‘இன்று எனது அப்பாவை கொல்ல நான் கத்தியை கூர்த் தீட்டினேன்’ என்ற தொனி கதைகளை நானே அதிகம் வாசித்து சலித்திருந்தேன். ஆனால் இப்பொழுதும் இவ்வுலகில் நானும் அவரும் இருக்கிறோம். கத்தியைப் பற்றி யோசிக்க வேண்டும். அம்மா ஏன் பின் இருக்கையில் அமர்ந்தாள் என்று தெரியவில்லை. அவர் பக்கத்துக்கு இருக்கையில் அமர்ந்து செல்போனில் ஏதோ மாற்றுமருத்துவ காணொளிகளை மிக கவனமாக பார்த்துக் கொண்டிருந்தார். அவர் காணொளியின் டிஸ்கிரிப்ஸனை திறந்து வாசிப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. அம்மா கற்றுக்கொடுத்திருப்பாள். அம்மா அவருடன் இன்னும் பேசிக்கொண்டிருப்பதற்கான காரணங்களை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. நான் அவரிடமிருந்து ஒட்டுமொத்தமாக விலகிச் செல்ல வாய்க்கும் சந்தர்ப்பங்கள் எதையும் தவறவிடுவதில்லை. அவர் வாயை கோணலாக பிதுக்கி ‘ப்ச் ப்ச்’ என்ற அவரது வழக்கத்தை செய்யத்தொடங்கினார். பல்லில் ஏதாவது சிக்கியிருந்தால் இப்படி செய்யவேண்டும் என்று எந்த முட்டாள் சொன்னான் என்று தெரியவில்லை. அவருக்கும் எனக்குமான நெடுந்தூரத்தை கத்தியின் முனைகள் தொடும் தருணங்களில் இதுவும் ஒன்று. ‘ப்ச்… ப்ச்….ப்ச்…ப்ச்’. உடலெல்லாம் எலி ஊறுவது போல. ‘ப்ச்… ப்ச்….ப்ச்…ப்ச்’. அப்படியே கதவை திறந்து குதித்துவிட வேண்டும். ‘ப்ச்… ப்ச்….ப்ச்…ப்ச்’. நினைவுகளின் இலைகளை எல்லாம் உலுக்கி உதிரும் வரை ஜன்னல் கண்ணாடியில் மோதிக்கொள்ள வேண்டும். ‘ப்ச்… ப்ச்….ப்ச்…ப்ச்’. எரிச்சல் அடங்கும்வரை கார் ஹாரனையாவது அழுத்தித் தொலைக்கவேண்டும். ‘ப்ச்… ப்ச்….ப்ச்…ப்ச்’. தெய்வமே.
“ என்ன இருந்தாலும் தெய்வத்துக்கு பயந்துதான் ஆகணும். அது எதையும் மறக்கிறது இல்ல. சாமி எல்லாத்தையும் ஞாபகம் வச்சிக்குது. ”
“ ஆமா சாமி நொட்டுது. ”
அம்மா ஒரு கணம் விழி சுருக்கி இருக்கையில் சாய்ந்து கொண்டாள். ‘நான் உன் அப்பனையே பாத்துட்டேன்’ என்று நினைத்திருக்க கூடும். பிரேக்கை மட்டும் அழுத்தி வண்டியை அணைத்திருந்தேன். ‘ஏசி ஆப் பண்ணிட்டு ஸ்டார்ட் பண்ணு’ என்று அவர் சொல்வார் என்று நினைத்தேன். அவர் யோக முத்திரைகள் காணொளியில் மூழ்கி இருந்தார்.
சோள வயல்களுக்கு மத்தியிலான ரோட்டில் சென்றுகொண்டிருந்தோம். அம்மா தூங்கிக்கொண்டிருப்பது கண்ணாடியில் தெரிந்தது, நான் அவளைப் போலவே இருந்தேன். அல்லது நான் அவ்வாறு கற்பனை செய்கிறேன். நானே உவந்து யதார்த்தத்தின் கருவறைகளை கற்பனையின் பலிபீடங்களாக மாற்றிக்கொள்கிறேன். பலியானவர்களின் சோரம் கொண்டு என் கனவுகளின் உள்ளறைகளில் ‘டொக்…டொக்’ சத்தமிடும் குதிரைகளுக்கு வண்ணம் பூசுகிறேன். புறவுலகம் அவற்றின் குழம்படிகள் கேட்காத அளவு மலட்டுத்தன்மை கொண்டிருக்கும் வேளைகளில் அவற்றின் மேல் ஏறி பவனி வருவேன். அரசன் ஆவேன்; விதூஷகன் ஆவேன்; கவிஞன் ஆவேன்; ஓவியன் ஆவேன்; நான் குதிரையும் ஆவேன். இவ்வுலகத்தின் கண்கூசும் எல்லைக்கோடுகளின் கூர்மைக்கு மத்தியில் நான் ‘டொக்…டொக்’ இல்லை ‘ டொக்டொக்’ ஒலியுடன் பிடரிமயிர் விசிறிப் பறக்க கடக்கையில் இந்த சோள இலைகள் ஒன்றோடு ஒன்று முயங்குவதை காண்பேன். அவற்றின் திடமான எல்லைக்கோடுகள் அழிந்துபடுவதை, என் கபாலத்தை துளைத்து ஞாபகங்களின் ரோம மூட்டத்துள் ஒளிந்திருக்கும் உண்ணியை கொத்திப் பறக்கும் காக்கைகள் கீற்றுகளாக உறைவதை, கடல் நீல வானமும் அவற்றுடன் சேர்ந்து தட்டையாவதை நான் காண்பேன். அப்புணர்ச்சியின் ஒரு தருணத்தில் பழுப்பு நிற கீற்றலாக என்னை வரைந்து என் கையெழுத்திட்டு விலகிச் செல்வேன், அழிக்கமுடியாத எல்லைக்கோடாக.
