ஜான் மெக்வோர்டர்(John McWhorter) மொழியியலாளர், கட்டுரையாளர். ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றவர். நியுயார்க் டைம்ஸ் உள்ளிட்ட பிரபலமான நாழிதழ்களில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவருகிறார். தற்போது அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணி புரிகிறார்.
உரையாடல்களில் நாம் பரவலாக வட்டார வழக்கு என்ற பதத்தை பயன்படுத்துகிறோம். ஆங்கிலத்தில் அதை regional dialects என்பார்கள். அதே போல் தான் சமூக வழக்குகள் (social dialects). ஆனால் வெறும் ‘வழக்கு’ என்னும் சொல்லை பொதுவாக dialect என்ற பொருளில் பயன்படுத்துவதில்லை. எனினும் இந்த கட்டுரையில் dialect-ஐ குறிக்க வழக்கு என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது.
– ஆசிரியர்
மொழிக்கும்(language) வழக்குக்கும்(dialect) இடையில் என்ன வேறுபாடு இருக்கிறது? இவ்விரண்டிற்கும் இடையில் ஏதேனும் வித்தியாசம் இருக்கிறதா? அதாவது வின்வெளியில் உள்ள ஒரு துடிப்பண்டத்துக்கும்(quasar) துடிவிண்மீனுக்கும்(pulsar) இடையே உள்ளது போலவோ, அல்லது பொதுவாக முயலைக் குறிக்கும் சொற்களான ‘rabbit’ மற்றும் ‘hare’ இடையேயுள்ளது போலவோ ஏதேனும் நுட்பமான வேறுபாடு உள்ளதா? இந்த கேள்வியை எதிர்கொள்ளும் மொழியியலாளர்கள் யிட்டிஷ் மொழி அறிஞர் மாக்ஸ் வெய்ன்ரிக்(Max Weinreich)-இன் இந்த வழக்கமான பழைய அவதானிப்பையே முன்வைக்க விரும்புகின்றனர் : “போரிடுவதற்கான இராணுவத்தையும் கடற்படையும் கொண்டிருக்கும் வழக்குதான் மொழி என்றாகிறது.”
இம்மாதிரி சாதுர்யமாக சொல்லப்படும் கூற்றைத் தாண்டி அவற்றிக்கிடையிலான வித்தியாசம் நிச்சயம் ஆழமானதுதான். மொழியும் வழக்கும் தனித்தனி கருத்தாக்கங்களாக இப்போதுவரை இருந்துவருவது உலகெங்கிலும் மொழியியலாளர்கள் பேச்சு வழக்காடல்களை(speech varieties) தெளிவாக பகுக்க கூடியவர்கள் என்பதையே காட்டுகிறது. உண்மையில் அவை இரண்டுக்கும் இடையே புறவயமான வேறுபாடு எதுவும் இல்லை. ஆனால் அம்மாதிரியான ஒரு ஒழுங்கை நடைமுறையில் உண்டாக்க நினைக்கும் எந்த ஒரு முயற்சியும் புறவயமான ஆதாரத்தின் முன் தோல்வியுறும்.
