/

பாத பத்மம்: ஏ.வி.மணிகண்டன்

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை குறுங்காட்டை சுற்றி நடந்து கொண்டிருந்தேன். பெங்களூரின் அதிகாலை வெயிலுக்கேயான தன்மை, வெயிலாக அல்லாமல் ஒளியாக மட்டும் இருப்பது. மரங்கள் துல்லியமாக ஒளியேற்று நின்றிருந்தன. முறையாக ஓவியம் பயிலும் போது முதலில் பயில்வது வண்ணங்களில் எத்தனை வகை என்பதை. கிளிப்பச்சை எனவும் கரும்பச்சை எனவும் மட்டும் அழைத்து வந்த உலகில் குறைந்தது நான்கு பச்சை வண்ணங்கள் உள்ளன என்பதும் அவற்றை பிற வண்ணங்களோடு கலக்கும்போது பச்சையின் வேறுபாடுகளுக்கும் பிரபஞ்சத்தின் சாத்தியங்களுக்கும் எண்ணிக்கையில் பெரிய வித்தியாசம் இல்லையென்பதையும்.

துல்லியமான ஒளியில் வண்ணங்கள் துலக்கமாகின்றன, புலன்கள் மயங்கத் துவங்கிவிடுகின்றன. வண்ணங்கள் துலங்கும் தருணங்களை ரிங்கோ கவாயுச்சி [Rinko Kawauchi] புகைப்படங்களாக ஆக்கியிருக்கிறார். காலை ஒளியைக் காணும் போதும், நிழலின் துலக்கத்தையும் மழுக்கத்தையும் காணும் போதும் அவரை எண்ணிக் கொள்ளாமல் கடக்க முடிவதில்லை.

ரிங்கோ கவாயுச்சி

அத்தகைய நேரங்கள் கவிதை வாசிக்கவும் காவியங்களை வாசிக்கவும் பொருத்தமான நேரம். வண்ணங்களும் ஒளியும் குழம்பி அரை மயக்கம் தரும் வேளைகளில் வாசித்த படியே சிறு துயிலில் விழுந்தால் வாசிப்பின் களம் கனவாக வரும். பல முறை சோதித்து உறுதிப்படுத்திக் கொண்ட அனுபவம். போரும் வாழ்வும் நெப்போலியனின் யுத்தங்களை, வெண்முரசின் நகரங்களை யுத்தங்களை எல்லாம் காட்சியாகக் கண்டிருக்கிறேன். விழித்து வாசிப்பை துவங்கும் போது கனவின் காட்சிகள் வாசிப்பை அடர்த்தியாக ஆக்கும்.

ஞாயிற்றுக் கிழமைக்கு ஒரு
பாடல் – ஏ.வி.மணிகண்டன்

வண்ணங்கள் துலங்கும் போது புலன்கள் மயங்குவதை வாலஸ் ஸ்டீவன்ஸ் கவிதையாக ஆக்கியிருக்கிறார். ‘ஞாயிற்றுக் கிழமை காலை’ கவிதையில் காலை நேரத்தில் தேவாலயத்திற்கு போகாமல் காஃபியும் ஆரஞ்சுமாக ஒளியில் துலங்கும் காலை உணவோடு அமர்ந்திருக்கும் சித்திரம் வருகிறது. அதிலே ஒரு கொண்டைக்கிளி பற்றிய வரியும் உண்டு. கவிதையில் வரும் கிளி தரை விரிப்பில் நெய்யப்பட்டிருக்கும் கிளியா அல்லது கவிதை சொல்லி காணும் கிளியா என்பதும், அதில் வரும் பசுமை என்பது கிளியின் நிறமா அல்லது ஞாயிற்றுக் கிழமைக் காலையின் சுதந்தரமா என  கவிதை விமர்சகர்களிடம் தீராத விவாதம் இருந்து வருகிறது. புரதான பலியான கிருஸ்துவின் தியாகம் காலை ஒளியில் மெல்ல கரைந்து கொண்டிருக்கிறது.

