கலையே உளசிகிச்சையாய் (பகுதி 5) : அலான் டி பாட்டன் & ஜான் ஆர்ம்ஸ்டிராங்க்

தமிழில் : தென்னவன் சந்துரு

Joseph Cornell, Untitled (Medici Princess), 1948

முந்தைய பகுதிகள் : பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4

தன்னை அறிதல்

நம்மையே நம்மால் சரியாகப் புரிந்துகொள்ள முடிவதில்லை. உள்ளார்ந்த உணர்வுகளும், சந்தேகங்களும், அகமுரண்களும் தொடர்ந்து நமக்குள் எழுகின்றன; தெளிவற்ற சிந்தனைகளும், விசித்திரமான, கலவையான உணர்ச்சிகளும் நம் ஆழ்மனதிற்குள் நிறைந்திருந்தாலும் அவற்றை நம்மால் எளிமையாக வரையறுக்கவோ, புரிந்துகொள்ளவோ முடிவதில்லை. உள்ளூர ஒழுங்கில்லாமல் மாறிக்கொண்டிருக்கும் நம் மனநிலைகளும் நமக்குத் தெரிவதில்லை. எனினும் ​​நாம் உள்ளூர உணர்ந்த, ஆனால் அதுவரை தெளிவாக அடையாளம் கண்டுகொள்ளமுடியாமல் போன ஒன்று, அவ்வப்போது ஒரு கலைப் படைப்பில் துலக்கமாவதைக் காணலாம். பொதுவாக நம் சிந்தையில் இருக்கும் சிலவற்றை நம்மால் சரியாக வெளிப்படுத்தமுடியாமல் போகிறது. அப்படி நம் அனைவரிலும் இருக்கும் தெளிவற்ற சிந்தனைகளுக்கு, சரிநிகரான ஒரு வடிவத்தை அளிப்பதைத்தான் கவிதையின் மைய செயல்பாடென்று அலெக்சாண்டர் போப் (Alexander Pope) கருதினார். அதாவது, நம் சிந்தையிலிருந்து எளிதில் நழுவி மறைந்துவிடக்கூடிய உணர்ச்சிகளை, இன்னும் மேம்பட்ட வடிவமாக மருவுருவாக்கம் செய்து நாம் தெளிவாக புரிந்துகொள்ளும் வகையில் நமக்கே திரும்ப அளிப்பது என்று சொல்லலாம்.

ஜோசப் கார்னெல்-Joseph Cornell வடிவமைத்த – Untitled (Medici Princess – மெட்டிசி பரம்பரையின் இளவரசி) பெட்டியை பார்க்கும்போது எதையோ அடையாளம் கண்டுகொண்டதைப்போல ஒரு விசித்திர உணர்வு நமக்குள் ஏற்படுவது ஏன்? இப்பெட்டி ஒருவருடைய எந்த பகுதியை பிரதிபலிக்கிறது?

