/

கவிதையில் மட்டுமே அனாதைத்தன்மை சாத்தியம் : தேவதச்சன்

உரையாடல் : விஷால் ராஜா

தேவதச்சன் இளமையில்

“கவிஞர் தேவதச்சன் பொதுவாக பேட்டிகள் அளிப்பதில்லை. அரிதாக சில உரையாடல்கள் பதிவாகியுள்ளன. பேட்டிக்காக தொடர்புகொண்டபோது மறுக்கவில்லை என்றாலும் விலக்கத்தை முன்வைத்தபடி இருந்தார். பொதுவெளி சார்ந்த விலக்கம் அது. தனிப்பட்ட முறையில் பல தசாப்தங்களாக நண்பர்களோடு நீண்ட உரையாடல்களில் ஈடுபட்டு வருகிறார். உரையாடல் வழியாகவே கவிதையியலில் முக்கிய பங்களிப்பாற்றியிருக்கும் ஆளுமை.

நவீன தமிழ் இலக்கியம் நெருக்கமான ஒரு வட்டமாக, குறுங்குழுத்தன்மையோடு இருப்பதில் ஒரு நன்மை – பாரம்பரியத் தொழில் போல தலைமுறைகள்தோறும் அறிவு கையளிக்கப்படுவதே. தேவதச்சன் இந்த இயக்கத்தின் மதிப்பிற்குரிய அடையாளம். தேவதச்சன் தங்கள் எழுத்தை பாதித்திருப்பதை பல எழுத்தாளர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். கோவில்பட்டியில் உள்ள தேவதச்சனின் நகைக் கடை இலக்கிய மையங்களில் ஒன்று.

அறிவுத்தள உரையாடல்கள் மீது தீவிர ஈடுபாடிருந்தாலும் அவற்றின் வரையறை சார்ந்த கவனமும் தேவதச்சனிடம் வெளிப்படுகிறது. கருத்துக்களை எந்த நிலையிலும் தொகுத்து ஒரு தர்க்க அமைப்பாக முன்வைத்துவிடக்கூடாது என்பதில் அவர் பிடிவாதத்துடன் இருக்கிறார். “எந்த அனுபவத்தையும் நீங்கள் பழைய அறிவால் பழைய மனிதனாக எதிர்கொள்ளவே முடியாது” என்று ஒருமுறை சொன்னார். இப்பொழுதுதான் பிறந்த குழந்தைக்கு பழைய சட்டையோ பழையோ வீடோ இல்லை என்கிறது அவர் கவிதை ஒன்று.

அறிவு, அனுபவம் எனும்  இரட்டை முனைகளின் மோதலிலேயே தேவதச்சனின் கவிதைகள் பிறப்பெடுக்கின்றன. சமூகம் பழையது; மரபு பழையது; அறிவு பழையது. இவை எல்லாம் நேற்றில் திரண்டிருப்பவை. வாழ்க்கைக்கு அவை எந்த உத்திரவாதமும் அளிப்பதில்லை. அனுபவத்தை எதிர்கொள்ளும்போது மனிதன் தனியாகவே இருக்கிறான். எனில் மனிதனுள் தன்னிச்சையான ஓர் அடுக்கும் இருக்கிறது. கணந்தோறும் மாறிக் கொண்டேயிருப்பது. சொந்த அறிவுடனும், பயம் மற்றும் பதற்றங்களுடனும் மோதுவது. அதை அந்தரங்கத் தன்னிலை (Private self) என்று அடிக்கடி சொல்கிறார் தேவதச்சன்.

தேவதச்சன் குறிப்பிடும் தன்னிலையானது, நவீன தனிமனித உருவாக்கத்தின் தொடர்ச்சியே. ஆனால் இருத்தலியல்வாதிகள் போல அந்த தன்னிலையை சிறைப்பட்டதாக அவர் கருதுவதில்லை. அத்வைதம் அல்லது ஆழ்நிலைவாதம் போல அந்த தன்னிலையை பிரபஞ்சம் மற்றும் இயற்கையோடு இணைத்து விரிப்பதுமில்லை. பின் நவீனத்துவவாதிகள் போல அதை முழுமையாக சிதறடிக்கவும் முற்படுவதில்லை. மாறாக அதை காலத்தின் வாழ்வின் வினோதத்தை வியக்கிற கண்களாக மாற்றுகிறார். “ஹேய்,ஜாலி,எந்தக் கேள்விக்கும் விடையில்லை” எனும் அவருடைய புகழ்பெற்ற கவிதை வரி அந்த வியப்பின் பிரகடனமே. அவருடைய பெரும்பாலான கவிதைகளில் எந்த வரியிலும் ஒருவர் ஆச்சர்யக்குறியை சேர்த்துவிட முடியும். தமிழ் கவிதை இறுக்கமான வடிவத்திலிருந்து சுதந்திரமான கூறுமுறை நோக்கி நகர்ந்ததில் தேவதச்சனுக்கு பிரதான பங்கிருக்கிறது. தமிழில் பின்-நவீனத்துவமும் அக்காலக்கட்டத்தில்தான் அறிமுகமாகி விவாதப்பொருளாகிறது.

தேவதச்சனோடு எனக்கு நேர் பழக்கம் கிடையாது. இந்த பேட்டியின் நிமித்தமாகவே முதல்முறை தொலைபேசியில் அழைத்து பேசினேன். எந்த தயக்கமும் இல்லாமல் பேசுவதற்கான சூழ்நிலையை அவரே உருவாக்கித் தந்தார். தனிப்பட்ட வாழ்க்கையை பெரிதாக பதிவு செய்ய வேண்டியதில்லை என முதலிலேயே சொல்லிவிட்டார். இலக்கியம், சமூகம், உளவியல், தத்துவம் என்று வெவ்வேறு துறைகள் சார்ந்து நுட்பமான அவதானிப்புகளை முன்வைத்தபடி இருந்தார். பேட்டி, பிரசுரம் என்று நினைவூட்டும்போது மட்டும் கொஞ்சம் பின்வாங்குவார். பரீட்சைக்கு அஞ்சும் சிறுவன் போல.

தேவதச்சனின் பேச்சுமுறை சுவாரஸ்யமானது. இரவு நேரத்தில் ரயில் பெட்டிகள் தடதடவென்று கடப்பது போல ஒரு கருத்திலிருந்து இன்னொன்றுக்கு தாவித் தாவி முன்னேறுவார். தொடர்ச்சியைவிடவும் புதிய புதிய அவதானிப்புகளில் மட்டுமே அவருக்கு ஆர்வம் இருக்கும். தேவதச்சனுடைய சிரிப்பு தனித்துவமானது. தொலைபேசியின் மறுமுனையில் மொத்த உடலும் சிரிப்பதை உணர முடியும். கவிதையை “பாட்டு” என்றே  சொல்வார். ஒரு குட்டி அராஜகவாதியின் இருப்பை பேச்சில் உணரலாம். “ஆழமானது” என்பது அவர் அதிகம் பயன்டுத்தக்கூடிய உரிச்சொல். ஆழமான கேள்வி. ஆழமான உரையாடல். அந்த சொல்லை மந்திரம் என இழுத்து உச்சரிப்பார் – புறவுலகத்தினடியே ஆழமான வேறொரு உலகம் இருப்பது போல.

அவ்வப்போது “இத கவனிச்சிருக்கீங்களா?” “இத யோசிச்சிருக்கீங்களா?” என்று அவர் கேட்பது வழக்கம். அது அறிவுறுத்தல் போல் ஒலிக்காது. ஒரு குழந்தை தன் விளையாட்டு பொருளை காண்பிக்கும் உற்சாகத்துடனே கருத்துக்களையும் சுட்டிக் காட்டுவார். மின்னல் வெளிச்சங்கள் என மூளையை சுண்டும் பல வரிகள் பேச்சினூடே வந்து விழுந்தவாறிருக்கும். “ஒரு ஆணும் பெண்ணும் மகிழ்ச்சியாய் இருக்கும்போதே குழந்தை உருவாகிறது. அப்படி பார்த்தால் ஒரு மனிதன் துயரத்தோடு வாழ்வதற்கு நியாயமே இல்லை அல்லவா? இதை யோசித்திருக்கிறீர்களா?” என்று ஒரு தடவை கேட்டார். அடுத்த சில நாட்களுக்கு அது மண்டைக்குள்ளேயே ஓடிக் கொண்டிருந்தது.

எல்லா திட்டவட்டமான வரையறைகளையும் கலைத்துவிட்டு ஒவ்வொரு அனுபவத்தையும் புதிதாக திறப்பதையே தேவதச்சன் விரும்புகிறார். கவிதையில் திட்டவட்டமான அர்த்தம் இல்லை என்பதாலேயே அதை தன் வடிவமாக தேர்ந்திருக்கிறார் போல. ஒருதடவை பேட்டி மீதான விலக்கத்தை இப்படி தெரிவித்தார்- “நீங்களும் நானும் இப்போது பேசிக் கொண்டிருக்கிறோம். மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் எழுத்தில் வரும்போது அது வேறொன்றாக மாறிவிடுகிறது இல்லையா? அதுதான் சங்கடமாய் இருக்கிறது”. எல்லா கேள்வி பதில்களையும் தொகுத்து மீண்டும் ஒருமுறை படிக்கும்போது எனக்கும் அப்படிதான் தோன்றியது. எப்படியோ ஓர் அன்னியத்தன்மை நுழைந்துவிடுகிறது. எனில், நாம் ஒன்றை கட்டமைக்கும்போதும் ஒழுங்குபடுத்தும்போதும் எதை தொலைக்கிறோம்? கவிதை எப்படி அதை மீண்டும் மீண்டும் தக்க வைக்கிறது?”


விஷால் ராஜா

பதில்: முதலில் “எழுத்து” பத்திரிக்கை பரிச்சயமானது. கல்லூரியில் கே.ராஜகோபாலன் என்றொரு ஆங்கில பேராசிரியர் இருந்தார். சி.சு.செல்லப்பாவின் நெருங்கிய நண்பர். கவிதை தொகுதிக்கூட போட்டிருக்கிறார். அவர் என்னை ஒரு நாள் வீட்டுக்கு அழைத்து எழுத்து பத்திரிக்கையை அறிமுகம் செய்தார். நானும் இன்னொரு நண்பனும் சேர்ந்து அவர் வீட்டு அலமாரியிலிருந்து எழுத்து பத்திரிக்கைகளை சேகரித்து பைண்ட் செய்தோம். நூத்தி பத்து இதழ்களை ஏகமாக ஒருசேர வாசித்தேன்.  உடனே நவீன இலக்கியத்தின் நுண்ணுணர்வு எனக்குள் இறங்கிவிட்டது. அதுவரை சிலப்பதிகாரம் போன்ற பழந்தமிழ் இலக்கியங்கள் வாசித்து வெண்பா, விருத்தம், ஆசிரியப்பா ஆகியவற்றை எழுதிக் கொண்டிருந்தேன்.  எழுத்து பத்திரிக்கையை வாசித்ததும் நவீன இலக்கியம் திறந்துவிட்டது.

