மதுரம் : சுசித்ரா

“தேனுன்னா?” ராதிகாவின் கண்கள் விரிந்தன.

“தேனுன்னா தேன், இனிப்பா” என்றார் பெரியம்மா.

மலர்களில் ஊரும் தேனை மட்டுமே உண்டு பட்டாம்பூச்சிகள் உயிர்வாழ்கின்றன என்ற தகவல் ராதிகாவுக்கு அன்று தான் தெரியவந்திருந்தது. நான்கு வயதான அவளுக்கு பட்டாம்பூச்சிகளை தெரியும். மலர்களையும் தெரியும். ஆனால் அவற்றுக்கிடையே தேன் என்ற கண்ணுக்குத்தெரியாத பொருள் ஊடாடியது அப்போது தான் தெரிந்தது. அன்று பெரியம்மாவின் நந்தவனத்தில் மலர்களையும் பட்டாம்பூச்சிகளையும் பார்த்தபோது அவற்றுக்கிடையே தங்க ரிப்பன் இழைகள் போல தேன் பறந்ததாக அவளுக்குத் தோன்றியது. அந்த நினைப்பு அவளை நிலைகொள்ளாமல் செய்தது. உலகமே தங்க இழைகளால் ஆனதாகத் தோன்றியது. எல்லாவற்றின் மீதும் டிசம்பர் மாதத்தின் இளம் மஞ்சள் வெயில் இதமான வெதுவெதுப்போடு படிந்திருந்தது. அவ்வெளிச்சத்தில் பூக்களும் சிறு பூச்சிகளும் ரத்தினக்கல் போல மெருகோடு ஒளிகொண்டிருந்தன.

அன்று முழுவதும் ராதிகாவுக்கு உள்ளுக்குள்ளே தேன் தேன் என்றது. அவள் பெரியம்மாவின் பூஜையறைக்குள் எட்டிப்பார்த்தாள். அங்கே எப்போதும் போல காமாட்சி விளக்கு முன்னால் நைவேத்தியத்துக்கு தயாராக பூவன்பழமும் தாழம்பூவும் வைக்கப்பட்டிருந்தது. பக்கத்திலேயே சின்ன பித்தளைச்சிமிழில் பொட்டுத் தோடு போல தேன். அந்த குளுமையான அறையில் அது சிவந்த பொன்நிறத்தில் உருண்டு மின்னியது. பெரியம்மா அருகில் இல்லையே என்று உறுதிசெய்துவிட்டு சுண்டுவிரல் நுணியால் அதன் ஒரே ஒரு துளியை தொட்டு நாவில் வைத்தாள். தித்திப்பில் கண்களை மூடி உப்பு ஊறுவது வரை நாவையும் உதட்டையும் சுவைத்தாள். கண்களை திறந்தபொது எதிரே அம்பாள் அவளையே பார்த்துக்கொண்டிருந்தாள். பயத்தில் சுட்டுவிரலை திருப்பி “இவ்ளூண்டுதான்” என்பதுபோல் அவளிடம் காட்டிவிட்டு ராதிகா திரும்பி வேகமாக வெளியில் மஞ்சள் வெளிச்சத்துக்குள் ஓடினாள். அவள் விரல் நுனியில் இன்னும் தேனின் பிசுபிசுப்பு எஞ்சியிருந்தது.

சட்டென்று அவளுக்கு அந்த தோட்டத்துடன் மிக அணுக்கமானது போல் இருந்தது. மலரில் தயங்கித் தொற்றி நீலவண்ண இறகுகளை ஒருமுறை கைவிரிப்பதுபோல் திறந்து மூடிய பட்டாம்பூச்சியை பார்த்தபோது அதைச்சென்று உடனே தொடவேண்டும் என்று இருந்தது. பயப்படாதே, நான்தான், என்று அணுகி சொல்லவேண்டும் என்று தோன்றியது. ஆனால் அது பயந்துவிடும் என்ற உள்ளுணர்வோடு அவள் மிகுந்த ஜாக்கிரதையுடன் கண்ணுக்கு புலனாகாத, உடலால் உணரமட்டுமே முடிந்த அந்த எல்லையை கடக்காமல் நின்றாள். பட்டாம்பூச்சியின் கால்கள் கண்ணுக்குத்தெரியாத தாளத்திற்கு நிற்கமுடியாமல் ஆடிக்கொண்டிருந்தன. அதன் மிருதுவான உணர்கொம்புகள் வளைந்து எழுந்து “எனக்குத்தா! எனக்குத்தா!” என்று குழந்தை போல ஆவேசத்துடன் எதையோ கேட்டன. அதன் உறிஞ்சும் குழல் மெல்ல சுருளவிழ்ந்து மலருக்குள் நுழைந்தது. மகரந்தத்தை கண்டுகொண்டு அதை கண நேரம் தொட்டு மீண்ட நொடியில் அவள் பார்வையை உணர்ந்தது போல் சிறகடித்து எழுந்தது. அது பறந்துசென்ற திசையை நோக்கி ராதிகா மெல்லிய பிசுபிசுப்புடன் பொற்படலம் படர்ந்த தன் விரலைத் தூக்கிக் காட்டினாள்.