வண்டியை நிறுத்தியவுடன் அவர் ஷூவை கழற்றிவிட்டு இறங்கினார். நான் வரமாட்டேன் என்று அம்மாவுக்கு தெரிந்திருந்தது. சற்றுத் தொலைவில் வரிசையாக நான்கு ஐந்து பேர் பொங்கல் வைத்துக்கொண்டிருந்தனர். வாய்க்கால் ஓரமாக இருவரும் அவ்விடம் நோக்கி நடந்தனர். வாய்க்காலை தாண்டும்போது அம்மா அவரது கையை பிடித்துக் கொண்டாள். அவள் எப்படி அவரை தொடுகிறாள் என்பதே புரியவில்லை. சற்று நேரத்தில் குலவை சத்தம் கேட்டது. பின் நவீனத்துவத்தின் புறவாசல் வழி நுழைந்த நாட்டார் கதைகள் ஒரு கட்டத்திற்கு மேல் எனக்கு குமட்டலை ஏற்படுத்தின. யதார்த்தத்திற்கும் கனவுக்குமான மதில்சுவர்களை அழிக்கும் அப்சரா ரப்பர்களாக முனை மழுங்கி அவை உலாவத் துவங்கின. எல்லா கதைகளிலும் பலி கோரும் சுபாவத்துடன் எழுதப்படும் நாட்டார் தெய்வங்களுக்காக நான் மனம் வருந்தினேன். அவர்களை விட்டுவிடுங்கள் பாவம். ஒவ்வொருமுறையும் அவர்களைப் பற்றி நினைக்கையிலும் பொரிக்காக படிகளின் விழும்பை முட்டி நிற்கும் குளத்து மீன்களின் கண்களே நினைவுக்கு வருகின்றன. பேடிக்க வேண்டாம் உங்களின் நிழல்களை கூட நான் எடுத்துக்கொள்ள போவதில்லை என்று உறுதிசெய்து பொரிகளைத் தூவுவேன். அவர்களும் பாவம் தானே. அவர் சத்தமாக ஏதோ சொல்லி சிரித்துக்கொண்டு வந்தார், அம்மாவிடமும் அதே சிரிப்பு,
“அங்க வந்தா சாமிக்கு காசு கொடுக்கணும்னு இங்கயே நின்னுக்கிட்டேன்னு உங்கப்பா சொல்லதுடா” என்றாள்.
எனது ஞாபகத்தில் அவள் எப்போதும் அவரை ‘அது இது’ என்று சொல்லிதான் கேட்டிருக்கிறேன். திரும்பி வரும்வழியில் சோள வயல்களில் ஒரு குதிரை நின்று கீழ்வானை வெறித்துக்கொண்டிருந்தது. எங்கள் வண்டி கடந்ததும் அதன் கனைப்பு சில்லிடவைத்தது. அது பல மதில்களை கடந்து வந்த சப்தம். வாங்கோவின் ஓவியங்களில் நான் சப்தங்களை கேட்கிறேன். அது பைத்தியத்தின் சப்தம் என்பது வருந்தத்தக்க விஷயம் ஒன்றும் இல்லை. ஆனால் அந்த பைத்தியத்தின் சப்தத்திற்கு கூட எனக்கும் அவருக்கும் இடையில் உள்ள திடமான எல்லைக்கோடுகளை அழிக்கும் திராணி இல்லை.
“நீ வேணும்னா இந்த கார சென்னைக்கு எடுத்துட்டு போயேன். இது எங்களுக்கு அவ்வளவா தேவைபடறது இல்ல. எப்பையாவது வேணும்னா கூட வாடகை கார் சொல்லிக்கலாம்”, அம்மா அவளால் முடிந்த அளவு பீதியை மறைத்து கொண்டு சொன்னாள்.
“ ஏன்? ”
“ இல்ல ஒரு ரெண்டு வருசத்துக்கு பைக் ஓட்ட வேண்டாம். ஏழரை வேற ஆரம்பிக்குது. ”
“என் காலுக்கு ஒன்னும் ஆவாது. இந்த மாருதி 800 வண்டிய எடுத்துட்டு ஆபீஸ் போறதுக்கு பதிலா கால பறிகொடுத்துட்டு சும்மா உக்காரலாம்.”
அவர் சீண்டப்படுவார் என்று நினைத்தேன் அவர் ஏதும் சொல்லவில்லை. அம்மா மட்டும் சில நிமிடங்கள் தனக்குள்ளேயே ஏதேனும் பேசியிருக்கவேண்டும். பத்மினி தவறவிட்ட அரிதான முகபாவனைகளை எல்லாம் செய்துகொண்டிருந்தாள். என் கால்கள் இல்லாமல் போய் என்னை யாரும் திருமணம் செய்துகொள்ள விரும்பாமல் எனக்கு ஐம்பதும் அவளுக்கு எழுபத்தி நான்கும் ஆகும் தருணத்திலும் என்னை சக்கர நாற்காலியில் தள்ளிக்கொண்டு உலகை சுற்றிக்காட்டும் இலட்சியத் தாயாகத் தன்னை கற்பனை செய்திருப்பாள். ஆனால் சில நிமிடங்களுக்குள் அந்த இலட்சியங்களின் பாரத்தை எல்லாம் பக்கத்துக்கு இருக்கையில் இறக்கிவைத்துவிட்டு வீடு வரும் வரை வாணி வழிய அவள் தூங்குவது விந்தைதான். மாடிப்படி வாசலில் அவர் ஷூவை கழட்டிவைத்துவிட்டு, நான் கதவை திறந்த உடன் அவசரமாக தனது இடது பாதத்தை கழட்டி ஹால் ஜன்னல் கட்டையில் வைத்தார். அவர் கைலியை மாற்றிக்கொண்டு கொல்லைபுற வாசலை திறந்ததும் மொத்த வீடும் பால்வாடி போல மாறியது. அச்சுதன் பனி சருக்குவது போல மார்பில் தரையில் மிதந்துகொண்டு வந்தான். தனக்கே அது புதிதாக இருக்க, “ இங்க என்ன ஷோவா காட்றாங்க?” என்பது போல என்னை ஒரு முறை பார்த்தான். ரங்காமணி ஏற்கனவே கிருஷ்ணாவின் வாலை தாவிப் பிடித்து விளையாடிக்கொண்டிருந்தான். பெயர் தெரியாத ஒரு குட்டி ஒவ்வொரு அறைகளாக மோப்பம் பிடித்துவிட்டு என்னிடம் வந்து, ” இப்பதான் வாறீகளாக்கும், பலகாரம் ஏதும் உண்டா?” என்று பார்த்தது. கோவிந்தா அவரது கைலியை பிடித்து பாதிவரை ஏறியிருந்தான். அவர் அவனை பிடித்து தூக்கிகொண்டு கொல்லைபுறம் சென்றார். அம்மா, “ ரங்காமணி இங்கவாடா அம்மா வந்துட்டேன்.” என்று சொன்னதற்கு அவனிடமிருந்து எந்த எதிர்வினைகளும் இல்லை. அவர் விஸ்காஸ் இருக்கும் டப்பாவை திறந்தவுடன் ரங்காமணி பழக்கப்படாத ஓட்டத்துடன் அங்கு ஓடினான். “ பெத்ததுதான் இப்படி இருக்குனா வந்து வாய்ச்சதும் இப்படி இருக்கு. ” என்று அலுத்துக்கொண்டு அம்மா பால் காய்ச்சினாள். உண்மையில் கொல்லை புறத்தில் எனக்கு அடையாளமே தெரியாத இன்னும் சில பூனைக் குட்டிகள் வட்டமாக நின்று தலைகள் முட்டிக்கொள்ள விஸ்காஸை