/

ஒரு எழுத்தாளன் எந்த உறுதிப்பாட்டையும் தானே ஈட்ட வேண்டும் : ஜான் கார்ட்னர்

தமிழில் : ஜனார்த்தனன் இளங்கோ

ஜான் கார்ட்னர் (John Gardner) (ஜூலை 21, 1933 – செப்டம்பர் 14, 1982) அமெரிக்க நாவலாசிரியர், விமர்சகர், பேராசிரியர். புனைவாக்கத்தை கற்பிக்கும் ‘Creative Writing’ ஆசிரியராக பல்வேறு பல்கலைக்கழகங்களில் பணியாற்றினார். ‘Grendel’, ‘On Moral fiction’, ‘The Sunlight Dialogues’ ஆகியவை அவருடைய புகழ்பெற்ற நூல்கள்.
புனைவாக்கத்தையும் எழுத்துச் செயல்பாட்டையும் அறிவுப் பூர்வமாக அனுகி விளக்கவும் புரிந்துகொள்ளவும் விரும்புபவர் ஜான் கார்ட்னர். அதே சமயம் “அறிவுணர்ச்சிதான் மனதின் மிகச்சிறந்த திசைதிருப்பல்” என்று அதன் மறு எல்லையையும் அடிக்கோடிடக் கூடியவர்.
‘The Paris Review’ இதழில் 1971 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட அவருடைய பேட்டியின் தேர்ந்தேடுத்த பகுதிகள் இங்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவ்வுரையாடலில் புனைவாக்கச் செயல்பாடு, யதார்த்தவாதத்தின் எல்லைகள், குறியீடுகள் என்று பலதரப்பட்ட விஷயங்களைப் பற்றி விரிவாக உரையாடுகிறார்.
– ஜனார்த்தனன் இளங்கோ

கேள்வி : புனைவு, அபுனைவு, கவிதை, விமர்சனம், புத்தக மதிப்புரைகள், சிறார் நூல்கள், ஆய்வு நூல்கள், நாடகங்கள் –சமீபத்தில் ஓப்ரா நாடகத்திற்காக இசைக் குறிப்பு– என்று பலதரப்பட்ட துறைகளில் இயங்கிக் கொண்டிருக்கிறீர்கள். இதைப் பற்றி கூற முடியுமா? மேலும் இவற்றில்  நீங்கள் மிகவும் விரும்பும் துறை எது?

கார்ட்னர் :  இவற்றில் நான் முக்கியமானதாகக் கருதுவது நாவல் தான். நாவலின் வழியாக முழுமையான தனித்த உலகத்தை உருவாக்கி அதில் நம்முடைய விருப்பதிற்கேற்ப மதிப்பீடுகளைக் கையாள முடிவதை ஒரு சிறுகதையில் நம்மால் செய்ய முடியாது. அதே சமயம் ஒட்டுமொத்த அளவிலான உலகத்தை நீங்கள் உருவாக்குவதால் தொடர்ச்சியாக நாவல்களை மட்டுமே எழுதிக் கொண்டிருக்க முடியாது. ஒரு நாவலை எழுதி முடித்தவுடன் வாழ்க்கையில் இருந்து போதுமான விஷயங்களை புதிதாக உங்களுக்குள் நிரப்பிக் கொண்டு பொருட்படுத்ததும் படியான தெளிவானக் கேள்விகளை மீண்டும் அடைவதற்கு எப்படியும் ஓரிரு வருடங்கள் பிடிக்கும். அதுவரைக்கும் நீங்கள் எதாவது பிரயோஜனமாகச் செய்ய வேண்டியுள்ளது. அந்த இடைவெளியில் தான் மற்ற துறைகளில் பொழுதுபோக்கிற்காக ஈடுபடுகிறேன். எனக்கு பணத்தேவை ஏற்படும் போதெல்லாம் –அதன் தேவை எப்போதும் இருப்பது வேறு விஷயம்– புத்தக மதிப்புரைகளைச் செய்கிறேன். எனக்கு அதிலிருந்து பெரிதாகக் கிடைப்பதில்லை, இருந்தாலும் அதன் மூலம் என்னால் சமகாலச் சூழலின் மேல் ஒரு கண் வைத்திருக்க முடிகிறது. என்னென்ன வகையில் நல்ல புத்தகங்களும் மோசமான புத்தகங்களும் வருகின்றன என்று தெரிந்துகொள்கிறேன். விளம்பரங்களாலும் தனிப்பட்டத் தொடர்புகளாலும் புத்தக வெளியீட்டுத் துறையானது பெரிதும் மூழ்கடிக்கப் பட்டிருப்பதால் இது எனக்கு மிகவும் அவசியமாகிறது. என் புத்தக மதிப்புரைகளில் தீவிரமான விமர்சனமென்று எதுவும் இல்லை, பெரும்பாலும் உடனடியாகத் தோன்றும் எதிர்வினைகள் தான். மகிழ்ச்சியோ, கோபமோ அது எதுவாக இருந்தாலும். அதுபோல் அப்பட்டமாகத் தெரியும் மோசமான புத்தகத்திற்கு நான் ஒருபோதும் மதிப்புரை எழுதுவதில்லை.