அம்மா அவளை கூட்டிப்போக வந்தபோது அவள் மனது முழுவதும் தேனின் நினைப்பால் நிறம்பியிருந்தது. அந்த பரவசத்தை யாரிடமும் அவளால் சொல்ல முடியவில்லை. ரிக்ஷாவில் போகும்போது மாலையின் எதிர்வெளிச்சத்தில் அம்மாவின் முகம் எப்போதையும் விட அழகாக, பொன் பூத்ததுபோல் மேலும் பொலிவாக இருந்ததாக அவளுக்குத் தோன்றியது. அம்மா எப்போதும் அம்மா செய்வதைப்போல அவளை “ராதுக்குட்டி!” என்று நெருக்கி அவள் சிறு விரல்களில் முத்தமிட்டுக் கொஞ்சினாள். ஆனால் ராதிகாவுக்கு அம்மா சட்டென்று தூரமாக போய்விட்டதாகத் தோன்றியது. மிக உயரமாக இடத்துக்கு, தொடமுடியாத இடத்துக்கு, சூரியன் மாதிரி, நிலா மாதிரி. அம்மாவுக்குத்தான் எல்லாம் தெரியும், தனக்கு ஒன்றுமே தெரியாது, என்பது போல். அல்லது தனக்குத்தான் எல்லாம் தெரியும், அம்மாவுக்கு ஒன்றுமே தெரியாது என்பதுபோல். அம்மாவின் அணைப்பில் ஒடுங்கிக்கொண்டு அவள் “அம்மா, தேன்னா என்னம்மா?” என்றாள். “தேன்னா தேன் தான்.” அம்மாவும் அதையே சொன்னாள். சற்று நேரம் யோசித்து “Honey,” என்றாள்.

“ஹ – ன் -னி,” ராதிகா உச்சரித்தாள். ஹா…! விஸ்மயத்தோடு எழுந்து உயர பறந்தது. ரீங்கரித்தது. பிறகு நாவில் திரண்டு அமர்ந்தது. ஒரு சொட்டு. ஒரே ஒரு சொட்டு. அது மட்டும். அவள் அம்மாவை திரும்பி ஆச்சரியத்துடன் பார்த்தாள்.

“ஹன்னின்னா?”

“Honey-ன்னா அம்ரிதம்.”

“அமிழ்தம்ன்னா?”

“மருந்து மாதிரி ஒண்ணு. பாற்கடலைக் கடஞ்சு எடுத்த கதையில வருமே?”

“கடல் நிறைய்யவா…?”

வீட்டுக்குப் போனதும் அம்மா ஒரு சிவப்பு நிற மூடி போட்ட பெரிய பிளாஸ்டிக் டப்பாவை எடுத்துக் காட்டினாள். அதில் தேனி படமும் தேனடை படமும் போட்டிருந்தது. அதை பார்க்க கொஞ்சம் பயமாக இருந்தது. அதைத் திருப்பித் திருப்பி அதிலிருந்த சிவந்த திரவம் கனமாக திரண்டு சுழல்வதை மௌனமாக பார்த்தாள். கடற்கரையில் அலைகள் மெதுவாக புரண்டு எழுந்த கடலை அது அவளுக்கு நினைவு படுத்தியது.

