/

நவீன யுகத்தில் உடலையும், மரபில் பிரக்ஞையும் நீட்டிப்படுத்த கல்மரமாக என்னை நான் கருதிக்கொள்வேன்: கண்டராதித்தன்

நேர்கண்டவர்: வே. நி. சூர்யா

அகழ் இதழிலிருந்து, “கண்டராதித்தனை நேர்காணல் எடுக்க முடியுமா” எனக் கேட்டுக்கொண்டபோது எனக்குச் சாத்தியம் என்றுதான் தோன்றியது. கண்டராதித்தனோடு கடந்த ஏழு வருடங்களுக்கு மேலாக அணுக்கமான உரையாடல்களில் இருந்துவருகிறேன். நிறையச் சந்திப்புகள். அரிதாகச் சில நிலக்காட்சிகளைக் ஒன்றாக கடந்திருக்கிறோம். நீண்ட மெளனங்களும் உண்டு. முக்கியமாக நேரடி சந்திப்புகளுக்கு முன்பாகவே எனக்கு அவரது கவிதைகளில் அணுக்கமும் திளைப்பும் ஏற்பட்டுவிட்டது. இந்தப் பின்னணி அளித்த நம்பிக்கையில், கண்டரிடம் நேர்காணல் சம்பந்தமாகப் பேசுகையில் முழுமையான ஆர்வத்தை முதலில் என்னிடம் வெளிப்படுத்தவில்லை. கவிதை எழுதுவதன் வழி மாத்திரமே தன்னால் முழுமையாக வெளிப்பட முடியும் என்றும் அதற்கு அப்பாலிருப்பது தனது பிராந்தியமில்லை என்ற தயக்கவுணர்வையுமே பகிர்ந்துகொண்டார். “கேள்விகளுக்குப் பதில் கூறுவதற்குப் பதிலாக கவிதைகளுக்கு வாய்ப்பிருந்தால் அவற்றை எழுதப்பார்க்கலாமே” என்பது அவரது எண்ணமாக இருந்தது. “நீங்கள் ஏன் மூட்டமும் வசீகரமுமான உங்களது கவியுலகம் சார்ந்து சில சாவிகளை அளிக்கும் சந்தர்ப்பமாக இதை எடுத்துக்கொள்ளக் கூடாது?” இது எனது தரப்பு. ஏதோவொரு புள்ளியில் ஒப்புதல் ஏற்பட்டு நேர்காணல் பணி தொடங்கியது. கேள்விகளைப் பகுதி பகுதியாக அனுப்புவேன். மத்தியானப் பொழுதில் அநேகமாகப் பதில்கள் வரும். இப்போது பார்க்கையில் மத்தியானத்தின் அம்சம்கொண்டதாகவே பதில்கள் வெளிப்பட்டிருக்கின்றன என்று எனக்குத் தோன்றுகிறது. இந்த நேர்காணலில், கண்டராதித்தன் தனது கவிதையின் ஊற்றுமுகம் குறித்தும் பேசியிருக்கிறார். கூடவே தனது ஞாபகங்களையும், பின்னணிகளையும் லேசாகப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். – -வே. நி. சூர்யா

1.வாசிக்கும் பழக்கம் எப்போது எப்படித் தொடங்கியது? வாசிப்பு உங்களுக்குச் அச்சமயத்தில் என்னவிதமான தாக்கத்தை உண்டுபண்ணுவதாக அமைந்தது?

மிகச்சிறிய வயதிலிருந்தே வாசிப்பு பழக்கம் தொடங்கிவிட்டது. ஆரம்பத்தில் பாலமித்திரா, அம்புலிமாமா, காமிக்ஸ் புத்தகங்கள் என எனது ஒன்று விட்ட சகோதரன் தொல்காப்பியனுடன் சேர்ந்து படித்துக்கொண்டிருந்தேன். பள்ளி முதல் மாணவரான அவர் பாரதியார் கவிதைப்புத்தகத்தைக் வாசிக்க கொடுத்தது எனது ஒன்பதாம் வகுப்பின்போது. அதிலிருந்து ஒருலட்சியவாதமான மனப்போக்கு எனக்குள் உருவாகியது எனலாம்.

2.வீட்டிலும், சுற்றத்திலும் வாசிப்பின் மீது ஏற்பு இருந்ததா?

வறுமையைப் போக்காத, உணவு மற்றும் வசதி வாய்ப்புகளைக் கொண்டுவந்து தராத எதன் மீதும் பெற்றோர்களுக்கும், சுற்றத்தினருக்கும் மதிப்பும் மரியாதையும் இருக்காது என்பதுதான் உண்மை. குறிப்பாக பாடப்புத்தகமாக இல்லாதவொன்றை தீவிரமாக வாசித்துக்கொண்டிருக்கும் போது, குடும்பத்தினர் நம்மீது இன்னும் கொஞ்சம் அசூயை கொள்ளவும், எரிச்சலடையவும் கூடும்.

எனது தந்தையை சிறுவயதில் இழந்திருந்தேன். அவருடைய தந்தை ”க.பொ.இ” என இப்பகுதி மக்களால் அழைக்கப்பட்ட க.பொ.இராஜமாணிக்கம் 1950களில் ”செந்தமிழ்க் கழகம்” என்ற அமைப்பை நடத்தியும், கொடையளித்தும் பொருளிழந்தவர். இந்தக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்ததால் இலக்கிய வாசிப்பின் மீது எதிர்ப்பு ஏதும் இல்லை. அதேசமயம் ஏற்பும் இல்லை என்பதற்கு குடும்ப வறுமை காரணமாக இருக்கலாம். மேலும் என் தாய்வழி உறவினர்கள் அனைவரும் இலக்கியத்தின் மீது மதிப்பு கொண்டவர்கள்.

3.நீங்கள் எழுத வந்தது எப்போது?

1994-ஆம் ஆண்டிற்குப் பிறகு நாமும் எழுத்தாளராகவேண்டும் என ஆர்வமுற்றேன்.

4. முதல் கவிதை குறித்து ஞாபகமிருக்கிறதா?

பள்ளியில் படிக்கும்போதே தமிழ் ஆசிரியர்களின் தனித்த அன்பைப் பெற்ற மாணவனாக இருந்துள்ளேன். முதல் கவிதை எனக் கரும்பலகை (1994) என்ற கவிதையைச் சொல்லலாம். ஆனால் அது கையெழுத்துப் பிரதியில் இருந்ததோடு சரி.

5. தமிழ் நவீன கவிதைப் போக்குடன் பரிச்சயம் ஏற்பட்டது எப்படி?

நானும் எனது ஒன்றுவிட்ட சகோதரனும் சிறுவர் மலர்கள் மற்றும் பாலமித்திரா, அம்புலிமாமா போன்றவற்றிலிருந்து இருந்து இலக்கிய வாசிப்பை எட்டியவர்கள். 10ஆம் வகுப்பு விடுமுறையில் பொன்னியின் செல்வன் படித்து முடித்தோம். அவர் டிப்ளமோ படிக்க சென்னை தரமணி சென்றபோது அங்கிருந்து பாலகுமாரனின் இரும்புக்குதிரை தொடங்கி தி.ஜானகிராமன், அசோகமித்திரன், எம்.வி வெங்கட்ராம் வரை அறிமுகப்படுத்தினார். கூடவே உலக சினிமாக்களையும்.

