வேலியின் கீழ் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கிராவல் கற்களின் மீது ஒட்டியிருந்த இலவம் பஞ்சு கொத்துகளை நனைத்துப் பக்கத்துக் கொல்லையை நோக்கி எறிந்து கொண்டிருந்தேன். தாத்தா தாங்கியிருந்த கூர் முனை இரும்பால் பஞ்சைக் குத்தி ஓரிடத்தில் குவித்திருந்தார். ‘’ கம்னாட்டி நாய்…நமக்கு உபத்திரவம் தர்ரத்துக்குன்னே எல்லா மரத்தையும் நம்ம வீட்ட பாத்தே நட்டுருக்கான்’’ எனப் பஞ்சைக் குத்தச் சென்று தடுமாறப் போனார். கிரவல் கற்களின் இடுக்குகளில் கொக்கியைப் போல இரும்பை ஆழமாக ஊன்றி என்னைப் பற்ற வந்த கையை பின்னிழுத்துக் கொண்டார்.
சலீம் அத்தோக், வீட்டில் இல்லாத ஐந்து நாட்களாய் இற்றுப்போயிருந்த வேலிக்கம்புகளை மாற்றுவது, வேலியை உரசும் மரக்கிளைகளை வெட்டுவது என அடுக்கடுக்காய் எனக்கு வேலைகள் காத்திருந்தன. வேலியைத் தொட்டு உயரமாய் வளர்ந்திருந்த பஞ்சு மரத்தில் இன்னும் முற்றி வெடிக்கும் பருவத்திலிருந்த காய்களை அண்ணாந்து பார்த்து புகையிலைச் சாற்றைத் துப்பினார். காற்றுக்குப் பஞ்சு பறந்து வந்து விடுவதால் வாளியில் குளத்து நீரை நிரப்பி அதில் பஞ்சை நனைத்து பக்கத்து கொல்லையில் தூரமாய் வீச வேண்டும். காற்றுக்குப் பறந்து வேலியில் ஒட்டிக் கொள்ளும் பஞ்சு திரிகளைப் பொறுக்கி எடுத்திக் கொத்தாக்கி மறுபடியும் நனைத்து வீச வேண்டும். கொஞ்சம் வாய் தவறி சலிப்பாக எதையாவது முனகினால் கூட ‘’ என்னடா…என்னடா…கொணகொணன்னு பொம்பளைப்புள்ளையாட்டம் மொணவுற…போடா…போயி வூட்டுக்குள்ள பூந்து பொட்டக் கோழியாட்டம் அடப்பெடுத்து ஒக்காந்துருங்க…நானே ஒண்டியாளா கெடந்து ஒரியாடி சாவுறேன்…நாளைக்குப் போறப்ப நானா எல்லாத்தயும் கட்டிக்கிட்டுப் போவப்போறேன்…’’ என எகிறுபவரை நினைத்து மனதுக்குள்ளே முனகிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. மூட்டித் தள்ளியிருக்கும் வயிற்று வரை கறுப்புக் காற்சட்டை அணிந்து புலம்பி கொண்டிருந்தார். இந்த மாதிரிச் சமயங்களில்தான் ‘’தாத்தாவுக்கும் பாட்டிக்கும் தொணையா ரெண்டு வருசம் இங்கயே இருந்து படிடா’’ எனச் சொல்லி விட்டுச் சென்ற அப்பாவின் மீது கோபம் வரும்.
‘’டேய்…ஏன்டா… ….சலீம் வந்துட்டானா வீட்டுக்கு…கூட்டிக்கிட்டு வந்துட்டாங்களா’’ என மறுபடியும் கேட்டார். சலீம் அத்தோக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நான்கைந்து நாட்கள் கடந்திருந்தன. ‘’ இல்ல…’’ என்றேன். ‘’ ஹூம்…என்னது…வந்துட்டானா இல்லையா…உள்ளுக்குள்ள பேசுனா எனக்கென்னா மயிரா வெளங்கும்’’. பஞ்சு மரத்திலிருந்து பொத்தென விழுந்த அணிலொன்று வேலியில் ஏறி மூங்கில் புதருக்குள் ஓடி மறைந்தது.