சிறார் ஆக்கங்களைப் பொருத்தவரை நான் என்னுடைய குழந்தைகளுக்கு கிருஸ்துமஸ் பரிசாக வருடம் தோரும் கதைகளை எழுதிக் கொடுப்பதுண்டு. நான் ஒருவாறு எழுத்தாளராக பிரபலம் அடைந்த பிறகு அனைவரும் அந்தக் கதைகளை புத்தகமாகக் கொண்டு வர வேண்டும் என்று விரும்பினார்கள். இயல்பாக எனக்கும் அக்கதைகள் மிகவும் பிடித்தமானவையாக இருந்தது. ஏனென்றால் என் குழந்தைகளுக்கு ஒருபோதும் மோசமானவற்றை நான் அளித்தததில்லை. இதுபோக நான் நீண்ட காலமாக ‘Beowulf’ போன்ற பண்டைய ஆங்கில இலக்கியங்களை கற்பித்துக் கொண்டிருந்தேன். எனவே அது குறித்து அவ்வப்போது ஆய்வுக் கட்டுரைகளும் நூல்களும் எழுதும்படி ஆகிறது. கவிதைகளை இம்மாதிரி வருடம்தோறும் மீண்டும் மீண்டும் கற்பிக்கும் போது நீங்கள் மற்ற எல்லோரையும் விட அக் கவிதைகளை ஒரு படி மேலாகப் புரிந்துகொண்டதாக நம்பத் தலைபடுகிறீர்கள். நீங்கள் கற்பிக்கும் ஒரு கவிதையைப் பற்றிய பொது மதிப்பீடு மோசமானதாக இருக்கும் போது அதை நேர்செய்ய வேண்டும் என்னும் உந்துதல் உங்களுக்கு ஏற்படுகிறது. ‘Chaucer’ ஐக் குறித்த ஐம்பதுகளுக்கு பிறகான ஆய்வுகளெல்லாம் அம்மாதிரி மோசமானவையாக இருக்கிறது. உதாரணமாக ‘Chaucer’ ஒருவகை ஆக்ஸ்போர்ட் அறிவுஜீவி என்றும் அதனால்தான் உடலியல் இச்சைகளையும் ஆசைகளையும் தன் ஆக்கங்களில் தவிர்த்தார் என்றொரு ஆய்வுக் கருத்து இருக்கிறது. அது எவ்வகையிலும் உண்மையில்லை. ஆகையால் இம்மதிரியான விஷயங்களுக்கு செய்யும் ஆய்வுகள் உபயோகமானதாக இருக்கிறது. எனினும் பிரதானமாக நாவல்களையும், ஓப்ரா நாடகங்களையும் எழுதும் போது தான் பெருவாரியான மகிழ்ச்சியையும் திருப்தியையும் அடைகிறேன். மற்ற எல்லாமும் ஒருவகை பொழுதுபோக்கு தான்.

கேள்வி : நீங்கள் ஒரு தத்துவார்த்தமான நாவலாசிரியர் என்று அழைக்கப்படுகிறீர்கள், இந்த அடையாளத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கார்ட்னர்:  ‘தத்துவார்த்தமான’ நாவலாசிரியராக இருப்பது வேறு வகை நாவலாசிரியராக இருப்பதை விட எவ்வகையிலேனும் மேம்பட்டதா என்று தெரியவில்லை. எப்படிப் பார்த்தாலும் நான் தத்துவார்த்தமான நாவலாசிரியர் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. கதைகளுக்கான மூலப்பொருள் தான் எழுத்தாளருக்கு முக்கியம். ஒருவருக்கு அரசியலோ, விளையாட்டோ, வேறு எந்த ஒன்றோ பிடிப்பதைப் போல எனக்கு தத்துவம் பிடித்தமானதாக இருக்கிறது. ‘Collingwood’, ‘Brand Blanchard’, ‘C.D Broad’ போன்ற தத்துவவாதிகளைப் படிக்கையில் ஆர்வம் மேலிட நடுக்கமுற்று மர்மத்தால் பீடிக்கப் படுகிறேன். ‘Swinburn’ போன்ற ஒருவர் காலத்தையும் பிரபஞ்ச வெளியையும் பற்றி எழுதியிருப்பதை வாசிக்கும் போது வெளியின் வடிவமானது செறிவான பருப்பபொருட்களின் அருகாமையால் மாற்றமடைகிறதா என்பது போன்ற கேள்விகளால் ஆட்கொள்ளப்படுகிறேன். அதாவது தத்துவக் கேள்விகள் உண்மையில் வாழ்க்கையின் ஆதாரக் கேள்விகளுக்கு விடையளிக்கிறதா என்று இதன் மூலம் யோசித்துப் பார்க்கிறேன். குறைந்த பட்சம் என் வரையில் தத்துவம் அம்மாதிரி ஆதாரமானக் கேள்விகளுக்கு விடையளிக்கிறதென்றே கருதுகிறேன். உண்மையில் தத்துவம் அம்மாதிரியானக் கேள்விகளுக்கு எளிதில் விடையளிப்பதில்லை. எனினும் அப்படி விடையளிப்பதாய் நினைத்துக் கொண்டு பகல்கனவில் உழல்வது எனக்குப் பிடித்தமான ஒன்று. உலகளாவிய மானுட ஒழுக்கமென ஒன்று உள்ளதாக ‘Blanchard’ தர்க்கப்பூர்வமாக நிறுவ முயல்வது; இவ்வுலகம் கொஞ்சம் கொஞ்சமாக சிதறி உடைந்து அழிவதற்கு பதிலாக உண்மையில் உறுதிபெற்று வலுவடைந்து வருகிறது என்று வேறு சில அறிவுஜீவிகள் நிறுவ முயல்வது; என்று தத்துவத்திலிருந்து தெரிந்து கொள்வதற்கு பிரமாதமான விஷயங்கள் நிறைய உள்ளது. பேசும் தவளைகளைப் போல இவையெல்லம் சுவாரசியமானவை. புத்தகக் கடைக்குச் சென்றால் நாவல்களை விட தத்துவ நூல்களையே அதிகமும் வாங்கி வாசிப்பேன். என் எழுத்துகளில் தத்துவம் உண்டு எனினும் புனைவில் நேரடியாகத் தத்துவத்தை கையாள்வதில்லை. தத்துவத்தின் வழியாக நான் உருவாக்குவது கதைகளைத் தான். அக்கதைகளில் தேவையான இடத்தில் தத்துவத்தின் அர்த்தமானது தனிச்சியாக நுழைகிறது, விஷயங்களைத் தெளிவாக்குகிறது. பத்தி பிரிவதைப் போல, நிறுத்தல் குறிகளைப் போல. அத்துடன் கலைஞர்களும் விமர்சகர்களும் தான் என்னுடைய நண்பர்கள். என்னுடைய சில நண்பர்களைத் தவிர்த்த பிற தத்துவவாதிகளெல்லாம் பீர் அருந்தியவாறு கால்பந்தாட்டத்தை பார்ப்பதேடு அல்லாமல், தர்க்கத்திலிருந்து உருவாகும் மோசடியான அதிகாரத்தால் தங்கள் மனைவிகளையும் குழந்தைகளையும் தோற்கடிப்பவர்களாக இருக்கிறார்கள்.

கேள்வி : நீங்கள் எவ்வாறு ஒரு ‘தத்துவார்த்த’ நாவலாசிரியராக இருக்கிறீர்கள் என்று இன்னும் சற்று விரிவாகச் சொல்ல முடியுமா?

