ராஜப்பா : ஸ்ரீதர் நாராயணன்

“ஒரு செங்கோண முக்கோணத்தின் பக்கங்கள் 4 செமீ மற்றும் 3 செமீ அளவு இருந்தால், அதன் கர்ணம்…”, உரக்க சொல்லிப் பார்த்தான் ராஜப்பா. கணக்குப் பாடத்தை எடுத்தாலே கண்கள் சொக்கி சொக்கி விழுகின்றன. இன்றைக்கு வேறு வழியில்லை. நாலைந்து கணக்குகளாவது போட்டுப் பார்த்தால்தான் நாளைய வகுப்புத் தேர்வில் தப்பிக்க முடியும். போன மாதம் நாற்பது மதிப்பெண்களுடன் வந்ததற்கே அப்பா வெளுத்தெடுத்து விட்டார். ‘ஏழாம்ப்புக்கே இத்தனை முக்கறான். இவனையெல்லாம் உரிச்சு உப்புக்கண்டம் போட்டாத்தான் படிப்பு வரும்”. இப்போதெல்லாம் அப்பா வெகு அயர்ச்சியாக இருப்பது ராஜப்பாவிற்கு தெரிந்திருந்தது. அதனால்தான் இவ்வளவு கோபமெல்லாம். முன்பு இப்படி இல்லை. கைகொள்ளாமல் தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சித் தீர்ப்பார். .

கூடத்தில் அம்மா பேசும் குரல் கேட்டது. கூடவே புதிய குரல் ஒன்றும். இதுதான் சாக்கு என செங்கோண முக்கோணத்தின் கர்ணத்திலிருந்து தப்பித்து கூடத்திற்கு வந்தான்.

“அவர் மில்லிலிருந்து வர்றதுக்கு நேரம் ஆகுமே தம்பி. யூனியன்ல மீட்டிங்கு இருக்குன்னாரு”,

அம்மா யாரோ ஒரு புதியவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். இந்த யூனியன் மீட்டிங்குகள் வேறு, இப்போதெல்லாம் அடிக்கடி வைத்து விடுகிறார்கள். அப்பா தினமும் லேட்டாகத்தான் வருகிறார். போனவாரம் மில் ஊழியர்களெல்லாம் பெரிய ஊர்வலம் கூடப் போனார்கள். புது கம்பெனி மில்லை எடுத்துக் கொண்டுவிடுமாம். “கோட்ஸ் வியல்லா” என்ற சொல்லிப் பார்த்தான் ராஜப்பா. கணக்கு தேற்றம் போல அந்தப் பெயரும் நாக்கில் சுளுக்கு விழுந்தது போல திக்கித் திக்கித்தான் வந்தது. ஊர்வலம் அவர்கள் தெருவழியேதான் போனது. கோபால் மாமாவோடு அப்பாவும் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு போய்க் கொண்டிருந்தார். ராஜப்பாவும் அம்மாவும் வீட்டு வாயிலில் நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவன் உற்சாகமாக கையாட்டினான். கோபால் மாமா பதிலுக்கு சிரித்தபடி கையாட்டினாலும், அப்பா, அவனும் அம்மாவும் நின்று கொண்டிருப்பதைக் கண்டும் காணாததும் போல போய்விட்டார். அவர்களைப் பார்த்தால் சிரித்து கிரித்து வைக்க வேண்டுமே என்பது போல முகத்தை நேராக வைத்துக் கொண்டு, கையைத் தூக்கி கோஷம் போட்டுக் கொண்டு போனார்.

கூடத்தில் அம்மாவின் எதிரில், சற்றேக் கூச்சத்துடன் நின்று கொண்டிருந்த புதியவனைப் பார்க்க வித்தியாசமாக இருந்தது. வரம்பில்லாமள் வளர்ந்து கிடந்த தலைமுடியும், தாடியுமாக ஒரு சோகையான தோற்றத்திலிருந்தான். சற்றே கூன் போட்ட முதுகு. உடைகள் நெடுநாள் பயணம் செய்திருந்ததைக் காட்டின.

