/

காத்தியாம்பூச்சி: நீலாவணை இந்திரா

பெரியதம்பிரானைக் குறித்து மூத்தார் சொல்லும் கதைகளையெல்லாம் பூச்சி ஆவென்று கேட்டுக்கொண்டிருப்பாள்!

முன்னொரு காலத்தில் இந்தியாவில் இருந்து ஈழத்துக்குப் படையெடுத்து வந்த தென்னவன் பாண்டிய மன்னன்; ஈழத்தின் வலவை நகரை ஆக்கிரமித்து பன்னிராயிரம் வீரர்களைச் சிறைப்பிடித்து அடிமைகளாக்கி, தென்னகத்திற்கு கொண்டு செல்லவே, அதில் தன்னுடைய மகனும் போனதை எண்ணி வாடித் துயருற்ற தாயொருத்தி , அரசர் பெரியதம்பிரானை அபயம் என்று வேண்டி தன் மகனை மீட்டுத்தரக் கோரினாளாம். தம்பிரானாரும் தன் தண்டாயுதம், வில், அம்பு, வல்லாரி, கட்டியம் யாவும் கொண்டு, படைத்தளபதி நீலாசோதயனுடன் கப்பலேறி தென்னகம் சென்று அங்கு பாண்டியனின் அரச சபையில் தன் வீர தீர பாராக்கிரமங்களைக் காட்டவே அவனும் தம்பிரானின் வீரத்திற்கு அடிபணிந்து போயினானாம். அப்படியாப்பட்ட தம்பிரானார், தன் நாட்டின் பன்னிராயிரம் வீரர்களையும் மீட்டு, மேலும் பன்னிராயிரம் வீரர்களையும் சிறைப்பிடித்து ஈழம் திரும்பினாராம். அவர்தான் நம்மட குலசாமி என்றும், அவருடைய பூடமே, ஊரின் மத்தியில் உள்ள ஆலமரத்தடியில் இருக்குதென்றும், வருஷத்துக்கு ஒரு  தடவை, சன்னாரிப் பூசாரி எறிகிற நோர்ப்புச் சோறுக்காய் பேயாகிப் போன பன்னிராயிரம் வீரர்களும், பரிகலங்களும் ஆலமரத்தைச் சுற்றி பசியோடு காத்திருப்பதாகவும் மூத்தார் சொல்லும் கதைகளை வியப்புடன் கேட்டுக் கொண்டிருக்கும் பூச்சி, நடுமத்தியானத்தில் ஆலமரத்தடியில் நொண்டிக்கால் விளையாடுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தாள்.

மூத்தார் சொல்லும் கதைகளில் வருகிற பெரிய தம்பிரானாரையும், நீலாசோதயனையும் தெய்வங்களாக கும்பிடும் காத்தியாம் பூச்சி, நொண்டிக்கால் ஆடும் போது சூத்தாமட்டியில் ஆலமரக் குச்சியால் அடித்து விரட்டுகிற  சன்னாரிப் பூசாரியை கோவிலடியில் கண்டிருக்கிறாளே தவிர பன்னிராயிரம் பேய்கள் ஆலமரத்தைச் சுற்றி ஆவென்று பசியோடு இருக்கிறது. சின்னப்பிள்ளைகளில் அது ஏறிக் கொள்ளும் என்று மூத்தார் விடுகிற டூப்சுகளை அவள் நம்புவதில்லை. மாறாக கோவிலடியில் என்னேரமும் படுத்துக் கிடக்குற சன்னாரிப் பூசாரியின் மீதே அந்தப் பன்னிராயிரம் பேய்களும் இருப்பதாக அவள் நக்கல் விடுவதும் உண்டு.

