யதார்த்தனின் படைப்புலக வெளியில் எனது ‘இரண்டாவது பயணம்’ இது. அவரது ‘மெடூஷாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம்’ எனும் சிறுகதை தொகுப்பின் உரையாடலிலும் நானும் கலந்துகொண்டேன். யதார்த்தனின் இரண்டாவது படைப்புலகமான ‘நகுலாத்தை’ ஊடாகவும் நான் பயணிக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.
‘நகுலாத்தையை’ எனது வாசிப்பிற்கென தர்மு பிரசாத் தந்துதவினார். அப்போது, என்ன சொல்கிறா ‘நகுலாத்தை’ என அவரிடம் கேட்டேன். “நான் எனது வாசிப்பின் புரிதலை சொல்வதனூடாக, அதுவே ஒரு முன் அனுமானமாக உங்களுக்கு அமையுமானால், உங்களின் வாசிப்பின் கண்டடைதலுக்கு இடையூறாக அமையலாம். நீங்கள் வாசித்து உங்கள் முடிவை கண்டடையுங்கள்” என்றார். முன் அனுமானங்களோடும் முன் முடிவுகளோடும் புத்தகங்கள் வாசிக்கும் வழக்கத்தை நான் கடந்து வந்து வெகு நாட்கள். உனது கண்டடைதலின் வழியே நான் நகரமாட்டேன். எனக்கான ஒரு ‘சுய’ பாதையைக் கண்டடையவே முயற்சிப்பேன் எனக்கூறி ‘நகுலாத்தையை’ பெற்றுக்கொண்டேன்.
இப்போதெல்லாம் ஒரு புத்தகத்தை வாசிக்க கையிலெடுக்கும் தருணத்தில் முதலில் நான் என்னை முழு ‘நிர்வாணமாக்கிக்’ கொள்வதும், எனக்கான புதியவகை ‘உடைகளையும் வண்ணங்களையும்’ புதிதாக வாசிக்கும் புத்தகங்களூடாகவே பெற்று அணிந்து அழகு பார்க்கும் வழிமுறையையே பின்பற்றி வருகின்றேன். இதனூடாக எனது சுயத்தை கண்டடையும் திருப்தியை நான் உணர்ந்தும் வருகின்றேன்.
‘சுயம்/தனித்துவம்-இலக்கிய ஆற்றல் பற்றிய உப-உரையாடல்’
என்மீதும், எனது நெருக்கமான நண்பர்களின் சமூக-அரசியல்-இலக்கிய அவதானிப்பு மீதான ‘ஒரு நபரின்’ விமர்சனம் இவ்வாறிருந்தது: “இவர்கள் எவ்வித தனித்துவமும் அற்றவர்கள். ஆழமான அரசியல் அறிவோ, இலக்கிய ஆற்றலோ இல்லாதவர்கள்” என்பதோடு எங்கள் மீதான பல்வேறு குற்றச்சாட்டுக்களும் இணைக்கப்பட்ட தகவல்களை ஒரு இணையத்தில் காண நேர்ந்தது. அவ்வாறான அவரது பார்வையை மறுத்தோ, இல்லை மாறாக என்னை நியாயப்படுத்தி ‘அந்நபர்’ மீதான ஓர் எதிர் மனநிலைக் கருத்தை முன்வைக்கும் நோக்கமாக இங்கே அந்த சம்பவத்தை உங்கள் முன் நினைவுறுத்துவதாக தயவுசெய்து கருதிவிடவேண்டாம். ‘தனித்துவம், இலக்கிய ஆற்றல் எனும் வார்த்தைகள் மீதான பொருளை, அதன் துல்லியமான வினைபுரிதலை, இங்கு நினைவுறுத்துவது அவசியம். அதனூடாக ‘நகுலாத்தை’ மீதான எனது வாசிப்பின் அனுபவத்தையும் நீங்கள் புரிந்துகொள்ள உதவலாம் எனும் நம்பிக்கையின் பொருட்டு இதனையும் இணைத்தே உரையாட விரும்புகின்றேன்.
ஃபிறதெரிக் லுநுவார் (fredric lenoir) எழுதிய ‘சுயத்தை நோக்கிய ஒரு பயணம்’ (un voyage vers soi) எனும் நூல் மிகவும் புரிதலுக்கு சிரமமான (எனக்கு) மொழியாலானது. கார்ல் ஹுஸ்ரோவ் யுங் (Carl gustav jung) எனும் சுவிஸ் நாட்டை சேர்ந்த உளவியல் நிபுணரின் சிந்தனைகளை உள்ளடக்கிய தொகுப்பு. யுங், சிக்மென்ட் ஃபிரெட் காலத்தவர். அவருக்கு யூனியராக யுங் இருந்தபோதும் சிக்மென்ட் ஃபிரெட் இன் சில சிந்தனைகளோடு முரண்படுபவராகவும் ஃபிறதெரிக் லுநுவாரின் “சுயத்தை நோக்கிய ஒரு பயணம்” எனும் நூலில் காணக்கூடியதாக உள்ளது. இதில் நான் புரிந்துகொண்ட பகுதி ‘பிரக்ஞை’ சம்பந்தமாக யுங் அவர்களின் விபரிப்பு.