நவீன கவிதை அறிமுகமாவதற்கு முன்பாக நான் தீவிரமாக நாவல்களை வாசித்துக்கொண்டிருந்தேன். 22 வயதிற்குள் லா.ச.ரா, அசோகமித்திரன், தி.ஜானகிராமன், எம்.வி.வெங்கட்ராம் போன்ற முக்கியப் படைப்பாளிகளை வாசிக்கப்பழகியிருந்தேன். இலக்கியத் தொடர்புகள் ஏதும் இன்றியும், தட்டுத்தடுமாறியும் வாசித்துகொண்டிருந்தேன். இன்றிருப்பது போல ஊர்ப்புறக் கிளை நூலகங்களுக்குப் பெரும்பாலான புத்தகங்கள் வந்துசேராது. நெய்வேலி சென்ட்ரல் லைப்ரரியிலும், சென்னை அசோக் நகர் நூலகத்திலும், மவுண்ட் ரோடு தேவநேய பாவணர் நூலகத்திலும் சில சிறுபத்திரிக்கைகள் வாசிக்க கிடைத்தன. பிறகு பாடி லூகாஸ் – டிவிஎஸ் எதிரில் இருந்த ஒரு பழைய புத்தகக் கடையில் சுந்தர ராமசாமி நடத்தியிருந்த காலச்சுவடு பழைய இதழ் ஒன்றை 3 அல்லது 6 ரூபாய் கொடுத்து வாங்கினேன். தி.நகர் ரங்கநாதன் தெருவில் இருந்த முன்றில் புத்தக நிலையம் மற்றும் நியு புக்லேண்ட், ஹிக்கின் பாதம்ஸ் போன்ற விற்பனை நிலையங்களைக் கண்டடைந்தேன். ஒருமுறை கல்குதிரை மார்க்வெஸ் சிறப்பிதழ் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து சிறுபத்திரிக்கைகளுக்கு சந்தா அனுப்பி வாசிக்க ஆரம்பித்தேன். சதங்கை இதழுக்கு சதங்கை என்ற பெயரில் டிடி எடுத்து அனுப்பிவிட்டேன். ஆசிரியர் வனமாலிகை அதற்காகவே சதங்கை பெயரில் மற்றொரு அக்கவுண்ட் தொடங்கியதாக கடிதம் எழுதியிருந்தார். முன்றிலில் கனவு, நவீன விருட்சம், இலக்கு, கவிதாசரண், சுந்தரசுகன் (பின்னர் சௌந்திரசுகன்) உள்ளிட்ட ஏராளமான சிறுபத்திரிக்கைகள் கிடைத்தன. இதன் வழியாக கவிதை எழுதவும் தொடங்கினேன். எழுத தொடங்கிய பிறகு சில தொடர்புகள் கிடைத்தன. குறிப்பாக சேலம் அ.கார்த்திகேயன் வேட்கை அமைப்பின் மூலம் நடத்திய கூட்டங்களில் பேச அழைப்பார். துடுக்குத்தனமான பேச்சு அப்போதிருக்கும் என்றாலும் பிற்காலத்தில் கவிதையில் சிறப்பான இடத்தை அடைவீர்கள் எனக் கார்த்தி குறிப்பிடுவார். அப்போதிருந்து நண்பர்கள் வே.பாபு, சாகிப்கிரான், ந.பெரியசாமி ஆகியோர் நண்பர்களானார்கள். 1999ஆம் ஆண்டு ந.பெரியசாமி தொகுப்பு கொண்டுவாருங்கள் என முதன்முதலாக வலியுறுத்தினார். சில பதிப்பகங்களின் 2 வருட நிராகரிப்புகளுக்குப் நானும் கே.ஸ்டாலினும் சல்லிகை வெளியீடாக எங்களது புத்தகங்களைப் பதிப்பித்துகொண்டோம்..

எங்களது புத்தகங்களை கருணா பிரசாதத்திடம் அச்சுக்கு கொடுத்திருந்தோம். அங்குத் தங்கியிருந்த வயல் மோகன் (சி.மோகன்) கண்டராதித்தன் கவிதைகள் புத்தகம் குறித்துச் சிலாகித்துப் பேசியதாக பிரசாத் தெரிவித்தார். சி.மோகன் யாரென அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

பின்னர் சி.மோகன், மணிவண்ணன் இருவரும் கவிதை பற்றிப் பேசியிருந்த சிறு பேம்ஃப்லெட் ஒன்றை மனுஷ்யபுத்திரன் அனுப்பியிருந்தார். அதில் குறிப்பிடத்தகுந்த வரவென என்னை சி.மோகன் குறிபிட்டிருந்தார். பிரம்மராஜன் எனது முதல் தொகுப்பு குறித்துக் கட்டுரை ஒன்றும் எழுதியிருந்தார். முன்னதாக அக்கால கட்டத்தின் சிறுபத்திரிக்கைகளின் வாயிலாக கவிஞராக அறிமுகமாகியிருந்தேன்.

6. கவிதையை ஏன் வெளிப்பாட்டு முறையாகத் தேர்ந்தெடுத்தீர்கள்?

தமிழ் மரபில் கவிதையை வெளிப்பாட்டு முறையாகத் தேர்ந்தெடுப்பதென்பது இயல்பானது. எனது சிறுவயது முதலே தமிழிசைப் பாடல்களையும், பக்தி பாடல்களையும், கேட்டு வளர்ந்ததால் நான் இதனைத் தேர்ந்தெடுத்து இருக்கலாம்.

7. எழுத்து சார்ந்து ஆற்றுப்படுத்துவதற்கோ அல்லது உரையாடுவதற்கோ யாரெல்லாம் இருந்தார்கள்? சந்திப்புகள்?

எனது ஒன்றுவிட்ட சகோதரன் தொல்காப்பியன் நல்ல வாசிப்பனுபவம் கொண்டவர். முன்பே கூறியதுபோல நாங்கள் இருவரும் சேர்ந்தே வாசிக்கும் பழக்கத்தில் ஈடுபட்டிருந்தோம். பள்ளியின் முதல் மாணவரான அவர், எனக்கு வாசிக்கும் பழக்கத்தையும்,நல்ல உரையாடல்களையும் தோற்றுவித்தவராகவும் இருந்தார்.

எழுத்தின் தொடக்க காலத்திலும் சரி, பிற்காலத்திலும் சரி எழுத்தாளர்களைப் பெரும்பாலும் தனிப்பட்ட முறையில் சந்திக்கும் வழக்கம் எனக்கு இருந்ததில்லை. குறிப்பாக மூத்த கவிஞர்கள் பிரமிள், நகுலன், ஞானக்கூத்தன் ஆகியோரை சந்திக்கும் ஆர்வமும், வாய்ப்பும் இருந்தும் சந்திக்கவில்லை என்ற வருத்தம் உண்டு. கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன், விக்கிரமாதித்யன், கைலாஷ் சிவன் உள்ளிட்ட பல படைப்பாளிகள் கண்டாச்சிபுரம் வருவதுண்டு.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்புவரை பிரம்மராஜன், ஜீ.முருகன், சா.தேவதாஸ், பா.வெங்கடேசன், ஸ்ரீநேசன், ராணிதிலக், குலசேகரன், குமார் அம்பாயிரம், பழனிவேள், ஆம்பூர் சுரேஷ் ஆகியோர் கலந்துகொள்ளும் நிகழ்வுகள் அடிக்கடி நிகழும்.

முன்பே கூறியதுபோல சேலம் நண்பர்கள் அ.கார்த்திகேயன், சாகிப்கிரான், மறைந்த நண்பன் வே.பாபு, ந.பெரியசாமி, அகச்சேரன் ஆகியோரை தொடக்கத்திலிருந்தே சந்திக்கும் வாய்ப்புகள் இருந்தன. கண்டாச்சிபுரத்தில் சல்லிகை என்ற பெயரில் அசதா, ஸ்டாலின், தாமரைபாரதி, காலபைரவனுடன் சேர்ந்து இலக்கியக் கூடுகைகளை நடத்தும் சந்தர்ப்பங்களும் அமைந்தன. சென்னையில் நண்பர்கள் அஜயன்பாலா, அய்யப்ப மாதவன், விஸ்வநாதன் கணேசன், ஸ்ரீசங்கர், பயணி, ஸ்ரீதர், ஜோஸ் அன்றாயின் போன்றோருடன் கவிதைகள் குறித்து தொடர்ச்சியாக உரையாடல்களில் இருந்தேன். விசுவின் அறை பல வருடங்கள் படைப்பாளிகளின் வேடந்தாங்கலாக இருந்தது.

மனுஷ்யபுத்திரனை சந்திக்க இரண்டொரு முறை சென்றதுண்டு. நல்ல மனிதர். தான் மதிக்கும் இளம் படைப்பாளிகளைக் கவனப்படுத்துவதில் பாரபட்சம் காட்டாதவர். மற்றபடி பெரும்பாலும் இலக்கியக் கூட்டங்களோடு கூடிய சந்திப்புகள்தான்.