தாயில்லாத பிள்ளையாக வளருகின்ற காத்தியாம்பூச்சியை அம்மப்பாவான மூத்தாரே வளர்த்து வந்தார். சம்பிப் போன ஒரு பாவாடையையும், ஒட்டுப் போட்ட ஒரு ரவிக்கையையும் போட்டுக் கொண்டு, எண்ணையின்றி இழுக்காத பரட்டைத் தலையுடன், செருப்பணியாத கால்களுடன் கொழுக்கட்டை போல உருண்டு திரிந்தாலும், கிடுகு வேலிக்கு மேலால் கிளம்புகிற பேட்டை, ஒரே தாவலில் பிடித்துவிடுகிற சாகசக்காரிதான் பூச்சி. அவளின் கால் படாத வளவென்று ஒன்று ஊரில் கிடையாது. ஆச்சிக் கிழவியின் காணிக்குள் புகுந்து பனங்காய் பொறுக்குவது,  கழுத்துவரை நீருள்ள கேணியில் இறங்கி நீச்சலடிப்பது, காலைக் கிழங்கை எலியைப் போலத் தோண்டியெடுத்து சுட்டுத் தின்பது, தோணாவிலுள்ள நாணற் புற்களுக்குள் ஓடித்திரியும் கூவாக் கோழிகளை சுருக்கு வைத்துப் பிடிப்பது, அதன் கூட்டைக் கலைத்து முட்டையெடுப்பது, மூத்தார் உடுப்புக்குப் போட வைத்திருக்கும் மீந்த கஞ்சிப்பானையை தோணாக் குளத்துக்குள் இறக்கி செப்பலிமீன் முதல் கெளுத்திமீன் வரை பிடிப்பது என ஊருக்குள் எல்லாவிதமான அழிச்சாட்டியம் களையும் நிரம்பிய குழந்தைத் தனத்துடனம் , மிடுக்குடனும் அரங்கேற்றியபடியிருந்தாள்.

எல்லாவிதமான அட்டூழியங்களை அவள் செய்து திரிகிற போதிலும் மூத்தாரோ, ஊரவரோ ஒரு குறை சொல்வது கிடையாது. வண்டில் மாடும் தோற்றுப் போகுமளவு வேலை செய்வாள். மூத்தாரின் வேலைகளென்று இல்லை ஊரில் யாரின் ஏவலுக்கும் ஆட்டுவிக்கப்படும் ஒரு கைப்பாவையாகவே அவளிருப்பாள். பதிலீடாக அவர்களிடமிருந்து எதையும் அவள் எதிர்பார்ப்பதும் கிடையாது. யாராவது எடுபிடி வேலை வாங்கிவிட்டு ஒரு புளியம்பழ முட்டாசு வாங்கிக் கொடுத்தாலோ, இந்தா ஐஞ்சு சதம் வச்சிக்கேர் கடலைக் கொட்டை வாங்கித் தின்னு என்று அவள் உள்ளங்கையில் திணித்தாலோ ஆலாப் பறவையாட்டம் கூ… கூ… என்றபடி கோவிலடி ஆலமரத்தைச் சுற்றி வட்டமடித்துப் பறப்பாள் பூச்சி. ஆலாப்பறவையின் நோக்கு அவள் கண்களுக்கிருந்தாலும் மலர் விட்டு மலர் தாவுகிற பட்டாம்பூச்சியின் படபடப்பே ஊர்ப்பாசையில் அவளை காத்தியாம்பூச்சி என்கிற பூச்சியாக்கிவிட்டது.

பூச்சியின் பெரும் ஆசையெல்லாம் டவுனிலுள்ள தாசுமஹால் தியேட்டரில் எம்சியாரு படமொன்றை பார்த்துவிட வேண்டுமென்பதுதான். எம்சியாரு கலராயிருப்பாரென்றும் அவருடைய கலருல ஒரு ஆளு கூட ஊரில் இல்லையென்றும் படம் பார்த்தவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறாள். எம்சியாரை ஒரு தடவையாவது தியேட்டரின் பஞ்சுக் கதிரையில் குந்தியிருந்து ராணியாட்டம் காணவேண்டும் என்கிற நினைப்பு அவளின் உள்ளாக சிறகடித்துக் கொண்டிருந்தது. அதற்கு இன்னுமொரு காரணமும் உண்டு. அவளுடன் நொண்டிக்கால் ஆடுகிற சின்னான் அவளை விடப் பெரியவன். அவன் அடிக்கடி காரேறிச் சென்று படம் பார்த்துவிட்டு வருவான். தேவர் பிலிம்ஸ் படங்களில் சிங்கம், புலியெல்லாம் வரும். எம்சியாரு அதோடு பாய்ந்து பாய்ந்து சண்டை போடுவார் எனத் தொடங்கி படத்தில் வருகிற பாடல்களையெல்லாம் கரகரவென்று தொண்டையைக் கனைத்தபடி பாடிக் காட்டுவான். அதுமட்டுமில்லாது பாட்டில் எம்சியாரு இப்படித்தான் ஆடுவாரென வானத்துக்கும் பூமிக்குமாக கைகளை விரித்து ஒரு இராட்சதப் பறவை போல அவன் ஆடும் நடனத்தில் ஒரு நெளிவு சுழிவும் ஒளிந்து கொண்டிருக்க  கண்டிருக்கிறாள்.  டவுனுக்கு செல்வதென்பதும் காரேறிச் சென்று படம் பார்ப்பதென்பதும் அவளைப் பொறுத்தமட்டில் இமாலயக் கனவாகவே இருக்கும்.

