வ.அ. இராசரத்தினம் கதைகளும் மனிதர்களும் : ஜிஃப்ரி ஹாசன்

தமிழ் இலக்கிய உலகில் வ.அ. என அறியப்படுபவர் வ.அ. இராசரத்தினம். கிழக்கிலங்கையின் திருகோணமலையைச் சேர்ந்தவர். புனைவழகியல் மிக்க மொழியில் அவர் தன் படைப்புகளை எழுதினார். 1940 களில் எழுத வந்தவர் என்ற வகையில், அவரை ஈழத்தின் முன்னோடிச் சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவராகக் கொள்ளலாம். தவிர்க்க முடியாமல் அக்காலப்பகுதியின் ஈழத்து இலக்கியத்தின் மையச் செல்நெறியான முற்போக்கு என்ற எல்லைக்குள்ளேயே அவரும் தன்னை நிறுவிக்கொள்ள வேண்டி இருந்தது. எனினும் முற்போக்கு கருத்தியலை அவ்வப்போது அவர் கடந்து சென்ற சம்பவங்களும் நிகழ்ந்திருப்பதற்கு அவரது சில கதைகள் சாட்சியாக இருக்கின்றன.

துறைக்காரன், கொழுகொம்பு, கிரௌஞ்சப் பறவைகள், ஒரு வெண்மணற் கிராமம் காத்துக் கொண்டிருக்கின்றது ஆகிய நான்கு நாவல்களை எழுதினார். ஒரு காவியம் நிறைவு பெறுகிறது, தோணி உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்தன. ஒரு காவியம் நிறைவு பெறுகிறது குறுநாவலளவு நீளமான கதை. ஈழ எழுத்தாளர்களில் இலக்கியத்தையும், இலக்கியச் செயற்பாட்டையும் தன் வாழ்வின் முக்கிய பகுதியாக அமைத்துக்கொண்ட எழுத்தாளர்களுள் வ.அ.வும் ஒருவர். தனது இலக்கிய செயற்பாடுகளுக்காகவே சொந்த அச்சுக்கூடம் ஒன்றையும் நிறுவிச் செயற்பட்டவர் அவர்.

வ.அ.வின் படைப்பு மொழி உண்மையில் படைப்பு சார்ந்து தமிழகம்-ஈழம் என்ற பிரிகோட்டை அழித்தது. இதனால் தமிழ் தரத்துக்கு அப்போதே ஈழப் படைப்புகளைக் கொண்டு சென்ற மிகச் சொற்பமான ஈழப்படைப்பாளிகளின் வரிசையில் வ.அ.வும் இடம்பெறக்கூடியவர். ஈழ எழுத்தாளர்களில் மிக அரிதாகவே இத்தகைய இலக்கிய அழகியலுடன் கூடிய மொழியும், வாழ்வு குறித்து நுணுக்கமான அவதானமும் கொண்ட எழுத்தாளர்களைக் காணலாம். அதிலும் குறிப்பாக ஈழத்தின் முன்னோடிப் படைப்பாளிகளின் எழுத்துகள் இலக்கிய அழகியல் மீதோ வாழ்வின் பல்வேறு தரிசனங்கள் மீதோ பெரிதளவு கவனமின்றி எழுதப்பட்டவைதான். படைப்பின் உள்ளீடு மட்டுமே அவர்களால் மிக கவனமாகத் தேர்வுசெய்யப்பட்டன. அப்போது போடப்பட்டிருந்த முற்போக்கு அரசியல் நோக்கின் தனித்த பாதையில் தங்களுக்கான அடையாளங்களை படைப்பாளிகள் தேடினர். தங்களின் இலக்கியச் சேரிடமாக (Literary destination) அவர்கள் சமூக சமத்துவக் கனவைக் கருதினர். இதனால் பெரும்பாலும் எல்லோரும் ஒரு புள்ளியில் சந்தித்தனர். பின்னர் இது போன்றதொரு நிகழ்வை போர்க்கால ஈழக்கவிஞர்களிடமும் கண்டோம். எண்பதுகளுக்குப் பின்னர் (எம்.ஏ.நுஃமானின் பலஸ்தீனக் கவிதைகளுக்குப் பின்) போரும் வாழ்வும் சார்ந்த கவிதைகளே ஈழக்கவிதைகளின் அடையாளமாக மாறியது. அங்கும் ஈழக்கவிஞர்கள் அனைவரும் ஒரே புள்ளியில் சந்தித்துக் கொண்டனர்.