எனினும் அவ்வாறான பகுத்துணர்தலை தவிர்க்க முடிவதில்லை. ஒரு ஆங்கில-மொழி பேசுபவருக்கு மொழியென்பது அடிப்படையில் வழக்குகளின் தொகுப்பு என்று தோன்றலாம். ஆங்கில மொழிக்குள் இருக்கும் வெவ்வேறு வழக்குகளைப் பேசுபவர்கள் எல்லாரும் ஒருவரையொருவர் ஏறக்குறைய புரிந்துகொள்வதால் அவருக்கு இம்மாதிரி தோன்றலாம். காக்னி, தென் ஆப்ரிக்க ஆங்கிலம், கறுப்பின ஆங்கில வழக்கு, நியூ யார்க்கின் வட்டார வழக்கு – இவையனைத்தும் ஆங்கிலம் என்னும் ஒற்றைக் குடையின் கீழுள்ள, ஒன்றுக்கொன்று தேர்ந்த வகைமாதிரிகள். அப்படியென்றால் இவையெல்லாம் ‘மொழி’ என்று கூறத்தக்க ஒன்றின் அடியில் உள்ள வெவ்வேறு ‘வழக்கு’களா? ஒட்டுமொத்தமாக ஆங்கிலமானது தனிச்சையாக நிற்கும் ஒரு ‘மொழி’ போல தெரிகிறது. அதற்கும் வட ஐரோப்பாவில் பேசப்படும் அதன் நெருங்கிய சகோதர மொழியான ஃப்ரீஸியனுக்கும்(Frisian) தெளிவான ஒரு எல்லை உண்டு. இந்த மொழியானது மரபான ஆங்கிலம் பேசும் ஒருவருக்கு புரியக்கூடியது இல்லை.
பரஸ்பரம் புரியும்தன்மையை (intelligibility) கொண்டு மொழி-வழக்கு என்னும் வேறுபாட்டை தெளிவாக பிரித்துணர முடியும் என்று ஆங்கில மொழி நம்மை நினைக்கச் செய்கிறது: அதாவது, எந்த பயிற்சியும் இல்லாமல் நமக்கு விளங்கினால் அது மொழியின் கீழ் வரும் வழக்கு. அப்படிப் புரிந்து கொள்ள முடியாவிடில் அது வேறொரு மொழி. விந்தையான வரலாற்று நிகழ்வுகளால் ஆங்கிலத்திற்கு மிகவும் நெருக்கமான மொழிகள் என்று எதுவும் அமையவில்லை. அதனால் புரியும்தன்மை என்னும் அளவுகோளை ஆங்கிலத்தை தாண்டி வேறு வழக்காடல்களுக்கு பயன்படுத்த இயலாது. உலகளவில் பார்த்தால் ஒரு மொழியின் வெவ்வேறு வழக்குகள் என்று தோன்றக்கூடிய, ஒன்றுக்கொன்று பரஸ்பரம் புரியக்கூடிய வழக்காடல்கள் வெவ்வேறு மொழிகளாகக் கருதப்படுகின்றன. மறுபுறம் ஒன்றுக்கொன்று புரியும்தன்மையற்ற, வெளிநபருக்கு வெவ்வேறு மொழிகள் என்று தோன்றக்கூடிய வழக்காடல்களை ஒரே மொழியின் வேறு வேறு வழக்குகளாகப் பார்க்கும் போக்கும் உள்ளது.
எனக்கு ஸ்வீடன் நாட்டு நண்பர் ஒருவர் இருக்கிறார். அவரை நான் டென்மார்க்கில் நிகழும் மாநாடுகளில் சந்திப்பேன். அந்நாட்டில் நாங்கள் எங்கு வெளியே சென்றாலும் அவருக்கு மொழி ரீதியான எந்தவித சிக்கல்களும் ஏற்பட்டதில்லை. அவருடைய தாய்நாடல்லாத வேறொரு நாட்டில், அதுவும் வேறொரு ‘மொழி’(டேனிஷ்) பேசப்படும் இடத்தில், அவர் இயல்பாக ஸ்வீடிஷ் மொழியில் உணவு ஆர்டர் செய்வதும், விலாசத்திற்கு வழி கேட்பதும் நடக்கும். ஸ்வீடிஷ், டேனிஷ் மற்றும் நார்வீஜியன் மொழிகள் பேசும் மூன்றுபேர் தத்தம் மொழிகளிலேயே ஒருவரோடு ஒருவர் பேசுவதைக் கண்டிருக்கிறேன். ஸ்வீடெனுக்கு இடம்பெயரும் ஒரு டென்மார்க் நாட்டுக்காரர் தனியாக ஸ்வீடிஷ் மொழியைக் கற்றுக் கொள்வதில்லை. வெறுமனே அவரின் இயல்பான பேச்சு நடையில் சிறுசிறு மாற்றங்களை மட்டும் கொண்டு வருவதே போதுமானதாக இருக்கிறது. இந்த ஸ்காண்டிநேவிய வழக்காடல்கள் வெவ்வேறு தேசங்களில் பேசப்படுவதால் அங்குள்ளவர்கள் இவற்றை தனித்த மொழிகள் என்றே கருதுகின்றனர். ஆனால் கூர்ந்து நோக்குகையில் ஸ்வீடிஷ், டேனிஷ் மற்றும் நார்வீஜியன் வழக்காடல்களில் தனித்தனியே ‘மொழி’ என்று வகைப்படுத்தும்படியான எந்த புறவயமான கூறுகளும் இல்லை. ஒன்றின் சாயல் மற்றொன்றில் என்று ஒத்த அளவில் அவை அனைத்தும் ஒரு மொழியில் உள்ள பல்வேறு வழக்குகளைப் போன்று தான் இருக்கின்றன.