பதில்: “கசடதபற”வில் எழுத ஆசை இருந்தது. மொட்டை கடுதாசி போல ஒரு இன்லேண்ட் லெட்டரில் இரண்டு கவிதைகள் எழுதி அனுப்பினேன். கூச்சத்தாலும் தயக்கத்தாலும் அனுப்புநர் முகவரியே இல்லாமல் வெறுமனே பெயர் மட்டும் எழுதி அனுப்பினேன். கடிதம் அனுப்பிவிட்டு இரண்டு மூன்று மாதங்கள் தொடர்ந்து இதழில் தேடினால் என் கவிதைகள் வரவேயில்லை. நான்காவது மாதம் ஓரத்தில் குட்டி இடத்தில் அவை பிரசுரமாகியிருந்தன. அதுதான் முதல் பிரசுரம். பிறகு சில மாதங்கள் கழித்து “கசடதபற”விலிருந்து ஒரு கடிதம் வந்தது. இருபத்தியைந்தாவது இதழுக்கு கவிதை கேட்டு எழுதியிருந்தார்கள்.

பதில்: எழுத்தாளர் மாலன் மதுரையில் இருந்தபோது எனக்கும் அவருக்கும் ஒரு பொது நண்பர் இருந்தார். அவர் வழியாக மாலனோடு கடித போக்குவரத்து ஏற்பட்டது. பிறகு, மாலன் சென்னை வந்தபோது அவரை சந்திக்க  சென்றேன். ஞானக்கூத்தனை பார்க்க அவர் என்னை அழைத்துச் சென்றார். பிறகு, ஞானக்கூத்தனோடு தொடர்ந்து உரையாடல் ஆரம்பித்தது.

பதில்: ஆமாம். சென்னையில் எம்.ஏ தத்துவம் சேர்ந்துவிட்டிருந்தேன்.

பதில்: தத்துவத்தை ஒரு தனி ஆர்வமாக தேர்ந்தெடுத்து படிக்கவில்லை. வீட்டைவிட்டு தப்பிக்க வேண்டும் என்பது மட்டுமே நோக்கமாக இருந்தது.

பதில்: எங்கள் வீட்டில் நிறைய சுதந்திரம் இருந்தது. நான் எப்படி இருக்க விரும்புகிறேனோ அப்படியே இருக்க அனுமதி இருந்தது. அது பெருந்தன்மையான மனம் என்றுதான் நினைக்கிறேன். ஒரு சம்பவம் சொல்லலாம். மெட்ராஸில் படித்துக் கொண்டிருந்தபோது அப்பா என்னை பார்க்க வந்திருந்தார். துணி வாங்குவதற்கு பணம் தேவைப்பட்டது. அப்பாவை ரயிலில் ஏற்றிவிட்டு “பேண்ட் வாங்க ரூவா வேணும்” என்று கேட்கவும், உடனே நூறு ரூபாய் பணத்தை எடுத்து கொடுத்தார். ரயில் போனதும் ரயில்வே நிலையத்தில் உள்ள ஹிக்கிங் பாத்தம்ஸ் புத்தக கடை நோக்கி நகர்ந்தேன். ஜே.கிருஷ்ணமூர்த்தியின் புத்தகங்கள் இருந்தன. சில புத்தகங்களை வாங்கியதுமே தொன்னூற்றி ஆறு ரூபாய் பில் வந்துவிட்டது. பணத்தை கொடுத்து புத்தகங்களை வாங்கி திரும்பிவிட்டேன். துணி எடுக்க யோசனையே வரவில்லை. அப்படியெல்லாம் நடந்துகொள்ள அப்பா உரிமை கொடுத்திருந்திருக்கிறார்.

பதில்: அன்றைக்கு ஹிக்கிங்க் பாத்தாம்ஸில் புத்தகங்கள் வாங்கியபிறகு, எழும்பூரிலிருந்து ரயிலில் நின்றபடியே படித்துக் கொண்டேதான் ஹாஸ்டலுக்கு வந்தேன். அடுத்த இரண்டு நாட்கள் கல்லூரிக்கே போகவில்லை. “அறிந்ததினின்றும் விடுதலை” (Freedom from known) என்ற நூலை முழுமையாக வாசித்தேன். சுனாமி மாதிரி என்னை மூடியது. என் உள அமைப்பையே இடம் மாற்றி குழப்பிவிட்டது. அப்புறம் ஜே.கிருஷ்ணமூர்த்தி மெல்ல என்னை விட்டுச் சென்றுவிட்டார்.

பதில்: “மெட்ராஸ்” எனக்கு ஒரு ஆன்மீகமான நகரம்தான். இப்போதுக்கூட மெட்ராஸில் இறங்கினாலே எனக்கு கால்கள் மறைந்து றெக்கை முளைத்துவிடும். கல்லூரி காலத்தில் காலையில் மட்டும்தான் வகுப்பு இருக்கும்.வகுப்பு முடிந்ததும் மத்தியானம் வெளியே கிளம்பிவிடுவேன். மெட்ராஸ் யுனிவர்சிட்டி போய் நிறைய வாசிப்பேன். பின்னர் மாலையில் ஞானக்கூத்தனை சந்திக்க அவர் வீட்டுக்கு போவேன். அப்போது அவர் பொதுப்பணித் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஞானக்கூத்தனை சந்திக்க பாலகுமாரன், ஆத்மாநாம், ஸ்டெல்லா ப்ரூஸ், ஆனந்த் என்று பல எழுத்தாளர்கள் வருவார்கள். எல்லோரும் ஒன்றாக நடந்து போய் கடற்கரையில் அமர்ந்து  பலதும் பேசுவோம். இரவு பத்தரை போலதான் திரும்புவோம். நகரில் அப்போது  பெரிய அச்சங்கள் இருக்காது. யாரும் எந்த கேள்வியும் கேட்க மாட்டார்கள்.

பதில்: எனக்கு ரொம்ப பரவசமாக இருந்த விஷயம் – அலைகள் வந்து வந்து போக, பாரதியார் இருந்த இடத்தில் நானும் அமர்ந்து பேசுகிறேன் என்பதுதான். பாரதியார் திருவல்லிக்கேணியில் இருந்தது நினைவில் வந்தபடி இருக்கும்.

பதில்: ரொம்ப ஆர்வமானவனாக இருந்தேன். கேள்விகள் கேட்டுக் கொண்டேயிருப்பேன். கேள்விகளின் வங்கியாகவே இருந்தேன்.

பதில்: அப்படி யாரை சொல்ல முடியுமென்று தெரியவில்லை. யாரையும் என் மேல் தாக்கம் செலுத்த அனுமதிக்கவில்லை என்றே தோன்றுகிறது. ஞானக்கூத்தனை சந்தித்த முதல் நாள் என்னை பார்த்து “தோற்றத்தில் நீங்க என்னை மாதிரி இருக்கீங்களே தெரியுதா?” என்று கேட்டார். உடனடியாக கோபம் வந்துவிட்டது. எனக்கு அவரை மாதிரி தோற்றமளிக்கும் நோக்கமே இருக்கவில்லை. நேராக சலூனுக்கு போய் மீசையை வெட்டிவிட்டேன். என் பழைய அடையாள அட்டையில் மீசையில்லாமல்தான் இருப்பேன். யாருமே இன்னொருவர் மாதிரி இருக்க விரும்புவதில்லை போல. 

பதில்: அப்போது அவர் எனக்கு விருப்பமான கவிஞராகவே இருந்தார். ஆச்சர்யமாக சமீபத்தில்தான் அவருடைய முழு தொகுதியை மீண்டும் வாசித்தேன். ஒரு விஷயம் பட்டது. ஞானக்கூத்தனுடைய பகடிக் கவிதைகள்தான் தமிழில் பிரபலமாகியிருக்கின்றன. அதை தவிர்த்து வேறு தளங்களிலும் கவிதைகள் எழுதியிருக்கிறார். அவை அதிகம் பேசப்படுவதில்லை. இப்போது படிக்கும்போது அவர் அன்னியமாகி இருக்கிறார் என்பதையும் சொல்ல வேண்டும். ஞானக்கூத்தன் தத்துவம் நிறைய படித்தவர். நிறைய பேசக்கூடியவர். கன்னடம் தாய்மொழி என்றாலும் சமஸ்கிருதக் கல்வியும் உண்டு. வேதங்களை முறையாக பயின்றிருக்கிறார். அறிஞர் என்றே அழைக்க வேண்டும். ஆனால் தன் கவிதை உலகில் தத்துவத்தை ஒரு துளிக்கூட அவர் அனுமதிக்கவில்லை என்பதை பற்றியும் யோசித்தேன். கவிதையின் சாவி நம்மை எப்படி திறக்கிறது என்பது வினோதம்தான்.

பதில்: அப்போதெல்லாம் எழுத்தாளர்களை பார்க்க அவர்கள் ஊருக்கே சென்றுவிடுவோம். சுந்தர  ராமசாமியை பார்க்க அவர் வீட்டுக்கு போயிருக்கிறேன். நகுலன், வல்லிக்கண்ணன் ஆகியோரைத் தேடி சென்றிருக்கிறேன். அந்த காலகட்டத்தில் பெரும்பாலும் எல்லா எழுத்தாளர்களிடமும் இந்தக் குணம் உண்டு. யார் வேண்டுமானாலும் யார் வீட்டிலும் தங்கி கொள்ளலாம். சிறுபத்திரிக்கை உலகமே ஒரு சின்னக் கிராமம் மாதிரியே இருந்தது. எல்லோருக்கும் எல்லோரையும் தெரிந்திருந்தது.

பதில்: நானும் அது பற்றி ஏற்கனவே பேசியிருக்கிறேனே. ஒரு குறிப்பிட்ட காலகட்டம் முழுக்க கவிதை எழுதுவதை நிறுத்தி வைத்திருந்தேன். கவிதைகள் பிரசுரமாகி கவனிக்கப்பட வேண்டும் என்ற ஈடுபாடு எனக்குச் சற்றும் இல்லை. பார்க்கப்படாத இடத்தில் இருக்கவே நான் விரும்புகிறேன். அது என் இயல்பு என்பதால் கவிதை எழுதாத இடைவெளி என்னை சங்கடப்படுத்தவே இல்லை. இப்போதும் என் கவிதைகளை டயரிக் குறிப்புகளாகவே கருதுகிறேன். வாழ்க்கையை ஆழ்ந்து கவனிக்கவே கவிதைகளை பயன்படுத்துகிறேன்.