அதனால் தனித்துவமான பயணங்கள் பெரியளவில் ஈழத்தில் இக்காலப்பகுதியில் (முற்போக்குக் காலம்) நடந்தேறவில்லை. தங்களை ஒரு குறித்த எல்லைக்குள் நிலைப்படுத்திக் கொள்வதில் அதீத அக்கறை எடுத்துக்கொண்டு எழுதினர். புனைவழகியல் மொழி கொண்ட சில படைப்பாளிகளையும் அந்நிலைமை பாதித்தமை ஈழ இலக்கியத்தின் எழுச்சிக்கு ஒரு வரையறுத்த தடையை ஏற்படுத்தி விட்டது என்றே நான் கருதுவேன்.

வ.அ. தன் முதல்நிலை ஆசிரியர்களாக புதுமைப்பித்தன், வல்லிக்கண்ணன், சிதம்பர ரகுநாதன், கு. அழகிரிசாமி போன்றோரைக் கருதினார். வ.அ. வின் தொடக்கக் கதைகளில் புதுமைப்பித்தனின் தாக்கம் இழையோடுவது உண்மைதான் ஆனால் புதுமைப்பித்தனிடம் வெளிப்படும் சமூக விமர்சனத்தின் ஆழமும், அழகியலும் வ.அ.விடம் ஒரு குறித்த கோட்பாட்டின் அடிப்படைபியலேயே முன்வைக்கப்படுவதைக் காண்கிறோம். அதனால் அந்த சமூக விமர்சனம் தங்குதடையின்றி வ.அ.விடம் வெளிப்படுவதில்லை. ஆயினும், தனது கதை மொழி, அழகியல் விவரணம் போன்றவற்றில் ஈழப்படைப்பாளிகளிடையே உச்சமாகத் தன்னைத் தகவமைத்து தனது வெற்றிகரமான பக்கத்தை நிறுவியவர். வ.அ. வின் புனைவுலகு நூறுக்கு மேற்பட்ட கதைகளாலும், நான்கு நாவல்களாலும் ஆனது. இதில் அவர் சிருஷ்டித்த மானுடர்கள் சாமான்ய கீழ்த்தட்டு மக்களின் வாழ்க்கைப் பாடுகளையும், நெருக்கடிகளையும், அதன் சாரத்தையும் பிரதிபலிப்பவர்கள். வாழ்க்கையின் மிக எளிய கனவுகளைச் சுமந்த மனிதர்கள்.

பெரும்பாலும் விவசாயிகளும், மீனவர்களுமே அவரது படைப்புலக மனிதர்களாக உள்ளனர். எப்போதும் சமூக அடுக்கமைவில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் கீழ்மைப்படுத்தப்பட்ட மனிதர்களின் அகக்காயங்களுடனேயே அவர் திரும்பத் திரும்ப இடைவினை செய்தார். இந்த ஊடாட்டம் (முற்போக்குக் கருத்தியலின் செல்வாக்கு இருந்தாலும்) அவரால் வேண்டுமென்றே செய்யப்பட்ட ஒரு செயற்கையான கவனயீர்ப்பல்ல என்றும் சிலவேளைகளில் தோன்றுகிறது. அவர் வாழ்ந்து கொண்டிருந்த மக்களிடம் கண்ணுற்ற அல்லது அனுபவித்த கூட்டுத் துயரம்தான் அவரது கதைகளின் மையமாக இருக்கிறது. இந்த வாழ்க்கை வட்டத்தையே அவரது படைப்பின் மையச் சுழற்சியாக மாற்றியதில் அப்போதைய முற்போக்கு விமர்சனச் சூழலுக்கு மறைமுகமான பங்களிப்பு இருந்திருக்கலாம். இது அவரது படைப்பூக்கத்துக்கு ஈழ விமர்சனத்தளத்தில் அறிவுஜீவிகளால் ஏற்படுத்தப்பட்ட சவாலாகும். இந்த சவால் மட்டும் இல்லாதிருந்திருந்தால் அப்போதே ஈழத்தில் வேறு சாதனைகள் நிகழ்ந்திருக்கலாம். அதற்கான முழுத்தகுதியும் கொண்டிருந்தவர் வ.அ.

