அணுக்கி : தன்ராஜ் மணி

“இன்னுமா இத பண்ற” என்றாள் நான் விரல் நனைத்து ஒரு சொட்டு மதுவை மேஜையில் விடுவதை பார்த்துவிட்டு.

அவள் முகம் முழுக்க சிரிப்பு கோடும் மேடுமாய் பூத்து விரிந்திருந்தது.
ஒரு மிடறு அருந்திவிட்டு கிளாசை மேஜையில் வைத்தேன்.

“ஓல்ட் ஹாபிட்ஸ் டை ஹார்ட்” என்றேன்.

“அப்படியே பிரிட்டிஷ் ஆக்சண்ட் . கண்ண மூடிட்டு கேட்டா நானே இங்கிலீஷ்காரனு சொல்லிடுவேன். ஆனா இன்னும் சாராய தர்ப்பணம் பண்ணிட்டிருக்க” என்றாள்.

மெழுகுவர்த்தியின் மென் மஞ்சள் ஒளி அவள் தெளிந்த கண்களில் ஓர் நடனத்தை நிகழ்த்தி கொண்டிருந்தது.

என் வலது கரத்தை நீட்டி அவள் இடக்கர விரல்ககளோடு என் விரல்களை கோர்த்து கொண்டேன். சற்றே விரிந்த அவள் கண்களில் ஒளியின் நடனம் இப்போது பெரிதாகியிருந்தது.

சிரிப்பின் விரிவு தணிந்து புன்னகையாகிருந்தது. கண்களை என் கண்களிலிருந்து விலக்கி பாரின் பக்கம் செலுத்தினாள். சில வினாடிகள் கழித்து அவள் கண்கள் என் கண்களை சந்தித்த போது அவள் இடக்கரம் என் வலக்கரத்தை வலிக்கும் அளவிற்கு அழுத்தி கொண்டிருந்தது.

இருபத்தி மூன்று வருடங்கள் நான்கு மாதங்கள் எட்டு நாட்கள் ஆகிறதாம் நாங்கள் கடைசியாக சந்தித்து. உணவகத்திற்குள் வந்து அமர்ந்ததும் அவள் சொன்ன முதல் வாக்கியம் அதுதான்.

அந்த கணக்குபடி நான் கையறுத்து கொண்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டது இருபத்தி மூன்று வருடங்கள் நான்கு மாதங்களுக்கு முன். அன்றுதான் அவளுடைய திருமணம்.
உடலின் அளவு சற்று பெருத்து கூந்தலின் அளவு நிறைய குறைந்தது தவிர அவளிடம் பெரிய மாற்றம் ஏதும் இல்லை.

என் கிளாஸை எட்டி எடுத்து ஒரு மிடறு அருந்திவிட்டு கீழே வைத்தாள். உதடுகளை குவித்து எனை நோக்கி காற்றில் முத்தமிட்டாள்.

நான் உதடு குவித்து அவள் அனுப்பிய முத்தத்தை ஏற்று கொண்டேன்.

“ரூம் புக் பண்ணி இருக்கணுமோ, தெரியாம ரெஸ்டாரெண்ட் புக் பண்ணிட்டேன்” என்றேன்.

“சை” என்று விட்டு வாய்விட்டு சிரித்தாள். கோர்த்த விரல்களை விடுவித்து கொண்டு செல்லமாக என் வலது கையில் அடித்தாள்.

“திருந்தவே மாட்டடா நீ . எப்ப பாரு இதேதான்” என்றாள்.

“ஆமா நாந்தான் லவ் பைட் லவ் பைட்னு கேட்டுட்டே இருப்பேன்” என்றேன். அவள் உதை என் வலது காலில் விழுந்தது. நல்ல வலி. ஆனால் சிரிப்பு வந்தது . அவளும் சேர்ந்து கொண்டாள்.

“ஞாபகமிருக்கா ஒரு நாளு நாயி கன்னத்துல நல்லா கடிச்சு வெச்சுட்ட , கண்ணி போயி.. ஒரு வாரம் எத்தன பேர்ட்ட எத்தன பொய்” என்றாள். மீண்டும் ஓர் உதை. இப்போது வலியில்லை.

அவள் வலது கையை நீட்டி என் இடது கரத்தை திருப்பினாள். மிக மங்கலாய் இருந்த மணிக்கட்டு அறுகோடுகளை மெல்ல வருடினாள்.

