/

டொனால்ட் ட்ரம்ப் சுடப்பட்ட கதை : ச.வி. சங்கர நாராயணன்

டொனால்ட் ட்ரம்ப் சுடப்பட்டார் என்ற செய்தியை யூடியூப்பில் பார்த்தபோது கழிவறையில் இருந்தேன். செல்பேசியை கழிவறைக்கு எடுத்துக்கொண்டுப் போகாதே என அதிதி கத்திக்கொண்டே இருப்பாள். வந்த உடன் சொல்ல வேண்டும். இப்போது மட்டும் கையில் செல் இல்லையென்றால் இவ்வளவு பெரிய செய்தியை அது நிகழும்போது தவறவிட்டிருப்பேன். வேகவேகமாக வெளியே வந்தேன்.

எதாவது செய்தாகவேண்டும் என்று பரபரப்பாக இருந்தது. மணி பார்த்தேன். அதிதி வருவதற்கு அரை மணி நேரத்திற்கும்மேல் இருந்தது. இந்தியாவில் இருக்கும் நண்பர்களுக்கு வாட்ஸப்பில் அந்தச் செய்தியை அனுப்பிவிட்டேன். அவர்களுக்கு அதிகாலை மூன்றரை இருக்கும். யாரும் செய்தியைப் பார்க்கவில்லை. வீட்டிற்கு வெளியே வந்தேன். மேல்வீட்டில் இருப்பவர்கள் யாரும்  வீட்டில் இல்லை என்பது தெரிந்தது. கார்கள் எதுவும் இல்லை. தெருவில் ஒருவரையும் காணவில்லை. உலகையே உலுக்கவல்ல நிகழ்வு ஒன்று நடந்திருக்கிறது. எல்லோரும் பயத்தில் வீட்டிற்குள் இருக்கிறார்கள் போலிருக்கிறது. இருக்காதா பின்னே. அமெரிக்காவில் ஒரு பிரச்சனை என்றால் அது எல்லா நாடுகளுக்கும் பரவுமே. இல்லையென்றால் அவர்களே பர்ப்புவார்களே. அப்படி நினைத்துக்கொண்டிருக்கும்போதே தூரத்தில் ஒருவர் நாயுடன் நடந்துவந்துகொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் மேலும் ஒருவர் தெரிந்தார். அவர்களுக்கு விசயம் தெரியாதாயிருக்கும். இவ்வளவு பெரிய செய்தியை எப்படி தவறவிட்டிருக்கிறார்கள் என்று ஆச்சர்யமாக இருந்தது. வீட்டுக்குள்ளிருந்து செல்பேசி ஒலிக்கும் சத்தம் கேட்டது. பதட்டத்தில் அதை எடுத்துக்கொள்ளாமல் வெளியே வந்திருக்கிறேன்.

அதிதிதான் அழைத்திருக்கிறாள். எடுக்காததால் இன்னும் பத்து நிமிடங்களில் வந்துவிடுவேன் என வாட்ஸப்பில் செய்தி அனுப்பியிருக்கிறாள்.

பால் பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்தேன். இரண்டு டீ பைகளை எடுத்துப்போட்டு சக்கரையைக் கொட்டினேன். டீ பைகள் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். சக்கரை வேறு எங்கிருக்கிறது என அதிதியிடம் கேட்கவேண்டும். மொத்தமாகவே மளிகைச் சாமான்கள் வாங்கி வைத்துக்கொண்டால் தேவலை.

தேய்க்க வேண்டியப் பாத்திரங்கள் கொஞ்சம்தான் இருந்தன. பால் கொதிப்பதற்குள் அதைத் தேய்த்துவைக்கலாம் என்று நினைக்கும்போதே பொங்கிவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணமும் எழவே சரி பிறகு பார்த்துக்கொள்ளலாம் என விட்டுவிட்டேன். பால் பொங்கினால் நல்ல சகுனமா? கெட்ட சகுனமா? இந்த நேரத்தில் அப்பா உடன் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

வெகு சமீபமாகத்தான் அப்பாவை அடிக்கடி நினைத்துக்கொள்கிறேன். ஒரு நாளைக்கு ஒரு முறையேனும் அவர் நினைவு எழாமல் இல்லை. அப்பாவிடம் எல்லாவற்றிர்க்கும் ஒரு பதில் இருக்கும். எதைப் பற்றிக் கேட்டாலும் அதைப் பற்றி குறைந்தது ஒரு நிமிடமேனும் பேசுவார். காலையில் எழுந்தவுடன் காலண்டரைப் பார்ப்பாரோ என்னவோ, நல்ல நேரம், கெட்ட நேரம், ராகுகாலம் எமகண்டமெல்லாம் எப்போது கேட்டாலும் உடனே சொல்வார்.