மெல்லிய இரவு ஆடையின் இதத்தோடும்
நேரம் பிந்திய காஃபியுடனும்
ஆரஞ்சோடும்
வசந்தத்தின் நாற்காலியில்
கொண்டைக்கிளியின்
பசுமையான சுதந்தரம்
தரைவிரிப்பின் மீது
கரைந்து கொண்டிருக்கிறது
புரதான பலியின்
புனித அமைதி
அவள் கொஞ்சம்
கனவு காண்கிறாள்.

Complacencies of the peignoir, and late
Coffee and oranges in a sunny chair,
And the green freedom of a cockatoo
Upon a rug mingle to dissipate
The holy hush of ancient sacrifice.
She dreams a little,

நடையின் நடுவே நெருங்கிய உறவினர் ஒருவரின் அலைபேசி அழைப்பு. மரணச்செய்தி. மொத்த நாளும் சேனல் மாற்றப்பட்டுவிட்டது. மருத்துவ மனையின் பரபரப்புகள். தலைக்குள் வண்ண வண்ண விளக்குகளின் கீய்ங் கீய்ங்கள், வுவ்வாங் வுவ்வாங்கள். உடனே வீடு திரும்பி வண்டி வரச் சொல்லி அனைவருமாக கிளம்பி மாலைக்குள் ஊருக்கு செல்ல வேண்டும்.

நடையிலிருந்து வீடு திரும்பும் போது ஞாயிற்றுக்கிழமையின் காய்கறிகளோடு ஞாயிற்றுக் கிழமையின் வேகத்தில் கடந்து செல்பவர்கள் வேறு ஒரு தினத்திலிருந்து வேறு ஒரு பொழுதிற்கு சென்று கொண்டிருக்கிறவர்களானார்கள். இத்தனை ஒளியும் அத்தனை பச்சை நிறங்களும் எப்போதுமிருந்தாலும் கவிதையால் புகைப்படத்தால் அவை துல்லியமாக ஆகின்றன. ஒரு அழைப்பு அவற்றை மழுங்க செய்துவிடுகின்றது.

கவிஞரும் சில்வியா ப்ளாத்தின் கணவருமான டெட் ஹ்யூஸ் 1962-ல் எழுதிய கவிதை ‘துல்லியமான ஒளி’. 1962 ஏப்பிரலில் சில்வியாவும் ஹ்யூஸும் குழந்தைகளோடு வீட்டுக்கருகே இருக்கும் குன்றுக்கு பயணம் சென்றிருக்கிறார்கள். அங்கே டஃபோடில்கள் பூத்திருக்கின்றன. ஹ்யூஸ் ப்ளாத்தையும் குழந்தைகளையும் படமெடுத்திருக்கிறார். எல்லா பயணங்களிலும் நிகழும் சடங்கான செயல்பாடாக இருந்திருக்கும். கவிதையில் வருவதைப் போல ப்ளாத்தும் அந்த டஃபோடில்களும் பிறகொரு ஏப்ரலைக் காணவில்லை. 1963-ல் ப்ளாத் தற்கொலை செய்து கொண்டார்.

ப்ளாத்தின் படைப்புகளை ஸ்மித் பல்கலைக்கழகத்திற்கு தருவதற்காக தொகுத்த போது கண்டெடுக்கப்பட்ட புகைப்படத்தை முன் வைத்து ஹ்யூஸ் இந்தக் கவிதையை எழுதியிருக்கிறார்.

அன்றாடம் எண்ணற்ற தற்செயல்களின், ஊடு பாவுகளின் பின்னல்களால் நிகழ்வது. அந்த பின்னல்கள் எதுவும் நிகழ் காலத்தில் பொருள் கொள்வதில்லை எண்ணற்றவையாக இருப்பதாலேயே. நாம் காலத்தின் ஒழுக்கை நிரந்தரம் என எண்ணிக் கொள்ள விதிக்கப்பட்டவர்கள். மனித மனம் அப்படி இருக்க உயிரியல்பு விதித்திருக்கிறது. ஒவ்வொரு கணத்திலும் பிரபஞ்சத்தின் முழு பிரஞ்ஞையோடு ஒருவன் வாழ்ந்தால் அன்றாடத்தின் செயல்கள் அனைத்தும் சிக்கலாகி பிரபஞ்சம் பேருருவாகி புத்தி பேதலித்து விடும்.