பிரக்ஞை என்பது என்ன? அது புறநிலை சார்ந்தே இயங்கி வருவது. இதற்கும் மனித மனதிற்கும் இடையிலான தொடர்புகளென்ன? இவை தொடர்பான விவாதிப்பினூடாக மனித மனதிற்கும், அவனது சுயத்திற்குமான அல்லது தனித்துவத்திற்குமான தொடர்புகளென்ன என்பதை யுங் மிக தெளிவாக விபரிக்கின்றார். அவர் மனித மன அமைப்பு முறையை ஒரு கூம்பு வடிவத்தில் கற்பனை செய்து அதில் மனித மனதை கூம்பின் உச்சியிலிருந்து அதன் விரிந்த அடித்தளம் வரை நான்கு நிலைகளில் மனதை வைத்து விபரிக்கின்றார். கூம்பு வடிவத்தின் உச்சியின் முதல் தரத்தில் பிரக்ஞையின் தளமாக இருப்பதே மனம்தான் என்கிறார். இரண்டாவது நிலையில் இருப்பது ‘பிரக்ஞையற்ற தனிமனம்’ மூன்றாவது இடத்தில் ‘பிரக்ஞையற்ற கூட்டு மனம்’ கூம்பு வடிவத்தின் அடிநிலையில் உறைந்திருப்பதை ‘மனித மனதின் சுயம்/தனித்துவம்’ என்கிறார். அடித்தளத்தில் உறைந்திருக்கும் மனிதனின் சுயமான/தனித்தவமான மனமானது பிரக்ஞையின் முதல் தளத்திலிருந்து செல்படுவதற்கு தடையாக இயங்கிக்கொண்டிருப்பது இடையிலுள்ள ‘பிரக்ஞையற்ற தனிமனமும்’ பிரக்ஞையற்ற கூட்டு மனமுமாகும் என்கிறார்.
இதனை எமது அனுபவங்களூடாக தெளிவாகவே புரிந்துகொள்ளமுடியும். நாம் எவ்வகையில் பிரக்ஞையற்ற தனிமனமாக/தனிநபர்களாக இயங்கி வருகின்றோமெனில் புறநிலையிலிருந்து நாம் உள்வாங்கும் அனைத்தும் எமது தனித்துவமற்ற ஏதோ ஒன்றைச் சார்ந்ததாகவே இருக்கிறது (கருத்தியில், சித்தாந்தம், கோட்பாடுகள், செய்திகள், காட்சிகள்….). இதில் எமது சுயம்/தனித்துவம் எவ்வாறு செயல்படுகிறதென்பதை நிதானிக்க வேண்டியுள்ளது. மூன்றாவதான ‘பிரக்ஞையற்ற கூட்டுமனம் என்பதற்கு யாதார்த்தனின் ‘நகுலாத்தை’ யில் தாமரை எனும் கதாபாத்திரத்தின் அகக் குரல் ஒன்றையே உதாரணமாக கூறலாம்: தாமரை எனும் இளம் பெண்கதாபாத்திரம் யுத்தத்தின் கட்டாய இணைப்பின் பிடியிலிருந்து தப்பி ஓடி ஒழிந்தபோதும், தனது தம்பியான அட்சயனை மீட்பதன் பொருட்டு இயக்கத்தில் இணைகிறாள். பின்பு அவளே ஒரு பிள்ளை பிடிகாரியாகும் சூழ்நிலை. பிடிபட்ட பிள்ளைகளின் பெற்றோர்கள் அழுது குழறி தமது பிள்ளைகளை விட்டுவிட தாமரையிடம் வேண்டி நிற்கிறார்கள். அத்தருணத்தில் தனது மகளுக்காக, இந்தப் பெற்றோர்களைப்போன்றே அழுது புலம்பிய தாமரையின் தகப்பனான சண்முகம் அக்காட்சியைக்கண்டு திகைத்து நிற்கும்போது: “இது அமைப்பப்பா இஞ்ச கட்டளையும் கீழ்படிவும்தான். தாறதச் செய்யுறம்”. என தாமரையின் அகக் குரல் ஒலித்தது. இது தாமரையின் சுயம் அல்ல, தனித்துவம் அல்ல. பிரக்ஞையற்ற கூட்டுமனமே தாமரையை இயக்குகிறது. நிர்ப்பந்தம் கட்டுப்பாட்டிற்கு உள்வாங்கப்பட்டிருப்பினும் அதனை பிரக்ஞையற்ற கூட்டு மனச் செயல்பாடாகவே கருதலாம். இவ்வாறே சுய-பிரக்ஞையற்ற கூட்டுமனம் எவ்வாறு செயலாற்றுகிறதென்பதற்கும் ‘நகுலாத்தை’ நாவலின் அழகியல் சித்தரிப்பு மொழி எனக்கொரு தரிசனத்தை தந்தது: இலங்கை