பதில் : டினோசர்கள் பற்றிய திரைப்படங்கள் எல்லாம் வந்து பிரபலமாவதற்கு முன்பே எழுதிய கவிதை அது. ஜீராஸிக் பார்க் படமே அப்போது வெளியாகியிருக்கவில்லை. டினோசர்களின் கோட்டோவியங்கள்தான் தூண்டுதல். கோட்டோவியங்களை ரொம்ப ஆர்வமாகப் பார்க்கக்கூடியவர்களில் ஒருவன் நான். வணிகப் பத்திரிக்கைகளில் வரக்கூடிய கோட்டோவியங்கள், கதைப்பிரதிகளைவிட கூடுதலாய் அதிர்வுகளை உண்டு பண்ணும். டினோசர் பற்றிய செய்திகளை படிக்கும்போது அந்த மிருகம் மேல் ஒரு வசீகரம் ஏற்படுகிறது. ஆனால் அந்த கவிதை ஒட்டுமொத்தமாக ஒரு திட்ட வரைபடம் போட்டு எழுதப்பட்டது அல்ல.

அந்த கவிதைக்கு வெவ்வேறு விதமான எதிர்வினைகள் வந்திருக்கின்றன. ஞானக்கூத்தன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். சமீபத்தில் ஒரு பதிவு வாசித்தேன். யாரோ ஒரு நண்பர் அக்கவிதையை அறிவியல் புனைவு என்று குறிப்பிட்டிருக்கிறார். ஒவ்வொரு காலகட்டத்திலும் கவிதை வாசிக்கப்படும்போது வெவ்வேறு அர்த்தங்களை உற்பத்தி செய்யும் போல.

இன்னொரு விஷயம். ஜீராஸிக் பார்க் படம் பார்க்கும்போது மனதுக்கு கஷ்டமாகவே இருந்தது. டினோசரை அதில் எதிர்மறையாக சித்தரித்திருந்தார்கள். ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் டினோசரை எதிரி போல சித்தரிக்கும் ஒரு மாதிரியை அவர்கள் உருவாக்கிவிட்டார்கள்.

பதில்: ஒவ்வொரு தருணத்திலும் ஒவ்வொரு தளத்தில் வாழ்கிறோம் இல்லையா? அந்தந்த தளம் அந்தந்த தருணத்துக்கு எதிர்வினையாற்றுகிறது என நினைக்கிறேன். தொகுப்பாக வாசிக்கும்போதுதான் இந்த வேறுபாடே தெரிகிறது.  தனித்தனியே கவிதை எழுதும்போது அப்போதையை உணர்ச்சியை மட்டுமே பதிவு செய்கிறேன். மேலும் நாம் சாதாரண மனிதர்கள்தானே. எனக்குள் மன அழுத்தமும் பதிவாகிறது. மகிழ்ச்சியும் பதிவாகிறது. அன்பு, அன்பின்மை எல்லாம் பதிவாகிறது.

தனிப்பட்ட முறையில் என் வாலிபத்திலேயே அன்பை விட சிறந்த உணர்ச்சி ஒன்றிருக்கிறது என்பதையும் அது “சுதந்திரம்” என்பதையும் கண்டுபிடித்தேன். சுதந்திரமாக இருந்தால் மட்டுமே அன்புடனோ அன்பில்லாமலோ இருக்க முடியும். எனவே என்னைப் பொருத்தவரை, அன்பானது ஒப்பீடு சார்ந்ததாகவே இருக்க முடியும் (Relative). இன்னொருபுறம் கிறிஸ்து, ரூமி போன்றவர்கள் சொல்லும் அன்பு முற்றிலும் வேறுபட்டது. கிறிஸ்துவின் அன்பில் தர்க்கமே கிடையாது. அந்த அன்பின் ருசியே எனக்கு தெரியவில்லை. அது என் அனுபவமாக மாறவேயில்லை. ஆனால் அப்படியான தருணங்களை எப்போதேனும் சந்திக்கவும் செய்கிறேன்.

பதில் : நீங்கள் குறிப்பிடும்போதுதான் நானும் யோசிக்கிறேன். ஒரு விஷயம் ஞாபகம் வருகிறது. ஒருமுறை ஆம்னி பேருந்தில் ஏதோவோர் கிராமத்தை கடக்கும்போது ஒரு கிறிஸ்துவ ஆலயத்தின் பெயர் பார்த்தேன். “திறப்பின் ஆலயம்” என்றிருந்தது. இன்னும் எனக்கு அது அழியாமல் நினைவில் இருக்கிறது. யாராலும் அடைக்க முடியாத கதவை உங்களுக்காக திறந்திருக்கிறேன் என்று  கிறிஸ்து சொல்கிறார் இல்லையா? அப்புறம் “திறவோர் காட்சி” என்றே ஒரு சொல்லாட்சி இருக்கிறது. கணியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” பாடலில்தான் அந்த சொற்றொடரும் வருகிறது. திறத்தல் எனும் வார்த்தை எனக்குள் வலுவாக இணைந்திருக்கிறது போலும்.

பதில்: ஏனோ தத்துவம் உணர்ச்சியற்றது என நினைக்கிறோம். தத்துவம் (Philosophy) என்கிற சிறப்புத் துறையின், அறிவுத் துறையின் தன்மை வேறு. தத்துவநோக்குடன் (Philosophical) இருப்பது வேறு. வாழ்வின் மேலோட்டமான பிரச்சனைகளை பொருளாதாரமும் அரசியலும் கையாளலாம். அடுத்தக்கட்டத்தில் ஏற்படும் பிரச்சனையை கலாச்சாரம் கையாளும். ஆனால் ஆழமான வேதனைக்குள்ளும் (agony) தீர்க்கமுடியாத மர்மத்துக்குள்ளும் சிக்கிக்கொள்ளும்போது தத்துவத்தின் உதவியை தவிர்க்கமுடியாது. ஓர் அன்னை போல தத்துவம் உதவி செய்யும். புதிரான ஓர் இடத்தில் சிக்கும்போது உங்கள் ஆற்றல் முழுமையாக உறைந்துவிடுகிறது. தத்துவப்படுத்துதல் உறைந்த ஆற்றலை விடுவிக்கும்.

தத்துவத்தையும் பரிவுணர்ச்சியையும் முரண்பாடாக எண்ணத் தேவையில்லை. உறுதிப்பாட்டுவாதமேக்கூட (Stoicism) பரிவுணர்ச்சியிலிருந்து மாறுபட்டது கிடையாது.  கூடவே, நம்முடைய பெரும்பாலான உணர்ச்சிகள் போலியானவை (Pseudo) என்பதையும் அவை கலாச்சார கட்டமைப்புகளுக்கான எதிர்வினைகள் என்பதையும் இந்த இடத்தில் கணக்கில் கொள்ள வேண்டுமாய் தோன்றுகிறது. தத்துவார்த்தமாக இடம் சுட்டி பொருத்தும்போதே வாழ்வில் உண்மையான உணர்ச்சிகளின் தேவையும் ருசியும் தெரியும். சரியான அணுகுமுறை கிடைக்கும்.

பதில்: ஆமாம். மேலும் அனுபவத்தை ஆழமாய் எதிர்கொள்வதற்கு தத்துவத்தின் நூலேணிகளில்தான் ஏறவேண்டும்; இறங்க வேண்டும்.

பதில்: பருப்பொருளா (matter) கருத்தா(idea) ஆத்துமாவா (spirit) போன்ற அறிவுத்தள விவாதங்கள் வேறொரு நிலையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதற்கும் நாம் பேசுவதற்கும் தொடர்பில்லை என்றே நினைக்கிறேன். தத்துவம் அனுபவத்தை மதிப்பிடுவதற்கான ஒரு கருவி. நம்பமுடியாத நேரத்தில், உச்சக்கட்டமான உணர்ச்சிகரத்தில், தத்துவமாகவே மனம் யோசிக்கும்.

ஒரு துஷ்டி வீட்டில் இருந்தேன். இளவயது மரணம். பிரசவ நேரத்தில் பெண் இறந்துவிட்டாள். அந்த சிறிய வீட்டில் அவளை படுக்க வைத்துவிட்டு சுற்றி வேறு பெண்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். “பார்த்தியாடி.மயில் போல படுத்திருக்கா” என்கிறாள் ஒரு பாட்டி. அதைக் கேட்டு இன்னொருத்தி அலறுகிறாள். பாட்டி உடனே “சரி சரி. அவ வாங்கிட்டு வந்த உப்பு அவ்வளவுதான். ஆக வேண்டிய காரியத்த பாருங்க” என்கிறாள். எனக்கு என்னவோ திறந்தது போலிருந்தது.

நானும் கவிஞர் ஆனந்தும் பத்து ஆண்டுகள் “காலம்” பற்றி  பேசியிருக்கிறோம். சிந்தித்திருக்கிறோம். இதே யோசனையாக, இதே ஜோலியாக அலைந்திருக்கிறோம். பேசியதையே பேசிக் கொண்டிருந்திருக்கிறோம். ஒரே வரியில் அந்த பாட்டி என்னை மொத்தமாக மாற்றிவிட்டாள். இந்திய கலாச்சாரத்தில் காலத்தை உப்பு என்று எவனோ சொல்லியிருக்கிறான். ஆயுளை உப்பாக பார்க்கலாம் என்று உடனே தெரிந்துவிட்டது. வாழ்வின் உச்சபட்சமான கஷ்ட நேரத்தில் தத்துவ நோக்கு நம்மை இப்படி அடுத்தக் கட்டத்துக்கு உயர்த்துகிறது.

பதில்: ஆமாம். பூமியின்மீது உப்பாக இருப்பீர்கள் என்று கிறிஸ்து சொல்கிறார். உப்பு ரொம்ப மர்மமான ஒரு வார்த்தை. ரசவாதிகள் பயன்படுத்தக்கூடிய வார்த்தை. ஆன்மீகத்திலேயே ரசவாதம் ஒரு முக்கியமான பிரிவுதான். அப்படி பார்த்தால், தேவையான அளவு ஆன்மீகத்தை நம் கலாச்சாரமே வழங்கிக் கொண்டிருக்கிறது.

பதில்: வாழ்க்கையில் நிரந்தரமின்மை இருக்கிறது. இடையறாது, நிரந்தரமின்மையின் அலைகள் நம் மேல் அடித்துக் கொண்டேயிருக்கின்றன. ஆனால் நாம் அதை அறிவதே இல்லை. ஒரு நபர் நம்மைவிட்டு மறந்துவிட்டாலோ ஒரு பொருள் தொலைந்துவிட்டாலோ நாம் விழிப்பை உணர்கிறோம். இதை தத்துவம் ஆரம்பத்திலேயே செய்கிறது. அனுபவம் நிகழ்வதற்கு முன்பாகவே மதிப்பிட்டு ஒரு தொலைவை அளிக்கிறது. கவிதையும் அந்த வேலையை புரிகிறது. ஒரு மெக்சிகன் கவிதை வரி – “மான்கள்  வருவதற்கு முன்பாகவே அவற்றின் சுவடுகள் பற்றி பாட வேண்டும்”. இருப்பில் நிகழ்வதற்கு முன்பாகவே கவிதை பாடியிருக்க வேண்டும் என்று ஒரு கோணம் இருக்கிறது.

