/

நெற்கொழுதாசன் கவிதைகள்

1)

உன் குரல்

நீலப்பெருங்கடலின் 

அடிவானில் முளைத்த துயரம் 

தவறிய பறவையின் கால்களில் மகரந்தம்.

நெடுந்தொலைவு 

“இம்”மென ஒலிக்கும் பிசிரற்ற சங்கின் லாவண்யம்.

குலைத்துப்போட்ட 

வார்த்தைகளின் இடைவெளிகளில் நதி பெருகிப்போயிற்று 

நனைந்திருந்தோம்.

உலர வைத்து  வாழ்வை அணிந்துகொண்டோம். 

மொழியின் நரம்புகளில் இரத்தம் கசிய 

அந்த இரவில் பிரகாரத் தெய்வங்களை கொலை செய்தேன் 

ஏன் என்ற உன்னிடம் 

சொல்லாத ஒரு வார்த்தை இருக்கிறது.

2)

தணிந்த இரவின் சிலிர்ப்பில் 

முதுமரமிருந்து இறங்குகிறது மரநாய்

எஞ்சியிருக்கும் ஒற்றைமரமது.

நிலச்சூடு படர 

நிலம் விறாண்டியோட 

துகள்களில்லை  புழுதியில்லை மண்ணீரமுமில்லை.

நிமிர்ந்து பார்க்கிறது.

வான் பரந்து 

புள்ளி ஒளிகள்  சடைத்து நிற்க 

தன்  நிழலில்  ஒடுங்கி 

ஞாபகத்தில் காலத்தைக் கொண்டு நடக்கிறது 

வேட்டையாடி  எத்தனையோ காலமாயிற்று. 

இரத்தவாடையெங்கே போயிற்று. 

கண்களால் இரை கவ்வ மறந்தாயிற்று.

கூர்ந்த நகங்களில் 

கல்லும் இரும்பும் கண்ணாடி  சிதறல்களும்  

இரையுறங்கும் கூடுகளில் மருந்து வீச்சம் 

ஊதிப் பெருத்த ஊன் 

அழுகல் நாற்றம்

சூழலில் சூழ்லில்லை  

பற்றைகள் சிறுகாடுகள் முள்மரக்கூடுகள் 

நீர் தேங்கிய நிலங்கள் எதுவுமில்லை.

சேரினம் வாடையே இல்லை

கூடுதல் குலவுதல்  கூடியிளமை திருப்பி 

இனம் பெருகுதல் நிகழ்தகவானது.

ஒளிக்கோளத்தில்  

மின்சாரக்வேலிக் கூட்டுக்குள் 

அரைத் தூக்கத்தில் நடக்கும் கோழிகளை முகர்ந்துவிட்டு 

தொங்கப்போடுகிறது தலையை.

பிறழ்வென, 

உதிர்த்த அதன் கண்ணீரிலிருந்து 

வார்த்தைகளை பொறுக்கிக்கொள்வான்  நாளைய மனிதன்.

3)

வடுக்களை பாடும் 

சாக்குருவிகளிடமிருந்து மீண்டுவாருங்கள் 

காலந்தோறும் குருவிகள் பாடிக்கலையும்.

“வெம்மையடங்காது கனன்று  

பூக்கும் சாம்பல்மேடுகளில்”

வேண்டாம் எதைப்பற்றியும் பேசவேண்டாம்.

ஒரு துளி அன்பு 

ஒரு துளி நேசம் 

ஒரு துளி பரிவு  

துயரக் குறிகளின் மீது சிந்திக்கொள்வோம். 

அழைப்பார்கள் 

சிலுவைகளில் அறைந்தபின் 

ஆதிமொழியின் பெயரால் 

மரணத்தின் பெருமையென கட்டியம் கூறி 

தங்களைத்தாங்களே மறுதலித்துக்கொள்வார்கள்.

காலத்தை நெய்பவர்கள்

வலைகளை பின்னிக்கொள்ளவும் 

இறக்கைகளை வெட்டி அர்ப்பணிக்கவும்  

உருகிமுடியும் தீபத்தின் சாம்பலில் எதுவுமில்லை.

யுகங்களை மிதித்தெழுந்த 

அந்த மனிதர்களல்ல இவர்கள்.

வடுக்களை மட்டும் பாடும் சாக்குருவிகள்.

4)

மலரொன்றிலிருந்து வெளியேறிய கடவுள்   

தெருவெங்கும் வாசனையை பூசிச்சென்றான்.

யாரொருவரும் 

இது கடவுள் போனபாதையென்று சொல்லவில்லை.

சந்தைக்கருகில் 

சவக்கிடங்குக்கு  அருகிலென 

தோன்றிய இடமெல்லாம் நடந்தபோதும் 

எவரும் சொல்லவில்லை. இன்னும்

ஒரேயொருமுறையென குழந்தையிடம் ஒட்டிக்கொண்டான்.

உடல் வாசனை மாறியதால் 

தாய் குழந்தையை  கழுவியபின் 

முகர்ந்து முத்தமிடுவதை 

வெளியேறி நின்று பரிதாபமாகப் பார்த்து 

எதுவும் புரியாமல் 

மலருக்கே திரும்பியபோது, 

தான் வெளியேறியதால் உண்டாகிய வெற்றிடத்தில் 

பிசிரற்ற புன்னகையை யாரோ விட்டுச்சென்றிருப்பதை கண்டான்.

இனி புன்னகைக்காதிருக்கப்போகும்  

அந்த யாரோ ஒருவனை எண்ணி 

பயந்த கடவுள் 

முதலும் இறுதியாக கண்களை மூடிக்கொண்டான்.

நெற்கொழுதாசன்

பிரான்சில் புலம்பெயர்ந்து வசித்து வரும் நெற்கொழுதாசன் கவிதைகள், சிறுகதைகள், விமர்சனங்கள் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். ரகசியத்தின் நாக்குகள் என்ற கவிதைத் தொகுதி வெளியாகியிருக்கின்றது.

2 Comments

  1. தங்களுடைய கவிதைகளை படிக்கையில் மனதிற்கு உணர்ச்சி பூர்வமாக இருக்கின்றது.

உரையாடலுக்கு

Your email address will not be published.