வ.அ. தன் புனைவுலகில் சிருஷ்டித்த கதாபாத்திரங்கள் மிகச் சாதாரண மனிதர்கள் என்பதைப் போலவே தமிழ்ச் சமூகத்தின் எல்லாத் தரப்பையும் சேர்ந்தவர்கள். தமிழ்ச் சமூகத்தின் பல்வேறு வாழ்நிலைமைகளை, தமிழ்ப் பண்பாட்டின் வெவ்வேறு தளங்களைப் பிரதிபலித்தவர்கள். அவரது புனைவுலகத்துக்குள் இந்து, கிறிஸ்த்தவ, இஸ்லாமியப் பண்பாடுகளும் அதன் கதாபாத்திரங்களும் தமிழ்ச் சமூகத்தின் விரிந்த பண்பாட்டுத் தளத்தையும், வாழ்வியல் கோலத்தையும் பிரதிபலிக்கின்றனர். தமிழர்களை ஒரு மத எல்லைக்குள் மட்டுப்படுத்தி அவர் தன் புனைவுலகை சுருக்கிக் கொள்ளவில்லை. கருத்தியல்ரீதியாக தமிழ்ப்பண்பாடு குறித்த இந்த ஆழமான புரிதலை கா.சிவத்தம்பி, எம்.ஏ. நுஃமான் போன்றோர் வெளிப்படுத்தி இருந்தனர்.

வ.அ. தன் படைப்பு மனத்தை ஒரு பரந்தவெளிக்குள் பொருத்திப் பார்த்தார். அவரும் மதத்தை முன்னிறுத்தி தமிழ்ச்சமூகத்தை ஒரு குறுகலான தளத்தில் நின்று புரிந்துகொள்ளமால் மொழியை வைத்தே தமிழ்ச் சமூகத்தை தன் படைப்புகளின் வழியே உற்றுநோக்கினார். இதனால்தான் அவரால் இஸ்லாமியரினதும், கிறிஸ்தவர்களினதும், இந்துக்களினதும் சமூக வாழ்வியலையும், பண்பாட்டு வாழ்வையும் தமிழின் வரிந்த படைப்புவெளியில் பதிவுசெய்ய முடிந்திருக்கிறது. தமிழ்ச் சமூக அடையாளம் வெறும் மதங்களால் கூறுபடுத்தப்படுவதை எதிர்க்கும் அவரது மனநிலையை அவரது பெரும்பாலன படைப்புகளில் காண்கிறோம். உதாரணமாக, அறுவடை, தலாக், அபேதவாதி போன்ற கதைகளை எடுத்துக்காட்டலாம்.

சாமான்ய மனிதர்களின் வாழ்வை அதன் அந்தரங்கங்கத்துக்குள் ஆழமாக ஊடுறுவி விசாரணை செய்யும் வகை எழுத்துகளைத் தருவது அவ்வளவு எளிதானதல்ல. அந்த மக்களின் வாழ்வியலை அந்த மனிதர்களின் அகத்தையும், புறத்தையும் நெருங்கி அறிய அவர்களுடன் ஒரு படைப்பாளி நெருங்கி ஊடாட வேண்டும். போகிற போக்கில் கதையை எழுதிவிட்டு போக விரும்பும் ஒரு எழுத்தாளனால் இந்த வாழ்வை அவ்வளவு ஆழமாக பதிவுசெய்ய முடியாது. அவர் எழுதும் பெரும்பாலான மனிதர்கள் அவர் சொல்வதைப் போன்று “ஆரம்பப் பாடசாலைக்கேனும் சென்றிராத” மனிதர்கள்தான். அறுவடை கதையில் வரும் அப்துல்லா இத்தகையதொரு மனிதன். அவனை ஒத்த மனிதர்களின் கலைஞனாகவே வ.அ. தன்னை வெளிப்படுத்துகிறார். ஒரு விவசாயியான அப்துல்லாவின் வாழ்க்கையையோ அல்லது அவனை ஒத்த விவசாயிகளின் வாழ்க்கையையோ எழுதும் போது, ஒரு விவசாயியைப் போலவே அந்த வாழ்வின் எல்லாப் பரிமாணங்களையும் அறிந்துகொண்டு கதைக்குள் கொண்டு வருகிறார். அவர்கள் தங்களுக்குள் கையாளும் வழக்குச் சொற்களைக்கூட அதன் அசலான புரிதலோடு வ.அ. கொண்டு வருகிறார். வயலோடும், வேளாண்மையோடும் சம்பந்தப்பட்ட பிரத்தியேகமான மொழியையும், சொற்களையும் தேர்வுசெய்து கையாள்கிறார். விவசாயிகளிடம் மட்டுமே புழக்கத்திலுள்ள வழக்குச் சொற்களையும், அதன் பிரயோகங்களையும் கொண்டு வ.அ. தன் கதைகளை உயிர்ப்புள்ளதாக்குகிறார். கலப்பையன் கொழு, நுகத்தடி, தலையுழவு எடுத்தல், பரம்படித்து, கார் முடிந்தது, கூதிர் போயிற்று போன்ற சொற்களை எடுத்துக்காட்டாக முன்வைக்கலாம்.