பதில்: தினசரி வாழ்க்கை என்பது சூழ்நிலைகளால் இழுத்துச் செல்லப்படுவது. செயல் சார்ந்தும் முடிவுகள் சார்ந்தும் இயங்குவது. “இது வேண்டும்” என்றோ “இது வேண்டாம்” என்றோ முடிவுகள் எடுத்துக் கொண்டேயிருப்பதுதான் தினசரி வாழ்வின் ஓட்டம். அங்கே பிரதிபலித்து சிந்திக்க இயலாது. இலக்கியம் அதை செய்யும். நமக்கு இரண்டு தன்னிலைகள் இருப்பதாய் சொல்லலாம். நிகழ்கால தன்னிலை மற்றும் ஞாபகத்தின் தன்னிலை. முதலாவது தினசரி வாழ்க்கைக்குரியது. ஒவ்வொரு நாளும் என்னென்ன திட்டங்கள் இருக்கின்றன, கரண்ட் பில் எப்போது கட்ட வேண்டும், காய்கறி எங்கே வாங்க வேண்டும் போன்றவற்றை அது பார்த்துக் கொள்கிறது. இரண்டாவது,  கடந்தகாலத்தை ஞாபகப்படுத்தி பரிசீலித்து நாம் நேர்மையாக நடந்து கொள்கிறோமோ நாணயத்துடன் இருக்கிறோமோ என்பதையெல்லாம் பார்க்கக்கூடியது. இலக்கியம் ஞாபகத்துடனும் ஞாபகத்தின் தன்னிலையுடனுமே தொடர்புடையது.

பதில்: காலத்தை அப்படி வெளியே மாயமாய் பார்க்க வேண்டியதில்லை. காலம் என்பது அசைவுடன் தொடர்புடையது. வாழ்க்கையில் அசைவு,அசைவின்மை இரண்டும் இருக்கின்றன. சாலையில் போகும்போதே இதை கவனிக்கலாம். கட்டிடங்கள், மின்கம்பங்கள் கோபுரங்கள், வானம் இவை எல்லாம் அசையாமல் இருக்கின்றன. வாகனங்கள், ஆட்டுக்குட்டி, நாய்க்குட்டி, சிறுவன் இவர்கள் எல்லோரும் அசைந்தபடி இருக்கிறார்கள். இந்த அசைவு நம்மை தொடும் இடத்திலிருந்துதான் காலவோட்டத்தையே அறிகிறோம். மனிதர்களுக்கு ஆழத்தில் காலத்துடன் ஓர் உராய்வு இருந்துக்கொண்டே இருப்பதாகவே எனக்கு தோன்றும்.

ஒரு அனுபவம் சொல்லலாம். சாலையில் தினசரி ஒரு பூக்காரம்மாவை பார்ப்பேன். அவரிடம் நான் பூ வாங்கியதே கிடையாது. ஆனால் தினமும் பார்ப்பேன். திடீரென்று இரண்டு மூன்று நாட்கள் அவரை காணவில்லை. மேஜை மட்டும்தான் இருக்கிறது. உடனே எனக்குள் சின்னதாக ஒரு துயரம் வந்துவிட்டது. அதுவரை அந்த பூக்காரம்மா ஏதோவோர் வகையில் ஒரு நிரந்தரத்தன்மையை எனக்கு கொடுத்து வந்ததாக அப்போது தோன்றியது. எல்லாமே மாறாமலும் பாதுகாப்பாகவும் இருக்கின்றன எனும் உணர்ச்சியை அவர் எனக்கு கொடுத்திருந்திருக்கிறார். இதை ஒரு கவிதையாக எழுதியிருக்கிறேன். காலத்தின் நித்தியமும் அநித்தியமும் இப்படி அன்றாடம் வழியாகவே அறிய கிடைக்கின்றன.

பதில்: சிலபேர் கருத்துக்கள் சார்ந்த கவிஞர்களாக இருப்பார்கள். சிலபேருக்கு குட்டி குட்டி பொருட்கள் மேல்தான் கவனம் போகும். குட்டி பொருட்களின் கவிஞர்கள் (Poets of little things) என்றே சொல்லலாம். அப்புறம் பொருட்கள் என்பவை, நாம் நினைப்பது போல, வெறுமனே பொருட்கள் மட்டுமல்ல. நம்முடைய மனநிலைகளே பொருட்களில் எதிரொலிக்கின்றன.

சில நேரங்களில் வீட்டில் பெண்கள் பாத்திரங்களுடன் பேசுவதை கவனிக்கலாம். ஏதாவது பாத்திரம் கீழே விழுந்துவிட்டால் “நல்லா கீழே விழு. என்னையும் கீழே போடு. எல்லாரும் என்னை கீழே தள்ளுங்க” என்பார்கள். மனிதர்களுக்கு ஆழத்தில் ஒரு அழுத்தம் இருக்கிறது. ஆழத்தில் ஒரு முணுமுணுப்பு இருக்கிறது. தான் தொடர்பு கொள்ளக்கூடிய பொருளை பார்த்ததும் அது உடனே எதிரொலிக்கிறது. எல்லோருமே இதை அவதானித்திருப்போம். நான் பதிவு செய்கிறேன். அவ்வளவுதான்.  

பதில்: என்னை பொருத்தவரை ஒரு கவிதை தனக்குள்ளேயே தனக்கான சூழ்நிலைகளை முழுமையாக கொண்டிருக்க வேண்டும். அப்படி இல்லாமல், அது எதிர்வினையாக மட்டும் வெளிப்படும்போது எனக்கு நிறைவு ஏற்படுவதில்லை. இயற்கையை கவிதையில் எழுதுவதற்கும் இந்த விதி பொருந்தும்.

இயற்கையை எழுதக்கூடாது என்று சொல்ல வரவில்லை. ஆனால் இயற்கையை பரிவோடு எழுதும்போது ஒரு விலக்கம் வருகிறது. ஓய்வு நேரத்தில் வேடிக்கை பார்த்து ரசிக்கிற மாதிரி ஆகிவிடுகிறது.  இயற்கை அப்படி மட்டுமே தன்னை வெளிப்படுத்துவதில்லை. ஒருமுறை என் அம்மாவுக்கு உடல் நிலை மோசமானபோது அவரை அவசர ஊர்தியில் கொண்டு போனோம். நள்ளிரவு வேளை. நான்கு வழிச்சாலையில் வண்டி செல்லும்போது ஜன்னல் வழியே பார்த்தால் நிலவு அவ்வளவு அழகாய் காட்சி அளிக்கிறது. என் அம்மாவை பார்த்தால் லேசாக ரத்தம் கசிய படுத்திருக்கிறார். மறுபுறமோ நிலவு தெரிகிறது. எனக்கு என்ன செய்வது என்று விளங்கவில்லை. எதுவுமே புரியாத தருணமாக இருந்தது. நிலை குலைந்து போய்விட்டேன். இப்படி அசாதாரணமான நேரத்தில் நம்மை இயற்கை தொடுவதையே கவிதையிலும் எதிர்பார்க்கிறேன். சுற்றுலா நோக்கில் இயற்கையை எழுதுவது எனக்கு பிடிப்பதில்லை. 

பதில்: உள்ளடக்கம்தான் கவிதையின் நடையை தீர்மாணிக்கிறது. என் கவிதைகளில் பாடல் தன்மை இல்லாமல் இருப்பது என்னுடைய தேர்வுதான். ஒருவிஷயம் காதுகளுக்குரியதாக மாறும்போது அந்த இடத்தில் சிந்தனையில்லாமல் ஆகிறது. வெறும் உணர்ச்சிகரமாக எஞ்சிவிடுகிறது. ஆனால் காட்சியம்சம் இருக்கும்போது அது ஆழமான சிந்தனைக்கு வழி வகுக்கிறது. என் கவிதைகளில் காட்சித்தன்மைக்கே முன்னுரிமை அளிக்கிறேன்.

பதில்: நீங்கள் இப்போது கேள்விகள் கேட்கிறீர்கள். வரிசையாக பதில் சொல்கிறேன். உடனே எல்லா நிகழ்வுகளுக்கு ஒரு காரண காரியத் தொடர்பு இருப்பதான தோற்றம் வந்துவிடுகிறது. ஆனால் வாழ்க்கையில் அப்படி நடப்பதில்லை. தேவதச்சன் எனும் பெயரும் தற்செயலாக வரித்துக் கொண்டதுதான். இளமையில் நூலகத்தில் எழுத்தச்சன் எனும் மலையாளக் கவிஞரின் பெயரை பார்த்தேன். வசீகரமாய் இருந்தது. உடனே தேவதச்சன் என்று பெயர் வைத்துக் கொண்டேன். அது திட்டமிட்டு நடந்தது அல்ல.

பதில்: எழுபதுகள், எண்பதுகள் தொடங்கி தொன்னூறு வரை எல்லாமே ஆர்வமூட்டும் காலங்கள்தாம். தொன்னூறுகளுக்கு பிறகான தமிழ் இலக்கியத்தின் மையக் கேள்வி என்ன என்பதையும் இலக்கிய உரையாடல் என்ன என்பதையும் சரியாக பொருத்தி அறிய முடியவில்லை. ஆனால் அப்போது அப்படி இல்லை. தொன்னூறுகளில் பின்-நவீனத்துவம் அறிமுகமாகும்போது ஒரு உள்நாட்டு யுத்தம் போல விவாதங்கள் நடந்தன. யதார்த்தவாதிகளுக்கும், யதார்த்தவாதத்திலிருந்து மாறுபட்டவர்களுக்கும் நடுவே அழகியல் ரீதியாக நடந்த யுத்தம். இலக்கியத்தின் உள்ளடக்கமே இடம் மாறியது. தனிநபர் உளவியல் சார்ந்த உள்ளடக்கம் என்பது சமூகத்தின், மக்களுடைய வாழ்க்கையின் உள்ளடக்கமாக மாறியது. அது ஒரு கொந்தளிப்பான காலம். அப்போது உண்மையாகவே பரவசம் அடைந்தேன். நிறைய வாசித்து கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன்.

