/

நீலகண்டம் – நாட்டாரியலும் நவீனமும்: அ.க.அரவிந்தன்

சமகால முன்னோடிகள் நம் இலக்கிய முன்னோடிகளை விமர்சித்து முன் வைப்பதை ஒரு கடமையாக கொண்டிருப்பதை நாம் அறிவோம். அப்படியாக அடுத்த தலைமுறைக்கு முன் வைக்கப்படும் அனைத்தின் பெறுமானமும் ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும். அப்படியாக புதுமைப்பித்தனின் பல கதைகள் நிறுவப்பட்டுள்ளன. ஒரு கதையின் பெறுமானம் ,அதன் சாரம் என்பதையும் தாண்டி அந்த எழுத்தாளரின் மேதமை புலப்படும் இடத்தை நாம் கண்டுகொள்ளுவதுதான். மேதமை நயந்து கொண்டு முன் நின்றால் அதுவே பாதகமாகப் போய்விடும் என்பது வெளிப்படை. புதுமைப்பித்தனின் காஞ்சனை  நிற்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் அந்த கதையில் மேதமை  என்பது ஒரேஒரு இடத்தில் மட்டும் தமிழ் நிலத்திற்கு அப்பால் உள்ளதாக அதை செய்து காட்டும் இடம் மட்டும் தான்.சொல்லப்போனால் இது ஒரு விளையாட்டு. இதை ஏற்பதும் மறுப்பதும் இலக்கியவாதியின் சொந்த விஷயம்.அந்த குறிப்பிட்ட இடத்தில் உள்ள விளையாட்டை நீக்கி விட்டால் அந்த கதை முழுதுமே வெளிப்படையானது. உங்களுக்கும் எனக்கும் தெரிந்த கதை தான்.

ஊர்க்காரர்களுக்கு தெரிந்திருக்கும். தெரியாமலும் இருக்கலாம். காஞ்சனையின் உள்ள எழுத்தாளரின் அகப்பதட்டத்திற்கு ஒரே காரணம் தன் மனைவி கருவுற்றிருக்கிறாள் என்பது மட்டுமே. நன்றாக யோசித்துப் பார்த்தால் ஒன்று தெரியும். காஞ்சனை என்ற பேய் கதைசொல்லி வீட்டிற்கு வருவதற்கும் இது ஒன்றே காரணமாக இருக்க முடியும். இன்றும் தமிழ் நாட்டில் பிள்ளை ஈன்ற தாய்மார்களை சுற்றி நடக்கும் சடங்கை நாம் பார்க்கலாம்.மறுநாள் வளைகாப்பை வைத்துக்கொண்டு இன்று கற்ப சிதைவுக்கு ஆட்பட்ட பெண்களை எனக்கு தெரியும். இரண்டாவது, மார்கழி மாதத்தில் பின்னிரவில் அந்த ஊரின் சங்கூதி (பண்டாரம் சமூகத்தை சேர்ந்தவர்). செனக்கலமும், சங்கும், கஞ்ஜிராவும் ஒலிக்க ஊரை சுற்றி வருவதை பார்த்திருக்கலாம், கேட்டிருக்கலாம். இளம் வயதில் வயிறு அதிர,பதட்டத்துடன்  கேட்டிருக்கிறேன். இறந்த உடல் செல்லும் ஊர்வலத்தில் கேட்கும் அதே சத்தம். அதற்கு மயங்கி பீடையும், பிசாசும், பேய்யும் நகர்ந்து செல்லும் என்பது நம்பிக்கை. பின் நவீனத்துவத்தில ஏது சார் மூட நம்பிக்கை?.

செனக்கலம் ஒலித்த பின்னர் காஞ்சனை மாயமாகுவதும் அதுதான். ஒரு நிலத்தின் நாட்டார் நம்பிக்கைகள்(மூட நம்பிக்கைகள்?) வெளிபடும் போது,இலக்கியபிரதி தரும் அனுபவமே  மங்கிவிடுகிறதா? ஒரு வகையில் ஆம் என்றே சொல்லவேணடியிருக்கிறது.

