/

நாம் எல்லோரும் மார்க்ஸியர்களே: டெர்ரி ஈகிள்டன்

தமிழில் சுந்தரேசன்

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு : ஆங்கில எழுத்தாளரான டெர்ரி ஈகிள்டன் (1943-) ஒரு மார்க்ஸியர். கலாச்சார கோட்பாட்டாளர். நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். “இலக்கிய கோட்பாடு: ஓர் அறிமுகம்” (1983) அவருடைய புகழ்பெற்ற நூலாகும். பின்-நவீனத்துவத்தின் பேரில் கடும் விமர்சனங்களை முன்வைக்கும் டெர்ரி ஈகிள்டன் கோட்பாடுகளின் சரிவை முன்வைத்து “கோட்பாட்டிற்கு பிறகு” (2003) எனும் நூலை எழுதியுள்ளார். விமர்சனபூர்வமாக எழுதும்போதும் மாற்றுத் தரப்பினருக்கு நியாயம் சேர்ப்பிக்கும் வகையில் உரையாடலை முன்னெடுப்பது டெர்ரி ஈகிள்டனின் சிறப்பம்சமாகும். அழகும் நகைச்சுவையும் கலந்த அவருடைய உரைநடை அலாதியான வாசிப்பின்பம் அளிப்பது. உலகின் முக்கியமான பொது அறிவுஜீவிகளிள் ஒருவர் என்று டெர்ரி ஈகிள்டனை கட்டாயம் சொல்லலாம். 2003ல் பார்சிலானோவில் ஒரு பல்கலைகழகத்தில் உரையாற்றச் சென்ற திரு.ஈகிள்டன் அங்கு ஒரு பேராசிரியருக்கு அளித்த நேர்காணலின் மொழிபெயர்ப்பு இது. உடன், “The Point” இணைய இதழுக்கு அவர் அளித்த வேறொரு நேர்காணலில் இருந்தும் சில கேள்வி-பதில்கள் இணைக்கப்பட்டுள்ளன.

டி.எச்.லாரன்ஸ் தன் சொந்த கலாச்சாரத்திலிருந்தே நாடு கடத்தப்பட்டவர் என்று ஒருமுறை எழுதியிருந்தீர்கள். ஐயர்லாந்து பற்றி நீங்களும் அப்படிதான் நினைக்கிறீர்களா? உங்கள் சொந்த கலாச்சாரத்திலிருந்து நாடு கடத்தப்பட்டவராக (exile) உணர்கிறீர்களா?

இல்லை. நான் அப்படி நினைக்கவில்லை. நான் ஆங்கிலேயனா அல்லது ஐரிஷா என்று என்னிடம் கேட்கப்படும்போது எப்படி பதில் சொல்வது என்று தெரிவதில்லை. இரண்டும் கலந்தவன் என்று சொல்லலாம். நடுத்தர வர்க்கமாக (Middle Class) இருப்பதால், சுய அடையாளம் பற்றி கவலைப்படாமல் இருப்பதற்கான தனிச்சலுகை எனக்கிருக்கிறது. உடமையற்றவர்களும் விரட்டியடிக்கப்படுபவர்களுமே (dispossesed) தாங்கள் யார் என்று தொடர்ந்து கவலைப்பட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். தங்கள் அடையாளம் பற்றி அவர்கள் கவலைப்படுவது எப்போது நிற்கிறதோ, அப்போது அவர்கள் விரட்டியடிக்கப்படுபவர்களாக இருக்க மாட்டார்கள்.

பிரிட்டிஷ், ஐரிஷ் இவ்விரண்டு கலாச்சாரங்கள் நடுவிலும் மாறி மாறி இருந்தாலும், என்னை நாடு கடத்தப்பட்டவன் என்று சொல்லிக்கொள்ள மாட்டேன். அது ரொம்ப பெரிய வார்த்தை. ஜேம்ஸ் ஜாய்ஸ்க்கு அது பொருத்தமாக இருக்கலாம். லாரன்ஸ், ஆஸ்கர் வைல்ட் ஆகியோருக்கும் பொருத்தமாக இருக்கும். ஒருவகையில் வெளியேற்றம் என்பது ஐயர்லாந்தின் பூர்வீக வழக்கங்களில் ஒன்று. ஆனால் மகத்தான எழுத்தாளர்களுக்கு மட்டும் இது நிகழவில்லை. பஞ்ச காலத்தில் லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்திருக்கிறார்கள். ஐயர்லாந்து நாட்டின் பெருவாரியான குடிமக்கள் பல வருடங்களாக வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். உலகில் வெகு சில தேசங்களிலேயே இப்படி நடந்திருக்கிறது. எனவே தன் நாட்டுக்கு வெளியே வாழ்வது ஐயர்லாந்தில் புதிய விஷயம் அல்ல.

அமெரிக்காவின் உருவாக்கத்தில் ஐயர்லாந்து பெரும் பங்காற்றியிருக்கிறது. மத்திய காலத்தின் (Middle Ages) இறுதியில் ஐரோப்பாவின் ஒரு முக்கிய பகுதியாக ஐயர்லாந்து இருந்திருக்கிறது. காலனிய ஆதிக்கத்தின் கீழ் வருவதற்கு முன்னால், ஐயர்லாந்து தன் நாட்டு துறவிகளையும் மதப் பரப்பாளர்களையும் அறிஞர்களையும் ஐரோப்பிய கண்டத்தின் மாபெரும் மடாலயங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறது.

உலகமயமாக்கப்பட்ட காலத்தில் தேசியவாத உணர்ச்சிகளுக்கு அர்த்தமிருக்கிறதா?

தேசியவாத உணர்ச்சியில் நல்லதும் கெட்டதும் கலந்திருக்கின்றன. பிரிட்டன், ஐயர்லாந்து இவ்விரண்டு நாடுகளை வைத்தே அந்த வேறுபாட்டினை சொல்லிவிடலாம். ஐரோப்பா சார்ந்த பிரிட்டனின் அனுகுமுறை, ஆதிக்க உணர்வு மிகுந்தது. காலனிய நாட்களின் மயக்கம் விலகாதது. அது, பிற்போக்கு தேசியவாதம்.

ஐயர்லாந்து தேசியவாதம் கலவையான உணர்ச்சிகளை உள்ளடக்கியது. ஐரிஷ் மக்களுக்கு அதில் ஆழமான பிணைப்பிருக்கிறது. மேலும் அதிகார திணிப்புக்கு எதிரான போராட்டத்தையும் அது உணர்த்துகிறது. எனவே தேசியவாதம் ஓர் இருமுனை கத்தி என நினைக்கிறேன். உடனடியான எதிர்வினை அம்சமும் தன்மைய நோக்கும் அதில் உள்ளன. நிச்சயமாக, ஐரிஷ் தேசியவாதத்திலும் அந்த பண்புகள் இருக்கின்றன. ஆனால் பாதுகாக்கப்பட வேண்டிய தேச உரிமையை பாதுகாப்பதும் தேசியவாதம்தான்.

20ம் நூற்றாண்டில் காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற முதல் நாடு ஐயர்லாந்து. 1921ம் வருடம் பிரிட்டனின் ஆதிக்கத்தைவிட்டு அவர்கள் சுதந்திரம் பெற்றார்கள். உலகம் முழுக்க சுதந்திர போராட்டங்களுக்கு அது ஒருவிதத்தில் முன்மாதிரியாக மாறியது.

எனவே, தேசியவாதத்தை நான் இரண்டாக பிரிப்பேன். பிரிவினை பேசும் பழமைவாத தேசியவாதம் ஒருவகை. காலனியத்துக்கு எதிரான தேசியவாதம் இன்னொரு வகை. காலனிய ஆதிக்கத்துக்கு எதிரான இருபதாம் நூற்றாண்டின் சுதந்திர போராட்டங்களே நவீன காலக்கட்டத்தின் மிக வெற்றிகரமான புரட்சிகர இயக்கங்கள். அவை, சோஷியலிஸத்தைக் காட்டிலும் பல மடங்கு வெற்றிகரமானவை. இத்தகைய தேசியவாதத்தை நான் பெருமையாக கருதுகிறேன். ஆனால் “என் மக்கள், உன் மக்கள்” என்று பிரிக்கும் தேசியவாதம் மோசமானது. யாருக்கும் தேவையில்லாதது.

ஐரிஷ் எழுத்தாளர்களோடு உங்களுக்கு தொடர்பிருக்கிறதா?

ஆமாம். ஐயர்லாந்தில் இலக்கிய வட்டம் சிறியது. எனவே நல்லதோ கெட்டதோ அவர்கள் ஒருவருக்கொருவர் இணைந்திருக்கிறார்கள். சீமஸ் ஹீனிக்கு பக்கத்து சாலையில்தான் நான் வசித்து வந்தேன். எனவே அவர் புகழ்பெற்ற “சீமஸ் ஹீனி”யாக மாறுவதற்கு முன்னாலேயே நெடுங்காலமாக எனக்கு பழக்கம். நான் என் ஜன்னல் வழியே பார்த்தால் யீட்ஸ் பிறந்த வீட்டை பார்த்துவிடமுடியும். டப்ளின் கடற்கரை வழியே நடந்தால் ஜாய்ஸ் வாழ்ந்த இடத்தை பார்த்துவிடலாம். யுலிசஸ் நாவலில் வருகிற கோட்டை அது.

