/

வீடு : ச.வி. சங்கர நாராயணன்

உடம்பெல்லாம் புழு ஊர்வதுபோல் இருந்தது. ஆசை ஆசையாய் அடித்த பச்சை நிறப் பெயிண்ட்டில் பார்க்கையில் வீடே ஒரு பெரிய கூட்டுப் புழுப்போலத்தான் தெரிந்தது. சொந்த வீட்டைப் பார்த்து இவ்வளவு அருவருப்படைபவன் நான் ஒருவனாகத்தான் இருக்கவேண்டும். இன்னும் வெப்பம் மைனஸிற்கு செல்லவில்லை எனினும், காற்றடிக்கவும் குளிர் நன்றாக தெரிந்தது. புழுக்கம் குறையாத மனதோடு வண்டியை வீட்டின் முன் நிறுத்தினேன்.

“நண்பரே, சிரமத்திற்கு மன்னிக்கவும்” கதவைத் திறக்கப்போனவன் பின்னால் திரும்பிப் பார்த்தேன். பக்கத்துவீட்டுக்காரர் ஒரு சிறுவனோடு நின்றுகொண்டிருந்தார். அவர் முகபாவனையைப் பார்த்தபோது குறைந்தது இரண்டு முறையேனும் அழைத்திருப்பார் எனத் தோன்றியது.

இதற்கு முன்பு ஓரிருமுறை அவரைப் பார்த்திருக்கிறேன்.  ஒரு சின்ன சிரிப்போடு சரி. பேசியதில்லை. இப்போதும் நான் அவரிடம் பேசும் மன நிலையில் இல்லை. சீக்கிரம் வீட்டிற்குள் நுழைந்து கதவைச் சாத்திக்கொள்ள விரும்பினேன்.

“சொல்லுங்கள்”

“என் மனைவி வீட்டைப் பூட்டி விட்டு கடைக்குச் சென்றிருக்கிறாள் போலிருக்கிறது. போனில் கூப்பிட்டுப் பார்த்துவிட்டேன். எடுக்கவில்லை. நீங்கள் கொஞ்சம் அனுமதித்தால் அவள் வரும்வரை என் மகனை உங்கள் வீட்டில் வைத்துக்கொள்வேன். அவனுக்கு உடல் நிலை சற்று சரியில்லை.”

இருவர் கண்களிலும் கலக்கம் தெரிந்தன. சிறுவன், அவன் தந்தையின் கைகளை இறுகப் பற்றியிருந்தான். அவன் உடல் லேசாக நடுங்குவதுபோலிருந்தது. எனினும் எதையாவது சொல்லி அவர்களை அனுப்பிவிடவே விரும்பினேன். இனி யாரையும் வீட்டிற்குள் விடும் தைரியம் எனக்கிருக்கவில்லை.

அவர்கள் இருவரும் என்னையே பார்த்துக்கொண்டு நின்றனர். எனக்கு சட்டென்று எதுவும் தோன்றவில்லை. என்ன சொல்வதெனத் தெரியாமல், கதவையும் திறக்காமல் நானும் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

என் தயக்கத்தைப் புரிந்துகொண்டவராய், கெஞ்சும் குரலில், “தயவு செய்து உதவுங்கள். இவன் அம்மா வந்த உடன் நாங்கள் கிளம்பிவிடுகிறோம்” என்றார். இன்னும் சற்று தாமதித்தால் அவர் கண்கள் கலங்கிவிடும்போலிருந்தன. கைக்கடிகாரத்தையும், வானையும் இருமுறை மாறி மாறிப் பார்த்தார்.

அவரின் செய்கை எனக்கு குழப்பத்தையும், சந்தேகத்தையும் தந்தது. அவசரமென்றால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் அல்லது… அப்படி நினைக்கும்போதே மருத்துவமனைக்கு செல்வது இந்த ஊரில் அவ்வளவு எளிதில்லை என்பது நினைவுக்கு வந்தது.  வேறு வழியின்றி “சரி, வாருங்கள்” என கதவைத் திறந்து அவர்களை உள்ளே அழைத்துச் சென்றேன்.