எது எப்படியாக இருப்பினும் எம்சியாரு படமொன்றை காணவேண்டுமென்பது அவளுக்குள் கனன்று கொண்டேயிருந்த அசைத் தீயாக இருந்தது. மூன்று ரூபாய் கொடுத்தால் வீட்டிற்கு முன்பு ஆமைக்கார் வரும். அம்பாசிடர் காரின் ஆரம்ப மொடல் அப்படியே ஆமையைப் போலே இருப்பதால் அதனை ஊரிலுள்ள எல்லோரும் ஆமைக்காரென்றே அழைப்பார்கள்.  அந்த ஆமைக்காரில் ஏறிக் குந்திக் கொண்டால் புவனா தியேட்டர், அரசன் தியேட்டர் இதெல்லாம் கழிய வருகிற பெரிய தியேட்டரே தாசுமஹால் தியேட்டர். அங்கு பஞ்சுக்கதிரையில் இருந்து பார்ப்பதென்றால் சும்மா இல்லை. ஐம்பந்தைஞ்சு சதம் கலரிக்கு, ஒரு ரூபா கதிரைக்கு, ஒன்றரை ரூபா கொடுத்தாலே சிகப்பு உறை போட்ட பஞ்சுக் கதிரை கிடைக்கும். அதிலிருந்து பார்த்தால் தூரத்தில் இருக்கிற வெள்ளைச்சீலையில் எம்சியாரு தெரிவார். ஆப்பரேட்டர் ரூமில் இருந்து வருகிற ஒளி, வெள்ளைச்சீலையில் பட்டவுடன் எம்சியார் பாய்ந்து வந்து அசோகனுடனோ, நம்பியாருடனோ சண்டை போடுவார். அப்படியே பாட்டும் பாடுவார். இண்டர்வெல்லில் கடலைக் கொட்டை ஐஞ்சு சத்ததுக்கு கிடைக்கும். இறைச்சி ரொட்டியும் ப்ளேண்டியும் முப்பது சதம், ஐம்பது சதம் இருந்தால் ஒரு ஆள் ஏகபோகமாகத் தின்னலாம். படம் முடிந்த பின்னர் காரைக் கிளப்பிக்கொண்டு ஹாஜியாரின் கடைக்கு வந்தால் முட்டை, பொரித்த கோழியோடு புரியாணியும் தின்னலாம். இப்படியாக சின்னான் படத்தை பற்றி மட்டுமில்லாமல் படம் பார்க்க போகும் கதையையும் நீட்டி முழக்கி நெடுநேரம் சொல்லுவான். அந்த புரியாணியைத் திண்டு பார்க்கவும் பூச்சிக்கு ஆசை மேலிடும். ஆனால் மூத்தார் அதெற்கெல்லாம் விடுவதேயில்லை.