ஐரிஷ் எழுத்தாளர்களில் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். ஐயர்லாந்து மிகுந்த நாகரீகமானது. உங்களுக்கு தெரிந்திருக்கும் – எழுத்தாளர்களிடம் ஐயர்லாந்து வருமான வரி பெறுவதில்லை. எல்லா கலைஞர்களும் ஐயர்லாந்தில் வருமான வரி இல்லாமல் வாழலாம். கலைஞர்களை தக்கவைக்க, ஐயர்லாந்து இந்த தோழமையான திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதுவொரு நல்ல சிந்தனை.

“இலக்கிய கோட்பாடு : ஓர் அறிமுகம்” (1983) நூலின் இறுதி அத்தியாயத்தில் இலக்கிய ஆய்வுகள் ஒரு நெருக்கடியில் இருப்பதாக சொல்லியிருந்தீர்கள். பல தசாப்தங்கள் கடந்துவிட்டப் பிறகும் இன்னும் அந்த நெருக்கடி விவாதிக்கப்படுகிறது. ஒருவேளை இலக்கிய திறனாய்வுகளின் நிரந்தரமான இயல்பென்பதே நெருக்கடிதானா?

நானும் அப்படிதான் நினைக்கிறேன். 1980களின் ஆரம்பத்தில் நான் அந்த நூலை எழுதியபோது ஒரு குறிப்பிட்ட வகையான நெருக்கடி இருந்தது. ஆனால் நெருக்கடி (Crisis) என்று சொல்லே இன்று தேய்வழக்காகிவிட்டது. யோசித்தால், இலக்கியம் மட்டுமின்றி மானுடவியல் துறையே எப்போதுமே ஏதாவதொரு நெருக்கடியில் இருந்து வருவதாகப் படுகிறது. இப்போது அதற்கு வெவ்வேறு தலைப்புகள் கொடுக்கலாம். மானுடவியலின் நெருக்கடி. விமர்சனத்தின் நெருக்கடி. இப்படி வெவ்வேறு பெயர்களில் அழைக்கலாம். ஆனால் மானுடவியல்களும் (Humanities) நெருக்கடிகளும் (Crises), லாரலும் ஹார்டியும் போல. அவை ஒன்றோடொன்று சேர்ந்தே இருக்க வேண்டும்.

தொழில்மயப்பட்ட ஒரு நவீன முதலாளித்துவ சமூகத்தில், மதிப்பீடுகளுக்கென்று தனியாக ஓர் இடம் தேவைப்படுகிறது. உலகில், அந்த மதிப்பீடுகள் சுயமாக தரிக்கவோ தம்மை தற்காத்துக் கொள்ளவோ முடியாது. அது எளிதல்ல. எனவே குறிப்பிட்ட இடைவெளியில் மதிப்பீடுகளை, தனியாக ஓர் இடத்தில் வைத்து பாதுகாத்து வளர்க்க வேண்டியுள்ளது. அந்த இடத்தின் பெயர் காலத்திற்கேற்ப மாறும். கலை, இலக்கியம், மானுடவியல், கலாச்சாரம், நாகரீகம் என்று வெவ்வேறு பெயர்களில் அதையே நாம் அழைக்கிறோம். ஆனால் இங்கே அமைப்பு சார்ந்து பிரச்சனைகளும் எழுகின்றன. சாதாரண சமூகத்துக்கும், மதிப்பீடுகள் வளர்க்கப்படும் அந்த இடத்துக்கும் நடுவிலான பிரிவினையே அதற்கு காரணம்.

சமூகத்திடமிருந்து பிரிந்திருப்பதனால், மானுடவியலால் சமூகத்தை ஆராய்ந்து மதிப்பிட முடிகிறது (Critique). அதே நேரம் அந்த பிரிவினை காரணமாகவே மானுடவியலால் ஆற்றலோடு இயங்க முடியவில்லை. சமூகத்தில் பெரிய விளைவுகளை உண்டு பண்ண முடியவில்லை. இந்த முரண்பாடே நாம் குறிப்பிடும் நெருக்கடியின் அடிப்படை. நீண்டகாலமாய் தொடர்ந்து நிகழ்கிற நெருக்கடி அது. அவ்வப்போது அது கொழுந்துவிட்டு எரிகிறது. நான் அந்த புத்தகத்தை எழுதிய நேரத்திலும் அப்படிதான் “கோட்பாடு” எனும் புதிய பெயரில் அது பற்றிக் கொண்டது. “கோட்பாடு” (Theory) என்பது ஏற்கனவே நெடுங்காலம் இருந்துவந்ததும், இப்போதும் தொடர்வதுமான ஒரு நிகழ்வுக்கு வழங்கப்பட்ட மோஸ்தரான பெயர் என்றே நினைக்கிறேன்.

நம் அறிவுத்துறை எப்போதும் நெருக்கடிகளில் இருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. மானுடவியல்கள், சமூகத்திற்குரியவை. ஆனால் சமூகத்துக்கு தேவைப்பட்டாலும், சமூகத்தால் அவற்றுக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. நாம் பேசும் முரண்பாட்டில் இதுவொரு முக்கிய பகுதி. “இவையே நாம் பின்பற்றி வாழ வேண்டிய நெறிமுறைகள்” என்று மக்களிடம் சொல்வதற்கு மானுடவியல்கள் வேண்டும். மானுடவியல்கள் என்றோ கலாச்சாரம் என்றோ பெயரிட்டு மக்களோடு உரையாடுவது எளிது. அதே நேரம் யதார்த்தத்தில் மானுடவியல்கள் மற்றும் கலாச்சாரம் மீதான சமூகத்தின் அணுகுமுறை பயன்பாட்டுவாதம் (utilitarian) சார்ந்ததாகவும் கலை சார்ந்த நுண்ணுணர்வில்லாமலும் (Philistine)  மதிப்பற்றதாகவும் (disparaging) இருக்கிறது. கருத்தியல் ரீதியாக சமூகத்துக்கு மானுடவியல்கள் தேவைப்பட்டாலும் நடைமுறை நோக்கில் அவற்றின் பயன் அதிகம் உணரப்படுவதில்லை.

கலாச்சார நிறுவனங்களும் சில நேரங்களில் ஒரு விஷயத்தை மறந்துவிடுகின்றன. மனிதர்களின் உழைப்பும் வேலையும், ஆழமான ஈடுபாட்டை கோருகிற கலாச்சார நடவடிக்கைகளோடு ஒத்துப் போவதில்லை. ஒரு நாள் முழுக்க வேலை செய்து களைத்து வருபவருக்கு கலாச்சார நடவடிக்கைகளில் ஈடுபட சக்தி இருப்பதில்லை.

கலாச்சாரம் என்பதே கடினமான பணிதான். ஏற்கனவே ஒருவர் கடின உழைப்பில் ஈடுபட்டிருக்கும்போது அவரால் கலாச்சாரத்தில் ஈடுபட முடியாது. மார்க்ஸியர்கள் இதையே அடித்தளம் (base) என்றும் மேற்கட்டுமானம் (superstructure) என்றும் பிரித்தார்கள். உயிரோட்டமான கலாச்சாரத்துக்கு பொருளியல் வழிகள் தேவை. ஆனால் அத்தகைய வழிகள் தோன்றி, உயிரோட்டம் மிக்கதாய் உருவெடுத்ததும் கலாச்சாரம்,  தன்னை சுயம்புவாக காட்டிக் கொள்ளும். தனக்கு பிறப்பிடமே இல்லை என்பது போலவும், பெற்றோரே இல்லை என்பது போலவும் நடந்து கொள்ள ஆரம்பிக்கும். மனிதர்கள், பெற்றோரே இல்லாமல் சுயமாய் பிறந்தது போல நடந்து கொள்ள விரும்புவதாக பிராய்ட் சொல்கிறார். கலாச்சாரமும் அப்படிதான் நடந்து கொள்கிறது. உழைப்பே (labour) கலாச்சாரத்தின் பெற்றோர். கலாச்சாரம் தன் பெற்றோரை  அவமானமாகக் கருதுகிறது. மறக்க நினைக்கிறது.

இந்தப் பிரச்சனையை எப்படி தீர்ப்பது? கலாச்சாரத்துக்கான ஆற்றல் இல்லாதவர்களும் அதை அணுகும்படி எப்படி மாற்றுவது?

இந்த விஷயத்தில் நாம் சரியான திசையில் யோசிக்க வேண்டும். இங்கே சிக்கல், கலாச்சாரத்தின் மீதான பார்வை அல்ல. வேலை, சமூகம் இவை பற்றிய பார்வையிலேயே சிக்கல் இருக்கிறது. நெடுங்காலத்துக்கு முன்னாலேயே மார்க்ஸ் இது பற்றி கற்பனை செய்தார்.வேலையை படைப்பூக்கம் மிக்கதாக மாற்றுவது தீர்வன்று; இயன்ற மட்டும் வேலையையே ஒழிப்பதுதான் தீர்வு என்று அவர் சொன்னார். வேலையின் பளுவையும் உழைப்பையும் மக்களிடையே குறைக்க வேண்டும் என்றார் மார்க்ஸ். லாபத்தை பெருக்குவதற்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்தாமல் உழைப்பை குறைக்க பயன்படுத்த வேண்டும். சில நேரங்களில் நான் என் மாணவர்களிடம் இப்படி சொல்வதுண்டு – “சோஷியலிஸ்டாக இருப்பதற்கான ஒரே நல்ல காரணம் , வேலை செய்வது பிடிக்காமல் இருப்பது”.