இப்போதுதான் என் நேரத்தைப் பற்றி அவர் சொன்னது நினைவுக்கு வருகிறது. உனக்கு ஏழரை சனி உச்சத்தில் இருக்கிறது. பக்கத்தில் இருக்கும் கோவிலுக்குப்போய் சனி பகவானுக்கு விளக்கு போட்டு வா என அவர் சொல்லி ஒரு மாதம் ஆகிறது. ஒருவேளை போயிருந்தால் நல்லது நடக்காவிட்டாலும் இவ்வளவு கெட்டது நடக்காமல் இருக்குமோ என்னவோ…

ட்ரம்ப் என்ன ராசி எனத் தெரியவில்லை…

அப்பாவைக் கேட்டால் அதற்கும் பதில் சொல்லியிருப்பார். எங்கள் குடும்பத்தில் அவருக்கு “நியூஸ் பைத்தியம்” என்று பெயர் வைத்திருந்தோம். ஒரு நாளைக்கு குறைந்தது பத்து மணி நேரமேனும் செய்திகள் கேட்பார். காலையில் சிறிது நேரம் அம்மாவிற்கு கொடுத்தபின் தொலைக்காட்சி முன் உட்கார்ந்தாரென்றால் நாங்கள் வீடு திரும்பும் வரை இருக்கும் எல்லா செய்தி தொலைக்காட்சிகளையும் மாற்றி மாற்றிப் போட்டுக் கேட்டுக்கொண்டிருப்பார். செல் வந்தவுடன் யூடியூப்பில் கேட்கும் பழக்கம் சேர்ந்துகொண்டது. “அப்படி என்னதான் கேட்கிறாய்? ஒரே செய்தியைத்தான் எல்லோரும் சொல்கிறார்கள். அல்லது அவரவர் கட்சி சார்புகளைப் பொறுத்து மாற்றி மாற்றிச் சொல்கிறார்கள். அதையே எவ்வளவு நேரம்தான் கேட்பாய்?” என கேலி செய்தால் சிரிப்பாரேயொழிய வேறு எதுவும் பேசமாட்டார்.

அப்பாவின் இந்தச் செய்தி கேட்கும் ஆர்வம் அவருக்கு எப்போதிருந்து ஆரம்பித்தது எனத் தெரியவில்லை. எனக்கு நினைவிலிருப்பது அவர் வேலை இல்லாமல் இருந்த ஐந்தாறு வருடங்கள். அப்போதுதான் மிகத் தீவிரமாக நாட்டு நடப்புகளைப் பற்றி படிப்பதும் பேசுவதுமாய் இருந்தார். வீட்டில் தினத்தந்தி, தினமலர் என மாற்றி மாற்றி வாங்கிக்கொண்டிருந்தோம். பிறகு தினகரன் ஒரு ரூபாய்க்கு வந்தபோது அதற்கு மாறினோம். அதுவுமே வாங்க முடியாமல்போனபோது பக்கத்து வீட்டில் வாங்கிப் படித்தார்.

தேர்தல் வரும்போதெல்லாம் அப்பா உற்சாகமானது எனக்கு இப்போதும் நினைவிருக்கிறது. இருநூற்றி முப்பத்தி நான்கு தொகுதிகளிலும் எந்தெந்த கட்சியின் சார்பாக யார் யார் போட்டியிடுகிறார்கள் என மனப்பாடமாய் ஒப்பிப்பார். உள்ளாட்சி தேர்தல் பற்றி கூட தெரிந்து வைத்திருப்பார். கவுன்சிலர் யார் தெரியுமா? மேயர் யார் தெரியுமா? என அம்மாவிடம் கேட்டுக்கொண்டிருப்பார். 