தன் ஆறாம் வயதிலேயே மரணத்தை சந்திக்க நேர்ந்த ஃப்ளோரன்ஸ்-ன் பிரபுவான கோசிமோ ஐ டி மெடிசி-யின் (Duke of Florence, Cosimo I de Medici) மகள் பியா-வின்(Bia) உருவப்படத்தை அது வெளிப்படையாகவே கொண்டிருந்தாலும், அதைத்தாண்டிய விஷயங்களை நோக்கி நம் கவனத்தைச் செலுத்தத் தூண்டுகிறார் கார்னெல். ஒற்றை அடையாளத்தால் அறியப்படும் ஒன்றின் பல்வேறுபட்ட உட்கூறுகளை ஒருவர் எவ்வாறு ஒருங்கிணைத்துக் கொள்ளலாம் என்பதற்கான உதாரணமாக அந்த பெட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. நாம் பல்வேறுபட்ட உறவுகளின் பின்னல்களால் உருவாகியிருப்பதை அது உணர்த்திவிடுகிறது. குறிப்பிட்ட சில உணர்வுகளின் குறியீடாகச் சுட்டப்படும் பறவைகளும், பூக்களும், ஒரு ஏணியும் அந்த பெட்டிக்குள் இருக்கிறது; நிலவரைபடங்களும், சூரிய கடிகாரமும்(sundial), ஒரு நரியின் படமும்கூட அதில் இடம்பெற்றிருக்கின்றன. பியா-வின்(Bia) குணாதிசயத்தை வெளிப்படுத்துவதாகவும், அவளுடைய அனுபவங்களின் பதிவாகவும் இவற்றைக் கருதலாம். அவற்றை என்னவென்று நம்மால் குறிப்பிட்டு சொல்லிவிடமுடியாது என்றாலும் ஒரு சிக்கலான குறியீட்டுத் தொகுப்பே நம் ஒட்டுமொத்த வாழ்க்கையின் வரைபடத்தையும் உருவாக்குகிறது என்னும் கருத்திற்கு நாம் எதிர்வினையாற்றுகிறோம். நம் சுயத்தின் செறிவடைந்த சேகரமே அந்தப் பெட்டி.

தெளிவற்று இருக்கும் ஒருவரது சுய அடையாளம் கையாளக்கூடியதாகவும், பயன்படுத்திக்கொள்கிற வகையிலும் இங்கு அமைந்திருக்கிறது. இந்த பெட்டியில் அடையாளம் காணமுடிகிற விஷயங்களுக்கும், அதன் அடிநாதமாக இருக்கும் படைப்பூக்கப் பண்பிற்கும் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை. கார்னெலைப் (மறைவு: 1972) போன்ற ஒரு கலைஞரால் இதுபோன்றதொரு பெட்டியை நம் ஒவ்வொருவருக்கும் உருவாக்கித்தர முடியும். அதைக்கொண்டு நம்மையே இன்னும் தெளிவாக புரிந்துகொள்ள முடியும்; நம்மைப்பற்றி மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துவதற்கான ஒரு கருவியாகவும் அது அமையக்கூடும்.

Cy Twombly, Panorama, 1957

குறியீட்டு அம்சம் கொண்ட, சய் ட்வாம்ப்லி-யின் (Cy Twombly) கீறல் நிறைந்த, கருமையான மேற்பரப்பை உற்று நோக்கும்போது ஒன்று புலப்படுகிறது. சில நேரங்களில் கண்ணாடியில் நம் உருவத்தை பார்க்கும்போது, நம் தோற்றத்தில் அதுவரை கவனத்திற்கு எட்டியிருக்காத ஒன்றை திடீரென்று கண்டுகொள்வோம் அல்லவா? அதைப்போலவே இங்கும் நமக்கு புதிதாய் ஒன்று அகப்படுகிறது. நம் முகத்தில் புதிதாய் வந்திருக்கக்கூடிய ஒரு கரும்புள்ளியை அடையாளம் கண்டுகொள்வதற்கு பதிலாக, நம் அகஉணர்வுகளின் மீது ஆழ்ந்து கவனம் செலுத்த நமக்கு ஒரு வாய்ப்பு அமைகிறது.

நம்முள் எளிதில் பிடிபடாத, புதிரான பல்வேறு ஆழ்மனநிலைகள் இருக்கின்றன. அப்படியான தருணங்களை ஒருவர் அடிக்கடி எதிர்கொள்ளும்போதும், அதை பிரித்தறிய முடிவதில்லை. நம் ஆழ்மனதின் பகுதிகளை பிரதிபலிப்பதற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கண்ணாடிகளாக ட்வாம்ப்லி-யின் படைப்புகளை அடையாளப்படுத்தலாம். நாம் கூர்ந்து கவனிக்கும் வகையிலும், எளிதாக அடையாளம் காணும் வகையிலும் அது உருவாக்கப்பட்டிருக்கிறது. அவ்வப்போது நம் மனதிற்குள் சில சிந்தனைகள் எழும், கிட்டத்தட்ட நாம் என்ன யோசிக்கிறோம் என்பது பிடிபடுவது போல் இருக்கும், ஆனால் அதை பின்தொடரமுடியாமல் போய் அது எப்படியோ நழுவி மறைந்துவிடும். அவற்றைத்தான் இக்’கண்ணாடிகள்’ கவனப்படுத்துகின்றன. (கனவுகளை மீள்பதிவாக்க நாம் சிரமப்படுவதுபோல).