ஆனால் 50 வயதில் கட்டாய ஓய்வு வழங்கப்பட்ட பலரும், தங்கள் நேரத்தை கலாச்சார நடவடிக்கைகளில் செலழிப்பதில்லையே?

தொழில்நுட்பம் ஒரு சட்டகத்திற்குள் இயங்குகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். வேலை இடத்தில் மனிதர்களை பதிலீடு செய்வதோடு அச்சட்டகத்தின் எல்லை முடிந்துவிடுவதில்லை. கலாச்சார வறுமையை கையாள்வதற்கான முறைமையையும் அது தன்னில் கொண்டுள்ளது. மக்களிடம் என்னவெல்லாம் இருக்கிறதோ, அவை எல்லாம் முதலாளித்துவ ஊடகத்தால் உருவாக்கப்பட்டவை. மேலும் முதலாளித்துவவாதிகளுக்கோ கலாச்சாரமே தேவை இல்லை. புகழ்பெற்ற சோஷியலிஸ வரி : “வாழ்வதற்காக உழைக்க வேண்டுமே தவிர, உழைப்பதற்காக வாழக்கூடாது”. வேலையை வாழ்க்கைக்கான வழியாக மட்டும் கருதும், எல்லா சோஷியலிஸ சிந்தனையாளர்களாலும் இந்த அடிப்படை உணர்ச்சி பகிர்ந்து கொள்ளப்படுகிறது. முதலாளித்துவத்தின் சீரழிவு என்பது வேலையே வாழ்க்கையின் முடிவாக மாறிவிடுவதுதான்.

மக்கள் கலாச்சாரத்தில் பங்கெடுக்காமல் இருப்பதல்ல இங்கு பிரச்சனை. இழிவான வர்த்தக காரணங்களுக்காக மக்களுக்கு கலாச்சாரம் மறுக்கப்படுவதே பிரச்சனை. எனவே இதை வெறும் நேரம் சம்பந்தப்பட்டதாக மட்டும் பார்க்க முடியாது. கடைசியில் இவை எல்லாமே அரசியலுடனே சம்பந்தப்பட்டிருக்கின்றன. கலாச்சார வறுமைக்கு காரணமான நிறுவனங்களை எதிர்கொள்வதே இங்கு முக்கியமானது.  உயர் கலாச்சாரம் என்று அழைப்படுவதிலிருந்து நம்மை விலக்கி வைத்திருக்கும் நிறுவனங்களை நாம் எதிர்கொண்டேயாக வேண்டும்.

இதனால்தான் மார்க்ஸிய கலாச்சார மாதிரியானது (Marxist model of culture) பாதுகாக்கப்பட வேண்டும் என்று நீங்கள் குறிப்பிட்டீர்களா?

நம் காலக்கட்டத்தின் மிகப் பெரிய நெருக்கடிகளில் எல்லாம் மார்க்ஸ் உடனிருக்கிறார். கலாச்சாரக் காரணங்களுக்காக மட்டுமில்லாமல் அரசியல் காரணங்களுக்காகவும் அவர் அத்தகைய இடத்தில் உள்ளார். கலாச்சாரத்தை உண்டாக்கவும், அனுபவிக்கவும் மிகுதியான பொருள் தேவை. குறிப்பிட்ட வகையான சமூக உறவுகள் தேவை. பொருள்முதல்வாத (materialistic) அணுகுமுறை இதை புரிந்துகொள்கிறது. அப்படி இல்லாவிட்டால், கலாச்சாரமானது சமூகத்தில் மக்களுக்கு எதிரான இன்னொரு ஆயுதமாக மாறிவிடும். மக்களை உள்ளடக்காமல் விலக்கும்.

அப்படியென்றால் ஓர் உண்மையான மார்க்ஸிய விமர்சகர் வெறுமனே இலக்கியத்தை வாசிப்பதற்காக மட்டும் மார்க்ஸை உபயோகப்படுத்துபவர் கிடையாது இல்லையா?

ஆமாம். ஒருவர் நிச்சயமாக இலக்கிய விமர்சனமும் செய்யலாம். அது சுவாரஸ்யமானதும் கூட. ஆனால் மார்க்ஸியம் முதன்மையாக இலக்கியம் பற்றியதல்ல. நம் சமூகத்தில் கலாச்சாரத்தின் இடம் பற்றியும், கலாச்சார பழக்கங்களின் இடம் பற்றியும் மார்க்ஸியம் கேள்விகளை எழுப்புகிறது. மேலும் மார்க்ஸியம் என்பது நடைமுறைக்குத் தொடர்பில்லாத கற்பனையான யுடோப்பியன்வாதமும் (Utopian) கிடையாது. தங்கள் வரலாற்றையும், தங்கள் கலாச்சாரத்தையும் மக்கள் தாங்களே இயற்றிக் கொள்வதற்கான சுதந்திரமான சூழ்நிலை உருவாக வேண்டும் என்றே மார்க்ஸ் சொல்கிறார். அதைச் செய்வதற்கு தடையாக இருக்கும் முரண்பாடுகளையே நாம் களைய வேண்டும்.

எனில், உங்களை மார்க்ஸிய விமர்சகர் என்றே அழைக்கலாமா?

எல்லா வகையான காரணங்களுக்காவும் நான் என்னை மார்க்ஸியர் என்றே அழைத்துக் கொள்வேன். மார்க்ஸியத்தின் முடிவு பற்றியும் மரணம் பற்றியும் பேசப்படுகிறது. அதே நேரம் யாரோ ஒருவர் சொன்னார், உலகம் கண்ட தலைசிறந்த சீர்த்திருத்தம் சோஷியலிஸமே என்று. குறைந்தபட்சம் உலகின் தலைசிறந்த சீர்த்திருத்தங்களில் ஒன்றாகவேனும் சோஷியலிஸம் இருந்தாக வேண்டும். கிறிஸ்துவம் பற்றி ஒருவர் என்ன நினைக்கிறார் என்பதை வைத்து இது பற்றி உரையாடுவது இன்னும் சரியாக இருக்கும். வெறுமனே விமர்சனக் கருவிகளின் அல்லது நல்ல கருத்துக்களின் தொகுப்பாக மட்டுமே இருந்தால் மார்க்ஸியம் அழிந்துவிடக்கூடும். ஆனால் மார்க்ஸியமும் சோஷியலிஸமும் அறிவு சார் முறைமை மட்டும் அல்ல. அதுவோர் இயக்கம். பல லட்சக்கணக்கான மக்கள் பங்குபெற்ற இயக்கம். மேலும் டார்வின், பிராய்ட், நீட்ஷே ஆகியோர் போல நவீன மனநிலையின் பகுதியாக இருக்கும் கோட்பாடு மார்க்ஸியம்.

ஒருவகையில் நாம் எல்லோரும் மார்க்ஸியர்களே. முதலாளித்துவம் என்று ஒரு விஷயம் இருப்பதையும், அது வினோதமான வழிகளில் செயல்படுவதையும், அதை ஆய்வுக்குரிய பொருளாக கருத வேண்டும் என்பதையும் முதல்முறையாக மார்க்ஸே கண்டுபிடித்துச் சொன்னார். நம் மேற்கத்திய சிந்தனை முறையில் அது ஆழமாக வேரூன்றியுள்ளது.

கேம்ப்ரிட்ஜில் மாணவராக இருந்தீர்கள். பின்னர், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும்போது நிறைய மாற்றங்கள் கொண்டு வர முயன்றீர்கள். மாணவர்களை ஒருங்கிணைத்து போராட்டங்கள் நிகழ்த்தினீர்கள். அது பற்றி சொல்லுங்கள்.

ஆக்ஸ்போர்ட், கேம்ப்ரிட்ஜ் கல்வி நிலையங்களில் நான் இணைந்தது தற்செயலாகவே நடந்தது. ரேமண்ட் வில்லியம்ஸ் அவர்களோடு மாணவனாக சேர்ந்து பணியாற்றினேன். கேம்ப்ரிட்ஜில் வில்லியம்ஸ் எனக்கு ஆராய்ச்சி உதவித் தொகை பெற்றுத் தந்தார். அவருடன் பணியாற்றுவதற்கான விருப்பத்தினால் அதை உடனடியாக ஏற்றுக் கொண்டேன். ஆனால் பிற்பாடு என் அரசியலின் காரணமாக கேம்ப்ரிட்ஜில், விரிவுரையாளர் பணி கிடைக்கவில்லை. அப்போது ஆக்ஸ்போர்டில் ஒரு பணி வாய்ப்பு கிடைத்தது. இளைஞனாக அதில் சேர்ந்து கொண்டேன்.