“யாரா இருந்தா நமக்கென்ன… நாளைக்கு சாப்பாட்டுக்கு என்ன பண்றதுன்னு பாருங்க” அம்மா அப்படிச் சொல்லும்போது மட்டும் அவர் முகம் வாடுமேயொழிய அடுத்த நாள் காலை தலைப்புச் செய்திகளுடன்தான் அவருக்கு விடியும்.

முன்னரே சொன்னதுபோல் அவரைப் பல நாட்கள் கேலி செய்திருக்கிறோம். அதை விடப் பல நாட்கள் அம்மா அவர் மீதுக் கோபப்பட்டிருக்கிறாள். எல்லாவற்றையும் விளையாட்டாக எடுத்துக்கொள்வாரே தவிர கோபமே பட்டதில்லை, ஒரே ஒரு முறைத் தவிர.

டீக்கடையில் நடந்த சம்பவம். டீ சொல்லிவிட்டு காத்திருந்தோம். மேஜையில் கிடந்த தினசரி ஒன்றை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார். செய்தியை வாசிக்கும் ஆர்வத்திலோ அல்லது அதில் வந்த ஏதோ செய்தியைப் படித்துவிட்டோ தலையில் கைவைத்து உட்கார்ந்துவிட்டார்.

“காலைலயே தலைல கைய வச்சுட்டு உக்காராதீங்க. பொழுது விளங்காது” கடை உரிமையாளர் சற்று கோபமாய் சொல்லவும் எனக்கு மிகவும் அவமானமாய்ப் போய்விட்டது.

“அப்படி என்னப்பா நியூஸ் வேண்டிக்கிடக்கு” வீட்டிற்கு திரும்பும்போது தாங்க மாட்டாமல் கேட்டேன்.

“யார்ட்ட பேசுறன்னு தெரியுதா? உன் லிமிட்ட தாண்டாத” அப்போது கூட அவர் கத்தவில்லை. ஆனால் அவர் முகத்தில் தெரிந்த கோபத்தைப் பார்த்து நடுங்கிப்போனேன். ஒரு வாரத்திற்கு அவரை நேருக்கு நேர் பார்த்து பேசவே பயமாய் இருந்தது.

டீ பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி வைப்பதற்கும் அதிதி வீட்டிற்குள் நுழைவதற்கும் சரியாய் இருந்தது.

“அதி, நீ எப்ப வருவன்னுதான் வெயிட் பண்ணிட்ருந்தேன். இந்தா டீய முதல்ல குடி”

“இரு ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வர்றேன்.” அவளிடமிருந்து பையை வாங்கி வைத்தேன். இல்லையென்றால் அப்படியே கொண்டுபோய் மெத்தையில் போடுவாள். அதற்கு ஒரு சண்டை வரும். சரி நாமே செய்துவிடுவோம் என்று அவள் வேலை முடித்து வந்த உடன் பையை வாங்கி வைத்துவிட்டு துணையைத் துவைக்கப் போட்டுவிடுகிறேன்.

“மெஷின் போடுறியா? துணி சேர்ந்திருச்சு” குளியலரைக்குள்ளிருந்து முகத்தை கழுவிக்கொண்டே கேட்டாள்.

“ஏழு மணிக்கு அப்றம் போட சொல்லிருக்கியே.”

“ஆமா, இனிமே ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா ஃபாலோ பண்ணனும். கரெண்ட் பில் கொஞ்சமாவது அப்பதான் குறையும்”

அவள் டீயை குடிக்க ஆரம்பித்த பின்பும் என்ன சொல்ல வந்தேன் எனக் கேட்கவில்லை. நானே ஆரம்பித்தேன்.

“ட்ரம்ப்ப சுட்டுட்டாங்க”

யார் என்பதுபோல் என்னைப் பார்த்தாள்.

“டொனால்ட் ட்ரம்ப். அமெரிக்காவோட முன்னாள் அதிபர். வர்ற தேர்தல்ல கூட போட்டியிடுறார். பென்ஸில்வேனியால ஒரு இடத்துல தேர்தல் பிரச்சாரத்துல இருந்தப்ப இது நடந்திருக்கு.”

