/

கலையே உளசிகிச்சையாய் (பகுதி 6) : அலான் டி பாட்டன் & ஜான் ஆர்ம்ஸ்டிராங்க்

தமிழில் : தென்னவன் சந்துரு

முந்தைய பகுதிகள் : பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5

சுய மேம்பாடு

புகழ்பெற்றவையாகவும் உன்னதமானவையாகவும் அறியப்படும் பல படைப்புகள் நம்மை சலிப்படையச் செய்பவையாகவோ, சற்றே அச்சுறுத்துபவையாகவோ இருக்கிறது. இது கலையுடனான உறவில் அதிகம் வெளித்தெரியாத, நாம் பெரிதாக கவனித்திருக்காத ஒரு அம்சம். கணிசமான அளவிலான உலக கலைப் படைப்புகள் நம் அகத்திற்கு அந்நியமானவையாக வெறுக்கத்தக்க வகையில் இருக்கிறது.

இங்கு நாம் மூன்று உதாணங்களை கவனிக்கலாம். 

1. பரவசநிலையில் இருக்கும் ஒரு கத்தோலிக்க  துறவி

Sebastiano Ricci, The Vision of Saint Bruno, 1700.

2. கிழக்கு அங்கோலாவில் (eastern Angola) உள்ள ஒரு இனக்குழுவில் சிறுவர்களுக்கான சடங்கில் பயன்படுத்தப்படும் ஆப்பிரிக்க முகமூடி (African mask)

Chokwe People, East Angola, Mwana Pwo Mask. c.19th century.

3. பிரிட்டிஷ் பேரரசு கோலோச்சிய காலகட்டத்தில் பெருமிதத்துடன் நின்றுகொண்டிருக்கும் ஒரு ஆங்கிலேய உயர்குல பிரபுவின் உருவப்படம்.

John Singer Sargent, Portrait of Lord Ribblesdale, 1902

இவ்வோவியங்களை முதல்முறையாக பார்க்கும் ஒருவர் அசெளகரியமாக உணர்வதை கவனிக்கலாம். அவரிடம் இந்த படைப்புகளில் வெளிப்படும் எந்த அம்சம் அசெளகரியமளிக்கிறது என்று கேட்டால், அவர்கள் முறையிடக்கூடிய காரணங்கள் யாவும், பொதுவாக இவற்றில் நேரடியாக வெளிப்படும் அம்சத்தை சார்ந்து இருப்பதில்லை என்பதையும், அவற்றோடு தொடர்புற்றிருக்கும் வகைமைகளின் மீது அவர்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய மோசமான முன்னனுபவம் சார்ந்ததாகவே அவை இருப்பதையும் காணலாம்.

இந்த படைப்புகளைக் கொண்டே இப்படியான அசௌகர்யங்களுக்கு உதாரணங்களை சொல்லலாம்:

1. செறிவான உணர்ச்சி நிலைகளைத் தீவிரமாக வெளிப்படுத்தும் மிகைபானி வகைமையான பரோக்கிய(Baroque) ஓவியத்தை ஒருவர் காணும்போது தன் உறவினர் ஒருவரின் அடுக்குமாடி குடியிருப்பை அவருக்கு நினைவுபடுத்துகிறது. இது அவர் ஒருபோதும் தன் நினைவில் மீண்டும் கொண்டுவர விரும்பாததொரு நிகழ்வாக இருக்கிறது. ஏனென்றால் சிறுவயதில்  ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவர் அங்கு சென்று நோயுற்று, கைவிடப்பட்ட நிலையிலிருந்த அந்த கூன்விழுந்த முதிய உறவினரின் பரிதாபகரமான நிலையை பார்த்தது அவரது மனதில் ஒரு துன்பவியல் நிகழ்வாகப் பதிந்திருக்கலாம்.

2. நீளமான மேல் தொப்பி(top hat) அணிந்திருப்பவரின் உருவப்படத்தை பார்க்கும் ஒருவருக்கு, முப்பது வருடத்திற்கு முன் தான் கல்லூரியில் படிக்கையில், மற்றவர்களை ஏளனமாகக் கருதிய, வேண்டுமென்றே வம்புக்கிழுத்து அவர்களை அவமானப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட, அடாவடியான வரலாற்றுத்துறை மாணவர்களை நினைவூட்டலாம்.