“லூசு” என்றாள் . கண்களில் சிரிப்பு தணிந்து கோபம் எட்டி பார்த்தது. இருபத்தி மூன்று வருடங்கள் மூன்று மாதங்களுக்கு முன் நாங்கள் பிரிவோம் என்று யாராவது சொல்லியிருந்தால் இருவரும் வாய்விட்டு சிரித்திருப்போம்.

கல்லூரி காலம் முதலே இருவருக்கும் சேர்ந்து எந்த நிகழ்ச்சியானாலும் ஒரே அழைப்புதான். என் ஆர் எக்ஸ் 100இன் பின் இருக்கைக்கு முழு சொந்தக்காரி. நாங்கள் வேலை செய்த இடங்களில் முக்கால்வாசி பேருக்கு நாங்கள் கணவன் மனைவிதான்.
எந்த வருடம் முதல் குழந்தை என்பது வரை பேசி வைத்திருந்தோம்.

அவள் வீட்டில் எதிர்ப்பிருக்கும் என தெரியும் ஆனால் அவள் அப்பா நெஞ்சை பிடித்துக் கொண்டு சரிவார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. மூன்று இதய குழாய்களில் தொண்ணூறு சத அடைப்பு. தான் பார்த்த வரனை கட்டினால்தான் பைபாஸிற்கு ஒப்பு கொள்வேன் என சொல்லிவிட்டார்.

சாவின் மேல் வாழ்வை தொடங்க இருவருக்குமே விருப்பமில்லை.

திருமணமானவுடன் கணவனுடன் சியாட்டில் சென்றுவிட்டாள்.
இப்போது அவளுக்கு இரு மகன்கள். அமெரிக்காவில் வாசம். ஒருவன் மருத்துவ கல்லூரி நான்காம் ஆண்டு இன்னொருவன் பிஸினஸ் management முதலாம் ஆண்டு படித்து கொண்டிருக்கிறான்.

அவளற்ற வாழ்வு எனக்கு சுலபமாக இல்லை. நான் கையறுத்து தண்ணியடித்து அழுது புரண்டு , அப்போதும் மறக்க முடியாமல் வேலை மாறி யூ கே வந்து பல வருடங்கள் கழித்து சித்ராவை மணந்தேன். என் மகள் இப்போது ஏழாவது படிக்கிறாள். எனையாளும் பேரரசி. என் போன் ஸ்கிரீன் சேவரில் இருந்து என் அலுவலக டெஸ்க் வரை அவள் அலங்கரிக்காத இடமே என் வாழ்வில் இல்லை.

அவள் ஞாபகம் வந்தவுடன் கை தன்னிச்சையாய் போனுக்கு போனது. வாட்சாப்பில் “When are u back?” என கேட்டிருந்தாள். “Sleep will be late” என அனுப்பினேன். நான்கு சிகப்பு விழித்து பார்க்கும் பொம்மைகள் உடனே அவளிடம் இருந்து வந்தது.

“யாரு” என்றாள் வருடலை நிறுத்தாமல்.

“பொண்ணு, சீக்கிரம் வர சொல்றா” என்றேன் புன்னகையுடன்.

“அவளுக்கு அப்படியே உன் கண்ணு உன் சுருள் முடி உன் முகம். pretty angel” என்றாள். வருடலில் மேலும் வாஞ்சை கூடியிருந்தது. இப்போதுதான் முதல் முறையாக என் மகளை பற்றி பேசுகிறாள்.

இரண்டு மாதங்களுக்கு முன் நான் யதேச்சையாக சந்தித்த கல்லூரி நண்பன் என்னை கல்லூரி வாட் சாப் குரூப்பில் சேர்த்துவிட்டான்.

க்ரூப்பில் இவள் இல்லை. நான் சேர்ந்தவுடன் அதில் நான் அனுப்பிய குடும்ப புகைப்படத்தை அவளுடைய தோழி அவளுக்கு வாட்சாப்பில் அனுப்பி வைத்து என் நம்பரையும் கொடுத்துவிட்டாள்.

அன்றிலிருந்து வாட்சாப் சாட் செய்து கொண்டிருந்தோம். இந்தியா போகும் வழியில் என்னை பார்ப்பதற்காக லண்டனில் இறங்கி இப்போது என் முன்னால் அமர்ந்து கொண்டிருக்கிறாள். வீட்டிற்கு வர அவளும் விருப்பபடவில்லை நானும் தவிர்த்து விட்டேன்.