8. உங்களது கவிதையாக்க முறைபாடு (Process) குறித்துச் சொல்லுங்கள்

எனக்கு ஒரு வார்த்தை, அல்லது ஒரு வாக்கியம் ஆகியவற்றிலிருந்தே முழு கவிதையும் உருவாகிவிடும். பெரும்பாலான சிறிய கவிதைகளை மனதிற்குள்ளாகவே ஏறக்குறைய எழுதியிருக்கிறேன். காலாண்டிதழ்களில் பங்களிக்கும்போது ஒரு கவிதையை எழுதிவிட்டு அதை மறந்து மற்றொரு கவிதையை நோக்கி பயணம் இருக்கும். அப்போது முந்தைய கவிதையைச் செம்மைப்படுத்த நிறைய வாய்ப்பிருக்கும். அவ்வாறு பலமுறை திருத்திய ஒரு கவிதையை அச்சு வடிவில் பார்க்கும்போது நாம் முதல் முறை எழுதியதைவிடப் பன்மடங்கு சிறப்பாகக் காட்சியளிப்பதைப் உணர்ந்திருக்கிறேன்.

9. எப்போதெல்லாம் கவிதை எழுத அமர்கிறீர்கள்?

பெரும்போக்காக பொழுதுகள், பருவநிலைகள், நிலக்காட்சிகள், இரவுகள், மத்தியானங்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோருடன் அல்லது ஆகியவற்றுடன் மையப்படுத்தி அல்லது விட்டுவிலகி எழுத முற்படுவதும் அல்லது கவிதையை எழுதுவது என்பது சிக்கலானதாகவோ, எளிமையானதாகவோ, அது அளப்பரிய பொருட்களைப் பெற்றுத்தர வாய்ப்புள்ளதாகவோ, பொருட்களை இழக்கக்கூடிய சந்தர்ப்பம் தரக்கூடியதாகவோ, உத்வேகம் அளிக்ககூடியதாகவோ, மதிப்பளிப்பதாகவோ, அவமானப்படுத்தக்கூடியதாகவோ, கைவிட்டுவிடுவதாகவோ, அரவணைப்பதாகவோ, நிராகரிப்பதாகவோ இருக்கும்போது, இதற்காகவே நாம் எழுத வேண்டும் என நினைப்பேன் அல்லது எப்போது தோன்றுகிறதோ அப்போது எழுதுவேன்.

கவிதை எழுதுவது தொடர்ச்சியான பல்வேறுவிதமான வாசிப்பின் வழியாகவும், உரையாடல்கள் வழியாகவும், மனவெழுச்சியின் வழியாகவும் அல்லது புத்திசாலித்தனத்தின் வழியாகவும், குழந்தைமையின் வழியாகவும் நிகழக்கூடியது என்று யாராவது சொல்லும்போது எழுத வேண்டும் என நினைப்பேன் அல்லது எப்போது எழுதவேண்டும் எனத் தோன்றுகிறதோ அப்போது மட்டும் எழுதுவேன்.

இது போன்ற பிற்போக்குத்தனமான, பின்பற்ற அவசியமற்ற, இதன் மீது உவப்பில்லாததாகவும், மதிப்பற்றதாகவும் பிறர் நினைக்கும் வாய்ப்புள்ள கவிதையாக்கங்கள் குறித்த கருத்துக்களை யாராவது கடுமையாக எடுத்துச்சொல்லும்போது அதனை நான் மனதார வரவேற்பேன், அதே சமயம் எழுத வேண்டும் என்றும் நினைப்பேன் அல்லது எப்போது எழுதவேண்டும் எனத்தோன்றுகிறதோ அப்போது எழுதாமலும் இருக்கப் பழகுவேன்.

10. உங்களது வாழிடம் உங்கள் கவிதைகளுக்கு எந்த அளவிற்கு உதவியாக உள்ளது?

வாழும் நிலப்பகுதி பெரும்பாலும் வானம் பார்த்த பூமிதான், செழித்த விவசாயம் என்பதும் கிடையாது, வறண்ட பாலையும் கிடையாது. ஆற்றுப்பாசனமற்ற விவசாயம் மற்றும் உழைப்பு சார்ந்த வாழ்க்கை முறையுடன், நிலையற்ற வருமானம் உள்ள இத்தன்மை வாழ்வைச் சமநோக்கில் எதிர்கொள்ளவும் கற்றுத்தருகிறது. இதன் வெறுமையிலிருந்து விடுவித்துக்கொள்ளக் கலை அல்லது கவிதை பெரும் பிடிமானமாக உள்ளது. இங்கிருந்து இந்நிலத்தின் பெரும் பாறைகளுக்கிடையிலும், காப்புக்காட்டு மண்ணிலும் ஒரு புகைப்படக்கலைஞனாக, நிலத்தை, பறவைகளை, கோயில்களை, நீர் நிலைகளை, குன்றுகளைக் கண்டு செல்லும் பயணியாக அலைவதுண்டு. நிலத்தைப் புரிந்து கொள்வது என்பதை மனிதர்களைப் புரிந்துகொள்வதாகவே நான் நினைக்கிறேன்.

11. தொன்னூறுகளின் இறுதியிலிருந்து இரண்டாயிரத்தின் ஆரம்பம் வரைக்கும் எல்லா வகையிலும் மிக முக்கியமான ஒரு காலம். தமிழ் நவீன கவிதை வேறொன்றாக உருமாற்றமடைந்துகொண்டிருந்த பருவம். அச்சமயத்தில் எழுதவருகிறீர்கள். அன்றிருந்த சூழலைப் பற்றிச் சொல்லுங்கள். தொன்னூறுகளின் கவிதைப்போக்கு அதற்கு முந்தைய காலகட்டத்திலிருந்து எவ்விதமாக வேறுபட்டிருந்ததாக உணர்ந்தீர்கள்?

தாராளமயமாக்கலுக்குப் பிறகு அதன் தாக்கம் இலக்கியத்திலும் எதிரொலிக்கத் தொடங்கியது என்றுதான் நினைக்கிறேன். 90களுக்கு முன்பான படைப்பாளிகளுக்கு இருந்த வடிவரீதியிலான சில தடைகளைப் பின்னர் வந்த கவிஞர்கள் மிகச் சுலபமாக கடக்க முற்பட்டனர். குறிப்பாக இவர்களின் கவிதைகள் அரசியல், தத்துவம், சமூகம், பெண்ணியம் என பலதரப்பான வகைமைகளில் இதற்கு முன்னிருந்த அப்ஸ்ட்ராக்டான கட்டுப்பாடுகளைக் கலைத்துப்போட முற்பட்டது.

இந்தப் பங்களிப்பு முற்றிலும் ஒரு கூட்டியக்கமாக இல்லாமல் தனித்தனியான உதிரிகளின் பால் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நாம் ஒரு அபிப்பிராயத்திற்கு வருவதற்குகூட இருபது வருடங்கள் ஆகியுள்ளதையும் கவனிக்க வேண்டும். இக்காலகட்டத்தின் கவிகள் தங்களுக்கு இருக்கும் சமூகப் பொறுப்பையும், மொழிக் கடப்பாட்டையும் விட்டேத்தியான மனநிலையில் அணுகியிருக்கக் கூடும் என நினைக்கிறேன். இந்தத் தன்மை ஏறக்குறைய பெரும்பாலான கவிஞர்களிடமும் காணக்கூடியதாக இருந்தது. படைப்பின் மீதும், காலத்தின் மீதும் தங்களுக்கு எந்தவித அனுகூலமும் இருப்பதாக இவர்கள் கருதியிருக்கவில்லை. இதனால் படைப்புச் சுதந்திரம் எனபது இயல்பானதாக இருந்தது. இதற்கு முன்பிருந்த மொழி அமைப்பு மற்றும் பூடகத்தன்மை, இறுக்கமான படிம உத்திகள், திரும்பத் திரும்ப சலிப்பூட்டும் மொழித் திருகல்கள் ஆகிய தளைகள் இவர்களிடம் எதேச்சையாகவே உடைபடுகின்றன.

பின்னர் சில கவிஞர்களுக்கு ழாக் ப்ரெவெரின் வருகை உத்வேகமளிப்பதாகவும் இருந்தது. எனக்கும் ப்ரெவெர் அப்போது பிடித்தமான கவிஞராக இருந்தார். அப்போது பல இடங்களில் சமகால கவிஞர்களின் கவிதைகளை உரக்க வாசிக்கும் விநோதப் பழக்கம் இருந்தது.அதைப்போலவே ழாக் ப்ரெவெரின் கவிதைகளையும் வாசித்துக்கொண்டோம். அதிலிருந்த உடைந்த மொழிநடை எனக்குப் புதியதாக இருந்தாலும், என் கவிதை மொழிக்கு அவர் நேரடியாக உதவியாக இருந்தவரில்லை. அப்போது அசதா, ரஷ்ய கவிஞரான ஓஷிப் மெண்டல்ஸ்டாம் கவிதைகளை மொழியாக்கம் செய்துவந்தார். பெரும்பாலும் அவரது மொழிபெயர்ப்புகளின் முதல் வாசகராக இருக்கும் ஒரு பொறுப்பையும் அளித்திருந்தார். எனக்கு அக்கவிதைகளின் மொழிபெயர்ப்புத் தன்மைகள் குறித்து ஏதும் சொல்ல இயலாவிட்டாலும் வாசிப்பளவில் அக்கவிதைகளின் தரத்தை அப்போது உணரமுடிந்தது.