இலட்சியங்களையும் குழப்பங்களையும் குறிப்புணர்த்தும் வாழ்க்கைத் தருணத்தைத்தான் அவை சித்தரிக்கின்றன; அதன் மேற்பரப்பிலுள்ள வெள்ளை திட்டுக்கள் ஒருவேளை கரும்பலகையில் எழுதி அழிக்கப்பட்ட வார்த்தைகளாக இருக்கலாம்; அல்லது அவை தூரத்து நட்சத்திரங்கள் வெளிப்பட்டு ஒளிர வளைந்துகொடுக்கும் மேகக்கூட்டங்களாகக்கூட இருக்கலாம். அவை என்னவாக இருக்கும் என்கிற கேள்வியைத்தாண்டி நாம் அதை துல்லியமாகப் பார்க்கமுடியாமல் போவதால் ஒரு கணம் ஸ்தம்பித்துப்போய் ஒரு உச்சதருணத்திற்கிடையில் மிதக்கும் உணர்வை அடைகிறோம்.

நாம் ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ளும் இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம், இருந்தும் அதை முழுவதுமாக புரிந்து கொண்டிருக்கவுமில்லை. இந்த தருணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால் நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு அவை பிடிகொடுப்பதில்லை; கடைசியில் நாம் அச்சிந்தனையை கைவிடநேர்கிறது. அன்பு, நீதி, வெற்றி போன்ற நம் ஆழ்மன அடிப்படை உணர்வுகளின் மேலான நம் தனிப்பட்ட மதிப்பில் ஒரு வளர்ச்சி எட்டப்படாமல் போய்விடுகிறது. அதற்குள் நம் மனம் வேறொரு திசைக்கு தாவிவிடுகிறது. ட்வாம்ப்லியின் ஓவியத்தை பார்க்கும்போது, அது ஒரு முக்கியமான சிந்தனைக்கு இட்டுச்செல்கிறது. முக்கியமான கேள்விகளுக்கு வியப்புற்று, பின்பு குழப்பத்திற்குள்ளாகும் நம் மனதின் ஒரு பகுதி தொடக்கத்தில் சரியான கவனம் பெறுவதில்லை. நாம் அதை முறையாக வளர்த்தெடுப்பதில்லை. இருந்தும் இப்போது அப்பகுதியின் பிரதிபலிப்பை கலையில் (இந்த ஓவியத்தில்) நாம் கூர்ந்து கவனிப்பதன்மூலம் அதை நிறைவுசெய்யமுடியும் என்ற நம்பிக்கை எழுகிறது.