டால்ஸ்டாயின் குறு நாவல் ‘டெத் ஆஃப் இவான் இலியிச்சி’ல் இவானின் மரணத்தை நண்பர்கள் அறிவது நீதி மன்றத்தில் ஒரு விசாரணையின் இடைவேளையின் போது. அவனுடைய மரணத்தின் அதிர்ச்சி நொடி நேரம்தான். பிறகு அவனுடைய இடத்தை அலுவலகத்தில் யார் நிரப்புவது, நிரப்புவரின் பதவி யாருக்கு என்று சிந்தனை நகர்ந்து விடுகிறது.

மரணம் இருப்பின் பெரிய பேசுபொருள். ஆனால் மரணத்தை விட அதிர்ச்சியானது அதை நாம் கடந்து செல்லும் வேகம். மரணம் மட்டும் என்றில்லை எல்லா இழப்புகளையும் உடைவுகளையும், எல்லாக் கணங்களையுமே.

நம் மூளையின் நரம்புப் பின்னல்கள் புற உலகின் புள்ளிகளை தொகுத்து செய்திகளாக ஆக்கி தெரிந்து கொள்ளச் செய்யும் அமைப்பைக் கொண்டிருக்கிறது. அதன் நோக்கம் அடுத்து செய்ய வேண்டியதென்ன என தெளிவாக்கிக் கொள்வது, ஆகவே புற உலகை தகவல்களாக மட்டுமே கையாள்வது. அதை குறைந்த சக்தியை செலவிட்டு சாத்தியமாக்குவதே அதன் நோக்கம்.

மாறாக கலை, ஆன்மீக அனுபவங்கள் அனைத்தும் திரட்டப்பட்ட புற உலக விவரணைகளின் மீது எண்ணங்களை நீடிக்கச் செய்து வெவ்வேறு இணைப்புகளை உருவாக்கிக் கொள்வதன் வழி எண்ணங்களற்ற இடத்திற்கு சென்று சேரும் தருணங்கள். வாசிப்பு, கலையின் பயிற்சி அனைத்தும் எண்ணங்களை தகவலாக ஆக்கும் உயிரியல் செயல்பாட்டுக்கு எதிரானவை. அதனால்தான் கலையை தியானத்திற்கு இணையாகக் கருதுகிறோம். சொல்லற்ற இடத்திற்கு சொல்லால் போக முயல்கிறோம். பெரிய தருணங்கள் அனைத்தும் சொல்லவிந்து நின்றவையே.

டஃபோடில்கள் பூத்த ஏப்ரல் மாதத்தின் ஒரு நாளில் தங்கள் குழந்தைகளோடு ஒரு நாளை செலவிட்டிருக்கின்றனர் ப்ளாத்தும் ஹ்யூஸும். அந்த புல் வெளியில் மதிய உணவு உண்டு கொஞ்ச நேரம் குழந்தைகளோடு விளையாடி மீண்டிருக்கலாம். இருவருக்குமான உறவு கசப்பாக ஆகி இருந்த காலம். அங்கே வைத்து சண்டையும் கூட போட்டிருக்கலாம். டஃபோடில்களை கவனித்தார்களா, அன்று சூரிய ஒளி இருந்த துல்லியத்தை அனுபவித்தார்களா,  அங்கு வீசிய காற்றை அனுபவித்தார்களா, அந்த மலைக்கடியில் உறைந்திருந்த ஞானத்தைப் போல உள்ளுறைந்திருந்த காதலை உணர்ந்திருந்தார்களா அதைப் பற்றி உரையாடினார்களா தெரியவில்லை. அங்கே நடந்து கொண்டிருந்த அன்றாடத்தின் நாடகத்திற்கு அப்பால் உறங்காவிழியாக கேமரா இருந்திருக்கிறது. அது ஒரு படத்தை பதிவு செய்திருக்கிறது. டஃபோடில்களின் நடுவே ப்ளாத்தும் அவருடைய குழந்தைகளும் இருக்கும் தருணத்தை. ப்ளாத் அவர் பெண் குழந்தையிடம் குனிந்து எதையோ சொல்லிக் கொண்டிருந்திருக்க வேண்டும். புகைப்படத்தில் அசைவும் பாவனையும் மட்டுமே இருக்கிறது. அந்த சொற்கள் வந்து சேரவில்லை என்கிறார் ஹ்யூஸ்.

