/

ஜே.கிருஷ்ணமூர்த்தி – தத்துவ இன்மையின் ஆன்மீக வெறுமை : நிஷாந்த்

மேற்கத்திய வாசகர்களிடமும் பார்வையாளர்களிடமும் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் தத்துவத்திற்கு நல்ல வரவேற்பு இருந்ததற்கு காரணம் – இரண்டு உலகப் போர்களையும் யூத இனப்படுகொலைகளையும் அடுத்து உருவான தத்துவார்த்த மற்றும் ஆன்மீக வெறுமையை நிரப்பும் தேவைக்கு அது பண்டமாகியதே. ஆலன் வாட்ஸ், ஓஷோ போன்ற மறைஞானிகளும் வியட்நாம் போருக்கு பிந்தைய காலத்திலேயே மேற்கத்திய நாடுகளில் புகழ்பெற்றனர் என்பதை இங்கே கவனிக்க வேண்டும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் நேர்ந்த நிகழ்வுகளே மேற்கில் அத்தகையோரின் கவர்ச்சிகரமான அதிகாரத்துக்கு களம் அமைத்து தந்தன.

பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டிலும் நிகழ்ந்த வரலாற்று சம்பவங்கள் உருவாக்கிய ஆன்மீக சிதைவிலிருந்தே எதிர் கலாச்சார இயக்கங்களும் நாடோடி ஆர்வங்களும் பிரபலமாகின. மேற்கத்திய நாடுகளின் கலங்கிப்போன பயன்பாட்டுவாத மனங்கள், பூர்வீகமான இயற்கை உலகுக்கு திரும்ப வேண்டிய தேவையை உணர்ந்தன. மறைஞானம் அவர்களை ஈர்க்கும் கோட்பாடானது. கிழக்கத்திய கலாச்சார பண்பாடுகளை, தனிமனித காரண அறிவிலிருந்தும் அதி தீவிர பகுத்தறிவுவாதத்திலிருந்து மீட்கக்கூடிய சக்தியாக அவர்கள் பார்த்தார்கள். புத்தொளி காலக்கட்ட லட்சியங்கள் தீய விசைகளாய் எண்ணப்பட்டன. ஒரு சமூகத்தின் ஆன்மீக முன்னேற்றத்தின் தடையாக கருதப்பட்டு கைவிடப்பட்டன. கிழக்கத்திய மரபு “ஆதி காலத்திற்குரியது”, “இயற்கையானது” என்று புகழப்பட்டு ஒரு பிறழ்வான முறையில் கொண்டாடப்பட்டது. இந்த பார்வை காலனியாதிக்கவாதிகளின் பார்வையிலிருந்து எவ்வகையிலும் வேறுபட்டது அல்ல. இந்த பின்னனியிலேயே ஜே.கிருஷ்ணமூர்த்தியையும் நான் அணுகுகிறேன்.

ஜே.கிருஷ்ணமூர்த்தி போன்ற மறைஞானிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவது அவர்களுடைய வசீகரமே. ஆனால் கிருஷ்ணமூர்த்தியின் வசீகரம் பிற கிழக்கத்திய குருக்களிடமிருந்து வித்தியாசப்பட்டது. ஏனென்றால் தன்னுடைய தத்துவம், இப்போது இருக்கிற அல்லது இதுவரை இருந்த எல்லா மரபுகளையும் -அவை கிழக்கோ மேற்கோ- கைவிடுவதாக அவர் சொல்கிறார். தன்னை ஒரு சுதந்திரமான சிந்தனையாளராக முன்வைக்கும் கிருஷ்ணமூர்த்தி தன் சிந்தனாமுறை எந்த தத்துவ மரபினையும் சாராதது என்கிறார். அவரது சமகாலத்தவரான ஓஷோவிடம் வேறு வகையான வசீகரம் இருந்தது. தன் பக்தர்களின் அகங்காரத்தை பேணுவதன் மூலம் ஓஷோ தன் வசீகரத்தை உருவாக்கிக் கொண்டார். ஆனால் கிருஷ்ணமூர்த்தியோ சிந்தனைகளின் சிற்றின்பங்களின் எல்லையை கடந்து விடுதலையை அடைய தன் பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்.