இதற்கிடையில் மாண்டரின், காண்டோனீஸ், டாய்வானீஸை ஆகியவற்றை சீன மொழியின் வட்டார வழக்குகளென கேள்விப்படுகிறோம். நிஜத்தில், சைனீஸ் என்னும் ஒற்றை மொழி கற்பனையான தளத்தில் மட்டுமே இருக்கிறது, காரணம் அதன் வெவ்வேறு ‘வழக்காடல்கள்’ ஒரே எழுத்துமுறையை பின்பற்றுவதே. அத்துடன் அவையனைத்திலும் எழுத்துருக்கள் ஏறக்குறைய ஒரேமாதிரி இருப்பதோடு ஒவ்வொரு எழுத்தும் இந்த வழக்காடல்களில் வேறுபடுவதில்லை. எடுத்துக்காட்டுக்காக, ஸ்பானிஷ் மற்றும் இத்தாலியனுக்கு இடையே இருக்கும் வித்தியாசத்தை விட மாண்டரின் மற்றும் காண்டோனீஸுக்கு இடையே உள்ள வேறுபாடு அதிகம். மாண்டரினில் ‘நான்’, ‘நீ’ மற்றும் ‘அவன்’ என்னும் சொற்கள் வோ wǒ, நி nǐ மற்றும் டா tā. ஆனால் காண்டனீஸில் அவை ங்கோஹ் ngóh, லேய்ஹ் léih, மற்றும் கேயுஇஹ் kéuih. இவை வெறும் வழக்குகள் போன்றா தோன்றுகின்றன? ஒரு ஸ்வீடிஷ் பேசுபவருக்கு ஜெர்மன் பேசுவது எவ்வளவு கடினமோ, அதேயளவு மாண்டரின் பேசுபவருக்கு காண்டனீஸ் பேசுவதும் கடினம்.
ஸ்காண்டிநேவியா மற்றும் சீனமொழியை போன்ற பல சூழல்களை உலகெங்கும் காணலாம். செக்கும் போலிஷும் வித்தியாச படுகின்ற அளவு மொரோக்கோவில் பேசப்படும் பேச்சுவழக்கு அரபிக்கும், ஜார்டனில் பேசும் பேச்சுவழக்கு அரபிக்கும் வேறுபாடு இருக்கிறது. ஆகையால் மொரோக்கோவை சேர்ந்தவரும் ஜார்டனை சேர்ந்தவரும் நவீன பொது அரபியில் மட்டுமே உரையாட முடியும். இந்த நவீன அரேபியானது ஏறக்குறைய குரான் எழுதப்பட்ட காலத்தில் உருவானது. அரபு நாடுகளின் கலாச்சார ஒற்றுமைதான் மொரோக்கோ, ஜார்டன் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களை தாங்கள் அரபியின் ‘வழக்குகளை’ பேசுவதாக எண்ணிக்கொள்ள செய்கிறது. ஆனால் செக்கோ போலிஷோ பேசுபவர் தாம் வெவ்வேறு ‘மொழிகள்’ பேசுகிறோம் என்றே உணர்கின்றனர். செக்கை பற்றி பேசுகையில் ஒரு விடயம் ஞாபகத்திற்கு வருகிறது – ‘செக்கோஸ்லோவாக்கியன்’ என்றொரு மொழி இல்லை. ஒரு செக்குக்காரரும் ஸ்லோவாக் பேசுபவரும் இயல்பாக உரையாடலாம். வரலாற்று, கலாச்சார வித்தியாசங்களினால் அவர்கள் வெவ்வேறு ‘மொழிகள்’ பேசுவதாக எண்ணிக் கொள்கின்றனர்.