கார்ட்னர்: மனிதர்களைப் பற்றி தான் என்னுடைய நாவல்களில் எழுதுகிறேன். அத்துடன் என்னுடைய எழுத்தில் தத்துவார்த்தமான கூறுகள் மிகக்குறைவாகவே உள்ளது. அதேசமயம் என்னுடைய ஆர்வத்தைத் தூண்டும் மனித நாடகங்களும் தரிசனங்களும் தத்துவத்தில் வேரூன்றியவை. உளவியல், சமூகவியல் சார்ந்த கோணல்களைக் கொண்ட கதாப்பாத்திரங்களும், அது தொடர்பான கதைக் கட்டமைப்புகளும் எனக்கு அலுப்பூட்டுபவை. வறியவர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் இடையிலான மெல்லுணர்ச்சி நாடகங்களில் எல்லாம் போதனை அம்சம் தான் மேலோங்கி இருக்கிறது. ‘Achillies’ இல் இருந்து ‘Captain Ahab’ வரை சிறப்புமிக்க அத்தனை புனைவுக் கதாநாயகர்களும் கொஞ்சம் கிறுக்கர்களே.  ஆனால் அவர்களைச் செயல்பட வைக்கும் பிரச்சனைகளெல்லாம் சாதாரண மனிதர்களால் தீர்க்கக் கூடியவை அல்ல. எனவேதான் தீர்க்கவியலாத பழைய தத்துவக் கேள்விகளை அடித்தளமாகக் கொண்டு அதன்மேல் கதாப்பாத்திரங்களைப் புனைகிறேன். புனைவில் அவர்கள் உயிர்பெற்று செயல்படும் போது அங்கு உதிக்கும் உண்மையான தத்துவக் கண்டடைதல்கள் மீதுதான் என்னுடைய ஆர்வம் இருக்கிறது. மேலும் அத்தகைய கண்டடைதல்கள் அந்தக் கதாப்பாத்திரங்களையும், அவர்களைச் சுற்றியுள்ளவர்களையும் என்ன செய்ய வைக்கிறது என்பதே என் பிரதானமான அக்கறை. இந்த அம்சம்தான் என்னை தத்துவாதியாக அன்றி ஒரு நாவலாசிரியராக ஆக்குகிறது என்று கூறுவேன்.

கேள்வி :உங்கள் ‘Grendel’ நாவலானது புரதானமான ‘Beowolf’ இன் கதையை ஒரு அசுரனின் பார்வையில்  இருந்து கூறுவதாக இருக்கிறது. இருபதாம் நூற்றாண்டில் வாழும் அமெரிக்க எழுத்தாளர் ஒருவர் எதற்காக யதார்த்தவாத(Realism) கூறுமுறையைக் கைவிட்டுவிட்டு இதுபோன்ற புரதான கால ஆக்கத்தை அடியொற்றிய நாவலை எழுதுகிறார்?

கார்ட்னர்: ஒரு எழுத்தாளராக உங்களுடைய ஆக்கத்தில் யதார்த்தவாத கூறுமுறையால் உருவாகும் கட்டாயத்தின் பொருட்டு சில விஷயங்களைச் செய்தாக வேண்டியுள்ளது. இவ்வாறு செய்வதில் எனக்குத் துளியும் விருப்பமில்லை. உதாரணமாக, டெட்ராய்ட்டில் நகரில் ஒருவர் வாழ்ந்ததாக நிறுவுவதற்கு சுமார் இருநூறு பக்கங்களை முதலில் செலவழிக்க வேண்டும். அப்போது தான் நாவலில் அதன்பிறகு உருவாகக்கூடிய விஷயங்களெல்லாம் நம்பும்படியாக இருக்கும். ஆனால் அந்நாவலில் உள்ள மனிதர்களோடு தொடர்புடைய மதிப்பீடுகள் தான் முக்கியமே தவிர அவர்கள் ஒன்பதாம் இலக்கத் தெருவில் உண்மையில் வாழ்ந்தார்களா இல்லையா என்பதில்லை. அதனல்தான் என்னுடைய முந்தைய நாவல்களில் யதார்த்தவாதத்தில் இருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு விலகி இருந்தேன். வேறொருவருடைய மையக் கதையை, குறிப்பாக யதார்த்தவாத சாயலில் இல்லாத கதையை எடுத்தாளும் போது சொல்ல விழைவதின் மையத்தை நீங்கள் மிகச்சுலபமாக அடைய முடியும். உதாரணமாக க்ரெண்டெலின்(Grendel), ஜேசனின்(Jason), மெடியாவின்(Medeia) கதையை எடுத்தாள்கிறீர்கள் என்றால் சம்பிரதாயமான முறையில் அக்கதையை நிறைவு செய்யலாம். அப்படியில்லாமல் உங்களின் தனித்துவமான வழியில் அக்கதையை நிறைவு செய்யவும் வாய்ப்பிருக்கிறது. இதன் மூலம் ஒட்டுமொத்த மானுட உணர்ச்சிப்பெருக்கின் வெளிச்சத்தில் இன்றைய நவீன உலகத்தைப் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பு அந்த எழுத்தாளருக்கு உருவாகிறது. இதனால் கிடைக்கப்பெறும் புரிதல் கொஞ்சம் ஆழமானது. மேலும் இந்த மொத்தச் செயல்பாடும் அந்த எழுத்தாளருக்கு களிப்பாக, கொண்டாட்டமாக அமைகிறது.

Grendel-Beowulf இடையிலான போர் சித்தரிப்பு

கேள்வி : உங்களை நாவலாசிரியராக மட்டுமல்லாமல் ஒரு புரதான கதைசொல்லியாகவும்(scop) உணர்கிறீர்களா?