‘’ஹாசிபித்திரியில ரத்தம் எடுத்துருக்காங்களாம்..…அது என்னாதுன்னு மக்மால்க்கு அனுப்பியிருக்காங்களாம்…ரிசால்டு வந்தா தான் பேரு வெட்டுவாங்களாம்…இன்னிக்குத்தான் தெரியும் போல..’’ என ஒரே மூச்சில் சபிக்கா சொன்னதைச் சொல்லி முடிப்பதற்குள் அவசரமாய் ;;டேய்…அந்த கத்தி எடுத்துட்டு வாடா’’ என்றார். குளத்து மேல் கட்டப்பட்டிருந்த பலகை கொட்டாய்க்குள் சென்று கத்தியைத் தேடியெடுப்பதற்குள், ‘’முழிக்கிறத பாரு……. விருந்தாளி மாறித்தான் நடந்துக்குவீங்க…’’ எனக் கத்தி, ‘’துத்தெறிக்கி’’ எனப் புகையிலைச் சாற்றைக் காறித் துப்பினார். கையில் வைத்திருந்த இரும்பு கல்லில் பட்டு உரசும் சத்தம் கேட்டது. கொட்டகையில் பழைய பிலிப்ஸ் வானொலியின் லைசன்ஸ் மாட்டப்பட்டிருந்த இடப்பகுதிக்குக் கீழ் இருந்த வாளிக்குள் கத்தி கிடந்தது.
வேலிக்குப் பக்கத்தில் இருந்த சீலாட் களத்தையொட்டி வளர்ந்திருந்த மாமரத்தின் வாதுக்கள் வேலியைத் தொட்டுக் கொண்டிருந்தன. என்னை நன்றாக வாதுகளை இழுத்துப் பிடிக்கச் சொல்லி ஒங்கி வெட்டினார். அத்தோக் வருவதற்குள் வாதுக்களை வெட்டிவிடவேண்டுமென வேகமாகவே செய்து கொண்டிருந்தார். கத்தியை ஓங்கும் போது அவரது வலது கை அண்டையில் தொங்கி கொண்டிருந்த ஆடுசதையுடன் சேர்த்து பாலுண்ணிமருக்களும் அசைந்தன.
தாத்தாவுக்கும் சலீமுக்குமான சண்டை எப்பொழுது தொடங்கியதென்று சரியாகச் சொல்ல முடியவில்லை. ‘’ பெல்டா நிலத்துக்கு வர்ரப்பவே… வேணாம் போவாதீங்க…புலி, யானை எல்லாம் இருக்குற பெரிய மலங்காட்டுல அடச்சுப்புடுவானுங்க…ஒரு அல்ல அவசரத்துக்குக் கூட பக்கத்துல யாரும் இல்லயாம்…ஒரு வீட்டுக்கும் அடுத்த வீட்டுக்கும் பட்டப்பகல்ல நடந்து போர்ரத்துக்கே பயமா இருக்குமுன்னு டிராக்டர் ஓட்டுன ராஜேந்திரன் அண்ணன் சொன்னாரு…எஸ்டேட் சனமே வேணாம் வேணாம்ன்னு வந்து சொன்னாங்க..ஒங்க தாத்தன் மலய புரட்டுறேன்…மானத்த வில்ல வளைக்குறேன்னு சொல்லி கூட்டிட்டு வந்தாரு…..வந்த புதுசுல நெடுக்க மேக்கட வீடுங்களா ஒரே மாதிரி கட்டி வச்சிருக்காங்க… எல்லா மலாய்க்காரங்க வேற…மலாய் பாசையும் தெரியாது…சலீம் பொம்பள குந்தாணி நெற மாசமா இருந்தா….மலாய் பேசத்தெரியாதனால சைகைலத்தான் அவக்கிட்ட பேசுவேன்…வீட்டுல இருக்குற பொருள எடுத்து வந்து இதுக்கு மலாய்ல என்ன என்னான்னு கேட்பேன்…அவத்தான் ஒன்னொன்னுக்கும் இன்னாதுன்னு மலாய் சொல்லிக் கொடுத்தா…இவருக்குப் பக்கத்து வீட்டுல என்ன பேசுனாலும்…செஞ்சாலும் நம்பள பாத்துத்தான் செய்யுறாங்கன்னு ஒரே ரகளை… வீட்டுக்குப் பின்னால் கொளம் வெட்டுனப்பத்தான் சண்ட ஆரம்பிச்சுச்சு..’’