ஆக்ஸ்போர்டில் இருந்தபடியே ஒரு தீவிரமான மாற்றத்துக்கான அடிப்படையை நான் கட்டமைக்க முயன்றேன்.  ஆக்ஸ்போர்டில் உயர் வர்க்கத்தினரே பெரும்பாலும் படித்தார்கள். அரசதிகாரம் மிக்க உயர் வர்க்கத்தின் வாரிசுகளிடையே தீவிர மாற்றத்தை முன்வைப்பதில் ஒரு வினோத உணர்ச்சி இருக்கிறது. ஆக்ஸ்போர்டும் கேம்ப்ரிட்ஜீம் உண்மையில் அதிகார வர்க்கத்தை உருவாக்குவதற்காகவே இயங்குகின்றன. அதனாலேயே அந்த இடத்தில் மாற்றம் பற்றி பேசுவது அவசியமாகிறது. ஒருவகையில் பழமைவாத நிறுவனங்களே, தமக்கு எதிரானவர்களையும் உற்பத்தி செய்கிறது எனலாம். அறிவாற்றலும் நுண்ணுணர்வும் சமூக பொறுப்பும் மிக்க இளம் மாணவர்களால் தமக்கு அளிக்கப்படும் முட்டாள்த்தனமான கருத்தியல்களை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாது.

உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த மாணவர்கள், தேசத்திலேயே குறைந்த எண்ணிக்கையில் இருப்பது ஆக்ஸ்போர்ட் மற்றும் கேம்ப்ரிட்ஜில்தான். ஆனால் நான் சேர்ந்த காலத்தோடு ஒப்பிடும்போது இன்று அது மாறியிருக்கிறது. இன்று அவை ஆளும் வர்க்கத்தினருக்கான கல்வி நிறுவனங்கள் மட்டும் அல்ல. நான் கேம்ப்ரிட்ஜில் மாணவனாக சேர்ந்தபோது என்னைச் சுற்றி எல்லோருமே பிரபு வம்சத்தினராக இருந்தனர். தலைமுறை தலைமுறையாக கிடைத்த போஷாக்கான உணவாலும் வளர்ப்பு முறையாலும் அவர்கள் கிட்டத்தட்ட ஏழடி உயரத்துக்கு இருந்தனர். நான் ஒப்புநோக்கில் குள்ளமான மாணவன். அவர்கள் சாதாரண மக்களைவிட தோற்றத்தில் மாறுபட்டிருந்தார்கள். அவர்கள் பேசுவதும் வித்தியாசமாக இருந்தது. ஆனால் இன்று அந்த நிலை இல்லை. நடுத்தர வர்க்க மாணவர்களே அங்கு அதிகம் படிக்கிறார்கள். இன்னமும் உழைக்கு வர்க்கத்தை சேர்ந்த மாணவர்கள் நிறைய பேர் அங்கில்லை என்பதும் உண்மையே. ஆனாலும் அந்த இடங்களின் சமூக நிறம் மாறியிருக்கிறது.

பல்வேறு தரப்பினரும் ஒன்றிணைவதற்கான சூழலை உருவாக்குவதே என் வேலை. ஏற்கனவே சொன்னது போல, பழமைவாத நிறுவனங்கள் தம் எதிரியை தாமே உருவாக்கிக் கொள்ளும். அந்த எதிர் சக்தியை ஒருங்கிணைப்பதற்கான வேலையை யாராவது ஒருவர் மேற்கொள்ள வேண்டும். நான் அதையே செய்ய முயன்றேன். இச்செயல்களுக்கு ஆச்சர்யகரமான ஏற்பு அமைந்தது. ஆக்ஸ்போர்டில் நாங்கள் பாடத்திட்டத்தை மாற்றினோம். புதிய தலைப்புகளை உள்ளே கொண்டு வந்தோம். நான் வெளியேறிய இடம், நான் உள்ளே சேர்ந்தபோது இருந்த இடமல்ல. ஆனால் அந்த மாற்றத்துக்கு நான் மட்டும் காரணம் கிடையாது.

நீங்கள் ஆக்ஸ்போர்டில் பணியாற்றியது பற்றி உங்கள் பெற்றோர் என்ன நினைத்தார்கள்? அவர்களுக்கு அதன் முக்கியத்துவம் புரிந்ததா?

ஆம். அவர்களுக்கு அது புரிந்தது. தங்கள் குழந்தைகள் சார்ந்து பெரிய கனவுகளைக் கொண்டிருக்கும் உழைக்கும் வர்க்க குடும்பங்களில் ஒன்று எங்கள் குடும்பம். குழந்தைகள் தமக்கு வேண்டியதை தாமே பெற்றுக் கொள்ளும் நிலையில் இருக்கவேண்டும் என்பது அவர்களின் கனவு.

ஆனால் இது ஒரு வகையில் குடும்பத்துக்கும் குழந்தைக்கும் நடுவே ஒரு தொலைவை உருவாக்கிவிடுகிறது.

அதையே நானும் சொல்ல வந்தேன். ஒரு குழப்பமான சூழ்நிலை அது. உங்கள் குழந்தைகளை, அவர்களுக்கு வேண்டியதை பெறுவதற்காக நீங்கள் உந்தித் தள்ளும்போது அவர்களோடு உங்களுக்கு ஒரு தொலைவும் உண்டாகிவிடுகிறது. என் வாழ்க்கையிலும் அப்படிதான் நடந்தது. என் பெற்றோருக்கு என் மேல் பெருமை இருந்தது. ஆனால் அதை வெளிப்படுத்துவதற்கான மொழி அவர்களிடம் இல்லை. நான் என் தீவிர கருத்துக்களுக்காக(radical) அறியப்படுவதையும், மற்றவர்களால் விமர்சனத்திற்குரியவனாக இருப்பதையும் எண்ணி அவர்களுக்கு கொஞ்சம் பயமும் இருந்தது. என் அம்மா போன வருடம்தான் காலமானார். இறப்புவரையிலும் எங்கள் உறவில் அந்த குழப்பம் இருந்தது. எனக்கு 60 வயது ஆகிவிட்டிருந்தபோதும், நான் எந்நேரமும் வேலையைவிட்டு வெளியே தூக்கி எறியப்படலாம் என்று அவருக்கு அச்சம் இருந்தது. உழைக்கும் வர்க்கத்துக்கே உரிய மரியாதை கலந்த விலக்கம் அது. என் அப்பா கொஞ்சம் வேறு மாதிரி இருந்தார். தன்னை வெளிப்படுத்துவதற்கான மொழி இல்லாவிட்டாலும் அவருக்கு என்ன நடக்கிறது என்பது தெரிந்திருந்தது. அவர் தன்னை சோஷியலிஸ்ட் என்றும் அழைத்திருக்கலாம்.

கோட்பாடுகளை விமர்சனபூர்வமான பார்வையுடனேயே நீங்கள் அறிமுகம் செய்தீர்கள். ஆனால் அது நேரெதிர் விளைவை ஏற்படுத்தியிருப்பதாக உணர்கிறீர்களா? நீங்கள் விமர்சனபூர்வமாக அணுகிய கோட்பாடுகள் உங்கள் நூல் வழியே பரவலான அறிமுகத்தை பெற்றுள்ளது. நீங்களே அவற்றை அங்கீகரிக்க செய்துவிட்டீர்கள்.

உண்மையில் அதுவும் என் நோக்கத்தின் ஒரு பகுதியே. இலக்கியம் பற்றிய சுவாரஸ்யமான கருத்துக்களை என் அறிமுக நூல் வழியே பரவலாக மக்களிடையே கொண்டு செல்ல நினைத்தேன். தனிப்பட்ட முறையில் உடன்பாடில்லாத கருத்துக்களையும், நேர்மறையான விதத்தில் -விமர்சன நோக்கையும் கைவிடாமல்- அறிமுகம் செய்ய விரும்பினேன். “கோட்பாடு”களையே எல்லாவற்றுக்குமான இறுதி முடிவாக முன்வைக்கும் வழிபாட்டு மனப்பான்மையை நான் பொதுவெளியிலேயே விமர்சித்திருக்கிறேன். அது முற்போக்கான வழியல்ல. போலவே கோட்பாட்டை ஓர் அரிய பொருள் போல முன்வைப்பதையும் நான் மறுத்திருக்கிறேன். முக்கியமாக அமெரிக்காவில் அப்படியான நிலை இருந்தது. இப்போது இவை எல்லாம் மாறிவிட்டன. நானே “கோட்பாட்டிற்கு பிறகு” (After Theory) என்றொரு நூல் எழுதியிருக்கிறேன்.

எனில் கோட்பாடுகளின் காலம் முடிந்துவிட்டதா?

இந்த விஷயம் பற்றி ஒருவர் கவனமாக இருக்க வேண்டும். கோட்பாடானது ஏதோவோர் வடிவத்தில் எப்போதுமே இருந்து வந்துள்ளது. ஆனால் 1965 முதல் 1980 வரையிலான காலக்கட்டத்தில் நடந்தது ஒரு பெரிய நிகழ்வு. அதை வரலாற்றுபூர்வமாக அணுகி புரிந்துகொள்ள வேண்டும். “கோட்பாட்டிற்கு பிறகு” என்று சொல்லும்போது அதன் அர்த்தம் நாம் பழைய காலத்துக்கு திரும்பிவிடலாம் என்பது அல்ல. பின்-அமைப்பியல் போன்ற கோட்பாடுகளோடு எனக்கு குழப்பமான உறவே இருந்துள்ளது. சில பயனுள்ள கருத்துக்கள் அதில் உண்டு. சிலவற்றின் மேல் எனக்கு விமர்சனம் இருக்கிறது. எனவே என் நூலில் அந்த மனநிலை வெளிப்படும்.