நம் எண்ணங்களும் செயல்களும் வார்த்தைகளும் அன்றாடத்தின் மீது அலையாக வீசி சிதறிக் கொண்டிருக்கின்றன. நம்மால் எதையும் உற்று நோக்க முடிவதில்லை. உற்று நோக்காத எதுவும் பொருள் கொள்வதில்லை. ஏனெனில் பொருள் என்பது காட்சியின் மீது நாம் ஏற்றுவது. அதற்கு சித்தம் ஒன்றின் மீது நிலைக்க வேண்டும். நம் சித்தமோ அலையடித்துக் கொண்டிருக்கிறது. புறஉலகம் அர்த்தங்களுக்கப்பால் ஓடிக் கொண்டேயிருக்கிறது.

தற்செயலாக ஒரு கேமரா, நம்முடைய மனதின் விருப்பு வெறுப்புகளுக்கும், செயல்களுக்கும், எண்ணங்களின் அலைகளுக்கும் அப்பாலிருந்து தன் ஊழ்க்கத்தின் கண்ணைத்  திறந்து மூடும் போது உள்ளே  நுழைவது முற்றிலும் புற உலகம் மட்டுமே. அந்த புற உலகை நெடுங்காலம் கழித்து நம் உணர்ச்சிகளும், சொற்களும் கடந்தபின்னர் பார்க்கும் போது “அது” எதுவாக இருந்ததோ அதுவாக மட்டுமே காட்சி தருகிறது.

1963-ல் ப்ளாத் இறந்த பிறகு இருவருக்குமான கசப்புகள் பொருளிழந்தன. வெறுப்புகள் இல்லாமலாகியிருக்கும். ஹுயூஸுக்கு திகைப்பாகக் கூட இருந்திருக்கும், அன்று ஒளி எவ்வளவு அற்புதமாக இருந்திருக்கிறது. ட்ஃபோடில்கள் எத்தனை அழகாக இருந்திருக்கின்றன, இரு குழந்தைகளோடும் ப்ளாத்தோடும் அங்கே கிடைத்த அந்த ஒரு கணம் எத்தனை துல்லியமாக இருந்திருக்கிறது என. அதை விட அத்தனை துல்லியமான புற உலகம் எத்தனை எளிதில் காட்சியிலிருந்து தப்பி விட்டது என.

தேர்ந்த கவிஞரான ஹ்யூஸ் ஏன் டஃபோடில்ஸை இத்தனை முறை  கூறிக் கொண்டிருக்கிறார்? காலத்தில் தான் தவற விட்ட டஃபோடில்களை எட்டிப் பறிக்க முயல்கிறாரா? ஒரு முறை குறிப்பிட்டால் வாசகனும் தன்னைப் போல கவனிக்க விட்டுவிடக் கூடுமென்றா?

ஒரு ஆவனப்படத்தில் யூதப் பேரழிவிலிருந்து மீண்ட ஒரு மூதாட்டி வாழ்க்கை முழுவதும் எதிர் மறையான சொற்களை சொல்வதில்லை என்று முடிவு செய்து அப்படியே இருப்பதாக சொல்கிறார். சிறுமியாக இருந்த போது அவரையும் தம்பியையும் ஆஷ்விட்ஸுக்கு ரயிலில் அழைத்து செல்லப்படும்போது தம்பியின் காலணியை நோக்கி, கடவுளே, ஒரு போதும் நீ ஒழுங்காக இதை அணியமாட்டாயா என்று கேட்டிருக்கிறார். அதுதான் அவர் உரைத்த கடைசி சொற்கள்.  தன் தம்பியிடம் அவர் உரைத்த கடைசி சொற்கள் அவை என்று எண்ணும் போது அதிலிருந்து மீளவே முடியவில்லை. ஆகவே எந்த சொல்லும் ஒரு வேளை கடைசி சொல்லாக எஞ்சக் கூடும் என்று எண்ணி, கடைசி சொல்லாக எஞ்சினாலும் துயராக ஆகாத சொற்களைக் கூறி வாழ்ந்திருப்பதாக சொன்னார்.