எந்த கேள்விக்கும் பதில் தெரியாத ஓர் எளிமையான சிந்தனையாளர் என்பதே தன்னை பற்றி ஜே.கிருஷ்ணமூர்த்தி முன்வைக்கும் பிம்பம். அவருடைய வசீகரம் என்பது அவர் முன்வைக்கும் “குரு” எனும் பிம்பத்தால் மட்டும் உருவாகிவிடவில்லை. அவரை பின் தொடர்பவர்கள் அதை அப்படியே நம்பி ஏமாறும் அப்பாவிகள் என்றும் சொல்ல வரவில்லை. அவர்களும் அந்த நாடகத்தில் ஈடுபாட்டுடனே பங்கேற்கிறார்கள். உதாரணத்துக்கு, எல்லா உரைகளிலும் பதில் சொல்வதற்கு முன்னால் கிருஷ்ணமூர்த்தி ஓர் இடைவெளி விடுவதை கவனிக்கலாம். அந்த அமைதியான இடைவெளி எதை உணர்த்துகிறது? அந்த அமைதியான இடைவெளி பக்தர்களால் ஞானம் திரளும் தருணமாக கருதப்படுகிறது. இத்தகைய குறியீடுகளுக்கான பார்வையாளர்களின் எதிர்வினைகளே அவருடைய வசீகரத்தின் ஊற்றுமுகமாக இருக்கின்றன.

பல நேரங்களில், தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர் அப்பாவித்தனம் போல் தோன்றும் அசட்டையான முறையிலேயே பதில் அளிக்கிறார்.  அத்தகைய பதில்கள் எப்படி திட்டமிட்டது போன்ற  சிரிப்பலைகளை பார்வையாளர்களிடம் தோற்றுவிக்கிறது என்பதை விளக்கும் பீட்டர் ஈஸ்ட்மேன் மேற்கொண்டு “கிருஷ்ணமூர்த்தி வெறுமனே தன் இருப்பினாலேயே நமக்கு தயவு காட்டுவது போன்ற எண்ணத்தை உருவாக்குகிறார்” என சுட்டிக் காட்டுகிறார். மேம்பட்ட அறிவினால் இல்லாமல், மேம்பட்ட அந்தஸ்தினாலேயே அவர் அதிகாரத்தை பெறுகிறார் என்பது ஈஸ்ட்மேனின் வாதம்.

ஜே.கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனைகளை தத்துவார்த்தமாக விமர்சிக்க முடியாது. ஏனெனில் அவருடைய சிந்தனைகள் தத்துவமே அல்ல. எனில், இங்கு தத்துவம் என்றால் என்ன என்கிற அடிப்படையான கேள்வியை முதலில் கேட்க வேண்டியுள்ளது. அந்த கேள்வியின் பதிலைப் பொருத்தே ஜே. கிருஷ்ணமூர்த்தி பற்றிய மதிப்பீடுகள் அமையும். தெல்யூஸ் மற்றும் கத்தாருடைய பதிலின் அடிப்படையில் கிருஷ்ணமூர்த்தியை மதிப்பிட்டு பார்க்கலாம்.”புதிய கருத்துச்சட்டகங்களை கட்டமைக்கும்  உருவாக்கும் கலையே தத்துவம்.” என்கிறார்கள் அவர்கள்.

ஒரு தத்துவவாதி, உலகைப் பார்ப்பதற்கான புதிய கருத்துச்சட்டகங்களையே உருவாக்குகிறார். இருப்பதைச் சொல்கிறேன் என்பதோ அல்லது இருப்பதை பிரதிபலிக்கிறேன் என்பதோ தத்துவம் ஆகாது. தத்துவம் என்கிற பெயரில் கிருஷ்ணமூர்த்தி முன்வைப்பவை, தட்டையான வசனங்களும் உள்ளீடற்ற கருத்துகளுமே. கிருஷ்ணமூர்த்தியின் தத்துவத்தை அரசியல் தளங்களுக்கு விரித்து விமர்சனம் செய்வது அவருடைய கருத்துகளின் பின்னுள்ள சிந்தனை பள்ளியையும் அதன் ஆழமின்மையையும் எடுத்துக்காட்ட உதவும்.