“பிஸ்கெட் ஒன்னு எடேன் ப்ளீஸ்”

“ஹே, நான் என்ன சொல்றேன்னு காதுல வாங்குனியா?”

“ரொம்ப பசிக்குது. எடுத்துக்கொடுத்துட்டு சொல்லேன். மதியானம் எடுத்துட்டுப்போன சாப்பாடு கெட்டுப்போயிருச்சு. செமயா பசிக்குது”

எடுத்துக்கொடுத்தேன். நல்லவேளையாக இன்னும் ஒரு பாக்கெட் இருந்தது. நாளை அவள் வேலை முடிந்து வருவதற்குள் இரண்டு பாக்கெட்டுகளேனும் வாங்கி வைக்க வேண்டும்.

“கேக்குறியா, இல்லையா நான் சொல்றத?”

“சொல்லு”

“என்ன அசால்ட்டா சொல்லுன்ற? உங்க ஆஃபிஸ்ல நீங்க யாரும் இதப் பத்தி பேசிக்கலையா?”

அவள் டீயில் பிஸ்கெட்டைத் தொட்டு தொட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். நான் சொல்வதைக் கேட்பதுபோலவும் இருந்தது, கேட்காதது போலவும் இருந்தது.

“பைடன் மாதிரி இல்ல ட்ரம்ப். ரொம்ப தடாலடியான ஆள். அடுத்து அவர்தான் வருவார்னு உலகமே எதிர்பாத்திட்டு இருக்கும்போது இப்படி நடந்திருக்கு”

அதிதி அதற்கும் ஒன்றும் சொல்லவில்லை. பிஸ்கெட் தீர்ந்ததும் டீயைக் குடித்துவிட்டு டம்ப்ளரைக் கழுவிவைத்தாள்.

“ரெண்டு நாளா இதே நைட்டிய போட்டுட்டு இருக்கேன்னு நினைக்கிறேன். நாறுது…” எனக்கு கோபம் எட்டிப் பார்த்தது. போன மாதமாயிருந்திருந்தால் இதற்கே ஒரு ஆட்டம் ஆடியிருப்பேன்.

அவள் படுக்கையறைக்குள் நுழைந்தாள்.

“நான் சொல்றத கேக்குறியா கொஞ்சம். எவ்ளோ முக்கியமான நியூஸ் சொல்லிட்டு இருக்கேன்.”

“சொல்லு. கேட்டுட்டுதான் இருக்கேன்.”

“என்னத்த கேட்ட? நான் என்ன சொன்னேன்னு சொல்லு பாப்போம்”

“ட்ரம்ப சுட்டுட்டாங்க. அதான? அமெரிக்காவுல ட்ரம்ப்ப சுட்டுட்டாங்கன்னா கனடாவுல என்ன பிரச்சன?” 

“என்ன அதானன்னு அவ்ளோ ஈஸியா கேக்குற? அவர் செத்துருந்தா அமெரிக்காவுல சிவில் வாரே வந்திருக்கும்னு பேசிக்குறாங்க. அங்க ஒரு பிரச்சனைனா வேர்ல்ட் எக்கானமியே ஆடிப்போயிருக்கும்”

“ஓ… அப்போ சாகலையா?அதுக்குள்ள நீ ஏன் ஓவரா ரியாக்ட் பண்ணிட்ருக்க?”

எனக்கு முகத்தில் ஓங்கி அறைந்தது போலிருந்தது. என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அமைதியாகிவிட்டேன். எவ்வளவு யோசித்தும் அதற்கு ஒரு பதிலை என்னால் சொல்ல முடியவில்லை.

அதிதி வேறெதுவும் பேசவில்லை. வேலை அதிகம், சோர்வாய் இருக்கிறது என்று மட்டும் சொல்லிவிட்டு படுத்துவிட்டாள். நான் அவளருகில் தலையைக் குணிந்தவண்ணம் உட்கார்ந்திருந்தேன். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம். அப்படியே உட்கார்ந்திருந்தேன். தலைக்குள் என்னென்னவோ ஓடிக்கொண்டிருந்தன.

இரவு மணி ஒன்பதரை இருக்கும். அப்பாவிடமிருந்து அழைப்பு வந்தது. அழைப்பு முடியும் வரை திரையையே பார்த்துக்கொண்டிருந்தேன். பின் திரும்ப அழைத்தேன்.

