பிரிட்டிஷ் எழுத்தாளர் எமிலி ப்ரோண்டே இறந்த போது அவருக்கு வயது முப்பது. எமிலி புகழ்பெற்ற ப்ரோண்டே சகோதரிகளில் ஒருவர். அவர் இறப்பதற்கு ஒரு வருடம் முன்பு தான் (1847) “எல்லிஸ் பெல்” என்னும் ஆண் பெயரில், அவருடைய முதலும் கடைசியுமான நாவல் “உதரிங் ஹைட்ஸ்” (Wuthering Heights) வெளியானது. சிக்கலான கதையமைப்பு, கோதிக் (Gothic) கூறுகள் மற்றும் அதன் ஆசிரியரின் அகால மரணம் போன்ற காரணங்களால் இந்நாவல் ஆங்கில செவ்வியல்கள் படிக்கத் தொடங்குபவர்களின் பட்டியலில் தவறாது இடம் பெற்றுவிடும். அப்படி வாசிக்க ஆரம்பித்த பள்ளிச்சிறுமி ஆலிஸிற்கு அதன் கரிய அழகிய நாயகனான ஹீத்க்ளிஃபை விட வட இங்கிலாந்தின் பண்ணைகள், வீடுகள், வயல்வெளிகள், பனி உருகி நிரம்பியிருக்கும் சிறு குளங்கள் குறித்த விவரணைகள் அதிகம் பிடித்திருந்தன. காதலைத் துயரமானதும், கசப்பானதுமாகச் சித்தரித்த அந்நாவலைப் படித்த பின் கதைகள் மகிழ்ச்சியாக முடிய வேண்டும் என்கிற தன் எதிர்பார்ப்பை மாற்றிக் கொண்டு, துயர் நிறைந்த கதைகளைத் தேடிப் படிக்கவும், ரசிக்கவும் ஆலிஸ் ஆரம்பித்தாள்.
கனடிய சிறுகதை எழுத்தாளரும் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்றவருமான ஆலிஸ் மன்றோ இந்த ஆண்டு மே 13 ஆம் தேதி தனது 92 வயதில் காலமானார். அவர் எழுதிய சிறுகதைத் தொகுப்புகள் மொத்தம் பதினான்கு. அவற்றில் பெரும்பாலானவை 40 பக்கங்கள் கொண்டவை. (அ. முத்துலிங்கம் மன்றோவுடனான நேர்காணலில், தமிழ் பத்திரிகைகள் நீண்ட படைப்புகளை அனுமதிக்காததால் அவரது கதைகளின் மொழியாக்கங்கள் அவற்றில் வெளிவரவில்லை என்கிறார்). சாதாரண ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் சார்ந்த கதைகள் அவருடையவை. அதில் பெரும்பாலான கதைகள் தான் பிறந்து வளர்ந்த கிராமப்புற, சிறு நகர கனடாவைப் பின்புலமாக வைத்து எழுதப்பட்டவை. “நான் ஒரு கதையை எடுத்துக்கொண்டு அது ஒரு சாலை போல என்னை எங்காவது அழைத்துச் செல்லும் என்றெண்ணிப் பயணிப்பதில்லை. அதற்குள் நுழைந்து, கொஞ்சம் முன்னும் பின்னுமாக அலைந்து, அங்கும் இங்குமாக குடியேறி, சிறிது காலம் அதிலேயே தங்கியிருக்க முயல்வேன்” என்று 1982-ல் ஒரு பேட்டியில் சொல்கிறார். உண்மைதான், அவருடைய சிறுகதைகள் உலகின் ஒரு முனையில் தொடங்கி இன்னொரு முனையில் வந்து முடிவடைவதில்லை. ஆனால் அவை பெரும்பாலும் மைய கதாபாத்திரத்தின் இளம் வயதில் ஆரம்பித்து, பல அனுபவங்கள் கண்டு கனிந்த வேறொரு வயதிற்கு இலகுவாகத் தாவுபவை. கடந்த காலத்தை நினைத்து ஏங்கும், ஏமாற்றமடையும் கதாபாத்திரங்களும் அவர் படைப்புலகில் உண்டு.
“என் இளமையில், ஊரில் ஒரு பிரசவமாகட்டும், ஒரு குடல்வால் வெடிப்பாகட்டும், உடல் சம்பந்தப்பட்ட எந்த நிகழ்வாக இருந்தாலும் ஒரு பனிப்புயல் பெய்யாத நேரத்தில் நடந்ததாக நினைவில்லை.”