வழக்கமாக மார்க்ஸியர்கள் செயல்படுவது போல நான் அதை எழுதவில்லை. மார்க்ஸியமே அடிப்படைச் சட்டகம் என்றாலும், மார்க்ஸியம் பற்றி அதில் அதிகம் இருக்காது. மாக்ஸியம் அல்லாத கோட்பாடுகளின் கருத்துக்களையும் நான் பயன்படுத்தியுள்ளேன். பெண்ணியம் சார்ந்த கருத்துக்களை உதாரணமாகச் சொல்லலாம். இடதுசாரிகள் மைய இடத்தில் இல்லாத சமகாலத்தில் ஒருவர் தூய்மைவாத நோக்கை ,கோட்பாட்டிலோ அல்லது அரசியலிலோ , கடைப்பிடிப்பது நல்லதல்ல. 1960களின் இறுதியிலும், 1970களின் ஆரம்பத்திலும் இடதுசாரி கொள்கைகள் உச்சத்தில் இருந்தன. அப்போதுதான் நான் ஆரம்ப கால நூல்களை இயற்றினேன். அப்போது வேண்டுமானால், ஒருவர் தூய்மைவாத நோக்கையோ அல்லது முழுத் தீவிரத்தையோ அல்லது தனித்துவத்தையோ அழுத்தமாக பிடித்துக் கொண்டிருக்கலாம். ஏனென்றால் வெற்றி பெறுவதே அன்று இலக்காக இருந்தது. இப்போது சூழ்நிலை மாறிவிட்டது. வெற்றிபெறும் தரப்பில் இல்லாதது போல் உணர்வதில் ஓர் அணுகூலம் இருக்கிறது. பலரையும் உள்ளடக்கும் போக்கு அமைகிறது.

சமகாலத்தில் கோட்பாடானது ஒரு சந்தை போல மாறிவிட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது. எந்த அரசியல் பொறுப்பும் பிணைப்பும் இல்லாமல் ஒருவர் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

நுகர்வு கலாச்சாரக் கோட்பாட்டில் (Consumerist’s theory) எல்லா விஷயங்களும் பண்டமாவதைப் (commodity) பற்றி பேசியிருக்கிறார்கள். எந்த அளவுக்கு அதில் ஒத்துப் போவது என்று உறுதியாக சொல்ல முடிவில்லை. ஏனென்றால் பல பழமைவாதிகள் கோட்பாட்டை அப்படி சித்தரிக்க விரும்புகிறார்கள். ஓர் எல்லைவரை அது உண்மைதான். ஆனால் பல மாணவர்களின் செயல்களுக்கு அது பொருந்தாது. வருடம்தோறும் பல மாணவர்கள் தாங்கள் மேற்கொள்ளும் செயல்களின் அடிப்படைகளைத் தெரிந்துகொள்ளும் விருப்பம் கொண்டிருக்கிறார்கள். அச்செயல்களுக்குப் பின்னுள்ள சிந்தனையின் அடிப்படையை தெரிந்துகொள்ளவும் உயர்ந்த லட்சியங்களோடு அதை மேம்படுத்தவும் விரும்புகிறார்கள்.  கோட்பாடு அவர்களுக்கு பதில் அளிக்கிறது. அவர்களுடைய தீவிரமான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறது.

“நாவல் என்றால் என்ன?” எனும் கேள்வியை தன்னில் எழுப்பிக் கொள்ளாத ஆசிரியர்களிடம் நாவல் பற்றி கற்றுக் கொள்ள அவர்கள் விரும்புவதில்லை. அந்த கேள்விக்கு எளிய பதில் இருப்பதாக நான் சொல்ல வரவில்லை. குறைந்தபட்சம் அந்தக் கேள்வியின் தேவையை மாணவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். கோட்பாடு நம்மை ஓரடி பின்னால் எடுத்து வைத்து யோசிக்கச் செய்கிறது. வெறுமனே “இது ஒரு நல்ல கவிதையா?” என்று அது கேட்பதில்லை. மாறாக “நல்ல கவிதை என்று நாம் எதை உத்தேசிக்கிறோம்?” என்று கேட்கிறது. வெறுமனே ”இந்த துன்பியல் காவியம் நம்மை அசைத்துப் பார்க்கிறதா?” என்று கேட்காமல், “துன்பியலை உணர்வது என்றால் என்ன?” என்று கேட்கிறது. விமர்சனத்தை பதிலீடு செய்யாமல், மேலும் ஆழமான கேள்விகளை கோட்பாடு எழுப்புகிறது. நிச்சயமாக ஒருவர் கோட்பாட்டை பண்டமாக்கிவிடமுடியும் – எல்லா விஷயங்களையும் பண்டமாக்குவதைப் போல.

இலக்கிய விமர்சனத்தின் நோக்கம் என்று நீங்களை எதை நினைக்கிறீர்கள்?

ஒரு பொருள்முதல்வாதி எப்போதும் மனதில் இருத்திக் கொள்ள வேண்டிய விஷயம் ஒன்றுள்ளது. இலக்கிய விமர்சனம் முக்கியமானது என்றாலும் அதுவே மையமானதும் அல்ல. நாம் கருத்துக்களால் காப்பாற்றப்படுவதோ அல்லது அவற்றால் முழுமையாக உருமாறுவதோ இல்லை. எனவே விமர்சனத்தின் அதிகாரம் எல்லைக்குட்பட்டதே.

இலக்கிய விமர்சனம் அரசியல் மாயைகளை ஊக்குவிக்கக் கூடாது. இடதுசாரிகள் உச்சத்தில் இருந்த 1970களில், இலக்கிய விமர்சனத்தின் உருமாற்றும் சக்தி பற்றி அத்தகைய மாயைகள் ஊக்குவிக்கப்பட்டன. ஆனால் இலக்கிய விமர்சகர்கள் அரசியல் உயிரிகள் அல்ல. ஒரு தொழிற் சங்க ஊழியர் தன் பணி வகைமையினாலேயே அரசியலோடு பிணைந்திருக்கிறார். ஆனால் இலக்கிய விமர்சகர்கள் அப்படி அல்ல.

பாரம்பரிய அர்த்தத்தில், இலக்கிய விமர்சகர்களை மொழியின் பாதுகாவலர்கள் என்று சொல்லலாம். சூசன் சொண்டாக், ரேமண்ட் வில்லியம்ஸ் என்று இன்னொரு மரபும் உண்டு. அவர்களை விமர்சகர்கள் என்று சொல்வதைவிடவும் அறநெறியாளர்கள் (moralists) என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். “அறநெறியாளர்” என்ற சொல் இன்று எதிர்மறையானதாக கருதப்படுகிறது. வில்லியம்ஸின் “கலாச்சரமும் சமூகமும்” (Culture and Society) நூலிலிருந்து தொடர்ந்து வருகிற -இலக்கியம் என்றோ தத்துவம் என்றோ சொல்லிடமுடியாத- குறிப்பிட்ட வகையான உரையாடல் மேல் எனக்கு எப்போதும் ஆர்வம் இருந்து வருகிறது. அடிப்படைக் கேள்விகளை எழுப்புவதற்கான அம்மொழியை அறநெறியின் மொழி எனலாம். முன்னால் தத்துவத்திலும் இறையியலிலும் இடம்பெற்ற மொழி அது. இப்போது அம்மொழியில் பேசக்கூடியவர்களும் அடிப்படைக் கேள்விகளை ஆற்றலோடு எழுப்பக் கூடியவர்களும் இலக்கிய விமர்சனத் துறையில் பயிற்சி பெற்றவர்களாகவே இருக்கிறார்கள்.

கேம்பிரிட்ஜ் விமர்சனப் பள்ளி பற்றிய என் ஆய்வான “விமர்சன புரட்சியாளர்கள்” (Critical Revolutionaries) நூல், மொழி மலினப்படுவது எப்படி மொத்த கலாச்சாரமும் மலினப்படுவதோடு இணைந்துள்ளது என்பதை பேசுகிறது. வில்லியம்ஸ் வருகிற வரையில் இந்த உரையாடலில் “முதலாளித்துவம்” எனும் சொல்லைப் பயன்படுத்துவதில் மக்களுக்கு தயக்கம் இருந்தது. இந்த இடத்திலேயே இலக்கிய விமர்சனம், கலாச்சாரம் மற்றும் சமூகம் இவற்றுக்கிடையே ஓர் அரசியல் சந்திப்பு நிகழ்கிறது.

இலக்கிய வாசிப்பு மற்றும் கோட்பாட்டு வாசிப்பு – இரண்டுக்கும் நடுவே ஒரு சமநிலையை எட்டுவது எப்படி?

