபெயர்ப்புகளை தேர்வு செய்கிறோம். மேற்கத்திய கலை இலக்கியத்தோடு நின்றுவிடாமல் வருங்காலத்தில் கிழக்கத்திய பிரதேசங்களிலிருந்தும் மொழிபெயர்ப்புகள் வெளியிட விருப்பம் கொண்டுள்ளோம். தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாடு சார்ந்த முன்னெடுப்புகளின் அவசியத்தையும் நினைவில் கொண்டிருக்கிறோம்.
சிறுகதை கவிதை போன்ற இலக்கிய வடிவங்கள் கூர்ந்த வாசிப்பை கோருபவை. பொறுமையான வாசிப்பை கோருபவை. அவசரமான செல்போன் வாசிப்பில் இவையே முதலில் பாதிப்படைகின்றன. பொழுதுபோக்கு பதிவுகளை வேகமாக ஸ்க்ரால் செய்து வாசிப்பது போல் இவற்றை வாசிப்பது ஆபத்தான போக்கு. இது இணைய எழுச்சியின் தவிர்க்க முடியாத விளைவுகளில் ஒன்று. எனினும் “அகழ்” இதழில் வெளியாகும் இலக்கிய ஆக்கங்கள், கூர்மையாகவும் கவனத்துடனும் வாசிக்கப்படுவதை அறியும்போது இலக்கியம் வாசிப்பு எந்த பொது ஓட்டத்திலும் தனக்கான வழியை அமைத்துக் கொள்ளும் என்பது நிரூபணமாகிறது.
தமிழ்நாடு அரசு வெவ்வேறு மாவட்டங்களில் புத்தக கண்காட்சி நடத்துவது மிகுந்த வரவேற்புக்குரியது. வெகுமக்களிடையே வாசிப்பு பழக்கம் அதிகரிப்பதோடு புத்தக விற்பனையும் ஒரு லாபகரமான தொழிலாக மாற வேண்டியது அவசியம். ஆனால் சில புத்தக கண்காட்சிகள் ஆட்கள் இல்லாமல் வெறிச்சிட்டிருக்கும் புகைப்படங்கள் கவலை அளிக்கின்றன. புத்தகங்கள் பற்றிய பேச்சும், சென்னை கண்காட்சிக்கு பிறகு, ஊடகத் தளங்களில் வெறிச்சிட்டிருப்பதை காண்கிறோம். நாம் இதை கொஞ்சம் கவனிக்க வேண்டும். இதன் காரணங்களும் பின்னுள்ள நம் தேர்வுகளும் பரிசீலனைக்குரியவை.
புத்தகங்கள் பற்றிய பேச்சு குறைந்துள்ள போதும், சமீபத்தில் எழுத்தாளர்கள் பற்றிய பேச்சுகள் பரபரப்பாக சுற்றில் அலைந்தன. அவை, எழுத்தாளர் கோணங்கி மீது எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டுகளால் விளைந்தவை. இதில் எங்கள் நிலைப்பாடு தெளிவானது. பாதிக்கப்பட்டவர்களின் தரப்பிலேயே, நாங்கள் நிற்கிறோம். எழுத்தாளர் கோணங்கிக்கு “அகழ்” தன் கண்டணங்களை தெரிவித்துக் கொள்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் துயரை பகிர்ந்துக் கொள்கிறது. அதே நேரம், கலைஞனின் நிமித்தம் கலையை கைவிட வேண்டியதில்லை என்பதிலும் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். இந்த இதழிலேயே கவிஞர் கண்டராதித்தன் தன் நேர்காணலில், தன்னுடைய எழுத்து வாழ்க்கையில் கல்குதிரை பத்திரிக்கைக்கும் கோணங்கிக்கும் உள்ள இடத்தை குறிப்பிட்டுள்ளார். அதை ஏற்றுக் கொண்டு பிரசுரிப்பதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. கலைஞனின் மேன்மையைவிடவே கலையின் மேன்மை உயரமானது எனும்போது கலைஞனின் கீழ்மை அதை ஒன்றுமே செய்திட முடியாது.