நீர்த் தேவைக்காக தாத்தா குளம் வெட்ட தொடங்கியவுடன் சலீம் புளோக்கில் உள்ள மற்ற குடியேற்றக்காரர்களையும் திரட்டி பெல்டா நிலத்திட்ட நிர்வாகியிடம் புகார் கொடுத்தார். குளம் வெட்டினால், அவர்கள் வீட்டுப் பின்னால் இருக்கும் நிலத்தடி ஊற்றுத் தூர்ந்து போகுமென்பதாலே புகார் கொடுத்திருந்தார்கள். பெல்டா நிர்வாகி குளம் வெட்டுவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கச் சொன்னதையும் தாத்தா கேட்காததால், பாராங் கத்தியுடன் சலீம் குளத்துக்கு முன் வந்து நின்றிருக்கிறார். ‘’ படவா பய…என்னடான்னு சொல்லி ..வர்ரது வரட்டுமுன்னு கொளத்த வெட்டுனேன்…தண்ணி இல்லாதப்ப ஒரே புளோக்குல இருக்குற மத்தவங்களும் தண்ணி எடுத்துக்க விடச் சொல்லி மேனேஜரு சொல்லி பெரச்சனய தீர்த்து வச்சாரு…அப்ப கூட இவன் நான் இல்லாத நேரமா பார்த்துத்தான் தண்ணியா எடுத்துட்டுப் போவான்…அப்படியே பாத்துக்கிட்டுருப்பவே காத்து மாரி வந்து தண்ணி அள்ளி எடுத்துட்டுப் போயிருவான்…’’ இப்பொழுது கூட தாத்தா இல்லாத வேளைகளில் மட்டுமே குளத்தில் போட்ட தூண்டிலை எடுத்து வேலியின் இடைவெளியில் வெளியேறிச் செல்லும் சலீமைப் பலமுறை பார்த்திருக்கிறேன். இதனாலே மோட்டாரில் வெளியே செல்லும் போதுகூட முதல் கியரிலே மிக மெதுவாக சலீம் வீட்டைக் கண்ணாடியில் நோட்டமிட்டவாறே தாத்தா செல்வார்.
வீட்டுக்குத் திரும்பியதும் வீட்டைச் சுற்றிலும் இடம் மாறியிருக்கும் பொருட்கள், காணாமற் போயிருக்கும் தேங்காய்கள், காலடித்தடங்கள் எல்லாவற்றையும் நோட்டமிட்டு வசைபாடுவார். தாத்தாவுக்கு வீட்டிலிருந்து பின்பக்கக் கொல்லை வரை பொருட்கள், மரங்கள் இருக்கும் இடம் முதல் அணில், உடும்பு முதலான விலங்குகளின் நடமாட்டம் கூட மிக நன்றாக நினைவில் இருக்கும். மரத்தில் ஓடும் அணில்களைக் மர அணில், தரை அணில் என வகைபிரித்துச் சொல்வார். அவருடைய கண்களுக்கு மட்டும்தான் மேற்பரப்பில் குஞ்சுகள் நீந்த கீழே காவலிருக்கும் விறால் மீன்களின் எண்ணிக்கை குறைந்திருப்பது தெரியும். ஆனால், தாத்தாவால் கண்டுபிடிக்க முடியாத மர்ம்மாகச் சலீமின் நடவடிக்கைகள்தான் இருந்தன. பெல்டா நிலத்தில் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கும் பத்து ஏக்கர் தோட்டத்தில் ரப்பர் பயிரிடப்பட்டிருந்த சூழலில் தாத்தாவின் தோட்டத்தைத் தாண்டித்தான் சலீமின் தோட்டம் இருந்தது. ‘ அவன் எங்கன வந்து மரம் வெட்டுவான்….மாசத்துல பாதி நாளு…எதாவது வலின்னு சொல்லி வூட்டுக்குள்ளத்தான் கெடந்தான்…அப்படி அவன் வேலைக்கு வந்துட்டா…அவன் மொகத்துல முழிக்க கூடாதுன்னு…’ தலையில் அடித்தவாறே’’ ஒங்க தாத்தனுக்குச் சாமி வந்த மாதிரி…நானூத்துச் சொச்சம் மரத்தையும் இரண்டு மூனு மணி நேரத்துல…மளமளன்னு வெட்டித் தள்ளி பாலு எடுத்து ஸ்டோருல ஊத்திருவாரு’’ என பாட்டி சொல்வார்.