இவள் என் தோழியல்ல எனக்கிவள் வேறு என்பதை பார்த்தவுடன் அறிந்துகொள்ளும் உணர்கொம்பு எல்லா மனைவிகளையும் போல சித்ராவிற்கும் உண்டு என்பது எனக்கு தெரியும்.

மலாய் டிக்கா வந்தது.

“ரொம்ப நல்லாருக்குடா” என்றாள்.

“டாம் க்ரூஸ் லண்டன் வந்தா சாப்புடற எடமாம் இது . உனக்கு அவன பிடிக்கும்ல அதான் புக் பண்ணேன்.” என்றேன்.

“புது டாப் கன் பாத்தியா. அப்படியே இருக்கான்ல” என்றாள்.

நான் ஒன்றும் சொல்லாமல் அவளை பார்த்து புன்னகைத்தேன்.

“டேய் காஜி. கண்லயே எல்லாத்தையும் பண்ணிரு” சட்டென முகம் பிரகாசமாக
“சூப்பர் டீலக்ஸ்ல காஜி வரும்ல. இந்த வேர்ட் எல்லாம் சினிமால வரும்னு நான் நெனச்சு கூட பாத்ததில்ல. அந்த படம் பாத்துட்டு ஒரு வாரம் ஒரே நாஸ்டால்ஜிக் ட்ரிப்பிங்ல இருந்தேன். நீ பாத்தியா?” என்றாள்.

சினிமா எங்கள் இருவருக்குமான இணைப்பின் தொடக்கபுள்ளி. இருவரும் சினிமா பைத்தியம். இவளோடு சேர்ந்து குறைந்தது ஐநூறு படமாவது பார்த்திருப்பேன். உடன் இருக்கும் போதெல்லாம் லாப்டாப்பில் படங்கள் பார்த்துக் கொண்டே இருப்போம். காமெடி சீன் முடிந்தவுடன் pause பட்டனை அழுத்திவிட்டு விழுந்து விழுந்து சிரிப்பது இவளிடமிருந்து எனக்கு தொற்றி கொண்ட வியாதி.

“வேன் வெச்சுலாம் கடத்தியிருக்கோம் சீன்ல என் வீட்ல ஒரு சிரிப்பு சிரிச்சியே ஞாபகம் இருக்கா. எங்கடா பக்கத்து வீட்டு ஆண்டி காதுல வுழுந்து ஓடி வந்துறபோறாங்கனு பயத்துல வேர்த்தே போச்சு எனக்கு” என்றேன்.

எங்கள் வீடு மேடவாக்கத்தில். அப்போது எங்கள் வீட்டோடு சேர்த்து மேடவாக்கத்தில் பத்து வீடுகள் இருந்திருந்தால் அதிகம். பக்கத்து வீடு பக்கத்து ரோட்டில் இருந்தது. வீட்டு பின் புறம் முழுக்க நாலாள் உயரத்திற்கு புதர் மண்டி கிடக்கும். என் அம்மா அப்பா வேலைக்கு கிளம்பிய பிறகு நானும் காலேஜிற்கு கிளம்புவது போல் பூட்டை பூட்டி வீட்டை சுற்றி வந்து பின் கதவு வழியாக வீட்டிற்குள் வந்து விடுவேன். அவள் அடையாறில் காலேஜ் பஸ்ஸில் இருந்து இறங்கி பஸ் பிடித்து வேளச்சேரி வந்து அங்கிருந்து இன்னொரு பஸ் பிடித்து மேடவாக்கம் வந்து வீட்டிற்குள் பின் வாசல் வழியே சரியாக பத்து மணிக்கு வந்து விடுவாள் , நான்கு மணிக்கு வெளியேறிவிடுவாள். மாதத்தில் இரண்டு நாட்களாவது இப்படி தனித்திருப்போம்.

“எப்டி சிரிப்போம்ல. எதுவுமே இருக்காது ஆனா சிரிச்சிட்டே இருப்போம்” என்றாள்.

“ம் எத பாத்தாலும் சிரிப்புதான்” என்றேன்.