அவரும், அவர் பையனும் ஏறக்குறைய என்னைத் தள்ளிவிடாத குறையாக உள்ளே நுழைந்தனர். சிறுவன் நேராக சென்று சுவரில் சாய்ந்தவண்ணம் தரையில் உட்கார்ந்துகொண்டான். அவனின் தந்தையும் அவன் அருகில் வேகமாக சென்று அமர்ந்தார்.

“ஏன் தம்பி தரையில் உட்காருகிறாய். மேலே சோபாவில் உட்கார்ந்துகொள். தயவு செய்து நீங்கள் இருவரும் மேலே உட்காருங்கள்” என் குழப்பம் அதிமானது. என்ன செய்கிறார்கள்? ஏன் தரையில் அமருகிறார்கள்? இது என்ன புதுப் பிரச்சனை என கலவரமடைந்தேன்.

“இல்லை. நாங்கள் கீழேயே உட்கார்ந்துகொள்கிறோம். அதற்கு காரணம் இருக்கிறது. இவனுக்கு அதுதான் சரியாக இருக்கும்” சங்கடமாய் தங்களைப் பார்ப்பவனின் குழப்பத்தைப் புரிந்துகொண்டவராய் அவர், “நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது. கொஞ்சம் தண்ணீர் மட்டும் தர முடியுமா? நான் உங்களுக்கு என் மகனின் பிரச்சனையைச் சுருக்கமாக சொல்கிறேன்”

தேவையில்லாத வேலைப் பார்த்துவிட்டோமா? இப்போதுதான் ஒரு பெரியத் தலைவலியிலிருந்து தப்பித்தோம் என்று யோசித்துக்கொண்டே அறை விளக்கைப் போட்டேன். என் பையிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவரிடம் நீட்டினேன்.

“வீட்டில் தண்ணீர் இல்லை. இந்த பாட்டில்தான் இருக்கிறது. உங்களுக்கு ஆட்சேபனையில்லை என்றால் இந்தாருங்கள்”

“பரவாயில்லை.” அவர் மூடியைத் திறந்து தன் பையனிடம் கொடுத்தார்.

அவர்கள் முன் ஒரு சேரை இழுத்துப்போட்டு உட்கார்ந்துகொண்டேன்.

சிறுவனின் தந்தை பார்க்க இந்தியரைப் போலத்தான் இருந்தார். அதிலும் குறிப்பாகத் தென்னிந்தியச் சாயல். சிறுவனைப் பற்றி உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

“உங்களுக்கு சிரமம் கொடுக்கவில்லை என்று நினைக்கிறோம்.“

“அதெல்லாம் ஒன்றுமில்லை. நீங்கள் இப்படி கீழே உட்கார்ந்திருப்பதுதான் எனக்கு கவலையாய் இருக்கிறது.” ஒரு பெட்ஷீட்டையேனும் கொண்டு வந்து கொடுக்கலாம் என்று நினைத்தபோதுதான் சாவி கைக்கு வந்த அன்று எல்லாவற்றையும் கொண்டுபோய் குப்பையில்போட்டது நினைவுக்கு வந்தது. வீட்டையே துடைத்து வைத்திருந்தேன். ஒவ்வொரு முறை வரும்போதும் துடைத்துக்கொண்டேயிருந்தேன். இண்டீரியர் டெக்கரேசனிற்கு மட்டும் கிட்டத்தட்ட முப்பதாயிரம் கனடிய டாலர்களைச் செலவழித்திருந்தேன். இப்போது எஞ்சியிருப்பது ஒரு சேரும், சோபாவும் மட்டும்தான்

“தம்பிக்கு என்னப் பிரச்சனை என்று தெரிந்துகொள்ளலாமா?”