அம்மாவின் அசைவில், புதியவன் மீது ஒருவித ஒவ்வாமை தெரிந்தது. ஆனால், அவன் அதையெல்லாம் பற்றி எதுவும் புரியாதவன் போல ஒடுங்கிய பரிதாபமான தோரணையில் பார்த்துக் கொண்டிருந்தான். சட்டையின் பை முனை கிழிந்திருந்தது. விழிகளில் சோர்வு. அம்மா சற்றே உபசரணையாக,

‘உக்காரேன் தம்பி” என்றாள். அறைவாயிலில் நின்றிருந்த ராஜப்பா, அம்மா அவனைத் திரும்பிப் பார்த்ததும், சட்டென அவளருகில் சென்று நின்றுகொண்டான்.

” திருப்பதி அத்தைன்னு சொல்வார்ல அப்பா. அவங்க பையனாம்” என்றாள் அம்மா பொதுவாக. அப்பாவிற்கு தூரத்து உறவு வகையில் ஓர் அத்தை திருப்பதியில் இருப்பது ராஜப்பாவிற்கு தெரியும். ஆனால் இதுநாள்வரை அவர்களின் உறவு என யாரும் மதுரைக்கு வந்ததில்லை.

ஸ்டூலில் அமர்ந்தவன், ராஜப்பாவை நிமிர்ந்து பார்த்து, “என்ன படிக்கிறே” என்றான். குரல் லேசாக திக்கியபடி தீனமாக ஒலித்தது.

“ஏழாம்ப்பு” என்றான் ராஜப்பா.

புதியவன் நிமிர்ந்து அம்மாவைப் பார்த்து, “இங்கதான் ஃபென்னருக்கு டெலிவரி கொடுக்கலாம்னு வந்தேங்கா. ரெண்டு ரேடியண்ட் டூபு. நேத்து நைட்டே வந்து ஆரப்பாளையத்துல ஒரு ஓட்டல்ல தங்கிட்டேன். இன்னைக்கு காலைல டெலிவரிக்குன்னு ஆட்டோல போயிட்டிருந்தேன். கோச்சடையாண்ட சிக்னல்கிட்ட நின்ன ஆட்டோ எடுக்க மாட்டேன்னுச்சு. கொஞ்சம் ஓரமா போட்டுக்கிறேன்னு தள்ளுங்கன்னு சொன்னான். இறங்கி பிடிச்சு தள்ள சொல்ல, திடீர்னு ஆட்டோக்காரன் அப்படியே வண்டிய கெளப்பிட்டு ஓடிட்டான். பொட்டி, துணி, பர்ஸு, பணமெல்லாம்….” குரல் கம்மியது. “டெலிவரிக்குன்னு வச்சிருந்த ரேடியண்ட் டூப் பாக்கெட்லாம் அப்படியே போயிட்டுது” என்று சொல்லிவிட்டு நிறுத்திக் கொண்டான். இடையிடையே திக்கும்போது தாடியை மீறி கழுத்து நரம்புகள் புடைத்து எழுவதைப் பார்க்க ராஜப்பாவிற்கு பரிதாபமாக இருந்தது.

அம்மா அதிர்ச்சியில் இயல்பாக கையால் வாயை மூடிக் கொண்டாள்.

“காலைலேந்து நடந்து நடந்து சுத்தியலைஞ்சிட்டேன். அதான் மாமாகிட்ட கேட்டுட்டு… எப்பக்கா வருவாரு”

ராஜப்பாவிற்கு, வந்தவன் சொன்னதில் பர்ஸை தொலைத்துவிட்டான் என்பதைத் தவிர வேறு எதுவும் புரியவில்லை.

“என்ன தம்பி இப்படி சொல்றீங்க…. போலீஸுக்கு போனீங்களா” அம்மா சன்னமான குரலில் கேட்டாள்.

“கம்பேனி கார்டுல்லாம கம்ப்ளைண்ட் எடுக்க மாட்டேன்னுட்டாங்க. எல்லாந்தான் தொலஞ்சுப் போச்சே.” என்றான்.

“அப்ப…”

“நைட்டு ஊருக்குப் போய் நாளைக்கு ஆபிஸ்ல சொல்லிட்டு, கூட்டிட்டு வரனுங்க்கா. மாமா வர ரொம்ப லேட்டாகுமா?” என்றான். வாக்கியத்தை முடிப்பதற்குள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துவிட்டது. அவசரமாக துடைத்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தான் புதியவன்.