ஜே.கிருஷ்ணமூர்த்தி தன்னுடைய பேச்சுகளிலும் எழுத்துகளிலும் மிகக் கவனமாக எவ்வித கலாச்சார, அரசியல் மற்றும் மத ரீதியான சொற்களையும் பயன்படுத்த மாட்டார். அதன்மூலம் தன்னை யதார்த்தத்தில் உள்ள அனைத்து சமூக, அரசியல் நிலைமைகளுக்கும் அப்பால் நிறுத்திக் கொள்வார். தன்னுடைய அரசியல் பார்வைகளும் பக்கச்சார்பு அற்றவை என்று உறுதி கூறுவார். ஆனால், அவருடைய கருத்துகளை மேலோட்டமாக கவனித்தாலே அவை தாராளவாத மனிதநேய (liberal humanism) மொழியில் இருப்பதைக் காண முடியும்.

அவருடைய எழுத்துக்களில் மனித மனம் குறித்த கருத்துகள் பொதுப்படையாகவும் ஒற்றைப்படையாகவும் உள்ளன. அவருடைய நோக்கில், மனிதர்கள் தங்களுடைய உளவியல் நெருக்கடிகளை ஈடுகட்டுவே மதங்களையும், அமைப்புகளையும், கருத்தியல்களையும் பின்பற்றுகின்றனர். பயம், பதட்டம் ஆகியவற்றை மனித மனத்தின் இரண்டு அடிப்படைகளாக அவர் கூறுகிறார். மேலும், ஒருவர் அமைப்பொன்றில் இணைவதோ, குழுவோடு தொடர்புபடுத்திக்கொள்வதோ மன பலவீனத்தின் விளைவு என்கிறார். “ஒருவர் இந்து மதத்திற்கோ, பெளத்த மதத்திற்கோ, இஸ்லாமுக்கோ, கிருத்துவத்திற்கோ, கம்யூனிஸத்திற்கோ பற்றோடு இருக்கிறார் எனில் அவருடைய மனம் அடிமைப்பட்டுப்போயிருக்கிறதாக அர்த்தம்“. அனைத்து மதங்களும் ஒன்றே எனும் தர்க்கமானது காலங்காலமாக தாராளவாதிகளிடம் இருந்துவந்துள்ளது. அது மட்டுமின்றி கம்யூனிசமும் ஒரு வகையான மதமே என்கிற கருத்தும் தாராளவாத தரப்பிலிருந்துதான் பெரும்பாலும் முன்வைக்கப்பட்டு வந்துள்ளது.

தாராளவாத மனிதநேயவாதத்தின் அடிப்படையானது மனிதனை தனித்த இருப்பாகவும் உலகிலிருந்து தனியாக இயங்கவல்ல இயந்திரமாகவும் காண்கிறது. எனவே, ஒருவர் தன்னை எதாவது குழுவுடன் அடையாளப்படுத்திக்கொள்வதென்பது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானதாக புரிந்துகொள்ளப்படுகிறது. மனித மனம் குறித்த கிருஷ்ணமூர்த்தியின் கருத்துகள் கார்டீசியன்(Cardesian) தன்மையிலானவையே. மனித மனம் எந்த துணையும் இல்லாமலேயே சுய பிரக்ஞைக்கான (self conscious) திறன் கொண்டது என்ற நம்பிக்கையால் தோன்றுபவை. அவர் தன்னுடைய காலத்தில் பிரபலமாக இருந்த தாராளவாத கருத்துகளை பூடகமான மொழியில் வெளிப்படுத்திக்கொண்டிருந்தார் என்றே சொல்ல முடியும்.

