/

“இகவடை பரவடை” – ஒரு விமர்சனப் பார்வை : தாமரை பாரதி

தமிழில் பெருங்காவிய அல்லது காப்பிய மரபில் பாட்டுடைச் செய்யுள், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், தொடர் நிலை செய்யுள் மாதிரியான காவியத்தின் கூறுகள் பலவாம். இங்கு காவியம் என்பதும் காப்பியம் என்பதும் ஒன்றா என்று சிந்திக்க தோன்றுகிறது. ஏனென்றால் காப்பியம் என்றால் ஆங்கிலத்தில் எபிக் (Epic) என்கிறது.காவியம் என்றாலும் அதுதானா என்ற ஐயமும் தெரிகிறது.அடுத்ததாகக் காப்பியம் இரண்டு வகைப்படுகிறது. ஒன்று பெருங்காப்பியம் இன்னொன்று சிறுங்காப்பியம்.

பெருங்காப்பியம் என்பது அறம், பொருள், இன்பம் மற்றும் வீடுபேறு ஆகியவற்றைப் பற்றி எழுதுதலை, பாடுதலைக் குறிப்பிடுகிறது. சிறுங்காப்பியம் என்பது அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றோ இரண்டோ குறைத்துப் பாடப்படுவது. தமிழ்ச்சிற்றிலக்கியங்கள் எனப்படும் 96 வகையிலான “கட்டப்பட்டது “எனும் பொருள்படும்படியான பிரபந்தங்களையும் நாம் சிறுங்காப்பிய வகைமைக்குள் வைக்கலாம். ஆனால் குறுங்காவியம் என்ற சொல்லாடல் இந்த நவீன இலக்கிய பரப்பில் புதியதாக நாம் கருதலாம்.

தமிழின் மறுமலர்ச்சி இலக்கிய காலத்தில் பெருங்காப்பிய, சிறுகாப்பிய மரபுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுக் குறுங்காப்பிய வடிவங்கள் மேலெழுந்தன. ஓரளவு சமகால நோக்கும் விவாதங்களும் முன்னெடுத்த குறுங்காப்பிய வடிவங்கள் 19 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே அதிகம் தோன்றின. குறுங்காப்பியங்களை எழுதியவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாக பாரதியார்(பாஞ்சாலி சபதம் ,குயில் பாட்டு), பாரதிதாசன் (பாண்டியன் பரிசு,தமிழச்சியின் கத்தி), கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை (மருமக்கள் வழி மான்மியம்), சுத்தானந்த பாரதியார் (பாரதமகா சக்தி காவியம்), சுரதா, பேரா.பெ.சுந்தரம்பிள்ளை கண்ணதாசன் (ஆட்டனத்தி ஆதிமந்தி,மாங்கனி,ஏசுகாவியம்), புலவர் குழந்தை (ராவண காவியம்) போன்றவர்களைப் பட்டியலிடலாம். இவர்களில் பலரும் செய்யுளை வெளிப்பாட்டு முறையாகக் கொண்டு நாடகங்களையும் எழுதியவர்கள் என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.

மரபுக் கவிதை வடிவங்களில் குறுங்காப்பியங்கள் எழுதியவர்களுக்குப் பின்னால் புதுக்கவிதை வடிவத்தில் இயங்கியவர்களும் குறுங்காப்பிய முயற்சிகளில் ஈடுபட்டவர்கள் ஞானி, சி.சு.செல்லப்பா, சிற்பி, எனலாம் .நவீன கவிதைப்பரப்பில் நகுலனும் பிரமிளும் 1973 ல் குறுங்காவிய மரபினை முறையே இருநீண்ட கவிதைகள் (சமர்ப்பணம்,மழை மரம் காற்று) “கண்ணாடியுள்ளிருந்து “ வழியாகத் தொடங்கி வைத்தனர்.அதனைத் தொடர்ந்து கலாப்பிரியா(எட்டையபுரம்,மற்றாங்கே ), தேவதேவன் (துயர்மலி உலகின் பெருவலி,புறப்பாடு) முதலானவர்களின் குறுங்காப்பியங்கள் வாசிக்கக் கிடைக்கின்றன.யூமா வாசுகி,கண்டராதித்தன், பிரேம் ரமேஷ், போன்றவர்கள் முன்னரே முயற்சித்திருக்கிறார்கள்.

பொதுவாக காவியம் என்பது வாழ்த்து அல்லது வணக்கம் என்பதில் தொடங்கி வரு பொருள் உரைத்தல் அதாவது காப்பியத்தின் சிறு பகுதிகளாகப் பின் வருவனவற்றை உரைத்தல்.அதில் சிலவற்றை நாம் இங்கே குறிப்பிடலாம். காதை ,சருக்கம் இலம்பகம், படலம் மற்றும் பரீட்சை.காப்பியத்தின் பேருறுப்பு காதை ஆகும் .ஆனால மேலே சொல்லப்பட்ட நவீன குறுங்காவியங்களின் அமைப்பு (Form) களில் காவியத்தின் கட்டமைப்புக் கூறுகள் ஏதும் இல்லை.ஏனென்றால் நாம் நவீன இலக்கியத்தில் புழங்குகிறோம்.நவீனம் என்றால் உடைப்பது.பின் நவீனம் என்றால் உடைத்துத் தெறிப்பது,தலைகீழாக்குவது,என்றெல்லாம் கூறி சமாதானமடைந்து விடலாம்தான். ஆனால் மரபிலிருந்து பழைய சொல்லாடலை மட்டும் எடுத்துக்கொண்டு அதைத் தலைப்பாக வைத்துக் கொள்ளலாம். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகப் பழகி வரும் நல் மரபைத் தொலைத்து நாம் என்ன சாதித்துவிட்டோம்.

