/

பிறர் என்றொருவரில்லை (தோழர் தியாகுவின் “சுவருக்குள் சித்திரங்கள்”): இசை

ஒரு முறை நண்பர்களோடு தோழர் தியாகுவைச் சந்திக்க பொள்ளாச்சி சென்றோம். தியாகுவின் சிறை இலக்கியங்கள் இரண்டையும் சினிமாவாக்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்துப் பெற்று வருவதுதான் பயணத்தின் நோக்கம். நண்பர் சாம்ராஜ் அதற்குரிய பத்திரங்களை தயார் செய்து எடுத்து வந்திருந்தார். சாட்சியாக சாம்ராஜ் தரப்பில் சாம்சன் கையொப்பமிட்டார். தோழர் தரப்பில் கையெழுத்திட அப்போது யாரும் இல்லை. எனவே அவர் வீதிக்குச் சென்று ஆட்கள் யாராவது வருகிறார்களா என்று பார்த்தார். யாருமில்லை. கொஞ்ச துராத்தில் ஒரு கோவில் இருந்தது. அங்கிருந்த ஒரு பக்தையிடம்” இங்க பாருங்கம்மா.. இதுல ஒரு கையெழுத்துப் போடுங்க.. ஒரு சாட்சிக்குத்தான்..” என்றார். பக்தை திருதிருவென விழித்தார். முன்பின் அறியாத ஒருவர் கையெழுத்துக் கேட்டால் யார் போடுவார்கள்? அதுவும் பத்திரத்தில்? அதுவும் தோழர் கேட்டால்? பக்தை அலறாமல் இருந்ததுதான் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அதற்குள் தோழரின் உறவினர் ஒருவரையே வரவைத்து அந்த  பேராபத்திலிருந்து  பக்தையை காத்தருளிவிட்டாள் மாரியம்மன். இந்த நிகழ்வை வேடிக்கையாக தம்பி விஷால்ராஜாவிடம் சொன்னேன். தியாகத்தை வேடிக்கை பேசுவதில் நமக்குத் தனி இன்பம் உண்டு. அப்போது நாமும் தியாகிக்கு சரி நிகர் ஆகிவிடுகிறோம். ஒருபடி மேலேயும் ஏறிக்கொள்கிறோம் என்பதால் உரையாடல் இனிக்கவே செய்யும். அதற்கு அவன் சொன்னான் “ அவர் தோழர்.  அவருக்கு அந்நியர் என்று யாரும் இல்லை அல்லவா? அதனால் அப்படித்தான் கேட்பார்..” . அவனும் வேடிக்கையாகத்தான் பதில் அளித்தான். நான்தான் கொஞ்சம் கலங்கிவிட்டேன். இவர்களுக்கும் சேர்த்துத்தானே நாம் போராடினோம்? இவர்களுக்கும் சேர்த்துதானே நாம் பட்டினி கிடந்தோம்? இவர்களுக்கும் சேர்த்துதானே அரிதினும் அரிதான இளமையை அழித்துக் கொண்டோம்? இவருக்காகவும்தானே நிர்வாணப் படுத்தப்பட்டோம்? எல்லா மனிதனின் விடுதலைக்கும் சேர்த்துத்தானே நாம் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பிறகும் இடையறாது போராடினோம்? நமக்காக ஒரு சாதாரண கையெழுத்துப் போடமாட்டார்களா? என்று அவர் எண்ணியிருக்கக் கூடுமல்லவா? 

உண்மையிலேயே  ஒரு கம்யூனிஸ்ட்டுக்குப் பிறர் என்று ஒருவர்  இல்லையா?  மூர்க்கமான எதிரிகளே உண்டல்லவா? ‘வர்க்க எதிரிகள்’ என்று அவர்களைச் சொல்கிறார்கள். வர்க்கத்தின் குணாதிசியங்கள் வெளிப்படுவதால் அவர்கள் எதிரிகள்.  அவர்களை விடுத்து ஏனைய எல்லோரையும் ‘பிறர்’ என்கிற பேதமின்றி நேசிப்பது என்பதாக இதைக் கூடுதலாக புரிந்து கொள்ளலாம்..

வாடியபயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய ஒரு சாமியாரும்,  வறியவரை வாட்டியெடுப்பவனை அழித்தொழிக்கப் போகிறேன் என்று கிளம்பும் ஒரு போராளியும் தோராயமாக தோழர்கள் போல்தான் தெரிகிறார்கள் அல்லவா? வெவ்வேறு வழிகளில் கிளம்பிப்போகும் இவர்கள், நம் கண்மறையும் தூரத்தில் ஏதாவது ஒரு சந்துக்குள் நின்றுகொண்டு  , தோள்மேல் கைபோட்டு, கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருக்க வாய்ப்புகள் உண்டு என்றே நான் சந்தேகிக்கிறேன்.அகிம்சை வழிக்காரர்கள் வர்க்க உணர்வுகளை அழிக்க முயல்கிறார்கள். ஆயுதப் போராட்டம் அந்த ஆளையே அழித்தொழிக்க முனைகிறது. 

  இந்த நூலையொட்டி இரண்டு விதமாகப் பேசலாம். ஒன்று,  மார்க்சியத்தின் அடிப்படைகள். அதன் தத்துவ விளக்கங்கள். புரட்சியின் அவசியம். அதன் சரித்திர வெற்றிகள். அது சிதறுண்ட கோலங்கள். ஆயுதப் போராட்டங்கள். அகிம்சை வழி வாய்ப்புகள்… இப்படிப் பேசலாம்.  மற்றொன்று இந்த நூலின் வழி காட்சிக்கு வரும் மனிதவாழ்வு குறித்த விசாரணைகள்.  முதலாவது முறையில் திடமாக என் கருத்தை முன் வைத்து பேசுமளவு மார்க்சியத்தில் என்  வாசிப்பு அவ்வளவு பரந்து பட்டதாக இல்லை. இப்பவும் உயரமான இடத்தில் எங்கேனும்  செங்கொடி பறப்பதைப் பார்த்தால் இறும்பூதடைபவன்தான். கேரளத்துள் நுழைகையில் தேசப்பற்றுக்கு ஆளாபவன்தான். ஆனால் இவையாவும் உணர்ச்சிகரமானவை. மார்க்சியம் என்கிற கவித்துமான கனவின் வழி வந்து சேர்ந்திருக்கும் உணர்ச்சிகரம் அது. முதலாவது வழியில் பேச இது மட்டும் போதாது. ஆகவே இரண்டாவது வழியை தேர்ந்தெடுத்திருக்கிறேன். இதையொட்டி ஒரு விசயத்தை குறிப்பிட விரும்புகிறேன்.மார்க்சியர்கள் என்கிற  பலரும்  உணர்ச்சிகரத்தால் ஈர்க்கபட்டவர்களே ஒழிய மார்க்சிய மூல நூல்களை கற்றுத் தேர்ந்தவர்கள் அல்ல. ஆயுதப் போராட்டதை முன்னெடுத்து அதனால் சிறையுண்டு வாழ்வையே பலி கொடுத்து நிற்கும் தோழர்கள் யாரும் மூல நூல்களை வாசித்திருக்கவில்லை என்று இந்த நூலிலேயே ஒரு இடத்தில் குறிப்பிடப்படுகிறது. நமது தோழர் தியாகுவே கூட அப்படித்தான். ” என்னைப் பொறுத்தவரை மார்க்சிய விஞ்ஞானத்துடன் உண்மையான முதல் பரிட்சயம் என்பதே சிறையில் அதுவும் மரணதண்டனைக் கொட்டடியில்தான் ஏற்பட்டது என்பதைத் தயங்காமல் ஏற்றுக் கொள்வேன்.  (பக்; 263). ஒரு சித்தாந்தத்தை கற்காமலேயே  அதன் நிமித்தம் தன் உயிரையே பலியிடவும் , இன்னொரு உயிரைச் சூறையாடவும் தூண்டும் ஓர்  அடிப்படை கவர்ச்சிகரம் ஒன்று மார்க்சியத்தில் உள்ளது. அது மேலோட்டாமான கவர்ச்சிகரம் தானா? அதைக் கவித்துவம் என்ற சொல்லால் விளிக்கலாகாதா?