இது ஒரு விசித்திரமான சிந்தனைதான், “மனிதனுக்கு மட்டும்தான்  தனிப்பட்ட சுய அடையாளங்கள் இருக்கும் என்றில்லை; பொருட்களுக்கும், இயற்கை நிலப்பரப்புகளுக்கும்கூட தனித்திறன் பண்புகளும், குணாதிசயங்களும் இருக்கின்றன; ஏன், ஜாடிகளிலும், பெட்டிகளிலும்கூட அவற்றை நாம் கண்டறிய முடியும்”. இது விசித்திரமாக தோற்றமளிக்க காரணம், நாம் பெரிய அளவில் நம் குணாதிசயத்திற்கான காண்பியல் சார்ந்த பங்களிப்பை இழந்துவிட்டிருப்பதுதான். இருப்பினும், சில பொருட்களுடன் இனம்காணமுடியாத நெருங்கிய உறவை நாம் உணர்வது, ​​​​அதில் இருப்பதாக நாம் அனுமானிக்கும் மதிப்புகள், நம் மனதில் இருப்பதை விட தெளிவாக அவற்றில் வெளிப்படுவதினால்தான். கலை சுய புரிதலை மேம்படுத்துகிறது; விளைவாக, நம்மைப்பற்றி மற்றவர்களுக்கும் எடுத்துரைக்க வழிவகுக்கிறது. பொதுவாக நம் அனுபவங்களை மற்றவர்களிடத்தில் பகிர்வதும் அதே உணர்ச்சிநிலைகளை அவர்களிடத்தும் கடத்துவதும் அவ்வளவு எளிதாக இருப்பதில்லை. பல சமயங்களில் வார்த்தைகளை சரியாக ஒருங்கிணைக்கமுடியாமல் சிதறிப்போய், முழுமையை எட்டமுடியாமல் போய்விடுகிறது.

Christen Kable, View of Osterbro from Desserings, 1838

ஒரு இதமான பின்மதிய வேலையில், ஏரிக்கரை ஒரத்தில் நடை சென்றதை, ஓவியத்தின்(காண்பியல் கலைகளின்) உதவியின்றி விவரிப்பதைப் பற்றி யோசித்துப்பாருங்கள். வார்த்தைகளால் உணர்த்திவிடமுடியாத இவ்வனுபவத்தைத்தான், கிறிஸ்டன் காப்கி (Christen Kobke) தன் ஓவியத்தில் கையகப்படுத்திக்கொடுக்கிறார். கோபன்ஹேகன்-இன் (Copenhagen) புறநகர் பகுதியில் ஒரு மதியப் பொழுதை இயல்பாக சித்தரிப்பதன்மூலம் இதை நிகழ்த்திக்காட்டுகிறார். இவ்வோவியத்தில் வெளிப்படும் ஒளி, ஆழ்ந்த அர்த்தத்தைக் கொண்டிருக்கிறது – நம்மால் அந்த அர்த்தத்தை என்னவென்று சொல்லிவிட முடியாமல் போனாலும்கூட!

ஒருவர் இவ்வோவியத்தை காட்டி ‘ஒளி இப்படி வெளிப்படும்போது, நானும் அப்படியாக உணர்கிறேன்’ என்று சொல்ல நினைக்கலாம்.

எதுவும் பெரிதாக நடக்காத, ஒரு இயல்பான தருணத்திற்கான விருப்பத்தை காப்கி ஒரு படிமமாக உருவாக்கியிருக்கிறார். ஒரு சிறுவன் கம்பியை பற்றிக்கொண்டிருக்கிறான்; கருப்புத்தொப்பி அணிந்த மற்றொரு நபர், படகின் அடிப்பகுதியில் தன் நண்பர் ஏதோ சீரமைப்பு செய்வதை பார்த்துக் கொண்டிருக்கிறார். மூன்று பெண்கள் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கை அதன்பாட்டிற்கு ஓடிக்கொண்டிருக்கிறது. அங்கு நாடகப்பாங்கில் எதுவும் நிகழவில்லை; எந்த எதிர்பார்ப்புகளும் இல்லை; குறிப்பிட்ட எந்த இலக்கும்கூட இருப்பதாகத் தெரியவில்லை. சலிப்போ விரக்தியோகூட இவ்வோவியத்தின் சாரமாய் அமைந்திருக்கலாம். எனினும் அப்படியல்லாமல் அது பிரகாசத்தைக் கொண்டிருக்கிறது.  சோர்வை அல்லாமல் சாந்தத்தையும், செயலின்மையை அன்றி ஆழ்ந்த அமைதியையும் அது வெளிப்படுத்துகிறது.