இராணுவத்தினால் கைது செய்யப்பட்டவர்கள், இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் பலர். இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்பவர்களின் பெற்றோர், உறவினர் தங்கள் சொந்தங்களின் விபரங்களை அரசிடம் கேட்டு தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்களை செய்து வருகின்றனர். இலங்கை இராணுவத்தின் மீதும், இலங்கை அரசாங்கத்தின் மீதும் பெற்றோர், உறவினர் தமது கண்டனங்களையும் தமக்கான நீதி நியாயம் வேண்டியும் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கிறார்கள். தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்திற்காக பலவந்தமாக பிடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனவர்கள் கொல்லப்பட்டவர்களின் பெற்றோர்களோ, பிடித்துச்சென்ற ‘அதிகாரத்தின்’ மீது எவ்வித எதிர்ப்போ, ஆர்ப்பாட்டமோ இன்றி தமது தனித்துவமான உணர்ச்சிகள் கோபங்கள் எதிர்ப்புகள் யாவும் ஒடுங்கிய நிலையில் ‘துயிலும் இல்லங்ளுக்கு செல்வதோடும், மாவீர்ர் குடும்பம் எனும் அவர்கள்மேல் ஏற்றப்பட்ட சுமையோடும் தமது சுயம் ஒடுங்கி தணிந்து போயுள்ளனர். அவர்கள் தமது அதிருப்தியினை சம்பந்தப்பட்ட ‘அதிகாரத்தின் மீது’ எவ்வகையிலும் வெளியிடமுடியாத பிரக்ஞையற்ற கூட்டுப் பிரக்ஞைகளாக்கப் பட்டிருக்கிறார்கள்.. இதனை உள்வாங்கினாலே போதுமானது. எமது பிரக்ஞையற்ற கூட்டு மனதை வெவ்வேறு விடயங்களோடும் இணைத்துப் பார்ப்பதற்கு.
பிரக்ஞையின் தளமான மனித மனதின் சுயத்தை/தனித்துவத்தை சிந்தனையாளர்கள் தத்துவவாதிகளே தம்வசப்படுத்தி இயங்கி வருபவர்கள். பெரும்பான்மையான நாம் பிரக்ஞையற்ற தனிமனமாகவும், கூட்டுமனமாகவும் இயங்குபவர்கள். பிறிதொன்றின் பிரதிகளாகவும் அதன் வசப்பட்டவர்களாகவும் எமது சுயத்தை/தனித்துவத்தை இழந்தே சிந்திக்கின்றோம். செயலாற்றுகின்றோம்.
பிரக்ஞையின் தளமான மனதை தமது சுயத்தோடும்/தனித்துவத்தோடும் சிந்தித்து இயங்கும் இரண்டு சிந்தனையாளர்கள்/ தத்துவவாதிகள், ஒரு ஜதார்த்தத்தை இருவரும் ஒரே தன்மையில் பார்க்க மாட்டார்கள் என்பதுதான் அதிசயம். சாதியம் எனும் ஜதார்த்தத்தை அம்பேத்கரும், காந்தியும் ஒரே வகையில் எதிர்கொண்டவர்கள் அல்ல. புறநிலையான சமூக பிரக்ஞையூடாக அவர்களுக்கு கிடைத்த அனுபவங்களும், அவைகளை உள்வாங்கிய அவர்களது மனமும் வெவ்வேறான சமூக பின்புலம் கொண்டவை. அதேபோன்றே பெரியாருக்கும், அயோத்திதாசருக்கும் சமூக கதையாடலின் ஜதார்த்தப் பிரக்ஞையை வெவ்வேறாகப் பார்க்கத் தூண்டியுள்ளது. அதற்கான அடிப்படை என்பது அவர்களது தனித்துவம்.
தனித்துவமற்ற பிரக்ஞையற்ற தனிமனமும், கூட்டுமனமும் கொண்ட நாமோ ஒன்றில் அம்பேத்கரை பிரதிபண்ணி காந்தியை எதிர்ப்பதும், காந்தியை பிரதிபண்ணி அம்பேத்கரை எதிர்ப்பவர்களாகவும் தொடருகின்றோம். இதேபோன்றே பெரியார் அயோத்திதாசர் மீதான அவதானிப்பும் நிலவுகின்றது.