போன தடவை கோவில் சடங்கில் பூசை முடித்துக் கொண்டிருந்த சன்னாரிப் பூசாரி திடீரென்று பெரிய தெய்வத்தின் உருக்கொண்டு ஆடிக்களித்து, பின்னர் சந்நதம் வந்து பேயாட்டம் ஆடிச் சொன்ன தெய்வவாக்கில் ‘தலைக்குடும்பத்தில் ஒரு உயிர் போகும்’ என்பதே மூத்தாரின் மனத்தில் மின்னல் போல் வெட்டிக்கொண்டிருந்ததும் அவளைக் கழுகுக் கண் கொண்டு காணவும் காரணமாயிருந்தது. அவருக்கிருக்கும் ஒரே ஒட்டுறவு பூச்சி மட்டுந்தான். வெகுளியாகத் திரியும் பூச்சியின் நடவடிக்கைகள் அவ்வப்போது மூத்தாரை பயம் கொள்ளச் செய்வதும் உண்டு. சிறு பிள்ளையாக இருக்கும் போதே அவளுக்கு தத்து இருப்பதாகவும் நீரோடு போவாள் என்றும் சன்னாரிப் பூசாரி சொல்லியதிலிருந்தே அவளை நீர் நிலைகளுக்கோ, கிணத்தடிக்கோ மூத்தார் அழைத்துச் செல்வதில்லை. குளிப்பதற்கு கூட சிறு தொட்டியொன்றிலே நீர் வார்த்து வைக்கும் வழக்கம் அவருக்கிருந்தது. ஆனால் பூச்சியோ கேணிக்குள் இறங்கி தலைகீழாக சுழியோட்டம் ஓடுகிற பெட்டையாயிருந்தாள். எத்தனை தடவை சொல்லியும் அவள் அதனைச் சட்டை செய்வதே கிடையாது. கடல் , தோணா, கேணி என்று நீரோடு அவள் களித்திருப்பதை பார்க்கவே மூத்தாருக்கு தலைகால் புரியாமல் கோபம் முட்டிக் கொண்டு வரும். இருந்தாலும் அவளது நீச்சலில் அவருக்கிருக்கும் நம்பிக்கை கூட சந்நதம் வந்து வெறி கொண்டாடிய பூசாரியின் வாக்கில் முழ்கிப் போனது.

அதில் அவருக்கிருக்கும் நம்பிக்கைக்கு அசைக்க முடியாத காரணம் பூச்சியின் அம்மா கடலோடு போன கதைதான். மூத்தாரின் கடைசிப் பெட்டைதான் பூச்சியின் அம்மா. அவள் கடலோடு போனதில் இருந்து அவருக்கு வாழ்க்கை வெறுத்துவிட்டது. பெற்ற மகன்களும் வெளிதேசம் போய்விட, மனைவியையும் மகளையும் இழந்து நின்ற மூத்தார் பாதி உடைந்து போயிருந்தார். பூச்சியின் தகப்பன் வேறொருத்தியுடன் கொண்ட தொடர்பே அவளது அம்மா கடலோடு போகக் காரணமாயும் அமைந்தது. தனித்துவிடப்பட்ட பூச்சியும், மூத்தாரும் ஒருவருக்கொருவர் ஆதரவாய் இருக்க மூத்தாரின் இன்னொரு மகளாகவும் இன்னொரு தாயாகவும் பூச்சியிருந்தாள். பூச்சியின் அம்மா கடலோடு போன போதும் சன்னாரிப் பூசாரி இதே போல தான் வெறி கொண்டு ஆடியிருந்தார். அதற்குப் பிறகு அதே போலதொரு வெறியாட்டத்தை போன சடங்கிலே மூத்தார் கண்டார். இதுவெல்லாம் மூத்தாரின் பழைய நினைப்புகளைச் சுரண்டியெடுத்ததிலிருந்து மூத்தார் அவளைக் கைக்குள்ளே பெட்டைக்கோழி போல அடைகாத்து வைத்திருந்தார்.

இந்த நேரத்தில் தான் பள்ளிக்கூடத்தில் இருந்து பாதியில் அவள் திரும்பியிருந்தாள். நேற்றுக் கமத்திப் போட்ட புடவைகளை வெள்ளாவியில் வளைவதற்காக தயார் படுத்திக் கொண்டிருந்த மூத்தார் வெள்ளைச் சாரன்களை ஒரு பிடியில் எடுத்துக் கோப்பாத்திப் பிடித்தபடி  இருக்க, பூச்சியோ வயித்தைப் பொத்திக் கொண்டு வந்திருந்தாள். கூடவே வந்திருந்த பெண் ஆசிரியை ஒருத்தி; பூச்சி பெரிய மனுஷி ஆகிட்டா பார்த்துக்கோங்க….. என்று சொல்ல மூத்தாருக்கு பரபரப்பும் சந்தோஷமும் தொற்றிக் கொண்டாலும், அவளை வைத்துப் பார்க்க ஒரு மூத்த பெண் கூட வீட்டில் இல்லையே என்று வருந்திக் கொண்டிருந்தார். இருந்தாலும் அயலட்டையிலுள்ள பெண்கள் சேதி அறிந்ததும் பூச்சியை தன்மகள் போலவே எண்ணி அனைவரும் ஓடோடி வந்தனர். அவளை அன்று மாலையே முழுகாட்டினார். வேப்பெண்ணை, நல்லெண்ணை , நாட்டு முட்டை , உழுந்துமா என்று அக்கம்பக்கத்திலிருந்த எல்லோரும் கொண்டு வந்தனர். பத்தியச் சாப்பாடு தயாராகும் படலம் ஒரு பக்கமிருக்க பெரிய தண்ணி வார்க்கும் சடங்குக்காகவும் மூத்தார் பறந்துகொண்டிருந்தார்.