இருவரும் சிறிது நேரம் எதுவும் பேசிக் கொள்ளாமல் வந்தவற்றை சாப்பிட்டோம்.
மெயின் கோர்ஸ் முடித்து ரெஸ்ட் ரூம் சென்று வந்தவள் என்னருகில் அமர்ந்து கொண்டாள்.

என் இடது புஜத்தை வலிக்காமல் கடித்தாள்.

நாங்கள் தனித்திருக்கும் போதெல்லாம் என் மேல் சாய்ந்து கொண்டு என் தோளை கடிப்பதும் என் சுருள் தலை முடிக்குள் விரல் விட்டு சிக்கெடுப்பது போல மெல்ல இழுப்பதும் அவளுக்கு மிக பிடித்த பொழுது போக்கு.

விரல்களால் பின்னந்தலை முடி கற்றையை பிடித்து இழுத்துவிட்டு “என்ன ஸ்பிரிங் எல்லாம் நீட்டாமாயிருச்சு” என்றாள்.

“டெய்லி straightening பண்றேன்” என்றேன்.

தொடையில் அழுத்தி கிள்ளினாள்.

“ஏய் வலிக்குதுடி” என்றேன் கண்களில் நீர் கட்டி கொண்டது.

“அதுக்குதான கிள்றது” என்றுவிட்டு டெஸர்ட் மெனுவை பார்க்க ஆரம்பித்தாள்.

நான் என் இடது கையை எடுத்து அவள் இடது புஜத்தில் வைத்து மெல்ல என் பக்கம் இழுத்தேன். இருவருக்கும் நடுவில் இருந்த சோபா இடை வெளி மறைந்தது.

“நான் எப்பவும் பண்றத பண்ணட்டுமா” என்றேன் கையை தோளில் இருந்து எடுக்காமல்.
திரும்பி என்னை பார்த்து பல்லை கடித்தாள் முகமுழுக்க சிரிப்பு, கன்னம் சற்று சிவந்திருந்தது.

“என்னடி வெக்கபட்ற” என்றேன்.

மெனுவால் முகத்தை மூடி சிரிப்பை அடக்கி கொண்டு மூச்சை உள்ளிழுத்து நிமிர்ந்தாள். கண்களில் மட்டும் சிரிப்பு தழும்ப “உன்ன மாதிரி shameless இல்ல நானு. I am a decent fellow from decent family” என்றாள் வடிவேலு மாடுலேஷனில்.

ஒரே தருணத்தில் இருவரும் வெடித்து சிரித்தோம். டெஸர்ட் ஆர்டர் எடுக்க எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தவர் நின்று புன்னகைத்து விட்டு விலகி சென்றார்.

“நாங்க ராஜா பகவத்து பேமிலிடி” என்றேன்.

“ஏய் நீயும் பாப்பியா அத , செமல்ல” என்றாள் சிரிப்பின் நடுவே.

இருவரும் மாறி மாறி மீம்களால் பேசிக் கொண்டோம். இத்தனை மீம்கள் மனப்பாடமாக தெரியும் இருவரை யாராவது பார்த்தால் ஆச்சரியபடுவார்கள் . எங்களுக்கு அது ஆச்சரியமாக இல்லை. மீம்கள் மீம்கள் ஆவதற்கு முன்பே அவற்றை கொண்டு உரையாடி கொண்டவர்கள் நாங்கள். சிரிப்பு அடங்க வெகு நேரமாயிற்று.

அவளுக்கு பிடித்த பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கீரீம் ஒன்றை வாங்கி அவள் ஒரு வாய் நான் ஒரு வாய் என அதே ஸ்பூனில் சாப்பிட்டு முடித்தோம்.

Baileys on the rocks large ஒன்று வாங்கினேன். ஒரு மிடறு குடித்துவிட்டு, “மைல்டா நல்லாருக்கு. இன்னும் ஜின் அடிக்கிறியா” என்றாள்.

நாற்றமில்லாத மது என்பதால் கல்லூரி படிக்கும் நாட்களில் நான் அதிகம் குடிப்பது ஜின் தான். குடித்துவிட்டு பயப்படாமல் வீட்டிற்கு சென்று படுத்து கொள்ளலாம். குடித்துவிட்டு இவளை முத்தமிடலாம்.

மிச்ச பைலீஸை மொத்தமாக வாயில் விட்டு கொண்டேன்.