கிரேக்க சிந்தனையாளரான சாக்ரடீஸின் செய்கை ஒரு பிரசவப் பணிப்பெண்ணைப்போன்றதென அவரது தாயார் கூறுவதாக யொஸ்டைன் கார்டரின் ‘சோஃபியின் உலகம்’ எனும் நாவலில் வருகிறது. சரியான நுண்ணறிவைப் பெற்றெடுக்க மக்களுக்கு உதவுவதே தனது பணி என சாக்ரடீஸ் கருதினார். ஏனென்றால் உண்மையான தனித்துவமான புரிதல் அவரவர்களுக்குள் இருந்து வருவதாக இருக்கவேண்டும். வேறொருவரால் அதை வழங்கமுடியாது. அம்பெத்கர், பெரியார், காந்தி போன்றவர்கள் எமக்கு பிரசவம் பார்க்கும் பணியாளர்களைப் போன்றவர்கள். துரதிருஷ்டவசமாக நாங்கள் (நாமாக) எதையும் ‘பெற்றெடுக்காமல்’ அவர்கள் ‘பெற்றெடுத்த குழந்தைகளை’ வளர்ப்பவர்களாகவே எமது சுயத்தை/தனித்துவத்தை இழந்து வருகின்றோம்.
இலக்கிய ஆற்றல் என்பதன் வாசிப்பு மனநிலையும் இவ்வாறானதே. இலக்கியப்பிரதிகள் மீதான வாசிப்பனுபவங்கள் என்பது முன் அனுமானங்களோடும், தாம் சார்ந்த விமர்சனக் கோட்பாட்டின் பின்புலத்தில் ஒரு புனைவுப் படைப்புலகத்துள் நுழைந்து நாம் நினைத்தது, எதிர்பார்த்தது கிடைத்த திருப்தியோடும், கிடைக்காததன் எதிர்மறைப் பார்வையோடும்தான் புனைவுப் பிரதிகளிலிருந்து வெளியேறுபவர்களாக இருந்து வருகின்றோம்.
00
‘நகுலாத்தை’ ஒரு கதை புத்தகம் அல்ல. இது ஒரு நாவல்தான். கதை புத்தகமானது ஒரு சில கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டே வளர்ந்து செல்வது. இதில் வாசகர்களின் தனித்துவமான விரிந்த தரிசனப்பார்வைகள் வசப்படுவதில்லை. நாவல் என்பது விரிவுத்தன்மை கொண்டது. அதன் விரிவுச் செழுமைக்கு படைப்பாளியின் மொழியால் கட்டமைக்கும் அழகியல் சித்தரிப்பே பின்தளமாக இயங்கக்கூடியது. அதற்கான கற்பனைத்திறனையும், உழைப்பையும், படைப்பாளியான யதார்த்தனிடம் என்னால் அவதானிக்க முடிகிறது.
‘நகுலாத்தையின்’ கட்டுமானமும், ஆளுமையும் பெண்களாலானது. நகுலாத்தை உட்பட ஆச்சி, யோகம், துரிதம், அன்னம்மாள், நிர்மலா, வெரோனிக்கா, தாமரை, அனு, கீதாஞ்சலி, தமயந்தி, கிளியன்ரி, என பெண் கதாபாத்திரங்களே நாவலில் கிளைத்துப் படர்ந்திருக்கிறது. இந்த பிரதான பெண்கதாபாத்திரங்களின் மீது கரிசனையும், அவர்களுக்கு அரணாகவும் நிற்கும் ஆண் கதாபாத்திரங்களாக, சின்ராசன், காங்கேசன், சண்முகம், அறுமர் தாத்தா போன்ற கதாபாத்திரங்களை அவதானிக்க முடிகிறது.
இந்த பெண்களின் கலாச்சார பண்பாட்டு வாழ்வியலின் நம்பிக்கைகள் அபிலாசைகளின் தொன்மையானது, யுத்தம் எனும் ‘நவீனத்துவத்தால்’ சிதைவுறுகிறது. இதுவே மையாமாக தோற்றம் தருகின்றபோதும் கதாபாத்திரங்களின் சமூக பண்பாட்டு கலாசார மரபுகள்; கடவுள் உருவாக்கம் என உள்விரிவுப் புனைவுகளூடாக மறைமுகமான சில உண்மைகளின் தரிசனம் கிடைக்கிறது.
சோ தர்மனின் ‘சூல்’ நாவல் எட்டையபுரத்து அரச அதிகாரத்துக்குள் வாழும் மக்களின் வாழ்வை மையமாகக்கொண்டது. அச்சமூகங்களின் இயற்கைப் பொருளாதார வாழ்வியல், பண்பாட்டுக் கலாசார விழுமியங்களான, நம்பிக்கைகள், சடங்குகள் சம்பிரதாயங்கள் என்பன, நவீனத்துவ பொருளாதாரம், மற்றும் நவீன சிந்தனைகளால் மாற்றத்துக்குள்ளாகும் நிலையை தனது புனைவாற்றலால் ‘சூல்’ நாவலில் பதிவு செய்திருக்கிறார் சோ தர்மன். ‘சூல்’ நாவலின் ஒரு சில நெருக்கத்தை ‘நகுலாத்தையிலும்’ காணலாம்.