பதில்: ஆரம்பத்தில் அதிர்ச்சியாகவே இருந்தது. பின்-நவீனத்துவம் கல்விப் புலத்தினரால் முன்வைக்கப்பட்ட கோட்பாடு. மேலும், நான் நவீனத்துவத்தின் குழந்தை. எனவே எனக்கு அது சவாலாக இருந்தது. நெருக்கடியைக் கூட உருவாக்கியது. எம்.டி.முத்துக்குமாரசாமியை சந்தித்து சில புத்தகங்களை வாங்கினேன். உடனே பின்-நவீனத்துவம் பற்றிய ஒரு வரைபடம் எனக்கு கிடைத்துவிட்டது. எனக்கான தனிப்பட்ட கலவையை உருவாக்க முடிந்தது. நவீனத்துவத்திலிருந்து சில கூறுகளை எடுத்துக் கொள்வதோடு பின்-நவீனத்துவத்தின் சுதந்திரத்தையும் சேர்த்துக் கொண்டேன். பின்-நவீனத்துவம் என்பதே ஒரு மனநிலைதான் (Attitude). இதன் வழியே, எனக்கேயான ஒரு தனி உள்ளடக்கத்தை உருவாக்கிக் கொண்டது போலிருக்கிறது.

பதில்:  எளிமையாக நிகழவில்லை. கொந்தளிப்பாகவே இருந்தது. எதையெல்லாம் மதிப்பு மிக்கதாக கருதினோமோ அதையெல்லாம் அவர்கள் மறுத்தார்கள். சுண்டுவிரலில் தள்ளிவிட்டார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளாக உருவாகி வந்த பிரம்மாண்டமான கதையாடல்களை நிராகரித்தார்கள். “சுயம்” என்பதுதான் நவீனத்துவத்தின் அடித்தளம். அதையே “கதை” என்று மறுக்கும்போது பெரிய சவால் தோன்றியது. என்னை நானே கேள்விக் கேட்க வழி உருவானது. ஆனால் நான் அந்த கேள்விகளால் பலகீனப்படவேயில்லை. பலம்தான் பெற்றேன். நிறைய எழுத்தாளர்கள் பலவீனமானார்கள். பேனாக்களை எல்லாம் கீழே போட்டுவிட்டார்கள். ஏனென்றால் பின்-நவீனத்துவம் வேறு வகையான சமூக பொறுப்பை எழுத்தாளர்களிடம் கோரியது. அதுவரையிலான சமூக பொறுப்பின் தன்மை மாறியது. பின்னாட்களில் தனித்தன்மை மிக்க பல கவிஞர்கள் தோன்றுவதற்கு பின்-நவீனத்துவம் காரணமாக இருந்திருக்கிறது. கவிதையில் அசாதாரண மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

பதில்: தமிழ் கவிதை பிந்தைய காலகட்டத்தில்தான் எளிமையானது என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். “கசடதபற” காலத்து கவிதைகளை நீங்கள் வாசித்தால் அதில் ஒவ்வொரு வார்த்தையும் சாதாரணமாகத்தான் இருக்கும். எளிமையான வார்த்தைகளைத்தான் அப்போதும் பயன்படுத்தினார்கள். ஆனால் உள்ளடக்கத்தில் ஊடுபாவுகள் இருந்தன. 2000த்துக்கு பிறகு உள்ளடக்கத்தில்தான் மாற்றம் வந்திருக்கிறது. நவீன கவிதை எப்போதுமே எளிமையான மொழியில்தான் எழுதப்பட்டிருக்கிறது. இப்போது உள்ளடக்கத்திலேயே ஓர் எளிமை வந்துவிட்டிருக்கிறது.

பதில்: ஆரம்பத்திலேயே கோவில்பட்டி இடது சாரி இயக்கங்கள் ஆழமாக வேரூன்றிய ஒரு நிலம். அதனால் அறிவு சார்ந்த உரையாடல்கள் அங்கே எப்போதுமே நடந்துக் கொண்டுதான் இருக்கிறது.

பதில்: எல்லோரையுமே சந்தித்திருக்கிறேன். ஏற்கனவே சொன்னது போல, ஒருவரையொருவர் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு எல்லோருக்குமே இருந்தது.

பதில்: எல்லோரையும் வாசித்திருக்கிறேன். ஆனால் மனதில் விமர்சனபூர்வமான மதிப்பீட்டை அதிகம் செய்யவில்லை. ஒவ்வொருவருமே நிறைய பங்களிப்பு ஆற்றியிருக்கிறார்கள். வண்ணதாசன் முக்கியமான எழுத்தாளர். புலனுபவத்தை முன்வைத்த கவிஞர். (Sensual poet). வழக்கமாக புலன் உணர்ச்சியை, நமக்கு தெரியாமலேயே, வேகவேகமாய் அர்த்தப்படுத்திவிடுவோம். அப்படி அர்த்தமேற்றாமல்,  கண்களில் எது படுகிறதோ, அவதானிப்பில் எது விழுகிறதோ அதை அந்தந்த நிலையிலேயே அவர் பதிவு செய்கிறார்.

வண்ணதாசன் இயற்கையை புகைப்படம் போல மாற்றிக் கொடுக்கும்போது எனக்கு அது புத்துயிர்ப்பு அளிக்கிறது. இன்றைக்கு ஊடகம், மெய்நிகர் உலகு ஆகியவற்றின் பெருக்கத்தில் எல்லாமே மறைமுகமாக, வெறும் செய்தியாகவும் தகவலாகவும் மட்டுமே உள்ளே போகும்போது அகத்தில் நாம் சோர்ந்துவிடுகிறோம். எந்த இயற்கையை தொலைத்தோமோ அதையே பணம் செலவு செய்து தேடி போகிறோம். ஆனால்,வண்ணதாசன் இன்னமும் தன் கவிதையில் இயற்கையை தக்க வைத்திருக்கிறார். இது அவர் அளித்திருக்கும் பரிசு.

பதில்: ஆமாம். அவர் உலகில் எல்லாமே நுண்ணிய நோக்கிற்குரியவை (microscopic). உண்மையில் ஒரு மகத்தான கவிதைக்குள் தொலைநோக்கியும் நுண்நோக்கியும் இருக்க வேண்டும். வண்ணதாசன் தொலைநோக்கியை உள்ளே வைக்கவில்லை. அதனாலேயே அவர் விமர்சனத்திற்கும் ஆளானார். இப்போது அதே காரணத்துக்காவே, இன்னொரு கோணத்தில், அவர் கவிதையை பாராட்டுகிறேன். ஒவ்வொரு காலத்திலும் கவிதைக்கு ஒரு குறிக்கோள் இருக்கும் போல படுகிறது. அந்த காலத்தில்  வானம்பாடி வகையான கவிதைகள் ஒரு தரப்பாக இருந்தன. அவை சமூக மாற்றத்தை பேசின. இன்னொரு தரப்பில், சுய தேடலை முன்வைத்த கவிதைகள் இருந்தன. வண்ணதாசன் இவ்விரு தரப்புகளிலும் பொருந்தவில்லை. ஆனால் இன்று அவர் முக்கியமானவராக இருக்கிறார்.

பதில்: கவிதையில் “எல்லாக் காலத்துக்குமானது” எனும் அடையாளமே கொஞ்சம் தெளிவில்லாதது. கவிதையின் அழகியல் வெளிப்பாட்டில் கட்டாயமாக காலகட்டத்திற்கேற்ப மாற்றங்கள் வரும். குறுக்கு மறுக்காக ஓடும் வரலாற்றின் இயக்கத்தில் அதன் தேவையை கவிதையின் ஒரு அடுக்கு பூர்த்தி செய்கிறது. ஆனால் அது மட்டுமே கவிதையின் பணியல்ல. கவிதை இப்படி பல அடுக்குகளாலானது. கவிதையில் ஆதாரமான ஓர் உள் தளம் இருக்கிறது. அங்கே மாறாத நிலையான ஒன்றிருக்கிறது.

வாழ்வில் எல்லா மனிதர்களும் சந்திக்கக்கூடிய நித்தியமான (eternal) சிக்கல்கள் உள்ளன. வாழ்க்கையின் அடிப்படையான புதிர் அது. தத்துவம் அந்த புதிரை தர்க்கத்தினால் தொடும்போது கவிதை தர்க்கமில்லாமல் தொடுகிறது. அப்படி தர்க்கமில்லாமல் தொடுவதனாலேயே கவிதை கூக்குரலிடுகிறது; மௌனமாகிறது; உளறவும் செய்கிறது. அந்த புதிரோடு எப்போதும் இணைந்திருப்பதனாலேயே கவிதை ஆற்றுப்படுத்துவதாகவும் இருக்கிறது. வாழ்க்கையின் புதிரை ஒருபோதும் நம்மால் கட்டவிழ்த்துவிட முடியாது. அந்த புதிர் உருவாக்கக்கூடிய உளவியல் வெளியில் ஒரு துணை போல கவிதை உடன் வரும்.

பதில்: நிச்சயமாக. ஓவ்வொரு கவிதைக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. சில நேரங்களில் ஒரு கவிதை அழகியல் ரீதியாக வெற்றி அடைந்திருக்காது. ஆனால் என் வலியை அது தாங்கியிருப்பதால் வெளியே பிரசுரித்திருக்கிறேன். உதாரணமாக என் கவிதை ஒன்று,

“நகத்தை நகத்தை கடிக்கும் பெண்ணே
என் அகத்தையும் சேர்த்து கடிக்கிறாயே”

இது அப்படியொன்றும் முக்கியமான கவிதை கிடையாது. ஆனால் ஏற்கனவே கலிங்கத்துப்பரணியில் ஒரு பாடல் இருக்கிறது.

“முருகிற் சிவந்த கழுநீரும்
முதிரா இளைஞர் ஆருயிரும்
திருகிச் செருகும் குழல்மடவீர்
செம்பொற் கபாடம் திறமினோ”

ஒரு பெண் தாமரை பூவை திருகி எடுத்து தலையில் சூடுகிறாள். அதை பார்க்கும் ஆடவனுக்கு தன் மனதையே திருகுவது போல இருக்கிறது. அந்த பாடலுக்கு இணையாக, சம்காலத்தில் நகத்தை கடிக்கும் ஒரு பெண்ணை பார்க்கிறேன். அவள் நகம் கடிப்பது என்னை கடிப்பது மாதிரியே இருக்கிறது. அவ்வளவு இச்சையோடு அது என்னை வருத்துகிறது. எப்போதோ ஒன்பதாம் நூற்றாண்டில் பாடப்பட்ட ஒரு பாடல் இருபத்தியோராம் நூற்றாண்டில் ஒரு தூரத்து எதிரொலியாக இருப்பதால் அதை பிரசுரித்தேன். இப்படி கவிதை வெவ்வேறு நோக்கங்களால் செயல்படுகிறது.