சுனில் கிருஷ்ணனின் நீலகண்டத்தை பொருத்த வரையில் அது பிரதானமாக குழந்தையின்மை மற்றும் ஆட்டிசம் சார்ந்த விஷயத்தை தன் பேசு பொருளாக கொண்டிருக்கலாம். ஆனால் நாட்டாரியலும், நவீனமும் முயங்கி வருவதுதான் நாவலின் பிரதானம் என்பது என் எண்ணம். செந்தில் இரம்யா தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள். வர்ஷினி, சாகர். வர்ஷினி ஆட்டிசத்தால் பாதிக்கப்படுகிறாள். ஆனால் வர்ஷினி அவர்களின் தத்தெடுக்கப்பட்ட பிள்ளை. நாவலின் அடிப்படையாக அந்த ஒற்றை வரியை சொல்லலாம்.இருப்பினும், மரபின் இருத்தலை கேள்விக்கு இடமின்றி ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு நாம் வந்துவிட்டாலும், அதை எவ்வளவு தூரம் அதை பொருள்படுத்துவது என்பதே என்னளவில் நாவலின் பிரதான வரி என்பேன்.

நாட்டாரியல் என்ற துறையே பின் நவீனத்துவம் சம்பந்தப்பட்டது தான். நாட்டார் அம்சத்தை கருத்தில் கொள்வதே நவீனமானதுதானே அதை முரணாக சித்தரிப்பது எப்படி? என்று தோன்றலாம். ஆனால் அப்படி அல்ல. ஏனெனில் இன்று நாம் பேசும் நாட்டாரியல் என்ற கருத்தாக்கம் ஒரு அறிதல் முறை மட்டுமே. இந்த அறிதலின் எல்லையை விசாலமாக்கியதே அயோத்திதாசரின் முக்கியபங்காக ஆய்வாளர்களால் முன் வைக்கப்படுகிறது. வரலாற்றிலிருந்து பண்பாடு என்ற அம்சங்கள் தலைகீழாகி பண்பாட்டிலிருந்து வரலாற்று நோக்கி என்ற சிந்தனையின் காலத்தையே சமகாலமாக சொல்லலாம்.

இந்த சிந்தனையின் காலத்திலிருந்து காஞ்சனையை பார்க்கும் போது அது இல்லாமல் போகலாம்.ஏனெனில் இந்த காலத்தில் அறிதலின் எல்லை முன்பை விடவும் பெரியது என்பதே நாம் அனைவரும் ஏற்றுக்கொள்வது. நீலகண்டத்தின் பலம் என்பது இந்த அபாயத்திற்கு ஆட்படமால் இருப்பதுதான். அது எப்படி நாற்பது வருடங்கள் கழித்து இந்த காலத்தை விட அறிதலின் எல்லை மேலும் விசாலமாகியிருக்குமே? அப்போது அதன் பெறுமானம்? இதற்கு ஒரு பதில் நீலகண்டன் இதை மறுக்கும் புள்ளியையும் தன்னகத்தே கொண்டுள்ளது தான்.

இலக்கியத்தில் சமகால பிரச்சினைகளை பற்றி பேசுவது அந்த பிரதி காலதீதத்தை நோக்கி செல்வதை தடையுறுத்தும் அல்லவா. நீலகண்டத்தில் உள்ள  பலமெனப்படுவது இந்த சம காலத்தையும் காலதீதத்தையும் மிக கச்சிதமாக அணுகியதுதான். யதார்த்தம் – உருவகம் – மாயம் என்ற அடிப்படையில் பிரித்து காலத்தையும் காலதீதத்தையும் வைத்துப்பார்க்க கூடிய பிரதியாக நாவல் அமைந்திருக்கிறது.(மாயத்தை யதார்த்தமாக சமைந்துகொள்ள சாத்தியமும் இருக்கிறது ). செந்தில் மற்றும் இரம்யாவின் வாழ்வையும் சிக்கலையும் சொல்லும் பகுதிகளை யதார்த்தம் என்ற வகையிலும், வேதாளம் – விக்ரமாதித்தியன் பகுதிகளை ஒன்றாகவும் என்றும், எஞ்சிய பிற பகுதிகளை உருவகமாகவும் வாசிக்க முடிகிறது.