ஒரு மொழி முடிவுற்று துல்லியமாக எந்த இடத்தில் வேறொரு மொழி தொடங்குகிறது என்று நிர்ணயிப்பது பெரும் பாடான விடயம் என்று இதன் மூலம் தெரிய வருகிறது.
உதாரணத்திற்காக, எத்தியோப்பியாவை எடுத்துக்கொள்வோம். கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஷாரன் ரோஸின் தரவுப்படி சோதோ(Soddo) மொழி பேசுபவர் “அவன் ஒரு கூரையை நெய்தான்” என்னும் வாக்கியத்தை “குத்துனும்” kəddənəm (இதில் வரும் தலைகீழான e போன்ற எழுத்து ‘உ’ என்னும் ஒலியை குறிக்கும்) என்று கூறுகின்றனர். இவர்களுக்கு சற்று தொலைவில் முஹேர்(Muher) மொழியினத்தவர் இதே சொல்லை க்-இல் தொடங்காமல் க்ஹ்-இல் துவங்குகின்றனர் : khəddənəm. இன்னும் தொலைவில் எஸா(Ezha) மொழி பேசுபவர் இதை “குத்துரும்” என்று ன்-க்கு பதிலாக ர்-ஐ பயன்படுத்தி உச்சரிக்கின்றனர். க்யேட்டோவில்(Gyeto) இந்த சொல் “க்ஹுதுரு” khətərə. என்டேஜெனில்(Endegen) க்ஹ்-க்கு பதிலாக வெறும் ஹ்-ஐ ஒலிக்கின்றனர் – həttərə. நாம் தொடங்கிய இடத்தையும் முடித்த இடத்தையும் கண்டால் இவற்றை வெவ்வேறு மொழிகள் என்றே அழைக்கத்தோன்றும்: சோதோவின் “குத்துனும்” சொல்லுக்கும் என்டேஜெனின் “ஹத்துரு” həttərə சொல்லுக்கும் இடையிலான தூரமென்பது பிரெஞ்சின் டிமான்ஷ் dimanche சொல்லுக்கும் இட்டாலியனின் டொமெனிக்கா domenica (இவை ஞாயிற்று கிழமையை குறிக்கும் சொற்கள்) சொல்லுக்கும் இடைலான அதே தூரத்தை கொண்டிருப்பது. ஆனால் சோதோவுக்கும் என்டேஜெனுக்கும் இடையே பல படிநிலைகள் உள்ளன – முந்தைய வழக்காடலை விட சற்று மாறுபட்ட நிலையில் – இவ்வழக்காடல்களை பேசுவோர் ஒருவரை ஒருவர் புரிய ஏதுவாக. இந்த வழக்காடல்கள் ‘வழக்குகள்’ என்றால், இவை எந்த மொழியின் வழக்குகள்? கவனிக்கவும் – இந்த வழக்காடல் தொடர்ச்சியின் இறுதிமுனைகளில் சோதோ மற்றும் என்டோஜென் என்னும் இருவேறு ‘மொழிகள்’ இருக்கின்றன.