அந்தியில் தொடங்கும் சீலாட் பயிற்சி இரவு வரையில் விளக்கு வெளிச்சத்தில் நடந்து கொண்டிருக்கும். தலையில் சுற்றப்பட்ட கறுப்புத் தலைப்பாகையும் கறுப்பு சட்டையும் நீண்ட காற்சட்டையும் சிவப்பு நிற வார்ப்பட்டையுமாய் மாணவர்கள் வரிசையாக களத்து மணலில் நின்றிருப்பார்கள். சலீம் கைலியும் தலையில் கறுப்பு தலைப்பாகையுமே மட்டுமே அணிந்து மர நாற்காலியில் அமர்ந்திருப்பார். அவருக்குப் பக்கத்தில் அவரின் பேத்தி சபிக்காவும் மற்ற மாணவர்களும் அமர்ந்து கோம்பாங் கருவியில் தாளமெழுப்புவார்கள். அவர்களின் பின்னால், வானொலி நாடாவிலிருந்து பல கருவிகளின் சேர்ந்திசையான கமேலான் ஒலித்துக் கொண்டிருக்கும். சபீக்கா வகுப்பில் ஆசிரியர் இல்லாத போது மேசையின் மீதும் தாளம் போட்டுக் கொண்டிருப்பாள். தோள்பட்டையின் மீது சுருட்டி மேலேற்றியிருக்கும் பாஜு கூரோங் சட்டையுடன் இருப்பவளையும் என்னையும் இணைத்து வகுப்பில் எப்பொழுதும் கேலியாகப் பேசிச் சிரிப்பார்கள்.
அந்தக் கேலிப்பேச்சுகளாலே சபிக்காவின் முகத்தைக் கூட பார்ப்பதைத் தவிர்த்து வந்தேன். ஆனால், அவளுக்கு எந்த வெட்கமும் இல்லாமல், ‘’முட்டாள்கள்’’ எனக் கேலி பேசுபவர்களைப் பார்த்துச் சிரிப்பாள். பள்ளிக்கு மோட்டாரில் செல்லும் போது என்னைப் பார்த்துச் சில முறை புன்னகைத்திருக்கிறாள். தாத்தாவுக்கும் அத்தோக்கும் இடையில் இருந்த மோதலாலும் வகுப்பு நண்பர்களின் கேலிப்பேச்சுக்கும் பயந்து பதிலுக்கு அவளைப் பார்க்காமலே கடந்து செல்வேன்.
இசையின் தாளத்துக்கேற்ப மாணவர்கள் முன்னும் பின்னுமாகக் கையும் காலையும் அசைத்துப் பயிற்சி செய்வார்கள். சமயங்களில் சிறிய குடுவைகளில் ஊறிக் கொண்டிருக்கும் கத்திகளை எடுத்துத் தீட்டுக்கல்லில் தீட்டுவது, பிடிகளைச் செதுக்குவது, பறவைக் கூண்டுகளைச் செய்ய ரோத்தான் கம்புகளைப் பின்னுவது என அவ்வப்போது தலையைத் தூக்கிப் பயிற்சியைப் பார்த்துக் கொண்டே வேலைகளை செய்து கொண்டிருப்பார்.