குறிப்பிடத்தகும் வகையில் ‘இருப்பின் மகிழ்ச்சியை இவ்வோவியம் இயல்பாக வெளிப்படுத்திவிடுகிறது’. அதிலிருக்கும் பிரகாசமான ஒளி மட்டும் நம்மை ஈர்க்கவில்லை; அதைத்தாண்டி அது பிரதிபலிக்கும் ஆன்மாவின் நிலைதான் நம்மை ஈர்ப்படையச்செய்கிறது. சொற்களால் வெளிப்படுத்திவிடமுடியாத ஒருவரது உணர்வை இவ்வோவியம் வெளிப்படுத்திவிடுகிறது. ஒருவர் இவ்வோவியத்தை சுட்டிக்காட்டி “நானும் சில நேரங்களில் அப்படித்தான் உணர்கிறேன்; மேலும் அது அடிக்கடி நிகழ வேண்டும் என்றும் விரும்புகிறேன்” என்று சொல்லலாம். இவ்வுணர்வை இன்னொருவர் புரிந்துகொள்ளும் பட்சத்தில் அது ஒரு நல்ல நட்பின் தொடக்கமாகக்கூட அமையலாம்.

இப்படியாக நம்மை புரிந்துகொள்ளவும், மற்றவர்களுக்கு நாம் யார் என்று தெரிவிக்கவும் கலை உதவுவதால், நம்மைச் சுற்றி எந்த வகையான கலைப் படைப்புகளை வைக்கலாம் என்பதில் அதிக கவனம் செலுத்தத் தொடங்குவோம். நம்மால் குறைவாகவே செலவு செய்யமுடியும் என்னும் பட்சத்தில்கூட, வீட்டினுள் இடம்பெறப்போகும் பொருட்களுக்கும் உள்அலங்காரங்களுக்கும் அதிக நேரம் செலவிடுவோம் – அதாவது நம் அடையாளத்தை உலகிற்கு அறிவிக்கப்போகும் அழகியலுக்காக. நம் வீடுகளை அலங்கரிக்கும்போது நாம் எவற்றிலெல்லாம் உன்மையிலேயே கவனம் செலுத்துகிறோம் என்பதை சரியாக அணுகினால் புலப்படுவது இதுதான். நாம் வெறுமனே பகட்டாக வெளிக்காட்டிக்கொள்ள மட்டுமே முயற்சிக்கிறோம்; இன்னும் சொல்லப்போனால், நாம் எவ்வளவு சுவாரஸ்யமானவராகவும் வெற்றிகரமானவராகவும் இருக்கிறோம் என்பதை தம்பட்டமடிக்கும் வகையில் நடந்துகொள்கிறோம்.

ஆனால் உட்புற அலங்காரக் கலையில், இதைவிட சுவாரசியமான அம்சம் ஒன்று உள்ளது. நம் சுயபெருமிதத்திற்காக மட்டும் அல்லாமல், அதன்வழியாக சிலவற்றை நாம் வெளிப்படுத்தவும் நினைக்கிறோம்.  வார்த்தைகளால் உணர்த்திவிடமுடியாத நம் குணாதிசயத்தின் பகுதிகளைப் பற்றி மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துகிறோம். உதாரணமாக, இருபதாம் நூற்றாண்டைச்சேர்ந்த ஜெர்மன் கட்டிடக்கலை நிபுணர் ரிச்சர்ட் ரைமர்ச்மிட்-ன் (Richard Riemerschmid) டின்னர் பிளேட்டை இதன் காரணமாகத்தான் இப்போதும் நாம் வாங்க நினைக்கிறோம்.