இங்கே வாழ்க்கை முழுவதும் சொற்களோடு வாழ்ந்த ஹுயுஸுக்கு அந்தப் பிரஞ்ஞையை புகைப்படம் அளிக்கிறது. வாழ்வின் நிலையாமை என்பது மனிதன் அடைந்த பழமையான ஞானம். அனேகமாக மனிதன் முதலில் அடைந்த ஞானம் அதுவாகத்தான் இருக்க வேண்டும். ஆதி மனிதன் என்றோ “காலம்” என்ற உணர்வை, நான் “நாளை” இருக்க மாட்டேன் என்ற உணர்வை அடைந்த தருணத்தில் குகைகளில் தன் கைகளை வைத்து வண்ணங்களை வீசி சித்திரம் தீட்டி உணர்ந்த ஞானம். இந்தப் பாறையில் நான் என் கையை பதிய வைத்துவிட்டேன் இனி வரும் காலத்தில் என்றென்றைக்குமாக நான் இருப்பேன் என்று உணர்ந்த ஞானம். ஆனால் மிக எளிதாக நாம் மறந்து விடுவதும் அந்த நிலையாமையைத்தான்.

ஆதிசங்கரருடைய மாணவர் பத்ம பாதர் குறித்த புராணம் ஒன்று. ஆற்றின் இந்தக் கரையிலிருந்து சங்கரர் அழைத்த போது பிற மாணவர்கள் ஆற்றைக் கடந்து எப்படி போவது என தயங்கி நின்ற போது, சிந்திக்காமல் ஆற்றில் கால் வைத்து நடந்து சென்றார் பத்மபாதர். கால் வைக்கும் இடமெல்லாம் தாமரை பூத்து ஆற்றைக் கடந்தார். இளமையில் வாசித்த கதை. ஞானம் அக்கரையில் நின்று அழைக்கிறது, அறை கூவுகிறது. நடுவே நதி ஓடுகிறது. நதியை அஞ்சாமல் கால் வைத்து நடப்பவன் அகாலத்தில் பூக்கும் பூவொன்றின் மீது நின்று  சென்று ஞானத்தை அடைகிறான். அது ஞானியருக்குரியது.

உண்மையில் நம் அன்றாடம் கூட அத்தகைய எண்ணற்ற தாமரைகளில் கால் வைத்து நடப்பதாகவே இருக்கிறது. கால் வைக்கும் இடமெல்லாம் தொடர்ந்து பூத்துக் கொண்டே இருப்பதால் நாம் அதற்கு கீழே ஓடிக் கொண்டிருக்கும் நதியை உணர்வதேயில்லை.

நாமறியும் ஞானம், ஹ்யூஸ் குறிப்பிடுவது போல, நாம் நின்று கொண்டிருக்கும் மலையின் உள்ளே, நடந்து கொண்டிருக்கும் நதியின் அடியே உறைந்திருக்கும் ஞானம். நெடுங்காலம் கழித்து காலத்தின் மாற்றத்தில் நாம் அறிவது. கடந்து சென்ற காலம் நம் அனைத்தையும் அடித்துச் சென்ற பிறகு எஞ்சிவற்றில் திகழ்வது.

என்றோ ஒரு நாள், ஏதோ ஒரு கணத்தில் காலடியில் பூ பூக்காத போது, அத்தனை உறுதியாக எடுத்து வைக்கப்படும் காலுக்கடியில் நதியின் வேகத்தை உணரும் போது,  வாழ்க்கை முழுவதும் அதுவரையிலான காலடித்தருணங்கள் அனைத்தும் புகைப்படங்களென பூத்து மறைகின்றன. அதற்குள் தலைக்கும் மேலே நதி வெகு தூரம் கடந்திருக்கிறது. நாம் வெகு ஆழத்திலிருக்கிறோம். நதி மீது ஒளி மட்டும் மின்னுகிறது துல்லியமாக.