உண்மையில் இக்க்காலகட்டத்திற்குப் பிறகு கவிஞர்களுக்குப் பெரிய அளவில் சாதகமான நிலை தமிழில் உருவானது. பதிப்பாளர்கள், கவிஞர்களிடம் கேட்டுப்பெற்றுப் புத்தகங்களை வெளியிடத் தொடங்கினர். இதற்கு முன்னர் இருந்த இறுக்கமான மன அமைப்புகளை இக்காலகட்டத்தின் கவிஞர்கள் உடைத்தனர்.

பிறகு பொதுவாகவே எனக்கு என் சமகால கவிகளுடனும் அவர்களின் கவிதைகளில் இருந்த ஆத்மார்த்தமான தொடர்பு அவர்களுடன் நேரடியாக இருந்ததில்லை. அதற்கு என் பிழைப்பு சார்ந்த வாழ்க்கையும், நண்பர்கள் தவிர மற்றவர்களுடன் பேசுவதற்குத் தடையாக இருந்த அப்போதைய மன அமைப்பும் காரணமாக இருக்கலாம். அக்காலகட்டத்தில் எனக்கு ஈடுபாடுள்ள சக கவிஞர்களான ஸ்ரீநேசன், ராணிதிலக், யவனிகா ஸ்ரீராம், லக்ஷ்மி மணிவண்ணன், ஷங்கர்ராமசுப்ரமணியன், பிரான்சிஸ் கிருபா, பெருந்தேவி, சல்மா, மாலதி மைத்ரி, சுகிர்தராணி, குட்டி ரேவதி, பாலைநிலவன் போன்றோருடன் சேர்ந்து என் சமகாலத்தை நீட்டிப்பார்க்கிறேன்,

இவர்களில் சிலரைத் தவிரப் பெரும்பாலாருடன் அப்போது நேரடித் தொடர்பில்லாதபோதும் அக்காலகட்டத்தின் சிறுபத்திரிக்கைகளில் இவர்களின் படைப்புகள் வெளியாகும்போது ஒருவித உற்சாகமான மனநிலையில் வாசிக்க முற்படுவது வழக்கமாக இருந்தது. ஆனால் இவர்கள் ஒரு காலகட்டத்தின் பிரதிநிதியாவார்கள் என்ற மனப்ரக்ஞை என்னிடம் அப்போது இருந்திருக்கவில்லை. ஒரு விதமான உற்சாகப்பெருக்கம் இருந்தது எனலாம்.

12. உங்கள் மீதும் உங்களது கவியுலகின் மீதும் பாதிப்பை ஏற்படுத்திய கவிஞர்கள், படைப்பாளர்களைக் குறித்துச் சொல்லுங்கள்.

ஒரு கவிஞன் அனைத்து வகையான படைப்பகளின் மீதும் ஆர்வம் உள்ளவனாக இருக்க வேண்டும். நாவல், சிறுகதை, மொழிபெயர்ப்பு உள்ளிட்ட அனைத்து வகையான படைப்பாக்கங்களின் மீதும் வாசிப்பு உள்ளவர்களின் கவிதை இன்னும் செழுமை கூடிய படைப்பாக அமையும். நவீன கவிதைக்குள் வரும் எல்லோரையும் போலத்தான் பாரதிக்குப் பிறகான ந. பிச்சமூர்த்தி, நகுலன், பிரமிள், சி.மணி, அபி, ஆத்மாநாம், ஞானக்கூத்தன் போன்ற மூத்த கவிகளும் பின்னர் கலாப்ரியா, விக்கிரமாதித்யன், பிரம்மராஜன், சுகுமாரன், தேவதேவன், தேவச்சன், சமயவேல், ந.ஜயபாஸ்கரன், ரமேஷ்-பிரேம், பா.வெங்கடேசன், மனுஷ்யபுத்திரன், யூமா.வாசுகி என ஒரு நீண்ட பட்டியலின் செல்வாக்கு என்னில் உண்டு. நான் கவிதைகள் குறித்து மட்டும் இங்கு சொல்லியிருக்கிறேன்.

கல்குதிரை இதழின் மூலம் மூன்று தலைமுறையின் கவிஞர்களை கோணங்கி ஒருங்கிணைத்துள்ளார். கல்குதிரை, புதுஎழுத்து உள்ளிட்ட இதழ்களின் மூலம் தொடர்ச்சியான இலக்கியப் பங்களிப்பு நிகழ்ந்துள்ளது. அதேபோன்று ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி, பா. வெங்கடேசன் ஆகியோரின் படைப்புகளை எனது தொடக்க காலத்திலிருந்து இன்று வரை மிகுந்த ஆர்வத்துடன் வாசிப்பதை ஒரு பழக்கமாக கொண்டிருக்கிறேன்.

13.என்பதுகளிலும் தொன்னூறுகளிலும் நடந்த மார்க்சியத்துக்கும் நவீனத்துவத்துக்கும் இடையிலான மற்றும் இன்னபிற கோட்பாட்டு விவாதங்களை இப்போது நீங்கள் எப்படி மதிப்பிடூகிறீர்கள்? அவ்விவாதங்களிலிருந்தும் பேச்சுகளில் இருந்தும் பெற்றுக்கொள்ள உங்களுக்கு ஏதாவது இருந்ததா?

1990களின் தொடக்கத்தில் டி.வி.எஸ் நிறுவனத்தில் பயிற்றுனராகப் பணிபுரியும்போது அங்கிருந்த எம்.எல் தோழருடன் இணைந்து மார்க்சிய கருத்துக்களை உள்வாங்கினேன். அப்போது பெரம்பூரில் நடைபெறும் எம்.எல் தனிப்பட்ட கூட்டங்களுக்கு அழைத்துச்செல்வார். ஒரு லேபராக இருந்த எனக்கு அப்போது மார்க்சியம் எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு அறிமுகமாக பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதம், மார்க்சியம் குறித்த புத்தகங்களை அவர் வழங்கினார். பின்னர் அங்கிருந்து வேலையிழந்து வெளியேறியபின் இடதுசாரி தொடர்புகள் அறுந்தன.

பின்னர் படைப்பிலக்கியம் சார்ந்து தீவிர ஈடுபாடு வந்தபின் தமிழவனின் அமைப்பியல் மற்றும் பின் அமைப்பியல் குறித்த புத்தகத்தையும், அவரது ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள், ஜி.கே எழுதிய மர்மநாவல், எம்.ஜி சுரேஷின் அலெக்சாண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும் ஆகிய நாவல்களையும் கோட்பாடுகளைக் குறித்த சில கட்டுரைகளையும் வாசித்துள்ளேன். காலபைரவன், புதுவை திரைப்படக் கல்லூரியில் இயக்குனர் பிரிவில் படித்தபோது நிறப்பிரிகை இதழ்கள் கிடைத்தன. இதன் மூலம் அ.மார்க்ஸ், எஸ்.வி ராஜதுரை, ரவிக்குமார், பிரேம்-ரமேஷ் ஆகியோர் புத்தகங்கள் அறிமுகமாயின. தொடர்ந்து இதுகுறித்த சிந்தனைகளோடு உரையாடும் நண்பர்கள் அற்றுப்போனதும் எனக்கும் கோட்பாடுகளின் மேல் ஈடுபாடு குறைந்தது.