அப்பா எப்போ வருவாரெனக் கோபால் மாமாவிடம் ஃபோன் செய்து கேட்கலாம். செக்யூரிட்டி கவுண்டரில்தான் இருப்பார். இந்நேரத்தில் ஆச்சி வீட்டில், ஆச்சி மட்டுமிருந்தால், ‘போட்டுக்க ஆத்தா’ என்று பூட்டப்பட்டிருக்கும் போன் டயலுக்கான சாவியை எடுத்துக் கொடுத்து விடுவார். ஆனால் அங்கே வேறு யாராவது குடும்பத்தார் இருந்தால் ‘நிறைய கால் போயிடுச்சு இந்த மாசத்துக்கு’ என்று சுருக்கென சொல்லி ஆச்சியை அமர்த்தி விடுவார்கள். அம்மாவின் முகம் சுருங்கிவிடும். காலையில் அப்பா சைக்கிளை, பங்க்சர் பார்க்க கடையில் விட்டுவிட்டுப் போயிருந்தார் என்பது ராஜப்பாவிற்கு சட்டென நினைவிற்கு வந்தது. கோபால் மாமாவுடன் டபுள்ஸில்தான் மில்லுக்குப் போயிருந்தார்..

“நா வேணா, ஜஸ்டின் கடைலேந்து சைக்கிள் எடுத்திட்டு மில்லுக்குப் போய் பாக்கவா?” அம்மாவின் காதுகளுக்கு மட்டும் கேட்கும்படி கிசுகிசுத்தான்.

அம்மா என்ன சொல்வதெனத் தெரியாமல் பார்த்தாள். ராஜப்பா வேகமாக அறைக்குள் போய், அவசரத்திற்கு தொங்கவிட்டிருந்த பள்ளி சீருடை சட்டையையே எடுத்துப் போட்டுக் கொண்டு கிளம்பினான்.

அம்மா, “எதுவும் குடிக்கிறியா? காப்பி போடவா?” என்று புதியவனிடம் கேட்பது காதில் விழுந்தது.

கிட்டத்தட்ட அம்மாவின் உயரத்திற்கு வந்துவிட்டிருந்தாலும், சைக்கிளை சீட்டில் இருந்து கொண்டு மிதிப்பது ராஜப்பாவிற்கு சற்று சிரமம்தான். முன்னாடி பாருக்கு நகர்ந்து பெடல் மீது நின்றபடி இரண்டு சுற்று அழுத்திவிட்டு, சீட்டில் உட்கார்ந்து கொள்வான். பெடல்கள் இரண்டு சுற்று சுற்றி முடித்ததும், மீண்டும் பெடல் மீது ஏறி நின்றுகொண்டு இரண்டு மிதி.

செக்யூரிட்டி கூண்டில் இருந்த கோபால் மாமா இவன் சைக்கிளை பரபரக்க விட்டுக் கொண்டு கேட்டிற்குள் நுழைந்ததைப் பார்த்ததுமே, அப்பாவிற்கு போனடித்து விட்டார்ப் போல. தத்தி தத்தி சைக்கிளை நிறுத்திவிட்டு ஸ்டேண்ட் போட்டு நிறுத்திவிட்டு செக்யூரிட்டி கூண்டுக்கு வந்ததும், மாமா போன் ரிசீவரை இவனிடம் கொடுத்தார்.

உருட்டி பிரட்டி, வீட்டிற்கு வந்த புதியவனின் கதையை விவரித்ததும், அப்பா, “திருப்பதி அத்தையா? அருளா வந்திருக்கான்? இரு வரேன்” என்று சொல்லிவிட்டு போனை வைத்தார்.

ஐந்து நிமிட இடைவெளியில் அப்பா வெளியில் வந்தபோது அதே களைப்புடன் தான் காணப்பட்டார். கூடவே “இவனெதுக்கு சைக்கிளை மிதித்துக் கொண்டு வந்திருக்கிறான்” என்கிற கவலையும் தெரிந்தது. மில்லில் ஆட்குறைப்பிற்கான வேலைகள் போய்க் கொண்டிருப்பதாக ராஜப்பாவின் நண்பர்கள் மத்தியில் பேச்சு ஓடிக் கொண்டிருந்தது. வீட்டில் அப்பாவும் அம்மாவும் சற்றுக் கவலையோடு பேசிக் கொண்டாலும் ராஜப்பா வந்ததும் நிறுத்திக் கொண்டு விடுவார்கள்.