ஈழத்தமிழ் இலக்கிய சூழலில் அதிக கவனத்தைப் பெற்ற அவரது கதை தோணி. கதையில் ‘இன்னமும் தோணி எனக்குக் கனவுப் பொருளாகத்தான் இருக்கின்றது. அதனாலென்ன? உயர்ந்த கனவு செயல்மிக்க நனவின் ஆரம்பம்தான். எப்போதாவது ஒரு நாளைக்குக் காலம் மாறத்தான் போகிறது. அன்றைக்கு எனக்கு மட்டுமல்ல. என் நண்பர்கள் எல்லோருக்குமே சொந்தத் தோணி இருக்கும். எங்கள் தோணிகள் சப்த சமுத்திரங்களிலும் சுதந்திரமாகச் சென்று மீன் பிடிக்கும். அந்த மீன்களை சந்தையில் பகிரங்கமாக விற்போம். விற்ற பணத்திற்குச் சந்தையில் அரிசி வாங்குவோம். அரிசி வாங்கும் பணம் என்னைப் போன்ற உழைப்பாளியான ஒருவனுக்கு நேரடியாகக் கிடைக்கும். அப்போது உழவனுக்கு நிலமும் சொந்தமாக இருக்கும் அல்லவா?’
தோணிக்கு ஏங்கும் ஒரு சிறுவனின் ஏக்கம் கதையை செறிவூட்டுகிறது. சாமான்ய மீனவன் ஒருவனுக்கு மாபெருங்கனவாக இருக்கும் தோணி அவனது மொத்த வாழ்வினதும் உருவகமாகத் தெரிகிறது. அலைகளில் அல்லாடும் தோணி போன்றது அந்த மக்களின் வாழ்க்கை. அது கூட சொந்தமற்றது. இன்னொரு விதத்தில் சொன்னால் நிஜமற்றது. எட்டாக் கனவு போன்றது. தோணியின் கதைநாயகனான சிறுவன் சொல்லும் இந்த வார்த்தைகள் முழுக்க அரசியல் சாயத்துடனும் முற்போக்கு முகத்துடனும் இருந்தாலும் அவனது ஏக்கம் நம்மைப் பிராண்டுகிறது. அவனது கனவு ஒரு தனிமனிதக்கனவு என்ற நிலையிலிருந்து ஒரு சமூகக் கூட்டுக் கனவு எனும் பரிமாணத்தைப் பெறுகிறது. அதனாலேயே அது அரசியலாகவும் ஆகிறது. இந்த கதைக்குள் அரசியல் சித்தாந்தத்தை கலக்காமல் ஒரு அற்புதமான புனைவாக வ.அ. வால் வளர்த்தெடுத்திருக்க முடியும் என்றே எனக்குத் தோன்றுகிறது.

சமமற்ற மக்களுக்கிடையேயான இடைவெளிக்குள் மறைந்திருக்கும் இதுபோன்ற ஏக்கமும், துடிப்பும் கிட்டத்தட்ட எல்லாக் கதைகளுக்குள்ளும் நிறைந்திருக்கிறது. அறுவடை கதையில் வரும் சாமான்யனான அப்துல்லா ஹாஜியாரின் கம்பளிப் போர்வையைப் பார்த்து ஏங்கும் போது, தோணி கதையில் தோணிக்காக ஏங்கும் சிறுவனும் கூடவே நினைவுக்கு வருகிறான்.

வ.அ. சம்பவங்களை மட்டுமே பதிவுசெய்யும் ஒரு படைப்பாளி அல்ல. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அதைத் தாண்டியும் செல்கிறார். அறுவடை கதையில் நிலச்சுவாந்தர்கள் மீதான கூரிய விமர்சனத்தையும் அவர்களின் சுரண்டலை நிராகரிக்கும் கலகத்தன்மையையும் இந்தக் கதையின் முக்கிய பண்பாக அமைக்கிறார். போடிமார்களின் நில ஆதிக்கத்தின் மீதும், சமமற்ற நிலப்பங்கீட்டின் மீதும் சாமான்ய மக்களிடம் இருந்த குமுறலை கதைக்குள் கொண்டு வந்திருக்கிறார். “உழுபவனுக்கே நிலம்..” என ஒரு கதாபாத்திரத்தின் மூலம் அறிவிக்கிறார். கோயில் பூசாரிகள், முதலாளித்துவ ஒடுக்கும் சக்திகள், மதகுருக்கள் என அனைத்து ஒடுக்கும் சக்திகள் குறித்தும் வ.அ. விடம் கடுமையான விமர்சனங்கள் இருந்தன.