சிறுவன் அரைப் பாட்டில் தண்ணீரைக் காலி செய்தான். போதும், போதுமெனச் சொல்லி தன் மகனிடமிருந்து தண்ணீர் பாட்டிலை வாங்கி என்னிடம் கொடுத்தார்.

“ஏன் தடுக்கிறீர்கள். அவனுக்குத் தாகமாக இருந்தால் முழுவதுமாய் குடிக்கட்டும். ஒன்றும் பிரச்சனை இல்லை”

“இல்லை. போதும். மிக்க நன்றி”

மீண்டும் அதே கேள்வியை எப்படி கேட்பதெனத் தெரியாமல் அமைதியாய் அவர்களைப் பார்த்தபடி இருந்தேன்.

“நான் கொஞ்சம் கால்களை நீட்டிக்கொள்ளட்டுமா?

“தாராளமாக”

சிறுவன், அவர் மடியில் தலை சாய்த்துக்கொண்டான்.

“தவறாக நினைக்கவேண்டாம்”

“அதெல்லாம் ஒன்றுமில்லை. சோபாவில் படுக்க வைக்கலாமே?”

“தரையில்தான் அவனுக்கு வசதியாய் இருக்கும்.” அவர் ஒரு நீண்ட பெருமூச்சுவிட்டார்.

“நீங்கள் இந்தியாவா?” அவரின் தாடி சிவப்பு நிறத்தில் இருந்தது. சிவப்பு நிறத் தாடியுடன் இந்தியாவில் அதிகப் பேர்களை நான் பார்த்ததில்லை. அவர் கண்களில் தெரிந்த சோகம்தான் எனக்கு அவர்மேல் நம்பிக்கையைத் தந்திருக்கவேண்டும். எனக்கு பதில் சொல்வதற்கு முன் கடிகாரத்தை மீண்டும் ஒரு முறைப் பார்த்தார்.

“இல்லை. பாக்கிஸ்தான்”

“பாக்கிஸ்தானா? நீங்கள் பார்க்க தென் இந்தியரைப்போல் இருக்கிறீர்கள்”

“நிறைய பேர் அப்படி சொல்வார்கள். நான் ஹதராபாத்திற்கு ஒரு முறை வந்திருக்கிறேன்”

பாக்கிஸ்தானில் எந்த ஊர் எனக் கேட்க நினைத்தேன். “பையனுக்கு பயப்படும்படி ஒன்றுமில்லையே. நாம் வேண்டுமானால் மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லலாமா? அவர் அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்தது என் பயத்தை அதிகரித்தது.

“வேண்டாம்.” மீண்டும் ஒரு பெரு மூச்சிற்குப் பின் சிறுவனின் பிரச்சனையைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

“எனக்கு எப்படி சொல்லிப் புரிய வைப்பதெனத் தெரியவில்லை. இவனுக்கு இருட்ட ஆரம்பித்துவிட்டால் சுய நினைவு போய்விடும்.”

“அப்படியென்றால்?”

“பகல் முழுவதும் அல்லது வெளிச்சம் இருக்கும் வரை இவனும் நம்மைப்போல் சாதாரணமாகத்தான் இருப்பான். இருட்டத் தொடங்கிவிட்டால் இவன் மூளை செயல் புரிவதை நிறுத்திவிடும். ஏறக்குறைய கோமாவில் இருப்பதுபோல் சுற்றி என்ன நடக்கிறதென தெரியாதவனாய் ஒரு மரக்கட்டைப் போல் விழுந்துவிடுவான். பின் மறு நாள்தான் பழைய நிலைக்குத் திரும்புவான்.”

“நிஜமாகவா?”

அவர் முகம் முழுவதும் சோகம் வழிய என்னைப் பார்த்து சிரித்தார்.

“மன்னிக்கவும். நான் அப்படி கேட்டிருக்க கூடாது. எனக்கு நீங்கள் சொன்னது சரியாக புரியவில்லை. அதனால் அப்படி கேட்டுவிட்டேன்.”

அவர் புரிந்ததெனத் தலையசைத்தார்.