“கடைசியா எப்போ குடிச்சேனு தெரியல. ரொம்ப வருஷமாச்சு.” என்றேன். ஜின் எனக்கு அவளை நினைவு படுத்துவதால் அதை நான் குடிப்பதில்லை என்று சொல்ல ஒரு மாதிரியிருந்தது.

“நீ அப்புறமா அதை குடிச்சே இருக்க மாட்டனு எனக்கு தெரியும் அதான் கேட்டேன். இத்தனை வருஷம் கழிச்சு இன்னைக்கிதான் நான் அல்கஹால் சாப்டுறேன். It always reminds me of you அதனால. என்னோட இருக்கும் போது எனக்கு ஸ்மல் பிடிக்காதுனு நீ ஜின் மட்டும்தான் அடிப்ப ஸோ உனக்கும் அதேதான” என்றாள்.

“நீ சாப்டல நக்கி பாத்த. அப்பவும் அப்படிதான் இன்னிக்கும் அப்படிதான். இதுல senti சீன் வேற” என்றேன்.

சிரித்துகொண்டே மீண்டும் தொடையில் அழுத்தி கிள்ளினாள்.

“அது tasting , licking இல்ல பன்னி பன்னி” என்றாள்.

கிள்ளிய அவள் விரல்களை எடுத்து என் விரல்களோடு கோர்த்து கொண்டேன். ஒருவரை ஒருவர் விழுங்கி விடுவதை போல் பார்த்து கொண்டு சிறிது நேரம் அமர்ந்திருந்தோம். கனவில் இருந்து விழிப்பவள் போல் சட்டென விரல்களை விடுவித்து கொண்டு கண்களால் போலாம் என்றாள்.

நான் சர்வரை நோக்கி கையசைத்தேன். பணத்தை கொடுத்துவிட்டு எழுந்தோம். லிப்ட் செல்லும் வழியில் வைக்க பட்டிருந்த வித விதமான டர்பன்களை அவள் அணிந்து கொண்டு போஸ் கொடுக்க நான் அவள் போனில் படங்கள் எடுத்தேன்.

லிப்டில் ஏறினோம். லிப்டின் கதவு மூடியவுடன் அவள் விரல்களால் என் உதட்டை குவித்து அந்த விரல்களை தன் உதட்டில் வைத்து முத்தினாள்.

லிப்ட் நின்ற பிறகும் நான் அவளையே பார்த்து கொண்டு நிற்பதை பார்த்துவிட்டு கையை பிடித்து இழுத்துக் கொண்டு ரீஜண்ட் ஸ்டீரிட்டில் இறங்கினாள்.

“எல்லாமே டிசைனர் வேர் ஸ்டோர்ஸா. பில்டிங்ஸ் எல்லாமே சூப்பரா இருக்கு” என்றாள் சுற்றும் முற்றும் பார்த்தபடி திரும்பி என்னை பார்த்தவள் “ஏதாவது வாங்கி குடு மேன். பி அ மேன்” என்றாள் மாடுலேஷனில் வடிவேலு சற்று எட்டி பார்த்தார்.

“இல்ல இன்னைக்கி நான் நோ மேன் ஒன்லி பாய் நீ வளர்ந்துவிட்ட வுமன் நீ வாங்கி குடு” என்றேன்.

“ஒ மை gaad. பாய் கெல்லாம் குச்சி மிட்டாய் குருவி ரொட்டி மட்டும்தான் வாங்கி தரது” என்றுவிட்டு பலமாக சிரித்தாள்.

“பாடாவதி ஜோக்க சொல்லிட்டு அதுக்கு பத்து ஊரு கேக்கற மாறி சிரிக்கிற பழக்கம் உனக்கு இன்னும் போகல” என்றேன். அவள் சிரிப்பு கொரோனாவை விட அதிகம் தொற்றும் குணம் கொண்டது. நான் மட்டும் அல்ல எங்களை பார்த்து கொண்டு நடப்பவர்கள் கூட சிரித்து கொண்டு சென்றனர். ஒன்றுமே இல்லாதவற்றிக்கு சிரித்துக் கொண்டே ஆக்ஸ்போர்ட் ஸ்டீரீட் வரை வந்து விட்டோம்.

“டேய் சிரிச்சு சிரிச்சு சுச்சா வருதுடா” என்றாள்.

