கருமம் : வைரவன் லெ.ரா

அரசியல் பிரமுகர் ராஜை வடிவேல் இறந்தார் என்ற செய்தியை வார்த்தைகளை விழுங்கி விழுங்கி, அப்பா நான் எழவும் சொன்னார். இப்போதெல்லாம் யாராவது இறந்தார் எனத் தெரிந்தால் அப்பா மிகவும் பதட்டப்படுகிறார். இறப்பு செய்தியைக் கேட்டதும் மணி அண்ணனின் ஞாபகம் வந்தது. ராஜை வடிவேல் பாரம்பரிய அரசியல் குடும்பத்திலிருந்து வந்தவரில்லை. ஆரம்பத்தில் டவுண் மார்க்கெட்டில் வாழை குலை தூக்கும் தொழிலாளியாக ஆரம்பித்தவர், பின் வாழை மண்டி திறந்தார், பிறகு வாழை குலை ஏலத்தில் அவர் சொல்லும் விலையே முடிவாகும் எனும் நிலைக்கு வந்தவர். இந்த நிலைக்கு வந்து சேர்வதற்கு நகர காவல் நிலையத்தில் அவர் மேல் ஆறு வழக்குகள் தேவைப்பட்டன. எப்படி இறந்தார் என்று தெரிந்து கொள்ள செய்தித்தாளைப் புரட்டும் போது உடலில் எந்தக் காயமும் இல்லை. ஆனால் சந்தேக மரணம், பிரேத பரிசோதனைக்குப் பிறகே எப்படி இறந்தார் என்பது தெரியவரும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ராஜை வடிவேல், எப்போதும் நெற்றியில் திருநீறு பட்டையோடு, முன்பற்கள் தெரிய, சிரித்த முகத்தோடு இருப்பார். அவரை இருமுறை பார்த்திருக்கிறேன். வெள்ளைச் சட்டையில் அவர் சார்ந்த கட்சித் தலைவரின் படம் தெளிவாகத் தெரியுமாறு வைத்திருப்பார். வெளியில் நடமாடும் போது கட்சியின் கரை வேட்டியை பெரும்பாலும் அணிந்திருப்பார். சொந்தவூர் ராஜகிருஷ்ணன்புதூர், அதுவே சுருங்கி முன் பெயராய் ராஜை வடிவேல் எனும் அடைமொழியாய் மாறியது. எங்களூரில் ரியல் எஸ்டேட் தொழிலை பெரும் வணிகமாய் ஆக்கியதில் அவர் பெயரும் உண்டு. சிறுவயதில் நாங்கள் கிரிக்கெட் விளையாடிய காலி மனையும் அவருடையது தான். தொழிலில் பணம் பெருக ஆரம்பிக்க, கோவில்களுக்கு அதிக நன்கொடை அளிக்க ஆரம்பித்தார். அப்படியே கட்சியில் சேர்ந்து பெரும் பணத்தை கட்சி மேம்பாட்டிற்கு நிதியளிக்க மேலிடத்திற்கும் அவரைப் பற்றி தெரிய ஆரம்பித்தது. கடைசியாக அவரின் சாதி எங்கள் மாவட்டத்தில் பெரும்பான்மையாய் இருக்க சட்டசபை தேர்தலில் நிற்க வாய்ப்பும் கிடைத்தது. எப்படி கட்சியில் சேர்ந்து இரண்டு வருடத்திலேயே இவ்வளவு சீக்கிரம் மாவட்ட அரசியல் அதிகாரத்தில் அசைக்க முடியாத ஆளாய் மாறினார் என்பதே மாவட்டம் முழுவதும் அப்போது பேச்சாய் இருந்தது. ஆனால் அவர் பெயர் அறிவிக்கப்பட்ட இரண்டு நாட்களிலேயே வேட்பாளர் மாற்றப்பட்டார். அவரின் முரட்டுத் தனமான சுபாவமும், நகரில் அவருக்கிருக்கும் மதுக்கடை பார்களும் தான் அதற்கான காரணம் என்றும் ஒரு பேச்சும் இருந்தது. ஆனால் அவருடைய கட்சி அந்தத் தேர்தலில் தோற்றது. இடையே அவரின் மனைவியும் நகர செயலாளர் ஆனார். அடுத்த தேர்தலில் வடிவேலுவின் பெயர் அறிவிக்கப்படலாம் என்றிருந்த நிலையில் மறுபடியும் மாவட்ட செயலாளருக்கே வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. வடிவேல் தேர்தல் களத்தில் நேரடியாக இறங்காவிட்டாலும் பணத்தை வாறி இறைத்தார். அவருடைய மனைவிதான் நகர் முழுக்க எல்லா மூலை முடுக்குகளிலும் நுழைந்து தேர்தல் பணியாற்றினார். மாறாக அந்தத் தேர்தலிலும் அவர்களுடைய கட்சி தோல்வியே அடைந்தது. தேர்தலில் நிற்காவிட்டாலும் அவருக்கென ஒரு தர்பார் நகரில் இருந்தது.

செய்தித்தாள் முழுக்க அவரின் இறப்பிற்கு இரங்கல் செய்திகள் நிறைந்திருந்தன. காலை ஒன்பது மணிக்கு என்னுடைய ஆண்களுக்கென்ற பிரத்தியேக துணிக்கடையை திறப்பது வழக்கம். வீட்டிலிருந்து வெளிநடையை கடக்கும் போது அப்பா ஹாலில் வாயில் ஏதோ முணுமுணுத்தபடி அங்குமிங்கும் நடந்தபடியிருந்தார். கடையைத் திறந்து நண்பகல் பன்னிரெண்டு மணி வரை காத்திருந்தேன். வாடிக்கையாளார்கள் ஒன்றிருவர் வந்து போக, எண்ணம் முழுக்க மணி அண்ணனைச் சுற்றியே இருந்தது. அவரை இதற்கு முன் ஒருமுறை தான் சந்தித்துள்ளேன். எப்படியும் மணி அண்ணன் வழக்கமான பேருந்து நிலையத்திற்கு எதிரில் இருக்கும் மதுக்கடையில் இருப்பார் எனும் உள்ளுணர்வால் அங்கே செல்ல முடிவெடுத்தேன். இந்தச் செய்தியால் அதிகம் மகிழ்ந்திருப்பார். கண்டிப்பாக இன்றைக்கு குடிக்க வருவார் என எண்ணினேன்.