“ஒரு விதமான தூக்கம் என்று எடுத்துக்கொள்ளலாமா?”

“இல்லை. இவன் தூங்குவதில்லை. சொல்லப்போனால் இவனுக்கு இரவே இல்லை. பகல் மட்டும்தான்.” மடியில் படுத்திருக்கும் தன் மகனின் தலையைக் கோதியவண்ணம் பேசினார் அவர்.

அவர் சொன்னதை எனக்குள் சொல்லிப்பார்த்துக்கொண்டேன். பகலில் மட்டும் விழித்திருக்கும் ஒரு ஆபூர்வ வியாதி. வியாதிதானா இது?

“அதனால்தான் வீட்டிற்குள் நுழைவதற்கு முன் பதட்டமாய் மணியைப் பார்த்தீர்களா?”

“ஆமாம். இருட்டத் தொடங்குவதற்குள் படுக்க வைத்துவிடுவோம்.”

“இதுவரை இப்படி ஒரு பிரச்சனையைக் கேள்விப்பட்டதேயில்லை” வியாதி என்று சொல்ல வாயெடுத்தவன் கட்டுப்படுத்திக்கொண்டேன்.

“ஹ்ம்ம்… உண்மைதான். உலகத்தில் வேறு யாருக்கும் இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறதா என்று தெரியவில்லை”

“உங்கள் பெயரைக் கேட்கவில்லையே. என் பெயர் தினேஷ்”

“என் பெயர் முகமது அசார். இவன் பெயர் இஸ்தியாக் கான்” மகனின் நெற்றியில் முத்தமிட்டார். அவன் ஒரு சின்ன சிரிப்போடு, வெட்கப்பட்டுத் தலையைத் திருப்பிக்கொண்டான். பிரச்சனைகளைத் தனியாக சமாளிக்க வேண்டிய வயது அவனுக்கு மிக மெதுவாய் வரட்டும் என நினைத்துக்கொண்டேன்.

எனக்கு மேற்கொண்டு அவரிடம் என்ன கேட்பது, என்ன பேசுவதெனத் தெரியவில்லை. இரவையே பார்க்காத ஒரு சிறுவன். எப்போதும் சூரியன் சுட்டெரிக்கும் ஒரு வாழ்க்கை. அவன் உடலுக்கு ஓய்வென்பதே கிடையாது. இல்லை அப்படியும் சொல்லிவிடமுடியாது. அவன் உடல் ஓய்வெடுக்கத்தான் செய்கிறது. அதை அவன் மனம்தான் அறிவதில்லை. ஓய்வையே அறியாத மனம் எப்படி இயங்கும்? எவ்வளவு யோசித்துப்பார்த்தாலும் ஓரளவிற்குமேல் என்னால் செல்லமுடியவில்லை. சிறுவனின் உலகம் கூட அப்படித்தானே. எப்போதும் இடுப்பில் ஒரு கயிறு இருந்துகொண்டே அல்லவா இருக்கிறது. மாலை ஆனதும் பிடித்து இழுத்து கூண்டிற்குள் அடைத்துவிடுகிறது. எவ்வளவு விசித்திரமான வாழ்க்கை!

“இப்போது என்ன வயதாகிறது?”

“பதிமூன்று.”

எப்போதிருந்து இந்தப் பிரச்சனை எனக் கேட்கவில்லை. அதைத் தெரிந்துகொள்வதால் இன்னும் கொஞ்சம் பரிதாபப்படலாம் என்பதைத்தாண்டி வேறென்ன செய்யப்போகிறேன். அவர்களுக்கும் சொல்லி சொல்லி அலுத்துப்போயிருக்கும்.

“டாக்டர்களிடம் காண்பித்தீர்களா?”

“அதற்குத்தான் இங்கு வந்தோம். இந்த நாட்டின் தேசிய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் தலைவர் இவனுக்கு சிகிச்சைக் கொடுக்கிறார்.”