“ஹலோ”

அவர் எடுத்த உடன் “ட்ரம்ப சுட்டுட்டாங்களாம்பா.. நியூஸ் பாத்தியா? அங்க ஒன்னும் கலவரம் இல்லையே” எனக் கேட்டார்.

“ஒன்னுமில்லப்பா” எனக்கு காரணமின்றி தொண்டையை அடைத்தது.

“பாத்து இருங்க. வெளிய போறது வர்றதுலாம் கொஞ்ச நாளைக்கு வேணாம்”

“ம்ம்ம்…”

“எங்கயோ போறேன்னு சொன்னீங்களே… எங்க? அமெரிக்காதான?”

“இல்லப்பா… ஈரோப்… ஃப்ரான்ஸ். அதுவும் அடுத்த வருசம்தான்”

“அங்கயும் எலக்சன் நடக்குது. ஆட்சி மாறப்போகுது போலருக்கு. டூரிஸ்ட்லாம் வராதீங்கன்னு மக்கள் போராட்டம் பண்றாங்களாம்”

“அது ஸ்பெயின்ல..”

“ஆமா ஆமா… கரெக்ட். எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க. இங்கிலாந்துல கூட அகதிகளலாம் வெளிய அனுப்ப போறாங்களாம். போலாந்தோ எங்கயோ கூட அதே மாதிரிதான் பேசிக்கிறாங்க. எல்லாரையும் இல்ல. இருந்தாலும் நாம ஜாக்கிரதையா இருக்கணும்ல. மொத்த ஈரோப்புமே கொதிச்சிட்டுருக்கு…அங்க போனா நாம எல்லாருமே அவங்களுக்கு ஒன்னுதான். சொல்லப்போனா உலகம் முழுக்கவே இம்மிகிரண்ட்ஸ்க்கு எதிரான ஒரு மனநிலை இருக்கிற மாதிரிதான் தெரியுது”

“நானும் நியூஸ்ல பாக்குறேன் பா”

“கண்டிப்பா பாரு… அப்பதான் நாம கரெக்ட்டா ப்ளான் பண்ணிக்க முடியும்” எனக்கு அவர் சொல்வது முதன் முறையாகப் புரிந்தது.

அவர் மேலும்  பத்து நிமிடங்கள் பேசினார். ஜெர்மன் பற்றி, உக்ரைக்-ரஷ்யப் போரைப் பற்றி, சீனா பற்றி, பிறகு இந்திய அரசியல் பற்றி….

நான் எல்லாவற்றிர்க்கும் ம்ம் என்றோ பார்த்தேன் என்றோ பதில் சொன்னேன்.

“அம்மா எங்கப்பா?”

“தூங்கிட்ருக்கா. எழுந்த உடன பேசச் சொல்றேன்”

“சரிப்பா”

எப்போது கேட்பார் என எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்த கேள்வியை ஒரு சில நொடிகள் அமைதிக்குப் பின் கேட்டார்.

“வேலை எதுவும் கிடைச்சதாப்பா?”

“இல்லப்பா… தேடிட்டுதான் இருக்கேன்” வார்த்தைகள் தடுமாறுவதை சிரமப்பட்டு கட்டுப்படுத்திக்கொண்டேன்.

“ஒரு மாசம் ஆயிருச்சுல்ல?”

“ம்ம்ம்”

மீண்டும் ஒரு சில நொடிகளுக்கு என்ன பேசுவதென்று தெரியாமல் இருவரும் அமைதியாய் இருந்தோம்.

“கவலப்படாத… சீக்கிரம் கிடச்சிரும்” பிறகு பேசுகிறேனென சொல்லிவிட்டுச் சென்றார்.

எனக்கு முதுகைக் காட்டியபடி அதிதி புரண்டு படுத்தாள்.

0

ச.வி. சங்கர நாராயணன்

ச.வி.சங்கரநாராயணன் சமகால இதழ்களில் தொடர்ச்சியாக சிறுகதைகள் எழுதிவருகிறார். "விறலி" சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர்.

உரையாடலுக்கு

Your email address will not be published.