அடிப்படையில் நானொரு சிவாஜி ரசிகன் என்பதால் நூலை வாசிக்கையில் எந்த இடத்திலும் அழக்கூடாது என்கிற நிபந்தனையை எனக்கு நானே விதித்துக் கொண்டேன். அழ முடிவெடுத்துவிட்டால்  இந்தநூலின் ஒவ்வொரு பக்கத்திலும் அழலாம். கண்ணீர் ஒரு சுவை. அதை சப்புக் கொட்டல் ஆகாது . மேலும் அழுவது இந்த நூலைக் கற்பதாகாது .ஆயினும் நூலின் கடைசி சில பக்கங்களில் என் உறுதி உடைந்துவிட்டது.

இந்த நூலில் தியாகுவின் அரசியல் பயணமும், சிறை அனுபவங்களும் பேசப்பட்டுள்ளன. முரண்பட வேண்டிய இடங்களில் தைரியமாக முரண்பட்டிருக்கிறார். எந்தக் கட்சியின்  வழிக்காட்டுதலால்  கொடூரமான சிறை வாசத்திற்கும் , மரண தண்டனைக்கும் ஆளானாரோ அந்தக் கட்சியின் அடிப்படை செயல் திட்டத்தில் கோளாறு உள்ளது என்று தோன்றுகையில் அதை வெளிப்படையாக பேசவே செய்கிறார். முரண்பட்டு முரண்பட்டுத் தானே முன்னேறிச் செல்ல இயலும். 

” வெற்றி மயக்கம் கூடாதென்றும் அவசரவாதம் ஆகாதென்றும் சீனப் புரட்சியின் வரலாற்றிலிருந்து அறிய முடிவதாகக் குறிப்பிட்டேன். உள்ளேயும் வெளியேயும் நாங்கள் கொண்டிருந்த வெற்றி மயக்கத்தையும் அடி முதல் நுனி வரை நக்சலைட் இயக்கத்தைப் பீடித்திருந்த அவசரவாதத்தையும் சாடுவதற்கு நான் அந்தச் சந்தர்பத்தைப் பயன்படுத்திக் கொண்டேன்…… சீனப் பாதையே நமது பாதை என்று சொல்லி சீனப் புரட்சியைப் பார்த்துக் காப்பியடிக்கும் முயற்சியை கடுமையாகச் சாடினேன்.”

” எல்லாமே ஒரு சாகச விளையாட்டுப் போல் தெரிந்தது”  என்று ஒரு இடத்தில் எழுதுகிறார்..

கட்சிக்கதை சொல்வது, புரட்சி வரலாறு பேசுவது போன்றே இந்த நூலெங்கும் விரவிக் கிடக்கும் எளிய மனிதர்களின் சித்திரங்களும் மிக முக்கியமானவை என்றே நான் நினைக்கிறேன். ஏனெனில் புரட்சிக்கான ஆளெடுப்பு இங்கிருந்து தானே நிகழ முடியும். ஆகவே அந்த மனிதர்களைப் புரிந்து கொள்வதும் அவசியமான ஒன்றே. மனிதர்களை வாசிப்பதும் மார்க்சியப் பாடம்தான். தியாகு போன்ற போராளிகள் எளிய மனிதர்களின் அகக் கொந்தளிப்புகள் குறித்து இன்னும் தீவிரமாகச்  சிந்தித்து அதை எழுத்தாக்க வேண்டும். உதாரணமாக ஒருவனை வேறெதையுமே சிந்திக்கவிடாத படிக்கு காமம் பிடித்தாட்டுகிறதென்றால் , அவனைப் போராளியாக வென்றெடுப்பது எப்படி? புரட்சிக்கு குறுக்கே எது நின்றாலும்  அது குறித்தும் அவர்கள் திறந்த மனதோடு பேசத்தானே வேண்டும்? 