பதில்: தலைப்பில்லாமலேயே கவிதைகள் முழுமையோடிருப்பதாக தோன்றும். யாரும் தலைப்பை முடிவு செய்துவிட்டு கவிதை எழுதுவதில்லை தானே? பெரும்பாலும் ஓர் ஆக்கத்தை எழுதி முடித்த பிறகே தலைப்பை சேர்க்கிறார்கள். அது கவிதையை மேம்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது. ஒரு கவிதை தன்னளவிலேயே முழுமையாக இருக்கும்போது, தலைப்பு கூடுதல் சேர்க்கை மாதிரியாகிவிடுகிறது. அதனால் நான் தலைப்புகளை விரும்புவதில்லை.

பதில்: மனித சுயத்துக்கும் மனதுக்கும்தான் இன்மை தெரியும். உடலுக்கு இன்மை தெரியாது. உடலும் புலனும் “இருப்பதையே” உணர்கின்றன; அறிகின்றன. ஆனால் மனம் இன்மை பற்றியே யோசிக்கிறது. அதனால்தான் மொழியையே பயன்படுத்துகிறோம் போல. மொழி எதற்கு இருக்கிறது? எதுவெல்லாம் இல்லையோ அதையெல்லாம் வார்த்தைகளாக்கி நாம் பரிமாறிக் கொள்கிறோம். கவிதையும் அதையே செய்கிறது.

மனிதர்கள் ஒரே நேரத்தில் உடலாகவும் மனமாகவும் இருப்பதனால் உடல் இருப்பதோடும், மனம் இல்லாததோடும் உரையாடிக் கொண்டேயிருக்கிறதோ என்று தோன்றுகிறது. ஒரு விஷயம் தொடர்ந்து “இருக்கும்போது” (Presence) அதை நாம் கடந்துவிடுகிறோம். நம் வீட்டில் திரைச்சீலையை அதிகம் நாம் கவனிப்பதில்லை. புதிதாக வருகிறவர் பார்வைக்குதான் அது படும். எனில் இருப்பவை எல்லாம் கவனத்துக்கு அப்பால் போய்விடுகின்றன. இல்லாதவை நினைவில் இருக்கின்றன. இந்த விஷயங்களுக்கான உணர்வுரீதியான எதிர்வினைதான் கவிதை.

விரிவான நோக்கில் ஆராய்ந்தால், இன்மையின் வலியே வரலாற்றின் வலியாகவும் இருப்பதாக தெரிகிறது. ஏனென்றால் வரலாறு என்பதே இன்மையின் அறிவிப்புதானே? அதனால்தான் வரலாறு படிக்கவே எனக்கு ரொம்ப சங்கடமாய் இருக்கும். அப்புறம் இல்லாததை பேச வேண்டியது இலக்கியத்தின் வேலையும்கூட. ஒரு சமூகத்தில் எது இல்லையோ அதை பதிவு செய்வதே நல்ல இலக்கியம் என்று சொல்வார்கள். பத்திரிக்கை,  வெகுஜன புனைவு, வெகுஜன திரைப்படம் இவை எல்லாம் இருப்பதை பதிவு செய்கின்றன. நல்ல இலக்கியம் இல்லாததை பேசுகிறது.

பதில்: ஆமாம். ஆனால் அது ஆன்மீகவாதிகள் சொல்லும் நிசப்தம் அல்ல. கவிதையில் வரக்கூடிய எல்லாமே ஏதோவோர் வகையில் நம்மை சுற்றியிருப்பவற்றுடன் இணைக்கவே செய்கிறது. ஆனால் ஆன்மீகத்தில் தனிமையானவர்களாக மாறுகிறோம்.

பதில்: அடுக்குமுறை கிடையாது. ஆனால் முன்னுரிமை உண்டு. ஆன்மீகத்தையே முதன்மையாக கருதுவேன். ஆன்மீகம் சம்பந்தப்பட்ட நூல்களையே அதிகம் வாசிக்கிறேன். இப்போதும் இணையத்தில் தேடி தேடி படிப்பது அவ்வகை நூல்களையே. அவை பல வகைகளில் என்னை மேம்படுத்துகின்றன. வெளிச்சம் அளிக்கின்றன. ஆன்மீகம்தான் என் முதன்மை தேடல். கவிதை ஓர் உபவேலைதான்.

பதில் : ஒரு அர்த்தத்தில், பாரம்பரியமான ஆன்மீகத்தின் மேல் எனக்கு நாட்டம் இல்லைதான். தியானம் கூட என்னை ஈர்க்கவில்லை. துறவிகள் மற்றும் சித்தர்களின் வாழ்க்கையை படிப்பதில் ஆர்வம் உண்டு. ஆனால் அந்த வாழ்க்கை முறைமேல் பெரிய வசீகரம் இல்லை. “பற்று” எனும் சொல்லையே சரியாக வகுக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆசை எனும் பொருளிலேயே அதை பயன்படுத்துகிறோம். தனிப்பட்ட முறையில் பற்றினை பிடி (Grasp) என்பதாகவே புரிந்துகொள்கிறேன். யதார்த்தம், உலகம் இவை சார்ந்து பல கருதுகோள்களை நாம் பற்றி வைத்திருக்கிறோம். இந்த கருதுகோள்களை கைவிடுவதே முக்கியமோ என்று யோசிக்கிறேன். பொருட்கள் உடைமைகள் (material posession) இவை எல்லாம் பக்க விளைவுகளாகவே இருக்க முடியும்.  யதார்த்தத்தின் உண்மையை பற்றுதலும் கைவிடுதலுமே கவனத்தில் கொள்ள வேண்டியவை என கருதுகிறேன். யதார்த்தம் என்பதே எல்லா மனிதர்களுக்கும் ஒரே மாதிரி இல்லை என்பதை உணர வேண்டியிருக்கிறது.

பதில்: ஆன்மீகம், உலகியல் என்று இருமைப்படுத்துவதே மேலோட்டமான புரிதலின் விளைவாய் இருக்கலாம். அப்படி பகுப்பது மரபான சிந்தனாமுறையின் குரல். மாறாக, ஆன்மீகத்தை உலகியலின் பரிமாணம் என்றும் கருதலாம். அடிப்படையில் மனித இருப்புணர்வு என்பது எந்த தளையும் ஒட்டாதது என்றும் எதனாலும் தொடப்படாதது என்றுமே எண்ணுகிறேன். உடலுக்கு சில எல்லைகள் உண்டு. வலிகளும் ஆசைகளும் உண்டு. மனதுக்கு சில எதிர்பார்ப்புகள் உண்டு. ஏக்கங்களும் ஏமாற்றங்களும் உண்டு. ஆனால் இந்த அடுக்குகளை கடந்து விழிப்புணர்வு (Awareness) என்று இன்னொரு அடுக்கு உள்ளது. பின்னனியில் இருக்கக்கூடிய விழிப்புணர்வை மேல்தளத்துக்கு கொண்டு வருவதுதான் ஆன்மீகம் என்பது என் புரிதல்.

இந்த விழிப்புணர்வினால் வாழ்க்கை நிகழ்வுகள் மாறப்போவதில்லை. வாழ்க்கை நேற்று இருந்த மாதிரியேதான் இன்றும் நாளையும் இருக்க போகிறது. ஆனால் அனுபவத்தை எதிர்கொள்வதில் மாற்றம் வரக்கூடும். நம்முடைய எந்த வரையறைகளும் செல்லுபடியாகாத ஓர் இடத்தில் வாழ்க்கையை சுவைக்க நேரலாம். அதையே ஆன்மீகம் என்கிறேன்.

பதில்:  ஆம். கலை வழியே ஆன்மீகத்தை எட்ட முடியும் என்றே சொல்ல வருகிறேன். அதுதான் எழுத்தாளர்களுக்கு முக்கியமானது. மற்றபடி ஆன்மீகம் சார்ந்து நீங்களும் நானும் பல விதங்களில் உரையாடலாமே தவிர ஓர் அறுதியான உண்மையை அடைந்துவிட முடியாது. ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் புறவயமாக எதையும் சொல்லிவிட முடியாது.

அதே நேரம், நமக்கு தெரிந்த ஆன்மீக அல்லது தத்துவ அறிதல்களை முன்வைப்பதற்கான வாகனமாகவும் கவிதையை கருதக்கூடாது. அது எனக்கு உவப்பில்லாதது. ரமண மகரிஷி “உள்ளது நாற்பது” என்று ஒரு கவிதை நூல் எழுதியிருக்கிறார். நாம் அதை படிக்கவே முடியாது. அவ்வகை எழுத்தை நான் குறிப்பிடவில்லை. ஆன்மீகத்துக்கான ஊடகமாக இருந்தாலும் கவிதை ஒரு தனியான இருப்பும் கூட.

பதில்: வள்ளலாரின் பயணம் வேறு. மாணிக்கவாசகர், தாயுமானவர், வள்ளலார் மூவருமே அசாதாரணமான தேடல் கொண்டவர்கள். அவர்கள் எழுத்து ரொம்ப அந்தரங்கமாய் இருக்கும். நவீன மனிதர்களாக நமக்கு என்னென்ன கேள்விகள் உண்டோ அத்தனையும் அவர்களிடமும் உண்டு. நாம் எப்படி வெளியே மகிழ்ச்சியானவர்களாக காண்பித்துக் கொண்டு உள்ளே வாதைகளோடு இருக்கிறோமோ அதே அம்சத்தை அவர்களிடமும் பார்க்கலாம்.

பதில்: ஆமாம். ஆண்டாளே ரொம்ப நவீனமான ஒரு நபர் என்றுதான் நினைக்கிறேன். அவளுடைய குரல் ரொம்ப தனித்தன்மை வாய்ந்தது. ஒரு தனிநபரை(Individual) அதில் நாம் உணர முடிகிறது. மாணிக்கவாசகரிடம் பக்தி அம்சமும், சைவ சித்தாந்தத்தின் மீபொருண்மை கூறுகளும் இருந்தாலும் அவர் தனியாகவும் எதையோ வகுத்தளிக்க முற்படுவதாகவே எனக்கு படும். சிவபுராணத்தில் ஓர் இடத்தில் கடவுள் பற்றி பேசும்போது “போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே” என்று ஒரு வாசகத்தை வைக்கிறார். இதையேதான் அரிஸ்டாடில், அசைவிலா அசைவிப்பவர் (Unmoved mover) எனும் கருதுகோளில் சொன்னார். கி.மு மூன்றாம் நூற்றாண்டில் ஒருவன் கடவுள் பற்றி ஒரு விளக்கம் கொடுத்தால், ஆயிரம் வருடம் கழித்து தமிழ்நாட்டிலும் ஒருவன் அதையே சொல்கிறான் என்பது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. எனவே எல்லா காலத்திலும் மனித மனதில் ஒற்றுமை இருக்கும்தான் போல. 