‘சன்னாசி வைரவர்’ காக்கை வதனன் ‘நகுலாத்தை’ எனும் தெய்வங்களின் தோற்றம் என்பது, தம்மோடு வாழ்ந்த மனிதர்களே தெய்வங்களாகும் மரபு சார்ந்த தொன்மையான வரலாற்றுத் தொடர்ச்சியின் மறைமுகமான உண்மையின் தரிசனம்.
இந்த நாவலின் உள்ளடக்கத்தை: கீரிப்பிள்ளை மேடு எனும் கிராமத்தில் வாழும் மக்கள். அவர்கள் பண்பாட்டுக் கலாசார தெய்வ நம்பிக்கைகள். அப்படியான அக்கிராமத்து மக்களையும் அவர்களது வாழ்வையும் யுத்தம் எனும் புயல் வீசி சிதைத்துவிடுகிறது என சுருக்கமாக விபரித்து கடந்துவிடுது சாத்தியமா? இல்லை.
அங்கே பல்வேறு பாத்திரங்கள் கிளைத்துக்கொண்டே செல்கிறது. யாதார்த்தனின் அழகியல் சித்தரிப்பு நிரம்பிய வார்த்தைகளாலும், வாக்கியங்களாலும் கதாபாத்திரங்களின் அகம் உழுது கிளறப்படுவதை மனம் தொட்டுணர்கிது. கதாபாத்திரங்களின் தன்னிலை சார்ந்த உணர்வுகள், அபிலாசைகள், சோகங்கள் என அனைத்துவகையான அகப்பரிமாணங்களையும் வார்த்தைகளாலும் வாக்கியங்களாலும் யதார்த்தனால் உருவி எடுத்து எம்முன்னால் வைக்கும்போது, எமக்குள்ளும் அக்கதாபாத்திரங்கள் வளர்கிறது. எனவே இவைபோன்ற அழகியல் சித்தரிப்பின் ஊடாக பயணிக்கும் பாதையை வாசகர்கள் மனம் கண்டுணரும் தருணத்திலேதான் ஒரு படைப்புலகப் பிரதியானது நாவல் எனும் பிரக்ஞையை தீவிர வாசிப்பு மனங்களில் நிறைக்கிறது.
இந்த ‘நகுலாத்தை’ நாவலை யதார்த்தன் எவ்வாறு கோர்வையின்றி துண்டு துண்டாக விபரித்தாரோ அவ்வாறே நானும் குறுக்கு மறுக்காகவே உங்களோடு எனது வாசிப்பின் புரிதலையும் பகிர்ந்துகொள்ளப் போகிறேன்.
சாரங்கன் ஒரு வேட்டைக்காரன். காட்டுக்குள் அவனது சக்கடத்தான் எனும் வேட்டை நாயுடன் முயலுக்கு பொறிவைத்து பிடிக்கும் நிலையை, சூழலை எண்ணி அவன் மனம் தவிக்கிறது. அவனது தகப்பனான சின்னையா தனக்கு கற்றுக்கொடுத்த வேட்டையின் நினைவுகளானது, பொறிவைத்து முயல் பிடிக்கும் அத்தருணத்தில் அவனது அகத்திரையில் காட்சிகளாகிறது. அவனது உயிருக்கு உயிரான ‘வேட்டைத்தோழன் ‘இடியனை’ (துவக்கு) இழந்துவிட்டான். குரங்கு மடை எனும் மிருக பலிச் சடங்கை விந்தனுடன் வந்த இராசரத்தினம் நிறுத்தச் சொல்ல அதில் நிகழ்ந்த வாக்குவாதத்தில் சின்ராசன் இராசரத்தினத்திற்கு தனது இடியனை காட்டி மிரட்டியதற்காக இயக்கத்தின் பொறுப்பாளரான விந்தனால் சின்ராசனின் இடியன் பறிக்கப்படுகிது. இராசரத்தினத்துடன் கைகலப்பில் ஈடுபட்ட சண்முகமும், சின்ராசனும் இயக்கத்தால் கைது செய்த நினைவுகளெல்லாம் அப்போது அத்தருணத்தில்.