ஜே. கிருஷ்ணமூர்த்தியின் கருத்துகள் விடுதலையையே அதிகமாக வலியுறுத்துகின்றன. மனித அகம் தன்னுடைய முழுமையை எட்டவும் உயிர்ப்புடன் இருக்கவும் விடுதலை அவசியம் என்கிறார் ஜே. கிருஷ்ணமூர்த்தி. விடுதலையின் முதல் நிபந்தனை பயமில்லாமல் இருப்பது என்கிறார். ஆனால், தோற்றவியல் (phenomenology) அடிப்படையில், மனித இருத்தலானது அனைத்து உணர்ச்சி நிலைகளையும் பெற்றமையும்போதே முழுமை பெறுகிறது. பதற்றம், பயம், சோகம் முதலானவை வெளி உலகுடனான நம்முடைய உறவை உறுதிப்படுத்துகின்றன. அவற்றை துறப்பது வெளி உலகுடனான தொடர்பை அறுத்துக்கொள்வது. ஆனால், கிருஷ்ணமூர்த்தியின் தத்துவ பார்வையின்படி உணர்வுகளானது மனித அக விடுதலைக்கான தடைக்கற்கள். நிஜத்தில், உணர்வுகளே நம்மை நாம் நிலைப்படுத்திக்கொள்ளவும் பெளதீக உலகின் தன்மைகளை அறியவும் உதவுகின்றன.

ஒரு மலரையோ, பறவையையோ, தண்ணீரையோ, உங்களுடைய மனைவியையோ கணவரையோ நோக்குபவர் இன்றி அணுக முடியுமா? அதாவது அவர்கள் பற்றிய பிம்பங்கள் இல்லாமல் அவர்களை அணுக முடியுமா என்பதே கேள்வி. அதை செய்து பார்க்கும்போது நீங்கள் எவ்வளவு உன்னிப்பாக கவனம் செலுத்த வேண்டும் என்பதை உணர்வீர்கள். நீங்கள் விரும்பும் நபரையோ காதலிப்பவரையோ அவர்கள் பற்றிய பிம்பமின்றி பார்த்துள்ளீர்களா? நீங்கள் அவர்கள் பற்றி உங்களுக்கு இருக்கும்  பிம்பத்தோடுதான் பெரும்பாலும் உறவாடுகிறீர்கள்; அவர்களுடன் அல்ல. ஆகையால் பிரச்சினைகள் உருவாகின்றன; உண்மையான உறவுகளும் சாத்தியமற்றுப் போகின்றன” . ஒருவரை நாம் அவரைப் பற்றிய அபிப்ராயங்களையும் குறியீட்டு நிர்ணயங்களையும் விலக்கிவிட்டு அணுக வேண்டும் என்கிறார். ஆனால், ஒரு மனிதருடனான உறவு அவரோடு நாம் கொண்டிருக்கும் குறியீட்டு சட்டகத்தினுள்தான் அர்த்தப்படும். உண்மை என்பது எங்கோ நமக்காக காத்துக்கொண்டிருக்கும் தீவு அல்ல. உண்மை என்பது யாரோ ஒருவரின் மூளையில் பிறப்பதில்லை; அது மனிதர்களுக்கிடையிலான உறவாடல்களின் மூலமே சாத்தியப்படுமென்று மிகைல் பக்தின் தஸ்தாயெவ்ஸ்கியின் கவிதையியல் நூலில் கூறுகிறார். நான் என்பது ஜே. கிருஷ்ணமூர்த்தி சொல்வதுபோல தனியாக அந்தரத்தில் உருக்கொள்ளாது. அனைத்து விதமான குறியீட்டு உறவுகளையும் கழித்துவிட்டால் இறுதியில் மிஞ்சுவது உயிரியல் ரீதியான மனித உடல் மட்டுமே.