தாய்மையை தனி மனித செண்டிமெண்ட் என்று சொன்னால், புரட்சியை சமூகத்தின் மீதான தளராத பற்று என்று வகைப்படுத்தலாம். இந்தப் பற்று சொந்த வாழ்வில் நிகழ்ந்த கொடூரமான ஒடுக்குமுறைகளுக்கு எதிரான பழிவாங்குதலில் துவங்கி , பின்  எல்லோருக்குமான அன்பாக விரிந்திருக்கலாம். அல்லது அப்படி எதுவும் நிகழாமல்  இயல்பாகவே ஒருவருக்குள் இருக்கலாம்.. தியாகு சொல்கிறார்…

” தோழமையின் மகத்துவம் இன்று இங்கே மெய்ப்பிக்கப்பட்டது.  எதை எதையோ இரத்த உறவு என்கிறார்கள். தோழமை உறவன்றோ உண்மையான இரத்த உறவு? எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து இலட்சியத்தால் ஒன்றுபட்ட தோழர்களின் இரத்தம் இன்று இந்தச் சிறையில் ஒரே ஓடையாக கலந்து ஓடியது. அந்த இரத்த சாட்சியாக சொல்கிறேன். தோழமை உறவுதான் உண்மையான இரத்த உறவு”

“பெருமிதம் ” என்கிற சொல் இந்த நூலில் ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்வளவு அவமானங்களையும்,  தாங்கவொண்ணாத சித்ரவதைகளையும் அந்த பெருமிதம்தான் தாங்கிக் கொள்கிறது என்று நினைக்கிறேன். எறும்புக் கடிக்கு காலை உதறும் எளிய உடலுக்கு அவ்வளவு வலு எங்கிருந்து வந்து சேர்கிறது.  இந்த நூலில் என்னை உலுக்கிய ஒரு வரியாவது…” வனவிலங்குகளுக்கு ஏற்படும் காயங்களைப்  போல எங்கள் காயங்களும் தாமாகவே ஆற வேண்டியதுதான்” . சிறையில் மருத்துவர் உண்டு. மருந்துகள் உண்டு. மருத்துவம்  உண்டு என்று சொல்லப்படுகிறது. ஆனால் காயங்கள் தாமாகவே  ஆற வேண்டியுள்ளது

” பிரம்பு இருக்கிறதே பிரம்பு, அது ஒரு விஞ்ஞானபூர்வ ஆயுதம். சவுக்கடி போல் பிரம்படி சுள்ளென்று வலிக்கும். எவ்வளவு ஓங்கி அடித்தாலும் பிரம்பு எலும்பை முறிக்காது. அதாவது அடித்ததற்குச் சான்று நிலைக்கும்படி செய்யாது. எலும்புக்கு பகையல்லவே தவிர, பிரம்படி தோலுக்கும் சதைக்கும் கொடும்பகை. ஓங்கியடித்து உடனே எடுக்காமல் ஒருவிதமாக இழுத்து எடுத்தால் சுளையாக சதையைப் பிய்த்து எடுத்து வர பிரம்பால் மட்டுமே முடியும்.”(பக்;77)

நம்மில் சிலருக்கு வாழ்வு சட்டென்று தீர்ந்து விடுகிறது. தற்கொலை கோழைத்தனம் என்று வகுப்பெடுப்பவர்கள் அதையே தேர்ந்தெடுத்துவிடுவதை காண நேர்கிறது. ஆனால் தோழர்கள் சிறையில் மரண தண்டனை விதிக்கபட்ட பிறகும் போராட்டம் செய்திருக்கிறார்கள்.  ஆங்கிலம் கற்றிருக்கிறார்கள். ‘குன்றாத மனோதிடத்தோடு ‘ மார்க்சிய மூலநூல்களின் மொழிபெயர்ப்பை  வாசித்திருக்கிறார்கள். சில கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார்கள். சாவதற்குள் ஒரு சாதனையாக  ‘ மூலதனம் ‘ முழுவதையும் மொழி பெயர்த்து முடித்திருக்கிறார்கள்.  பல்கேரியா , ருமேனியா  போன்ற தேசங்களின் அரசியல் சூழ்நிலைகள் குறித்து தீவிரமாக விவாதிக்க விரும்பியிருக்கிறார்கள். உப்பு மூட்டை ஏறி விளையாடியிருக்கிறார்கள்.