“யாரு வந்திருக்காங்கன்ன? அருளா?” என்றார்.

“ஆமப்பா” என்று அவசரமாக சொன்னவன், சற்று சுதாரித்துக் கொண்டு, “தெரிலப்பா. ஒங்க அத்தைன்னு சொல்வீங்களே. அவங்க மகனாம். ஏதோ பர்ஸெல்லாம் ஆட்டோவோட போயிடுச்சுன்னார். திக்கி திக்கி அழுதிட்டே சொன்னார்ப்பா” ராஜப்பாவின் குரலில், அவனறியாமலே லேசாக அழுகை எட்டிப் பார்த்தது.

அப்பா கண்களை சுருக்கி அவனைப் பார்த்தார்.

“என்னங்கிறானாம் இப்ப? ஆச்சி வீட்லேந்து அம்மாவைப் போன் பண்ணச் சொல்ல வேண்டிதான. பெரிய மனுசன்னு ஒன்னை அனுப்பி வச்சிருக்காளாக்கும்” என்றார் . குனிந்து அவன் கால்களைப் பார்த்தவர், ‘செருப்பு கூட போடாம சைக்கிளை மெறிச்சிட்டு வந்திருக்க நீயு’ என்றார் பற்களைக் கடித்துக் கொண்டு. உள்ளே நடந்து கொண்டிருந்த யூனியன் கூட்டத்திலிருந்து உரத்த குரல்கள் வந்து கொண்டிருந்தன.

அப்பா கையைத் திரும்பி வாட்சைப் பார்த்துக் கொண்டார்.

“நைட்டே ஊருக்குப் போறானாமா?” நிமிர்ந்து ராஜாப்பாவின் முகத்தைப் பார்த்தார். அவன் முகம் முழுவதும் விரித்து அப்பாவின் முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தது. சட்டைப் பையில் சற்று துழாவியவர், செக்யூரிட்டி கூண்டில் இருந்த கோபால் மாமாவிடம் சென்று பேசி அவரிடமிருந்தும் கைமாற்றியதை சேர்த்து, ராஜப்பாவின் சட்டைப் பையில் திணித்தார். “ஜாக்கிரதையா கொண்டு போய் அம்மாட்டக் கொடு” என்று சொல்லி விட்டு திரும்பி மீட்டிங்கிற்குப் போய்விட்டார். ராஜப்பா சைக்கிளில் சரியாக ஏறினானா என்பதைக் கூட கவனிக்கவில்லை. அப்பாவைப் பார்த்துவிட்ட தெம்பிலோ என்னவோ, ராஜப்பா இலாவகமாக சைக்கிளில் தாவி ஏறிக் கொண்டு வீட்டிற்கு விட்டான்.

வீட்டிற்குள் நுழைந்தால், புதியவன் கூடத்துத் தரையில் அமர்ந்திருக்க, எதிரில் தட்டு போட்டு உப்புமா பரிமாறப்பட்டிருந்தது. தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தவன், ராஜப்பா வருவதைப் பார்த்ததும், குடிப்பதை நிறுத்திவிட்டு “மாமா வன்ட்டாரா?” என்றான். ராஜப்பாவிற்கு இன்னமும் பரிதாபமாக இருந்தது.

“மீட்டிங்கு முடிய லேட்டாகும் போல” என்றான் ராஜப்பா தலையைக் குனிந்து கொண்டு. வாய்நிறைய தண்ணீரும், திக்கலுமாக புதியவனுடைய பதட்டம், ராஜப்பாவிற்கு இன்னமும் பரிதாபமாக இருந்தது.

சமையல் உள்ளுக்குள் போனபோது அம்மா, வலை அலமாரியில் ஏதோ டப்பாவை எடுத்துக் கொண்டிருந்தாள். “தெரிஞ்ச கததானே. நெதமும் மீட்டிங் மீட்டிங்குதான்” என்றாள் சலிப்போடு.

“அப்பா கொடுத்தார்மா” என்று ரகசியமாக சொல்லிவிட்டு, பையிலிருந்து ரூபாய் பணத்தை எடுத்து நீட்டினான்.