சிறந்த கதைசொல்லி வேதாளமா என்பதில்  சந்தேகம் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு புனைவாசிரியரும் விக்ரமன் போன்ற கதைகேட்பவனையே விரும்புவார்கள். இந்த வேதாளமும் விக்ரமனும் காலம் கடந்த இரு உருவங்களாக ஆசிரியரால் நாவல் முழுதும் முன் வைக்கப்படுகிறது. இந்த காலமின்மை எந்த முரணையும் அந்த வெளியின் பேசுபொருளையும்  அது ஆராயும் விழுமியத்தையும் காலமின்மையில் மீது பொருத்திப்பார்க்க முடிகிறது. நம் அகத்திக்கு ஏற்றாற்போல் விரிவும் சுணக்கத்தையும் கொண்டுள்ளது.

நவீன வாழ்வின் நெருக்கடிகள் பலவற்றை நாவல் பேசுகிறது, அதில் முக்கியமாக இடப்பெயர்ச்சியின் மூலம் கைவிடப்படும் குடும்பதெய்வங்கள் பற்றிய முக்கிய சரடு நாவலின் நாடியாக வருகிறது. குலதெய்வங்கள் அவர்கள் நினைவில் இருக்கிறார்கள். ஆனால் குடும்பதெய்வத்தை பற்றின அறிதல் இல்லாமல் இருப்பது சமகாலம் சந்திக்க கூடிய முக்கிய சிக்கல். தெரிந்தோ தெரியாமலோ குலதெய்வங்கள் பெருந்தெய்வங்களின் வேறு வடிவமாக முன் வைக்கப்படுவதால் தன்னியல்பாக அதனின் அறிதல் நிகழ்ந்துவிடகிறது. நாட்டார் செவ்வியல் என்ற இருமைக்கு இடையில் நாவல் நகர்கிறது. குடும்ப தெய்வத்தை தேடி சென்று அந்தக் கதையை அடைதல் என்பது தன் வரலாற்றை தானே அறிந்துகொள்வதுதான். இதை அறிந்த செந்தில் திகைத்து நிற்கிறான், பயந்து தளர்ந்து ஓடிகிறான். நம் கதை நமக்கு அநேகமாக தருவது இதைதான்.நம் துயரங்களுக்கு விடுதலையை நம் மரபில் தேடும்போது நாம் அடைவது அந்த ஒவ்வாமையைத்தான். அதே நேரத்தில் மரபின் சாயலுடன் நம் ஒன்றை அணுகினால் ஒழிய நமக்கு விடுதலையும் கிடையாது. நீலகண்டம் என்பது இதற்கு இடையே நிற்கிறது. செந்திலின் முன்னால் மேலாளர் முரளி பற்றிய அத்தியாயம் இதற்கு உதாரணமாக சொல்லலாம். விரும்பியே குழந்தையை தத்தெடுக்கிறான். ஆனால் அந்த குழந்தையை அவர் அணுகும் போது அந்த குழந்தை அவரை எதிர்கொள்ளும் போது அவருக்கு அந்த உறவு விசுவாசத்தில் வந்தது என்று எண்ணுவதும் அதை ஒட்டி பெரும் துயரையும் அடைந்து, தன்னை அப்பாவாக உணராத இடமும் நவீன மேலாளரின் மனநிலையாக சொல்லாம். மரபுடன் தொடர்பற்ற மற்றும் சாயலுடன் அணுகாமையின், நவீனத்தின் சிக்கல் என்று இதை சூட்டலாம். இதற்கிடையே நம் மரபை ஆராயும் போது அநேக நேரம் ‘கர்மம்’ பதிலாக காட்டவே வாய்ப்புகள் அதிகம். நாவல் மிக முக்கியமாக இது போன்ற இடங்களில் மௌனித்து விடுகிறது.தன் வரலாற்றை அறிந்த பின்னர் செந்திலின் மன ஓட்டத்தில் உள்ள ஏற்பின்மையே இதற்கு அத்தாட்சியாக காட்டலாம். அவன் அந்த வழிபாட்டை தொடங்கவும் இல்லை. வருவை ஏற்றுக்கொள்ளும் இந்த தன்மை கர்மத்திற்கு நேர் எதிராக நிற்பது. இத்தனைக்கும் தன் பாழடைந்த வீட்டை விடாமல் வைத்திருக்கிறான். நவீன சிக்கல்கள் பலவற்றுக்கு உலகமயமாதலை பதிலாக சூட்டுவது எவ்வளவு எளிதோ அதேபோல தான் ஏன் ? என்பதற்கு கர்மத்தை பதிலாக வைப்பது.இதை அடையாமல் நீலகண்டம் இருப்பது அதை நீலகண்டமாக ஆகியிருக்கிறது.