தின்றுகொண்டிருந்தன. சாம்பல் நிறத்தை நிறமாக மட்டும் சொல்லமுடிவதில்லை. ரங்காமணி கரிக்கோடுகள் விரவிய சாம்பல். அச்சுதன் வெளிர் சாம்பல். கிருஷ்ணா மொத்தமாக கரிக் கோடுகள் தான். பெயர் தெரியாத குட்டிகள் எல்லாம் கருப்பு தயக்கத்துடன் எட்டிப்பார்க்கும் சாம்பல். பூனைகள் நாய்கள் போல அல்ல. பிறந்து நான்கு ஐந்து தினங்களான நாய் குட்டிகள் நம் கால்களுக்கு இடையில் ஓடிவருவது போல் பூனைகள் கிடையாது. பூனைகள் நவீனத்துவவாதிகள், தங்கள் சுயபிரக்ஞை கொண்டு வாழ்க்கையை ஆராய்ந்து உண்மையை கண்டடைந்துவிட முடியும் என்பதில் அவற்றுக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை உள்ளது. மனிதர்களுக்கு பல மைல் தூரத்தில் இருக்கும் அவற்றின் கண்கள் நிதம் நம்மை எடைபோடுகின்றன. நமது தீண்டலுக்கு பல ஆழி ஆழத்துக்கு அப்பால் உள்ள கனலிலிருந்து வரும் கண்ணொளியை நாம் உதாசீனம் செய்கிறோம். அவை நட்சத்திரங்கள்.
அம்மா காய்ச்சிய பாலை எடுத்துக்கொண்டு வந்து, “ எங்க அவள காணோம். சில்க்? ” பூனைக்குட்டிகளை பார்த்து, “ எங்கடி உங்க அம்மாவ காணோம் விட்டுட்டு ஓடிட்டாளா? ” என்றாள். அதற்குள் அவை அம்மாவின் நைட்டியைப் பிடித்து ஏறத் துவங்கின.
“ அய்யய்ய நகத்தை வச்சு பிராண்டுறதே வேலையா போச்சு. ” என்று பாலை பாத்திரத்தில் ஊற்றி மீதம் கொஞ்சம் பாலை வீட்டிற்குள் எடுத்துச் சென்றாள்.
“ சில்க் பால் ஊத்துற நேரத்துக்கு வரமாட்டா. குட்டி போட்டுட்டாளா என்னானு வேற தெரியல. ”
***
கனவுகளில் நானொரு வண்ணாத்திப் பூச்சி. சூரியனை உறிஞ்சி சிறகு வளர்த்து நினைவுகளின் கூட்டை கிழித்து வெளிவருகிறேன். வெயில் பரப்பின் சாவதானத்தை என் சிறகின் நிழல் கொண்டு கலைத்துப் பறக்கிறேன். காற்றை புணர்ந்து பெறப்பட்டவை நான் சுமக்கும் முட்டைகள். கனவுகளில் கூட மிக நீண்ட யோசனைக்கு பின் நான் உள் நுழையும் கல்லறைத் தோட்டம் ஒன்று உண்டு. அதன் ஒரு மூலையில் அம்மாவால் பைத்தியம் கையளிக்கப்பட்டவர்களின் கல்லறைகள் இருக்கும், அகுதாகவா முதல் நகுலன் வரை. அவர்களின் எலும்பு மஜ்ஜைகளை வேர்களால் இறுக்கப் பிடித்திருக்கும் ஒரு தூங்குவாகை. நான் அங்கு அரிதாக பறந்து செல்லும் தருணங்களில் அம்மரம் பூக்களை கருக்கி இலைகளை மூடிக்கொள்ளும். எனது சிறகு உதிர்த்து மண்புழுவாக ஏங்கினேன்; அந்த எலும்பு மஜ்ஜைகளில் நுழைந்து உறைந்து படிமமாக. கல்லறைத்தோட்டதின் அந்த மூலையை அடைவதற்குள் என் உடல் முழுக்க தூசு படிந்துவிடுகிறது. பிரேதங்களை புதைக்கும் கல்லறைகளில் இவ்வளவு சாம்பல் எங்கிருந்து வருகிறது என்பது புதிர்தான். புதைக்கப்பட்ட பிரேதங்கள் தங்களது தீயால் தங்களை எரித்துக்கொண்டு மேல் பறக்கின்றன. அவற்றின் பிரச்சனையே அவற்றால் பறக்காமல் இருக்க முடியாது என்பது தான். தங்களுக்கு அருகிலிருப்பவரைவிட ஒரு ஜான் அதிகம் பறந்துதான் அத்தீயை அணைத்துக்கொள்ள முடியும். “தோழர்களே நீங்கள் பறப்பதில் பிரச்சனை இல்லை. நான் பறந்து சற்று அந்த பக்கம் போய்விடுகிறேனே.” செவிசாய்க்க மாட்டார்கள், வெற்று ஆணவம். எனக்கு மிகவும் பிடித்தது என் உணர்கொம்புகள் தான். ஆயிரம் காத தூரத்தில் மலர்ந்திருக்கும் புலிநக கொன்றை மலரை நான் உணர்வேன். அதற்கும் எனக்கும் இடையில் உள்ள கால வெளி ஊடுபாவுகளை என் சிறகுகள் ரணப்பட்டு உந்திச்செல்லும். அம்மலர் தொட்ட சூரியனை, நீர்த்துளியை, விசும்பை நான் என் உணர்கொம்புகளால் நீவுவேன். அம்மலர் சூடிய யக்ஷிகளின் கூடலுக்கிடையில் என் சிறகுகளில் மத நீர் ஒட்டாமல் பறந்துசெல்வேன். இப்போது என் உணர்கொம்புகள் முழுக்க தூசும் சாம்பலும். அவை எடை தாளாமல் உதிர்ந்து மண்ணில் விழுவதற்குள் சாம்பலாயின. ஒரு கழுகு போல சிறகசைக்காமல் பறக்கிறேன். படபடக்காமல் காற்றில் பறந்து செல்லும் வண்ணாத்திச் பூச்சியை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? நான் பார்த்திருக்கிறேன் மெரினா கடற்கரையில் இரண்டு கம்பங்களுக்கு இடையில் கயிற்றுக்கு மேல் கைகளை விரித்து செல்லும் ஒரு குட்டி வண்ணாத்திப் பூச்சியை. உண்மையில் இப்படி பறக்க எனக்கும் ஆசை ஏதும் இல்லை. என் சிறகுகள் தூசியால் திடமாகிவிட்டன அந்த குட்டி வண்ணாத்திப் பூச்சியைப் போலவே. இரண்டு சிறகுகளும் கிழிந்து விழ, காற்றில் தூக்கிச் செல்லப்பட்டு தூங்கு வாகையின் வேர் ஓடிய ஒரு கல்லறையில் விழுந்தேன். எனது வெளிர் மஞ்சள் முட்டைகளை அந்த கருப்பு நிற கல்லறை தாங்கிக்கொண்டது. இறுதி சுவாசத்தை திரட்டி, “ குழந்தைகளே, புறவுலக தர்க்கத்தின் முடைநாற்றம் எட்டாத, காலத்தின் தர்தரியம் தீண்டாத கதைகளை எழுதுங்கள்.” என்று சொல்லி முடிப்பதற்குள் முட்டைகள் கருகி வெடித்து காற்றில் கலந்தன. அக்கல்லறைக்குள் ஜப்பானிய முனகலை கேட்டவுடன் நானும் உடல் சுருண்டு கருகத் தொடங்கினேன்.