மக்கள்தொகை குறைந்த கனடிய மண்ணில் கண்ணுக்கு இனிமையற்ற இரண்டு மாடி வீடுகள் ஆங்காங்கே தென்படுகின்றன. அங்கு மக்கள் விவசாயம் செய்கிறார்கள், குதிரைகள் வளர்க்கிறார்கள், நரிகளைத் தோல் உரிக்கிறார்கள், கசாப்புக் கடைகள் வைத்திருக்கிறார்கள், தொலைந்த ஆடுகளைத் தேடி அலைகிறார்கள். அவை கிராமப்புற இல்லங்களாக இருந்தால் – அதன் அறைகளில் – குழந்தைகள், சிற்றன்னைகள் பார்க்க, தந்தைகளால் கடுமையாகத் தண்டிக்கப்படுகின்றனர். விவாகரத்தை நோக்கி செல்லும் கணவன்-மனைவிகள் தங்கள் ரகசிய உறவுகளை மற்றொருவருக்குத் தெரியாமல் பேணுகின்றனர். பதின்பருவ பெண்களோ தங்களுக்கு மறுக்கப்பட்ட ரகசியங்களை ஒருவருக்கொருவர் மெல்லியக் குரலில் பகிர்கின்றனர். வேறு சிலர், நோயுற்ற தன் வாழ்க்கைத் துணைகளுக்கு விலக்கத்துடன் பணிவிடை செய்கின்றனர். இன்னும் சிலரோ தன் பாலினத்தவர் மீது ஏற்படும் ஈர்ப்பை உலகம் அறியாதிருக்கக் கவனம் கொள்கின்றனர்.
மன்றோ காட்டும் நகர்ப்புறங்களில் இளம் பெண்கள் எந்நேரமும் பணத்தேவையில் இருக்கிறார்கள். தங்களை உதாசீனம் செய்யும் பொருத்தமற்ற துணைவர்களுடன் சகித்து வாழ கற்றுக் கொள்கின்றனர். நூலகத்தில் பணிபுரிபவர்களாக இருக்கும் பட்சத்தில் பெயர் அறியாத அபிமானிகளின் காதல் கடிதங்களைக் கள்ள சிரிப்புடன் பிரித்துப் படிக்கின்றனர். இதற்கிடையே கலைஞர்களும், “ஒழுக்கத்தை மீறும்” இளம்பெண்களும் பரிதாபமாக அந்நகரங்களில் உலவுகின்றனர். மன்றோ எழுதிய 1970 காலகட்டத்தில் கனடாவில் கிராமிய/ நகரப் பிரிவினை உச்சத்தில் இருந்தது. இந்த பிரிவினை மெல்ல இருபிரிவினரிடையே அவநம்பிக்கையை உண்டாக்கியது. உதாரணத்திற்கு, “தி க்வீர் ஸ்ட்ரீக்” (The Queer Streak) கதையில் வரும் தேவாலயத்திற்கு இரு கதவுகள் உள்ளன – ஒன்று கிராமத்தினருக்கு, மற்றொன்று நகரத்தினருக்கு. கதையில் வரும் வயலட் என்னும் பெண் கிராமத்திலிருந்து, நகரத்திற்கு இடம் பெயர்ந்ததால் நகரக் கதவைப் பயன்படுத்தத் தொடங்குகிறாள். தங்கள் பெருமைக்கு இழுக்கு ஏற்பட்டதாகக் கருதும் கிராமமக்கள் அவளை விலக்கி வைக்கின்றனர். இன்று கனடாவில் இந்த ஏற்றத்தாழ்வு வலுவிழந்திருக்கிறது – ஏனென்றால் 2005-ஆம் ஆண்டிற்குள்ளாகவே மக்கள் குடியிருக்கும் அநேக பகுதிகளும் நகரமயமாக்கப் பட்டுவிட்டன.