இந்த பிரிவினையே தேவையற்றது என நான் நினைக்கிறேன். நடைமுறையில் சில நேரங்களில் இதன் தேவையை ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் அடிப்படையில் இந்த வேறுபாடு பிழையானது. அமெரிக்க மார்க்ஸிய விமர்சகரான ஃபிரடெரிக் ஜேம்ஸன் ஒருமுறை சொன்னார், வாக்கியங்களின் வடிவத்தோடு இசைந்து செல்ல வேண்டிய பொறுப்பு கோட்பாட்டிற்கு இருக்கிறது என்று. நான் அக்கருத்தோடு முழுமையாக உடன்படுகிறேன். பிரதியை நுட்பமாக வாசிக்க உதவாத எந்த கோட்பாடும் என்னை பொறுத்தவரையில் சரியான கோட்பாடு கிடையாது. எனவே கோட்பாட்டு வாசிப்பு நுட்பமான (Close) வாசிப்புக்கு எதிரானதல்ல. நுட்பமான வாசிப்பிலேயே பல்வேறு வகைகள் உள்ளன. சில வாசிப்புகள் ஒருவிதமான முன்னறிதல்களையும் வேறு சில வாசிப்புகள் வேறுவிதமான முன்னறிதல்களையும் கொண்டிருக்கின்றன. எனவே சார்பில்லாத நுட்பமான வாசிப்பு என்று எதுவும் கிடையாது. அதே நேரம், இலக்கியத்தை வெறுமனே கருத்துக்களுக்கான இடமாக பார்ப்பதிலும் ஆபத்திருக்கிறது.

எனில் அழகியல் பற்றி என்ன சொல்கிறீர்கள்? மதிப்பிடல் எப்படி நடக்கிறது?

அழகியல் என்பது வெறுமனே மதிப்பிடல் சார்ந்தது என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அது மதிப்பிடவும் செய்கிறது. அழகியல் என்பது மக்கள் சிந்தனை செய்த பல்வேறு விஷயங்கள் பற்றியது. வடிவம், பேசுபொருள், கருத்துக்கள் இவை எல்லாவற்றையும் கடந்து “கலையின் அரசியல்” என்று ஒரு விஷயம் இருக்கிறது. ஒருவர் அதை புரிந்துகொண்டால், ஒரு பிரதியின் நுண்ணமைப்புகளோடு கருத்துக்களும் அரசியலும் கருத்தியலும் எப்படி பிணைந்திருக்கின்றன என்பதை தெரிந்துகொள்ளலாம். மேலும் கோட்பாடு என்பது நம்முடைய மதிப்பீடுகள் எங்கிருந்து உருவாகின்றன என்ற கேள்வியையே எழுப்ப முயன்றது. மதிப்பீடு என்பது நம் மொழியின் ஒரு பகுதியாக இருக்கிறது. எனவே கோட்பாடு என்பது மதிப்பிடுதலுக்கு எதிரானது அல்ல. உங்கள் அளவுகோல் பற்றிய பிரக்ஞையை அது அதிகரிக்கிறது. ஷேக்ஸ்பியர் உலகின் தலைசிறந்த எழுத்தாளர் என்று நீங்கள் கருதலாம். அதே நேரம், 18ம் நூற்றாண்டின் தலைசிறந்த விமர்சகரான சாமுவல் ஜான்சன் அப்படி நினைக்கவில்லை என்பதை மனதில் கொள்ளுங்கள்.

செவ்வியலாக்கப் பிரதிகள் (Canonical) பற்றியே நீங்கள் பெரும்பாலும் எழுதியிருக்கிறீர்கள். அது ஏன்?

அதற்கு என்னிடம் தற்காப்பான பதில் ஏதுமில்லை. நான் அவ்விதமே வளர்க்கப்பட்டேன் எனலாம். பிரிட்டனில் எனக்கு அடுத்த தலைமுறையில்தான், வெகுஜன கலாச்சாரத்தையும் தீவிரமான ஆய்வுக்கு உட்படுத்தும் போக்கும் தொடங்கியது. எங்கள் தலைமுறை செவ்வியல் சார்ந்த பார்வையே கொண்டிருந்தது. செவ்வியலாக்கப்படாத ஆக்கங்களிலும் முக்கியமானவை நிச்சயம் உண்டு. அதே நேரம் செவ்வியலாக்கம் எனும் கருதுகோளை மக்கள் மலினப்படுத்துவதாக நான் நினைக்கிறேன். டோரி மாரிசன் அல்லது பூர்வகுடி அமெரிக்க இலக்கியம் போல இன்னமும் செவ்வியலாக்கப்படாத எழுத்துக்களையும் ஒருவர் பழமைவாத விதத்தில் பயிற்றுவிக்க முடியும். எனவே ஒரு பிரதி செவ்வியலாக்கப்படாததால் அது புரட்சிகரமான விளைவை ஏற்படுத்தும் என முடிவு செய்ய வேண்டியதில்லை. நாம் சிந்திக்கும் முறைதான் முதன்மையானது. எனவே ஒரு புதிய எழுத்தாளரை வைத்து கவனத்தை ஈர்ப்பது விஷயம் அல்ல. எந்த சட்டகத்தின் வழியே நாம் ஒருவரை வாசிக்கிறோம் என்பதே கவனிக்க வேண்டியது. எனவே செவ்வியலாக்கம் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ள தேவையில்லை. செவ்வியலாக்கப்பட்ட பிரதிகளுக்கு வெளியிலும் நம் அக்கறை இருக்க வேண்டியது அவசியம். போலவே, நடைமுறையில் நமக்கு குறுகிய காலமே வழங்கப்பட்டிருக்கிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஜேன் ஆஸ்டன் பற்றியில்லாமல் அமெரிக்க நாடகமான சிம்சன்ஸ் பற்றி எல்லோரும் ஆய்வு செய்தால் அது புரட்சிகரமானதாக இருக்கும் என்று கருத வேண்டியதில்லை.

உயர் கலாச்சாரம், இலக்கியம், வெகுஜன கலாச்சாரம் எனும் பிரிவினைகள் வழியே முன் முடிவுகள் அதிகம் ஏற்படுகிறது இல்லையா?

அமைப்பியல்வாதம், பின்னமைப்பியல்வாதம் போன்ற சில கோட்பாடுகள் இந்த பிரிவினைகளை அழிக்க முயன்றுள்ளன. ரோலண்ட் பார்த்தால் பால்சாக் பற்றியும் குத்துச் சண்டை பற்றியும் ஒரே மாதிரி , ஒரே விதமான முறைமைகளை கையாண்டு எழுத முடியும். அக்கோட்பாடுகள் பேசுபொருட்களின் அந்தஸ்தை பொருட்படுத்துவதில்லை. நான் குறிப்பிடுவது ஓர் ஆரோக்கியமான எச்சரிக்கை மட்டுமே. சிம்சன்ஸ் நாடகம் பற்றி ஒரு தலைமுறையே ஆய்வுக் கட்டுரைகள் எழுதலாம். ஆனால் அதனால் எந்த விளைவும் இல்லாமல் போகவும் வாய்ப்புண்டு. கலையில் அவான்ட்-கார்ட்(avant guarde) இயக்கம் இப்படி சொன்னது “புதுவகையான கலைப் பொருளை நாம் உருவாக்கத் தேவையில்லை. கலையாக்கம் பற்றிய கருதுகோளையே நாம் பரிசீலணை செய்வோம்”.  கோட்பாட்டிற்கும் இது பொருந்தும். “வெவ்வேறு வகையான பிரதிகளை ஆய்வு செய்வோம்” என்று அது சொல்ல வேண்டியதில்லை. மாறாக “பிரதி பற்றிய கருதுகோளையே நாம் பரிசீலணை செய்வோம்” என்று சொல்ல வேண்டும்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் பழைய சிந்தனையாளர்கள் மறுக்கப்படுவதையும் புதியவர்கள் முக்கியத்துவம் பெறுவதையும் எப்படி பார்க்கிறீர்கள்?

பின்-நவீன கோட்பாட்டால் நேர்ந்த பெரிய இழப்புகளில் ஒன்று, மார்க்ஸின் முரணியக்க சிந்தனை (dialectical) கைவிடப்பட்டது. ஒன்றை ஏற்று இன்னொன்றை நிராகரிப்பதற்கு பதிலாக இரண்டு எதிர்நிலைகளுக்கு நடுவிலான உறவை புரிந்துகொள்வதே முரணியக்க சிந்தனை. மார்க்ஸை பொருத்தவரையில் நவீனக் காலம் என்பது பலவகை அடிமைத்தனங்களிலிருந்து விடுதலைப் பெற்றுத் தந்தது. போலவே மார்க்ஸை பொருத்தவரை, நவீனக் காலம் என்பது ஒரு நீண்ட கொடுங்கனவும்கூட. நான் மார்க்ஸியராக இருப்பதன் முக்கியமான காரணங்களில் ஒன்று, வேறு எந்த தரப்பும் இந்த முரணியக்கத்தை பேசுவதில்லை என்பதே. தாராளவாத முற்போக்கினர் “நவீனத்துவமே சிறந்தது” என்கிறார்கள். பின்-நவீனத்துவவாதிகளோ “அதுவொரு பேரிடர்” என்கிறார்கள். இரண்டுமே உண்மை என்று சொல்லும் மூன்றாவது தரப்பை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

கோட்பாட்டில் அமெரிக்க செல்வாக்கு மிகையாக இருக்கிறது என்பது உண்மைதானா?