சாயங்காலம் 6 மணிக்கு மேல் தொடங்கும் சீலாட் பயிற்சி இரவு 9 ஐத்தாண்டியும் நடக்கும். வீட்டுச் சரிவையொட்டி இருக்கும் கழிப்பறைக்குச் செல்லும் போதெல்லாம் மாமர இலைகளின் இடைவெளிகளில் சீலாட் பயிற்சியைப் பார்ப்பேன். சில சமயங்களில் மட்டும்தான் சலீம் அத்தோக் சீலாட் பயிற்சி செய்து காட்டுவார். அவரின் பயிற்சியே நடனம் போல இருக்கும். கோம்பாங் தாளத்துக்கேற்ப கைகளைச் சீராக மேல் கீழும் இட வலமாகவும் கால்களை நேராகவும் வளைவாகவும் உடலை காற்றைப் போல அசைக்கும் சலீம் அத்தோக்கைப் பார்க்க வியப்பாக இருக்கும். எழுபது வயதிலும் உடலை ஆற்றலுடன் அசைப்பார். அந்த நடனத்தின் போது, இலைகள் காற்றுக்கு அசைவதைப் போல கைகளை மெதுவாக அசைத்து புன்னகைத்தவாறே எதிராளியை நோக்கி நகர்வார். மணலில் சரசரவென கோடு கிழித்து முன்னேறி மயங்கி நிற்கும் எதிராளியை நொடியில் மல்லாத்திடுவார். அதன் பின்னும் காற்றின் மென்மையுடன் அடியெடுத்துக் களத்துக்கு நடுவில் வந்து வணங்கிச் செல்வார். களத்தைச் சுற்றிலும் இருப்பவர்கள் தோக் குரு எனக் கத்தி ஆர்பரிப்பார்கள்.
ஒட்டிப் போன தாடையில் பெரிய மருவுடன் இருக்கும் அத்தோக் சீலாட் பயிற்சியின் போது மட்டும் மஞ்சளேறியப் பற்களைப் புன்னகைப்பதைப் போல கிட்டித்து வைத்திருப்பார். வெளியில் இருக்கும் கழிப்பறையில் தான் தாத்தா குளிப்பார். அவரும் கழிப்பறைக்குப் பின்னால் இருந்த ஸ்டோர் அறையின் முன்னே பொருட்களைத் தேடும் சாக்கில் துண்டு அணிந்து சீலாட் பயிற்சி நடப்பதை வேடிக்கை பார்ப்பார். பாட்டி வந்து குசினி வாசலில் நின்று செருமுவதைக் கேட்டதும் ‘’அவன் ஜெகஜல புரட்டுக்காரன் புள்ள….அப்படியே சிரிச்சுக்கிட்டே ஆள மயக்கிருவான்…வெள்ளப்பல்லுச் சிரிப்புக்காரன மட்டும் நம்பிறக்கூடாது…அப்படியே சிரிச்சுக்கிட்டே ஆளு மல்லாத்திருவான்’’ எனச் சொல்லி வீட்டுக்குள் சென்றுவிடுவார்.
சீலாட் பயிற்சியின் போது எழும் இசையின் ஒலி சத்தமாக இருக்கிறதெனச் சொல்லி புளோக் தலைவர் மூலமாக பெல்டா நிர்வாகியிடம் தாத்தா புகார் சொல்லியிருந்தார். சலீமுக்குப் பிடிக்காத இன்னும் சில மலாய்க்காரர்களும் சேர்ந்து கொண்டதால் தாத்தாவின் குரலுக்கு இன்னும் வலு உண்டாகியிருந்தது. குடியிருப்பாளர்களுக்குள்ளே பேசி முடிவெடுக்குமாறு நிர்வாகி கூட்டத்தில் அறிவுறுத்திச் சென்றார். மகிரிப் தொழுகைக்குப் பின் சீலாட் பயிற்சி நடக்கக்கூடாதென சமாதானப் பேச்சில் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், அடுத்தடுத்து இருவருக்குமிடையிலான சிக்கல் வளர்வதற்கான காரணங்கள் முளைத்துக் கொண்டே இருந்தன. தாத்தாவும் நானும் கொல்லையில் இருப்பதைப் பார்த்தாலே ‘’ வீட்டுக்கு நடுவில் ஆளுயர செங்கல் சுவர் கட்ட சீனப்பையனிடம் சொல்லியிருந்தேனே…எங்கடா போய் தொலைந்தான்…’’ என சபிக்காவிடம் சொல்லி சலீம் அங்கலாய்ப்பார். அதைக் கேட்டாலே, தாத்தாவுக்குக் கோபம் வந்து ‘’துத்தெரிக்க நாயிங்க…ஒடிப்போங்கடா’’ எனக் கத்துவார். அவர் கத்துவதைக் கேட்டதும், அத்தோக் மெல்லியப்புன்னகையுடன் ஒன்றுமே நடக்காததைப் போல வேலைகளைத் தொடர்வதைப் பார்த்திருக்கிறேன்.