ரூபாய் நோட்டுக்களை வாங்கி எண்ணிப் பார்த்தாள். கூடத்திலிருந்து தட்டை நகர்த்தும் ஒலி கேட்கவும், “போய் பாத்ரூம்ல தண்ணி மோண்டுக் கொடு” என்றாள் ராஜப்பாவிடம்.

மாடிப்படி வளைவுக்குக் கீழே அடி பம்புக்கு பக்கமிருந்த பக்கெட்டில் புதியவனே தண்ணீர் மோண்டு தட்டைக் கழுவிக் கொண்டிருந்தான். பக்கத்து ரூமில் நுழைந்த ராஜப்பா அவசர அவசரமாக புத்தகப் பையிலிருந்த ஜாமெட்ரி பாக்ஸை எடுத்துத் திறந்து பார்த்தான். ஒண்ணே முக்கால் ரூபாய்க்கு சில்லறை காசுகள் இருந்தன. பச்சை தொப்பி யானை உண்டியலின் வயிற்றைத் திருகி மூடியைத் திறந்து சரித்தான். ஆறரை ரூபாய் பக்கம் இருந்தது. அனைத்து காசையும் திரட்டி உள்ளங்கைக்குள் பொதித்து வைத்துக் கொண்டு கூடத்திற்கு வந்தான்.

“எண்பத்தியேழு ரூவா கொடுத்தனுப்பியிருக்கார்ப்பா” என்று அம்மா புதியவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். பிறகு சற்று நிதானித்து விட்டு “எத்தன மணிக்கு பஸ்ஸு இருக்கு உனக்கு?” என்றாள்.

“எட்டே முக்காலுக்கு” என்றான் அவன்.

ராஜப்பாவைக் கூப்பிட்டு சைகை செய்ய, அடுக்களை வாசலிலிருந்த அம்மாவிடம் போனான். கையைப் பிரித்து கையிலிருந்த சில்லறை சேமிப்பைக் காட்ட, அவனை நிமிர்ந்து பார்த்தாள். “ஏதுடா”

“உண்டியல் காசு” என்றான் கிசுகிசுப்பாக

“ப்ச்ச்ச்… ” என்றாள், மேலே என்ன பேசுவதனெத் தெரியாமல்.

அம்மா கையிலிருந்த நோட்டுக் கற்றைகளை வாங்கி தன் கையிலிருந்த சில்லறைக் காசுகளையும் சேர்த்துக் கொண்டு போய் புதியவனிடம் கொடுத்தான் ராஜப்பா.

நோட்டுக்களையும் சில்லறைகளையும் எண்ணிப் பார்க்காமல் வாங்கி பேண்ட் பாக்கெட்டில் திணித்துக் கொண்டான் புதியவன். ஒரு நொடி ராஜப்பாவின் கண்களைப் பார்த்துவிட்டு, அவன் தலையை தடவிக் கொடுத்து “நல்லாப் படி” என்றான்.

“வரேங்க்கா. மாமாவிடம் சொல்லிருங்க”, என்று சொல்லிவிட்டு வாசல் பக்கம் திரும்பிப் போனான். வரும்போது இருந்ததை விட இப்போது சற்று நிமிர்ந்தாற்போல் இருந்தது அவன் தோற்றம்.

அன்று அப்பா வீட்டுக்கு வருவதற்கு பத்து மணி போல் ஆகிவிட்டது. செங்கோண முக்கோணங்களுடன் சண்டை போட்டுக் கொண்டே முன்னறையிலே தூங்கிவிட்டிருந்தான் ராஜப்பா. கனவில் அப்பா தூரத்தில் நின்று கொண்டிருந்தது போலிருந்தது. புதியதாக வந்தவன் முகத்தில் கண்ணீர்க் கோடுகள் தாடியை நனைத்துக் கொண்டிருந்தன. அவன் மேல் ராஜப்பாவிற்கு கரிசனமாக பொங்கியது. பச்சைத் தொப்பி யானை உண்டியல் பெரியதாக தெரிந்தது. பிளாஸ்டிக் துதிக்கையை தூக்கினால் செங்கோண முக்கோணங்களாக வரிசையாக வந்து விழுந்தன. முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த அலெக்ஸ் வாத்தியார் மீதும் ராஜப்பாவிற்கு கரிசனம்தான் பொங்கியது. ஸ்கேலால் ரெண்டு சாத்து சாத்தினாலும், ஏதாவது மார்க் போட்டுவிடுவார் என சமாதானம் செய்து கொண்டான். திடீரென அப்பாவின் வாசம் வெகு அருகில்.