நான் சத்தம் கேட்டுதான் விழித்திருக்க வேண்டும். வெளிர் பச்சை கண்களுடன் கனவுகளில் வந்த அதே சாம்பல் நிறதுடன் சில்க். ஆனால் அவள் கத்தி நான் கேட்டதாக நினைவில்லை. அவள் எல்லாவற்றையும் தனது கண்களால் ஆணையிட்டு வாங்கிக்கொள்பவள். அவள் வயிற்றுக்குள் குட்டிகள் நகர்வது கூட தெளிவாக தெரிந்தது. ஒருமுறை சுற்றிபார்த்துவிட்டு கனமான அசைவுகளுடன் புத்தக அலமாரி நோக்கி நகர்ந்தாள் முதல் வரிசையில் ஏறி,“ பரவாயில்ல நல்லா தலைகாணி சைஸ்க்கு புஸ்தகம் எழுதுறானுங்களே, இவனுந்தான் எழுதுனான் எலி குஞ்சு வால் சைஸ்க்கு.” என்ற பாவனையில் கொட்டாவி விட்டு கண்களை மூடிக்கொண்டாள். சற்று நேரத்திற்கெல்லாம் அறைக்குள் நுழைந்த கோவிந்தாவும் அச்சுதாவும் புத்தகத்தின் விழும்பில் நீட்டிக்கொண்டிருக்கும் அவளது காம்புகளை பார்த்துக்கொண்டிருந்தனர். பூனைகளின் தலைமுறை அட்டவணையை என்னால் நினைவில் நிறுத்தவே முடிந்ததில்லை. சில்க் ஒரு புராதான பொருள் போலவே எங்கள் வீட்டில் இருந்தாள். அவள் முதலில் ஈன்றது யாரை, இவள் யாருக்கு பாட்டி முறை யாருக்கு அம்மா முறை என்பது கண்டுபிடிக்கவே முடியாத சிக்கல். பூனைக்குட்டிகளின் வளர்த்தியை வைத்தே இந்த குட்டி இதற்கு மூத்தது என்று சொல்ல முடியும். கட்டிலை விட்டு கீழ் இறங்கியதும் இரண்டு பூனைகளும் சிதறி ஓடின. அவை எவற்றுக்கும் என்னுடன் சிநேகம் இல்லை. சில்க்கிற்கு என்மேல் உள்ளது சிநேகம் அல்ல. அவளது கண்கள் என்னை பார்க்கையில் அதில் கோவில் சிற்பத்தின் மருட்சியையே நான் உணர்வேன். ஹாலில் அவரது குதிகாலின் வழி சூரிய ஒளி நுழைந்து வந்துகொண்டிருந்தது. அதில் ஒரு கவர்ச்சி இருந்தது. கசாப் கடைகளில் உரித்த தோல் வழியே வரும் ஒளி. மாமிசமும் ஒளியும் முயங்கும் மாயத் தருணம் அது. அவரது அறுவை சிகிச்சைக்கு முன்பு அம்மா வேண்டிக்கொண்டு உண்டியலில் போட்ட வெள்ளிப் பாதங்களை விட மூன்று மடங்கு விலை கொண்டது. அசல் தோல் போலவே இருப்பது; மாமிசம் போலவே. அதற்கு மேல் எனக்கான மனிதரை ஒளிகொண்டு நான் எழுப்பிக்கொள்வேன். அவர் பால் காய்ச்சிக் கொண்டிருந்தார். ஒரு மூலையில் ரங்காமணி படுத்திருக்க பெயர் தெரியாத இரு பூனைக்குட்டிகள் காம்புகளற்ற அவனது அடிவயிற்றை நக்கிக்கொண்டிருந்தன. அவன் வாய் ஓரத்தில் பற்கள் தெரிய கண்களை மூடிக்கிடந்தான். இன்னொரு பூனை அவனது வாலைத் தாவிப் பிடித்து குதித்துக்கொண்டிருந்தது. அவர் கொல்லைப் புறத்தில் பாலை ஊற்றி பாத்திரத்தை தட்டியவுடன் எல்லாம் குடிக்க ஓடின. ரங்காமணியின் அடிவயிற்று முடி கற்றையாக நனைந்திருந்தது. சில்க் என்னை கடந்து மிக மெதுவாக முலைக் காம்புகள் அசைந்தாட நடந்து சென்றாள்.