எனது தெளிவின்மையினால் கோட்பாடு சார்ந்த வாசிப்பில் இருந்து விலகிவிட்டேன். ஒருமுறை நான், பிரேம்-ரமேஷ், மருதா பாலகுருசாமி, காலபைரவன் ஆகியோர் ஒரு மேசையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது கோட்பாடு சார்ந்த என் புத்தகங்களை வாசிக்காமல் என்னுடன் உரையாடக்கூடாது என்று பிரேம் கடிந்துகொண்டதும் இப்போது நினைவுக்கு வருகிறது. பின்னர் மனோ.மோகன் அறிமுகமானார். அவர் சார்த்தர், பூக்கோ குறித்தும் கோட்பாடுகள் குறித்தும் அறிந்தவராகயிருந்தாலும் இதுகுறித்தெல்லாம் என்னுடன் அவர் அதிகம் பேசியதில்லை. பெரும்பாலும் இத்தகைய விவாதங்களை நான் உற்று கவனித்ததில்லை. இன்னும் சொல்லப்போனால் இதுகுறித்தெல்லாம் கருத்துச் சொல்லும் அளவிற்கு வாசித்ததில்லை என்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

14. உங்களது பெரும்பாலான கவிதைகள் மெளன வாசிப்பிற்கு அப்பால் இயல்பாகவே செவிவழி வாசிப்பிற்கு இசைவானதாக இருக்கிறதே. பிரக்ஞைபூர்வமாக இவ்வாறு அமையவேண்டும் என்று எண்ணிக்கொள்வீர்களா? இதைக் குறித்துச் சொல்லுங்கள்.

ஆமாம். எழுதவந்த காலத்திலிருந்து இந்தக் கேள்வியை என் சக கவிஞர்களிடமிருந்து பலமுறை எதிர்கொண்டிருக்கிறேன். இது எனது வாழ்நிலம் சார்ந்ததாக இருக்கலாம் என நினைக்கிறேன்.

எனது வீடு பழமையான சிவன் கோவிலுக்கு மிக அருகில் உள்ளது. எனது சிறுவயது முதலே பள்ளி விட்டதும் விளையாடுவதற்கும், வழிபடுவதற்குமாக இக்கோவிலே முதல் புகலிடமாக இருந்து வந்தது.

இங்கு ஏற்கனவே செந்தமிழ் கழகம் பிற்காலத்தில் தமிழ் வேதவார வழிபாட்டுச் சபை, கம்பன் நற்றமிழ் கழகம் என பல தமிழ் அமைப்புகள் 70 ஆண்டுகளாக இயங்கி வருகிறன. இதில் தமிழ் வேதவார வழிபாட்டுச் சபையின் சோமவார வழிபாடுகளில் சிறுவயதில் தவறாமல் கலந்துகொண்டிருக்கிறேன். தேவாரத் திருவாசகப் பாடல்கள், திருமுறைப் பாடல்கள், கம்பராமாயணம், மகாபாரதம், திருஅருட்பா, பாரதியார், பாரதிதாசன் என தமிழிசை, தமிழ் ஆர்வம் நிறைந்த பகுதியில் வளர்ந்ததும், தமிழ்ப்புலவர்களும் ஓதுவார்களும் நிறைந்த ஆன்மிக மையமாகத் திகழும் இடத்திலிருந்து வந்ததால் அதன் சாரம் என்னுள் இயல்பாக இறங்கியிருக்கலாம். இது நான் கவிதை வடிவைத் தேர்ந்தெடுக்கும்போது இயல்பாக வெளிப்படுகிறது என்றுதான் கூறவேண்டும்.

15. பழந்தமிழ் இலக்கியங்களின் சாயலுள்ள மொழியில் குறிப்பாக பக்தி இலக்கியத்தின் மொழியில் அவற்றுக்குப் பொருத்தமில்லாத உள்ளடக்கங்கள் உங்களது கவிதைகளில் வளர்த்தெடுக்கப்படுவதைப் பார்க்க முடிகிறது. இது பற்றிய உங்களது அபிப்பிராயம் என்ன?

ஆனால் இதை நீங்கள் குற்றச்சாட்டாக வைக்கின்றீர்களா எனத் தெரியவில்லை. மரபின் நிழலிலிருந்து எழுதுவது ஏறக்குறைய நவீன கவிதையின் தொடக்கதிலிருந்தே நிகழ்கிறது. புதுக்கவிதை தமிழிற்கு அறிமுகமாகும்போது அதனைத் தமிழ் நிலத்தோடு பொருத்திப்பார்த்து எழுத முற்பட்டனர். தமிழ்க் கவிதையில் மரபுமொழியின் தொடக்கம் நகுலன், பிரமிள், ஞானக்கூத்தன், சி.மணி ஆகியோரிலிருந்து இன்றும் விக்ரமாதித்யன், ந.ஜெயபாஸ்கரன் வரை நீண்டுகொண்டுதானிருக்கிறது. அவர்களிடமிருகக்கும் கவித்துவமும் மரபார்ந்த மொழியும் இன்றும் நம் வாசிப்பிற்கு இணக்கமாகவே உள்ளது. அவர்களுக்கும் பிந்தைய தலைமுறையைச் சேர்ந்தவன் என்றாலும், ஒரு பாராட்டாக, நவீன யுகத்தில் உடலையும், மரபில் பிரக்ஞையும் நீட்டிப்படுத்த கல்மரமாக என்னை நான் கருதிக்கொள்வேன்.

குறிப்பாக உங்களுடன் பேசியிருப்பதின் பலனாகச் சிலவற்றைக் கூறமுடியும் “உருவும் திருவும்” கவிதையும், “காதல்” கவிதையும், மிகச் சமீபத்தில் எழுதிய (10 ஆண்டுகளுக்கு முன்பு) ‘திருச்சாழல்” ஆகிய கவிதைகளை எழுதியதற்குப் பிறகு ஒன்றிரண்டு தலைமுறைக் கவிஞர்கள் தமிழில் வந்துவிட்டனர். பிற்காலத்தில் மரபின் எந்தச் சாயலுமற்ற பல குரல்கள் வெளிப்படக் கூடும். இதனால் கவிதையில் மொழியின் தன்மை சிதைவடையக்கூடும் என்பதே என் யூகம். ஆனால் இதன்பொருட்டு வாதாடவும் விரும்பவில்லை. மேலும் குறிப்பாக ஆண் பெண் உறவு சார்ந்து பெண்கள் தங்களது மனத்தேடலையும், விருப்பத்தையும் சற்று வெளிப்படையாகப் பேசத் தொடங்கிவிட்டனர். அது என்னால் நிகழ்ந்ததென்று பொருளல்ல. அதன் அழகியல் தன்மையை நினைத்துப்பார்க்கலாம்.

16. உங்களுடைய அநேக கவிதைகளில் உங்களை மறைத்துக்கொள்வதாகத் தோன்றுகிறது. வேறொரு கதாபாத்திரத்துடனும் குரலுடனும் உங்களை அடையாளப்படுத்திக்கொண்டு அதன் தன்னிலையிலிருந்து உங்களை வெளிப்படுத்துவதாகப்படுகிறது. (சோமன் சாதாரணம், பிழையான விலங்கை நாம் ஏற்பதும், ஏற்காமலிருப்பதும் சட்டப்படி தண்டனைக்குரியது அல்ல, பாடிகூடாரம் போன்ற கவிதைகள்) அதனால் ஒரு தூரம் உண்டாகிவிடுகிறது. இதுபோன்ற கவிதைகளில், கதாபாத்திரங்கள் தனித்த இருப்புடையதாகவும் நீங்களாகவும் மயங்குவது போலிருக்கிறது. இந்த அம்சம் குறித்து எண்ணிப்பார்த்தது உண்டா?

இதுவொரு சுய முயக்கத்தன்மை அல்ல. குறிப்பாக சோமன் சாதாரணம் கவிதை ஒரு நபரை கடுமையாக விமர்சனம் செய்யும் கவிதை என வைத்துக்கொள்ளலாம். நவீன கவிதையின் தொடக்கக் காலமும் அதிலிருந்து விலகி 30,40 ஆண்டுகள் கழித்து சோமன் சாதாரணம் போன்ற கவிதைகளை எழுதும்போது இத்தகைய கேள்விகள் உருவாவது தவிர்க்க முடியாதுதான். ஆனால் கவிதையில் அழகியலுடன், எதிர்க்குரலும் சேர்ந்து இயங்குவதைக் காணமுடியும். உங்களை நோக்கி குற்றம்சாட்ட முடியாதபோது சுய பகடியாக இதுபோன்ற கவிதைகள் தோன்றுகின்றன. இந்த வகையான கவிதைகள் சொல்லப்பட்ட முறை, அதன் வடிவம், அக்கவிதைகளின் இயல்பான பாத்திரங்கள் என ஒவ்வொன்றாக விவரிக்கும்போது கவிஞனின் ஒரிஜினல் எத்திக்ஸை நாம் புரிந்துகொள்ள முடியும் என நினைக்கிறேன் அல்லது ஒருவிதமான இயலாத தன்மையில் இதுபோன்ற கவிதைகளை எழுதப்படுவதாக வேண்டுமானாலும் கூறலாம். இதனைவிடக் கடுமையான மொழிச் சொல்லாடல் கொண்ட பல கவிதைகள் உள்ளன. ஆனால் அதன் மொழிக்கட்டுமானத்தினால் வாசிப்பர்களுக்கு ஒரு இடைவெளி ஏற்பட்டு கடக்கப்படுவது நிகழ்கிறது.