“ஓ… அப்படியென்றால் என்னப் பிரச்சனை என்பதைக் கண்டுபிடித்துவிட்டார்களா?”

“எனக்கு சரியாய் சொல்லத் தெரியவில்லை. மூளையில் இருக்கும் நரம்பில் ஏதோ பிரச்சனை என்றும் மட்டும்தான் புரிந்தது”

அதுவரை நாங்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த இஸ்தியாக் கண்களை மூடிக்கொண்டான். எனக்கு பதட்டமானது. அதைக் கவனித்த அசார், “இல்லை. அவன் இன்னும் சுய நினைவோடுதான் இருக்கிறான்” என்றார். இஸ்தியாக் கண்களைத் திறந்து என்னைப் பார்த்து சிரித்தான்.

“விளையாடாதே” அவன் கன்னத்தைக் கிள்ளினார் அசார். என் இறுக்கம் சற்று தளர்வதை உணர்ந்தேன். அதே சமயம் அவர் முகத்தில் இறுக்கம் கூடியது. செல்போனை எடுத்துப் பார்த்தார். அவர் மனைவியிடமிருந்து அழைப்பு வரவில்லை என்பது தெரிந்தது.

சில நிமிடங்களுக்கு வேறு எதுவும் நாங்கள் பேசிக்கொள்ளவில்லை. அவர் தொடர்ந்து தன் பிள்ளையைத் தட்டிக்கொடுத்துக்கொண்டே இருந்தார்.

அவர் என் தலைக்குப் பின்னால் எதையோ பார்ப்பதைக் கவனித்தேன். பிள்ளையார் படம். இந்த வீட்டில் நடந்த எல்லாவற்றையும் அவர் வெறுமனே வேடிக்கைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார் என்பதால் அப்படியே இருக்கட்டும் என்று அப்படத்தை மட்டும் தூக்கிப் போடாமல் வைத்திருந்தேன்.

“கடவுளின் படைப்பில் உள்ள கணக்கற்ற ஆச்சர்யங்களைப்போல் அவன் சோதனைகளிலும் நம்மால் புரிந்துகொள்ள முடியாத எவ்வளவோ இருக்கின்றன.” ஒரு வறண்ட புன்னகையோடு அதைச் சொன்னார்.

“ஆமாம் இங்கு நடந்தது வேறெங்கும் நடக்காத ஆச்சர்யம்தான்” அவருக்கு கேட்காதவண்ணம் முனகினேன்.

“குணப்படுத்திவிடலாம் என்று சொன்னார்களா?” நான் பேச்சை மாற்ற விரும்பினேன்.

“ஆமாம். அப்படித்தான் சொல்லியிருக்கிறார்கள். கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக பல சோதனைகளைச் செய்தார்கள். முடிவுகளை அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவக் குழுவிற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.”

“இப்போது பையனின் நிலையில் ஏதேனும் முன்னேற்றம் இருக்கிறதா?”

“இருக்கிறது. முன்பைவிட, கொஞ்சம் அதிக நேரம் விழிப்புடன் இருக்கிறான்.”

மணியைப் பார்த்தேன். ஐந்தரை ஆனது. வெளியே இன்னும் இருட்டத் தொடங்கவில்லை.

“வெறுந்தரையில் படுத்திருக்கிறானே. கீழே விரிப்பதற்கு எதவாது கொண்டு வரட்டுமா?”

“அவனுக்கு அதெல்லாம் ஒரு வித்யாசமும் ஏற்படுத்தாது”

“இருந்தாலும்..சரி உங்கள் இஷ்டம்”

“உங்களுக்கு நான் வேறு ஏதேனும் உதவி செய்ய வேண்டுமென்றால் சொல்லுங்கள்.” அவர்கள் தரையில் அமர்ந்திருப்பது என்னைத் தொடர்ந்து தொந்திரவு செய்தது. 

“வேறு எதுவும் வேண்டாம். உங்களின் இந்த உதவிக்கு மிகவும் நன்றி.”

“இதிலென்ன இருக்கிறது.”