“அவளுக்கு பர்னிடம் கேட்க நிறையக் கேள்விகள் இருந்தன, ஆனால் பர்னுக்கு ஓபெராக்களை பற்றி நீங்கள் நினைக்கும் அளவிற்கெல்லாம் தெரியாது; அவர்கள் அந்நேரம் கேட்டுக்கொண்டிருப்பதைக்கூட வேறொன்றோடு குழப்பிக்கொள்வாள். ஆனால் சில சமயம் அவள் முன்னோக்கிச் சாய்ந்து கைமூட்டுகளை மேசை மீது வைத்து, முன்போல் தளர்வாக அல்லாமல் நன்றாக ஆதரவு கொடுத்து அமர்ந்து பாடத் தொடங்குவாள் – அப்பாடலில் வரும் அயல் மொழி வார்த்தைகளைப் பழித்துக்கொண்டே.”
மன்றோவின் அனைத்து கதைகளும் சூடான சூப்புடன் குளிர்ப்போர்வை போர்த்திக்கொண்டு வாசிக்க ஏதுவான கதைகளா? மெல்ல நகரும் நடையும், கதைசொல்லியின் அணுக்கமான குரலும் வாசகரை அப்படி நம்ப வைக்கலாம். ஆனால் அவர் கதைகளில் – குழந்தைகள் முன் தற்கொலைக்கு முற்படும் மனைவிமார்கள் இருக்கிறார்கள், தொழிற்சாலை இயந்திரத்தில் சிக்கி தலை இழக்கும் அப்பாவிகள் இருக்கின்றனர். நீரில் குழந்தைகள் மூழ்குகிறார்கள். (மிருகங்களின் தோலுரித்தல், வான்கோழிகளின் தேவையற்ற பாகங்களை விரல் விட்டு நீக்குதல் குறித்த விவரணைகளும் பக்கம் பக்கமாக உள்ளன) ஆனால் பெரும்பாலான கதைகளில் அசம்பாவிதங்கள் நடந்த பின்னரே அவை குறிப்பிடப்படுகின்றன, கடிதங்களாகவோ அல்லது நினைவுகளாகவோ. அதனால் துயரம் சற்று நீர் கலந்தே நமக்கு கிடைக்கிறது.
ஒரு சில கதாபாத்திரங்களும், கதை நிகழும் இடங்களும் மன்றோவின் எழுத்துகளில் மீண்டும் மீண்டும் காணமுடியும். “பைத்தியக்கார” அத்தையும், கல்லூரியிலிருந்து பாதியில் வெளியேறும் இளம்பெண்ணும் இதற்கு உதாரணங்கள். இந்த இயல்பு ஒரே கதாபாத்திரத்தின் குறைகளையும், நிறைகளையும் வெவ்வேறு கதை சூழலில் அமர்த்தி ஆராய ஆசிரியரை அனுமதிக்கிறது. ஒருவனைப் பற்றிப் பாராட்டும் போது, அவனைக் குறித்த விமர்சனத்தையும் அதே மூச்சில் சொல்லி விட விழையும் மனித மனம் போல.
மன்றோவும் தன் கல்லூரி படிப்பைப் பாதியில் கைவிட்டவர் தான் – அவர் சக மாணவர் ஒருவரைப் படிப்பை விட்ட கையோடு திருமணம் செய்து கொண்டார். ஆனால் அது விவகாரத்தில் முடிந்தது. இந்த பிரிவின் தாக்கம் அவரது பல கதைகளில் காணலாம். “Carried away” என்ற கதையில் ஒரு இளம் பெண் தன்னை துன்புறுத்தும் கணவனை விட்டு ஓட முயற்சித்து மீண்டும் அவனிடமே திரும்புகிறாள். “Beggar maid” என்னும் கதையில் வரும் பெண் தன் குடும்ப பின்னணியைச் சுட்டிக் காட்டி இழிவாகப் பேசும் தன் சக மாணவன்/ காதலன் மீது கோபம் கொள்கிறாள். ஆனால் அவன் அதை நேரடியாக சொல்லவில்லை, “அரசர் கோபெடுவா மற்றும் பிச்சைக்கார பணிப்பெண்” என்னும் எட்வர்ட் ஜோன்ஸின் ஓவியத்தில் உள்ள அந்த பணிப்பெண் அவள் தான் என்று சொல்லவும் அவள் காயப்படுகிறாள். நாட்கள் செல்ல “தன்னை மெல்ல அழிக்கிறான்” எனத் தெரிந்தும், படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு அவனையே திருமணம் செய்ய முடிவெடுக்கிறாள்; “அவன் ஒன்றும் அரசர் கோபெடுவா இல்லை” எனும் சமாதானத்துடன்.