“Who looks outside, dreams; Who looks inside ,awakes” என்பார் கார்ல் யங் (Carl Yung).அந்த வகையில் பால்யத்தின் பாதிப்புகளில் படிந்திருந்த நனவிலி மனத்தின் உள்ளடுக்குப் பயணங்களை நனவுமனத்தின் வெளிப்பாடாக கவிதையில் வெளிப்படுத்தியிருக்கிறார். ஷங்கர்ராமசுப்ரமணியன் .காலமும் இடமும் ஒருங்கே அதனது சம்பாஷணைகளைச் சொற்களாலும் சொற்களுக்கிடையிலான மௌனங்களாலும் குறு,சிறு,நீள நெடுங் கவிதைகள் மூலம் வெளிப்படிருக்கின்றன.அப்போதும் இப்போதும் என்கிற காலத்தொடர்பில் protagonist-ஐ விழிக்கவும் தூங்கவும் செய்கிற தருணங்களை இகவடை பரவடையில் தனது எளிய ஆனால் நுட்பமொழியால் கடத்துகிறார் .

பால்ய நதி பொருநையாக இப்போதும் ஓடிக்கொண்டிருப்பவனின் அகத்தில் பிரபஞ்ச கானத்தை இயற்றிக் கொண்டிருக்கும் இரண்டு பெண்களே இகவடை பரவடை. தெற்கு வடக்காக நிலப்பரப்பில் நீண்டுகிடக்கும் பயணங்களின் ஊடாட்டமாகவும் ஊசலாட்டமாகவும் வந்து போகும் இரு இடங்களுடனான இளைஞனின் உறவே இகவடை பரவடை.

இதன் முக்கிய அம்சமாக இருப்பது Intertextuality எனும் ஊடுபிரதித்தன்மை .ஊடு பிரதியாக கூடுவிட்டுக் கூடு பாய்ந்தவர்களாக அகத்தியர், வ.வே.சு, ராமலிங்க அடிகள், புதுமைப்பித்தன், பிச்சமூர்த்தி மௌனி, வண்ணதாசன், பாரதி, லா.ச.ரா, ஜே.கே, ரமேஷ்-பிரேம், கமலஹாசன், நா.முத்துக்குமார், அயல்தேசத்து மார்க்வெஸ், எமிலி டிக்கின்சன் உட்பட மற்றும் பலர் தொகுப்பு முழுவதும் வந்துகொண்டேயிருக்கிறார்கள் .

காதலில் துன்புற்ற மனம் அதிலிருந்து வெளியேற கலைசார்ந்து ,தத்துவம் சார்ந்து, அக அமைதி தேடல் கொள்ளும் போது, எழும் மனப்பித்துநிலையை “ஆ” எனும் பகுதியில் சூசியுடனான நினைவில் காணமுடிகிறது .திடீரென லவனும் குசனும் ஸ்தலபுராண குழப்பத்தில் உரையாடுகிறார்கள். தொன்மங்களைப் பகடியாக்கும் போக்கு, சமகாலத்தன்மையில் அதிகாரத்துக்கெதிரான நேரடியாகக் குரலெழுப்பும் தன்மையிலான கவிதைகள் சிலவும் வரிசைப்படுத்தப்பட்டுளன். மொத்தத்தில் வாழ்வின் சிதிலங்களைத் தன் அனுபவங்களுக்கு ஒப்புக்கொடுத்துவிட்ட தனிமையின் புலம்பல்களாகத் தத்துவார்த்தக் கேள்விகளை எழுப்புவதாகவும், விடைகாணாத பட்சத்தில் தனக்குள்ளாகவே ஒடுங்கிக்கொள்ளும் ஆமை போலவும் கவிதைகள் வரிசை கொள்கின்றன.

கவிஞருக்கே உரிய சிறந்த படிமங்களும் (விறைக்காத குறியில் பெருகிக் கொண்டிருக்கும் காதல், அணிச்சை துக்கம் போன்றவை) குறியீடுகளும்( சர்க்கஸ் விலங்குகள் ,கடலாமைகள் ப்ரௌனி நாய் ,டெஸர்ட் ரோஸ் போன்றவை )நல்ல வாசிப்பனுபவத்தைத் தருபவை.இத்தொகுப்பின் சிறப்பாக எல்லாவற்றையும் கூறிவிட முடியாது .ஞாபக சீதா ,ஆயிரம் சந்தோஷ இலைகள் ஆகிய தொகுப்புகளில் இருந்த சங்கர் ராமசுப்ரமணியனுடைய பிரத்யேக மொழி இங்கே இல்லை .பாரதியின் வசன கவிதைகளின் தாக்கமும் நகுலனின் plain verse ன் தாக்கமும் அதிகமாக இருக்கிறது.மேலும் பால்யம் முதல் இன்றுவரையிலான சுயசரிதமும் ஸ்தலபுராணங்களும் சலிப்பூட்டுகிறது.