ஓர் மழைநாள் பணப்பிரச்சனையால் வழக்கமாக செல்லும் உயர்தர மதுக்கடைக்குச் செல்லாமல் பேருந்து நிலையத்திற்கு எதிரில் இருக்கும் மதுக்கடைக்குச் சென்றேன். சாராய நெடியும், பின்னால் ஓடும் சாக்கடையின் நாற்றமும் இணைந்து மூற்றை அடைக்கும், பேருந்து நிலையத்திற்கு வருபவர்களில் பெரும்பான்மையானோர் சிறுநீர் கழிக்கும் பள்ளத்தின் அருகில் தான் மதுக்கடை இருந்தது. கடையின் வெளிவாசலில் தொங்கிய குழல் விளக்கைச் சுற்றி ஈசல்கள் பறக்க, மங்கிய வெளிச்சம் மட்டுமே சூழ்ந்திருந்தது. பொழிந்தபடியிருக்கும் சிறு சிறு மழைத்துளிகளால் ஒருவித நைந்த வாடையும் சேர்ந்து ஓங்கரித்தது. இடையிடையே வெட்டும் மின்னல்களும், இடிச்சத்தமும் மனதிற்குள் ஏற்கனவே இருந்த குழப்பத்தை அதிகப்படுத்த அங்கே செல்லலாமா என்று தயங்கியபடி நின்றேன். கடையின் இடதுப் பக்கம் இருட்டிக் கிடந்த காலியிடத்தில் இருந்த மண்ணெண்ணெய் பேரலை சுற்றி சிலர் நிற்பது தெரிந்தது. கடைக்கு செல்லும் வழியிலேயே, ஒருவர் சர்த்தித்ததின் மேலேயே புரண்டபடி கிடந்தார். திரும்பிவிடலாம் என முடிவெடுத்த வேளையில், மணி அண்ணன் இருட்டில் இருந்து என்னை நோக்கி வந்தார். நெற்றி புடைத்து, இரத்தம் காய்ந்து இருக்க, அதன் மேல் திறுநீரும் மஞ்சணையும் பூசியிருந்தார். மஞ்சள் தோய்ந்த வெள்ளைச் சட்டையின் பட்டன் திறந்திருக்க, தொங்கும் ருத்திராட்ச மாலையைத் தாண்டி, நகக்கீறல்கள் தான் அதிகம் தெரிந்தன. கருமை அப்பிய காவி வேட்டியின் ஒரு முனையை தூக்கிப் பிடித்தபடி, ஒருப்பக்கமாய் காலை கிண்டி கிண்டி நடந்தார்.

என்னருகே வந்தவர், “தம்பி ஒரு பத்து ரூவா இருக்குமா?” தலையைச் சொறிந்தபடியே கேட்கவும் ஏனோ யோசிக்காமல் இருபது ரூபாய் தாளை நீட்டினேன். முகம் நிறைய புன்னகையோடு வாங்கிக் கொண்டு முன்னே நடந்தவர் சட்டென்று திரும்பி,
“ஒங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க வாங்கிட்டு வந்துருகேன். எதுனாலும் சொல்லுங்க, சுத்தி நமக்கு தெரிஞ்ச எடம் தான்,” என்றார்.
“எனக்கு நல்ல பிராண்டு பியர் ஒன்னு வேணும். அப்படியே வறுத்த கடலையோ, உப்பு கடலையோ எதாச்சும் வாங்க முடியுமா?” ஐநூறை நீட்டினேன்.
“கடல நமக்கு எதுத்து வரும். பிரட்டும். எனக்கு ரெண்டு பாளையம்கோட்டை பழம் வாங்கிக் கிடட்டுமா?” அவர் கேட்கவும், சரியென்று தலையை ஆட்டினேன். போனவர் ஐந்து நிமிடத்தில் திரும்பி வந்தார். சரியான சில்லறையையும் திருப்பிக் கொடுத்தார்.
ஏற்கனவே மண்ணெண்ணெய் பேரலை சுற்றியிருந்தவர்களை அறிமுகமானவர்களைப் போல விரட்டி என்னை நிற்க வைத்தார். குப்பியின் மூடியை கழட்டும் போது, பிளாஸ்டிக் கப்பில் ஊற்றும் போது, தண்ணீர் நிரைக்கும் போது ஒவ்வொரு முறையும் என்னைப் பார்த்து மெல்ல சிரித்துக் கொண்டே செய்தார். ஒவ்வாத இடத்தில் நின்றாலும் அவரின் இருப்பு ஏதோ ஒருவகையில் ஆசுவாசமாக இருந்தது. துணிக்கடையை திறக்கும் போது என்னோடு பங்குதாரராய் சேர்த்துக்கொண்ட நண்பன், கடையின் கணக்கு வழக்குகளில் குளறுபடி செய்திருந்தான். பணம் எனக்கு பிரச்சனையாக இல்லை, பழகிய நண்பன் அதைச் செய்ததே என்னுடைய ஆத்திரத்தை அதிகப்படுத்தியது. அதைப் பற்றி யோசிக்க கூடாது என்பதற்காகவே அவரிடம் பேச்சுக் கொடுக்க எண்ணினேன்.