மன்றோவின் கதைகளில் அடிக்கடி தென்படும் இன்னொரு கதாபாத்திரம் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டு இறந்த அவரது அன்னை. அவரது கதைகளில் நோயுற்றிருப்பவர் அன்னையாக, தந்தையாக, கணவனாக எனப் பலவாறாகச் சித்தரிக்கப்படுகிறார். பெரும்பாலும் நோயுற்ற நபருக்குப் பாதுகாவலராக இருப்பவரே கதைசொல்லியாகவும் இருக்கிறார். அக்கதைகள் யாவுமே சோகமான கதைகளும் அல்ல. உதாரணத்திற்கு, “Hateship, friendship, courtship, loveship, marriage” என்னும் கதை. இருவர் காதலர்களா இல்லையா என்பதை அவர்களின் பெயர்களில் வரும் எழுத்துக்களை வைத்து யூகிக்கக்கூடிய ஒரு விளையாட்டே இக்கதையின் தலைப்பு. ஜோஹன்னா என்னும் நடுத்தர வயது பெண்ணிற்குக் காதல் கடிதம் ஒன்று வருகிறது. தான் பராமரிப்பாளராக பணியாற்றும் வீட்டில் வளரும் இளம்பெண் சபிதாவின் தந்தையிடமிருந்து அது வருகிறது. உண்மையில், வேறு ஊரில் தங்கியிருக்கும் தன் தந்தையின் பெயரில் சபிதா மற்றும் அவளது தோழியும் சேர்ந்து ஜோஹன்னாவிற்கு கடிதங்கள் அனுப்பிக்கொண்டிருந்தனர். ஷேஸ்பியரின் “ஒரு மிட்ஸம்மர் நைட்ஸ் ட்ரீம்” இல் வரும் பக் போன்று, அவ்விருவரையும் சேர்த்து வைக்க அவர்கள் முயலவில்லை. மாறாக, அக்கடிதங்கள் மூலம் ஜோஹன்னாவை மட்டம் தட்டவும், அவமானப்படுத்தவுமே எண்ணினர். ஒரு நாள், ஜோஹன்னா யாரிடமும் கூறாமல் தனியே சபிதாவின் தந்தையை பார்க்க கிளம்புகிறாள். சென்ற இடத்தில் நோயுற்றுக் கவனிப்பாரற்று இருக்கும் சபிதாவின் தந்தையை கவனித்துக் கொள்கிறாள். நிலைமை சரிவரப் புரியாவிட்டாலும், தன்னை பார்த்துக் கொள்ள ஒருவர் இருக்கட்டும் என்று அவரும் விட்டுவிடுகிறார். அவர்களிருவரும் பின்னர் திருமணம் செய்துகொள்கின்றனர். “மீட்க வந்த இளவரசன்” இப்போது “மீட்க வந்த இளவரசி” ஆகிறாள் – ‘ஜேன் எயர்’ (Jane Eyre) நாவலில் கவனிப்பாரற்று இருக்கும் தன் காதலனை மீட்க வரும் ஜேன் இங்கு நினைவுக்கு வருகிறாள். (‘ஜேன் எயர்’-ஐ’ எழுதியவர் சார்லோட் ப்ரோண்டே, எமிலி ப்ரோண்டேவின் சகோதரி)
மன்றோவின் படைப்புலகில் பெண்ணியம் முக்கிய பேசுபொருளா? ஏறத்தாழ அவரது அனைத்து கதைகளுமே பெண்ணின் பார்வையில் சொல்லப்பட்டவையே. அதில் பலவற்றில் பெண்கள் அவதியும் படுகிறார்கள். ஆனால் மன்றோ எந்த ஒரு வலுவான கருத்தையும் அவரது படைப்பின் வழி முன்வைப்பதில்லை, யாரையும் பழிப்பதுமில்லை. அனுபவங்களைச் சித்தரிப்பதைத் தான் முதன்மையாகக் கருதுகிறார். (ஒப்புநோக்க சக கனடிய எழுத்தாளர் மார்கரெட் அட்வுட் பெண்களின் அவலங்களுக்கு சமூகமே பொறுப்பு என்று கூறுகிறார். ஆனாலும் அவருமே பெண்ணிய எழுத்தாளர் என்கிற அடையாளத்தை விரும்பவில்லை) ‘ஒரு பெண்ணின் கண்ணோட்டத்தில் கதை சொல்வது முக்கியம் என்று நினைக்கிறீர்களா?’ என்கிற கேள்விக்கு மன்றோ, ‘நான் அதை முக்கியமானதாக நினைக்கவில்லை, ஆனால் நான் ஒரு பெண்ணாக அல்லாமல் வேறு எதுவாகவும் உணர்ந்ததில்லை.. . . . சிறுமியாக இருந்தபோது கூட பெண் என்பதால் தாழ்வு மனப்பான்மை அடையவில்லை. நான் ஒன்டாரியோவில் வசித்ததால் இது நடந்திருக்கலாம்… அங்கே பெண்கள் தான் பெரும்பாலும் படித்தார்கள், பெண்கள் தான் கதைகள் எழுதினார்கள் – ஆண்கள் வெளியே “முக்கியமான” வேலைகளைக் கவனிக்கச் சென்றார்கள், அவர்கள் கதைகளை நாடவில்லை… அதனால் நான் எப்போதும் வீட்டில் இருப்பது போல் உணர்ந்தேன்.”