நான் ஒருமுறை நைஜீரியாவில் ஒரு மாநாட்டில் கலந்து கொண்டேன். நைஜீரியாவில் நடக்கும் முதல் கோட்பாட்டு மாநாடு அது. நான் அங்கு பின்-காலனியம் பற்றி பேசினேன். மிதக்கும் குறிப்பான் (floating signifier) பற்றி நைஜீரியர்கள் பேசினார்கள். இந்த சூழ்நிலையை சற்று கற்பனை செய்து பாருங்கள். மலேசியாவையோ அல்லது கொரியாவையோ அல்லது சீனாவையோ சேர்ந்த இளம் கல்லூரி மாணவர்கள் தங்கள் துறைகளில் இயங்கிக் கொண்டிருக்கும்போது, ஒரு நாள் அவர்களை நோக்கி ஒரு குரல் வருகிறது. “நீங்கள் பின்-காலனியம் சார்ந்தோ அல்லது இனக்குழுக்கள் சார்ந்தோ ஆய்வு செய்கிறீர்கள் என நினைக்கிறேன்”. எங்கிருந்து இக்குரல் கேட்கிறது?  கலிபோர்னியோவிலிருந்தோ பாஸ்டனிலிருந்தோ வாஷிங்க்டனிலிருந்தோ கேட்கிறது. பின்-நவீனத்துவம், பின்-காலனியம் என்று வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிற, மேற்கத்திய நாடுகளில் உற்பத்தியாகிற ஒரு மரபை அவர்கள் உடனே ஏற்றுக் கொள்ள நேர்கிறது. அது மட்டும் அல்ல. இந்த மரபை உற்பத்தி செய்கிற மேற்கத்திய நாட்டோர் உண்மையில் இனக்குழு மையப் பார்வைக்கு எதிரானவர்கள். இது ஒரு பெரிய முரண்பாடு. தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஒரு கலப்பினத்தவர் எனக்கு மாணவராக இருந்தார். ஒருமுறை அவர் என்னிடம் வந்து “ஏன் பிரிட்டனில் எல்லோரும் நான் இனவெறி சார்ந்து இலக்கியத்தில் ஆய்வு செய்வதாக நினைக்கிறார்கள்?” என்று கேட்டார்.

தென்னாப்பிரிக்காவை சேர்ந்தவராக இருப்பதால் அவருக்கு அந்த ஒரு விருப்பம்தான் இருக்கமுடியும் என்று எல்லோரும் நினைத்துவிட்டார்கள்.

ஆமாம். இதில் மோசமான சூழ்நிலை என்பது கோகோ-கோலாவோடு சேர்த்து அமெரிக்கா பின்-நவீனத்துவ கலாச்சாரத்தையும் ஏற்றுமதி செய்வதே. பீஜீங்கிலேயே பின்-நவீன ஆய்வுகளுக்கான நிறுவனம் ஒன்று செயல்படுவது உங்களுக்கு தெரியுமா? மேற்குலகம் இந்த விஷயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும். புதுவகையான கலாச்சார காலனியாதிக்கத்தை (Cultural Imperialism) அது உருவாக்கிடக் கூடாது. பிரிட்டிஷ் கவுன்சில் பூர்வகுடிகளிடம் டிக்கன்சின் எழுத்துக்கள் கொண்டுச் சென்றது பழைய வகை ஆதிக்கம். இப்போது ஹோமி பாபாவின் எழுத்துக்களையோ அல்லது என்னுடைய எழுத்துக்களையோ அவர்களிடம் கொண்டுச் செல்கிற புதுவகை ஆதிக்கம் வந்துவிடக்கூடாது. அது தவிர்க்கப்பட வேண்டும். வெவ்வேறு சமுதாயங்களில் வாழும் மக்கள் தங்களுடைய காரியங்களை தாங்களே முன்னெடுப்பதற்கான இடம் இருக்க வேண்டும். அவர்களுக்கான திட்டங்களை மேற்கு வகுக்கக் கூடாது.

கோட்பாடு எப்படி இயங்க வேண்டும்? எழுத்தாளரை மையப்படுத்தியா அல்லது வாசகரை மையப்படுத்தியா?

நவீனத்துவ அல்லது பின்-நவீனத்துவ காலத்தின் முக்கிய கூறுகளில் ஒன்றாக நான் கருதுவது – எழுத்தாளருக்கும் விமர்சகருக்கும் நடுவிலான எல்லைக்கோடு மங்கியிருப்பது. விமர்சனம் அல்லது கோட்பாடு சார்ந்து எழுத்தாளர்கள் கூடுதல் பிரக்ஞை அடைந்திருக்கிறார்கள். அதே நேரம் விமர்சகர்களும் -முக்கியமாக கோட்பாட்டாளர்கள்- படைப்பிலக்கிய எழுத்தாளர்கள் போல எழுதுகிறார்கள். தெரிதாவை உதாரணமாகச் சொல்லலாம். கோட்பாடோ அல்லது விமர்சனமோ இலக்கியத்தின் முறைமைகளை பயன்படுத்தாமல் தன் பணியை ஆற்ற முடியாது எனும் நிலையிலேயே இந்த நெருக்கடி ஏற்படுகிறது.

எனில் விமர்சனம் தன்னளவில் ஓர் இலக்கியம் வகைமையாக மாறிவிட்டதா?

அதை பற்றி என்ன யோசிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் விமர்சனம் என்பது பிரதியின் சேவகனாக இப்போது பார்க்கப்படுவதில்லை. அந்த பழைய பார்வை விமர்சனத்தை குறுக்கவே செய்தது. விமர்சனத்தை தனி இலக்கிய வகைமை என்று சொல்வது பெரிய கனவு போல் தோன்றுகிறது. அதே நேரம் வெறுமனே பிரதியை விளக்குவது மட்டுமே விமர்சனத்தின் வேலை என்று சொல்வது அதன் எல்லையை குறுக்குகிறது.  நீட்ஷே, ஹைடேக்கர், தெரிதா, விட்கன்ஸ்டைன் போன்ற தத்துவவாதிகளால் தாங்கள் சொல்ல நினைத்ததை வெவ்வேறு எழுத்து முறைகளைக் கொண்டே சொல்ல முடிந்தது. உருவகங்கள், கவித்துவ வெளிப்பாடுகள், பிரதியம்சம் இவை எல்லாம் அவர்களுக்கு தேவைப்பட்டன. இது நடந்து கொண்டிருந்த நேரத்திலேயேதான் தாமஸ் மன், டி.எச்.லாரன்ஸ் போன்ற எழுத்தாளர்கள் கோட்பாடு சார்ந்தும் கூடுதல் பிரக்ஞை அடைந்தார்கள்.

எந்த கலை ஆக்கமும் அசல் தன்மையோடிருக்க, அது தன்னை தானே பரிசீலிக்க வேண்டியுள்ளது. கோட்பாட்டை அத்தகைய சுய பரிசீலணையாகவே நான் பார்க்கிறேன். கோட்பாடு கவித்துவம் நோக்கியும் அழகியல் நோக்கியும் முன்னேறிய நேரத்தில்தான், அழகியல் அடிப்படையிலான அவான்-கார்ட் (avant guard) இயக்கம் கோட்பாடு நோக்கி நகர்ந்தது. இதுவொரு மிக முக்கியமான ஆற்றல் வாய்ந்த சந்திப்பு.

மற்ற விமர்சகர்களுக்கும் உங்களுக்கும் நடுவே இருக்கும் முக்கிய வேறுபாடு உங்கள் நகைச்சுவை உணர்வு. கல்வித் துறை விமர்சனங்கள் ஏன் இவ்வளவு வறட்சியாக இருக்கின்றன என நான் வியப்பதுண்டு.

இடதுசாரி விமர்சனங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். அவை தூய்மைவாத நோக்கு கொண்டவையாகவும் பாரமான எடையோடும் உள்ளன. தீவிரம் இல்லாமல் விளையாட்டுத்தனமாக இருப்பதாக என் மேலேயே குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விளையாட்டுத்தனமாக இருக்கவே நான் விரும்புகிறேன்.

தெரிதா போன்ற பிரெஞ்சு எழுத்தாளர்கள் விளையாட்டுத்தனமாக எழுதுகிறவர்கள். ஆனால் அவர்கள் தீவிரமான முறையில் விளையாட்டுத்தனமாக இருக்கிறார்கள். ஒருவித பிரெஞ்சு குணம் அது. ஆனால் நான் விளையாட்டுத்தனமான முறையிலேயே விளையாட்டுத்தனமாக இருக்க விரும்புகிறேன். என்னுடைய ஐரிஷ் பின்னனியும் அதற்கு காரணமாக இருக்கலாம். கதைசொல்லிகள், வேடிக்கை பேசுபவர்கள், அமெச்சூர் நடிகர்கள், அமெச்சூர் இசைக் கலைஞர்கள் ஆகியோரால் நிரம்பியது என் குடும்பம். மேலும் ஐரிஷ் கலாச்சாரமானது, எழுத்தைக் காட்டிலும் கதைகள், நகைச்சுவைத் துணுக்குகள் என்று வாய்மொழி மரபிலேயே அதிகம் உயிர்ப்போடிருந்திருக்கிறது. ஒருவேளை எனக்கே தெரியாமல் அந்த மரபு என் எழுத்தில் ஊடுருவியிருக்கலாம். ஆனால் இளமையில் என்னால் அப்படி எழுத முடியவில்லை. ஆரம்ப காலத்தில் சம்பிரதாயமாகவே எழுதியிருக்கிறேன். தொடர்ந்து எழுதி எனக்கான இடத்தை உருவாக்கிய பிறகே நகைச்சுவையாக எழுத முடிந்திருக்கிறது.