பொருளாதார அடித்தட்டில் இருக்கும் ஒரு மனிதனின் வாழ்வியல் சவால்கள் எல்லையற்றவை. அவற்றுடன் போராடி வாழ்வது மிகவும் சவால் நிறைந்தது. அதில் தோற்றுப்போகும் மனிதர்களே வ.அ. வின் கதைகளில் அதிகம் வருகின்றனர். அப்துல்லாவுக்கும் மகனின் சுன்னத், மகளின் திருமணம் என நிறையத் தேவைகள் இருந்தன. ஹாஜியாரான போடியார் ஒருவரின் வயலை குத்தகைக்கு எடுத்து வேளாண்மை செய்திருக்கிறான். அதன் விளைச்சல் மீது நம்பிக்கை கொண்டிருந்தான். இரவும் பகலும் உழைத்தான். காவல் காத்தான். அறுவடையை இன்னும் சில நாட்களில் செய்ய முடியும் என மகிழ்ச்சியாக இருந்தான். கடைசியில் ஒரு நாடகீயத் துயரம் நடந்தேறுகிறது. அவன் களைத்து கண்ணயரும் இரவொன்றில் காட்டு விலங்குகள், பன்றிகள் வந்து அவன் வயலை சேதப்படுத்திவிட்டன. இறுதியில் அவன் “அல்லா“ என கதறியபடி மண்ணில் சரிகிறான். அந்த அலறல் பொருளியல், சமூகம், கல்வி, அரசியல் என எல்லாத்தளங்களிலிருந்தும் புறந்தள்ளப்பட்ட ஒட்டுமொத்த சாமான்யரினதும் குரலாக உயர்கிறது. கடைசியில் கடவுளிடம் சரணாகதி அடைகிறது.

வ.அ.வின் பெரும்பாலான கதைகள் இத்தகைய சோக முடிவையே கொண்டிருக்கின்றன. இந்த முடிவு ஒருவகையில் சலிப்பூட்டக்கூடியதாக இருக்கிறது. கதாபாத்திரங்களின் நலிவடைந்த வாழ்வினிடையே துளிர்க்கும் நம்பிக்கையான சூழல் ஒரு தற்காலிக மகிழச்சிதான் என்பதை கதையின் இடைநடுவிலேயே ஊகித்துக் கொள்ள முடிகிறது. இத்தகைய சம்பவங்கள் திரும்பத்திரும்ப அவரது கதைகளில் நிகழ்வதால் இந்த அனுபவம் நமக்கு கிடைக்கிறது. இதனால் கதையின் சுவாரஸ்யம் முடிவில் நீர்த்துப் போவது போன்று உணர்கிறோம். தோணி கதையிலும் இத்தைகயதொரு முடிவையே காண்கிறோம். வ.அ.வின் கதைகளில் ஒரு சமான்யனின் வாழ்வில் நிகழும் துயரங்கள் நித்தியமானவையாகவும், மகிழ்ச்சி தற்காலிகமானதாகவும் இருக்கிறது என்ற முடிவை நோக்கி நாம் வருகிறோம். மனித வாழ்வில் நிகழும் திடீர் திருப்பங்கள் எப்போதும் அவனைத் துயரத்திலேயே ஆழ்த்த வேண்டுமா என்ன? ஒரு சாமான்யனின் வாழ்வு எப்போதும் துயர் நிறைந்தாகவே இருக்க வேண்டும் என்பதே முற்போக்கு விமர்சகர்களின் எதிர்பார்ப்பாக இருந்ததா? இத்தகைய நேர்கோட்டு முடிவுகளை நோக்கி படைப்பாளிகள் அடித்துச் செல்லப்பட அப்போதைய ஈழ விமர்சனச் சூழலே காரணமாக இருந்தது என்றே நம்புகிறேன்.

முதலாளித்துவம், நிலவுடைமை போன்ற கருத்தியல்கள் சாமான்ய மக்களின் வாழ்க்கையோடு கொண்டிருந்த முரணை வ.அ. எழுதியது போன்றே மத ஆதிக்கம் நிலவிய புள்ளிகளையும் தன் கதைகளில் எழுச்சியோடு தொட்டார். கோயில் மணி, அபேதவாதி போன்ற கதைகள் இந்த இடத்தில் நினைவு கூரத்தக்கவை. கோயில் மணி வேதநாயகம் எனும் வாத்தியாரைச் சுற்றி நகரும் கதை. கிறிஸ்த்தவ ஆசாரங்கள் புனிதமாக, அதிகாரமாக சாமான்யர்களை நெருங்கும் போது தன் எதிர்வினையை இந்தக் கதைக்குள் வ.அ. கொண்டு வந்தார். அபேதவாதி கதையும் இத்தகையதொரு தளத்தில் நகரும் கதைதான். கிறிஸ்த்தவ மத ஆசாரங்கள் காலப்போக்கில் சமூகத்தில் அடையும் மாற்றங்கள், தலைமுறை இடைவெளியும் அது குறித்த பதட்டங்களும் கதையை நிறைக்கின்றன.