அவரது கதைகளில் இரண்டு வகையான பெண்கள் தனித்துத் தெரிகிறார்கள் – “நீரில் மூழ்கிக் கொண்டிருக்கும் பெண்” மற்றும் “பைத்தியக்கார பெண்”. “நீரில் மூழ்கிக் கொண்டிருக்கும் பெண்” தொன்மத்தைக் குறித்து மார்கரெட் அட்வுட் விரிவாகவே எழுதியுள்ளார். யாரிந்த நீரில் மூழ்கும் பெண்கள்? சமூகத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தவறி, சண்டையிட்டு அதில் தோற்று மூழ்கிக்கொண்டிருப்பவர்கள். கண்ணீர் சிந்தும், ரத்தம் வடியும் பெண்கள் என்று சொல்லாமல் ஏன் நீரில் மூழ்கும் பெண்கள் என்று அடையாளப்படுத்த வேண்டும்? நீரில் மூழ்கும் ஒரு பெண் ஒருசேரத் துயரத்தையும் மோகத்தையும் எழுப்புகிறாள், ஜான் எவரெட் மில்லிஸ் வரைந்த புகழ்பெற்ற ஒஃபிலியா எழுப்புவது போல. ஹேம்லெட்டின் சொல்லால் பித்தாகி பின்னர் நீரில் மூழ்கி இறக்கும் ஒஃபிலியா, ஷேக்ஸ்பியர் இயற்றிய மகத்தான துயர உருவம்.
நீரில் மூழ்கும் பெண்களைப் போலல்லாமல், சமூகம் முன்வைக்கும் எதிர்பார்ப்புகளைப் புறந்தள்ளி, கீழ்ப்படியாமல், நேர்மாறாக செய்யத் துணிபவர்களுக்கு “பைத்தியக்காரப் பெண்” என்கிற பட்டம் கிடைக்கிறது. நிஜ வாழ்க்கையில், எழுத்தாளர் வர்ஜீனியா வூல்ஃப் (Virginia Woolf) இரண்டு பழிகளையும் சுமந்தவர் எனச் சொல்லலாம் – அவர் மனச்சோர்வடைந்து, தனது 59 வயதில் இஸ் நதியில் மூழ்கி தன்னை மாய்த்துக் கொண்டார்.
மன்றோ எழுத்தாளராகப் புகழ்பெற்ற பின்னர், சீனா, ஆஸ்திரேலியா முதலிய நாடுகளுக்குப் பயணம் செய்தார். தனது ஐம்பதாவது பிறந்த நாளன்று சீனாவிலிருந்த அவர், அங்கிருக்கும் ஜன திரளைக்கண்டு திகைத்துப் போனார்,
“நான் ஒன்டாரியோவிற்கு திரும்பி வந்த முதல் வாரம், எந்த ஒரு வயலை நோக்கினாலும் நூறு பேருக்குப் பதிலாக ஒரே ஒரு பெரிய இயந்திரத்தை மட்டுமே பார்த்தேன். அது மிகவும் விசித்திரமாகத் தோன்றியது; தெருக்கள் மிகவும் வெறுமையாகத் தெரிந்தன,” என்றார்.