பக்தி பாடல் இயற்றிய பழந்தமிழ் கவிஞனுக்கும் நவீன கவிஞனுக்கும் நடுவே ஒரு வித்தியாசத்தை என்னால் யோசிக்க முடிகிறது. பக்தி காலகட்ட கவிஞர்களின் மொழி மதத்தின் கலைச் சொற்களால் ஆனது. திருநாவுக்கரசர் பாடுகிறார்,

“மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நிழலே”

வீணை நாதம், மாலைக் காற்று, நிலவு, வண்டின் ஒலி இவைதான் தெய்வீக அனுபவம் என்று சொல்லிவிடுகிறார். புலனுணர்வுதான் கடவுள் (Sensation is God) என்பது நாவுக்கரசரின் கண்டுபிடிப்பு. படிக்கும்போது அது நூறு சதவீதம் சரி என்பது எனக்கும் சரியாக புரிந்துவிடுகிறது. இத்தகைய கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்த ஒரு பக்தி கவிஞனுக்கு சைவ சித்தாந்த கலைச் சொற்கள் தேவைப்படுகின்றன. அன்றைய இறையாட்சி (Theocracy) முறையில் அவர்கள் அப்படி செயல்பட்டார்கள். நவீன கவிஞன் இறையியலை விலக்கிவிடுகிறான். துல்லியமாக கவிதையை மட்டும் எட்ட முயற்சிக்கிறான்.

பதில்: நிச்சயமாக. நான் அதை மறுக்கவேயில்லை. நவீன தனி மனிதனிடம் ஓர் உளவியல் தன்னிலை அல்லது சுயம் இருக்கிறது. அது தொடர்பான கேள்விகளை நவீன கவிஞர்கள் எழுதுகிறார்கள். ஆனால் சங்க கவிஞர்கள் தங்கள் எல்லைகளை வரையறுத்துக் கொண்டார்கள். ஒரு பாட்டில் நற்றாய் தன் மகள் பற்றி சொல்கிறாள். செல்வ சிறப்புடன் வளர்ந்த மகள் விருப்பமானவனுடன் உடன்போகிவிட்டு இப்போது ஏழ்மையில் இருக்கிறாள். ஒரு வேளைதான் சாப்பிடுகிறாள். வீட்டிலிருந்து உதவ முற்பட்டாலும் மறுக்கிறாள். இந்த வீம்பை, இல்லற அறிவை தன் மகள் எங்கே கற்று கொண்டாள் என்று நற்றாய் வியக்கிறாள். “சிறுவிளை யாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டுஉணர்ந் தனள் கொல்” என்கிறது பாடல். இங்கே நாம் முன்னால் பேசிய தனிமனித தேடல் இல்லை. ஆனால் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வருகிற பெண்மையின் சில ரகசியங்களை இக்கவிதை காட்டிவிடுகிறது. ஒரு பெண்ணாக இருப்பதென்பது நமக்கு பரிச்சயமான ஒரு கலாச்சார இருப்போ அல்லது காம மோகினி (seductive vampire) போன்ற ஒரு கருத்துருவமோ மட்டும் அல்ல. அவர்களுக்கேயான அந்தரங்கமான ஒரு வெளி இருக்கிறது. அதை குருவி தானியத்தை கொத்தி எடுக்கிற மாதிரி, ஒரு சங்க கவி எடுத்துவிடுகிறார். நமக்கும் அது திறப்புகளை அளித்துவிடுகிறது.

பதில்: இது தமிழில் மட்டும் நிகழ்வது அல்ல. சீன கவிதைகளை எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு புத்த மதத்தை கடந்துவிட வேண்டும் எனும் துடிப்பு இருக்கிறது. தமிழ் சூழலில்தான் கவிதையில் புத்தர் வந்தால் உடனே அது நவீனம் என்று நம்பிவிடுகிறோம். சீன கவிஞர்களுக்கு அப்படியல்ல. சீனாவில் புத்தரை எழுதினால் அவன் உடனே மரபான கவிஞனாகிவிடுவான். சீன கவிஞர்கள் எல்லோரும் புத்தரை விட்டு வெளியே போகும்போது தமிழ் கவிஞர்கள் புத்தரை நோக்கி போவதில்தான் இந்த விந்தை இருக்கிறது.

பதில்: புறவய மதிப்பீட்டை முன்வைக்கும்போதுதான் இந்த இடமே வருகிறது. ஆனால் இலக்கியத்தை துய்க்கும்போது புறவயமான எந்த அளவுகோலும் செல்லுபடியாவதில்லை. இலக்கிய வாசிப்பு முதன்மையாக ஓர் அகத்தன்மையை உருவாக்குகிறது. நீங்கள் வாசிக்கும் புத்தகத்திலிருக்கிற ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரேயொரு வேலைதான் இருக்கிறது. புறத்தை அகவயப்படுத்துவது. அகவயப்படுத்தப்பட்ட விஷயத்தை மீண்டும் புறத்தில் சந்திக்க வேண்டும் என்றோ அது புறத்தில் எதிரொலிக்க வேண்டும் என்றோ எண்ணுவது மாயை என நினைக்கிறேன். நமக்கு அந்த ஏக்கம் இருப்பது உண்மை. ஆனால் இலக்கியம் அதற்குரியது மட்டும் அல்லவே. ஒரு நிகழ்வு அகவயப்பட்டதும் அந்த நிகழ்வின் பரிமாணங்களே மாறிவிடுகின்றன. அது பல மடங்கு பெரிதாகிவிடுகிறது. சில விஷயங்களை அது சின்னதாகவும் மாற்றுகிறது. “மலை”யை பார்க்கும்போது அது பிரம்மாண்டமாக இருக்கிறது. ஆனால் “மலை” என்று எழுதி படித்தால் அது எனக்கு மிக சின்னதாக தோன்றுகிறது. நான் சொல்ல வருவது இதுதான் – மொழி உருவாக்கக்கூடிய அகயவத்தன்மை என்பது தன்னாட்சியானது (Autonomous). எனவே யதார்த்தத்தில் இருப்பது மட்டும் அல்ல; இல்லாததும் புனைவிலும் கவிதையிலும் இடம்பெறும். நேரடி தொடர்பை எதிர்பார்க்க வேண்டியதில்லை. “காலா காலருகே வாடா” என்று கவிதையில் பேசும் பாரதியார் நேர் வாழ்க்கையில் பெரிய பயந்தாங்கொள்ளி. கடலிலேயே பாரதியார் வாளியால் தான் குளிப்பாராம். ஆனால் கவிதையில் எவ்வளவு ஆவேசமான குரல் ஒலிக்கிறது? இந்த வித்தியாசத்தை கவனிக்க வேண்டும்.

பதில்: நிச்சயம் சமூக பயன் இருக்கிறது. வேறு மாதிரி சொல்ல வேண்டும் என்றால், இலக்கியத்தில் எல்லாமே சீக்கிரமாக நடந்துவிடுகின்றன எனலாம். சமூகத்தில் ஒரு மாற்றம் வருவதற்கு முன்னால் அது முதலில் சுலபமாக புனைவில் இடம்பெறுவதை கவனிக்கலாம். நிலபிரபுத்துவ ஒழுக்க மதிப்பீடுகளில் இருந்து விலகி நவீன மதிப்பீடுகளோடு இசைந்து செல்ல நம் சமூகம் இன்னமும் எவ்வளவு போராடுகிறது என்பதை பார்த்து வருகிறோம். நூறு வருடங்களாக விவாதம் நடக்கிறது. ஆனால் தமிழ் புனைவு மிக சீக்கிரமாகவே நவீனமடைந்துவிட்டது. கு.ப.ராவின் முற்றுபெறாத கடைசி நாவலில் திருமணமாகாமலேயே ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது (Living together) பற்றிய விவரிப்பு வருகிறது. சமூகம் இன்று பேசக்கூடிய பிரச்சனைகளை இலக்கியம் முன்னாலேயே பேசிவிடுகிறது.

பதில்: ஆமாம். ஒரு நாவலாசிரியனால் நூறு வருடங்களுக்கு முன்பாகவே ஒரு சமூகத்தின் சமகால நெருக்கடிகளை கற்பனை செய்துவிட முடிகிறது.

பதில்: ஆமாம். ஒவ்வொருவரும் சில ஜன்னல்களை திறந்து காட்டியிருக்கிறார்கள். வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் இப்படி சில வழிகாட்டிகளை எதிர்கொள்கிறோம். பிறகு அவர்களை கடக்கவும் செய்கிறோம். ஒவ்வொரு மாஸ்டரும் இன்னொரு மாஸ்டருக்கு வழிவிட்டு விலகுகிறார்.

ஆன்மீக ஆசிரியர்களை தொடர்ந்து வாசித்தாலும் அக்கருத்துக்களை தொகுத்து இன்னொருவருக்கு என்னால் சொல்ல முடியாது. அந்த பின்னனியில் வாழ்க்கையை நோக்கவோ அதையொட்டி நண்பர்களிடம் பேசவோ மட்டுமே என்னால் இயல்கிறது. இந்த ஆன்மீக ஆசிரியர்களையேக்கூட நேரில் சந்திக்கவோ அவர்களோடு தொடர்புப்படுத்தி கொள்ளவோ எனக்கு ஒருபோதும் ஆர்வம் இருந்ததில்லை.

நிஸர்கத மகராஜ் ஓர் இந்திய துறவி. மேற்கில் அவருக்கு பல சீடர்கள் இருக்கிறார்கள். இந்திய தத்துவங்களையேக்கூட மேற்கத்திய முறைமைகளால் அணுகுவதில்தான் எனக்கு விருப்பம் இருக்கிறது. நிஸர்கத மகராஜினை நேரடியாக வாசித்தால் கம்பளி போர்வையை தூக்கி சுமப்பது போல கடினமாக இருக்கும். அவருடைய சீடரான செய்லர் பாப் ஆடம்ஸன் (Sailor Bod Adamson) வழியே அவரை வாசிப்பது எளிதானது. அவர் நிஸர்கத மகராஜை லேசாக்கி தருகிறார்.

பதில் : ஆரம்ப காலத்தில் எழுத முயன்றிருக்கிறேன். ஆனால் கட்டுரை எழுத ஆரம்பித்ததும் என் மொழி உடனடியாக உருவகத்தன்மைக்கு போய்விடும். நானே அந்த உருவக சுழலில் சிக்கிக் கொள்வேன். தர்க்கபூர்வமாக கட்டுரைகள் எழுத ஓர் அறிவார்ந்த ஒழுக்கம் தேவைப்படுகிறது. அது என்னிடம் இல்லை. எனவே தொடர்ந்து அத்துறையில் செயல்படவில்லை.