“There is no coming to consciousness without pain” என்பார் Carl yung. இகவடை பரவடையில் வலியும், வலியால் பெருகும் வலி அறிதல் உணர்வும், பால்யம் தொட்டு, சமகால வாழ்வு வரை ஊர்ஜிதமாகி இருக்கிறது. மேலும் காப்பியம் காவியம் என்றால் ஆயிரமாயிரம் ஆண்டுகாலம் கடந்தும் நிற்பது. நான் முன்னரே சொன்னது போல இகவடை பரவடையும் இக் கட்டுரையில் முன்னரே சொல்லலப்பட்ட முன்னோடிகளின் படைப்புகளும் எந்தவிதத்தில் குறுங்காவியங்கள் என்ற ஐயம் தீரவேயில்லை. வேண்டுமானால் நீள்கவிதை அல்லது நெடுங்கவிதை என வைத்துக்கொள்ளலாம். என்னைப் பொறுத்தவரையில் காவியமெனில் ஆயிரமாயிரம் காலம் கடந்தும் நிற்கும் .


0

இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கவிதைக் கண்ணி

“நான் பறையன்
நான் பள்ளன்
நான் கருப்பன்
நான் விலக்கப்பட்டவன்
நான் தீண்டத்தகாதவன்
நான் வசிக்குமிடம் சேரி
நான் வசிக்குமிடம் கீழூர்

நான் வசிக்கும் நகரம் கருப்பு நகரம்
எனது குடியிருப்புக்கும் உனது குடியிருப்புக்கும் நடுவே
நீங்கள்
வரலாற்றில் எழுப்பிய மதில்
தவ்விக் குதித்தேறி தகர்க்க முடியாததா என்ன?
உங்கள் கதவுகள் உடைக்க முடியாததா?
உங்கள் கவசங்கள் ஊடுருவ முடியாததா?
உங்கள் உடல்கள் வெல்ல முடியாததா?

கொல்ல முடியாததா உங்கள் குழந்தைகள்?
உங்கள் தானியக் கருவூலங்கள் எரியூட்ட முடியாததா?
குடிநீர் தொட்டிகள் விஷமூட்ட இயலாததா?
ஆனால்
நான் ஏன் நடக்கிறேன்
நான் ஏன் விரட்டி அடிக்கப்படுகிறேன்
எனது பூர்வீகத்திற்கு
நான் தொடர்ந்து நடக்கிறேன்.
எனது சேரிக்கும்
உங்கள் குடியிருப்புக்கும்
நான் ஏன் அலைகிறேன்
உங்கள் மேட்டு நிலத்திற்கும்
எனது பள்ளத்திற்கும் நடுவில்
என் தந்தையர் ஏன் காலம் காலமாய்
உங்களைக் கொல்லாமல்
இரந்து கழிந்தனர்
நான் அலைகிறேன்

அலைந்தலைந்தே திரிகிறேன்
நான் புலையனாய் பிறந்தேன்
ஒரு புண்ணியமும் செய்கிலேன்
என்னைப் புலையனாய் உணரச் செய்து
அதைப் பாடவும் செய்தது யார்?
ஹரியின் மக்கள் என்று பெருமிதப்பட
வலியுறுத்தியது யார்?
நீங்கள் கதைகளின் புதிர்ச் சுற்றுகளாலான
அரண்களுக்கு வெளியே
என்னை நிறுத்தியது எங்ஙனம்?
உங்கள் முடிவற்ற கதைச்சுற்றுக்கு முன்னால்
நான் கதையற்றுப் போனவன்
கதை கெட்டுப் போனவன்
கதை இழந்து போனவன்
ராமனே
நான்
உனக்கு முன்னால் கதையிழந்தவன்

நீ என் படகிலேறி கரையேறி விட்டாய்
மகாத்மாவோ உன் பெயரில் ஒரு ராஜ்ஜியத்தைக்
கனவுகண்டு
அதன் மையத்தில்
சென்ற நூற்றாண்டில் தான்
சூன்யம் ஆனார்
வைஷ்ணவ ஜனதோ தேனே கஹியே ஜே
பீடு பாராயே ஜானெரெ
பரதுக்கே உபகார் கரே தொயே
மன் அபிமான் ந ஆனெ ரெ”

தாமரை பாரதி

கவிஞர். கவிதை விமர்சகர். தபுதாராவின் புன்னகை (2019), உவர்மணல் சிறுநெருஞ்சி (2021), காசினிக் காடு (2023) ஆகிய மூன்று கவிதை தொகுப்புகள் வெளியாகியுள்ளன.

உரையாடலுக்கு

Your email address will not be published.