இதுபோன்ற கவிதைகள் வடிவ ஒழுங்கில் சரியில்லாததாகவோ இயங்குதளத்தில் பொருளற்றதாகவோ இருந்தால் நீங்கள் சொல்வது சரிதான் எனலாம், ஆனால் எனக்கு மட்டுமேயான அனுபவத்தையா இது தருகிறது?

17. நீள்கவிதை வடிவத்தின் பேரில் உங்களுக்கு ஒரு பிரத்யேகமான ஆர்வமிருப்பதை உணரமுடிகிறது. (உருவும் திருவும் , சா, சீதமண்டலம், உதுமான் நான் உலகளந்தப்பெருமாள் பேசுகிறேன் போன்ற நீள்கவிதைகள்) இதன் பின்னணி குறித்துப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

நீள் கவிதையில் ஆர்வம் என்பதை இங்கு நான் பல நினைவுகளின் தொகுப்பாக விவரித்துப் பார்க்கிறேன். சில சமயம் இக்கவிதைகளின் ஊடாக வாசிப்புத் தன்மை அறுந்துபோகவும் வாய்ப்புள்ளதை மறுக்க முடியாது. அப்போதைய சிறுபத்திரிக்கை ஆசிரியர்கள் தங்கள் இதழ்களில் பங்களிக்கும் கவிஞர்களின் படைப்புகளின் மீது அக்கறை கொண்டு தொடர்ந்து எழுத ஊக்கப்படுத்தினார்கள். அவ்வாறு 90களின் இறுதியில் நாமக்கல் போதுப்பட்டியிலிருந்து வெளியான சதுக்கப்பூதம் இதழில் தொடர்ந்து எழுதினேன். யவனிகா ஸ்ரீராம், ராணிதிலக், கே.சி செந்தில்குமார், தேவதேவன், குட்டிரேவதி, தேவ்நேஷ்(ஸ்ரீநேசன்), சாகிப்கிரான், க.மோகனரங்கன், தாமரைபாரதி, காலபைரவன் போன்றோருடன் சதுக்கபூதம் காலாண்டிதழில் பங்களித்துகொண்டிருந்தேன். என் கவிதைகளின் தன்மையைப் புரிந்துகொண்டு சதுக்கப்பூதம் ஆசிரியர் மாரப்பன் நீள் கவிதை எழுதுமாறு கேட்டுக்கொண்டார். அதேபோன்று புதுஎழுத்து மனோன்மணியும் நீள் கவிதை எழுத ஊக்கமளித்தார். ஏற்கனவே பிரமிள், நகுலன், தேவதேவன் போன்ற மூத்த கவிகளின் தாக்கத்தின் காரணமாக நீள்கவிதைகளை எழுதினேன்.

நீங்கள் குறிப்பிட்டிருந்த நான்கு நீள் கவிதைகளும் பல்வேறு மன அமைப்புகளுடன் என்னுடைய நான் இருந்த காலமாகும், ஒவ்வொரு காலமும் அதன் பிரதிபலிப்புகளும் இக்கவிதைகளின் வாயிலான வெளிப்பட்டுள்ளது எனலாம்.

உருவும் திருவும் எழுதிய காலகட்டத்தில் எனது சொந்த அனுபவத்தின் ஆழ்மன ஏக்கங்களும், தயக்கங்களும், விருப்பங்களுமாக இக்கவிதை உருவாகி இருந்தது. இன்னும் சொல்லப்போனால் அதன் உச்சகட்டமான வெளிப்பாடாக இந்தக் கவிதையும் எளிமையான வடிவமாக நித்யா நிறைந்த அறை போன்ற கவிதைகளும் வெளிப்பட்டன.

இதையே சா மற்றும் சீதமண்டலம் கவிதைகளுக்கும் பொருத்திப்பார்க்கலாம் சீதமண்டலம் ஒருவகையான மெட்டாபிக்ஷன் தன்மை கொண்டது. இதுபோன்ற கவிதைகளை முயற்சி செய்து பார்த்தது என்றுவேண்டுமானால் கூறலாம். ஆனால் அந்தத் தொகுப்பு பரவலாக வாசிக்கப்பட்ட அளவிற்கு அக்கவிதை வாசிக்கப்பட்டதா எனத் தெரியவில்லை. எனக்கெல்லாம் பிரமிளின் தெற்கு வாசல், நகுலனின் மழை மரம் காற்று, தேவதேவனின் நார்சிசஸ் வனம், சபரிநாதனின் கலீலியோவின் இரவு போன்ற பல கவிதைகளைத் திரும்பத் திரும்ப இப்போதும் வாசித்துப் பார்ப்பேன். இந்த மரபில் நீங்கள் (வே.நி.சூர்யா), பெரு விஷ்ணுகுமார் போன்றோர் இணைந்திருப்பது தனிப்பட்டமுறையில் எனக்கு மகிழ்ச்சி தருவதாகும்.

நீள் கவிதைகள் ஓரளவிற்கு மரபின் அல்லது நினைவுகளின் பிடியில் நிற்பவை என்றே நான் நினைக்கிறேன். அவை கவிஞனின் பிரக்ஞை வழி படிமங்களையும், தர்க்கங்களையும், கேள்வி பதில்களையும், ஆசை நிராசைகளையும் உருவாக்கி நகர்கின்றன.

18. சரி. நீள்கவிதைகள் ஏன் எழுதப்படவேண்டும். அதன் தற்காலத் தேவை என்ன?

வேறு எந்தக் காலத்தையும் விட வருங்காலத்தில் மொழியின் மீது ஈடுபாடுகொள்ள வேண்டிய தருணமாக இதனைக் கருதுகிறேன். இதற்கு கவிதை வடிவமே மிகச்சிறந்த ஊடகமாக இருக்கும்.

பாரதியின் பாஞ்சாலி சபதம், குயில்பாட்டு, பாரதிதாசனின் இருண்டவீடு, க.நா.சுவின் மணப்பெண், ந.பிச்சமூர்த்தியின் பெட்டிக்கடை நாரணன் எனப் புதுக்கவிதையின் தொடக்க்காலமே நீள்கவிதைத் தன்மையைச் சுவீகரித்துக்கொண்டிருப்பதை நீங்கள் காணலாம்.

இதற்குப் பின்னரும் நான் முன்பு கூறியபடி பிரமிள் மற்றும் நகுலனில் இருந்து தேவதேவன் தலைமுறையையும் தாண்டி இக்கவிதைகள் எழுதப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

நவீன கவிதையில் நெடுங்கவிதையின் தேவை என்ன என்பதைத் திட்டவட்டமாக வரையறுக்க முடியாது. ஆனால் மொழி ஆர்வலனாகவும், மொழியின் மீது அதன் படைப்புச் செயல்பாடு மீது ஈடுபாடு கொள்ளும் எவரும் அதன் வடிவம் நீர்த்துப்போவதை விரும்ப மாட்டார்கள். மிகச்ச்சமீப காலமாக கவிதையின் உற்பத்திப் பெருக்கமும், துணுக்குத்தன்மையும், அனத்தல் குறிப்புகளும் நிறைந்து வருவதைப் பார்க்கமுடிகிறது.