ராதிகா வீட்டுக்கும் பால்கனிக்கும் மாறிமாறி உலாவிக்கொண்டிருந்தாள். பகலின் பொன்மஞ்சள் மங்கி மாலையொளி சிவப்பேறி அணைந்துகொண்டிருந்தது. அந்த நிறமடர்ந்த வெளிச்சத்தில் அவள் ஒரு பட்டாம்பூச்சியைப் பார்த்தாள். ராதிகாவின் வீடு அபார்ட்மெண்டின் மூன்றாம் மாடியில் இருந்தது. பெரியம்மாவின் வீட்டைப்போல விஸ்தாரமான பெரிய தோட்டத்துக்கான இடம் இல்லை. ஆனால் பால்கனியில் அம்மா ஆசைக்கு நான்கைந்து பூந்தொட்டிகளில் பவளமல்லி, செம்பருத்தி, நந்தியாவட்டை என்று நட்டு வைத்திருந்தாள். பட்டாம்பூச்சி அங்கே தான் வந்திருந்தது. மஞ்சளும் பச்சையும் கலந்த நிறத்தில் சிறிய உருவம். அது அந்த செடிகளில் நான்கைந்து மலர்களின் மேல் தாவித்தாவி அமர்ந்துகொண்டிருந்தது. ஒரு மலர் மேல் ஊன்றி, அதில் தேன் இல்லை என்ற ஏமாற்றத்துடன் சிறகடித்து இன்னொரு பூவில் சென்று அமர்ந்தது. அவள் பார்த்துக்கொண்டே இருந்தாள். பால்கணியின் அகலமான வெள்ளைக் கம்பிகளை தாண்டித் பறந்து மீண்டும் சுழன்று உள்ளே வந்ததே தவிர, வெளியே எங்கேயும் போகவில்லை. வழியெல்லாம் மூடிவிட்டது போல் அந்த நான்கு பூக்களை மட்டும் அது மாறி மாறி நிறைவில்லாத சுழற்சியில் வட்டமடித்துக்கொண்டிருந்தது.

ராதிகா உள்ளே சென்றாள். அலமாரியில் இருந்த பழைய முறுக்கு பாக்கெட் ஒன்றை எடுத்து அகலத் திறந்து அதில் இருந்த மிச்சத்தை வெளியே கொட்டி குழாயில் காட்டி நன்றாக கழுவினாள். ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு ஏறி ஃப்ரிட்ஜின் மேல் இருந்த சிவப்பு மூடி போட்ட டப்பாவை எடுத்துத் திறந்தாள். மிகுந்த கவனத்துடன் ஒரு துளி கூட வீணாகாமல் பிளாஸ்டிக் பை கொள்ளும் வரை தேனால் நிறைத்தாள். கையில் தேன் பையை ஜாக்கிரதையாக பிடித்தபடி மீண்டும் வெளியே வந்தாள். பாதை வகுக்கப்பட்ட கோள் போல சுற்றிக்கொண்டிருந்த பட்டாம்பூச்சி ஒரு மலர் மீது அமர்ந்ததும் மறு கையால் அதை இலாகவமாக பிடித்தாள். அது இரு முறை துடித்து. பிறகு அவள் தொடுகைக்கு பழக்கப்பட்டதுபோல் அடங்கி அமைதியானது.

“ஷ்ஷ்… என் செல்லக்குட்டில்ல? பசிக்குதா? தேன் கொண்டு வந்திருக்கேன் பார் உனக்கு…” என்று மெல்ல பிளாஸ்டிக் பையில் இருந்த தேனின் மேல் அந்த சிறு உயிரை வைத்தாள்.

பட்டாம்பூச்சியின் சிறகுகள் வண்ணமயமான மலரைப்போல் இருக்கும்போது அதன் உடல் அச்சு அசலான ஒரு பூச்சியின் உடல் என்பதை அவள் அப்போது துல்லியமாகக் கண்டாள். அதன் ஆறு கால்கள் துடுப்புகளைப்போல் தேனுக்குள் அடித்துக்கொண்டன. அதன் மெல்லிய உணர்கொம்புகள் தேனுக்குள் விழுந்து அசைவை இழந்து கனத்துத் தொங்கின. உருண்ட தலை வெடுக் வெடுக்கென்று இருமுறை தூக்கியது. மெரினா கடலில் ஒரு முறை தூரத்தில் பார்த்த ஒரு கட்டுமரப்படகு ராதிகாவுக்கு நினைவு வந்தது. அது தன்னந்தனியாக கடலில் நீந்துவது போல் அப்போது தோன்றியது அவளுக்கு. எவ்வளவு தனியாக! ஆனால் இங்கே நான் இருக்கிறேனே? “குடி,” என்று அதை உந்தினாள். அதனால் சரியாக பருக முடியவில்லை என்று எண்ணி அதன் முன் பகுதியை சற்று முக்கினாள் தேனினுள். சிறகுகள் விரல்களுக்கிடையே படபடபடவென்று அடித்துக்கொண்டன. விரல்களை மீறித் திமிரின. அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவள் அறியாத ஒரு நொடியில் கைவிடுப் பட்டது. பட்டாம்பூச்சி தேனுக்குள் முங்கிச் செல்வதை தடுக்கமுடியாமல் பார்த்தாள். சிறகடித்தது – ஒரு முறை – இரண்டு முறை. பிறகு தேன் எழுந்து அதைச் சுற்றி சிவந்த பொன்னிறமாக அதை மெல்ல விழுங்குவது போல மூடியது. தேனின் கனமான திரவ திரட்சிக்குள் பட்டாம்பூச்சி மூழ்கி மூழ்கிச் செல்வதை ராதிகா கண்ணாடி போன்ற பிளாஸ்டிக் தாள் வழியாக பார்த்துக்கொண்டிருந்தாள். சதை போல தேன் அதை உள்ளிழுத்துக்கொண்டது. அது அமிழ்ந்து சென்று கடலாழத்து அடிமணலில் என நிலைத்தது. அசைவே இல்லை.