இராசரத்தினம் ஆசியராகப் பணிபுரிந்து அனுபவங்கள் பெற்றவர். அதனால் பலவித இயல்புகளும் நோக்கும் போக்கும் உடைய ஆசிரியர்களை கதாபாத்திரங்களாகக் கொண்டு பெரும்பாலான கதைகளை எழுதியிருக்கிறார். ஆசிரியர்களது பிரச்சினைகள், வாழ்க்கைச் சிக்கல்கள், குழப்பங்கள், நம்பிக்கைகள், நிலைமைகள் முதலிய பல விஷயங்களை இக்கதைகள் விவரிக்கின்றன. அக்கால இலங்கை சமூக, அரசியற் சூழலில் ஆசிரியர் சமூகத்தின் கூட்டுணர்வுகளும், பிரச்சினைகளும் கூட இந்தக் கதைகளுக்குள் சித்திரமாக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் சில கதைகள் சுயசரிதைத் தன்மை வாய்ந்தவை. ஈழத்தமிழ்ச் சமூகத்தில் எழுத்தாளர்களின் கனவுகளும்கூட முதலாளியத்தின் கனரகச் சில்லுகளுக்குள் சிக்குண்டு சிதைந்த சாமான்ய மானுடத்தின் வலி, ஏக்கங்களுக்கு சமாந்தரமானவைதான் என்பதையும் எழுதி நிறுவினார். அவரது தீர்த்தக்கரை கதை இந்த விடயத்தைப் பேசும் கதைதான். ஒரு எழுத்தாளனின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஒரு புத்தகத்தை வெளிக்கொண்டு வந்து அதன் இழப்பிலிருந்து மீண்டு வருவது பற்றிய ஏக்கம்தான். அந்த எதிர்பார்ப்பின் அழுத்தம் அவரது வாழ்விலும் மிக ஆழமாகப் பதிந்திரக்கிறது என்பதன் குறிகாட்டி அந்தக் கதை. ஈழத் தமிழ்ச்சமூக சூழலில் ஒரு எழுத்தாளனுக்கு இருக்கும் இந்த அச்சம் இன்றுவரை தொடரத்தான் செய்கிறது.
ஒரு காவியம் நிறைவு பெறுகிறது அவரது இலக்கியவாழ்விலும், மொத்த வாழ்விலும் அவரது மனைவியின் இடத்தையும் அதேநேரம் ஒரு கணவன்-மனைவிக்கிடையிலான அன்பையும், இணக்கத்தையும் புனைவழகியலோடு பேசும் கதை. வ.அ.வின் மனைவி அவரது இலக்கியப் பணிக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கியவர். அதனாலேயே அவருக்கு இவ்வளவு அதிகமாக எழுத முடிந்திருக்கிறது. தனது மனைவி இறந்ததும் அவர் அனுபவித்த உணர்வுகளையும், அவரது மனநிலையையும் உணர்ச்சிகரமாக இந்தக் கதை சித்தரிக்கிறது.

முஸ்லிம் வாழ்வியல் மீதான அவரது கரிசனம் கவனத்துக்குரியது. இலங்கைத் தமிழ் முஸ்லிம் வாழ்வியலை ஈழ இலக்கியத்தின் தொடக்க காலகட்டங்களில் புனைவுகளில் கொண்டு வந்தவர் வ.அ. இராசரத்தினம். எடுத்துக்காட்டாக அவரது தலாக் என்கிற கதையைக் குறிப்பிடுவேன். முஸ்லிம் பண்பாட்டுச் சூழலிலும், தமிழ் இலக்கிச் சூழலிலும் அதிக கவனிப்பையும் உரையாடலையும் நிகழ்த்திய கதை இது. இலங்கை, குறிப்பாக கிழக்கிலங்கை முஸ்லிம் பண்பாட்டின் இறுக்கமான தன்மையை ஜாஃபர், பாத்தும்மா எனும் இரு கதாபாத்திரங்களினூடே சித்தரித்துக் காட்டுகிறார். பொதுத்தளத்தில் பேசப்பட வேண்டிய ஆனால் மௌனமாக்கப்பட்டிருந்த முஸ்லிம் பண்பாட்டின் ஓர் இறுக்கமான பண்பாட்டு நடைமுறையை இந்தக் கதை திறந்த உரையாடலுக்கு கொண்டு வருகிறது. இஸ்லாமியரிடையே திருமணத்துக்கு முன் ஓர் ஆணும்-பெண்ணும் பேசிப் பழகி ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதற்கான பண்பாட்டுத் தடை மிக இறுக்கமாக இருந்த காலகட்டத்தில் எழுதப்பட்ட கதை அது. இந்த சூழலால் ஜாஃபர் பாதிக்கப்படுகிறான். அவனது கனவுகளுக்குப் பொருந்தாத பாத்தும்மாவை அவன் திருமணம் செய்ய வேண்டி ஏற்படுகிறது. அதுபோலவே பாத்தும்மாவும் தனக்குப் பொருந்தாத ஜாபரை மணமுடிக்க வேண்டி நேர்கிறது. பின்னர் ஒரு கட்டத்தில் அவர்கள் பிரிந்து செல்கின்றனர். முஸ்லிம் படைப்பாளிகள் கூட பயணிக்க விரும்பாத ஒரு வெளிக்குள் வ.அ. சஞ்சரித்தார். முற்போக்குச் சட்டகத்தை வ.அ. மீறும் சில இடங்களில் இது ஒரு குறிப்பிடத்தக்க புள்ளி.