“என்னண்ணே மொகத்துல நல்ல அடிப்பட்டிருக்கே. ஆசுபத்திரி போகலையா?”
“ஆசுவத்திரி போனேன். அவனுக குண்டில ஒரு டிடிய போட்டு உட்டானுவ. மூணு கலருல மாத்திரைய கொடுத்தானுவ. ஆனாலும் ராத்திரி ஒறக்கம் கெடையாது. காலு தரிப்பு எடுக்கும், கண்ணுக்கு கீழ குத்தல் எடுக்கும். பகலும் ஒறக்கம் இல்ல. எளவு ராத்திரியாச்சும் இந்த எளவ குடிச்சிட்டு ஒறங்கிடலாம்ன்னு தான் கடைக்கு வந்தேன். சரியா ரூவாய பாக்கல. வந்து தான் பாக்கேன் சவம் பத்து ரூவா கொறயி, டெய்லி வரக்கூடிய ஆளுதான். புண்டாமக்க எனக்கே கடன் தர மாட்டுக்கானுவ தம்பி.” சொல்லிவிட்டு இடைவெளி அதிகம் விழுந்த முன் பற்கள் தெரிய சிரித்தார்.
எப்படி அடிப்பட்டது என கேட்கத் தோன்றவும், புரிந்தவர் போல, “வடிவேலு அடிச்சிப் போட்டான். எனக்க குஞ்ச பிடிச்சிட்டு அலைஞ்ச பய. சந்தைல நானாக்கும் அவனுக்கு வாழ மண்டி வச்சிக்கொடுத்தேன். நம்ம பய வளரட்டுமே நெனச்சேன். இன்னைக்கு எனக்க கதிய பாத்தீங்களா? வேணும்ன்னா பாருங்க சீக்கிரம் பாடைல போயிருவான். நமக்கு ஒடம்புல அவ்வளவு பெலம் இல்ல.” அமைதியானார்.

“வடிவேலுன்னா, டவுண் முழுக்க எல்லா பேனர்லயும் இருக்காரே அவரா?”
“அந்தப் பயதான். சொல்லப்போனா எனக்க ஃபிரெண்டு தான். சவம் எனக்க நேரம்.” பெரும்மூச்சு விட்டார்.

“இப்போ என்ன பண்ணுகீங்க. வீடு எங்க?” பேச்சைத் தொடர்ந்தேன்.
“ஜோசியம் பாக்கேன். எனக்க அப்பன் சொடல தான் இப்போ காப்பாத்துகான். வீடு பஸ் ஸ்டாண்டுக்க பொறத்த சிவன் கோயில் நீராளி இருக்குல்லா அதுக்க கிட்டதான்.”
என்ன தான் பேசிக்கொண்டிருந்தாலும் என்னுடைய எண்ணமெல்லாம் நண்பன் செய்த காரியத்திலேயே உழன்றது. வேறு வழியில்லாமல் அருகில் நிற்பவறோடு பேசிக்கொண்டே இருக்க எத்தனித்தேன்.

“நம்ம மொகத்த பாத்தா என்ன தோணுகுண்ணே.” புன்னகைத்தபடியே கேட்டேன்.
“இப்போ ஏதோ சங்கடத்தில இருக்கிற மாதிரி தோணுவு. இதுக்கு ஜோசியம்லாம் வேண்டாம். ஊருல அத்தன பிராந்தி கடை இருக்கும் போது, தேடிப்பிடிச்சி இந்த எழவு கடைல வந்து நிக்கியேளே அதுவே போதும்,” குலுங்கிக் குலுங்கிச் சிரிந்தார். அவருடைய குப்பியில் இருந்த மீதியையும் பிளாஸ்டிக் கப்பில் நிறைத்தார். மீதி கொஞ்சமாய் தண்ணீரை நிரப்பியபடியே, மோவாயைத் தடவியவர், “மனஷனுக்க மனசு மூணாக்கும்,” நான் “அப்படியா!” என்று கேட்க, “இப்போ எனக்க கூட பேசிட்டி இருக்கேளே இது மேலாமத்த ஒண்ணு.” அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே காலிடுக்கில் பெருச்சாளி ஒன்று ஓட, குதித்து விழப்போனேன். அவர் அசையாமல் நின்றார். “இதாக்கும் இன்னொன்னு, ஆழத்துல கெடக்கது. பெருச்சாளி கவட்டைக்கு அடியில ஓடவும், யோசிச்சா குதிச்சேங்க. பொடதில இருக்க கண்ணு மாதிரியாக்கும் இது. மூணாமத்து உள்ளது நம்மள மீறுன ஒண்ணாக்கும். அது இந்த ஒலகம் முழுக்க எல்லாத்தக்க கூடயும் கனெக்ஷன் வச்சுக்கும். எக்ஸாம்பிளுக்கு ஒங்களயே பாருங்க. ஏதோ ஒரு பிரச்சனை, இப்போ காலுக்கு கீழ ஒடுன பெருச்சாளி மாதிரி மனசு முழுக்க நாத்தமும், கீறக்கமும். வெளியே எறங்கி எங்கயாச்சும் போகணும்ன்னு வண்டிய எடுக்கீங்க. சரியா ஒங்க மனசுல கெடக்க வெஷயம் என்ன மாரி இருக்கோ, அதே எடத்துக்கு நம்மள கூட்டிட்டு வந்துரும். நீங்க இந்த மூத்திர முடுக்கு கடைல நிக்கேளே அந்த மாரி” அவர் சொல்லவும், நான் இடைமறித்தேன்,
“எல்லாரும் அப்படி இல்லைல்லா. செல பேரு எதாச்சும் மண்டக்கடி வரட்டும் ஒடனே கோயிலுக்கு போயிடுகான்.”
“சரி, நீங்க ஏன் கோயிலுக்கு போகல?”
“நாம கோயிலுக்கு அடிக்கடி போற ஆளு கெடையாது. பெரிய நம்பிக்கையும் இல்ல.”
“பொறவு இங்க எதுக்கு வந்தீங்க.”
“குடிச்சா கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும். அதான்.”
“அதாக்கும் காரியம். அவாளுக்கு கோயிலுக்கு போறது ரிலாக்ஸ். நாம தொடர்ந்து பண்ணுற காரியங்கள்ள இருந்து மூணாமத்த ஒன்னு நம்மள எடை போட்டு, இந்தப்பய இப்படித்தான்னு முடிவு பண்ணிடும். அதாக்கும் பிரபஞ்ச மனம். நாம பண்ணுற காரியங்கள்ள இருந்து நம்மோட கருமம் வரைக்கும் எல்லாத்தையும் கூட்டி கழிச்சு, நாம அறியாமலே நாளைக்கு என்ன செய்யணும்ண்ணு, இன்னைக்கு ராத்திரி கண்ணு அவிஞ்சி ஒறங்குவோமே அப்போவே முடிவு எடுத்துப்போடும். அதுக்கு ஒறக்கமும் கெடையாது. ஆனா, அது முடிவு செஞ்சததான் காலைல செய்வோம்.” நிறுத்தினார்.