3. ஆப்பிரிக்க முகமூடிகள் (African masks), திரைப்படங்களில் பில்லி சூனியம் போன்றவற்றை(voodoo) பயன்படுத்தி அச்சமூட்டிய ஒரு கதாபாத்திரத்தையோ, ஆப்ரிக்காவின் ஆன்மிக மேன்மையைப் பற்றி பொழிப்புரையாற்றியவரையோ நம் நினைவுக்குக் கொண்டுவரலாம். 

இப்படியான குறிப்பிட்ட கலை வகைமைகளின் மீதான வெறுப்புணர்வு, ஒருவரது தனிப்பட்ட அனுபவத்தின் விளைவாக, நியாயமான காரணங்களாலும் எழுந்திருக்கக்கூடும். நாம் சிறுவயதில் இவ்வாறான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போது, அவை நம் வாழ்வின் நீண்டதொரு பகுதியை ஆட்கொண்டுவிடும் அபாயமே அதிகம். ஏனென்றால் அவை நம் பாதுகாப்புணர்வின் காரணமாக நம்மிடையே தற்காப்பு நடவடிக்கையை உண்டாக்கி நம் மனக்கோணத்தின் அடிப்படைகளையே மாற்றி அமைத்துவிடுகின்றன. 

கலையுடனான நம் உறவிலும் இதை நாம் தெளிவாக இனம்காண முடியும். இது நம் அறிவாற்றலால் உருவான குறைபாடுதான். இந்த உணர்வுரீதியான முன்முடிவு நம் வாழ்வை பொதுமைபடுத்தலுக்கு இட்டுச்சென்று குறுக்கிவிடக்கூடும். அரூவமான ஆபத்தை எதிர்கொள்ளத் ‘துடித்துக்’கொண்டிருக்கும் ஒரு துல்லியமற்ற, அதீத எச்சரிக்கை அமைப்பாக இதை வகைப்படுத்தலாம். 

பெரும்பாலும் இவை மோசமான ஆரம்பகால நிகழ்வுகளிலிருந்து,  எதிர்மறை மனநிலையாகவும் பொதுமைபடுத்தலாகவும் உருப்பெற்று, பெரும்பான்மையானவற்றின்மீது ஒரு விலக்கத்தை உண்டுபண்ணிவிடுகிறது. இதன் தொடர்ச்சியாக, இவை நம் ஆக்கப்பூர்வ சிந்தனைகளுக்கும் செயலுக்குமான ஒரு தடையாக மாறிவிடுகின்றன. இப்படி உருவாகும் ‘தற்காப்பு’ மனநிலைகள், நமக்கான பல்வேறு நல்ல அனுபவங்களை நிகழவிடாமல் குறுக்கிவிடுகின்றன. இவ்வாறாக ஒரு துரதிர்ஷ்டவசமான நிகழ்வு, ஒரு விஷயத்தின் மேல் முழுமுதல் விருப்பமின்மையை தோற்றுவித்து, அதை அணுகி புரிந்துகொள்வதற்கான வாய்ப்பையே இல்லாமலாக்கிவிடுகிறது.

பின்வரும் பட்டியலைப் பார்க்கும்போது நம் ஒவ்வொருவருக்கும் எழும் மாறுபட்ட மனவுணர்வைக் கவனிக்கலாம்: மதம், இலக்கியம், கால்பந்து விளையாட்டு, ஆப்பிரிக்கா, ஒருங்கிணைந்த குளியலறை (communal showers), ஆபா இசை(the music of ABBA),  விலையுயர்ந்த துணிக்கடை, பள்ளி வளாகத்தில் செல்வந்தர்களான சக பெற்றோரிடம் மேற்கொண்ட உரையாடல். இவற்றுள் ஒன்றல்லது மற்றதற்கு நம்மிடையே எந்த உணர்வெழுச்சியும் ஏற்படாமல் அவை விருப்பமற்றதாக மாறியிருக்கக்கூடும். 

இறுகிப்போய்விட்ட இந்த பாதுகாப்புணர்வு, நமது அறிவை முடமாக்கிவிடுகிறது. தனிப்பட்டவகையில் நமக்கு முக்கியமானதாக இருக்கும் குறிப்பிட்ட விஷயங்களை நாம் தொடர்ந்து  பொதுமைப்படுதிக்கொண்டே போனால் நம்முடைய வாழ்வில் முன்னோக்கி நகர முடியாது.  உணர்வுரீதியான அச்சுறுத்தல்களை நாம் எதிர்கொள்ளும்போது உடனடியாக பலவீனப்படுகிறோம். கடந்தகால மோசமான நினைவுகளை சிறிய அளவில் ஞாபகப்படுத்திவிடும் எதுவும், அதையொத்ததாக இருக்கும் விஷயங்களின் மீதுகூட நமக்கு எரிச்சலை உண்டாக்கிவிடுகிறது. நாம் இவற்றிற்கு ஒரு தவறான உணர்ச்சிவயமான தர்க்கத்தை கற்பித்துக்கொள்கிறோம். 