The perfect Light

There you are, in all your innocence,
Sitting among your daffodils, as in a picture
Posed as for the title: ‘Innocence’.
Perfect light in your face lights it up
Like a daffodil. Like any one of those daffodils
it was to be your only April on earth
Among your daffodils. In your arms,
Like a teddy bear, your new son,
Only a few weeks into his innocence.
Mother and infant, as in the Holy portrait.
And beside you, laughing up at you,
Your daughter, barely two. Like a Daffodil
Your turn your face down to her, saying something.
Your words were lost in the camera.

And the knowledge
Inside the hill on which you are sitting,
A moated fort hill, bigger than your house,
Failed to reach the picture. While your next moment,
Coming towards you like an infantryman
Returning slowly out of no-man’s-land,
Bowed under something, never reached you –
Simply melted into the perfect light.

  •  

துல்லியமான ஒளி

அங்கே இருக்கிறாய் நீ
உன்னுடையை களங்கமின்மையோடு,
உன்னுடைய டஃபோடில்களின் நடுவே
‘களங்கமின்மை ‘ என்ற தலைப்பிற்காக
எடுக்கப்பட்டதோ 
எனத் தோன்றக்கூடிய புகைப்படம் ஒன்றில
மிகத்துல்லியமான ஒளி
ஒளிரச் செய்கிறது
உன் முகத்தை
ஒரு டஃபோடிலைப் போல
அங்கே இருக்கும்
எந்த ஒரு டஃபோடிலைப் போலவும்
அந்த ஏப்ரல் இவ்வுலகில்
உன்னுடைய ஒரே ஏப்ரலாக இருந்தது
உன்னுடைய டஃபோடில்களுக்கு நடுவே.
உன் கைகளில்
டெடி பியரைப் போல
உன்னுடைய
புதிய மகன்
மிகச்சில வாரங்களின்
களங்கமின்மையோடு
வந்திருக்கிறவன்.
புனித அன்னையும் குழந்தையும்
தெய்வ உருவங்களிலிருப்பதைப் போல.
உனக்கருகில்
உன்னை நோக்கி சிரிக்கும் உன் மகளுக்கு
அனேகமாக இரண்டு வயது.
ஒரு டஃபோடிலைப் போல
உன்  முகத்தைக் குனித்து
ஏதோ சொல்கிறாய்.
அந்த வார்த்தைகள் புகைப்படத்தில்
தொலைந்துவிட்டன.

நீ அமர்ந்திருக்கும்
உன் வீட்டை விட பெரியதும்,
அகழி கொண்டதுமான
அந்த  மலையின்
உள்ளே இருந்த ஞானமோ
புகைப்படத்தை வந்தடையவில்லை.
உன் அடுத்த கணமோ
உன்னை நோக்கி வந்து கொண்டிருந்தது
சமாதான பிரதேசத்திலிருந்து கிளம்பி
மெல்லத் திரும்பிச் செல்கிற
ஒரு ராணுவ வீரனைப் போல
ஏதோ ஒன்றின் முன் அடி பணிந்து,
அது உன்னை வந்தடையவேயில்லை.
அந்த துல்லியமான ஒளியில்
கரைந்து போனது.

ஏ.வி மணிகண்டன்

ஆசிரியர் குறிப்பு: பெங்களூரைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான ஏ.வி.மணிகண்டன், கலை இலக்கிய விமர்சகரும்கூட. காண்பியல் கலை சார்ந்தும் நவீன கவிதைகள் சார்ந்தும் தமிழில் விரிவான திறனாய்வுகள் எழுதியிருக்கிறார். இந்திய தத்துவம் பற்றியும் கட்டுரைகள் எழுதி வருகிறார்.

உரையாடலுக்கு

Your email address will not be published.