இந்திய நவீன மனம் என்பது பெரும்பாலும் பெருதெய்வத்தின் தெளிவிற்கு பழகியது.ஆனால் நாட்டார் தெய்வங்கள் மங்கியவையாகவும் தெளிவின்மையை தன் இயல்பாக கொண்டவையாகவும் உள்ளன.அக்கால மனிதர்களின் அன்பு, குற்றவுணர்வு,கரிசனம்,மரியாதை போன்ற பல அம்சங்களால் ஒரு நாட்டார் தெய்வம் உருவாகலாம். இது அதை தாங்கி வரும் கதையை பொருத்து மாறலாம், நம் அக நிலைக்கு ஏற்றார்போல் அவை சமைக்கவும்படலாம், அரசியல் சரிநிலைக்காக காய் நகர்த்தும் கருவியாகவும் இருக்கலாம். இத்தனையும் மங்கிய சித்திரமாக கண்முன் தெரிவதே அதை நெருங்குவதில் உள்ள தடை.நாவலில் உள்ள நஞ்சு பருவம், அமுத பருவம் இரண்டும் இரு மொழிதலை ஒரு தரப்பிற்கு தருகிறது அது மேலும் செந்தில் என்னும் நவீனனுக்கு அக சமநிலையை சிதறடிப்பதாகவே இருக்கின்றது.இந்த தன்மை முற்றும் திறந்திருக்கும் அம்சங்களாக சொல்லாம்.

சீராளனும், இரயில் சிறுமியும் நஞ்சற்றவர்கள், இவர்கள் ஒரு தரப்பு என்றால், நஞ்சால் ஆனவர்களாக சுடலையும், மெடியாவும் வெளிப்படுகிறார்கள். இந்த தரப்புகளின் உள்ளும் புறமுமாக கலவைகளால் ஆனவர்களே நீலகண்டர்கள், என்று நாவலின் செந்திலும்,இரம்யாவும் நிலைதவறுவதை காட்டலாம்.

இந்த இருவரின் குடும்ப பின்புலத்திலும் இது போன்ற பிரச்சனைகள் இருப்பதை நாவலில் நாம் காணலாம். அங்கு அவர்கள் அவர்களின் சிக்கலுக்கு உண்டான தீர்வை அதற்கு முன்பு உள்ளவைகளில் தேடவில்லை என்பது மிக சுவாரஸ்யமான முரண். அதற்கான காரணமும் நாவலில் உள்ளது. மரபில் கடவுளின் நெருக்கத்தையும், சமகாலத்தில் நெருக்கமின்னையும் காரணங்களில் ஒன்றான கண்டடைய முடிகிறது.