தியாகு எடுத்த  மூன்று காலங்களுக்கான    ஆங்கில இலக்கண வகுப்பு…

We attack the landlord

We attacked the landlord

We shall attack the landlord

ஆங்கில வகுப்பையும், அரசியல் வகுப்பையும் தனித்தனியே எடுப்பது நேரவிரயமல்லவா?

முகநூலில் சில  விளையாட்டுகள் உண்டு. மனம் வெறுமையில் வாடுகையில் அரிதாக நான் அதை விளையாடுவதுண்டு. அது எதிர்காலம் சொல்லும்  ஒரு ஆருடவிளையாட்டு. விளையாட்டின் முடிவுகளாக சில சொற்கட்டுகள் வந்துவிழுந்தன.எழுவாய், பயனிலை என்று எந்த இலக்கணமும் இல்லை. உயர்திணை, அஃறிணை வேறுபாடு இல்லை. எவ்வளவு முயன்றாலும் வாசிக்கவே முடியாதபடியான சொற்கூட்டம். என் எதிர்காலம் இவ்வளவு குழப்பமாக இருக்க வாய்ப்புகள் உண்டுதானெனினும்  இது குறியீட்டு அழகியல் அல்ல. ஆங்கில  மொழிபெயர்ப்புச் சிக்கல். நான் அதைப் பகிர்ந்து இப்படி எழுதினேன்…

” என்னடா இது மொழிபெயர்ப்புக் கவிதை மாதிரி என்னவோ சொல்றீங்க…” 

மொழிபெயர்ப்பு குறித்து  ஒரு தீவிர இலக்கிய ஆசிரியன் போல தியாகு  எழுதுகிறார்….

” உண்மையில் நான் நன்றாக மொழிபெயர்க்கவில்லை என்பதை என் சிறைத்தோழர்கள் சுட்டிக்காட்டிய போது தெரிந்து கொண்டேன். ஒரு நல்ல மொழி பெயர்ப்பு என்பது சரியானதாக இருக்க வேண்டும். சரியானதாக மட்டும் இருந்தால் போதாது, அழகானதாகவும் இருக்க வேண்டும். சரியானது என்பது எதை மொழிபெயர்க்கிறோமோ அந்த மூலத்தின் கருத்துக்கு  உண்மையாக விசுவாசமாக இருப்பதைக் குறிக்கும். அழகு என்பது எந்த மொழிக்குப் பெயர்க்கிறோமோ அந்த மொழியின் ( இலக்கு மொழி) இயல்பான சொல்லாட்சியும் இயல்பான நடையும் கொண்டதாய் இருப்பதைக் குறிக்கும். விசுவாசம், அழகு ஆகிய இந்த இரு தன்மைகளையும் ஒரு சேரப் பெற்றிருப்பதுதான் நல்ல மொழிபெயர்ப்பு. அதாவது மொழி பெயர்ப்பு மொழி பெயர்ப்பாகத் தெரியக் கூடாது. ஆனால் என் மொழி பெயர்ப்புகள் தாங்கள் மொழி பெயர்ப்புகள் என்பதை நெற்றியில் எழுதி ஒட்டிக் கொண்டு வந்தன.” 

( பக்: 255)

” அன்பு என்பது மனிதனின் இயல்பான உணர்ச்சிகளில் ஒன்று. எவ்வளவுதான் கொடியவன்  என்றாலும் அவனும் கூட யாரேனும் ஒருவரிடம் ஏதேனும் ஒன்றிடம் அன்பு செலுத்தக் காணலாம். காசு பணத்தையே கடவுளாக்கி வழிபடச் செய்யும் தனியுடைமைச் சமுதாயத்தாலும்கூட  அன்பின் எல்லைகளை குறுக்க முடிந்துள்ளதே தவிர அன்பை அடியோடு அழித்துவிட முடியவில்லை. நீறுபூத்த நெருப்பாய் இருக்கும் மானுட அன்பை விசிறிக் கொழுந்து விடச் செய்யும்போது அதுவே கேடுகளையெல்லாம் பொசுக்கியழித்துப் புத்துலகை வார்க்கும் உலைக்கள நெருப்பாகிவிடும்” (பக்: 25)

சிடையில் தான் கண்ட மரணதண்டனை கைதிகள்  பலரும் நிலம் என்கிற உடைமையின் பொருட்டோ, பெண் என்கிற உடைமையின் பொருட்டோ கொலையாளிகள் ஆனவர்கள்தான் என்று சொல்லும் தோழர் தனியுடமைவெறியை மிகச்சரியான இடத்தில் சுட்டிக் காட்டுகிறார். 