கல்லறை தோட்டத்தின் மதில் சுவர்தான் எங்கள் வீட்டின் பின் சுவர். கல்லறையில் இருக்கும் தூங்கு வாகையின் மலர் பிசிறுகளால் எங்கள் வீட்டு கொல்லைப் புறத்தரை மூடப்பட்டிருந்தது. அம்மரத்தின் வேர்ப்புடைப்பு சுவரையும் கடந்து எங்கள் இடத்திற்குள் நுழைந்த்திருந்தது. ஆயாசமாக அதன் மேல் அமரும் அந்த கருப்பு வண்ணத்துப் பூச்சியின் கால்களில் கல்லறை மரங்களின் மகரந்தப் பொடி இருக்கலாம். சில்க் பாலை குடித்து முடித்தவுடன் அவர் ஒரு பழைய மண் சட்டியில் தண்ணீர் பிடித்து துணியை நனைத்து அவள் மேல் நீவினார், வெயில் காலங்களில் அவர் இப்படி செய்வதுண்டு. அவள் கொப்பரை தேங்காய் போன்ற அவரது இடது காலில் முகத்தை தேய்த்தாள், வால் நேராக அவரது முட்டியளவிற்கு நீட்டப்பட்டிருந்தது. அவருக்கு செயற்கை குதிகால் பொறுத்தப்படாத நாட்களில் காகிதம் போட்டு மலம் கழிப்பது அந்த சட்டியில்தான். அம்மா அதை சுருட்டி எடுத்து கல்லறைக்குள் தூக்கி எறிவாள். சில்க் வீட்டிற்கு வந்தது அந்த நாட்களில்தான். அவள் வந்ததை நான் தான் முதலில் பார்த்தேன். மதில் சுவரின் மேல் அமர்ந்து கல்லறையை பார்த்துக்கொண்டிருந்தாள். இளம் வெயிலில் அவளது முடியின் ஒவ்வொரு நுனிகளிலும் சூரியன் பட்டுத் தெறித்தது. அவள் சாம்பலில் புரண்டெழுந்த ஒரு வெள்ளை பூனை என்றே முதலில் நினைத்தேன். அவ்வளவு குண்டான பூனை இருக்குமென்றே நான் எதிர்பார்க்கவில்லை. அவள் சுவற்றிலிருந்து கீழ் குதித்த பிறகே அவள் தோலில் உள்ள கருப்பு புள்ளிகள் தெரிந்தன. அவள் என்னை பார்த்துவிட்டு எங்கள் வீட்டுக்குள் நுழையும்பொழுது கோஷ்டச் சிற்பத்தின் மேல் சுற்றப்பட்ட எண்ணெய் கறை படிந்த ஒரு வெண்பட்டுத்துணியை போர்த்தி அவள் செல்வதாகவே தோன்றியது. நான் அவளுக்கு சில்க் என்று பெயர்வைத்தேன். அவள் வயிற்றில் குட்டிகள் வைத்திருந்தது அவளுக்கு எனது வீட்டில் பல சலுகைகள் பெற்றுத்தந்தது. அவள் மொட்டைமாடி காலி தண்ணீர்த் தொட்டியில் மூன்று குட்டிகள் ஈன்று மறைந்துபோனதும், அவற்றை மடியில் வைத்துக்கொண்டு அவர் பால் புட்டியில் பால் அளித்ததும் உண்மையா என்று சிங்கப்பூரிலிருந்து என் உறவினர்களால் அம்மாவிடம் ஐந்து ஆறு முறை கேட்டு உறுதிசெய்துகொள்ளப்பட்ட அதிகாரபூர்வமான செய்திகள். அவள் எங்கள் வீட்டிற்கு திரும்பி வந்த இரவிலும் நானே அவளை முதலில் பார்த்தேன். நட்சத்திரங்கள் முழுவதாக மூடப்பட்டிருந்த டிசம்பர் மாத அமாவாசை இரவில் அவள் மதில் சுவரில் அமர்ந்திருந்தாள். வாகைமரக் கிளைகளின் சிறு அசைவுகளுடன் தலைப் பெருத்த கருப்பு ஆண் பூனை மதில்மேல் தாவியது. வால் விரைத்து நிற்க இரண்டு பூனைகளும் உடல் உரசி இடம் மாற்றிக்கொண்டன. ஆண் பூனை கால்நகங்களில் இருந்த ஓணானை சில்க் உண்ணும் வரை அது மின்னல்களை பார்த்துக்கொண்டிருந்தது. மழை நீர் அவற்றின் தொங்கிய வால்களில் ஊசலாடி எங்கள் வீட்டு வேர்பரப்பில் சொட்டியது. வாகைமரக் கிளை வழி கல்லறைக்குள் ஆண் பூனை சென்ற பின்பும் அவள் அப்படியே அமர்ந்திருந்தாள். மரக்கிளையில் காலடி எடுத்துவைத்து தயங்கி எங்கள் வீட்டைப் பார்த்தாள், என் நினைவுகளில் முதல் முறையாக அவள் “மியாவ்” என்று சொன்னது அப்போதுதான். அவள் என் காலில் உரசி கொல்லைப்புற வாசல் வழி செல்கையில் கல்லறையில் இரு பச்சை புள்ளிகள் தெரிந்தன.