“க்ளோஸ் ஃபிரெண்டு, கடைல பாட்னரா வச்சுக்கிட்டேன். நமக்கு வேற தொழிலும் இருக்கு. நம்பி தனியா உட்டேன். பட்டறைல பைசாவ கொஞ்சம் கொஞ்சமா அடிச்சி மாத்திருக்கான். வியாவாரம்லா நல்லாத்தான் போச்சு. மாசா மாசம் அதுல நட்டம், இதுல நட்டம்ன்னு நொள்ள காரணத்த சொல்ல ஆரம்பிச்சான். நானும் பிடிய லைட்டா விட்ட மாதிரி, அவன் அறியாம கணக்க பாக்க ஆரம்பிச்சேன். இந்த மாசம் தீவாளி வந்துச்சுல்லா, நல்ல லாபம். பய இதுலயும் நட்டம்ன்னு சொன்னான். செவளைல ரெண்டு அடிய போட்டு, ‘மக்ளே, அப்படியே எறங்கி ஓடிடு’ன்னு சொல்லிட்டேன். அப்பா வட்டிக்கு உட்டவரு. அடிபிடி, ரவுடிசம் எல்லாம் பண்ணுன ஆளு. இப்போவும் முண்டக்கண்ணு கண்ணனுக்க மவன்னு சொன்னா மேக்ஸிமம் டவுணுக்குள்ள தெரியும். நம்ம கட ஏ.டி.என் பிளாஸா இருக்குல்லா, அங்கதான் ரெண்டாவது மாடி.. சக்கரத்துக்குலாம் கொற இல்ல. அதான் அடிய கொடுத்து அனுப்பிச்சுட்டேன். இருந்தாலும் கடுப்பா இருக்கு. நான் அடிக்கும் போது, அவன் ‘மாப்ள தெரியாம பண்ணிப்போட்டேன். வீட்ல கஷ்டம்டே. மன்னிச்சுடுடே’ன்னு சொன்னா கூட விட்டுருப்பேன். அடிக்கும் போது கண்ணு கலங்கி என்ன பாத்து சுண்டு விரியாம சிரிக்கான். அவன் சிரிச்சதும், ஏதும் பேசாம வெளில எறங்கிப்போனதும் என்னவோ பண்ணுகு” மனதிற்குள் குமைந்து கொண்டிருக்கும் காரியங்களை இறக்கியவுடன் கனம் குறைந்தது.

“அடிச்சிப்போட்டீயள்ளா, அத ஒங்களால ஏத்துக்க முடியல்ல. சரிப் போட்டும். ஒறங்கி முழிச்சா தெளிஞ்சிடும். ஆமா, நீங்க முண்டக்கண்ணு கண்ணனுக்க மொவனா? ஒங்க அப்பா சந்தைலயும் வட்டிக்கு விட்டிருந்தாரே. நானும் வாங்கிருக்கேன். அவருக்க மவந்தான் சொல்லக்கூடாது, இருந்தாலும் சொல்லுகேன். அநியாய வட்டிடே. அப்பா மேல ஒரு கொலை கேஸு உண்டுல்லா. ஒசரமும், ஒடம்பும் மாடன மாரி இருப்பாரு. சோமா இருக்காரா?”

“எங்க சொகம். இப்போ சுகரு, பிபி, எல்லா சோக்கேடும் உண்டு. வலது காலுல ரெண்டு விரலு எடுத்தாச்சு. அந்தக் கேஸு ஸ்டார்ங்க நிக்கலண்னு நெனைக்கேன். நா அப்போ சின்னப் பையன். எதிர் பார்ட்டி வீக்கு. ஏதோ எடவாடு பிரச்சனைன்னு நெனைக்கேன். சரியா ஓர்ம இல்ல. கைல கொஞ்சம் ரூவா கொடுத்து அமத்திட்டாரு. இப்போ வட்டிக்கு விடதுலாம் இல்ல, ஆளு அடங்கியாச்சு. டவுண்ல நாலைஞ்சி கடை, வீடு இருக்கு. அதுல வர வாடகை. போக, ஒரு துணிக்கடையும், ரெண்டு ஜே.சி.பியும் இருக்கு. என்னப் பொழப்புண்ணே. வீட்ல, நிம்மதியே இல்ல. அக்காக்கும் அத்தானுக்கும் பிரச்சனை. எனக்கும் வயசு முப்பத தாண்டியாச்சு, இன்னும் கல்யாணம் ஆகல,” விரக்தியோடு சொன்னேன்.