இவ்வாறான நினைவுச் சுமையுடன் நாவல் மரத்தில் ஏறி நின்று கீரிக்கும் பாம்பிற்குமான ‘போராட்டத்தை’ காண்கிறான் சின்ராசன். அதில் கீரி பாம்பு நகரமால் செய்வதற்காக போடும் நாணவட்டம். இவ்வாறான சித்தரிப்பினை கனகையாச்சி விபரிக்கும் இயக்கர் நாகர் வரலாற்றுடன் இணைத்துப்பார்க்க தூண்டுகிறது. ஆகவே கீரிப்பிள்ளை மேட்டைச் சேர்ந்த சமூகத்தின் முன்னோடிகள் இயக்கர் வம்சத்தை சேர்ந்தவர்கள் எனும் புரிதலைக் கொடுக்கிறது.
அடுத்ததாக வரும் காங்கேசன், துரிதம் உறவும், குரங்குகள் தொடர்பான சித்தரிப்பையும் பின்பு தொடரும் பாத்திரங்களூடான உரையாடல்கள் மூலமாக குரங்குமடை எனும் சடங்கிற்கான பின்புலத்தை வாசகர்கள் இணைத்துப் புரிந்துகொள்ள வைக்கிறது. கீரிப்பிள்ளை மேடு எனும் கிராமத்தின் நான்கு திசைகளுக்குமான நகுலாத்தை, காக்கை வதனன், தச்சுக்காளி, சன்னாசி வைரவர் எனும் காவல் தெய்வங்கள் உள்ளன. இந்த சன்னாசி வைரவரோடு தொடர்புடையதுதான் குரங்குமடை.
குரங்கு மடை எனும் சடங்கு தடைப்பட்டதற்காக நகுலாத்தை மீதான ஆச்சியின் கோபமானது, கிராமியத் தெய்வங்களுக்கும், மனிதர்களுக்குமான உறவின் நெருக்கத்தை நினைவுறுத்தும் மானுட வரலாற்றுப் பின்புலத்தின் ஒரு தரிசனம். தற்போதைய மத அடிப்படைக் கோட்பாட்டுக்குள் அடைபட்டிருக்கும் பெருந்தெய்வங்களுக்கும் மக்களுக்குமான உறவு என்ன? இப்பெருந்தெய்வங்களை அதனை வணங்கும் மக்கள் அனைவரையும் உள்வாங்கும் ஒரு குறியீடாக காணமுடியாது. மொழியிலும் நெருக்கத்திலும் மக்களுக்கிடையிலான பல்வேறு படிநிலை வேற்றமைகளை தொடர்ந்தும் நிலைநிறுத்தப் பெரிகிவரும் வணிகத் தெய்வங்கள் இவை.
அறுமர் தாத்தாவுக்கும் மகள் கிளி அன்ரிக்குமான உறவு. அறுமர் தாத்தாவின் மாவோயிச பின்புலம்.
தாமரையின் தங்கை அனு ‘நோபிளீஸ்’ என்பவரின் தலையில் போத்தல் உடைத்துச் செய்யும் சாகசத்தையும் திருவிழாவில் காணுதல். அதன் தகவல் தொடர்ச்சியானது காட்சிகளாக விரியும் தரிசனத்தை யதார்த்தனின் அழகியல் சித்தரிப்பு மொழியானது வாசகர் மனதில் ஒளிரச் செய்யும்.
உடல்கள் மறைத்து அடைத்து வைத்த ‘மர்மங்களை’ கடந்து செல்லும் தமயந்தியும் சாரங்கனும்.
வல்லியின் காதலி வதனி மீது அவன் நண்பன் கண்ணனுக்குள் ததும்பும் காமம். குழுமாடு பிடிப்பதன் பின்னணியும், காவுக்கட்டை வெட்டச் செல்வதன் சித்தரிப்பை, சொற்களாலும் காட்டை வளர்க்கலாம் எனும் ஓர் உத்தி எனச் சொல்வதா?
தாமரைக்கும் வெரோனிக்காவிற்குமான உறவை காண்பதிலுள்ள காணாததை காண்பது.