மாதத்தில், சில நாட்கள் மட்டும் தான் சீலாட் பயிற்சி நடக்கும். சீலாட் பயிற்சிகளை நடத்தாமல் திடிரென சாத்தே இறைச்சிக் கடை திறந்து அடுப்புக்கரிகளின் மீது வெந்து கொண்டிருக்கும் இறைச்சிகளை விசிறும் அத்தோக்கைப் பார்க்க வியப்பாக இருக்கும். அவ்வளவு நுட்பமாய்ச் சீலாட் செய்த நபரா இப்படி கரி படிந்த சட்டையுடன் இருக்கிறார் எனத் தோன்றும். அதை விட, தூண்டிலைத் தூக்கிக் கொண்டு குளம் குளமாக மீன் பிடித்துக் கொண்டே கூடாங் காராம் சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டிருப்பவரின் முகத்தில் சீலாட்டின் நுட்பம் மொத்தமாய் மறைந்திருக்கும். அத்தோக்கின் மகள் வழி பேத்தியான பீக்கா எனும் சபீக்கா மட்டும்தான் அத்தோக் உடன் அமர்ந்து எதாவது வேலைக்கு உதவுவாள். அவள் அம்மா, சமையல் செய்வது, மோட்டாரில் பொருட்கள் வாங்குவதென வேறெதைக் குறித்தும் அக்கறை இல்லாமல் இருப்பாள். சபீக்கா மூங்கில் கழியில் செய்யப்பட்ட தூண்டிலைச் த் தோளில் சாய்த்துக் கொண்டு அத்தோக் உடன் மோட்டாரில் மீன்பிடிக்கச் செல்வாள். சீலாட் பயிற்சி நடக்கும் முழு நேரமும், அவளும் அத்தோக் உடன் அமர்ந்திருப்பாள். பள்ளியில் சில சமயங்களில் நண்பர்கள் மத்தியில் அவளும் சீலாட் பயிற்சியைச் செய்து காட்டுவதையும் பார்த்திருக்கிறேன். அவளால் எப்பொழுதுமே தோள்பட்டைச் சீராக வைத்துக் கைகளை அசைக்க முடியாது. அவளுடைய தோள்பட்டை ஆண்களைப் போல உறுதியாக இறுகி இருக்கும்.
மாலை வேளைகளில் பந்து விளையாட்டுத் திடலுக்கும் மோட்டாரில் வந்து பெண்கள் நடுவே நின்று சீலாட் பயிற்சி செய்து காட்டுவாள். முழங்கைச் சட்டையைத் தோள்பட்டையின் மீது ஏற்றி சீலாட் ஆடிக்காட்டுபவளின் தோள்பட்டையும் கைகளின் அசைவுக்கேற்ப ஆடும். வட்டத்தில் அமர்ந்திருக்கும் பெண்கள் எல்லாரும் சபீக்காவின் சீலாட்டைக் கண்டு கைதட்டி ஆர்பரிப்பார்கள். தாத்தாவின் வேலைக்குப் பயந்து திடலுக்குச் செல்லும் என்னையும் சபீக்காவையும் சேர்த்து சீலாட் பயிற்சிக்கு வரும் மலாய்க்கார மாணவர்கள் தாத்தாவைப் போல புகையிலைக் கறையைத் துப்புவது, அத்தோக்கைப் போல செய்து காட்டுவது எனக் கேலிப் பேசி சிரிப்பார்கள். திடலிலிருந்து வீட்டுக்குத் திரும்பியதும், தென்னை மரத்தில் காய்கள் குறைந்திருந்தால்‘’ நாரை முண்டை, குமுட்டை, சோத்து மாடு, சோபளாங்கி ‘’ என விதவிதமாய் எழும் தாத்தாவின் வசையை வாங்கி கட்டிக் கொள்ள வேண்டும்.
