இராகுலன் கவிதைகள்

உரையாடலின் அறுவடை

கேட்கும் கேள்விகளிலிருந்தும்
அளிக்கும் பதில்களிலிருந்தும்
கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும்
நமக்கிடையேயான தூரத்தை
நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம்
தொடர்ந்து எழுப்பும் கேள்விகள்
உடைத்து உடைத்து உள் பார்க்கிறது
தொடர்ந்து அளிக்கும் பதில்கள்
உள் திறந்து திறந்து காண்பிக்கிறது
தொடரும் மௌனம்
இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது
பூட்டினால் திறக்கவும்
திறந்தால் பூட்டவும்
கேள்வியும் பதிலுமற்ற உரையாடல்
நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே
நம்மைவிட்டு விடுகிறது

சொற்களால் அமைக்கப்பட்ட பாலம்

என் சொற்களில்
தாகம் தீர்க்கும் நீர்
உடன் அழைத்துத்
தூக்கிப் பறக்கும் சிறகுகள்
மனத்தின் கட்டுமானங்களைக்
களைத்துப்போடும் சூறாவளி
திறந்து கூரிட்டுப் பார்க்கும் ஆயுதங்கள்
மனம் பற்றி உள்புகும் வேர்
கனி தராமல்
வழியில் நிழல் தரும் மரமென
எதுவுமில்லை
பின்
உடலெனும் வேலி தாண்டி
உடலுள்நின்று எப்படிச் சுழல்வது
சாரமற்ற சொற்களால்
எப்படித் திறப்பேன் உன்னை
எப்படித் திறந்து காண்பிப்பேன் என்னை
எந்த வழியில் செலுத்துவேன் உன்னை
எந்த வழியில் அழைத்துச்செல்வேன் என்னை
என்னிடம் இருக்கும் சொற்கள்
நீண்ட தூரம்
என்னைச் சுமந்து செல்லும் வலுவற்றது
வழியெங்கும் சொற்களைப் பொறுக்குகிறேன்
என்னிடம் வைத்துக்கொள்ளவும்
உனக்களிக்கவும்

உடலுக்குள் குடிபுகுதல்

நிலத்துள் நீர் ஓடியதாய்
நெருப்பில் வெளிச்சம் அடங்கியதாய்
காற்றுள் ஓசை அலைவதாய்
வெளிச்சத்தில் வர்ணங்கள் சிறைபட்டதாய்
சொல்லில் பொருள் தங்கியதாய்
மலையுள் மௌனம் ததும்பியதாய்
உடல் முழுவதும் மட்டுமே
சிறகு விரிக்கிறேன்
இடியென வெடித்துச் சிதறி
நிலைகொள்ளா மேகமாய் ஒழுகித்திரிய
நெடுங்காலமாய்க் காத்திருக்கிறேன் உடலுள்

இரா. இராகுலன்

இரா. இராகுலன் தமிழில் எழுதிவரும் கவிஞர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல்மலையனூர் பகுதியைச் சேர்ந்தவர். கடவுளின் கடவுள், பாதியில் நிறுத்தப்பட்ட ஓவியம் ஆகிய  கவிதைத் தொகுப்புகளின் ஆசிரியர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் படிப்பை முடித்து தற்பொழுது புதுவைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு வருகிறார். தளம், உயிர் எழுத்து, காற்றுவெளி, உதிரிகள், சொல்வனம், கூதிர், கொலுசு, கீற்று, பேசும் புதிய சக்தி போன்ற இதழ்களில் கவிதை எழுதியுள்ளார்.

2 Comments

  1. வழியெங்கும் சொற்களை பெறுகின்றேன் அருமை

உரையாடலுக்கு

Your email address will not be published.