அரைமடங்கலாக, எழுத்து மேசையின் பின்புறம் படுத்து தூங்கிக் கொண்டிருந்தவனை அப்பா தூக்கி வந்து, உள்ளறையின் ஜமுக்காளத்தில் படுக்கப் போட, ராஜப்பாவிற்கு சற்று அரைகுறையாக விழிப்புத் தட்டியது. உடனே எழுந்து அப்பாவின் முகத்தைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. அம்மா வெளிநடை லைட்டையெல்லாம் அணைத்து விட்டு அறைக்குள் வந்தாள். மேற்கு ஜன்னல் வழியே பிறை சந்திரன் ஒளி மட்டும் சல்லாத்துணி போல் படர, இருள் மூலைகள் அறைக்குள் அடர்ந்து வந்தன. ராஜப்பா கண் மூடியபடி அரைத் தூக்கத்தில் கிடந்தான். அப்பாவின் கை விலகியதும், அவர் கட்டிலுக்குச் சென்று படுத்திருப்பார் என நினைத்துக் கொண்டான்.

“இவனைத்தானே பாலிடெக்னிக்கு படிக்கிறான்னு, அத்தை லெட்டர்ல போட்டிருந்தாங்க” என்று சொல்லிக்கொண்டே அம்மா வந்து ஜமுக்காளத்தில் இவன் பக்கத்த்இல் அமர்ந்து இவன் தலையை தடவிக் கொடுத்தபடி பேச்சை ஆரம்பித்தாள். ராஜப்பா உடன் விளைவாக, கால்களைத் தூக்கி அம்மாவின் மடியில் போட, அவளும் பாதங்களை மெள்ள பிடித்துவிட்டாள்.

“ப்ச்ச்… அது மூத்தவன். அருள். இவன் இரண்டாமவன். ஆனந்துன்னு நினைக்கிறேன். திக்கி திக்கி பேசினான்ல“ என்றார் அப்பா. “ஒண்ணும் பெருசா படிச்சிடல”

“வந்து நின்ன கோலம் ஒண்ணும் எனக்கு சரிப்படல” என்றாள் அம்மா சற்று தயங்கியபடி.

“இப்படித்தான் இவங்கப்பா, ஊர் ஊராப் போய் சொந்தக்காரங்ககிட்டல்லாம் ரூபாய்க் கேட்டுக்கிட்டு திரிஞ்சாரு. அப்புறமா கெஎள்விப்பட்டதும் அத்தை அங்க இங்கன்னு பணத்தைப் பிரட்டி மணியார்டர் அனுப்பும். இப்ப இவன் முறை போல” என்றார் அப்பா.

“ஆததீ! வீட்டுப்படியேறி வந்து நின்னுக் கண்ணீர் விட்டுக் கேட்டா என்னதான் செய்யறது” என்றாள் அம்மா. அப்பா கட்டிலில் கால்களை நீட்டிக் கொண்டு படுக்கும் அசைவுகள் ராஜப்பாவிற்கு கேட்டன.

“காலைல அம்பது ரூவாதான் இருந்திச்சின்னீங்க. மீதி கோபாலண்ணன்கிட்ட வாங்கினீங்களாக்கும்” என்றாள் அம்மா அடுத்து.

அப்பா ஆயாசத்துடன் நெட்டுயிர்ப்பது காதுகளில் விழுந்தது.

திடீரென அம்மா, “இதுவும் உண்டியல்லேந்து எடுத்துக் கொடுத்திச்சு” என்றாள். அவள் சொல்லும்போது அம்மா குரல் குழைந்து, பெருமை விரவிய மென் கிளுகிளுப்போடு இருந்தது.

‘ம்ம்ம்…’ என்றார் அப்பா. அவருடைய நெட்டுயிர்ப்புகள் நின்றுவிட்டன. ஐந்தாறு நொடிகள் கழித்து, “நாம கல்யாணத்துக்கு திருப்பதி போனப்ப, இது வயசுலதான அந்த ரெண்டாம் பையன் இருந்திருப்பான்” என்றாள் அம்மா.