மனிதர்கள் பொதுவாக நாய், பூனை, கோழி, புறா  போன்று ‘வளர்ப்புப் பிராணிகள் ‘ என்று பட்டியிலிடப்பட்ட சிலவற்றை வளர்ப்பது வழக்கம்.  சிலர் அபூர்வமாக பட்டியலுக்கு வெளியே தலை நீட்டுவதுண்டு. சிறையில் ஒருவர் பெருச்சாளி வளர்த்திருக்கிறார். அதைப் பிரிய நேரும்போது கண்கலங்கி நின்றிருக்கிறார். 

இந்த நூலின் இன்னொரு முக்கியமான அம்சம் நமது சிறை அமைப்புகள், நீதி அமைப்புகள் குறித்த விரிவான விளக்கங்கள். சிறைமதிலுக்கு இப்புறம் உள்ள சராசரி மனிதன் ஒருவன்  எப்போது வேண்டுமானாலும்  உட்புறம் சென்று விட வாய்ப்புண்டு அல்லவா? ஆகவே  நமக்கு சம்பந்தமல்லாத விசயங்கள் அல்ல இவை.

ஒரு நீதிபதி தன் தீர்ப்பில் இப்படி எழுதியுள்ளார்…” இவனைப் பார்த்தாலே முரடனாகவும், போக்கிரியாகவும் தெரிகிறது..”

” எதிரியைப்  பற்றி நீதிபதியின் உள்ளத்தில் பதிகிற படிமமே நீதித்தராசை ஆயுளின்  பக்கமோ, மரணத்தின் பக்கமோ சாய்க்க முடியும் என்பது மரண தண்டனை எனும் ஏற்பாட்டின் நியாயத்தையே கேள்விக் குறியாக்க வல்லது” ( பக்; 359)

நானெல்லாம் எந்த ஏங்கிளில் பார்த்தாலும் நல்லவனாகத் தோன்ற மாட்டேன் என்பதால் இனி  மேலும் கொஞ்சம் கவனமாக வாழ வேண்டியது  அவசியம் என்று நினைக்கிறேன்.

நடைமுறை யதார்த்தத்தைக்  கருத்தில் கொள்ளும் அறிவும் பொறுமையும் இன்றி  தீவிரவாதத்தின் மீது ஆழமான காதலில் விழுந்துவிடும் ஓர் இளைஞன்  உடனடியாக தனக்கு ஒரு துப்பாக்கி வேண்டும் என்று கேட்கிறான். அதுமட்டும்  கிடைத்துவிட்டால் போதும்  எல்லாக் கேடுகளையும் சுட்டுப் பொசுக்கிவிடலாம் என்று உறுதியாக நம்புகிறான். அப்படியெல்லாம் துப்பாக்கி கிடைத்து விடாது. அப்படியே கிடைத்தாலும்  அவ்வளவு எளிதாக சுட்டுவிட முடியாது  என்கிற உண்மையைச் சந்திக்கும் போது மனநல மருத்துமனையில் கிடத்தப்படுகிறான்.

” ஒருநாள் அந்த இளைஞர் தலைமறைவுத்  தங்குமிடம் ஒன்றுக்குச் சென்றார். அது இயக்க ஆதரவாளர் ஒருவரின் அறை. அங்கு போனதும் அந்த இளைஞர் படுக்கையில் மல்லாக்கப்  படுத்துக் கொண்டு,  தீப்பெட்டி எடுத்து தீக்குச்சிகளை ஒவ்வொன்றாய்க்  கிழித்து வீசினார். ஒவ்வொரு தீக்குச்சியைக் கிழிக்கும் போதும் ஒரு நிலக்கிழாரின் பெயரைச் சொல்லி ‘ அவுட்’ என்று கூச்சலிட்டார்.  அந்த தீக்குச்சிகளை அவர் வெடிகுண்டுகளாக கற்பனை செய்து கொண்டார். எல்லோரையும் அவுட் செய்து முடித்த பிறகு இப்போது தஞ்சை மண் விடுதலையாகிவிட்டது என்று அறிவித்துவிட்டார்.”(பக்:284)

தியாகு எழுதுகிறார்..