வ.அ.வின் மொத்தப் படைப்புகளும் அவரது உலகநோக்கின் அடிப்படையில் உருவானவைதான். அவரது உலகநோக்கை முற்போக்கு இலக்கிய விமர்சனச் சூழல் முழுமையாகத் தீர்மானித்திருந்தது. இலக்கியத்தை ஒரு சமூக அலகாக, கூட்டுப் பிரக்ஞைகளை, சிக்கல்களை பேசுபவையாகவே அவரும் கருதினார். தனிமனித உணர்ச்சிகளும் போராட்டங்களையும், வாழ்வு குறித்த நுண்ணோக்குகளையும் அவர் காலத்தேய தமிழகப் படைப்பாளிகள் எவ்வளவு நுண்ணோக்குடன் தன் படைப்புகளில் வெளிப்படுத்தினர் என்பதில் வஅ. போன்ற ஈழப்படைப்பாளிகள் பெரிதளவில் அக்கறை கொள்ளவில்லை. கதையின் மைய உள்ளீடான சமூகப் பிரச்சினைகளில் மட்டுமே கவனம் கொண்டனர். ஒரு சிறு நிகழ்வின் விஸ்தாரமாக ஒரு நிகழ்வைக் கொண்டு செல்லும் நுட்பத்தை கதைகூறலில் பின்பற்றத் தவறினர். பெரும்பாலான கதைகளில் வ.அவுக்கும் ஒரு சிறிய நிகழ்வை முன்வைப்பதற்கு, கதைசொல்வதற்கு நிறைய கதாபாத்திரங்கள் தேவைப்பட்டன. அரசியல் சித்தாந்தம் தேவைப்பட்டது. சமூக சமத்துவம் பேச வேண்டி இருந்தது. தனிமனிதனை அவனது உணர்ச்சிகளை விட சமூகத்தின் தேவைகளையும், சமூகப் பிரக்ஞைகளையுமே முன்னிறுத்த வேண்டி ஏற்பட்டது. எடுத்துக்காட்டாக தோணி கதை. ஒரு சிறுவனின் தோணிக்கான ஆசையை அற்புதமாகச் சித்தரிக்கும் கதை அது. ஆனால் அவனது மனவெழுச்சியும் வேட்கையும் கதையில் பெரிதாகத் திரளவில்லை. அதற்குள்ளும் சமூக கூட்டுணர்வும், முற்போக்குக் கருத்தியலும் ஊடறுத்து கதையின் மையக் குரலை சவாலுக்குள்ளாக்குகிறது. இயல்பான கதையோட்டத்தில் நிகழும் இடையூறான பக்கம் அது. சிறுவனின் கனவுகள் இங்கு புறந்தள்ளப்படடுகின்றன. வேறொன்று வந்து அந்த இடத்தை நிரப்புகிறது.