“ஒங்க அம்மைய கண்டிருக்கேன். எறந்து வருஷம் இருக்குமே!”
“அது வருஷம் ஆச்சு. அம்ம இருக்க வர, தெனம் தெனம் பெகலம் தான். எனக்க அப்பாதான், சொல்லக்கூடாது. அவரு அப்போலாம் சரி கெடையாதுண்ணே. நானே அவர வேற பொம்பளைகள் வீட்டுல இருந்து இழுத்துட்டு வந்துருக்கேன். அம்ம நா ஒரு பத்தாப்பு படிக்கும் போதே எறந்துட்டா. பொறவு இவரு ஆட்டம் கூடிப்போயி, நா தலையெடுக்கவும் தான் கொறஞ்சிருக்கு.”
“வெப்ராளப்படாதப்போ. முண்டக்கண்ணு கண்ணன தெரியாத ஆளா! எல்லாம் கருமம். நீ நெனைப்ப. கெடுதல் பண்ணுறவன் எல்லாம் நல்லா இருக்கான். அப்புறம் சாமி என்ன மயித்துக்குன்னி. அதாக்கும் இல்ல. நா சொன்னேன்லா, அதுல பிரபஞ்ச மனம். நீ பண்ணுற நல்லது கெட்டது எல்லாத்தையும் ஒரு மாரி சொமடாக்கி, நம்மள சுத்தி ஒரு கவசம் மாரி வச்சிக்கிடும். எங்க போனாலும் கூட வரும். செல கழுவு பயக்க எப்போ ஆத்தங்கரைக்கு பேளப் போனாலும் சரியாட்டு ஒரு பாம்பு குண்டிக்க பொறந்த வந்துடுமாம். ரவுடி பயக்க பத்தடி தள்ளி வருவான், உள்ளுக்குள்ள அங்க இருக்காதே தள்ளி போண்ணு ஒம்மனசு சொல்லும். எப்படியாக்கும், எல்லாம் அவன் அவன் ஏத்தி வைக்கிற சொமடு. அத ஒன்னோட பிரபஞ்ச மனம் பிடிச்சி போடும். நாம செய்யிற எல்லா செயலும், நல்லதோ, கெட்டதோ எல்லாம் சேந்தாக்கும் இந்த சொமடு. இத வச்சாக்கும் எனக்க ஜோசியம். வந்துருக்கவன் சொல்ற கதை, அவன் எப்படியாப்பட்ட ஆளுன்னு தெரிஞ்சு போச்சு, அடுத்து அவன் என்ன பண்ணுவான் வர நமக்கு தெரிஞ்சிப்போடும். இதுக்கு எதுக்கு மந்திரம்? இந்த பிரபஞ்ச மனத்த அறியணும், மனுஷன அறியணும். அவ்வளவுதான். அப்படித்தான், தம்பி வரவும் பத்து ரூவா கேட்டேன். வேற யார்ட்டயும் கேக்கலையே. நாம அறியாத்தது நெறய உண்டு.” ஊற்றி வைத்திருந்த மீதியைக் குடித்தார்.

வீட்டிலும் நடப்பவை எதுவும் நேர்மாறாகவே இல்லை. குடித்திருக்கிறேன். அவர் சொல்ல சொல்ல எல்லாமே அப்பா செய்த செயல்களின் விளைவுகள் எனத் தோன்றுவதை மறுக்கவும் முடியவில்லை. அவரிடம், மீண்டும் இருவருக்கும் மது வாங்க சொல்லி ரூபாயை நீட்டினேன். சிரித்த முகத்தோடு ஓடினார். அவர் செல்லவும், இதற்கு மேல் அவரிடம் என் கதையை சொல்லக் கூடாது என்று முடிவெடுத்தேன். வாங்கி வந்ததும் அவர் வழக்கம் போல ஊற்றி குடிக்க ஆரம்பித்தார்.

வயிற்றில் நொதிக்க ஆரம்பித்திருந்த மது பேசு பேசு என்றது. “அண்ணே சொன்னீங்களே வடிவேல் ஒம்ம அடிச்சிப்போட்டான்னு. என்னவாக்கும் வெஷயம்.”
நெற்றியைத் தடவியவர், “எனக்கு கல்யாணம் ஆகும் போது வயசு முப்பத்தஞ்சி, அவளுக்கு பதினாறு. இருவது வயசுக்குள்ள ரெண்டு கொமற பெத்துட்டா. அப்போ ஸ்கூட்டரு, கழுத்துல செயினு, சொந்த வீடு எல்லாம் உண்டு. இப்போ வீடு மட்டும் இருக்கு. வடிவேலு கூடத்தான் கொஞ்ச வருஷம் முன்னாடி வரைக்கும் இருந்தேன். கொமறு வளர, ரெண்டையும் கட்டிக்கொடுத்துட்டேன். சொல்லப்போன எனக்க வியாவாரம் நொடியவும், வடிவேலுதான் ஒபகாரமும் செஞ்சான். கல்யாணத்துக்கும் வட்டியில்லாம ரூவா கொடுத்தான். கெடைக்கும் போது தாடேன்னு சொன்னான். எல்லாம் கரெக்ட்டா போகுதேன்னு பாத்தேன். பொறவு தான் வெஷயம் தெரிஞ்சிது நம்ம கட்டினவளுக்கும் அவனுக்கும் பழக்கம்ன்னு. அவளுக்கும் பிராயம் ஒன்னும் ஆகலையே. என்ன பாத்தியா? எப்படி இருக்கேன். குடிச்சி குடிச்சி ஒடம்பெல்லாம் இத்து போயி. வயசு இன்னும் அறுவது ஆகல. பாத்தா தெரியா? என்ன மாரி ஆளையெல்லாம் ஈஸியாட்டு ஏமாத்திப் போடலாம். மூஞ்ச பாத்தாலே புரிஞ்சிடும் இவன் இளிச்சவாயன்னு. சாதரணமாட்டு வாழுறவன் எல்லாம் நம்மள பாத்தாலே மூக்க பிடிச்சிட்டுட்டு ஒதுங்கி போயிடுவான். இதாக்கும் நான் ஏத்தி வச்சுக்கிற சொமடு. நானே என்ன அழிக்கேன். நிம்மதியாட்டு இவனுக மத்தில வாழ முடியாது. நாம ஒருத்தர்ட்ட நெஜமாட்டு நேசமா இருக்கோம்ன்னு வச்சிப்போம். நாம தான் கோம்பப்பயல்லா, குறுக்குக்கு பொறத்த நம்மள நளியடிப்பானுவ. நம்ம கூட எப்படி ஒரு பொம்பள இருப்பா. அவளுக்காகவும், ரெண்டு கொமருக்காகவும் தான் ராத்திரி முழுக்க வாழக்கறைல சந்தைல கெடந்தேன். குடும்பத்த நல்லா பாத்துக்கணும்ன்னு ஒழைச்சேன். ஆனா எம் பொண்டாட்டிக்கி நா நாத்தம் அடிச்சிருக்கேன். பொறவு, இவன் தான் சென்ட் என்ன! பவுசு என்ன! அரசியல் அதிகாரம் என்ன! கூட போயிட்டா தம்பி. பிள்ளைகளு நட எறங்கட்டும்ன்னு இத்தற நாளு இருந்திருக்கா.” விசும்ப ஆரம்பித்தார்.