மீண்டும் சிறிது நேரம் நாங்கள் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. “ஒரு நிமிடம்” என அவர்களிடம் சொல்லிவிட்டு, எழுந்து, கழிவறைக்குச் சென்று வந்தேன்.

“நீங்களோ, இஸ்தியாக்கோ போகவேண்டுமா?”

“இல்லை. நன்றி”

“கனடாவிற்கு எப்போது வந்தீர்கள்.?”

“நாங்கள் வந்து ஆறுமாதங்கள் ஆகின்றன. சீக்கிரம் ஊருக்குச் செல்ல வேண்டும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. சீக்கிரம் சென்றுவிடுவோம்.” அவர் அதை வாசலைப் பார்த்தபடிச் சொன்னார்.

எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இங்கு வரும் யாரும், குறிப்பாக இந்தியர்களும், பாக்கிஸ்தானியர்களும் திரும்பிப்போகும் எண்ணத்தோடு வருவதில்லை.

“ஏன். இங்கு உங்களுக்குப் பிடிக்கவில்லையா”

“பிடிப்பதற்கும், பிடிக்காமல் போவதற்கும் என்ன இருக்கிறது. நாங்கள் திரும்பிப்போகவே விரும்புகிறோம். எங்கள் ஊரில் எங்களுக்கு வீடு, நிலமெல்லாம் இருக்கின்றன. சொந்த இடத்தை விட்டு, வீட்டை விட்டு வாழ்வதில் என்ன நிம்மதி இருக்கப் போகிறது… என் மகனின் வாழ்க்கையில்தான் இதற்கெல்லாம் ஒரு அர்த்தமும் இதுவரை இல்லை. நான் கிளம்புவதற்குள் அவனுக்கு ஒரு வீட்டை விட்டுவிட்டு செல்ல விரும்புகிறேன்” அவர் முதன் முறையாக கண் கலங்கினார்.

“நம் பாரத்தைச் இறக்கி வைத்து இளைப்பாறுவதற்கு வீடு மிகவும் அவசியம்” என்றார். தலை குணிந்த வண்ணம் பேசிக்கொண்டிருந்தவர், நிமிர்ந்து என்னைப் பார்த்தார். “மன்னிக்கவும். உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன்” என உடனேயே தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டார்.

“ஒன்றும் பிரச்சனையில்லை. எனக்குப் புரிகிறது”

“அங்கேயே மருத்துவர்களைப் பார்க்க முடியவில்லையா?”

“சிலரைப் பார்த்தோம். அதற்குள் ஊரில் செய்தி பரவிவிட்டது. எங்கு போனாலும் என் மகனை வித்யாசமாகப் பார்க்க ஆரம்பித்தார்கள். அவனை சபிக்கப்படவனாய் நினைத்தார்கள். ஒருவகையில் பொறாமை என்று கூட சொல்லலாம். அதனால்தான் அங்கிருந்து கிளம்பி இங்கு வந்தோம்” அவர் முகம் முழுவதும் திரும்பிப் போவதற்கான ஏக்கம் நிரம்பி வழிந்தது. என்னால் அவரைப் புரிந்து கொள்ள முடிந்தது.

“என் வீடுதான் இது. ஆனால் நான் இங்கில்லை. நான் வேலை செய்யும் இடம் தூரமென்பதால் அங்கேயே ஒரு வீடெடுத்து தங்கியிருக்கிறேன்” எனக்கு அவரிடம் மனம் விட்டுப் பேசவேண்டும்போலிருந்தது.

“தெரியும்” அவர் கைகளால் தன் முகத்தைத் துடைத்துக்கொண்டார்.

எனக்கு ஆச்சர்யமாய் இல்லை. அனேகமாக இந்தத் தெருவில் இருக்கும் எல்லோருக்குமே என் பிரச்சனையைப் பற்றி தெரிந்திருக்கும். அப்படி யாரும் தெரியாதென்று சொன்னால்தான் ஆச்சர்யம்.