கார்ட்னர் : ஆம், நிச்சயமாக. ஒவ்வொரு நாவலாசிரியரும் ஒருவகையில் கதைசொல்லியும் கூட. என்னுடைய ‘On Moral Fiction’ புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பது போல் ஒரு நல்ல கலைஞனுக்கும் மோசமான கலைஞனுக்கும் இடையே அடிப்படையான வித்தியாசம் ஒன்று இருக்கிறது. ஒரு நல்ல கலைஞனானவன் தன் ஆழமான, நேர்மையான அக்கறையினால் இந்த இருபதாம் நூற்றாண்டில் மேற்கொள்ளச் சாத்தியமான வாழ்க்கைப் பார்வையை உருவாக்குகிறான். மறுபுறம் மோசமான கலைஞர்களோ -இவர்கள் எண்ணிக்கையில் அதிகம்-  இருட்டை வெறித்து நோக்கவும், குழப்பவும், புலம்பவும்தான் செய்கிறார்கள். இப்படிச் செய்வது இன்று ஒருவகை ஆடம்பரமாகி விட்டது. மனித வாழ்க்கையானது பச்சிளம் குழந்தைகளின் மண்டை ஓடுகளால் நிரம்பிவழிகின்ற எரிமலைப் பிழம்பு என்று நீங்கள் நம்புவதாகக் கொள்வோம். இப்போது ஒரு கலைஞனாக உங்கள் முன் இரண்டு வாய்ப்புகள் உள்ளது. ஒன்று, அந்த எரிமலைப் பிழம்பை உற்றுநோக்கி ஒன்றுக்கு ஆயிரம் முறையாக அதிலுள்ளவற்றை எண்ணிப் பார்த்து இது இவரின் குழந்தை, அது அவரின் குழந்தை என்று எல்லோரிடமும் பிரஸ்தாபிக்கலாம். அல்லது மேற்கொண்டு எந்தக் குழந்தையின் மண்டை ஓடும் அதனுள் செல்லாதிருக்க முயலலாம். கலைஞனானவன் வாழ்வதற்கும் பிழைத்திருப்பதற்குமான நேர்மையான வழிகளை வேட்டையாடிக் கண்டடைய வேண்டும் என்று கூறுவேன்.  புனைவில் ஒரு எழுத்தாளன் நிச்சயம் பொய்யுரைக்கக் கூடாது. மொத்த உலகமும் குப்பைக்கூளம் இல்லை. கனன்று கொண்டிருக்கும் எரிமலைத் துவாரங்களைச் சுற்றி ஒரு எழுத்தாளனால் தடுப்புச் சுவர்களை உண்டாக்க இயலும் என்றே நினைக்கிறேன்.

கேள்வி : இம்மாதிரி செய்வது ஒரு நவீன எழுத்தாளரை கற்பிப்பவராக(didactic) மாற்றிவிடாதா?

கார்ட்னர்: இல்லை. ஒரு கற்பிக்கும், போதிக்கும் எழுத்தாளர் என்பவர் எந்த வகையிலும் அறமுடையவர் இல்லை. ஏனென்றால் அவர் எல்லா தரப்புகளையும் எளிமைப்படுத்தி, நியாயமான எதிர்த்தரப்புகளையும் நீக்கிவிட்டு மொத்த விவாதத்தையும் குறுக்கிவிடுகிறார். ‘Mein Kampf’ அம்மாதிரி ஒழுக்கரீதியான, முட்டாள்த்தனமான ஒரு அருவருப்பூட்டும் நூல். உண்மையான ‘அறவுணர்வு’ உள்ள ஒரு ஆக்கமானது தன்னளவில் அனைத்து சாத்தியக்கூறுகளையும் முற்போக்கான வழியில் ஏற்றுக்கொள்வதாகவே இருக்கும். அதே சமயம் எடுத்துக் கொண்ட பிரச்சனையை உன்னிப்பாக ஆராய்ந்து அதற்கான எல்லா விடைகளையும் கண்டடைய முயன்றபடியும் இருக்கும். அது அளிக்கும் திட்டவட்டமான தெளிவான பார்வையானது அந்த எழுத்தாளருக்கு தனிப்பட்ட முறையில் எந்தத் தொடர்பும் இல்லாததாகவும், அவருடைய கற்பனாசக்தியால் மாத்திரம் அதை உருவாக்கியதாகவும் இருக்கும். நீட்ஷேவுக்கும், தஸ்தயேவ்ஸ்கிக்கும் பொருந்தும் இப்படியான ஒரு சூழ்நிலையை என்னுடைய ‘On Moral Fiction’ நூலில் விளக்கியுள்ளேன். நீட்ஷே கட்டமைத்த ‘Übermensch’ என்பது எந்த சட்டதிட்டங்களுக்கும் கட்டுப்படாத, என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடிய, யாரை வேண்டுமானாலும் அழிக்ககூடிய ஒரு சூப்பர்மேனின் உருவகம். அங்கு கடவுள் என்பவர் இல்ல, மரித்துவிட்டார். அத்தகைய ஒரு இடத்தில் உள்ள மக்களெல்லாம் ஒன்றுகூடி முடிவுசெய்து போக்குவரத்து இல்லாத 61-ஆம் இலக்க நெடுஞ்சாலையில் ஒரு சிகப்பு விளக்கைக் கொண்ட நிறுத்தல் கம்பத்தை அமைக்கிறார்கள். இப்போது அதிகாலை மூன்று மணி, நீங்கள் அந்த வழியாக பயணிக்கிறீர்கள் என்று கொள்வோம். அச்சமயம் சிகப்பு விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. நீங்கள் அதைத் தாண்டிச் செல்லப் பார்க்கிறீர்கள். புதரில் இருந்து ஒரு காவலாளி காரில் வெளிப்பட்டு உங்களைப் பிடிக்க துரத்திவருகிறார். நீங்கள் ஒரு சூப்பர்மேனாக இருந்தால் அங்கு என்ன நடக்கும்? அந்தக் காவலாளியை அமைதியாகக் கொலைசெய்து புதரில் வீசிவிட்டு சென்றுவிடுவீர்கள் இல்லையா? இப்படிப் பார்ப்பது இந்த சூப்பர்மேன் உருவகத்தை ஒருவகையில் ஆர்வமூட்டுவது. இங்கு எழும் அடிப்படைக் கேள்விகளென்று சிலவற்றைச் சொல்லலாம்: முதலில் அம்மாதிரி செய்வது சரியா, தவறா? அப்படிச் செய்ய முடியுமா? அப்படிச் செய்து விட்டு மனிதர்களால் மேற்கொண்டு எப்போதும்போல வாழ முடியுமா? இந்த பரிசோதனையைத் தான் தஸ்தயேவ்ஸ்கி தன்னுடைய கற்பனையில் கட்டமைத்து பரிசோதித்துப் பார்க்கிறார். அதற்கென்று நேரிடையாகச் சென்று ஒருவரை கொலை செய்து பார்த்து அவர் அதைத் தெரிந்து கொள்வதில்லை. அசலான வகையில் ஒரு பீட்டெர்ஸ்பர்க் நகரைக் கட்டமைத்து அதில் நாம் நம்பத் தகுந்த அளவில் அம்மாதிரி கொலை செய்யக்கூடிய ஒருவரைப் படைக்கிறார். மொத்த பீட்டெர்ஸ்பர்க் நகரில் உள்ள கல்லூரி மாணவர்களில் எவர் அம்மாதிரியான ஒரு கொலையைச் செய்யக்கூடும்? அவருக்கு எப்படிப்பட்ட நண்பர்களும் உறவினர்களும் இருப்பார்கள்? அவரின் தினசரி எவ்விதம் இருக்கும்? அவர் என்னவெல்லாம் சாப்பிடுவார்? தஸ்தயேவ்ஸ்கி இவற்றை கற்பனையில் முழுமுற்றாகச் செய்து என்ன நிகழ்கிறது என்று தெரிந்து கொள்கிறார்.