‘நகுலாத்தையை’ வாசித்த சிலரிடம் தாமரைக்கும். வெரோனிக்காவிற்கும் இடையிலான உறவையும் அவர்களது உயிரியல் அந்தரங்கத்தையும் விபரித்தபோது அவர்கள் அதை அவதானிக்க தவறிவிட்டார்கள். ஏன் அவர்களை இரு பெண்களுக்கிடையிலான இயல்பான ஒரு நட்பாக கருதமுடியாதா என்றனர். அவர்களின் வாசிப்பின் வேகமே அதனை கண்டுகொள்ளாமல் மறைத்துவிட்டது. யாதார்த்தன் தனது படைப்பாற்றலூடக வாசகர்களின் தனித்துவ அடையாளங்களைக் கண்டடையும் ஒரு பயிற்சிக்களமாகவே நகுலாத்தையின் அழகியல் சித்திரிப்புக்களை வடிவமைத்திருக்கிறார். கதாபாத்திரங்களின் அகக் கொந்தளிப்புக்களை பெரும்பாலும் தனது அழகியல் சித்தரிப்பு மொழிக்குள் புதைத்து மூடிவிட்டு நகரும் உத்தியையே தொடர்ந்து மேற்கொள்கின்றார், மனிதனின் கண்டடையும் சாதுரியம் என்பது ‘காண்பதிலுள்ள காணாததை காண்பதே’ இவ்வாறே காண்பதிலுள்ள யதார்த்தனின் மொழி நடையில் நாம் காணததைக் கண்டுகொள்வதற்கு ஏராளம் உள்ளது. தாமரைக்கும் வெரோனிக்காவிற்கும் இடையிலான உறவென்பது ‘லெஸ்பியன்’ உறவுதான் என்பதை யதார்த்தனின் இவ்வாறான சித்தரிப்பினூடாக காணாததை கண்டுகொள்ள முடிகிறது: “அணிந்திருந்த நீலச்சட்டையை தெறி விலக்கி கழற்றினாள், பாம்புரித்ததைப் போல கட்டிலில் இருந்து வீழ்ந்து சுருண்டு கிடந்தது. தசைகள் இன்னும் இறுகியது, மூச்சுப் பெரிதாக அதேநேரம் நிதானமாக எழுந்து அடங்கியது. கைகளை பரவவிட்டாள். எதிரெதிர் திசைகளில் அவை அலையத்தொடங்கின. கண்களை இறுக்கி மூடினாள். வெரோனியை வரவழைத்தாள். உடல் மயிர்க்கூச்செறித்தது. ஒவ்வொரு மயிர்க்கால்களின் அடிகளிலும் பருத்தோன்றிச் சிலிர்த்தது. இப்போது அலைபவை வெரோனியின் கைகள்…” எனும் சித்தரிப்பினூடாக அவர்களுக்கிடையிலான உறவின் நெருக்கம் எம்மை இலகுவாக வந்தடைகிறது.
பலவந்தமாக பிடிக்கப்பட்டவர்கள் அனைவரும் இயக்கத்தை விட்டு தப்பியோடுகிறார்கள். அதற்கான கடும் முயற்சிகளையும் மேற்கொள்கின்றனர். தனது தாயின் காதலனான புலனாய்வுத்துறை புலந்திரனின் ‘செல்வாக்கில்’ வெரோனிக்காவை இலகுவாக வெளியில் எடுத்துவிடும் வாய்ப்பை எதற்காக வெரோனி மறுக்கிறாள்? எவ்வகையிலும் தனக்கும் தாமரைக்குமான உறவை, ‘எல்லா வகைக்கும் தயாராகிவடாத இந்த உலகம்’ எப்படி ஏற்றக்கொள்ளும் நான் உயிரோடு இருப்பதற்கு. எனும் வெரோனியின் அகக் குரலே அவள் இயக்கத்தைவிட்டு வெளியேறும் தடைக்குக் காரணமாக எனக்குள் ஒலித்தது.
இதேபோன்று மனைவி துரிதம் வழங்காத ‘சாகசத்தை’; தனது கள்ளக் காதலி சைலஜாவினூடாக காங்கேசன் கண்டு ‘நீந்தி-மூழ்கித்’ திளைக்கும் காட்சியை யதார்த்தன் தனது ‘வாக்கியத் ‘திரைகளூடாக’ எம்முன் காட்சிப்படுத்துவதை நம் ‘மனக்கண்கள்’ காண்பதை உணரமுடியும்.
இலட்சியவாத கோட்பாட்டின் மீதான ஒரு விமர்சனப்பாத்திரமாகவே அறுமர் தாத்தா எனும் கதாபத்திரத்தை எனது ‘சுயம்’ உள்வாங்கிக்கொண்டது. இப்பாத்திரத்தின் ‘சித்தத்தில்’ அனைத்து சுதந்திரமும், சமத்துவமும் கொண்ட நிறைவான நித்திய சமூக உலகொன்றை கட்டி முடித்தாகிவிட்டது. அங்கு சென்று குடியேறுவது மட்டுமே எமது கடமை. அதற்கு: “தட்டுங்கள் திறக்காது கேளுங்கள் கிடைக்காது போராட வேண்டுமென்றார் மாவோ போராட வேண்டுமென்றார்” என பாடித்திரிபவர் அறுமர் தாத்தா. இனவாதம் என்பது பொருளாதாரத்துடனும் மதத்தோடும் தொடர்புடையது. பொருளாதார சமத்துவத்திற்காக போராடியே மாவோ கட்டிய ‘அந்த மாளிகையை’ நாம் சென்றடைய முடியும். சும்மா ஆமியையும், மக்களையும் சுட்டுத்திரிவதில் எவ்வித பயனுமில்லை. எனும் இலட்சியவாதக்கனவுடனான பாத்திரம் அறுமர் தாத்தா.