வா சாப்பிடு, என்று அம்மா கூப்பிடும் வரை ராதிகா அந்த அசைவின்மையையே பார்த்துக்கொண்டிருந்தாள். அம்மாவின் குரல் அவளை மின்சாரம் போல் உலுக்கியது. புதிதாக பார்ப்பது போல் அந்த அசைவின்மை அவள் புலனின் உறைத்தது. அவள் விறுவிறுவென்று பால்கணி குழாயடியில் சென்று பிளாஸ்டிக் பாக்கெட்டில் இருந்த தேனையெல்லாம் கொட்டினாள். மெல்ல ஒழுகி வடிந்த தேன் வந்துகொண்டே இருந்ததாகத் தோன்றியது அவளுக்கு. அந்த ஒழுகல் நிற்கவே நிற்காது என்பதுபோல். கொழகொழவென்று தண்ணீருடன் கலந்து சல்லடைக்குள் புகுந்து மறைந்தது. கடைசி துளிகளையும் வடித்தப்பின் உள்ளே மென்பச்சை நிறத்தில் பட்டாம்பூச்சி மட்டும் எஞ்சியிருந்தது.

ஆள்காட்டிவிரலையும் கட்டை விரலையும் உள்ளே விட்டு ராதிகா அதை மெல்ல பிடித்து வெளியே எடுத்தாள். அதன் உடல் முழுவதும் தேனின் பிசிபிசுப்போடு இருந்தது. விரல்களுக்கடியில் முன்பு உணர்ந்த துடிப்பேதும் இல்லை. ராதிகா அதை உள்ளங்கையில் வைத்து மெல்ல சுட்டு விரலால் தொட்டு நகர்த்தினாள். அவளால் அதை நகர்த்த முடிந்தது. ஆனால் அது, அசையவேயில்லை. அதன் உணர்கொம்புகள் கீழ்பக்கமாக வளைந்து அசைவில்லாமல் கிடந்தன.

அவள் திடீரென்று அது தன் கையில் இருந்ததை பயந்தாள். அருவருப்பான ஏதோ வஸ்துவதை கைத்தவறுதலாக தொட்டதுவிட்டதுபோல் விரல்களை உதறினாள். அது பறந்து சென்று ஒரு பூந்தொட்டிக்குள் மண் மீது விழுந்தது. கிளை அருகே கிடந்த அந்த சிற்றுடலை சிறிது நேரம் பார்த்துக்கொண்டு நின்றாள். இறகுகள் தேனின் மெருகோடு அந்தி வெளிச்சத்திலும் பளீர் என்று மணிக்கல்லின் நிறம் கொண்டு ஒளிர்ந்தது. தேனெல்லாம் அதன் ஓருடலின் சிறிய பச்சை முக்கோணத்தில் திரண்டு செறிந்ததுபோல். அத்தனை அழகாக, துளி கூட அசைவில்லாமல்.