மூக்கை உறிஞ்சயபடியே “ஆளு ஆட்டுக்கெடால்லா. நம்ம வியாவாரம் நொடியவும் தலைவன் தான் காரணம். நாசமா போச்சு, அதுவும் லேட்டா தான் மரமண்டைக்கு புரிஞ்சுது. அம்ம இப்படின்னு தெரிஞ்சதும் பிள்ளைகளும் என்னய தப்பா நெனச்சுப்போட்டு. பேசுறதும் இல்ல, வருஷம் ரெண்டாச்சு. அதுக என்ன செய்யும் பாவம். அப்பன கையாலாகத்தவன்னு நெனைச்சுப் போட்டு. இந்த தீவாளி வந்துல்லா. நல்ல குடிச்சேன். இவள தனியா அவனுக்க இன்னொரு வீட்டுலயாக்கும் வச்சுருக்கான்னு நியூஸ் தெரிஞ்சது. போயி சின்ன பெகலத்தப் போட்டேன். புண்டாமவன் அன்னிக்கு அங்க இல்ல. முந்தா நேத்து, ஜோசியம் பாக்க ஒரு ஆளு வரல. கைல அஞ்சு பைசா இல்ல, சத்தியமா சொல்லுகேன் குடிக்க கூட இல்ல. சரி நம்ம நெலம இப்படி ஆயிப்போட்டே, அவ வீட்டு நடைக்கு போயி குடிக்கத்தான் ரூவா கேக்கலாம்ன்னு போனேன். அன்னைக்குன்னு பாத்து தாயோளி அங்கதான் இருந்தான். என்னப் போட்டு பொலந்துட்டான். நல்ல இரும்பு ராட எடுத்து என்னய போட்டு அடிக்கான். கழுத்த நெறிக்கான். அவ வீட்டு நடைல நிக்கா. கழுத்துல போட்டிருக்க பவுனுலாம் அடிவயிறுல தொங்குகு. இத்தற நாளு எங்கூட குடித்தனம்ன்னு ஒன்னு நடத்திருக்காளே, பாவம் பாத்தாளா? கல்லூளிமங்கன மாரி நிக்கா. அவள பாத்து கையெடுத்து கும்பிட்டேன், ‘வீட்டுக்கு எறங்கி வந்துருட்டி. இவன் ஒன்ன அனாமத்தா விட்டுட்டுப் போயிடுவான்’னு. அப்போ என்னய ஒரு பார்வ பாத்தா பாருங்க. செய் இப்படி ஒரு பொறப்ப எடுத்துப்போட்டோமேன்னி சாவலாம்ன்னு தண்டவாளம் போனேன். நல்ல மழ. தல வச்சும் படுத்தாச்சு. எளவு நேரம்ன்னி ஒன்னு இருக்கே. அதான், நம்ம கருமம். மனசறிஞ்சி இன்னொருத்தனுக்கு துரோகம் பண்ணினவன் இல்ல. ரெண்டு மணிக்கூறு தண்டவாளத்துல தல வச்சு கெடக்கேன். எம் பொண்டாட்டி, பிள்ளைகளுக்க ஓர்ம வருகு. சந்தோஷமாத்தான் தம்பி இருந்தோம். இடைல வந்தான் பாருங்க வென கணக்கா. அழுகேன். இடியும் மின்னலுமா வெட்டுகு. மேலுல விழுற ஒவ்வொரு துளியும், யாரோ காரி துப்பது போலயே இருக்கு. எளவு ரெயிலும் வரல. மழைல மேக்க இருந்த வாற ரயில், தண்டவாளத்துல மண்ணு விழுந்ததுல லேட்டாம். என்ன செய்ய? எந்திரிச்சு வீட்டுக்குப் போயிட்டேன். வீட்டுக்கு நடக்கும் போது தோணுகு, என்ன காரியம் பண்ண பாத்தேன். ரெண்டு பிள்ளைகளு இருக்கே! மறந்து போயிட்டேனே! அப்பா ஒக்காந்து வெஷயத்த சொன்னா ரெண்டும் புரிஞ்சிக்குமே. எம் பிள்ளைகளுல்லா. தங்க கொடம்லா ரெண்டும். சானல் கரைல ஆலமூட்டு எசக்கி நிப்பா. அவ நடைல விழுந்து அழுகேன். என்ன எதுக்கும்மா இப்படி ஆக்கிப்போட்டேன்னு,” அழ ஆரம்பித்தவர், பற்களை நற நறவென்று கடித்தார். கைகளை வீசி நெஞ்சில் அறைந்தார்.

சுற்றி நின்றவர்கள் எங்களையே வெறிக்க, அவரை சமாதானப்படுத்த முயன்றேன். தோள்களைத் தட்டிக்கொடுத்தேன். கண்களைத் துடைத்து பற்கள் தெரிய சிரித்தவர், “அடுத்த நாளு மூத்தவளும், எளையவளும் வீட்டு நடைல வந்து நிக்காளுக. ஆசுவத்திரி போக சக்கரத்த நீட்டிட்டு, மாச மாசம் கொஞ்சம் தாறோம், இனிமேலுக்கும் அந்த தேவிடியா வீட்டு நடைல போயி நிக்க கூடாது, அவதான் கேவலப்படுத்துகான்னா! நீயும் கூடச் சேந்துட்டியான்னு ஏசிட்டு போயிட்டாளுக. வாழதக்கு ஒரு பிடித்தம் வேணும்ல்லா. ஏதோ ஒன்னு ‘நீ வாழணும்ல மயிரே’ன்னு உள்ளுக்குள்ள சொல்லணும். எனக்கு அப்படி ஒன்னும் இல்லையே. ஆனா அந்த தாயோளி மவன் சாவாம, எனக்கு சாக்காலம் கெடையாது. வெள்ளையும் சொள்ளையுமா அலையான். அவன் கொடுக்கிற சக்கரத்த கோயிலுல வாங்கலாமா? நாறப்பயக்க, பாக்கெட்டுல நாலு சக்கரம் இருக்கவன், பலவட்டறையா இருந்தா என்ன? கள்ளனா இருந்தா என்ன? நாளைக்கு ஏதோ கோயில் கும்பாபிசேகத்துல போயி ஈஈன்னு நிப்பான். எல்லாவனும் ஊளக்கும்பிடு போடுவானுவ. அசோகனோ, மனோகரனோ பழைய படத்துல பேசுவான் பாத்திருக்கியா தம்பி, ‘இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமா போகட்டும்’ன்னி அந்த மாதிரி தான் நடக்கும்.” அமைதியானார்.