சிறந்த நாவல்கள் எல்லாமும் இதைச் செய்கிறது என்றே கூறுவேன். யதார்த்தவாத கூறுமுறையில் தான் இதைச் செய்ய வேண்டும் என்பதில்லை. ரஸ்கால்னிகவ் டைனோசர் மாதிரியான ஒரு ராட்சத விலங்காகக் கூட இருக்கலாம். அந்த ராட்சத விலங்கின் உணர்ச்சிகளை வாசகர்கள் புரிந்து கொள்ள ஏதுவாக அக்கதாப்பாத்திரத்தின் வடிவமைப்பானது சீராகவும் நம்பத்தகுந்ததாகவும் இருக்க வேண்டும், அவ்வளவே. எழுத்தாளரின் கற்பனை அங்கு எந்த அளவு யதார்த்தமாகவும் நம்பத்தகுந்ததாகவும் இருக்கிறது என்பது தான் முக்கியம். இப்படிச் சொல்லலாம்: ஒரு நாவலாசிரியர் என்பவர் கேள்விகளுக்கு விடை காண்பவர், அதை மிச்சமின்றி முழுமையாகச் செய்பவர். ஓரிடத்தில் எப்போது மழை பெய்யும் எப்போது மழை பெய்யாது போன்ற ஆரம்பகட்ட கேள்விகளுக்கு அப்பால் நம்மால் மழையைத் தாங்கிக் கொள்ள முடியுமா, முடியாதா? முடியுமென்றால் மழையைத் தாங்கிக் கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது? என்ற அளவில் கேள்விகளை விரித்துக் கொள்பவர். ஆகவே அறம்சார் புனைவென்பது அப்புனைவின் பார்வைக் கோணத்தோடு தொடர்புடையது. அறவுணர்வு கொண்ட ஒரு புனைவின் விரிவு என்பது இதுதான்: வாழ்க்கை என்பது எவ்வகையிலும் இறப்பைவிட மேலானது; கலையானது வாழ்தலுக்கான வழிகளை துரத்திக் கண்டடைகிறது; வாழ்தலுக்கான அப்போராட்டத்தில் ஒரு புனைவின் மையக் கதாப்பாத்திரங்களானது நேர்மையான முறையில் வெற்றி பெற்றதாகவோ, அல்லது பெருந்துயருடன் தோல்வியடைந்ததாகவோ வாசகரை வலுவாக நம்பவைக்கும் பட்சத்தில் அப்புனைவு வெற்றியடைந்ததாகிறது.

கேள்வி : அப்படியென்றால் நவீனகால புனைவைக் குறித்து உங்களுக்கென ஒரு வலிமையான நோக்கம் அல்லது குறிக்கோள் இருக்கிறது இல்லையா?

கார்ட்னர் : ஆம், அப்படியான ஒரு குறிக்கோள் எனக்கேயுரிய தனித்துவமான வழியில் அமைந்திருக்கிறது என்று கூறுவேன். நாவல் என்னும் கலை வடிவத்தை நான்  நகர்த்த நினைக்கிறேன். அந்த நகர்வு ஒரு புது திசையில் இருக்கலாம். அல்லது Homer, Beowulf என்று பின்னோக்கிய திசையிலும் இருக்கலாம். இந்த நகர்வை மற்ற எழுத்தாளர்களும் அவர்களுக்கே உரிய வழியில் செய்கிறார்கள் தான். Barth அல்லது Pynchon ஐ இங்கு உதாரணத்திற்கு சொல்லலாம். இவர்களின் முயற்சிகளில் எனக்கு அவ்வளவாக உவப்பில்லை என்றாலும் அம்மாதிரி முயல்வதற்கான எல்லா உரிமையும் அவர்களுக்கு உண்டு. கற்பனாவாதிகளின் வார்த்தைகளில் சொல்வதென்றால் ‘எனக்கு வேண்டுவது கருத்துகள் இல்லை, ‘Energeia’ தான்’. அதாவது ஒரு கதாப்பாத்திரமோ, சம்பவமோ தன்னகத்தே கொண்டிருக்கும் உண்மையான சாத்தியக்கூறுகளின் தொகுப்பு. அதன்பின் ஒரு தத்துவார்த்தமான அடித்தளம். இந்த அடித்தளம் இல்லாத எந்த நாவலும் காலத்தால் நீடித்து நிற்க முடியாது. குறியீட்டுத் தன்மைகளால் நிரம்பி வழியும் நிறைய நாவல்கள் இப்போது காணக்கிடைக்கிறது. ஒருபுறம் அவற்றில் பல அடுக்குகளாகப் பிண்ணப்பட்ட உருவகங்கள் வரிசையாக இடம்பெறுகிறது என்றால் மறுபுறம் பல திரிகளாக விரியும் சாதாரண சம்பவத் தொகுப்புகளின் மேல் உண்மைப் பொருளை அதன் ஆசிரியர் நுட்பமாக தைப்பதாக இருக்கிறது. இதற்கெல்லாம் நாம் இலக்கியத்தை வாசிக்கும், கற்பிக்கும் முறையில் உள்ள பிழையும் ஒரு முக்கியக் காரணம். John Updike வின் ‘Couples’ நாவலை இங்கு ஒரு நல்ல உதாரணமாகக் கூறலாம். இந்நாவலை இன்று யாரும் சீண்டாததற்கு முதன்மையான காரணம் அதில் உள்ள திட்டமிடப்பட்ட செயற்கையான மொழி தான். அத்தோடு குறியீட்டு தன்மைக்காக போடப்பட்ட கதாப்பாத்திரத்தின் பெயர்கள்; பிரபஞ்ச விரிவைக் குறிப்புணர்த்தும் வீட்டின் விவரனைகள்; கிறிஸ்தவ இறையியல் நோக்கில் காரண அறிவைக் குறிக்கும் வட்டங்களும், நம்பிக்கையை குறிக்கும் நேர்க்கோடுகளும் சாமர்த்தியமாக பிணைக்கப்பட்ட முறை என்று மேலும் நிறைய காரணங்களை அடுக்கலாம். அந்நாவலை வாசித்து Updike வின் அறிவுத்திறனை வேண்டுமானால் நாம் மெச்சிக் கொள்ளலாம்.