Richard Riemerschmid, ‘Blaue Rispe’ Plate, 1903-5

ரைமர்ச்மிட் வடிவமைத்த இந்த தட்டுக்களின் மீது நமக்கு ஈர்ப்பு ஏற்படுவதற்கான காரணம், “நம்மிடம் சிறப்பான ரசனையும், அதை வெளிக்காண்பித்துக்கொள்ள பண வசதியும் இருக்கிறது என்று நம் விருந்தினர்கள் நினைப்பதற்கான வெற்று விருப்பம் மட்டும்தான் என்று சொல்லிவிடமுடியாது”. இத்தட்டுக்களை நாம் முதலில் கடையில் பார்த்தபோது நமக்கேற்பட்ட ஈர்ப்புக்குப்பின்னால் ஒரு அடையாளம்காணல் நிகழ்ந்திருக்கிறது: “எனக்கான சரியான டின்னர் செட் வடிவம் இதுதான்; ஏனென்றால் இது என் ஆழ்மனதை பிரதிபலிக்கிறது என்று நாம் நினைத்திருக்கலாம். இம்மாதிரியான வடிவத்தைக்கொண்டு (தட்டு)  நான் யார் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த முடியும்” – அதாவது நானாக இருப்பது எப்படி இருக்கும் என்பதை!

இதுபோன்றதொரு கூற்று சற்றே மிகைப்படுத்தப்பட்டதாகக்கூட தோன்றலாம். ஆனால் இப்படியான ஒன்று ஒருவேளை நமக்கு ஏற்கனவே அறிமுகமாகியிருக்கவில்லை என்பதானாலும் அப்படித் தோன்றியிருக்கலாம் அல்லவா? அழகுணர்ச்சி சார்ந்த விஷயங்களை எடுத்துக்கொண்டு, அவற்றை நம் உளவியல் அடிப்படையில் முறைப்படுத்திக்கொள்ள நாம் பயிற்றுவிக்கப்படவில்லை -அவ்வளவுதான்.

கலைப் பொருட்களின் மீதான நமது விருப்பம் அவற்றை மட்டுமே சார்ந்ததல்ல. சில குறிப்பிடத்தக்க உதாரணங்களில் நாமும் அவற்றைப் போலவே இருக்கிறோம். அவை நம்மை நாமே அறிந்துகொள்ளும் ஊடகங்களாக செயல்படுகின்றன, மேலும் நாம் உண்மையில் யார் என்பதைப்பற்றி அவை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்திவிடுகின்றன.

***

தென்னவன் சந்துரு

வங்கித் துறை ஊழியரான தென்னவன் சந்துரு கலை இலக்கியம் சார்ந்த கட்டுரைகளில் ஈடுபாடுடையவர். மொழிபெயர்ப்பாளர். நவீன தமிழ் இலக்கிய வாசிப்பில் ஆர்வம் கொண்டவர்.

1 Comment

  1. இந்தக் கட்டுரைத் தொடர் ஒரு வகையில் கலையின் பயன்மதிப்பை பற்றி பேசுகிறது. கலை உண்மையில் நமக்கு என்னவாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. ஆனால் எவ்வளவுதான் இது பொதுவாக பேசினாலும் இக்கட்டுரைகளை முதலில் வாசிக்கையில் கலையின் திட்டவட்டமான ஒரு பயன்மதிப்பையே நாம் அடைகிறோம். இக்கட்டுரைகள் சில கலைப்படைப்புகளை பற்றி சொல்வதனால் அப்படி தோன்றலாம். கலை இவற்றை எல்லாம் செய்கிறது எனும் போதே அது எதையெல்லாம் செய்யாது என்பதைக் குறித்து யோசிக்க வேண்டி வருகிறது. Paracetamol மாத்திரை காய்ச்சலை உடல்வலியை குணப்படுத்தும் எனும் போது அது புற்று நோயை குணப்படுத்தாது என்று யோசிக்க தோன்றுவதுபோல. கலை ஒரு சர்வரோக நிவாரணி போல பாவிக்கப்படும் சூழலில் இந்தக் கட்டுரைகள் அவற்றை பரிசீலிக்க வைக்கின்றன, இவற்றின் நேரடி நோக்கம் அது இல்லை ஆயினும்.

    தொடர்ந்து மொழிபெயர்த்து பதிவிடும் நண்பர்களுக்கு நன்றி.

உரையாடலுக்கு

Your email address will not be published.