“அவங்கள அவன்ட்ட இருந்து கூட்டிட்டு வர முடியாதா?”
“அவளுக்கு இருக்க சோக்கேடுக்கு மருந்து கெடையாது. பட்டுதான் திருந்தும்.” சிரித்தபடியே, “நம்ம மனசுல செலது உச்சமாக்கும். அகங்காரம், அதிகாரம், அழகு இதுலாம். கவர்ச்சில்லா, இழுத்துட்டுப் போயிடும். ஆனா, இதுலாம் இருக்கும் போது பீத்திட்டே அழைய கூடாது. அதுவா ஆறணும். இல்ல அழிச்சிப்போடும். அவ பாவம். எனக்குத் தெரியும். அந்தப் பய சாதாரணமா சாவ மாட்டான். எவனாச்சும் கொல்லுவான். அவன் ஏத்தி வச்சுருக்கிற சொமடு அப்படி. எனக்கு ஊக்கம் இருந்தா நானே பண்ணுவேனே.” உரக்கச் சிரித்தார்.

இரவு எப்படி வீட்டிற்கு வந்தேன் என்பது நினைவிலில்லை. அன்றைக்கு இருவரும் சேர்ந்து ஆர்.எம் புரோட்டா கடையில் உணவருந்திருக்கிறோம். நான் அவரை அவருடைய வீட்டில் இறக்கி விட்டிருக்கிறேன். அவரைச் சந்தித்த பிறகு தான் அப்பாவை கவனிக்க ஆரம்பித்தேன். கோயிலுக்கே செல்லாதவர் சில நாட்களாக கோயிலுக்குச் செல்கிறார். பேச்சில் எப்போதுமிருக்கும் கெட்ட வார்த்தைகள் இப்போதில்லை. அதிகம் சாப்பிடுவதில்லை, மௌனமாகவே இருப்பார். சாய்வு நாற்காலியில் ஈரம் பொதிந்த விழிகள் திறந்திருக்க வெகு நேரம் அமர்ந்திருப்பார். தன்னுடைய இறப்பு தொலைவில் இல்லை என்பது போல, மெதுவாக வாழ ஆரம்பித்தார். உண்மையில் நானும் அதிகம் மாற ஆரம்பித்திருந்தேன். தெரிந்து செய்யும் தவறுகள் என்னை பயமுறுத்த ஆரம்பித்தன. சில நேரங்களில் நான் செய்பவை எல்லாம் முட்டாள்த்தனமாக தோன்றும். யாரையும் திட்ட முடியவில்லை. தொழிலில் நேர்மையாக இருக்கலாம் என்றெண்ணி சுற்றியிருப்பவர்களால் கேலிக்கு ஆளானேன். என்னுடைய நண்பனை அதற்குப் பிறகு இருமுறை பார்த்தும், தொண்டையில் ஏறியிறங்கும் கனத்தால் பேச இயலாமல் முகத்தை திருப்பியுள்ளேன். என்னுடைய சுமடு, கவசம் போல எப்போதும் என்னை சுற்றி வட்டமிட்டபடியே இருப்பது போலத் தோன்றும்.

அவரைப் பற்றி சிந்தித்ததில் நேரம் கடந்ததே தெரியவில்லை. மணி பன்னிரெண்டு ஆகவும் இருச்சக்கர வாகனத்தை ஓட்டி பேருந்து நிலையத்திற்கு எதிரில் இருக்கும் மதுக்கடைக்குச் சென்றேன். அங்கே அவர் இல்லை. நகரில் இருக்கும் எல்லா மதுக்கடைகளுக்கும் சென்றேன். ஏன் செல்கிறேன் என்றெல்லாம் பிரக்ஞையே இல்லை. மணி அண்ணனைப் பார்க்க வேண்டும், அவர் எப்படிப்பட்ட மனநிலையில் இருக்கிறார் என்று தெரிந்து கொள்ள வேண்டும். வெயில் காட்டமாக அடிக்க, வியர்வையில் சட்டை நனைந்தது. எவ்வளவு நேரம் நகரம் முழுக்க அலைந்தேன் எனத் தெரியவில்லை. பேருந்து நிலையத்திற்கு எதிரில் இருக்கும் மதுக்கடைக்கு மட்டும் ஆறு முறை சென்றேன். மணி அண்ணன் எங்குமே இல்லை. இரவு தான் வீட்டிற்குத் திரும்பினேன். மாலை வெளிவரும் செய்தித்தாளில் வடிவேல் மாரடைப்பால் இறந்தார் எனத் தெரிந்து கொண்டேன்.

உறங்கும் முன் அப்பா என் அறைக்கு வந்தார், “வடிவேலு செத்துப் போயிட்டான் பாத்தியா. சந்தைல இருக்கும் போது பழக்கம் உண்டு. என்னன்ன பண்ணினான். என்னய விட சின்னப் பய. பயமா இருக்குப்போ,” சொல்லிவிட்டு என் பதிலை எதிர்ப்பார்க்காமல் திரும்பிச் சென்றார்.

சில நாட்களிலேயே மணி அண்ணனை மறந்து போனேன். அப்பாவிற்கு காலிலுள்ள புண் கரண்டை வரைக்கும் பரவி, வலது கால் மூட்டிற்கு கீழே முழுக்க எடுக்கப்பட்டது. அப்பாவை கவனித்துக் கொள்ளவும் அக்காவை ஊருக்கு அனுப்பவில்லை. அப்பா கட்டிலிலேயே கிடந்தார். கடைசியில் அப்பாவோடு பழக்கமிருந்த பெண்ணொருத்தி அவரை கவனித்துக் கொள்ள வீட்டிற்கு வர ஆரம்பித்தார். நானும் எதுவும் கேட்கவில்லை. ஒவ்வொரு நாளும் ஏனோ நீண்டு கழிந்தது.