அப்பா பதிலேதும் சொல்லவில்லை. சில நொடிகளின் இடைவெளிக்கப்புறம், “ராஜப்பா, எவ்ளோ கொடுத்தான்?” என்றார். அவர் குரல் தாழ்ந்து நெகிழ்ந்து இருந்தாலும் அதில் அந்த அயர்ச்சி இல்லை. “பத்து பதினோர் ரூவாஇருக்கும்” என்றாள் அம்மா சிரிப்புடன்.

‘ரூவா இன்னிக்கு வரும் நாளக்கி போவும். ரெண்டு இடத்துல நாம நின்னு கண்ணீர் விடவும் வேண்டியிருக்கும். அதெல்லாம் எல்லாருக்கும் நடக்கிறதுதான். நாளக்கி அத்தைக்கு எஸ்டிடி போட்டுச் சொன்னா, ரெண்டொரு வாரத்துல மணியார்டர் அனுப்பிரும். ஆனா செருப்புக் கூட போடாம, சைக்கிள்ல குரங்குப் பெடல் அடிச்சுக்கிட்டு இவன் வந்தான் பாரு மில்லுக்கு. அதான்” என்று சொல்லி அப்பாவும் சிரித்தார் “என்னமோ இவனாலதான் அவனுக்கு விடிமோட்சம் மாதிரி” அப்பாவின் குரலில் அந்த பழைய மலர்ச்சி பெருமையோடு வெளிப்பட்டது போலிருந்தது ராஜப்பாவிற்கு.

ராஜப்பாவின் பாதங்களை வருடிக் கொடுத்துக் கொண்டிருந்த அம்மாவும் சிரித்தாள். “ஆமாம். ரொம்பவும்தான் ஆடிப் போயிடுச்சி” என்று சொல்லிவிட்டு குனிந்து ராஜப்பாவின் பாதங்களில் முத்தமிட்டாள்.

அன்றைய புதியவனின் வருகையைப் பற்றி மீண்டும் மீண்டும் எண்ணிக் கொண்டே அவர்கள் மூவரும் தூங்கிப் போனார்கள், நிம்மதியாக.

o0O0o

ஐம்பதை நெருங்குவதாக அவரே சொன்னாலும், ராஜப்பாவிற்கு இப்போதும் அதே குழந்தை முகம்தான் எனத் தோன்றியது எனக்கு. ஜேஸ்டன்வில் நகரில், இருந்த மூன்று இந்திய உணவகங்களில் ஒன்று ராஜப்பாவுடைய ‘திருப்பதி நளாஸ்’. அந்தப் பெயருக்காகவே, புலம்பெயர்ந்த இந்தியர்களில் தெலுங்கர் கூட்டம் அதிகம் வரும். “எல்லாம் அந்த ஏழுமலையான் அருள்” என்பார் ராஜப்பா. அங்கே மதிய பஃப்பே உணவு பிரசித்தம். அசைவம் சைவம் என ஏழெட்டு கூட்டுக் கறிகளுடன், பிரியாணி, நான், தோசை என்று நீளும் உணவுப் பட்டியலில், டெஸர்ட்டுகள் மட்டுமே பத்து வகைக்கு மேலிருக்கும். அன்று மதிய உணவின் போது ராஜப்பாவும் எங்கள் டேபிளில் வந்தமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போதுதான் இந்த புதியவனின் வருகைப் பற்றி கதையைச் சொன்னார். அவர் சொல்லி முடித்தபோது, அந்த இரவின் விகசிப்பில் அவர் முகம் ஆழ்ந்த அமைதி கொண்டிருந்தது. எனக்கு அந்த சிறு சம்பவமும், அதை ராஜப்பா விவரித்த விதமுமே போதுமானதாக இருந்தது. எண்பதுகளில், பொருளாதார சிக்கல் மிகுந்த நடுத்தர குடும்பத்தின் சித்திரம் அப்படியே கண் முன் விரிய, மில்லில் ஆட்குறைப்பு, வேலையிழப்பு, யூனியன் போராட்டம் என்று அபாயகரமான விளிம்பில் இருந்த அந்த தம்பதியர் தங்களின் பொருளிழப்பைவிட, ராஜப்பாவின் குழந்தைத்தனமான தயாள செயலைப் பற்றிய பெருமையுடன் உறங்கிக் கொண்டிருந்த அந்தத் தருணம் பெரும் நிறைவை அளித்தது. ஓர் எழுத்தாளன் என மதித்து அவர் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு பதிலாக ஏதாவது சொல்லியாக வேண்டுமே என்று….