உண்மையில் இங்கிருந்து நாம் அவரை படிக்கும் போது அவரது நிலத்தின் மேலும், அவரது கதாபாத்திரங்கள் மீதும் அத்தகைய திகைப்பு ஏற்படுகிறது.
“எனக்கு ஐந்து வயது இருந்தபோது, என் பெற்றோர் திடீரென்று ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்கள், நான் ஆசைப்பட்டதால் தான் அவன் பிறந்தான் என அம்மா சொன்னாள். அவளுக்கு இந்த யோசனை எங்கிருந்து வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. கொஞ்சம் தகவல்களைக் கூடச் சேர்த்து சொல்லுவாள், அனைத்தும் கற்பனை ஆனால் மறுத்துப்பேச முடியாது.”
மன்றோவின் பலம் அவரது யதார்த்தவாதம் மற்றும் அவரது துல்லியமான அவதானிப்புகள். குடும்பத்தில் உள்ள பெண்களையும், அவர்களுடைய குழப்பங்களையும், அறச்சிக்கல்களையும், அவற்றிற்கு பின்னாலுள்ள சிந்தனை ஓட்டத்தையும் அசலாக அவரால் வர்ணிக்க முடிந்ததன் காரணம் மகிழ்ச்சியை விடத் துயரின் மீது அதிக நாட்டம் கொண்டதால் தான். இலக்கிய விமர்சகர் ஹரோல்ட் ப்ளூம் இதனை “சாதாரண மகிழ்ச்சியின்மை” (Ordinary unhappiness) என்று கூறுகிறார். இன்று ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருப்போர், மன்றோவை பற்றிப் பேசும் போது தங்கள் அன்னைகளை, அத்தைகளை, பாட்டிகளை நினைவு கொள்கிறார்கள். வாசிப்பவருக்கு அத்தகைய அணுக்கத்தை அக்கதைகள் அளிக்கின்றன. அதே சமயம், அவர் மேல் வைக்கப்படும் விமர்சனங்களில் ஒன்று கதைகளுக்குள் இருக்கும் ஒற்றுமையே – கதைமாந்தர்களின் பெயர்களை, இடங்களின் பெயர்களை நீக்கினால் சில கதைகள் அப்படியே வேறு சில கதைகளுக்குள் கரைந்துவிடுகின்றன.
யதார்த்தவாதத்தின் எல்லைகளுக்குள் நின்று, சிறு சிறு ஊர்களைக் குறித்து எழுதுவதிலும், நீரில் மூழ்குபவர்களை ஆராய்வதிலும் மன்றோ நிறைவு கொண்டார். அப்படி இருக்கவே, டி.ஹெச். லாரன்ஸ் போன்ற சிறந்த படைப்பாளிகளிடம் காணப்படும் ஒரு வகை ‘இலக்கிய பித்தை’ (literary madness) மன்றோவின் எழுத்தில் காணமுடியவில்லை என்று ஹரோல்ட் ப்ளூம் கருதினார். எனினும் அவருடைய இலக்கிய பங்களிப்பையும் அவரது அபாரமான வாசிப்பனுபவத்தை அளிக்கும் படைப்புகளையும் கருத்தில் கொண்டால் மன்றோ தவிர்க்கப்படாமல் வாசிக்கப்படவேண்டிய எழுத்தாளரே. அவருக்கு அஞ்சலி.
“வாசகர் ஆச்சரியமான ஒன்றை உணர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ‘என்ன நடக்கிறது’ என்பதில் அல்ல, எல்லாம் எந்த விதத்தில் நடக்கிறது என்பதில்.”
***
ஸ்வேதா மயூரி
பெங்களூரில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிகிறார். உலக செவ்விலக்கியங்கள் மற்றும் வரலாறு மீது ஆர்வம் கொண்டவர். சிறுகதைகள் கட்டுரைகள் எழுதிவருகிறார். மொழிபெயர்ப்புகளிலும் ஈடுபாடுள்ளவர்.
மன்றோவின் தனித்தன்மை என்று வாசகர்கள் கருதும் விஷயங்கள், அவருடைய பித்தாக (madness) தெளிவுபடுத்தியிருப்பது விரிவாக ஆராயப்பட வேண்டியதாகும். கட்டுரை அளவில் ஓர் அறிமுகத்தையும் மன்றோவை நோக்கியும் நகர வாய்ப்பளித்தது என்றே கூற வேண்டும்.