 கிருஷ்ணமூர்த்தியின் தத்துவம் வரலாறையோ கலாச்சாரத்தையோ கணக்கில் எடுப்பதில்லை. சமூக உறவுகளையே தீண்டாத, வரலாறு நீக்கப்பட்ட கருத்துகள் அவருடையவை. மனித மனம், சமூகம், தனிநபர் ஆகியவை சார்ந்த அவருடைய கருத்துகள் முழுக்க தாராளவாத தன்மையிலானவை. அவர் அனைத்துவகை சிந்தனைகளையும் கருத்துகளையும் மறுத்துக்கொண்டே செல்வார். தன்னை எந்த தத்துவார்த்த தரப்போடும் அடையாளப்படுத்திக்கொள்ள மாட்டார். அதன் அடிநிலையில் அனைத்து வகையான சிந்தனையும், சார்ப்புடையது எனும் ஒரு தட்டையான தர்க்கமும் அவரிடம் உண்டு. அதன் விளைவாக எல்லா வகையான கருத்தியல்களையும், கலாச்சாரங்களையும், நம்பிக்கைகளையும் நிராகரிக்கிறார். அவற்றை தீமையின் உறைவிடமாகவும் சுதந்திர வேட்கையின் எதிரிகளாகவும் கருதுகிறார். 

‘குழு’ என்பதையே பிரச்சினையாக பார்க்கிறார் கிருஷ்ணமூர்த்தி. அது தன்னளவிலேயே பிரச்சினைக்குரியதன்று. அவருடைய நிலைப்பாட்டிலிருந்து ஒரு புரட்சிகர குழுவை அவரால் சிந்திக்கே இடமில்லை. ஏனெனில், அவருடைய தத்துவப்பார்வை, தனிநபர்கள் இயக்கமாவது அவர்களுடைய தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது என்று கருதுகிறது.  “தற்கால உலகில் தனிமனித தேர்வுகளுக்கே இடமில்லை. தனிமனிதன் பின்னுக்குத் தள்ளப்பட்டு ஒரு குழுவே முன்னிலைப்படுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி  ஒரு குழுவால் என்றைக்குமே புரட்சிகரமாக இருக்க முடியாது. அது எப்போதும் ஒன்றையோ ஒருவரையோ பின்பன்றியபடிதான் இருக்கும். ஆனால், தனிமனிதர்தால் மட்டுமே அந்த குழு மனநிலையிலிருந்து தனியாக சிந்தித்து மேலெழ முடியும்.

இது நாம் எனும் வெளிக்கு இடமளிக்காத நவதாராளவாத தர்க்கத்திலிருந்து எவ்வகையிலும் மாறுபட்ட வாதமல்ல. யோசித்துப்பார்த்தால் இன்றைய நவதாராளவாத சமூகத்தில் ஒரு முதலாளி மக்கள் சேவையில் ஈடுபட முடிவெடுப்பதன் மூலம் ‘நல்ல’ முதலாளியாக இருக்க முடியும். கால நிலை மாற்றத்திற்கு முகங்கொடுக்கும் விதமாக ஒரு தனிமனிதரால் ஸோமேட்டோவில் பருவ நிலை மாற்றத்துக்கு உகந்த பண்டத்தை தேர்ந்தெடுக்க முடியும். இவ்வாறு தனிமனித நடவடிக்கைகளைத்தான் சமூக மாற்றத்தின் களனாகக் கொள்கிறது நவதாராளவாத சமூகம். சமூக மாற்றத்தை சாத்தியப்படுத்தும் இயக்கம் சார்ந்த நடவடிக்கைகளுக்கான வெளி சுருங்கிக்கொண்டே வருகிறது.