ஒரு நாள் வழக்கமாக செல்லும் கடைக்குச் சென்றேன். வழக்கமான பியர் ஒன்றை கொண்டுவரச் சொல்லி எப்பொழுதும் அமரும் மேஜையில் அமர்ந்தேன். தூரத்தில் ஒருவர் காவி வேட்டியும், வெள்ளைச் சட்டையும் அணிந்து அமர்ந்திருக்க கூர்ந்து கவனித்தேன். மணி அண்ணன் அமர்ந்திருந்தார். எனக்கு பதட்டமானது. அன்றைக்கு பார்த்ததற்கு மாறாக சுத்தமான வெள்ளைச் சட்டையும், காவி வேட்டியும் அணிந்திருந்தார். சவரம் செய்திருந்த முகம். நெற்றியில் அதே திறுநீறும் மஞ்சணையும். சிரித்த முகத்தோடு அமர்ந்திருந்தார். எழுந்து அவர் அருகில் சென்றேன். என்னைப் பார்த்ததும்,

“தம்பிய ஓர்ம இருக்கு. நீயூஸ் தெரிஞ்சிருக்குமே. வடிவேல் செத்து ஆறு மாசம் இருக்காது. தாயோளி, சொன்னேன்ல்லா சீக்கிரம் சாவான்னு.” குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார். நான் இமைக்காமல் அவரையே பார்க்க, கையைப் பிடித்து இழுத்து, “ஒக்காருங்க. என்ன வேணும் சொல்லுங்க. இன்னைக்கு நம்ம டீரீட்,” என்றார்.
நான் அமரவும், “மாரடைப்புலாம் இல்ல தெரியுமா. கொலை.” மெதுவாகச் சொன்னார்.
நான் அமைதியாக இருக்கவே, “வேற யாருமில்ல. அவனுக்க பொண்டாட்டி தான். ஆட்டுக்கெடா வேற வேற மந்தைல ஏறிச்சுல்ல. பொட்ட வெஷம் வெச்சுட்டா. கூட கூட்டு யாரு தெரியுமா?” ஊமைச்சிரிப்பு ஒன்றை உதிர்த்தார்.

“மாவட்டச் செயலாளரு தான் பிளான். அவளுக்க புது கனெக்ஷன். காலம் எப்படி மாறுது பாத்தீங்களா. ரெண்டு எலெக்ஷன்லயும் தோத்தானுவல்லா. இந்த வாட்டி நம்ம தொகுதி லேடிஸுக்காம். அவனுக்க பொண்டாட்டிதான் அவன அரசியல்ல பொம்மை கணக்கா ஆட்டி வச்சிருக்கா, இந்தப் பயலுக்கு எப்படி இவ்வளவு மண்டன்னு பாத்தேன். இப்போ செத்துட்டான்லா. இவதான் இந்த தடவ எலெக்ஷன்ல நிப்பா. அனுதாப ஓட்டுல்லா ஒவ்வொன்னும். ஜெயிச்சுருவா. அவனுக்க வெனை கடைசில வீட்டுலயே இருந்துருக்கு. இதாக்கும் கருமம். அவன் அவன் கருமம் கூடயேத்தான் இருக்கும். போஸ்ட்மார்ட்டத்துல கார்டியாக் அரெஸ்ட்டுன்னு எழுதி வாங்கிட்டானுவ. எல்லாத்துக்கும் ரூவா தான.” சிரித்தார். சிரிக்கும் போது இடைவெளி விழுந்த பற்கள் ஒட்டியிருப்பதை போலத் தெரிந்தன.

அவர் பேசிக்கொண்டிருப்பதைப் பார்க்கும் போது அன்றைக்குப் பார்த்த மணி அண்ணன் போலில்லை. வேறு யாரோ போல பேசினார். அதற்கு மேல் அங்கிருக்க தோன்றவில்லை. எழுந்து போகவே மனம் சொல்லியது. அவருடைய கைப்பேசி அலறவே, அழைப்பை ஏற்று பேச ஆரம்பித்தார், “எட்டி, நான் கடைல இருந்து எறங்கவும் ஃபோன் அடிக்கேன்.” அழைப்பைத் துண்டித்தார்.

எதிர்முனையில் பேசியவர் யார் என யோசித்தபடியே அவரைப் பார்க்க, அவரின் முகம் இருண்டது. பதில் எதுவும் பேசாமல் நான் எழவும், அவர் தலையைத் தாழ்த்தி அமைதியானார். அங்கிருந்து கிளம்பவும் ஏனோ உள்ளுக்குள் அப்பாவே நிறைய, வந்த சிரிப்பை அடக்க முடியாமல், என்னையறியாமல் “கருமம்” என இருமுறை சொல்லிக்கொண்டேன்.

வைரவன் லெ.ரா

வைரவன் லெ.ரா நாகர்கோயிலைச் சேர்ந்த எழுத்தாளர். தமிழில் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். தற்போது பெங்களூரில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வருகிறார்.

தமிழ் விக்கியில் 

2 Comments

  1. மனிதன் அறம் அறம் சார்ந்த வாழ்க்கை வாழ படைக்கப் பட்டிருப்பது போல தெரிந்தாலும் ஆதிமனிதன் விலங்காக திரிந்த காலம் அதிகம் அதன் தாக்கமும் விழைவும் அல்லது விதி இப்படித்தானென்றால் என்ன செய்வான் உள்ளுணர்வின் கூக்குரலை செவிமெடுக்கும் வரை போராட்டம் பேராசை தான் வாழ்க்கை அதில் கருமம் ஒரு துளி

  2. இன்னுமா இந்த மாதிரி கதை எழுதுறீங்க.. கொஞ்சம் புதுசா முயற்சி செய்யவும்.. இப்படியே போனால் வைரவன் பழையவன் ஆகிவிடுவார்.. தேர்வு குழு பிரமாதம்…

உரையாடலுக்கு

Your email address will not be published.