இவை எல்லாம் வழக்குகளே – தொடர்ச்சியின் இறுதிமுனைகளில் இருக்கும் வழக்காடல்களுக்கு இடையே பரஸ்பரம் புரியும்தன்மை இல்லாவிடிலும் கூட. மேற்கு ஐரோப்பாவில் ஊருக்கு ஊர் இம்மாதிரி தான் வழக்காறுகள் மாற்றமடைந்தபடியே வந்திருக்கிறது. சமீபமாகத்தான் கிராமப்புர வழக்காறுகள் தொடர்ச்சியாக மறையத் துவங்கியுள்ளது. இன்றைய தேதியில் மேற்கு ஐரோப்பாவில் போர்ச்சுகீஸ், ஸ்பானிஷ், பிரெஞ்சு மற்றும் இத்தாலியன் போன்ற சில ‘மொழிகள்’ மட்டும் உள்ளன என்று கருதப்படுகிறது. ஆனால் உண்மையில் இருப்பது போர்ச்சுகல் மொழியில் இருந்து இத்தாலிய மொழி வரை மாற்றமடைந்த படியே வரும் எண்ணற்ற கற்பனாவாத வழக்குகள். இங்கிருக்கும் ஒவ்வொரு தேசத்திலும், வரலாற்றின் தற்செயலினால் ஒரு வழக்கு “பொது மொழி” என்று தேர்ந்தெக்கப்பட்டு முத்திரை குத்தப்பட்டது. நிஜத்தில் மேற்கு ஐரோப்பிய மொழி சூழல் எத்தியோப்பியாவை போன்றதே. இதன் கூறுகளை இன்றும் காணலாம் – ஸ்பெயினில் பேசப்படும் காட்டலான் மொழியில் சாவியை க்லாஉ clau என்பர்; வடக்கு ஒக்சிட்டானிலும் க்லாஉ clau தான்; இன்னும் வடக்கே சென்றால் க்லா clâ என்று கூறுவார்; ஸ்விஸ் மலைகளின் ரொமான்ஷில் க்லாவ் clav; வடக்கு இத்தாலியில் பேசப்படும் பியட்மாண்டீஸில் சாஹ்வ் ciav; பொது தர இத்தாலியனில் இது க்யாஹ்வே chiave என்று உச்சரிக்கப்படுகிறது.
தர்க்க ரீதியாக ‘மொழி’, ‘வழக்கு’ என்று பகுத்தறிவது இம்மாதிரியான இடங்களில் எந்த பயனும் அளிக்காது. பேச்சு என்பதே ஓரிடத்தில் இருந்து மற்றோரு இடத்துக்கு செல்லும்போது மாற்றமடைந்தபடி இருப்பது தான். சில கிலோமீட்டர்கள் வரை ஒருவரால் இயல்பாகப் பேசவும் புரிந்துகொள்ளவும் முடிகிறது. இன்னும் தூரம் செல்ல செல்ல பேசச் சிரமமாகிறது. ஒரு எல்லையைத் தாண்டிய பின்னர் பேச்சு முற்றிலும் அன்னியமாகி ஒன்றும் புரியாமல் போகிறது.
‘வழக்கு’, ‘மொழி’ என்று வடிவ ரீதியில் வரையறை செய்வதைத் தடுப்பது அதன் பொதுப் பயன்பாடு மட்டும் தான். அப்படியான பொதுப் பயன்பாடானது மொழி என்பது தரப்படுத்தப்பட்ட, எழுதப்பட்ட, இலக்கியங்கள் கொண்ட ஒன்றென்றும், மறுபுறம் வழக்குகள் என்பவை வெறும் வாய்வழியாக கடத்தப்படுகிற, விதிகளற்ற, இலக்கியமற்ற ஒன்றாகவும் நமக்கு வலியுறுத்துகிறது. இலக்கியத்தை அப்படியான பகுக்கும் கோடாக எடுத்துக் கொண்டால் அதிலும் சில பிரச்சனைகள் தோன்றுகின்றன – ஏனெனில் இலியட் Iliad, ஒடிசி Odyssey போன்ற இலக்கியங்கள் முதலில் வாய்வழியாக பாடப்பட்ட இதிகாசங்கள். இதில் இன்னொரு விடயமும் ஒளிந்திருக்கிறது.