பெண்களோ பூச்சிக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பத்தியச் சாப்பாடாகக் கொடுத்துக் கொண்டிருந்தனர். வயிற்றுப்புண் ஆற வேண்டும் என்று கிழவியொருத்தி வேப்பெண்ணையை அப்படியே விழுங்கக் கொடுக்க பூச்சியோ அதை ஓங்காளமிட்டு உமிழ்ந்தாள். கொடுக்கப்படும் எல்லா சாப்பாட்டிலும் உப்பை காணவேயில்லை. அவளுக்கு நாக்கு செத்துவிடுமாப்போல இருந்தது. போதாக்குறைக்கு நல்லெண்ணையில் பொரித்த நாட்டுக் கோழி முட்டையைக் கொடுத்து விட்டு, சில முட்டைகளைப் பச்சையாகத் தின்னும் படியும் அவளை வற்புறுத்திக் கொண்டிருந்தனர். அவளோ எல்லாவற்றையும் ஓங்களித்துத் துப்பினாள். கிழவி மீண்டும் மீண்டும் பழைய நைந்து போன தூஷணங்களால் பூச்சியை பேச, அவளோ அழத் தொடங்கிவிட்டாள். மூத்தாரோ அவளின் அவஸ்தைகளை கண்ணுற்றுக் கண்டு கடவாய்ப்பல்லுக்குள் சிரித்துக் கொண்டிருந்தாலும் அவருக்கு அவள் சாப்பிடாமலே இருக்கிறாளே எனும் கவலையும் தொற்றிக் கொண்டது.

கிழவியோ நான்கு செத்தல் மிளகாயை வெறுஞ்சட்டியில் போட்டு நன்கு வறுத்து அதோடு முருங்கையிலைக்கீரையையும் சேர்த்துச் சுண்டி, உப்புப்போடாமல் இறக்கி எடுத்தாள் . அதோடு கொஞ்சம் சுடு சோற்றையும் சேர்த்து உண்ணக் கொடுக்கவே அவள் ஆறுதலடைந்தாள். மூன்றாம் நாள் பூச்சிக்கு இரத்தப்போக்கு அதிகமாகவே அவள் உடல் சூடேறிப்போனது. கிழவி காய்ந்த வெள்ளைத்துணியொன்றின் நடுவே பனங்கருப்பட்டிப்பாணி ஊற்றிய உளுந்து மாவினை வைத்துச் சுருட்டி அவள் தேகமெங்கும் ஒற்றியெடுத்தாள். முழு உடலையும் மெதுவாக மெதுவாக ஒற்றடம் கொடுத்தபின்னர் அந்த முடிச்சைப்பிரித்து அவளுக்கே அதனை உண்ணவும் கொடுத்தாள். ஆனாலும் பூச்சியோ அவளுக்குக் சாமத்தியக் கல்யாணம் செய்யும் சடங்கு நாளைக்குறித்தே எப்போதும் எண்ணிக்கொண்டிருந்தாள்.