“இம்சடி நீ. கொஞ்ச தூரத்துல மெக் டி இருக்கு அது வரைக்கும் அடக்கு” என்றேன்
“இல்ல லண்டன் வரைக்கும் வந்துட்டு விக்டோரியன் காலத்து பில்லர் மேல சுச்சா போகாம போன நல்லா இருக்காது. அந்த ஜாக்கெட்ட கழட்டி கர்டைன் மாதிரி புடிச்சி நின்னுக்கோ நான் பாஸ்டா போயிற்றேன்” என்றாள்.

“ஏய்ய்ய்” சிரிப்பில் ஏய்யின் டெஸிபல் அதிகமாகி அருகில் இருந்த பல தலைகள் எங்களை பார்த்தன. இருவரும் வயிற்றை பிடித்து கொண்டு குலுங்கி சிரித்து கொண்டே கிட்டதட்ட ஓட்டமும் நடையுமாய் மெக் டியை அடைந்தோம்.

நான் சென்று ஒரு டேபிளில் அமர்ந்து கொண்டேன். ரெஸ்ட் ரூம் போய் விட்டு வந்தவள் “ ஐயோ அம்மா நல்ல வேள நாம கல்யாணம் பண்ணல பண்ணியிருந்தா ஒண்ணுமில்லாததுக்கு சிரிச்சே வயிறு வெடிச்சு செத்து போய் laughing stock ஆகி இருப்போம்” என்று சொல்லி கொண்டே எதிரில் அமர்ந்தாள்.

“வெட்டியாய் சிரித்து மட்டையாய் செத்த தம்பதினு தினத்தந்தில மூணாம் பக்கத்துல வந்திருக்கும்” என்றேன்.

“கட்டம் கட்டி உஸ்ஸீ” என்றாள் முகத்தை அமைதிப்படை சத்யராஜ் போல தூக்கி வைத்து கொண்டு.

“இப்ப அளவா சிரிச்சு வளமா இருக்கல்ல” என்றேன். அவள் சிரிப்பு புன்னகையாகியது.

“அவருக்கு எல்லாமே தெரியும். எல்லாமேனா I mean எல்லாமே. இத்தனை வருஷத்துல எவ்ளோ பெரிய சண்டைலயும் ஒரு தடவ கூட என் பாஸ்ட்ட பத்தி பேசினதே இல்ல. He has a heart of gold” என்றாள்.

“ கல்யாணமான மொதல் ஆறு மாசம் பெட்ல படுத்திருக்கும் போது அவர் என்ன தொட்டாலே கண்ல இருந்து தண்ணி ஆறா கொட்டும் litrally like river. அவர் என்ன கிஸ் பண்ணா வாந்தி எடுப்பண்டா can u believe it. வேணும்ட்டு இல்ல நிஜம்மாவே வரும். வேற ஒருத்தனா இருந்தா ஒண்ணு டிவோர்ஸ் பண்ணியிருப்பான் இல்ல ரேப் பண்ணியிருப்பான். He just let me be. கவுன்சிலிங் ஏற்பாடு பண்ணி நானா சரியாற வரைக்கும் வெயிட் பண்ணி…”

கைப்பையை சற்று நோண்டிவிட்டு, “நான் ஏதோ புண்ணியம் பண்ணியிருக்கேண்டா என் லைப்ல என் அப்பாவை தவிர என்னோட எல்லா ஆம்பளைங்களும் கோல்ட்தான் including my sons ” என்றாள்.

இருவரும் சிறிது நேரம் அமைதியாய் அமர்ந்திருந்தோம்.

“என்ன விடு. சித்ராவுக்கு நம்மள பத்தி தெரியுமா” என்றாள்.

“நான் சொல்லல ஆனா எனக்கு ஒருத்தி இருந்தானு கண்டிப்பா அவளுக்கு தெரியும்னுதான் நினைக்கிறேன். உன்ன நான் பாக்கற பார்வைய பாத்தானா கண்டிப்பா கன்பர்ம் பண்ணிருவா. சண்ட வரும்போது என்ன மத்தவங்களோட கம்பேர் பண்ணி பாக்காதிங்கன்னு சம்மந்தமே இல்லாம சொல்லுவா. “ என்றேன் அவள் சிரித்தாள்.

“சந்தோஷமாதான் போகுது. வா கெளம்பலாம் ஹோட்டல் வரைக்கும் வறேன் லேட் ஆகுதில்ல” என்றேன்.