“இது மாதிரி பணம் ஏமாறுகிற சம்பவம் ஒண்ணு ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் இருந்திருக்கும்ல . ஆனா உங்க எக்ஸ்பீரியன்ஸ் ரொம்பவே இம்ப்ரெஸ் ஆக்கிடுச்சி” என்றேன் சற்று உளக்கிளர்ச்சியோடு.

என் முகத்தில் ஏதோ தேடுவதைப் போல சில நொடிகள் கூர்ந்துப் பார்த்தவர், அந்த ஆழ்ந்த அமைதியுடன் என்னை நெருங்கி, தோளைச் சேர்த்துப் பிடித்து அணைத்துக் கொண்டார். பள்ளிக்கூட காலத்தில் கணக்கில் தட்டுத் தடுமாறியவர், அமெரிக்க நகரில் இவ்வளவு பெரிய உணவகத்தை திறம்பட நடத்துகிறார் என்றால், அவருக்கு இது போன்ற உன்னதமான தருணங்களை மனதில் நிறுத்தி அதன் பலத்தில் உறப்பாக நின்று செயலாற்றுகிறார் எனத் தோன்றியது. அவர் முகம் மட்டுமல்ல, அவரைச் சுற்றியே அந்த செரினிடி தன்மை விரியப் படர்ந்திருந்தது போலிருந்தது எனக்கு.

“அப்புறம் திருப்பதி அத்தைக்கு போன் பண்ணிக் கேட்டீங்களா? ரூவா அனுப்பிச்சாங்களா?” எனக் கேட்டேன். அந்தக் காலத்தில் நூறு ரூபாய் என்பது அந்தக் குடும்பத்திற்கு எவ்வளவு பெரிய தொகை எனக்குப் புரிந்திருந்தது.

என் கேள்வி அவருடைய மோன நிலையைச் சற்று கலைத்தது போல் ஒரு திடுக்கிடல். எதையோ கஷ்டப்பட்டு நினைவுப் படுத்திக் கொள்வது போல் நெற்றியை சுருக்கினார்.

“இல்ல. ஃபோன் பண்ணல” என்றார். இரண்டொரு நொடிகள் நீண்டன. “அத்தை அப்புறமா ஃபோன் பண்ணாங்க. ஆறேழு மாசம் கழிச்சு” என்றார்.

அவர் தொடர்ந்து பேசுவார்ப் போலிருந்ததால் நான் காத்திருந்தேன்.

“அப்பா அங்க அத்தை வீட்டுக்கு வந்திட்டுப் போனதை சொல்ல ஃபோன் பண்ணாங்க. நாங்கள்லாம் இரண்டு நாளா அப்பாவை மதுரைல காணலைன்னு தேடிட்டிருந்தோம். அவருக்கு வேலை போய் நாலு மாசம் ஆயிட்டிருந்தது அப்ப” என்று சொல்லி நிறுத்திவிட்டார்.

அதற்குள், அவர் நெற்றிச் சுருக்கங்கள் நீங்கி, அவருடைய முகம் பழைய மோனநிலைக்கு திரும்பிவிட்டது. மேற்கொண்டு அந்த உரையாடல் தொடராது என எனக்குப் புரிந்து விட்டது. மெள்ள முன்னகர்ந்து, நான் அவர் தோளை சுற்றி அணைத்துக் கொண்டேன்.

ஸ்ரீதர் நாராயணன்

ஸ்ரீதர் நாராயணன் . அம்மாவின் மதில்கள், கத்திக்காரன் என்ற சிறுகதை புத்தகங்களின் ஆசிரியர். நேர்காணல்கள், புத்தக விமர்சனங்கள் போன்றவற்றிலும் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார். பழந்தமிழ் இலக்கியங்களில் அதிக விருப்பும் ஈடுபாடும் கொண்டவர்.

2 Comments

உரையாடலுக்கு

Your email address will not be published.