“படிப்பைத் துறந்து இயல்பான இளமை வாழ்வைத் துறந்து ,பெற்றோரையும் உடன் பிறப்புகளையும் துறந்து,  கிராமத்துக்குச் சென்று, சேரிகளில் வாழ்ந்து,  வயல் சேற்றில் உழைத்து,  இன்னும் சிலரை அங்கே சேர்த்துக் கொண்டு , வர்க்க எதிரியை அழித்தொழிக்க வேண்டும் என்பது திட்டம். இதுதான் புரட்சியின் தொடக்கம் என்று எண்ணப்பட்டது. இந்த எண்ணம் அப்பாவித்தனமாக இருக்கலாம். முட்டாள்தனமாகவும் கூட இருக்கலாம்…… மக்களை அணிதிரட்டுவதற்குப் பதில் மக்களிடமிருந்து விலகித் தனிமைப்படுவதற்கு நிச்சய வழியாகவும் கூட இருக்கலாம்.ஆனால் அந்த இளைஞர்களின்  நோக்கம் தூய்மையானது.பகைவர்களை அழிப்பதற்காகத் தங்களையும் அழித்துக் கொள்ள அவர்கள் தயாராக இருந்தார்கள்..” ( பக்:24)

இதுவரை என் மேடைப் பேச்சுக்கள் எதிலும் என் கவிதையை வாசித்ததில்லை. ஆனால் இந்த அவையில் என் கவிதை ஒன்றை வாசிக்க வேண்டும் என்று மிகவும் விரும்புகிறேன். இந்தத்  தோழர் குண்டு வைப்பவர் அல்ல. ஆனால் இந்த அரங்கில் இருக்க வேண்டியவர் என்பதால் இதை வாசிக்கிறேன்

தோழர்

கடவுள் எனக்குச் செய்யும்

ஒரே ஒரு உருப்படியான காரியம்

அதிகாலையிலேயே என்னை எழுப்பி விட்டுவிடுவதுதான்.

இளமிருளில் கொஞ்சமாய்த் திரியும் மனிதர்கள்

ஒருவரோடொருவர் பரிவோடிருக்கிறார்கள்

ஒருவரையொருவர் அன்பு செய்ய முயல்கிறார்கள்.

என்னைத் தூரத்தில் கண்டதுமே

சர்க்கரை குறைவான

ஆற்றாத தேநீர் ஒன்றை 

தயாரிக்கத் துவங்கிவிடுகிறார்

கூன் விழுந்த அந்த டீ மாஸ்டர்.

நான் வரும் முன்பே

என் வழக்கமான டேபிளில்

டீ  வந்து அமர்ந்திருக்கும்.

அதை ஒரு பூச்செண்டு

என்று உணர்ந்து கொண்ட நாளில்

அவருக்கே கேட்காதபடி

கண்ணீரை மறைத்துக் கொண்டு

அவரைத் ” தோழர்” என்றழைத்தேன். 

வாழ்வென்பது நாம் வாழ்ந்து கொண்டிருப்பது மட்டுமல்ல என்கிற செய்தியை வலுவாக நமது  மூளைகளுக்குக் கடத்த இந்த நூலை வாசிக்க வேண்டும். 

( சுவருக்குள் சித்திரங்கள்- தியாகு-  விஜயா பதிப்பகம்- விலை:ரூ 330)

                                                            நன்றி: நற்றுணை கலந்துரையாடல்

இசை

கவிஞர் இசை தமிழில் நவீனக்கவிதைகளை எழுதி வரும் கவிஞர். மென்மையான நகையுணர்வு கொண்டவை இவருடைய கவிதைகள். உறவுகளின் சிக்கல்களையும் சமகாலத்தின் அரசியலையும் கேலி இல்லாமல் புன்னகையுடன் கூறுபவை.

நன்றி : தமிழ் விக்கி

1 Comment

உரையாடலுக்கு

Your email address will not be published.