ட்யூபில் ஏறி ஹீத்ரு நோக்கி பயணப்பட்டோம். அவள் தன் மகன்களை பற்றியும் நான் என் மகளை பற்றியும் விடாமல் பேசிக்கொண்டே இருந்தோம். பேச இருபது வருட கதை இருந்தது. இருபது நிமிடத்தில் எப்படி பேச. Sofitel ஹோட்டலில் ரூம் போட்டிருந்தாள் அன்றிரவு தங்க . நாளை அதிகாலை சென்னைக்கு விமானம். ரிசப்சன் வரை சென்றேன்.

“உடனே கெளம்பனுமா கொஞ்ச நேரம் பேசிட்டிருக்கலாம் ரூமுக்கு வா” என்றாள்
போனேன்.

பாத்ரூம் சென்று உடை மாற்றி வந்தாள்.

நான் அமர்ந்திருந்த சோபா அருகில் வந்து என் முன் நின்றாள். என் தலையை கலைத்துவிட்டாள். என் முகத்தை இரு கைகளால் ஏந்தி தூக்கினாள். என்னை பார்த்து புன்னகைத்தாள்.

“டேய் காஜி இவ்ளோ பக்கத்துல நிக்குறேன் உன் கையும் காலும் ரொம்ப ஜெண்டில்மேன் ஆயிருச்சு போல சமத்தா இருக்கு” என்றாள்.

என் முகத்தை அவள் வயிற்றோடு அணைத்துக் கொண்டாள்.

சட்டென்று விலகி கண்ணாடி அருகில் இருந்த நாற்காலியை நகர்த்தி என் முன்னால் போட்டு அமர்ந்து கொண்டாள்.

“ஊர்ல இருந்து வரும் போது ரொம்ப கில்டியா இருந்தது. obviously உன்ன பாக்கதான் இந்த பிரேக் ஜர்னி எடுக்கிறேனு அவர்ட்ட சொல்லல. நீ பழைய மாதிரி பாத்தவுடனே லிப்புக்கு பாய்வனு நெனச்சேன். அப்படி பாஞ்சா அத நான் தடுக்க முடியாதுனு எனக்கு தெரியும்.. “ என்றாள்.

நான் சிரித்தேன்.

“பல பிளான்லதான் வந்தேன் ஆனா உன் கண்ல இருபத்தி மூணு வருஷத்துக்கு முன்னாடி என்ன பாத்த பார்வை இல்ல. அது இல்லாம அந்த லிப்ல இருந்து கரெண்ட் வராதே” என்றேன்.

என் தொடையில் குத்தினாள் “பெரிய எலக்ரிட் இஞ்சினியரு கரெண்ட் செக் பண்றாரு” என்றாள்.

மேலும் சில மணி நேரங்கள் பேசி பேசி வயிற்றை பிடித்து கொண்டு உருண்டு சிரித்து விட்டு கிளம்பினேன்.

“நீ யூ எஸ் வாடா. பேமிலியும் கூட்டிட்டு வா” என்றாள்.

“பிளான் பண்ணி பண்ணுவோம். சித்ரா ப்ரெண்டுனு சொன்னா ஒத்துப்பானுதான் தோணுது” என்றேன்.

பளிப்பு காட்டினாள். எழுந்து கதவை திறக்க போகும் போது “டேய் ஒரு செல்பி” என்றாள்.

ஹீத்ரு டெர்மினல் ஜன்னலில் தெரிய இருவர் போனிலும் ஒவ்வொரு செல்பி எடுத்தோம்.

000

தன்ராஜ் மணி

தமிழில் கதை கட்டுரைகள் எழுதி வருகிறார். சாம்பனின் பாடல் என்ற சிறுகதை தொகுப்பு வெளியாகி உள்ளது. அரூவின் அறிவியல் சிறுகதை போட்டியில் இவர் கதை பரிசு வென்றிருக்கிறது. தேசிய விருது பெற்ற “ராக்கெட்ரி” என்ற திரைப்படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார்.

1 Comment

  1. வழக்கமான ஆண் பெண் உறவு சிக்கலை சொல்லும் கதை மொழி நடை நன்றாக இருந்தது நன்றி.

உரையாடலுக்கு

Your email address will not be published.