சன்னாரிப் பூசாரியேர் பூச்சிக்கு இது தத்துக் காலம், அவளுக்கு தண்ணீரிலும் கண்டம் இருக்கிறது. ஆகாத நாளில் பெரிய பிள்ளையாகி இருக்கிறாள். இப்படி ஆகாத நாளில் ஒரு பெட்டை பெரிய பிள்ளையாகிவிட்டால் பச்சை தென்னையோலையால் கூரை வேய்ந்த சிறு பந்தலுக்குள், பெரிய மனுஷியாகிய பெண்ணை வைக்க வேண்டும். அதனைக் கொழுத்தி, பாதி எரியும் போது அப்பெட்டையின் தாய்மாமன் அவளை இழுத்துக் கொண்டு ஓடுவான். அப்போது எரிந்து சாம்பலாகும் பச்சை ஓலையுடன் அவள் தீட்டும் கழியும் என்பது அவர்களது நம்பிக்கையாக இருந்தது. பூச்சியையும் இப்படிச் செய்து விட்டு ஐஞ்சாம் நாள் மஞ்சள் தண்ணீர் ஊற்றி சாமத்தியச் சடங்கு செய்தால் அவளுக்கு நல்லது என்று சன்னாரிப் பூசாரி தெரிப்புக்குறிப்பின் கோள்களை கணித்துக் காலம் சொல்ல, அப்படியே செய்வம் என்று தலையாட்டிக் கொண்டு வந்தார். எல்லாம் சரி, முறை மாமனுக்கு எங்கு போவது?, பூச்சியின் மாமன்கள் எல்லாம் வெளிநாடுகளில் இருக்க, பக்கத்து ஊரில் இருந்த அவளது ஒன்றுவிட்ட மாமன் ஒருவனுக்கு அழைப்பெடுத்தார் மூத்தார். பூச்சியின் மீது அன்பு கொண்ட அம்மாமனும் வாழைக்குலையொன்றுடன் வந்திறங்கினான். பரபரப்பாக பூச்சியின் சமாத்தியச் சடங்கிற்கான ஏற்பாடுகள் நடந்தேறியது.

முற்றத்தில் இருந்த மாமரத்தில் இரண்டு ஒலிபெருக்கிகள் கட்டப்பட்டது.  இரண்டு ஒலி பெருக்கிகளிலும் சிவாசியின் தத்துவப் பாடல்களில் தொடங்கி எம்சியாரின் காதல் பாடல்கள் வரை போடப்பட்டது. இரண்டிலும் டீஎம்எஸ் தனது கணீர் குரலில் எம்சியாருக்கு ஒரு குரலசைவும், சிவாசிக்காக அடி வயிற்றிலிருந்து அழுத்தி பாடல்வரிகளை வெளிப்படுத்தி ஒரு குரலசைவிலும் பாடிக்கொண்டிருந்தார். வாங்குகள் வரிசையாக முற்றத்தில் போடப்பட்டிருந்தன. பிஸ்கோத்தையும், கதலி வாழைப்பழத்தையும் மென்று கொண்டிருந்தவர்கள். சூடாக தேநீர் குடிக்கும் சாட்டோடு கொஞ்சம் சப்பட்டை சாராயத்தையும் இரண்டு மிடறு தள்ளிக் கொண்டனர். பெண்களோ அரக்கப்பரக்க ஓடிக்கொண்டிருக்க பூச்சிக்கு கோடிப்புடவையொன்றை மூத்தார் எடுத்து வைத்திருந்தார்.