பதில் : விமர்சனம் என்று சொல்ல முடியுமா தெரியவில்லை. நவீன தமிழ் கவிதை உலகளாவிய அம்சத்துடன்தான் பிறப்பே எடுக்கிறது. க.நா.சுப்ரமணியம் போன்ற முன்னோடிகள் பிராந்திய எல்லைகளுக்குள் சிக்காமல் நேரடியாக உலகளாவிய மனதினை கைப்பற்றிவிட்டார்கள். கூடவே அழகியல் தளமும் நமக்கு சரியாக அறிமுகமாகிவிட்டது. இவை நேர்மறையான விஷயங்கள். நாம் இழந்தது என்று எதையாவது சொல்ல வேண்டுமென்றால் காவிய உரையாடலின் (Epic discourse) படிநிலைகள் இல்லாமல் போனதை குறிப்பிடலாம். சிலப்பதிகாரமோ மகாபாரதமோ வாழ்வின் அடிப்படைகளை விசாரிக்கக்கூடியவை. அறம், பெண் மற்றும் ஊழ் இம்மூன்றையும் வாழ்வின் அடிப்படை விசைகள் என்கிறது, சிலம்பு. இத்தகைய ஆழமான உரையாடல் நவீன கவிதைகளில் சாத்தியமாகவில்லை என்று சொல்லலாம். பிரபஞ்சத்தின் ஆதாரம் என்ன? பிரபஞ்சத்திற்கென்று இறுதி நோக்கம் இருக்கிறதா? இது போன்ற அடிப்படை கேள்விகளை பேசுவது நவீன தமிழ் கவிதையில் நிகழவில்லை.

பதில் : புனைவு வாசிக்கும்போது ஒருவர் தன்னையே அதில் கண்டைவதாக தோன்றும். ஆனால் கவிதை வாசிக்கும்போது உலகுடன் தொடர்பு கொள்வதற்கான வழிகளை கண்டடைகிறார். புனைவில் சமூக தன்னிலைதான் பிரதான இடம் வகிக்கிறது. அதனால்தான் புனைவு அடையாளங்களின் இடமாக உள்ளது. மனிதர்களின் பெயர்கள், ஊர் பெயர்கள், சமூக அடையாளங்கள் இவற்றை புனைவு கைவிட முடியாது. கவிதை அடையாளங்கள் இல்லாத பரப்பு. கவிதையில் மட்டுமே அனாதைத்தன்மை சாத்தியம்.

நம் புது கவிதை இயக்கம் பாரதியாரிலிருந்து துவங்குகிறது. அவரிடம் சமூகத்தை மாற்ற வேண்டும் எனும் கனவும் அதற்கான ஆற்றலும் இருந்தன. ஆனால் நவீன கவிஞர்கள் முழுக்க தங்களை அதிகாரமில்லாதவர்களாகவே உணர்கிறார்கள். ஒரு விஷயம் தெரியும் ஆனால் சொல்ல முடியாது ; தெரியும் ஆனால் செய்ய முடியாது – இந்த வேதனையிலேயே அவர்கள் இருக்கிறார்கள். அங்கிருந்துதான் அடையாளமின்மையும் பிறக்கிறது போலும்.

பதில் : மௌனி, கு.ப.ராஜகோபாலன், கரிச்சான் குஞ்சு என்று நிறைய பேர் இருக்கிறார்கள். க.நா.சுவை முக்கியமாய் சொல்லலாம். பொய்த் தேவு நாவலும் அவருடைய சிறுகதைகளும் ரொம்ப பிடிக்கும். பொய்த் தேவு ஒரு முழு வாழ்க்கையை சொல்லிவிடுகிறது. ஏழ்மை, வசதி, துறவு என்று வாழ்க்கையை மதிப்பீடு செய்வதன் வழியே தத்துவத்தின் இடத்துக்கு நகர்ந்துவிடுகிறது. க.நா.சுவின் கதை பரப்பே ரொம்ப வித்தியாசமானது. கவிதையிலும் அவர் நுணுக்கமான இடங்களை தொட்டிருக்கிறார். க.நா.சு, சுந்தர ராமசாமி போன்றவர்கள் உரைநடை ஆசிரியர்களாக இருந்தாலும் கவிதையில் ஒரு தனித்துவத்தை எட்டியவர்கள். பசுவய்யா கவிதைகளில்கூட தமிழ் கவிதையின் கூறல் முறையையோ தமிழ் குரலையோ (narrator) கேட்க முடியாது. ஏற்கனவே குறிப்பிட்து போல, தமிழ் அழகியல் பாற்படாத, ஓர் உலகளாவிய குரல்தான் அவரிடமும் இருக்கிறது.

நிறைய புனைவு நூல்கள் வாசிக்கிறேன். எஸ்.ராமகிருஷ்ணனின் “உறுபசி”, “யாமம்” முதலிய நாவல்கள் எனக்கு விருப்பமானவை. சம்பத்தின் “இடைவெளி” நாவலைப் போலவே “உறுபசி”யும் மரணத்தின் தீராத வேதனையை பேசுவது. சுரேஷ்குமார் இந்திரஜித்தின் ஆரம்ப கால கதைகளை நண்பர்களுக்கு பரிந்துரை செய்திருக்கிறேன். அன்றாட வாழ்க்கைக்குள் இருக்கும் ஒரு ரகசிய முடிச்சை குற்ற சம்பவம் போல அவர் விவரிப்பார்.

வட்டார வழக்கு எழுத்துக்களுடன் எனக்கு இசைவான அலைவரிசை அமையவில்லை. ஆனால் கி.ராஜநாராயணின் கதைகள் மட்டும் ரொம்ப விருப்பமானவை. “கன்னிமை” கதையில் வரக்கூடிய நாச்சியாள் மிக ஆழமான ஒரு கதாப்பாத்திரம். “நாச்சியாரு,என் பிரியே! நீ எங்கிருக்கிறாய்?” எனும் வரி அபாரமானது. மௌனியின் “எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?” வரியின் எதிரொலியை அதில் கேட்கலாம்.

பதில் : வாசிப்பு என்பது ஒரு குணப்படுத்தும் முறைமை என்றே சொல்ல தோன்றுகிறது. காலத்தில் எல்லாமே கையைவிட்டு போய்க்கொண்டிருக்கிறது என்பதை அனுபவத்தில் உணர்ந்தபடியே இருக்கிறோம். அது ஒரு ரணம். காயம். வாசிப்பு அதை ஆற்றுப்படுத்துகிறது. ஒரு நாவல் படிக்கும்போது நம் பால்யத்தையோ நம் வாழ்வின் பழைய தருணங்களையோ மீட்டெடுக்க முடிகிறது. நீல.பத்மநாபனின் தலைமுறைகள் நாவலில் முதல் அத்தியாயம் படிக்கும்போது என்னையே அந்த சிறுவனாக உணர்ந்தேன். யோசித்தால், திரும்ப திரும்ப ஏன் புத்தகங்கள் படிக்கிறோம் என்பது பதில் சொல்ல முடியாத கேள்வி அல்லவா? வாசிப்பு என்பது ஒரு கவிதையுடனோ அல்லது ஒரு கதையுடனோ அல்லது ஒரு புத்தகத்துடனோ தீர்வதில்லை என்பது எவ்வளவு பெரிய ஆச்சர்யம். வாசிப்பு என்பது வெறுமனே அறிவை சேகரிப்பது மட்டும் அல்ல. ஒரு நாவல் படிக்கும்போது காலத்தின் நதியில் நனைகிறோம். நிஜ வாழ்க்கையில் ஈடுபடும்போது நாம் காலத்தை உணர்வதேயில்லை.

பதில் : பொதுவெளி என்பது தீவிரமான உரையாடலுக்கானதா என்பதிலேயே எனக்கு சந்தேகமிருக்கிறது. ஏனென்றால் பொதுவெளி சராசரித்தன்மையுடனே இயங்க முடியும். மேலும், உரையாடலின்போது யாருடன் பேசுகிறேன் என்பது எனக்கு தெரிய வேண்டுமாய் இருக்கிறது. அப்போதுதான் எனக்கு சரியான குவிமையம் கிடைக்கிறது. என்னுடைய மொழியும் அதற்குத்தக்க உருவாகிறது. பொதுவெளியில் அது சாத்தியம் கிடையாது. இது என் ஆளுமை சம்பந்தபட்டதே. மற்றபடி பொதுவெளியில் யாருமே பேசக்கூடாது என்று சொல்ல மாட்டேன். இன்னொருபுறம் யோசித்தால், சிறுபத்திரிக்கையே அப்படிதான் இயங்குகிறது என கருதுகிறேன். சிறுபத்திரிக்கைகாரர்கள் சதா மானுடம் பற்றியே பேசுவார்கள். மானுடம் பற்றியே சிந்திப்பார்கள். ஆனால் பொதுவெளிக்கு பத்திரிக்கையைக்கூட அனுப்ப மாட்டார்கள். இது இன்னொரு பெரிய முரண் தான்.

பதில் : நேற்று நீங்கள் இந்த கேள்வி அனுப்பியதும் நான் ஒரு பாட்டு எழுதினேன். அதையே வாசிக்கிறேன்,

“குழந்தையை
தோளில் தூக்குகையில்
அது
எடையோடும்
எடையில்லாமலும் இருக்கிறது

காதலர்க்கு
கலவிவேளையில்
அவர் மேனிகள்
எடையோடும்
எடையில்லாமலும் இருக்கிறது

மயானத்திற்கு,
இறந்துபோனவரைத்
தூக்கிச் செல்கையில் அவர்
எடையோடும்
எடையில்லாமலும் இருக்கிறார்

சூரியனைச் சுற்றும் புவியிலல்ல
காலண்டரைச் சுற்றும் பூமியில்
அரசு அலுவலக வரிசையில்
ஆவணங்களையும்
அடையாள அட்டையையும்
ஏந்தியபடி  தாள்மனிதனாக  நிற்கிறேன்
அவை
எடையில்லாமலும்

எடைகளோடும் இருக்கின்றன
எண்ணிக்கையற்ற
எடைகளோடு“

000

தேவதச்சன் கவிதை தொகுதிகள்

  • அவரவர் கை மணல் (1982)
  • அத்துவான வேளை (2000)
  • கடைசி டினோசார் (2004)
  • யாருமற்ற நிழல் (2006)
  • ஹோம்ஸ் என்ற காற்று (2010)
  • இரண்டு சூரியன் (2012)
  • எப்போதும் விடிந்து கொண்டிருக்கிறது (2013)
  • மர்மநபர் (முழு தொகுப்பு) (2017)

புகைப்படங்கள் : விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் வெளியிட்ட “நிசப்தத்தின் சப்தம்” எனும் தேவதச்சன் ஆவணப்படத்திலிருந்து சேகரித்தவை.

விஷால் ராஜா

சென்னையைச் சேர்ந்த ‘விஷால் ராஜா’ புனைகதைகள், விமர்சன திறனாய்வு தளங்களில் தொடர்ச்சியாக இயங்கிவருகிறார். "திருவருட்செல்வி" சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர்.

தமிழ் விக்கியில்

உரையாடலுக்கு

Your email address will not be published.