கேள்வி : அப்படியென்றால் நாவல் என்பது ஒரு முழுமையான கேளிக்கையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள் இல்லையா?

கார்ட்னர் : ஆம். தஸ்தயேவ்ஸ்கியின் ஆக்கங்களின் மேல் செய்யப்பட்ட அத்துனை ஆய்வுகளாலும் விமர்சனங்களாலும் நம்மால் அவரை ஒரு மர்ம நாவலாசிரியராக இப்போது வாசிக்கவே முடியாதபடி ஆகிவிட்டது இல்லையா? ஆனாலும் கரமசோவ் சகோதரர்கள் நூலானது அடிப்படையில் ஒரு உணர்ச்சிகரமான நாவல் தான். அத்துடன் அதில் மறைமுகமான ஒரு தத்துவ தரிசனமும் பொதிந்துள்ளது. என்னுடைய ‘The Sunlight Dialogues’ நூலை இதன் காரணமாகத்தான் ஒரு நாவலாக மட்டும் இல்லாமல் ஒரு முழுமையான கேளிக்கையாகக் கருதி படிக்கும் விதத்திலும் எழுதினேன்.

கேள்வி : உங்களில் செல்வாக்கு ஏற்படுத்திய சமகால எழுத்தாளர்கள் யாரும் இருக்கிறார்களா?

கார்ட்னர்: என்னுடைய சிந்தனா முறையை மாற்றியமைத்த சமகால எழுத்தாளர்கள் சிலர் இருக்கிறார்கள். ‘Bill Gass’ இன் எல்லா ஆக்கங்களும் எனக்கு பிடித்தமானதாக இல்லையென்றாலும், மொழி மீதான அவரின் அதீத கவனத்தால், அவரின் நேர்த்தியான மொழியானது என்னுடைய மொழி நடையை மாற்றியமைத்தது. Robert Louis Stevenson சொல்வது போல, எழுதும் போது நாம் செய்ய்யவேண்டிய முக்கியமான பணி என்பது ஒரு கனவை வாசகரின் மனதில் உருவாக்கி நிகழச் செய்வது தான். ஒரு வாசகர் நூலின் முதல் பக்கத்தைப் புரட்டி அதிலுள்ள வார்த்தைகளைப் படிக்க ஆரம்பிக்கும் போது ஒருவித வசிய நிலைக்கு(trance) சென்று விடுகிறார். அவரின் வாசிப்பறையை விடுத்து ரஷ்யாவை காணத் துவங்குகிறார். அதே சமயம் வாசகர் எதுவும் செய்யாமல் அக்கனவில் வெறுமே கட்டுண்டு இருப்பதும் இல்லை. அவர் தன்னுடைய நம்பிக்கையை அளிக்கிறார், கூடவே மதிப்பிடவும் செய்கிறார். அதனால் ஒரு புனைவில் வார்த்தைகளும், நடையும் வெளிப்படையாக இருப்பதோடு எந்த ஒரு வார்த்தையும் தனித்து தெரியக் கூடாது என்றும், அப்போது தான் அக்கனவு அறுபடாமல் நிகழும் என்றும் நினைத்தேன். ஆனால் சுவாரஸ்யமானக் கூறுமுறையால் அந்த கனவிற்கு எந்த இடையூரும் வருவதில்லை என்று ‘Gass’ இன் ஆரம்பகால ஆக்கங்களை வாசித்தபின் உணர்ந்து கொண்டேன். செயல்திறன் என்பதும் இங்கு ஒரு முக்கியமான அம்சம். அதே சமயம் ‘Gass’ ஐப் போல மொழியானது தொடர்புறுத்துவதை விட பகட்டாகவும் அலங்காரமாகவும் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அத்துடன் அவர் நாவலின் கதாப்பாத்திரங்கள் எல்லாம் உன்மை என்று நம்புவது ஒரு அசட்டுத்தனம் என்று நினைத்தார். ஆனால் அசலான ஒரு புனைவில் கனவில் நிகழ்வது  தான் நடக்கிறது. ஒரு மோசமான கனவில் இருந்து அலறியடித்து விழித்துக்கொள்வதற்கான உரிமை நமக்கு இருப்பதைப்போல், புனைவினால் உண்டாகும் கனவில் உள்ள ஒரு கதாப்பாத்திரத்தைக் குறித்து கவலை கொள்வதற்கும் நமக்கு உரிமையுள்ளது. மொத்தமாகப் பார்த்தால் வேறெந்த எழுத்தாளரை விடவும் Gass-இடம் இருந்து நான் பெற்றுக் கொண்டது அதிகம்.

குறியீடுகள் என்று எடுத்துக் கொண்டால் ‘James Joyce’ இடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன் என்று சொல்லலாம். அவர் எழுதிய காலத்தில் வாசகர்கள் புனைவில் உள்ள குறியீட்டு பண்புகளைக் கண்டுபிடிப்பதில் அவ்வளவு தேர்ச்சியுடையவர்களாக இருக்கவில்லை. அதனால் ஜாய்ஸ் நிறைய குறியீடுகளை வெளிப்படையாகவும் தட்டையாகவும் பயன்படுத்தியும் வாசகர்களால் கண்டுபிடிக்கப்படாமல் தப்பித்துக் கொண்டார். ஆனால் நவ விமர்சனம்(New Criticism) வந்த பிறகு கல்லூரியில் இருந்து புதிதாக வெளிவரும்  எந்த ஒரு மாணவராலும் அம்மாதிரி குறியீடுகளைக் கண்டுபிடித்துவிட முடியும். இதிலுள்ள சிக்கல் என்ன்வென்றால் ஒரு வாசகர் இம்மாதிரி குறியீடுகளைக் கண்டுபிடிக்க களமிறங்கும் போது அந்தப் புத்தகத்தை அறிவார்ந்த முறையில் புரிந்துகொண்டுவிட்டதாக நினைத்துக் கொண்டு அதன்மூலம் உண்மையில்  கதைமாந்தர்களுக்கு நிகழும் மாற்றங்களை கவனிக்க தவறவிடுகிறார். குறியீடுகளானது குறிப்பிட்ட விஷயங்களில் இருந்து பொதுமைக்கு நகரும் வண்ணம் நாவலில் இயல்பாக உண்டாக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். உங்களுடைய உண்மையான நோக்கத்தை வெளிக்காட்டாதவாறு இதை எப்படி செய்கிறீர்கள் என்பதும் முக்கியம். நிறைய நவீன எழுத்தாளர்கள் இதை வெற்றிகரமாக செய்துகாட்டியுள்ளனர்: ‘Pynchon’ தவறாக விஷயத்தை நம்பும்படிச் செய்வார். கட்டமைப்பால் உருவாக்கப்படும் திசைதிருப்பல்களால் ‘Barth’ இதைச் செய்பவர். அனைத்திற்கும் மேலாக ‘Gaddis‘ ஒரு அதிநவீன துப்பாக்கியின் வலிமையோடு மொழியின் கீர்த்தியால் அதைச் செய்தார்.