பாரதிக்குப் பின் பிறந்தார் பாடைகட்டி வச்சிட்டார், ஆரதட்டிச் சொல்வார் அவரிஷ்டம்- நாரதனே” என்ற புதுமைப்பித்தனே இக்காலகட்டத்தின் மொழியைப் பார்த்திருந்தால் பாரதிதாசன் குறித்து இவ்வாறு பேசியிருக்கமாட்டார் என நினைக்கிறேன். மொழி, பண்பாடு என அனைத்தின் மீதும் பல்முனைத் தாக்குதல் நடக்கும்போது அலங்காரத் தன்மை, பிரச்சார நெடி போன்றவை இருந்தாலும் மொழியின் மீதான பிடிமானத்திற்காகவாவது இத்தருணத்தில் ஏற்றிருப்பார் என நினைக்கிறேன். கவிதையின் வடிவத்தைச் சுலபமாக்கி பலர் எழுதவருவது குறித்தெல்லாம் நாம் வரவேற்கவேண்டும்தான். ஆனால் மொழியின் முக்கியமான இயங்குதளத்தின் மீதும் வரும் தலைமுறை அக்கறையுடன் நடந்துகொள்ள வேண்டும். அனைத்தையும் அமைப்புடன் பொருத்திப்பார்ப்பதுதான் சற்று சோர்வளிக்கிறது. தமிழ் போன்ற நெடிய மரபுள்ள மொழியில் நீள் கவிதையின் தேவை உண்டோ இல்லையோ, மொழியின் ஆகிருதி கருதி எழுதப்படவேண்டும். மிகச்சரியான 50 வாசகர்களாவது இக்கவிதைகளுக்கென இருந்துகொண்டிருப்பர் என்பதே என் எண்ணம்.

19. உங்களது முதலிரண்டு தொகுதிகளில் இருந்த மொழிச்செறிவு அதற்குப் பிறகு வந்த தொகுதிகளில் குறைந்திருக்கிறது. எனினும் உள்ளார்ந்த இசைமையையும் புனைவம்சத்தையும் தக்கவைத்தபடியே எளிமையை நோக்கி தற்போதைய கவிதைகள் நகர்ந்திருப்பதாகப் படுகிறது. இந்த மாற்றத்தைப் பற்றிச் சொல்லுங்கள்.

ஏறக்குறைய 30 ஆண்டுகாலமாக கவிதையில் தொழிற்பட்டு வருகிறேன். ஆனால் நான்கு தொகுப்புகள் என்பது குறைந்த எண்ணிக்கைதான், இதற்கிடையில் ஒன்றிரண்டு தலைமுறைகள் உருவாகிவிட்ட கால இடைவெளியில் இக்கவிதைகள் உருவாகிவருகின்றன.

தொடக்க காலத்தில் இருந்த மனநிலை இப்போது இல்லை என்பது ஒருகாரணம். ஒவ்வொரு தொகுப்பிற்கு இடையிலும் நான் எடுத்துகொண்ட கால இடைவெளி அதிகம். என்னைப்போல ஸ்ரீநேசனும் இதே தன்மையைக் கொண்டவராக உள்ளார். மூன்று பாட்டிகள் தொகுப்பில் அளப்பரிய எளிமையை நோக்கி அவரது கவிதைகள் சென்றுள்ளது. ஆனால் ராணிதிலக், ஷங்கர்ராமசுப்ரமணியன், லக்ஷ்மி மணிவண்ணன் கவிதைகள் எளிமையையும் அதேசமயத்தில் ஒரு தத்துவார்த்தமான அம்சத்தை நோக்கி நகர்ந்துள்ளதை இப்போது கவனிக்க முடிகிறது.

இதில் ஒரு சிக்கல் உள்ளது. மொழியை எளிமைப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு துணுக்குகளையும், மொழிச்செறிவற்ற வார்த்தை அடுக்குகளையும் நோக்கி நகர்ந்துவிடக்கூடாது. இதே சமயத்தில் சல்லேகனை போன்ற கவிதைகளை எப்படி நாம் புரிந்துகொள்வது? பாடிகூடாரத்திற்கு முன்பாக ஒரு நீள்கவிதை தொகுப்பு வெளியிட உத்தேசித்திருந்தேன். ஆனால் இதைத் திட்டம் என்றும் கூறமுடியாது. எதேச்சையான மொழிமாற்றம். முன்னும் பின்னும் நகர்ந்து, போவதும் வருவதுமாகத்தான் இருக்கிறது.

20. ஆண்- பெண் உறவு சார்ந்த நாடகங்கள், காமம், ஏக்கம், சரணாகதி போன்ற உணர்வு நிலைகளை உங்களது பிரதான பாடுபொருட்களில் ஒன்றாக குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன். ஆனால் சமீபத்திய தொகுதியான பாடிகூடாரத்தில் அதிலிருந்து வெளியேறுவதற்கான முயற்சியொன்றைக் காணமுடிகிறதே

இதை நான் நெகிழ்ச்சியாக ஏற்கவேண்டிய தருணமாக நினைக்கிறேன். காதலும், காமும் அதனூடாக நிகழும் சரணாகதியும், துக்கமும், பிரிவும் பல அனுபவங்களைத் தரக்கூடியதுதான். இருபதின் தொடக்கத்திற்கும் ஐம்பதின் தொடக்கதிற்கும் ஒரு வித்தியாசம் உண்டல்லவா? வார்த்தைகளின் வழியாகப் பயணப்படும் கவிஞன் அதனைக் கண்டுகொள்கிறான். உன்னதமானதும் மிகுந்த உணர்ச்சிகரமானதுமான அந்தப் பாடுபொருட்களை ஒரு அழகிய பேழையை ஆற்றில் விடுவதுபோல கைவிட்டு, வயது மாற்றங்களால் எற்படும் தரிசனத்தைக் காணத்துணிவதாகப் பொருள் கொள்ளலாம். இந்த நேரத்தில் ”யாரும் யாருடனும் இல்லை” என்ற உமாமகேஸ்வரியின் ஒரு வார்த்தை நினைவிற்கு வருகிறது. எவ்வளவு பொருள்கொண்ட, அனுபவமுள்ள வார்த்தை அது?

நான் அறிந்தும் நிகழும் மாற்றம் தான் அது. நிகழட்டும்.

21.ஆரம்பகாலக் கவிதைகளிலிருந்து இப்போது வரைக்கும் உங்களது கவிதைகளில் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிற அம்சம் என்று ஏதேனும் உள்ளதா?

அப்படி ஏதும் தனித்து இருப்பதாக உணர முடிவதில்லை, சில அம்சங்கள் தொடர்ச்சியாக இருக்கலாம். அது பழமை நெடியுடன் கூடிய சொல்லாடல்கள், இக்காலத்தில் நிகழக்கூடியதையும் பின்னோக்கிச் சென்று பார்ப்பது எனச் சில விஷயங்கள் இருக்கலாம். அது பிழையா அல்லது செறிவா என உங்களைப்போன்றவர்கள் தான் கூறவேண்டும்.

22. உங்களது இசை ரசனை குறித்துச் சொல்லுங்கள்.

ஒரு கவிஞன் எதுவாக இருக்கிறான் என்பதில் அவன் கேட்டும் இசைக்கும் பங்கிருக்கிறது என நினைக்கிறேன். இந்தப் பதிலை ரசிக மனோபாவம் சார்ந்ததாக மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். இசை ஞானம் தொடர்புடையதல்ல என்பதைத் தெளிவுபடுத்திவிட்டுச் சொல்கிறேன். தொடக்கத்தில் இருந்து இன்று வரை 1980களுக்கு முந்தைய தமிழ்ச் சினிமா பாடல்களின் மீது ஈடுபாடு உண்டு. மேலும் சைவ வழிபாட்டிலும், பஜனைகளிலும், திருமுறைப் பாடலிசை அரங்குகளிலும் கலந்துகொள்ளும் வழக்கம் இருப்பதால் திருமுறை மற்றும் அருட்பா படல்களும் பிடிக்கும். தருமபுரம் சுவாமிநாதன், சற்குருநாதன், மழையூர் சதாசிவம் ஆகியோரின் குரல்கள் மிகவும் பிடித்தமானவை. மேலும் கர்நாடக இசையும், ஹிந்துஸ்தானி இசையும் சுழற்சி முறையில் கேட்பதுண்டு. இரண்டாயிரத்தின் தொடக்கதில் ஹிந்துஸ்தானி டிவிடிக்களை சேகரிக்கும் பழக்கம் இருந்தது. சிதாரில் அனுஷா ரவிசங்கர், (அவரது முகபாவங்களுக்காகவும்) ஷெனாய் பிஸ்மில்லாகான், ஹிந்துஸ்தானி வாய்ப்பாட்டில் பண்டிட் பீம்சன் ஜோஷி மற்றும் மைக்கேல் ஜாக்சன், ரஸ்புடீன் ஆகியோரின் சில பாடல்கள், நாட்டுப்புற இசைக்கோர்வைகள், யான்னியின் அக்ரோபோலிஸ் மற்றும் இன் டு த டீப் ப்ளூ மற்றும் நாதஸ்வர கச்சேரிகள், வயலின் இசை என தொடர்ச்சியாகவும் மனம் விரும்பு இசையையும் கேட்பது வழக்கம். பாடல் பெற்ற சைவத்திருத்தலங்களில் பாடப்படும் அனைத்து ஒதுவா மூர்த்திகளின் பண்ணிசையும் எப்போதும் பிடிக்கும். இசை, எனது கவிதைகளில் மறைமுக மொழி வடிவமாக உள்ளது எனலாம்.