அன்று மாலை முழுவதும் ராதிகா மீண்டும் மீண்டும் பால்கனிக்குச் சென்று நின்றுகொண்டிருந்தாள். தெளிவான ராத்திரி. நட்சத்திரங்களின் ஒளியில் வானமே மெல்லிய ஊதா நிற வெளிச்சத்தை பொழிவது போல் இருந்தது. கடற்காற்றின் உப்புவாசம் சிறிய அலைகளென அவ்வப்போது உணர்வில் வந்து சேர்ந்தது. சங்குபுஷ்பத்தின் இறுக்கி முறுக்கிய மொட்டுக்கள் கொடிமீது ஒளிச்செறிந்த நீலமணிகளைப்போல் ஆயுத்தமாயிருந்தன, ஒரு சிறு தொடுகையில் இதழவிழ்ந்து நிறமெல்லாம் சிந்தி மலர்ந்துவிடும் என்பதுபோல். முல்லை அரும்புகள் காற்றின் சிறிய அசைவுக்கும் சிலிர்த்தன. பவளமல்லிச் செடியில் மலர்க்காம்புகள் ஆரஞ்சு நிறத்தில் மேதமையின் திகழ்வோடு எழுந்து நின்றன. அதன் முனையில் வெண்முகைகள் கொழுத்திருந்தன. அதனடியில் கிடந்த அசைவற்ற பச்சைநிற முக்கோணத்தை ராதிகா பார்த்துக்கொண்டு நின்றாள்.

அது செடியிலிருந்து மண்ணில் விழுந்த இலை போலத்தான் இருந்தது. இரவில் அதன் பச்சை நிற மேற்பரப்பு பொன்னின் ஒளி கொண்டிருந்தது. அது அசையவே இல்லை. அதன் மேல் வலைப்பின்னல் போல கொப்பளித்தபடி இன்னொன்று பரவியிருந்தது. சற்றே ஆழமான தங்க நிறத்தில். சிறிய எறும்புகள். நெளிகோலம் போல அவை அந்த ஒளிரும் பச்சைப்பரப்பின் மீது வழிந்தோடின. ஒழுகிக்கொண்டே இருந்தன, மண்ணிலிருந்து மண்ணுக்கு. ராதிகா அதன் சிறிய கொழுத்த வயிறுகளை கண்டாள். ஒவ்வொன்றும் குன்றுமணியென ஒளிகொண்டிருந்தன, சரியாக ஒரு துளி அமுதை உட்கொண்டது போல.

இரவு தூங்கப்போக அம்மா சொல்ல கடைசியாக ஒரேஒருமுறை வெளியே சென்றபோது தான் ராதிகா அதைக் கண்டாள். அந்த முக்கோணம் சிறிதாகியிருந்தது. அடிப்பாகத்தில் புடவையின் சரிகை ஓரமென அகலமாக அமைந்திருந்த பகுதி இப்போது இல்லை. ஒருவேளை பெருகிக்கொண்டிருந்த எறும்புக்கூட்டத்துக்கு அடியில் மறைந்திருந்ததா? ராதிகா அருகே குனிந்து உற்றுப்பார்த்தாள். அம்மாவின் பழைய புத்தகம் ஒன்றில் தாள்களுக்கிடையே வெகுகாலம் கிடந்து லேஸ் போல ஆகியிருந்த அரசமர இலை அவள் நினைவுக்கு வந்தது. சணல் நிறத்தில் மெல்லிய வலையென தெரிந்தது அங்கே முன்பிருந்ததன் சுவடா? அல்லது அந்த வலையை உருவாக்கியதே எறும்புகள் தானா? பொடிக்கோலத்தின் கலைந்த வண்ணங்கள் மாதிரி, சிந்திய மகரந்தம் மாதிரி சிதறிப்பரவிய சிற்றெறும்புகள்… ராதிகாவுக்குத் தெரியவில்லை. ஒரு மிகத்தேர்ந்த கைவேலைக்காரனின் திறனிலிருந்து உருவாகி வந்துகொண்டிருந்த சல்லாத்துணி போலத் தெரிந்தது அந்தக் காட்சி. ஆனால் முக்கோணத்தில் எஞ்சிய பகுதி, மாறாத பொன்மஞ்சள் ஒளியுடன், பச்சைக்கல் பதித்த கிரீடம் போல் அதன் மேல் கூர்ந்து இருந்தது. அதன் உச்சியில் ஒரு கண்ணும், ஓர் உணர்கொம்பும் அந்த வண்ண ஒளிர்வை பட்டாம்பூச்சி என்று அடையாளப்படுத்தியது. அது மிகப்பொருமையாக, மிகுந்த கண்ணியத்துடன் காத்திருப்பது போல் ராதிகாவுக்குத் தோன்றியது.