அது என்னவென்றால் ‘வழக்கு’ எனும்போது அதில் ஒருவகையான கீழ்த்தன்மை இருப்பதுபோலான தொனிதான். நீண்ட எண்ணவோட்டத்திற்கும் கருத்துக்கும் பொருத்தமில்லாததால் வழக்கானது இலக்கியங்கள் இல்லாமலும், நுட்பமில்லாமலும் இருக்கிறதா? என் காதில் விழுந்த ஒரு சுவாரஸ்யமான உரையாடலை நினைவு கூறுகிறேன். கோட்டும் கழுத்துப் பட்டையும் அனிந்த நாகரிகமான உயர்குடியைச் சேர்ந்த ஒருவர்(நடிகர் நேத்தன் லேன் இப்பாத்திரத்தில் நடிக்கலாம்) மிடுக்கும் தோரணையுமான இன்னொருவரைப் பார்த்து (நடிகர் சாஷா பேரன் கோஹென் இந்த வேடத்திற்கு பொருத்தமாக இருப்பார்) நீங்கள் என்ன பேசுவீர்கள் என்று கேட்டார். அதற்கு கோஹென் “உஸ்பேக்(Uzbek)” என்று பதிலளித்தார். “அது ஒரு வழக்கா?” என்று நேத்தன் கேலியாகக் கேட்கையில், “அது ஒரு அழகிய மொழி.” என்று கோஹென் கோபத்தை அடக்கிக்கொண்டு பதில் கொடுத்தார்.
பொதுப்புரிதலைப் போல ‘வழக்கு’ என்பது உண்மையில் கீழானது இல்லை. நடைமுறையில், வரிவடிவமற்ற ‘வழக்குகள்’ இலக்கண ரீதியில் சில ‘மொழிகளை’ விட சிக்கலானவை. அமெரிக்காவின் வெளிநாட்டு சேவை நிறுவனம் மொழிகளை, ஆங்கிலம் பேசுவோர்க்கு அவற்றை கற்கும் கடினத்தன்மையை அளவுகோளாகக் கொண்டு வரிசைப்படுத்துகிறது. இதன்படி ஃபின்னிஷ், ஜியார்ஜியன், ஹங்கேரியன், மங்கோலியன், தாய், வியட்நாமீஸ் ஆகியவை கற்க கடினமானவை. அமெரிக்க, ஆப்பிரிக்க, ஆஸ்திரேலிய பழங்குடி மொழிகள் இந்தப் பட்டியலில் எளிதாக இடம் பெற்றுவிடும். இன்னும் சில மொழிகள் இந்த மொத்தப் பட்டையலையும் பார்த்து எள்ளி நகையாடைகூடிய அளவில் கடினமானவை. எடுத்துக்காட்டுக்காக, காகசஸ் மலைகளில் பேசப்படும் ஆர்ச்சி(Archi) என்ற மொழியில் ஒரு வினைச்சொல் 1,502,839 வெவ்வேறு வடிவங்களில் வரலாம். இந்த எண்ணிக்கை அந்த மொழியை பேசும் மக்கள் எண்ணிக்கையை விட பல்லாயிரம் மடங்கு அதிகம்.
மறுபக்கம் ஆங்கிலத்தில் ஒரு வினைச்சொல்லின் வடிவங்கள் விரல்விட்டு என்ணக்கூடிய அளவில் தான் இருக்கிறது. இலக்கண நுட்பம்தான் வழக்கையும் மொழியையும் நிர்ணயிக்குமென்றால், மொழி என்னும் அந்தஸ்திற்கு ஆர்ச்சி வழக்காடல் ஆங்கிலத்தை விட பலமடங்கு தகுதியானதாய் இருக்கும்.