பெண்ணியத்திற்கும் இந்த மாற்றத்தில் முக்கிய பங்கிருக்கிறது. பெண்ணியம் சார்ந்து நான் நிறைய எழுதியதில்லை. ஆனால் அது என் மேல் மறைமுகமாக பெரிய பாதிப்பைச் செலுத்தியுள்ளது. மக்கள் நினைப்பதுப் போல கோட்பாடானது ஆண்த்தன்மையோடு மிரட்டும் விதத்தில் இருக்க வேண்டியதில்லை. அது எளிமையாக இருக்கலாம். அவ்விதத்தில் பெண்ணியம் என்னை முக்கியமான வழிகளில் ஆழமாக பாதித்துள்ளது. புது வகையான அணுகுமுறைகளைக் காட்டியிருக்கிறது.

ஒரு திறன்வாய்ந்த சமகால எழுத்தாளர் கல்வித்துறை இலக்கிய விமர்சனங்களை முழுமையாக புறக்கணிக்கலாமா? அல்லது அவர் விமர்சனத்திலும் பயிற்சி பெற வேண்டுமா?

நான் அப்படி நினைக்கவில்லை. விமர்சனம் பற்றியே அறியாத பல சிறந்த எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அதை தெரிந்துகொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை. அதே சமயம், படைப்பிலக்கிய எழுத்தாளர்களிடையே கல்வித் துறை சார்ந்து தவறான முன் முடிவுகளும் இருக்கின்றன. சில கல்வியாளர்கள் மேல் அப்படி முன்முடிவுகள் கொள்வது நியாயமானது தான். ஆனால் கல்வியாளர்களோ அல்லது விமர்சகர்களோ தங்களுக்கு ஒன்றும் அளிக்க முடியாது எனும் கட்டுப்பட்டியான நம்பிக்கையும் எழுத்தாளர்களிடையே உள்ளது. அது சிந்தனைக்கு எதிரானது.

ஆனால் “எழுத்தாளன் இறந்துவிட்டான்” போன்ற முழக்கங்கள் எழும்போது எழுத்தாளர்கள் வேறெப்படி எதிர்வினையாற்றுவார்கள்?

டி.எச்.லாரன்ஸ் போன மகத்தான எழுத்தாளர்கள் ஏற்கனவே சொன்னதுதான் இது. “எழுத்தை நம்புங்கள். எழுத்தாளனை அல்ல”. பல மகத்தான எழுத்தாளர்கள் உள்ளுணர்விலேயே எழுத்துக்கும் எழுத்தாளனுக்கும் இடையிலான வேறுபாட்டை அறிந்திருந்தார்கள் என நினைக்கிறேன். இத்தாலியர்கள் போல சொல்ல வேண்டும் என்றால், படைக்கும் மனிதனுக்கும் வாழும் மனிதனுக்கும் இடையிலான வேறுபாடு எனலாம். எனவே எழுத்தாளனின் மரணம் என்பது நாம் நினைப்பதைவிடவும் மிகப் பழமையான ஒரு கருதுகோள்தான்.

படைப்பாற்றல் என்பது தங்களுக்கு மட்டுமே உரியது என்று சில கலைஞர்கள் எண்ணுவது மூர்க்கமானது. முன்முடிவுகள் கொண்டது. மேற்கின் வரலாற்றில் இந்த தருணம் எப்போது உருவானது? அன்றாட வாழ்க்கை என்பது படைப்பாற்றலுக்கு வெளியே இருப்பது என்றும் வாழ்வில் ஒரு சிறிய பகுதி மட்டுமே படைப்பாற்றலுக்கு உரியது என்றும் எண்ணும் சமூகம் என்ன மாதிரியான சமூகம்? இந்த மனப்பாங்கையே நான் எதிர்க்கிறேன். ஒருமுறை அமெரிக்காவில் கவிஞர்களின் மாநாட்டில் கலந்துகொள்ள நேர்ந்தது. அதில் பங்குபெற்ற இரண்டே விமர்சகர்கள் – நானும் பிரெடரிக் ஜேம்சனும் மட்டுமே.  அங்கே இருந்த யாருமே எங்களை வாசித்ததில்லை. ஆனால் விமர்சகர்களாக இருப்பதனாலேயே நாங்கள் சலிப்பூட்டுபவர்களாகவும், உயிர்ப்பற்றவர்களாகவும் இருப்போம் என்று அவர்கள் முடிவு செய்துவிட்டார்கள். அங்கிருந்து எப்படியோ நாங்கள் உயிரோடு தப்பித்துவந்துவிட்டோம்.

விமர்சனம் எப்படி பொது வாசகர்ளை அடைய முடியும்?

வாசகர்கள் எளிதில் படித்து புரிந்துகொள்ளக்கூடிய வகையில் விமர்சனம் இருக்க வேண்டும். நான் அதையே முயற்சிக்கிறேன். முற்போக்கான பல விமர்சகர்களும் அதை செய்வதில்லை என்பதில் எனக்கு கோபம் உண்டு. ஓர் இடதுசாரி விமர்சகர் கல்வித்துறையைத் தாண்டி பொது வாசகர்களோடு உரையாட முயற்சிக்க வேண்டும்.

18ம் நூற்றாண்டிலும் 19ம் நூற்றாண்டிலும் விமர்சனம் என்பது பொது உரையாடலாகவே இருந்திருக்கிறது. பொது வெளியின் பகுதியாக இருந்துள்ளது. நவீன காலத்தில் தான் விமர்சனம் என்பது பல்கலைக்கழக செயல்பாடாக மாறிவிட்டது. விமர்சனம் பல்கலைக்கழகங்களில் அல்ல; பொதுவெளியிலேயே பிறந்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மேலும் விமர்சனம் என்பது வெறுமனே இலக்கியம் சார்ந்ததாக மட்டும் இருக்கவில்லை. அறம், வாழ்க்கை, சமூகம் இவை எல்லாவற்றோடும் சம்பந்தப்பட்டிருந்தது. எனவே மீண்டும் விமர்சனத்தை பொதுவெளிக்குக் கொண்டு செல்ல வேண்டும். அறிவுத் தள உரையாடலை மிரட்சிக்குரியதாக இல்லாமல் செய்வது அதற்கான முதல் படி.

நீங்கள் பரிந்துரை செய்யும் விமர்சகர்கள் யார்?

விமர்சகர்கள் என்று சொல்ல மாட்டேன். ஆனால் செவ்வியல் அர்த்தத்தில் -பொது அளுமைகளாக இருந்து பல தரப்பட்ட விஷயங்களை விவாதித்த- அறிவுஜீவி எனும் இடத்தில் சிலரை குறிப்பிடலாம். நவோம் சாம்க்ஸி (Naom Chamsky), எட்வர் செட் (Edward Said), ரேமண்ட் வில்லியம்ஸ் (Raymond Williams), சூஸன் சொண்டாக் (Susan Sontag). மிஷல் பூக்கோ போன்றவர்கள் பொது அறிவுஜீவி எனும் வகைமையே அழிந்துவிட்டதாக சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இந்த இறந்த மனிதர்கள் இன்னமும் நடமாடுகிறார்கள்.

அதே நேரம் கலாச்சார கோட்பாடுகளின் பேராளுமைகள் எல்லாம் கடந்த காலத்திலேயே இருப்பதாக நான் நினைக்கிறேன். பூக்கோ அல்லது தெரிதா போல பெரும் தாக்கத்தை உண்டு பண்ணக்கூடிய எழுத்தாளர்கள் அடுத்த தலைமுறையில் உருவாகவில்லை. அது இடதுசாரிகளோடும் தொடர்புடையது. இடதுசாரிகள் மேலெழுந்த 1960களின் இறுதியிலும், 70களின் ஆரம்பத்திலுமே கோட்பாடுகளும் பெரிய அளவில் வளர்ந்தன. கோட்பாடுகளின் சரிவு என்பது 1980களின் நடுவில் ஏற்பட்ட இடதுசாரிகளின் அரசியல் வீழ்ச்சியுடனே துவங்கியது. பின்னர் ஒரு தலைமுறையைச் சேர்ந்த சிறந்த சிந்தனையாளர்களின் பாதிப்பே சூழலில் மறைய ஆரம்பித்துவிட்டது. புதிய தலைமுறையின் நினைவில் அரசியல் வரலாறு இல்லாமல் இருப்பதும் ஒரு முக்கியமான காரணம்.  கடந்தகால அரசியல் ஞாபகத்தையும் அனுபவங்களையும் பொதுவாக பகிர்ந்துகொள்வது இப்போது இல்லாமல் ஆகிவிட்டது. அந்த இடத்தை எது நிரப்பும் என்று எனக்குத் தெரியவில்லை.

1 Comment

  1. பயனுள்ள கருத்துக்களையும் சிந்தனைகளையும் கொண்ட நேர்காணல். மீண்டும் மீண்டும் வாசிப்பைக் கோரும் பதிவு. மிக்க நன்றி

உரையாடலுக்கு

Your email address will not be published.