அன்றிரவு ராதிகாவின் கனவில் எறும்புகள் வந்தன. அவை ஏறி வர வர அவள் கால்கள் ஒவ்வொன்றும் இல்லாமல் ஆகிப்போவதை அவள் மௌனமாக பார்த்துக்கொண்டிருந்தாள். அது அவளுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. அவள் கைவிரல்கள் ஒவ்வொன்றாக மறைந்து போயின. உள்ளங்கைகளும் மெலிந்த கரங்களும் கைமுட்டிகளும் மேல்கைகளும் தோள்களும் மறைந்தன. எறும்புகள் அவள் நெஞ்சில் ஏறிக் குழுமிய போது அவற்றின் வயிறுகள் கொழுத்திருந்ததையும் அவை பொன்னால் நிறைந்திருந்தன என்பதையும் கண்டாள்.

விழித்தபோது தன்னிலிருந்து முளைத்திருந்த உடலுக்குள் ராதிகாவால் இயல்பாக இறங்கிக்கொள்ள முடிந்தது. ஓசையில்லாமல் கால்வைத்து பால்கனிக்கு சென்றாள்.

காலை ஒளி பனிக்காற்று வழியாக வடிந்துகொண்டிருந்தது. அழகான மஞ்சள் நிற வெளிச்சம். தேன் போன்ற வெளிச்சம். அது ஒவ்வொன்றையும் தொட்டெழுப்பியது. அந்த வெளிச்சத்தில் இலைகள் அடர்பச்சையாக தெரிந்தன. தளிர்கள் ஒளியை வாங்கி ஒழுகவிட்டன. பிறகு வெளிச்சம் ஏற ஒவ்வொன்றும் பச்சையின் பல்வேறு பேதங்களை வெளிக்காட்டின. மலர்கள் ஒவ்வொன்றிலும் அதனதன் வண்ணத்தின் ஆழம் முழுவதுமாக வெளிப்பட்டது. ராதிகா பவளமல்லிச் செடியைப் பார்த்தாள். அடியில் மண் ரத்தசிவப்பில், மெழுகித்துடைத்த வாசல் போல, சீராக, புத்தம்புதியதாக இருந்தது. இலேசான ஈரப்பதமென, ஒரு நிறபேதம். மற்றபடி அசைவுகளே இல்லை. தழல்நிறத்தில் காம்புகளுடன் இரண்டு பூக்கள் மட்டும் அதன் மேல் உதிர்ந்து கிடந்தன.

ராதிகா அதை நெடுநேரம் நோக்கிகொண்டிருந்தாள். பிறகு இரண்டு பக்கமும் பார்த்துவிட்டு, ஓடி அருகே குனிந்து, சுண்டுவிரல் நுணியால் மண்ணின் ஒரே ஒரு துளியை மட்டும் தொட்டு நாவின் மேல் வைத்துச் சுவைத்தாள்.

000

சுசித்ரா

சுசித்ரா தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். இருத்தலியல் சார்ந்த வாழ்வின் ஆதார கேள்விகளை கலை, அறிவியல் பின்புலங்களில் எழுப்பி கதைகளில் விவாதிக்கிறார். ஒளி சிறுகதைத்தொகுப்பின் ஆசிரியர்.

தமிழ் விக்கியில்

6 Comments

  1. ராதிகா சுண்டு விரல் நுனியில் தொட்டு எடுத்து சுவைத்து திளைத்த தேனின் சுவை, கதை முழுவதும் வாசகர்களுக்கு செறிவாக அளித்து செல்லும் அமிழ்தமாக ஒழுகி செல்கிறது.. தேன் சுவைக்கும், மண் சுவைக்கும் நடுவில் ஆழமான வாசிப்பிற்கும் வழி அமைவது மேலும் சிறப்பு. வாழ்த்துக்கள்…

  2. ஒரு குழந்தையின் பார்வையில் வாழ்வில் ஓன்று மற்றொன்றாதல் சொல்லப்படுகின்றது. பூவுக்கும், பட்டாம்பூச்சிக்கும் உள்ள உறவு ஒரு துளி தேன், எறும்புக்கும், பட்டாம் பூச்சிக்கும் உள்ள உறவு ஒரு துளி அமுது. தேன் அமுதாவது. அம்மா தேனை அமுதென்றாள். கடையில் அமுதின் ஈரம் மண்ணில். அதன் ஒரு துளி என்ன சுவை?

உரையாடலுக்கு

Your email address will not be published.