அவள் வந்ததற்கு அடுத்த நாள் செயற்கை குதிகால் வந்தது. நான் கல்லூரி முடிப்பதற்கே இன்னும் ஒரு ஆண்டு மீதமிருந்தது. நான் சென்னையிலிருந்து வீட்டிற்கு வருகையில், அம்மா எல்லாவற்றுக்கும் பழகிவிட்டிருந்தாள். ஆதி காலத்திலிருந்தே இது இப்படிதான் என்பது போன்ற மனநிலை. அம்மா அந்த குதிகாலை எடுத்துப்பார்த்து “ உண்மையான கால் மாறியே இருக்கு. ” என்று தன் காலுக்கு பக்கத்தில் வைத்துப் பார்த்துக்கொண்டாள். அது உண்மையான கால் போலதான் இருந்தது, அது தான் பிரச்னையும் கூட. என் நினைவுகளின் தாழ்வரையில் தாள முடியாத வெண்கல சத்தத்துடன் சதா உருண்டுகொண்டே இருக்கும் ஒரு காட்சி. மொத்த ஹாலிலும் தொலைக்காட்சியின் சடுதிக் காட்சிகளின் ஒளி. எனக்கு இடது புறம் படுத்திருந்த அம்மா சொல்வது புரியாமையில் என்னைக் கடந்து வலதுபுறம் இருக்கும் அவரை சேர்கிறது. அவரிடமிருந்து மறதியால் என்னைக் கடந்து சில சொற்கள் அம்மாவை சேர்கிறது. இவற்றுக்கிடையில் தொலைக்காட்சி திரையில் கிட்டத்தட்ட அழும் தொனியில் ராதிகா. எனக்கும் அம்மாவுக்கும் இடையில் ஒரு எண்ணம் தொலைவு. எனக்கும் அவருக்கும் அவ்வொரு எண்ண பிரபஞ்சத்தால் ஆன தொலைவு. அம்மாவுக்கும் அவருக்கும் இடையில் நதியென ஓடிக்கொண்டிருக்கிறேன். அவர் எழுந்து கைலியை மடித்துக்கட்டி இடது காலால் அம்மாவை உதைக்கையில் வலதுகால் நகங்கள் என் விலாவில் கீற நான் அம்மா பக்கம் புரண்டு படுக்கிறேன். அம்மா ஒரு பைக் போல அவர் உதைக்கையில் போர்வைக்குள் குலுங்கி அப்படியே படுத்திருக்கிறாள். முந்தானையால் வாய்பொத்தி அழுது கொண்டிருக்கும் ராதிகாவை அவரது இடது குதிகாலின் ஊசலாட்டத்தின் வழி பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவர் ஹால் மூலையில் கிடந்த ரிமோட்டை எடுத்து வேறு சானல் மாற்றியதும் அதில் வரிசையாக பத்துபேர் வாய்களை அகலவிரித்து அவசரகதியில் பல் தேய்த்துக்கொள்கிறார்கள், மொத்த ஹாலும் வெள்ளையாகிறது. மூடிய வலையின் ஒரு அசம்பாவித ஓட்டையில் நுழைந்து அதை மறந்து தவிக்கும் குட்டி மீனென நான் அந்த ஹாலின் எல்லா இடுக்குகளிலும் செவுள் அறைபட துடிக்கிறேன். இந்தக் காட்சி எனக்குள் எழும் தருணங்களில் எல்லாம் கொழுந்துவிட்டெரியும் தீயை பார்த்துக்கொண்டு நிற்கும் தார்கோவ்ஸ்கியின் தோளில் கைபோட்டு நின்றிருக்கிறேன்.
‘இருட்டின் மசங்களில் பூக்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்
அவள் வீட்டின் எந்த இடத்தில் அமர்ந்திருப்பாள்
கைகளில் படரும் மலரின் ஈரம்
நீங்கள் குனிந்து
அந்தப் பூக்களைப் பார்க்கிறீர்கள்
உங்கள் கைகளில் கனக்கின்றன
ஞாபகங்களெங்கும்
ஒரு கண்ணீர்த் துளி படர்ந்திருக்கிறது.’
ஷங்கரின் கவிதையை வாசிக்கும் வரை நான் நதியில் செல்லும் கூடைக்குள் மென்பஞ்சுப் பொதியில் அழுகையில் வெண்கொக்கின் நீண்ட கால்களால் அந்தரத்தில் தொட்டிலாட்டப்பட்டு என் அம்மாவிடம் வந்து சேர்ந்த கதையில் வலுக்கட்டாயமாக தஞ்சமடைந்தேன். அதாவது எனது இருபத்தியொரு வயதுவரை. சக மனிதன் கூட துன்புறுத்த அருவருக்கும் ஒருவனின் கழுத்தை கலை எந்த கூச்சமுமின்றி தன் கூர்நகங்களால் கிழித்து செல்கிறது. அது வாழ்க்கையை இன்னும் துக்கமயமாக மாற்றிக்கொள்ள கடவுள் நூறு ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டி நமக்கு அனுப்பி வைத்த ஒன்று. எனது துயரங்கள் எல்லாம் கற்பனை செய்யப்பட்டவை என்கிறீர்கள். கற்பனையே அதற்குதான் என்று நினைகிறேன். கற்பனையின் மூலம் ஒளியை கண்டுபிடித்துவிடும் படைப்பாளிகள் மேல் எனக்கு பொறாமையாகத்தான் இருக்கிறது. அவர்கள் கண்டடையும் அதீத ஒளியால் வலி தெறிக்கும் என் கண்களுக்கு இருள் தான் ஆசுவாசம். நிதர்சனம் வேண்டுமென்ற அளவிற்கு ஒளியால் நிரம்பியுள்ளது. கற்பனை எனக்குத் தரும் முள் கிரீடங்களை நான் மௌனமான தலையசைப்புடன் பெற்றுக்கொள்கிறேன். எந்த தந்தையையும் குறை கூற விரும்பவில்லை. வானிலிருந்து என்னை நோக்கி நகைக்கிறார்கள் தந்தையர்கள். நான் உருவாக்கிய சிலுவைகளையும் முள்கிரீடங்களையும் எந்த தந்தையருடனும் நான் பகிர்ந்துக்கொள்ள தயாராக இல்லை. எனக்கு பதிலாக விடுவிக்கப் பட்ட பாரபாஸ்கள் தந்தை படைத்த ஒளியை கண்டடைகிறார்கள், அவர்களுக்கு சோஸ்திரம். டாம் க்ரூஸ் போல விண்ணளவு உயரனமான யதார்த்தத்திலிருந்து ஒரு தெரு தள்ளியுள்ள கற்பனைக்கு தாவும் பொழுது குறைந்தது எனது காலையாவது உடைத்துக்கொள்ள வேண்டிவருகிறது. நான் அதே வண்ணாத்திப் பூச்சியாக மாறி பறக்கத்தொடங்குகிறேன்.