நீட்ஷே

கேள்வி : நாவலில் இடம்பெறும் மதிப்பீடுகள் ஒரு வாசகரை எங்கு கூட்டிச் செல்கிறது என்பதை நீங்கள் ஜாய்ஸைப் போல குறியீடுகளால் நுட்பமாக உணர்த்த விரும்புகிறீர்களா அல்லது வார்த்தைகளின் மூலம் நேரடியாகக் காட்ட நினைக்கிறீர்களா?

கார்ட்னர் : ஒரு நாவலின் கட்டமைப்பில் தொடங்கி, அதன் கதாப்பாத்திரங்களின் குணநலன், செயல்பாடுகள் என்று எல்லாவற்றிலும் நான் முடிந்த அளவு நேரடியாகவே இருக்க முயல்கிறேன். அதன் கதாப்பாத்திரங்கள் எங்கு செல்கிறார்கள், வீடுகளை, நிலைக்காட்சிகளை எப்படிப் பார்க்கிறார்கள், காலநிலையை எப்படி உணர்கிறார்கள் என்று எல்லாவற்றையும் அப்பட்டமாகவே சொல்ல நினைக்கிறேன்.  ஒழுக்க மதிப்பீடுகள், தடுமாற்றங்கள் என்று எல்லாவற்றிலும் நேரடியாகவே இருக்கிறேன். வீட்டுப் பணியாளருக்கு படித்துக் காட்டும் படி இருக்க வேண்டும் என்று Richardson குறிப்பிடுகிறார். என்னைக் கேட்டால் பணியாளரின்  நாய்க்கு கூட புரியுமாறு அமைக்க வேண்டும் என்று சொல்வேன். நான் எழுதும் போது தனிச்சையாக குறியீடுகள் குமிழிகளைப் போல மேலெழுவதைக் காண்கிறேன். அம்மாதிரி நேரங்களில் ஒரு எழுத்தாளர் அக்குறியீடுகளுக்கு உண்டான இடத்தைக் கொடுக்க முற்படலாம். எனினும் தன்னை நோக்கி குறியீட்டுத் தட்டிகள் நீட்டப்படுவதை எந்த ஒரு வாசகரும் விரும்ப மாட்டார். அறிவுணர்ச்சிதான் மனதின் மிகச்சிறந்த திசைத்திருப்பல். மீள மீள திருத்தும் தோறும் பிரதியானது மர்மமடைந்தவாறே இருக்கிறது. இறுதியில் அதிலுள்ள அனைத்தும் குறியீடாகிறது. நாவலை எழுத ஆரம்பிக்கும் போது நீங்கள் நிற்கும் இடமறிந்து எந்த தரப்பில் இருக்கிறீர்கள் என்று தெளிவாகத் தெரிகிறது. எனினும் திருத்த ஆரம்பித்தவுடன் அந்த நிலைபாட்டை மாற்றும் வண்ணம் உங்கள் ஆழுள்ளமானது பக்கச் சார்புகளை உங்களிடத்தே தள்ளியவாறு இருக்கிறது.

கேள்வி : புனைவாக்கச் செயல்பாடு என்பது உங்களுக்கு எப்போதும் கண்டடையும் செயல்பாடாகத் தான் இருக்கிறதா? வேறு வார்த்தைகளில் கேட்கவேண்டுமென்றால் புனைவாக்கத்திற்கு தூண்டிய ஒரு கரு அல்லது சிந்தனையானது எழுதத் துவங்கியதும் எளிமையான ஒன்றாகவோ, தவறான ஒன்றாகவோ தோன்றியிருக்கிறதா?

கார்ட்னர்: எந்த ஒரு ஆக்கத்திலும் நான் எழுதத் துவங்கிய இடம் பின்னர் திரும்பிப் பார்க்கையில் எளிமையான ஒன்றாக மாறிவிடுவதை எப்போதும் காண்கிறேன். இது இயல்பானது தான். எனினும் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் ஒவ்வொருமுறையும் நான் எதிர்பார்த்திடாத வழிகளில் எல்லாம் அது அவ்வறு எளிமையாகி விடுவது தான். இதுவரை எழுதிய அனைத்திலிருந்தும் உணர்ந்து கொண்டது இதுதான்: எந்த ஒரு ஆக்கத்திலும் ஏதாவது ஒன்றை எப்போதும் தவற விட்டிருக்கிறேன். அத்துடன் அதில் என்னை நானே ஏதோ ஒருவகையில் ஏமாற்றியிருக்கிறேன். இதெல்லாம் எழுதுவதால் கிடைக்கும் ஒருவகை இன்பங்கள். மேலும் எழுதும் போது அங்கு உருவாகும் நாடகத்தை அதன் போக்கிலேயே நடக்க விட்டு விடுவேன். கதாப்பாத்திரத்தையும் அதன் போக்கிலேயே செல்ல அனுமதித்து, அது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று பரிசீலனை செய்வேன். அந்த விளைவுகள் எனக்கு ஏற்புடையதாக இல்லையென்றால் ஏன் அவ்வாறு ஆகிறது என்று மிகத்தீவிரமாக சிந்திப்பேன். விளைவுகளை அது முட்டி நிற்கும் இடம் வரை இம்மதிரி விரட்டிச் செல்வதில் எனக்கு நல்ல தேர்ச்சி உண்டு. அதே நேரம் புனைவுப் பாத்திரங்களில் ஒருபோதும் போலியான செயல்களையோ, குணநலன்களையோ உண்டாக்குவதில்லை. அதுபோல அவர்கள் கூறச் சாத்தியமில்லாதவற்றை சொல்ல வைத்ததும் இல்லை.