“இப்போது எல்லா பிரச்சனையும் முடிந்துவிட்டதா?

“முடிந்துவிட்டது. போன வாரம்தான் சாவி என் கைக்கு வந்தது. போதும் போதுமென்றாகிவிட்டது. வீட்டிற்கு பெயிண்ட் அடிக்கவேண்டும். அதற்குத்தான் இன்று பார்க்க வந்தேன். என்னதான் நிறத்தை மாற்றினாலும் சுவரில் இருக்கும் கறைதானே போகும். பட்ட அவமானம். அது ஒரு நாளும் போகாதுதானே.”

அவர் அமைதியாக கேட்டுக்கொண்டார்.

“ஒரு நாள் கூட இந்த வீட்டில் நான் வந்து தங்கவில்லை. கட்டி முடித்த கையோடு தெரிந்தவனாயிற்றே என்று வாடகைக்கு விட்டேன். இப்படி ஒரு வேலையைச் செய்வானென்று கனவில் கூட நினைக்கவில்லை. இனி இந்த வீட்டில் எப்படி ஒருவர் தங்க முடியும். பேசாமல் விற்றுவிடலாம் என்று நினைக்கிறேன். அதற்கும் கூட யார் வரப்போகிறார்கள்…”

“உங்களுக்கும் கட்டாயம் தெரிந்திருக்கும் என்பதால்தான் நீங்கள் கேட்டபோது உங்களை வீட்டிற்குள் அழைக்கத் தயங்கினேன்.”

“இவ்வுலகில் இருக்கும் எல்லோருக்கும் இரவின் நிறம் ஒன்றில்லை. உங்களுக்கும், எனக்கும், இதோ என மகனுக்கும். என் மகனைப் பொறுத்தவரை அவனுக்குத் தேவை தலைக்குமேல் ஒரு கூரை. அதற்கு மேல் இதெற்கெல்லாம் ஒரு அர்த்தமும் இல்லை” அதன் பிறகு அவர் வேறு எதுவும் பேசவில்லை. மகனின் காது மடல்களை நீவி விடத் தொடங்கினார். அவர், எதையேனும் செய்து அவனின் பகலை நீட்டிக்க விரும்பவது போலிருந்தது.

இஸ்தியாக்கிடமிருந்து குறட்டை விடும் சத்தம் கேட்டது. தூங்கிவிட்டிருக்கிறான். நான் அசாரைப் பார்த்தேன். அசார், அவனை லேசாக தட்டி எழுப்பினார்.

“பாவம், ஏன் எழுப்பினீர்கள்”

இன்னும் நேரமிருக்கிறதென ஒரு சின்ன சிரிப்போடு சொன்னார்.

அசாரும் அவர் மகனும் மேலும் ஒரு அரை மணி நேரம் இருந்தார்கள். அவர் மனைவி அசாருக்கு திரும்ப அழைத்தார். அடுத்த பத்து நிமிடங்களில் அவர் வீட்டிற்கு வந்தார். இருவருமாக இஸ்தியாக்கை அழைத்துக்கொண்டு சென்றனர். அவர்கள் செல்வதற்கும் இருட்டத் தொடங்குவதற்கும் சரியாய் இருந்தது.

அவர்கள் சென்ற பின் படுக்கையறைக்குள் சென்று, தரையில் படுத்தேன். அசாரைப் பற்றியும் இஸ்தியாக்கைப் பற்றியுமே நீண்ட நேரம் யோசித்துக்கொண்டிருந்தேன். தலைக்குமேலிருந்த கூரை அருகில் வருவதும், விலகிப் போவதுமாய் இருந்தது. பின் அப்படியே தூங்கிப்போனேன்.

000

ச.வி. சங்கர நாராயணன்

ச.வி.சங்கரநாராயணன் சமகால இதழ்களில் தொடர்ச்சியாக சிறுகதைகள் எழுதிவருகிறார். "விறலி" சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர்.

உரையாடலுக்கு

Your email address will not be published.