“ வீட்டில் யாராவது இருக்கிறீர்களா? ”
“ சொல்லுங்கள், என்ன வேண்டும்? ”
“ உங்களது பெயரை நான் தெரிந்துகொள்ளலாமா? உங்களுக்கு விருப்பமிருந்தால் மட்டும். ”
“ என் பெயர் சில்க். என்னை அப்படிதான் அழைக்கிறார்கள். ”
“ மிக நல்ல பெயர். எங்கள் நிறுவனம் தயாரித்த பொருட்களை உங்களிடம் கொண்டு வந்த சேர்க்க எனது இரண்டு சிறகுகளால் பறந்து வந்திருக்கிறேன். ”
“ ஓ..நான் பொதுவாக இப்படி எதுவும் வாங்குவதில்லை. ”
“ தயைக் கூர்ந்து அப்படி சொல்ல கூடாது. இது வெளியில் தெரிந்தால் உங்களுக்கு தான் இழுக்கு. இத்தெருவில் எல்லோரும் எங்கள் வாடிக்கையாளர்கள் உங்களைத்தவிர. ”
“ அப்படியா? அந்த மூலை வீட்டுக்காரர் கூடவா? ”
“ உண்மையில் அவர் எங்கள் நிறுவனத்தின் இரகசிய மேல் மட்ட நிர்வாகி. அவருக்கு வேறொரு பெயர் உள்ளது. இதை வேறுயாரிடமும் சொல்லிவிட வேண்டாம். ”
“ வினோதம் தான். சரி பொருட்களை காட்டுங்கள். ”
“ மிக்க நன்றி. முதலில் இதைப் பாருங்கள். இதற்கு எங்கள் நிறுவனம் படிமம் என்று பெயர் சூட்டியுள்ளது. ”
“ இதைப் பார்த்தால் தயாரித்து பல நூற்றாண்டுகள் கடந்தது போல உள்ளதே ஐயா. ”
“ சரியாக சொன்னீர்கள். அதுதான் இப்பொருளின் தனிச்சிறப்பு. பன்நெடும் காலமாக இதை எங்கள் நிறுவனம் அடுத்த தலைமுறைக்கு கைமாற்றி வந்திருக்கிறது. இதை தயாரிக்கும் செய்முறை ரகசியம் உயர்மட்ட நிர்வாகிகளிடமே இருக்கிறது. ஆனால் விலை கொஞ்சம் அதிகம். ”
“ இது வேண்டாம் ஐயா. எனக்கு இதன் அருமை புரிகிறது. ஆனால் என் கணவருக்கு இதெல்லாம் புரியாது. ”
“ பரவாயில்லை. எங்கள் நிறுவனம் உங்களுக்காகவே பிரத்யேகமாக தயாரித்த பொருளை நான் மறக்காமல் என் சிறகுகளுக்கு இடையில் பத்திரமாக கொண்டுவந்துள்ளேன். இதை பாருங்கள். இதை நாங்கள் உருவகம் என்கிறோம்.”
“ அப்படியா? பார்க்க நன்றாக உள்ளதே. கைக்கும் அடக்கமாக உள்ளது. ”
“ ஆமாம் ஆமாம். விலையும் மலிவுதான். நீங்கள் கையில் வைத்திருப்பது மீபொருண்மை உருவகம். எங்களிடம் வேறொரு உருவகம் உள்ளது. ஆன்மீக உருவகம். ”
“ ஓ.. விலை வித்தியாசம் உண்டா? ”
“ ஆமாம் சற்று விலை கூடுதல் தான். ”
“ ஏன்? ”
“ எங்கள் நிறுவனத்தில் உள்ள சில நபர்களால் அவர்களது புழக்கடைகளில் மீபொருண்மை உருவகங்கள் தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வருகின்றன. அவற்றின் பெருக்கம் விலையை குறைத்துவிட்டது. ஆனால் ஆன்மீக உருவகங்கள் எல்லாம் எங்கள் நிறுவனத்தின் சான்றிதழுடன் சந்தைக்கு வருபவை. அதனால் சற்று விலை கூடுதல். ”
“ இப்படி சொன்னால் எப்படி ஐயா வாங்க முடியும்? ”
“ நீங்கள் வாங்கித்தான் ஆகவேண்டும். பிறகு நீங்கள் எப்படி எங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளராக முடியும்? ”
“ நான் ஏன் உங்கள் வாடிக்கையாளராக வேண்டும்? ”
“ இதோ பாருங்கள். எந்த காரணத்தினாலோ இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுவிட்டது. வேறு தொழிலில் ஈடுபட முடியாத எங்களை போன்றவர்கள் இந்நிறுவனத்தில் தான் தஞ்சம் புகமுடியும். இந்நிறுவனம் தொடர்ந்து இயங்கவேண்டுமெனில் நீங்களெல்லாம் பொருட்களை வாங்கிக்கொள்ள வேண்டும். ”
“ இது என்ன ஐயா அநியாயமாக உள்ளது? ”
“ ஏய் பெண் பூனை என்பதால் மரியாதையாக பேசிக்கொண்டிருக்கிறேன். இல்லையென்றால் நடப்பதே வேறு. ”
“ இப்போது என்னை என்னதான் செய்ய சொல்கிறீர்கள்? ”
“ இந்த உருவகத்தை வாங்கிக்கொள். வேறு வழியில்லை. அத்துடன் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போடு.”
“ எதற்கு ஐயா? ”
“ எங்கள் நிறுவனத்தில் வாடிக்கையாளரானால், கண்டிப்பாக குறியீடு என்ற பொருளையும் வாங்கியாக வேண்டும் அதற்கான ஒப்பந்தம் இது. ”
“ இதை நான் எந்த கடவுளிடம் முறையிடுவது? ”
“ அவரே எங்கள் வாடிக்கையாளர்தான். அதிகம் பேசாதே. எனக்கு நேரமாகிறது. ”
“ இது எவ்வளவு ஐயா? ”
நான் கற்பனைக்கும் யதார்த்தத்திற்கும் இடையில் உள்ள இழுகதவை திறந்து உள்ளும் புறமும் உலாவிக் கொண்டிருக்கிறேன். அதன் கீல் சத்தம் என்னை இரு பக்கங்களிலும் சம அளவு எரிச்சலுடன் நுழையச் செய்கிறது. சில வேளைகளில் கற்பனையின் போதையினாலும் சில வேளைகளில் யதார்த்தத்தின் போதத்தாலும் இழுக்கும் பக்கம் தள்ளியும் தள்ளும் பக்கம் இழுத்தும் சிறு பொழுத்துக்கு பின்பாக சுதாரிப்புடன் உள் நுழைக்கிறேன், வெளியேறுகிறேன். சிறு பொழுது என்பது என் உலகில் ஐம்பது அறுபது ஆண்டுகள். எனது ஆயிர ஆண்டுகால அகவையில் இப்படியும் கடக்கின்றன ஐம்பது அறுபது ஆண்டுகள்.