ஆனால் மறுதலையாக, தமிழகப் படைப்பாளிகள் இதனை கலைத்தன்மையோடும் புனைவுத்தியோடும் வெளிப்படுத்தினர். வெளிப்படையாக அரசியலில் கொண்டு போய் கதையை முடிக்கவில்லை. ஒருவித தர்க்கரீதியான சமூக விமர்சனமாக அதனை முன்வைத்தனர். கதையின் மொத்த அர்த்தமும், அழகியலும், முன்வைக்கும் விமர்சனமும் அதன் முடிவிலேயே அதிகம் வெளிப்படும் இடமாக சித்தரித்தனர். எனவே முடிவு சற்றுப் புதுமையானதாக இருந்தது. முன்னரே ஊகித்துக் கொள்ள முடியாத பூடகத்தன்மையோடு கதை நகர்ந்தது. சில கதைகள் உருவகமாகவும், குறியீடாகவும் ஒரு கருத்தை முன்வைத்து முடிந்தன. இந்தப் போக்கை வ.அ. போன்ற ஈழ எழுத்தாளர்களிடம் காண முடியவில்லை. எடுத்துக்காட்டாக வ.அ.வின் ஆதர்ச எழுத்தாளர்களுள் ஒருவரான கு. அழகிரிசாமியின் திரிபுரம் எனும் கதையை இங்கு எடுத்துக்கொள்கிறேன். விருதுநகரிலிருந்து சாத்தூருக்கு நெருக்கடியான வாழ்வின் பாடுகளோடு வெங்கட்டம்மாளும் கருத்தம்மாவும் நடந்தே செல்கிறார்கள். வறுமையும், பசியும் அவர்களை வதைக்கிறது. சாத்தூர் பஸ் நிலையம் முன்பு ஒரு சூத்தை வெள்ளரிக்காய் கிடக்கிறது. பசியின் கொடுமை இருவரையும் வதைக்கிறது. ஆனாலும் அதை பொறுக்கி உண்ண தன்மானம் தடுக்கிறது. பசியோடு மேலும் நடந்து செல்கிறார்கள். அப்படியே ஆற்றங்கரை மணலில் அயர்ந்து தூங்கிவிடுகிறார்கள். பசிதாங்க முடியவில்லை. பசியைப் போக்க வெங்கட்டம்மாள் தன் உடலை விற்கிறாள். அதன் மூலம் அவளுக்குப் பணம் எளிதாகக் கிடைக்கிறது. சாத்தூர் ரயில் நிலையத்தில் வெங்கட்டம்மாள் அந்தப் பணத்தை இந்தக் கைக்கும், அந்தக் கைக்குமாக சிரித்துக்கொண்டே மாற்றிக் கொண்டிருக்கிறாள். அவள் ஏன் இதனை சிரித்துக் கொண்டு செய்கிறாள். ஓர் அவல வாழ்வின், கொடுமையான நிகழ்ச்சிகளின் முடிவில் அழுது புலம்பித் தீர்க்க வேண்டிய கணத்தில் அவள் சிரிக்கிறாளே என்று நமக்கு யோசனை வருகிறது. ஆனால் அவள் சிரிப்பதன் அர்த்தம் இந்த மனிதர்களின் இழிவை உருவகப்படுத்துகிறது. சாமான்ய மனிதர்களின் வாழ்க்கையை விட இருண்டுவிட்ட உயர்தட்டு மனிதர்களின் மனங்களைப் பார்த்து அவளது சிரிப்பு கேலிசெய்கிறது. போலி பிம்பங்களைப் பார்த்து அருவருக்கிறது. அது- சாமான்யர்கள் இந்த உயர்தட்டு மனிதர்களின் இழிந்த குணத்தை குற்றவுணர்ச்சிக்குள்ளாக்கும் குறியீட்டுச் செயலாக அர்த்தம் கொள்கிறது. ஒருவகையில் பார்த்தால், நேரடியான சித்தரிப்புகளை விட இது போன்ற புனைவுத்திகள் கதையை அழகியல்மயப்படுத்துகின்றன. நம்மீதும் மிகப்பெரிய தாக்கத்தை உண்டுபண்ணுகின்றன. அழகிரிசாமியின் இந்தக் கதைக்குள் தேவையற்ற அரசியல் உட்புகுத்தல்கள் இல்லை. கோட்பாட்டுக் கலப்புகள் வெளிப்படையாக இல்லை. அதனால் கதை இங்கு அதன் இயல்பை இழக்கவில்லை.

இத்தகைய நுண்ணிய நோக்குகள் ஈழ முற்போக்கு எழுத்தாளர்களிடம் வெளிப்படுவதற்கான சூழல் இங்கு நிலவவில்லை. வ.அ. அந்த எல்லையை அவ்வப்போது மீறினாலும் அதனை அவர் முழுமையாகத் தகர்த்து தன்னை நிறுவியவரல்ல.


000

ஜிஃப்ரி ஹாஸன்

கிழக்கு இலங்கையில் பாலைநகர் என்ற கிராமத்தில் பிறந்தவர். குறிப்பிடத்தக்க சிறுகதைகளையும் கவிதைகளையும் இலக்கிய மதிப்பீடுகளையும் எழுதியிருக்கிறார். இவருடைய இலங்கையில் போருக்குப் பின்னரான அரசியல்பற்றிப் பேசும் ‘அரசியல் பௌத்தம்’ என்ற புத்தகம் முக்கியமானது.

உரையாடலுக்கு

Your email address will not be published.