23. பழந்தமிழ் இலக்கியப் பயிற்சி எந்த அளவுக்கு இருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள், நீங்கள் எவற்றையெல்லாம் தோய்ந்து வாசித்திருக்கிறீர்கள்?

புதியதாக எழுத வருபவர்கள் மரபைத் தெரிந்துகொள்வதில் தவறேதும் இல்லை ஆனால் அது இலக்கியப் பிரதிகளுடன் மட்டுமல்லாது இன்னபிற வாழ்க்கை முறைகளையும் மரபின் தொன்மங்களையும் பண்பாட்டுக் கூறுகளையும் சேர்த்தே தெரிந்திருப்பது நல்லது. பழந்தமிழ் இலக்கியப் பிரதிகளைத் தோய்ந்து வாசித்திருக்கிறேன் என்றெல்லாம் கூற முடியாது. வாசிப்பதைத் திருத்தமாக வாசிக்கவேண்டும் என்ற அளவில் உள்ளது என் வாசிப்பு.

கம்பனை எப்போது வாசித்தாலும் புதியதொன்றை பெறமுடிகிறது. உள்முகத்தன்மையை உருவாக்கும் பிரதிக்கு கூடுதல் மதிப்பு இருக்கவாய்ப்புண்டு என்பது என் எண்ணம். அது சரியாகவும் இருக்கலாம் தவறாகவும் இருக்கலாம்.

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்திய உடம்பு

என்ற வள்ளுவரின் குறளை வாசிப்பின் வழியாகவும் அறியலாம் அனுபவத்தின் வழியாகவும் அறிய முடிகிறதல்லவா? ஆனால் பட்டறிவிற்கு வாசிப்பு கூடுதல் பலம் சேர்க்கும் என்பதே உண்மை..

24. இன்றைய சமகால கவிதைப் போக்கு, படைப்புச்சூழல் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

சமூக வலைத்தளங்களின் வருகைக்குப் பின், இதனை முழுவீச்சில் பயன்படுத்தும் கவிஞர்களின் படைப்புகளில் அதன் தாக்கம் பிரதிபலிக்கத்தொடங்கியது. புதிய தலைமுறையில் நல்ல பல கவிஞர்கள் உருவாகி வந்துள்ளனர். சபரியின் தலைமுறை வருகைக்குப் பிறகு வே.நி.சூர்யா, பெரு விஷ்ணுகுமார், ச.துரை, றாம் சந்தோஷ், பொன்முகலி, முத்துராசாக்குமார், நெகிழன், மௌனன் யாத்ரிகா, அதிரூபன் ஆகியோர் காத்திரமான படைப்பாக்கங்களை உருவாக்குபவர்களாக உள்ளனர். கார்த்திக் திலகன், ஜெ. ரோஸ்லின், சூ.சிவராமன், சூரர்பதி, ஆனந்த் குமார், மதார், செல்வசங்கரன், அதீதன் ஆகியோர் சூழலின் நல்வருகையாளர்களாக உள்ளனர். என்னுடன் எழுதத்தொடங்கிய தாமரைபாரதி திரும்பவும் எழுத வந்துள்ளதும் எனக்கு மகிழ்ச்சியளிப்பது.

தற்போதைய படைப்புச் சூழலில் வருத்தம் தருவதாக நான் நினைப்பது தணிக்கைகளற்ற உடனடி வெளிப்பாட்டு முறையும், எளிய மற்றும் சாதாரணப் படைப்பாக்கத்திற்கும் மிகப்பெரிய போலியான வரவேற்பு கிடைப்பதும், துணுக்குத் தன்மை, மரபை வாசிக்காத போக்கும், தன்னை முன்னிலைப் படுத்துவதில் உள்ள ஈடுபாடு அதிகமாகியிருப்பதையும் சொல்லலாம். பின்னர் இதுவெல்லாம் மாறக்கூடும் என்றே நினைக்கிறேன்.

25. இன்றைக்கு மானுடம் எதிர்கொள்ளும் அடிப்படையான நெருக்கடிகளாக நீங்கள் எவற்றைச் அடையாளம் காண்கிறீர்கள்.

சக மனிதர்கள் மீதான தொடர்ச்சியான அன்பு பாராட்டும் தன்மை குறைந்துள்ளதாக நினைக்கிறேன். இதற்கு முந்தைய தலைமுறைகளிடம் காணப்பட்ட உறவு பேணுதல் குறைந்துள்ளது. அதற்காக முந்தைய தலைமுறை மனிதர்கள் அனைவரும் புனித ஆத்மாக்கள் என்று கூறமுடியாது. அவர்களிடமிருந்த முதிர்ச்சியற்ற, நாகரீகமற்ற குணக்கேடுகளைக் கைவிட்டதுடன், கைவிடுதல் அம்சம் கூடுதலாகியிருப்பது தெரிகிறது. அன்பு, காதல், நட்பு, உறவு மற்றும் நம்பிக்கை, ஆசாபாசங்கள், பண்பாடு, மொழி உள்ளிட்ட அனைத்தையும் இதனுடன் தொடர்புபடுத்திப்பார்க்கலாம்.

புதிய தலைமுறையினர் எவ்வளவு சுதந்திர சிந்தனையுடன் வருகிறார்களோ அத்துனை அளவு சுயநலமும், மாற்றுக்கருத்துக்களை அலட்சியப்படுத்தும்போக்கும் கூடியிருக்கிறது

பரந்த மனப்பாங்கும், திரும்பப் பெற முடியாத அன்பாக இருந்தாலும் அன்பு செலுத்துவது ஒன்றே ஒட்டு மொத்த மானுட வாழ்வின் சாராம்சமாக இருக்க வேண்டும் என்பதே நான் பெற்ற பாடமாக உள்ளது.

ஒன்றன் கூறாடை உடுப்பவரே ஆயினும்

ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை” என்ற கலித்தொகைப்பாடலும், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கணியன் பூங்குன்றன் பாடலும் சொன்னதைத்தான் நாம் நம் அகத்திற்கு கொண்டு செல்லவேண்டும்.

வே.நி.சூர்யா

கவிதைகள், மொழியாக்கங்களில் தொடர்ச்சியாக இயங்கிவரும் வே.நி.சூர்யா, கரப்பானியம், அந்தியில் திகழ்வது என்ற இரண்டு கவிதை தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.

1 Comment

  1. கண்டாச்சிபுரம் கவிஞர்களான கண்டராதித்தன் காலபைரவன் இருவருடனும் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நல்ல பழக்க வழக்கங்கள் இருந்து வருகிறது கவிதைகள் கட்டுரைகள் குறித்து அதிகம் உரையாடல் இல்லை அவ்வப்போது சில விஷயங்கள் குறித்து கேட்டு அறிந்து கொள்வேன் மேலும் அவர்கள் நான் பின் தொடர்ந்து வருகிறேன் அவர்களுக்கு தெரியாமல் சில கவிதை நூல்களை படித்து வருகிறேன் மேலும் என்னை போன்ற புதிய வாசிப்பாளர்களுக்கு இது போன்ற உரையாடல் தொகுப்பு பல விஷயங்களை அறிந்துகொள்ள வாய்ப்பாகவும் வழிகாட்டுதலாக வும் உள்ளது நான் இன்னும் நிறைய நூல்கள் படிக்க வேண்டும் என்று கண்டராதித்தன் அண்ணன் அவர்கள் கூறுவார். அவரின் அன்புக்கும் அறிவுரைக்கும் நான் கட்டுபட்டவன் பல விஷயங்களை இதில் அவர் பகிர்ந்து உள்ளார் இவ்வாறு இந்த உரையாடல் அமைய அதற்காக தன்னை ஏற்படுத்தி கொண்ட முயற்சிக்கும் கேள்விக்கும் பதில் பெற கொண்டு ஆர்வத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் பாராட்டுக்கள் (சூர்யா ) அவர்களுக்கு அன்பும் மகிழ்ச்சியும்.

உரையாடலுக்கு

Your email address will not be published.