கேள்வி : ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவம் உங்களில் எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியது?

கார்ட்னர் : குறிப்பிடத் தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது என்று தான் நினைக்கிறேன். புனைவெழுத்தை கற்பிக்கும் ஆசிரியராகத்தான் பெரும்பாலும் பணியாற்றினேன். ஆர்வமுடைய அறிவார்ந்த இளைஞர்களை வெகு எளிதாக ஒரு புனைவெழுத்தாளராக மாற்றிவிட முடியும் என்று விரைவிலேயே அறிந்து கொண்டேன். இந்த அறிதல் முதலில் அதிர்ச்சியளிப்பதாகவும் என் அகங்காரத்திற்கு பெரும் அடியாகவும் இருந்தது. விளைவாக என் புனைவாக்க அனுகுமுறையை அது முற்றிலும் மாற்றியமைத்தது. எனக்கு அப்போது இருபத்தைந்து வயது இருக்கலாம். எல்லோருக்கும் சொல்ல கதைகள் இருக்கிறது என்றும், சிறு பயிற்சியின் மூலம் அதை ஒருவர் நன்றாக எழுதிக்காட்டிவிட முடியும் என்றும் தெரிந்து கொண்ட மாத்திரத்திலேயே, பிற எவருமே எழுதிவிட முடியாதவற்றை எழுதி, கூட்டத்தில் இருந்து தனித்து நிற்க வேண்டும் என்று உறுதிபூண்டேன். போதக்குறைக்கு அப்போது நீட்ஷே என்னும் பிசாசை வேறு வாசித்துக் கொண்டிருந்தேன். மேற்கொண்டு புனைவின் கூறுமுறையிலும் வடிவத்திலும் பரிசோதனைகளை செய்து பார்த்தேன். பின்னர் சீக்கிரத்திலேயே புனைவைக் கற்பிப்பதில் இருந்து வெளியேறினேன். என் மாணவர்கள் என்னையொத்த அளவில் நன்றாக எழுதியது இந்த வெளியேற்றத்திற்கு ஒரு காரணம் என்றால், ஒரு நல்ல எழுத்தாளர் ஆவதற்கு தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை நோக்கிச் செல்லவேண்டி இருந்தது இன்னொரு காரணம். இறுதியில் வரலற்று விமர்சனம் கற்பிக்கத் துவங்கி, அந்த அனுபவமும் மதிப்புமிக்கதாக அமைந்தது.

கேள்வி : சமீபமாக ‘அறவுணர்ச்சி சார் புனைவு’ பற்றியும் ‘அறவுணர்ச்சி சார் விமர்சனம்’ குறித்தும் நீங்கள் நிறைய கட்டுரைகளை எழுதியுள்ளீர்கள். சிலருக்கு ‘அறவுணர்ச்சி’ என்னும் சொல் ஒரு பிரச்சனையாக இருக்கிறது. இதைப் பற்றி நீங்கள் விளக்க முடியுமா? இந்த வார்த்தைக்கு ஒரு எதிர்மறையான, அவமரியாதையான தொனி இக்காலகட்டத்தில் உருவாகியிருக்கிறது இல்லையா?

கார்ட்னர் : ஆம், ஆனால் அவ்வாறு உருவாகி இருக்கக் கூடாது. நான் கண்டிப்பாக போதிக்கும்(preaching) புனைவைக் குறிக்கவில்லை. நான் முதன்மையாகச் சுட்டுவது புனைவாக்கச் செயல்பாட்டில் நேர்மையாக இருப்பதைத் தான். அதாவது அப்புனைவு செயல்படும் விதத்தில் அறவுணர்வோடு இருப்பது. ஒரு நல்ல புனைவானது மதிப்பீடுகளை கற்பனையான அல்லது உண்மைக்கு அருகில் இருக்கும் சூழ்நிலைகளில் வைத்து பரிசோதித்து பார்க்கிறது. அதாவது வலுவாக, எடுத்துக் கொண்ட தரப்புகளுக்கு முற்றிலும் நேர்மையாக இருந்து அப்பரிசோதனையை மேற்கொள்கிறது. ஒரு அசலான அறவுணர்ச்சியுள்ள எழுத்தாளர் போதகருக்கும், மந்திரிகளுக்கும், குருமார்களுக்கும் நேர் எதிரானவர். ஒரு போதிப்பவரின் வேலை என்பது மதத்திற்குள் எந்த மாற்றத்தையும், எதிர்தரப்புகளையும் அனுமதிக்காமல் அதை பிற்போக்கான நிலையில் வைத்திருப்பது என்றால் மறுபுறம் ஒரு எழுத்தாளரின் வேலையானது முற்போக்கான நிலையில் வாய்ப்புள்ள எல்லா வழிகளையும் சுவீகரித்து ஏற்றுக் கொள்வதாக இருக்கும். அவர் முடிந்த வரையில் எந்த ஒரு தரப்பிற்கும் பாரபட்சம் காட்டாமல் இருக்க வேண்டும். அதாவது வாழ்க்கையை உறுதிப்படுத்த வேண்டுமே அன்றி ஏளனம் செய்யக் கூடாது. அதே வேளை நேர்மையாகவும் தன் பக்கச் சார்புகளின் எல்லைகளை புரிந்துகொண்டவராகவும் அவர் இருக்க வேண்டும். ஒரு எழுத்தாளன் எந்த உறுதிப்பாட்டையும் சுயமாக ஈட்ட வேண்டும்.  அவன் ஒரு காவலாளிக்கு சாதகமாக இருக்கிறானென்றால் மறுமுனையில் உள்ள ஒரு திருடனின் வாழ்க்கைகான வாதங்களையெல்லம் புரிந்து கொண்டு அதைச் செய்பவனாக இருக்க வேண்டும்.

***

ஜனார்த்தனன் இளங்கோ

ஜனார்த்தனன் இளங்கோ, மென்பொருள் பொறியியலாளர். சொந்த ஊர் திருவாரூரைச் சேர்ந்த திருத்துறைப்பூண்டி. இலக்கியம் தவிர தத்துவம், கட்டிடக்கலை, பறவையியல் ஆகிய துறைகளில் ஆர்வமுண்டு.

உரையாடலுக்கு

Your email address will not be published.