அதற்காகவே, மாலை வேளையில் அரை மணி நேரமாவது வாங்கில் கைகளைக் கட்டி அமர்ந்திருந்து பார்ப்பேன். சீலாட் முற்றத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு சபீக்காவும் அமர்ந்திருப்பாள். அத்தோக் எப்பொழுது தேங்காயை எடுக்கிறார் என்பதைத் தாத்தாவாலே சரியாகக் கணிக்க முடியவில்லை. சபிக்கா மட்டும் தலையோடு முக்காட்டைப் போர்த்திக் கொண்டு காணில் விழுந்திருக்கும் தேங்காய்களை இரும்புக்கம்பிகளில் குத்தி எடுத்துச் செல்வாள். அப்படியான தருணங்களில் என்னைப் பார்த்தாலும் கூட எதையோ பேச வருபவளை நான் தவிர்ப்பதைப் பார்த்ததும் சிரித்து விட்டுச் செல்வாள்.
அதே மாதிரித்தான், அத்தோக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நான்கைந்து நாட்கள் கடந்தபின் ஓய்வு வேளையின் போது சபிக்காவே அவரின் உடல்நலத்தைப் பற்றி என்னிடம் சொன்னாள். நுரையீரலில் நீர் கோத்துக் கொண்டது, அதில் கிருமிகள் இருப்பதாக மருத்துவர்கள் சொன்னது என ஒவ்வொன்றையும் தழுதழுக்கச் சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் சொன்னதைப் புரிந்து கொள்ளவே எனக்கு கொஞ்ச நேரம் ஆகியது.’ எல்லாம் சரியாகிவிடும், வருத்தபடாதே’’ சொன்னதைக் கேட்டதும் எழுந்து சென்றாள். அவளுடைய அப்பாவை அம்மா விவகாரத்து செய்ததும் ஏழு வயதிலிருந்து சலீம் அத்தோக் வீட்டில்தான் சபிக்கா வளர்கிறாள். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்தே வகுப்பில் யாருடனும் பேசாமல் வாட்டமாக இருந்தாள். அவர் மருத்துவமனையிலிருந்து வருகிறார் என்பதைச் சொல்லும் போது கூட குரலில் மகிழ்ச்சியே இல்லை.
தாத்தாவே, ‘’ஏன்டா, நாலஞ்சு நாளா தேங்காய் ஒன்னும் காணாம போவாம இருக்கு’’ எனச் சொன்னவுடன் தான் சபிக்கா சொன்னதைச் சொன்னேன். மர வாதுக்களை வெட்டியெடுத்துக் குவியலாகக் கட்டி தென்னை மரத்தின் கீழிருந்த நெருப்பு வைக்குமிடத்தில் குவித்துக் கொண்டிருந்தேன். ‘’ யேன்டா, அவனுக்கு என்ன சீக்குன்னு சொன்ன’’ என சீலாட் களத்தைப் பார்த்துக் கொண்டே கேட்டார். ‘’ நொரையீரல்ல தண்ணி கொத்துருந்துச்சாம்….அதுனாலே மூச்சு விட சிரமப்பட்டுக்கிட்டுருந்தாரு…டாக்டருங்க. மொத வீட்டுக்குக் கூட்டிட்டுப் போவச் சொல்லிட்டாங்களாம்…பீக்கா புள்ள சொன்னுச்சு’’ என்றேன். இந்த ஐந்து நாட்களில் வேலியோரத்தில் சீலாட் களத்தை மறைத்திருந்த மாமரத்தின் வாதுக்களை தாத்தா மொத்தமாகவே வெட்டி முழுமையாகத் துப்புரவு செய்திருந்தார். சொல்லப்போனால், மரத்தின் இலை கொட்டுவது, மட்டை விழுவது, பஞ்சு விழுவது என எல்லா சிக்கல்களும் குறைந்தது ஒரு மாதத்துக்காவது எழாத வகையில் வேலியோரம் துப்புரவாக இருந்தது.