அப்படியென்றால் உண்மையில், மொழி என்பது இராணுவமும் கடற்படையும் கொண்ட ஒரு வழக்கு தான். இன்னும் சொல்வதென்றால் ஒரு துணிக்கடையின் முகப்பிலுள்ள ஜன்னலில் காட்சிக்கு வைக்கப்படும் ஆடையைப் போன்றதுதான் மொழி. ஆங்காங்கே மக்கள் ஒன்றுகூடி பலர் பேச ஏதுவான ஒரு ‘தரம்’ கொண்ட வழக்கினை மொழியாகத் தேர்வு செய்திருக்கலாம். இதனால் அது மற்ற வழக்குகளை விட எந்த விதத்திலும் சிறந்ததாகி விடாது. பள்ளிக்கு உயர்தர கத்தோலிக்க சீருடையில் வருவது சாதாரண ஆடையில் வருவதைவிட எந்த வகையிலும் மேலானது அல்ல.
அதுபோல வரிவடிவம் கொண்ட ஒரு வழக்கின் சொற்கள் அகராதிகளில் தொகுக்கப்படலாம். ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதியிலுள்ள சொற்கள் ஆர்ச்சி, என்டோஜென் ஆகிய மொழிகளில் உள்ள வார்த்தைகளை விட அதிகம் தான். அச்சு தொழில்நுட்ப உதவியால் ஆங்கிலத்தில் இப்படி சொற்களை சேர்த்து ஆவணப்படுத்த முடிகிறது. எனினும் வார்த்தைகள் உரையாடலின் ஒரு பகுதிதான். அத்தகைய சொற்களைக் கொண்டு உரையாடுவதற்கு ஆர்ச்சி போன்ற மொழியில் ஒரு தனித்திறன் தேவைப்படுகிறது.
அப்படியென்றால் ஒரு மொழிக்கும் வழக்குக்குமான வித்தியாசம் என்பது உன்மையில் என்ன? பொதுப் பயன்பாட்டில், மொழி பேசப்படுவதோடு மட்டுமல்லாமல் எழுத்து வடிவிலும் இருப்பது; வழக்கானது வெறும் பேச்சு தளத்தில் மட்டும் இருப்பது. விஞ்ஞான ரீதியாக பார்க்கையில், உலகம் முழுவதிலும் வழக்குகள் ஒரு தொடர்ச்சியாக, ஒன்றோடு ஒன்று இயைந்தும் கலந்தும் ஒரு நிறமாலையை போல மிளிரியபடி மனித பேச்சாற்றலின் மகத்துவத்தை பறைசாற்றுகிறது. யாரேனும் மொழி, வழக்கு ஆகியவைக்கு புறநிலை வேறுபாடு ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டால், அதற்கு ஒரே பதில் – ‘மொழி’ என்று ஒன்றில்லை, இருப்பவை யாவும் வழக்குகளே. “அது ஒரு வழக்கா?” என்று நேத்தன் கேட்கிறார். சமூகத்தில் சரியானப் புரிதல் இருக்கும்பட்சத்தில் கோஹென் “ஆம், அது ஒரு அழகிய வழக்கு.” என்று இயல்பாக பதிலளித்திருக்க இயலும்; அதுபோல நேத்தனும் தான் பேசுவதும் ‘வழக்கு’ தான் என்று உணர்ந்திருப்பார்.
ராம்பிரசாந்த்
ராம்பிரசாந்த். மொழியியலில் முனைவர் பட்டம் படித்துக் கொண்டிருக்கிறார். மதுரை அருகேயுள்ள பேரையூரில் வசித்து வருகிறார். இசை, இலக்கியம் இரண்டிலும் ஆர்வமுண்டு.