வயதுக்கு வந்த பெண்களெல்லாம் பாவாடை சட்டையில் இருந்து புடவைக்கு மாறுவதும் ஒரு பேரழகான விடயாமாகவே இருக்கிறது. பூச்சியும் கோடிப்புடவையைக் கட்டி, கொண்டை வைத்து கண்ணாடியில் தன்னை அலங்கரித்துக் கொள்ள ஆசையாயிருந்தாள். மயில் கழுத்துக் கலரில் புடவை வேண்டுவதாக பெட்டைகள் அடம்பிடித்துக் கொண்டிருந்த காலத்தில் மூத்தார் கருஞ்சிவப்பு நிறத்தில் ஒரு புடவையை எடுத்து வைத்திருந்தார். அதை மூத்தாரின் மனம் கோணாமல் வாங்கிக் கொண்டாள். அந்தப்புடவையின் கலர் முற்றத்தில் பேடுகளுக்குள் சில்மிஷம் நடத்திக் கொண்டு திரியும் வெட்டுச்சேவலின் கழுத்து நிறம் போலவே மின்னியது. அதில் நெய்ந்து வைத்திருந்த பட்டுச் சரிகைகளை ஒவ்வொன்றாகத் தொட்டுப்பார்த்து பரவசப்பட்டுக் கொண்டிருந்தவளை தண்ணீர் வார்க்க எல்லோருமாக அழைத்துச் சென்றனர். கன்னங்கள் நிறைய மஞ்சள் பூசி அவளை தலைமுழுகாட்டினர், கிழவியும் இன்னும் சிலரும் குரவை போட்டனர். யாரோ ஒருவர் தூரத்தில் வெடிக்கட்டு ஒன்றைக் கொழுத்திப்போட்டிருந்தார். அந்தச் சத்தம் இந்த வீட்டில் ஒரு பெட்டை பெரிய மனுஷியாகி விட்டது. தண்ணீர் வார்க்கிறோம். மாப்பிள்ளை இருந்தால் கேட்டு வரலாம் என்கிற மறைமுக சங்கதியை ஊருக்கு உணர்த்தியது. அதன் பின்னர் வெள்ளைத்துணியொன்றால் முழுவதுமாக மூடி  அவளை அழைத்து வந்தனர். பூச்சியும் பார்ப்பதற்கு அழகான தேனுருண்டை மாதிரியே நடந்து வந்தாள். மாவினால் விதம் விதமாக செய்யப்பட்ட ஆரத்தி தட்டுகளைக் கொண்டு அவளுக்கு ஆரத்தியெடுத்தனர். அவளும் மெலிதாக புன்னகைத்துக் கொண்டாள். அவளை அலங்கரித்துப் பொட்டும் வைத்து இருப்பாட்டினர். எல்லாவற்றையும் கண்குளிர பார்த்துக் கொண்டிருந்த மூத்தாருக்கோ கடலோடு போனவளே அப்படியே குத்தியிருப்பதாக இருந்தது. நாட்டுக் கோழிக் கறியும் விருந்துமாக சபை களை கட்டத் தொடங்க மூத்தார் மட்டும் மெதுமெதுவாக ஒரு ஓரத்தில் சாய்ந்து கொண்டிருந்தார். சப்பட்டையின் வெறி அவரை நன்கு நிறைத்திருந்தது.

சினிமா தியேட்டர்களும் , புத்தகங்களும் மட்டுமே அம்மக்களின் பெரும் பொழுதுபோக்குகளாக இருந்தன. கோவில் திருவிழாக்களின் போது மட்டுமே கலை நிகழ்வுகள் இடம்பெறும். யாருடைய வீட்டிலும் டீவி கூட கிடையாது. சைக்கிளும் , ரேடியோவும் உள்ள வீடே அந்தக் கிராமத்தின் பணக்கார வீடாகக் கருதப்பட்ட நிலையில் மூத்தாரோ அன்று இரவு பூச்சியின் ஆசைப்படி, எம்சியார் படம் போடுவதற்கான ஆயத்தங்களை செய்திருந்தார். வாடகைக்கு எடுக்கப்பட்ட டீவியும், டெக்கும் முற்றத்திற்கு கொண்டுவரப்பட்டது. இருபது ரூபாய் வாடகை கொடுத்து எடுக்கப்பட்ட டீவியும் அதில் போடுவதற்காக இரண்டு எம்சியாரின் படக் கொப்பிகளும் வந்து சேர ஊரிலுள்ள பாதி சனம் மூத்தாரின் வீட்டு முற்றத்தை நிறைத்துக் கொண்டது. கடப்படியில், மாமரத்தடியில், வாங்கில் தாழ்வாரத்தின் கீழென ஆண்களும் பெண்களும் குட்டிகுறாலுகளுமாக சனங்கள் குந்தியிருக்க எம்சியாரின் படம் போடப்பட்டது. நிலையருகே மூத்தார் நிறை வெறியில் குந்தியிருக்க பூச்சி டீவிக்கு முன்னராக குந்தியிருத்தாள். படம் போகப் போக சுவாரசியமாக இருந்தது. பூச்சிக்கு இதுதான் எம்சியாரு, இது நம்பியாரு, இது செயலலிதா என்று ஒவ்வொருவராக சொல்லிக் கொண்டிருந்தான் சின்னான். சின்னான் ஏற்கனவே அந்தப் படத்தை நூறு முறை பார்த்திருந்தான். ஒவ்வொரு காட்சிக்கு முன்னரும் பின்னருமாக கதையை விவரித்துக் கொண்டிருந்தான். கூட்டத்தில் இருந்த பெரியவர் ஒருவர் அவனை வாயை மூடச் சொல்லு என்று தூஷணத்தால் பேச பெண்டுகள் கெக்கப்பெக்க எனச் சிரித்து பல்லைக் காட்டினார்.  ஒரு படம் முடிந்ததும் கிழவிகள் பாதிப்பேர் எழும்ப, அவர்களது மடியில் குட்டிப்பிள்ளைகள் தூங்கி வழிந்து கொண்டிருந்தன. கிழவர்கள் அடுத்த படத்தைப் போடுமாறு சொல்ல, சின்னானும் டீவிக்காரனிடம் அடுத்த படத்தைப் போடச் சொன்னான்.