மணி ஆறை நெருங்கியும் மேலேறாததால், கொல்லைச் சரிவு தொடங்குமிடத்தில் இருந்த மீன் தொட்டியருகே பாட்டி வந்து நின்று முறைத்துக் கொண்டிருந்தார். அவர் இருப்பதை ஊகித்து ‘’ போடா…மேலேறிரு…பூதம் வந்து காத்துக்கிட்டுருக்கு’’ எனச் சொல்லி மேலே அனுப்பிவிடுவார். தாத்தா ஒன்றும் சொல்லாததால், நான் மெல்ல கொல்லையிலிருந்து மேலேறத் தொடங்கினேன்.
தாத்தா நிண்ட நேரமாய் சீலாட் களத்தின் இடப்பக்கத்தில் ஓங்கி வளர்ந்திருந்த பஞ்சு மரத்தையே அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தார். வெடித்த பஞ்சு காய்கள் மொத்தமாய் விழாமல் காற்றுக்குத் திரித்திரியாய்க் களத்தின் மீது விழுந்து கொண்டிருந்ததைப் பார்த்தார். அத்தோக் வீட்டு செர்ரி மரத்தில் வாங்கின் மீதேறி கோழிகள் அடைந்து கொண்டிருந்தன. அவை மேலேறி இறக்கைகளைப் படபடவெனக் காற்றில் அசைக்கும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. காரிலிருந்து இறங்கி சபிக்காவின் தோளைப் பற்றிக் கொண்டு தளர்ந்த நடையுடன் அத்தோக் வந்தமர்வது அணைந்து கொண்டிருந்த சூரிய வெளிச்சத்தல் கறுப்புருவாகத் தெரிந்தது. அவரின் முகம் ஒடுங்கிப்போய் கண்ணாடி மட்டும் துருத்தித் தெரிந்தது. வாயை நன்றாகத் திறந்து சீறுவதைப் போல மூச்சு விட்டுக் கொண்டிருந்தார். நடுநடுவே இருமல்களும் வந்து கொண்டிருந்தன. அத்தோக் சட்டைப்பையில் சிகரெட்கள் அடுக்கி வைத்திருக்கும் சிறிய இரும்புப்பெட்டியைத் திறந்து சிகரெட் பற்ற வைத்துக் கொண்டார். அவருக்கு அருகில், சீலாட் களத்தில் அமர்ந்திருப்பதைப் போலவே சபீக்காவும் அமர்ந்திருந்தாள்.
தாத்தா இரும்பைப் பலமாக ஊன்றி வேலியோரமாய் நடந்து முன்பக்கம் சென்றார். வேப்ப மரத்தின் கீழிருந்த நீர்க்குழாயைத் திறந்து பூச்செடிகளுக்கு நீர் பாய்ச்சத் தொடங்கினார். இரு கைகளையும் சபிக்காவின் தோளைப் பற்றிக் கொண்டு வாங்கிலிருந்து எழுந்து அத்தோக் மெதுவாக வீட்டுக்கு நடந்தார். சபிக்காவின் தோளில் எந்த அசைவும் இல்லாமல் அத்தோக்கின் கைகளைப் பற்றி அழைத்து சென்றாள். வீட்டுக்கு முன்பிருந்த இரு படிக்கட்டில் ஏற்றுவதற்காக அவருடையக் கைகளைப் பற்றி மெதுவாக மேலேற்றி நடக்க வைத்தாள். வீட்டு வாசலில் கைகளைப் பற்றி உடலை முன்பக்கம் திருப்பி நடந்தவளைப் பார்க்க மென்மையாகப் புன்னகையுடன் இருப்பது தெரிந்தது. வாசலில் சற்றே தடுமாறிய அத்தோக்கை அதே புன்னகையுடன் அழைத்து சோபாவில் அமர வைத்தாள். அவள் புன்னகைத்தாளா அல்லது இங்கிருந்து எதிர்வெய்யிலுக்கு அப்படி தெரிந்ததா எனத் தெரியவில்லை. தாத்தா வேலியோரமிருந்த செம்பருத்திச்செடிக்கு நீரை ஊற்றி முடித்து இன்னொரு முறை பெரிய கார்வையுடன் காறித்துப்பிவிட்டு உள்ளே சென்றார்.
அரவின் குமார்
அரவின் குமார் மலேசியத் தமிழ் எழுத்தாளர். இவர் சிறுகதை, கட்டுரை எழுதிவருகிறார்.