வன்முறை சார்ந்த அவருடைய கருத்துகளும் தட்டையானவை. “வன்முறைக்கு அப்பால்”(Beyond Violence) எனும் புத்தகத்தில் அவர் வன்முறை குறித்து பின்வருமாறு கூறுகிறார்: “‘நான்’, அதாவது பலவகைகளில் வெளிப்படும் எனது ஈகோ, என்பதுவே வன்முறையின் ஆதாரம்.ஏரியின் மீது எறியப்பட்ட கல்போல அலைகளை ஏற்படுத்தி செல்லும் தன்மையுடையது ‘நான்’. ‘நான்’ என்பது உயிர்ப்புடன் இருக்கிறதெனில் வன்முறையும் உயிர்ப்புடன் இருக்கும்”. உலகத்தில் நிகழும் வன்முறைகளை தனிநபரின் அகம்பாவமாக புரிந்துகொள்ளுவது எவ்வகையிலும் தத்துவப்பார்வை ஆகாது. ஜே. கிருஷ்ணமூர்த்தியைப் பொருத்தளவில் காலனியாதிக்கம் என்பது வெள்ளை இன ஆணின் “நான்” எனும் உணர்வின் விளைவே. அவருடைய கண்ணோடத்தில் வன்முறையின் ஆதாரமே தன்னங்காரம்தான் (Ego).

ஜே.கிருஷ்ணமூர்த்தியின் கருத்துகள் சமூக மற்றும் அரசியல் வெளியை ரத்து செய்கின்றன. எனில் அவருடைய தத்துவம் புறவய வன்முறைகளை (முதலீட்டியம், சாதியமைப்பு, ஏகாதிபத்தியம், காலனியாதிக்கம் முதலியவை) புரிந்துகொள்ள எவ்வகையிலும் உதவுவதில்லை. அவருடைய பார்வையில் வன்முறை என்பது தனிநபர் சார்ந்தது. எனவே ஒருவர் ‘கெட்டவராக’ இருப்பதால் வன்முறையில் ஈடுபடுகிறார். கிருஷ்ணமூர்த்தியின் தத்துவத்தால் வன்முறையின் பல பரிமாணங்களை புரிந்துகொள்ள இயலாது. புறவய வன்முறை சார்ந்தோ, புரட்சிகர வன்முறை சார்ந்தோ அவருடைய தத்துவத்தில் பேச இடமில்லை. ஏனெனில், அவர் வன்முறை குறித்த ஒற்றைப்பரிமாணப் பார்வையை கொண்டுள்ளார்.

சில சூழ்நிலைகளில் புரட்சிகர வன்முறையானது, ஏற்கனவே நிலவும் சமூக ஏற்பாடுகளையும் மக்களை ஒடுக்கும் கட்டுமானங்களையும் தகர்ப்பதற்கு அவசியமானது. காலனியாதிக்கத்திற்கு எதிராக காலனிகளில் இருந்த மக்கள் வன்முறையை பிரயோகிப்பது அவர்களுடைய தன்னங்காரத்தின் விளைவு அல்ல. தங்களுடைய சூழலை மாற்றியமைக்க வேண்டும் என்கிற அரசியல் நடவடிக்கை. மேலும் தங்களுடைய வாழ்க்கை மீதான ஊக்கத்தையும் பற்றையும் உறுதிப்படுத்தும் முறை. கால-இடப் பரிமாணத்தை ஒதுக்கிவிட்டு வன்முறையை புரிந்து கொள்வது வன்முறை சார்ந்த ஒற்றைப் பரிமாண கருதுகோளுக்கே வழிவகுக்கும்.

அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு ஒரே வழியாக ஜே.கிருஷ்ணமூர்த்தி சொல்வது அனைவரும் தங்களை உலகக் குடிமக்களாக உணர வேண்டும் என்பது. அவரைப் பொருத்தளவில் அனைத்து அடையாளங்களும் சிதைவுக்கு வழிவகுப்பவை. அவர் கூறுவதாவது, “நீங்கள் இந்துவாக, இஸ்லாமியராக அல்லது எதுவாக இருந்தாலும் உங்களுடைய அண்டை வீட்டாருக்கோ தேசத்திற்கோ பிரச்சினையாக இருக்கப்போகிறீர்கள்.” ஒரு அரசியல் சூழலின்போது இவ்வாறு உலக குடிமகன் எனும் தரப்பிலிருந்து பேசுவது பொருத்தமற்றது. “ஒருவர் யூதர் என்பதற்காக தாக்கப்படுகிறார் எனில் அவர் தன்னை யூதர் என்று கூறியே தற்காத்துக்கொள்ள வேண்டும். தன்னை ஜெர்மானியராகவோ, உலக குடிமகனாகவோ, மனித உரிமை பெற்றவராகவோ அல்ல.” எனும் ஹன்னா அரெண்ட்டின் கூற்று இங்கு நினைவு கூறத்தக்கது. ஆக, குறிப்பிட்ட அரசியல் பிரச்சினைகளுக்கு அந்தந்த பிரச்சினைகளின் சூழலுக்கு ஏற்பவே சிந்திக்க வேண்டும். உலக குடிமகன் எனும் பொதுமைகளை முன்வைத்துப் பேசுவது அடிப்படையற்றது.        

மேற்கூறிய பிரச்சினைகள் அனைத்தும் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் கருத்துகளில் உள்ள மீபொருண்மை வறட்சியையே சுட்டுகிறது. நம்முடைய சிந்தனையை சுய-மறுப்புக்கு உள்ளாக்குவது ஆன்மீக ரீதியான விடுதலைக்கு வழிவகுக்கும் என்று நாம் நம்ப வேண்டும் என்பதும், ஜே. கிருஷ்ணமூர்த்தி சொல்லும் இயல்பான உண்மை நமக்கு புலப்படாததன் காரணம் நம் ஆன்மீக வறுமையுமே என்பதும் அவருடைய சீடராகுவதற்கான முன்நிபந்தனைகள். அவர் தன்னுடைய கருத்துகளை எளிமையானவையாகவும் சிக்கலற்ற மொழியிலும் வெளிப்படுத்துவார். இந்த சாதாரணமான மொழிக்கு அடியில் இருப்பது ஒரு வெறுமையே. தத்துவ இன்மையின் ஆன்மீக வெறுமை.

கிருஷ்ணமூர்த்தியின் தத்துவத்தை தத்துவார்த்தமான முறையில் விமர்சனம் செய்வது கடினமான பணி. சினிமா பாடல்களை நவீன இலக்கியத்தின் கூறுகளைக் கொண்டு விமர்சனம் செய்து போல பொருத்தமற்ற காரியமுமாகும். ஏற்கனவே நிலவுகிற அரசியல் ஏற்பாட்டை உறுதிப்படுத்தும் தாராளவாத மனிதநேய கருத்துகளை போதிக்கும் ஒரு சுய-முன்னேற்ற குரு  அவர். அதுவே அவருடைய இடம்; தத்துவம் அல்ல.

நிஷாந்த்

சென்னை பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் முதுகலையில் இரண்டாமாண்டு மாணவராக இருக்கிறார். தொடர்ந்து இணைய இதழ்களில் கட்டுரைகள் எழுதி வருகிறார். அரசியல் தத்துவம், மானுடவியல், உளப்பகுப்பாய்வு ஆகிய துறைகளில் ஆர்வமுடையவர்.

1 Comment

  1. JK எழுத்துக்களில் தவறாது வரும் இயற்கை வருணனை, சொற்றொடர் அடுக்குகளை வாசிக்கையில் நேரும் அதிர்ச்சி.. வியப்பு..நேற்றையும் நாளையையும் கைவிட சொல் வழி மேற்கொள்ளும் அறைகூவல் ..இவை தத்துவ தர்க்கங்களின் வளையில் சரியாக சிக்குவத்தில்லை.. “அவர் தத்துவஞானி இல்லை வெறும் சுய முன்னேற்ற குரு”- அதனால் என்ன ஒன்றும் இல்லை..

    JK வின் முதன்மையான ஊடகமான சொற்கள் வழி நீங்கள் உங்கள் எதிர்வினையை எழுதி இருக்கலாம் என்று தோன்றுகிறது…நன்றி

உரையாடலுக்கு

Your email address will not be published.