பிரான்சில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் அறுமர் தாத்தா போன்ற இலட்சியவாத தோழர் ஒருவர் புலிகளின் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் மீதும், அவர்கள் வழங்கிவரும் துரோகிகளுக்கான மரண தண்டனைகள் தொடர்பாக கடும் விமர்சனத்தை முன்வைத்து உரையாற்றினார். நான் எழுந்து உங்கள் புரட்சிப் போராட்டத்திலும் எதிர்ப்புரட்சியாளர்கள் என ஒரு வகையினரை இனம் காண்பீர்கள்தானே, அவர்களை நீங்கள் எவ்வாறு எதிர்கொள்வீர்கள் எனக்கேட்டேன். “அவர்களை நாங்கள் சுடுவோம். நாங்கள் சுடுவது வேற, புலிகள் சுடுவது வேற” என பதிலுரைத்தார். நான் எனது ‘சொல்லை மௌனமாக்கி’ அவரிடம் ஒப்படைத்து எனது ‘யுத்தத்தை’ நிறுத்திக்கொண்டேன். இவ்வாறான இலட்சியவாதிகள் அதிகமானோர் தமது அந்திம காலத்தில் மனப் பிறழ்வுக்குள்ளானதாக அறியமுடிகிறது. ஜெயமோகனின் ‘பின்தொடரும் நிழல்’ நாவலிலும் அவ்வாறான பாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டிருப்பதையும் அவதானிக்க முடிந்தது.
கீரிப்பிளை மேட்டுக் கிராமத்து மக்களைப்போன்ற இலட்சியக் கனவில் மிதக்காத மக்கள் உருளும் காலச் சக்கரத்தில் தமது வாழ்வு சிக்கி சிதைந்து விடாது மிக இலகுவாக நகர்ந்து செல்பவர்கள். எதிர்கொள்ளும் அமானுஷமான சம்பவங்களை ஏதோவொரு நம்பிக்கைகளை முன்வைத்து (சொத்திமுனி அடித்துவிட்டது, நகுலாத்தையின் கோபம், சன்னாசிவைரவரின் கோபம் என) கடந்து, காலத்தை இலகுவாக உருட்டிக் கடந்து செல்பவர்கள்.
இவ்வாறு தமது தெய்வங்களோடும் பண்பாண்டுக் கலாசாரத் திருவிழாக் கொண்டாட்டங்களோடும் வாழ்ந்த சமூகம் கீரிப்பிள்ளை மேட்டுச் சமூகம். இருதரப்பினது யுத்தமெனும் நவீனத்துவம் நுழைந்து இவர்களை பதுங்கு குழிக்குள் போட்டுப் புதைத்து விட்ட வரலாற்றின்; சில உண்மைகளை மறைமுகமாக சொல்கிறது ‘நகுலாத்தை’.
இறுதியில் நந்திக்கடல் சாரங்கனை உள்வாங்குவதும், அவன் காணும் நாய்களின் பெருக்கம். இது எனக்குள் தீர்மானிக்க கடினமான குறியீட்டுப் படிமமாக இருந்தது.
அம்மான் கண் எனும் தொன்மையான மரபுக்கதை. இதனை இரண்டு வகையாக பொருத்திப்பார்த்தேன். மிருக பலிச் சடங்கு மரபானது ‘நகுலாத்தையின்’ ஆரம்பச் சித்தரிப்பின் காலமாக இருப்பதால், ‘அம்மான் கண்’ கதை என்பது வன்னிப் பிரதேசத்தின் நீரும் நிலமும் சார்ந்த தொன்மையான மரபுக் கதை. எனவே அப்பகுதியை ‘நகுலாத்தையின்’ ஆரம்பத்துடன் பொருத்திப்பார்ப்பதா? இல்லை தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் என்பதை குழியில் போட்டு மூடியதான ஒரு படிமக் குறியீடாக அதனைக் கருதுவதா?
நான் அதனை இரண்டு விதமாகவும் உள்வாங்கி மகிழ்ந்தேன். உங்கள் வாசிப்பிற்கும் ஒரு கண்டடைதல் சாத்திமே. அதனை உங்கள் சுயம்/தனித்துவம் சார்ந்து கண்டடையலாம்.
அசுரா நாதன்
தலித்தியச் செயற்பாடுகளில் இயங்கி வருபவர். தனிமனித அனுபவத்தைக் கடந்து இலக்கியம், வரலாறு வழியாக சமூக முரணியக்கத்தை பேருணர்வுடன் புரிந்துகொள்ள முற்படுபவர். பிரான்ஸ் தலித் சமூக மேம்பாட்டு முன்னனியின் பிரதான செயற்பாட்டாளர்களில் ஒருவர்.