டமார் என்று ஒரு சத்தம்…..

வீட்டிலிருந்த மின்குமிழ்கள் அணைய மாமரத்திலிருந்த போக்கஸ் மின்குமிழும் அணைந்துவிட்டது. டீவியின் திரையில் மின்னல் வெட்டியது போல் ஒரு கறுப்பு வெள்ளைச் சலசலப்பு நடந்து டீவியும் நின்றுவிட யாரோ இயக்கப் பெடியள் ட்ரான்ஸ்போமருக்கு க்ளிப் குண்டு எறிஞ்சிட்டாங்க போல எழும்புங்க… எழும்புங்க… என்று ஒரு மூத்தவர் கூற முற்றத்துச் சனம் கலையத்தொடங்கியது. சந்தியில் இரண்டு துப்பாக்கிச் சத்தம் மாறிமாறிக் கேட்டது. அரக்கப்பரக்க சனம் தங்களது வீடுகளை நோக்கி நடக்கத் தொடங்க சில பெண்கள் தங்களது குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு விரைய, அடுத்தடுத்து சில பெடியன்களின் சத்தம் ஊரின் எல்லையில் கலவரமாகக் கேட்கத் தொடங்கியது. ஓரிரு நிமிடங்களில் முற்றம் காலியானது. டீவிக்காரன் தனது பெட்டியை கட்டிக்கொண்டு சைக்கிளோடு காணாமல் போனான்.

பாதி முழித்த மூத்தார் வெறியைச் சமப்படுத்த முடியாமல்  தாழ்வாரத்திலிருந்து இறங்கி நடந்து வந்து பூச்சியைத் தேடினார். சின்னான் வேலிக்குள் இருந்த இடைவெளியைப் பொத்துக் கொண்டு பாழ் வளவைத் தாண்டி தனது வீட்டுக்கு ஓடினான். சன்னாரிப் பூசாரியோ ஆலமரத்தை நோக்கி ஓட்டமெடுக்க, வெறியின் உச்சத்தில் இருந்த மூத்தார் சுழன்று விழுந்தார். ஊரின் எல்லையில் சத்தம் அதிகமாகிக் கொண்டே வந்தது. வீடுகள் அடைக்கப்பட்டது. கோவிலடியில் படுத்துக் கிடந்த மாடுகள் வெருண்டு ஓடின. பூச்சி குளிக்கும் தண்ணீர்த் தொட்டியில் இருந்த குழாய் உடைந்து நீர் கிணற்றடி வரை பெருக்கெடுத்து ஓடியது. ரத்தச் சிவப்பு நிறத்தில் நீர் முற்றத்திற்குப் பாய்ந்தது. கூட்டுக்குள் உறங்கிக் கிடந்த வெட்டுச் சேவல் படபடவென அடித்துக் கொண்டது. கீரிப்பிள்ளையொன்று கோழிக்கூட்டுக்குள்ளிருந்து தலைதெறித்து ஓடியது. பொழுது மெல்ல மெல்லப் புலர மூத்தார் பாதி கண்விழித்தார்.

பாழ் வளவிற்குள் இருந்து தலைவிரி கோலமாக நின்ற ஒரு கரிய பெண் உருவம் மூத்தாரை வெறித்துப் பார்த்தது! ச்ச்ச்…!

நீலாவணை இந்திரா

கல்முனையைச் சேர்ந்த நீலாவணை இந்திரா கொழும்பில் தற்சமயம் வசித்துவருகிறார்.  சிறுகதைகள் தொடர்ச்சியாக எழுதிவருகிறார்.

உரையாடலுக்கு

Your email address will not be published.