புத்தக அலமாரியிலிருந்து கைக்கு சிக்கியதை எடுத்தேன். அது ‘குற்றமும் தண்டனையும்’ ராஸ்கோல்நிகாவ் சோனியாவிடம் மன்னிப்பு கேட்கும் பக்கங்களுக்காக புரட்டுகையில் எல்லா பக்கங்களின் மூலையிலும் ஈரம். இரண்டாவது வரிசையிலிருந்து விஷ்ணுபுரத்தை எடுத்தேன் அதன் பக்கங்களிலும் ஈரம் இருந்தது. மொத்த அலமாரியையும் எட்டி உதைத்து கீழே கவிழ்த்தேன். எல்லா புத்தகத்திலும் அதே ஈரம். எச்சில் வாடை அறை சுவர்கள் எல்லாம் பாசிபடர்ந்தாற் போல குமட்டியது. அறைக் கதவு வழி பாதி உடலை நீட்டி எட்டிப் பார்த்த ரங்காமணி “ கோட்டி முத்திடுச்சு. ” என்று ஓடினான். ஹாலில் அவர் நில பத்திரங்களை தரையெங்கும் விரித்துப்போட்டு பார்த்துக்கொண்டிருந்தார். இடது கால் அதே ஜன்னல் கட்டையில் வைக்கப்பட்டிருந்தது. அதன் ஊடாக வரும் சூரியனுக்கு அதை தள்ளிவிடும் ஆற்றல் இல்லாதது ஆச்சர்யம் தான். சில்க் கொல்லைப்புற கதவிடுக்கு வழியாக வந்தாள். அவள் வயிற்றில் இப்போது குட்டிகள் இல்லை. காம்புகள் மட்டும் தொங்கிக்கொண்டிருந்தன. சில்க்கிற்கு நான் விற்ற உருவகத்தை எண்ணிச் சிரித்தேன். அதன் பாரத்தால் அவள் நடக்க முடியாமல் தவிப்பதையும் அவள் பாதத்திற்கு கீழ் தரை விரிசல் விட்டிருப்பதாகவும் கற்பனை செய்துகொண்டேன். அவள் மெல்ல நடந்து அவரது காலில் முகத்தை வருடினாள். அவர் அவளைத் தூக்கி மடியிலிட்டார். கைலியின் சொரசொரப்பில் முகத்தை தேய்த்துக்கொண்டே அவள் என்னைப் பார்த்தாள். அவர் ஜன்னல் வழி வரும் சூரியனில் மாயத்தருணங்கள் பலவற்றை தனக்குள் ஒளித்துவைத்திருப்பவராக காட்சியளித்தார். அச்சுதன் ஒரு ஓணானை பல்லில் கடித்து இழுத்து வந்ததை ஒரு கணம் தலையை தூக்கி பார்த்துவிட்டு பத்திரங்களை அடுக்கியவர் சட்டென எழுந்து கைகளை விரித்து “ உன் மீது நீ அன்பு கூர்வதுபோல உன் அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக ” என்று சொல்வார் எனத் தோன்றியது. ரங்காமணி எனக்கு பக்கத்திலிருக்கும் நாற்காலியில் ஏறி படுத்துகொண்டான். அவனது அடிவயிறு நனைந்து ஈரமாகி இருந்தது. ஹாலில் கிடந்த ஓணானை வெளியே போட கொல்லைப் புறத்துக்கு சென்றேன். மதில் சுவரில் ஆண் பூனை அமர்ந்திருந்தது.
அனல் காற்றில் என் சிறகுகள் எரிந்துகொண்டிருக்க மணலில் பதிந்த காலடித் தடங்களைத் தொடர்ந்து பறக்கிறேன். எந்த மலரின் நறுமணமும் வீசாத மணல் பரப்பின் மேடு பள்ளங்களில் என் நிழல் ஏறி இறங்க, அதை பிடிக்க மணலுக்கு வெளியில் பாம்புகள் தலை நீட்டுகின்றன. என் எச்சரிக்கையை மீறி எனது சிறகுகள் உதிர்க்கும் அற்ப நிழலை அடைக்கலமாக ஏற்று ஓடி வந்த சிறு வண்டை பாம்பு ஒன்று கவ்வி மறைகையில் என்னிடம் எந்த சொற்களும் இல்லை. மரித்த ஒட்டகத்தின் விலா எலும்பில் அமர்நது ஆசுவாசமடைகிறேன். ஒரு வழியாக அவர் கண்ணில் பட்டுவிட்டார். அவரை நம்பி பறக்கத் துவங்கி நாற்பத்தி ஐந்து நாட்கள் ஆகின்றன. நான் விட்டகன்ற புல் வெளிகளும் நதிகளும் மலர்களும் சிறுமியரின் விரல் நுனிகளும் என் கண்களில் நீர்த்திரையாக படிந்திருக்கின்றன. அருவிகளை நனையாமல் பறந்து கடக்கும் லாவகத்தை என் சிறகுகள் மறந்துவிட்டன. என் கால்களிலிருந்து இப்பாலையில் விழும் மகரந்தத்திற்காக அங்கு வேர் புடைத்த மரங்களின் ஓலம் காட்டை சூழ்ந்து ஒலிக்கிறது. எறும்புகளற்ற இவ்விடத்தில் மரிப்பதன் துக்கத்துடன் நான் பறக்கத் துவங்குகிறேன். அவர் நடையில் எந்த மாற்றமும் இல்லை. அவர் ஒருமுறை கூட திரும்பி பார்க்காத காலடித் தடத்தை மணல் மூடாமல் வைத்துக்கொள்கிறது. சிறகோய்ந்து அவரது தோளில் அமர்நதுகொண்டேன். முடிகளற்ற முன்தலை சூரியன் அளவிற்கே பிரகாசமாய் இருக்கிறது. முகத்திலிருந்து வியர்வை வழிந்து நீண்ட தாடி அதில் ஊறிக்கொண்டிருக்கிறது. ஒரு மெழுகுவர்த்தி போல அவர் உருகியபடியே நடந்துகொண்டிருக்கிறார். அவரது தோளில் நான் அமர்ந்ததின் பிரக்ஞையே அவருக்கு இல்லை. இறுதியாக நான் மறந்த எல்லா சொற்களையும் திரட்டி நான் அவரிடம் கேட்கிறேன்,
“ இறைச்சிப் பாத்திரத்தின் அருகில் அமர்ந்து, அப்பம் உண்டு நிறைவடைந்து, அங்கேயே ஆண்டவர் கையால் நான் இறந்திருந்தால் எவ்வளவு நலமாயிருந்திருக்கும்! ஆனால், இந்த சிறிய வண்ணாத்திப் பூச்சியை பசியால் மாண்டு போகவோ இப்பாலைநிலத்திற்குள் நீங்கள் என்னை கூட்டிக்கொண்டு வந்திருக்கிறீர்கள் ”
அவர் ஒரு முறுவலுடன் சொல்கிறார், ” அழகு உலகை காப்பாற்றும் மகனே ”
000
சியாம்
சியாம். சென்னையில் தனியார் நிறுவனத்தில் இயந்திர வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். இலக்கியத்துடன் கர்நாடக இசையிலும் ஆர்வம் உள்ளவர்.
அருமை.வாழ்த்துக்கள்.
வளர்க மென்மேலும்.