நாவலின் முடிவு ஒரு குறை என்று சொல்ல தோன்றுகிறது.காலம் பற்றிய நம்பகத்தன்மை என்பது தான் என் பிரதான கேள்வி. வாசகனை ஏமாற்றுவது போல் உள்ளது என்பதை கூட தள்ளிவிடலாம். இந்த இடத்தில் தான் ஆசிரியரின் உத்தேசிப்பை ஒரு வகையில் கேள்வி கொள்ள வேண்டியிருக்கிறது. அதாவது, நீலகண்டம் என்ற நாவலின் இலக்கிய அனுபவம் என்பது உளப்பூர்வமானதுதான். எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் புனைவுலகம் வாசகரின் மூளையுடன் தான் உரையாடலை நிகழ்த்தும். யுவனை படித்து யாராலும்  ஆன்மீக வீழ்ச்சியோ, சமூக பதட்டமோ , ஏன் அழுகையை கூட அடைய முடியாது.சுனில் அவர்களின் நாவலின் எண்ணம் என்பது அது போன்ற ஒரு ஆட்டத்தை நிகழ்த்துவது இல்லை. ஒரு வாழ்வை, எல்லையின் கொந்தளிப்பை, இருத்தலின் நிதர்சனத்தை உத்தேசிப்பதாகவே உள்ளது.அப்படி இருக்க நம்பகத்தன்மையில் கையைவைப்பது சரியல்ல. செந்திலின் , இரம்யா அவர்களின் தாய் தந்தையர், காலத்தின் தெளிவாக குறிப்புகள் தான் அதிகம் இருக்கிறது. அப்படியாக மரபின் தேடலையும் அதற்கும் நவீனத்திற்குமான மோதலை சூட்டிவிட்டு அதை மட்டும் படுத்தும் படி, வர்ஷினி எழுதிய நாவல் என நிறைவு கொள்ளவது ஒவ்வாமல் இருக்கிறது.

தமிழின் முதன்மையான பேய் கதைகளின் ஒன்றாக கருதப்படும் காஞ்சனை,நாட்டார் கூறுகளை தன்னுள் புதைந்த நவீன சிந்தனையாளனின் எழுத்து வடிவாக வெளிப்பட்டிருக்காலாம்.ஆனால் அதன் அடிமடிப்பான நில அம்சங்கள் தட்டுபட்ட பின் அந்த நவீனத்துவரின் விளையாட்டு பிடிகிடைக்கிறது. தத்துவமும்,நாட்டார் நம்பிக்கைகளும், இருத்தலும் ஒன்றாக பின்னப்பட்ட முன்னோடி படைப்பாக கசாக்கின் இதிகாசத்தை சொல்லலாம். நீலகண்டம் மாயம் என்ற கூறு முறையால் அடிமடிப்பு என்ற அம்சம் இல்லாது வெளிப்பபடியாக மாற்றி காஞ்சனையுடன் இணையவில்லை. நாட்டார் நம்பிக்கைகளை பிரதானப்படுத்தி மரபில் தேடலில் தீவிரத்தை கூட்டியதன் பொருட்டும், கசாக்கின் இதிகாசத்தைவெட்டி செல்கிறது. காலமற்ற (அகண்டகாலம்) வெளியில் சதா, கதை சொல்லும் வேதாளமும்,எட்டி பிடிக்க யத்தனித்து தோற்றுப் போகும் விக்ரமனும் நித்தம் நிகழும் சந்தர்ப்பமாக, உருவகப்படுத்துவது எதை? கதையும் அதை அர்த்தபடுத்தும் நானுமா? ஒவ்வொருமுறையும் நடனம் ஒளிந்து கொள்கிறது, இலை தங்குகிறது என்று வருந்துகிறாரே தேவதச்சன். அதுவேதான். குழந்தைகளால் குற்றவாளி கூண்டில் நிற்கவைக்கப்படும் பெற்றோர்கள் செய்வதறியாது மரபை தேடுவதும்தேடுவதும், அந்த தேடலில் ‘நிகழ்ந்ததே நிகழ்ந்ததாக’ முன் வைக்கும் நாவலும் தத்துவ தரப்பை அடிக்கோடிருகிறது. இப்படியாக நீலகண்டம் நிற்கிறது.

அ. க. அரவிந்தன்

க.அரவிந்தன் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்தவர். சமகால தமிழ் இலக்கியத்தின் போக்குகளை தொடர்ந்து அவதானித்து கட்டுரைகள் எழுதி வருகிறார். ஜெயமோகன், ஸ்டாலின் ராஜாங்கம், டி.தருமராஜ் போன்றோரை ஆதர்சமாக கொண்ட அரவிந்தன் தலித்தியம், நாட்டுப்புறவியல் சார்ந்து எழுத இயங்க முனைகிறார்.

உரையாடலுக்கு

Your email address will not be published.