ஒரு குறிப்பிட்ட செல்வந்தர் நம்மை மனமுடையும்படி தரக்குறைவாக நடத்தியிருந்தால், பொதுவாக செல்வந்தர்கள் என்றாலே மற்றவர்களை ஏளனமாகவும் இழிவுபடுத்தவும்தான் செய்வார்கள் என்பதாக முடிவுசெய்து அவர்களை இகழ்ந்து வெறுக்கத்தொடங்கிவிடுகிறோம். ஆகையால் ஒரு செல்வந்தரின் ஓவியத்தை கருத்தில் கொள்வற்கு எந்த ஈடுபாடும் இல்லை என்கிறோம். அல்லது, தான் தேவதைகளை பார்த்ததாக சொல்லிக்கொண்டிருந்த வினோதமான பெண் முன்னொரு நாள் நம்மை அசெளகரியமாக உணரச்செய்ததை மனதில்வைத்துக்கொண்டு ‘இந்த ஓவியத்திலும் ஒருவர் தேவதைகளை நோக்கியவாறு இருக்கிறார், ஆகையால் இது ஒரு வினோதமான ஓவியம். இந்த ஓவியத்தில் நான் விரும்பும்வகையில் எதுவுமில்லை’ என்கிறோம். 

இந்த சூழலில்தான் கலையுடனான ஈடுபாடு பயனளிக்கிறது. நம் தற்காப்பு உணர்வால் எழுந்த தேவையற்ற அச்சமும் சலிப்பும் படைப்புகளின் ஊடாக தூண்டப்படுகிறது. நாம் அந்நியமாக கருதுபவற்றை சரியான படைப்பம்சங்களைக் கொண்டு  கலையானது நாம் திகைத்துபோகும்வகையில் நமக்கு திரும்பவும் வழங்குகிறது. மேலும் நேரத்தையும் தனிமையையும் அளித்து நாம் அவற்றை குறிப்பிடத்தக்க அளவில் முறையாக கையாள வழிவகுக்கிறது. கலையை அணுகும்போது நமக்கு எழும் பாதுகாப்புணர்வை கடப்பதற்கான முதல் படி, குறிப்பிட்ட சில வகைமைகளின் மீது நமக்கிருக்கும் ஒவ்வாமையைப் பற்றி வெளிப்படையாக இருப்பது தான். இதற்காக நம்மை நாமே வெறுக்கத் தேவையில்லை; சொல்லப்போனால் பல கலைப்படைப்புகளின் சாரமென்பது நம் பார்வையுடன் தீவிரமாக முரண்படும் விஷயங்களை கொண்டவைதான். 

தேவதூதர்கள், புனிதமானவர்களுக்காக அவர்களது வாழ்வையே மாற்றியமைக்கக்கூடிய வழிமுறைகளை கொண்டுவருவார்கள் என்று செபாஸ்டியானோ ரிச்சி (Sebastiano Ricci) நம்பினார். மக்கள் என்றும் சமமானவர்கள் இல்லை; உயர்குடியில் பிறந்த சிலருக்கு மட்டுமே உலகை ஆளும் உரிமை உண்டு என்று சார்ஜென்ட் (Sargent) வரைந்த அந்த பிரபு உறுதியாக நம்பினார். பருவமெய்தும் இளைஞர்கள் தங்கள் இனப்பெண்களின் அகஉணர்வுகளையும், அவர்களதுது பாலுறவு சார்ந்த தேவைகளையும் புரிந்துகொள்ள முகமூடிகள் உதவும் என்று சோக்வீ (Chokwe) மக்கள் நினைக்கிறார்கள். நவீன வாழ்க்கையிலிருந்து ஒப்புநோக்கும்போது, தேவதூதர்களின் கட்டளைகளிலும், பிரபுத்துவ உரிமை கோரலிலும், மாந்திரீக சக்திகளிலும் உள்ள நம்பிக்கைகளின் மீதான முரண்பாடு நியாயமானதே. எனவே, முதலில் இவற்றை பார்த்தவுடன், இவை பெரிதாய் நமக்கு எதையும் வழங்கிவிடப்போவதில்லை என்றெழும் எதிர்மறை எண்ணம் புரிந்துகொள்ளக்கூடியதுதான்; ஒருவகையில் இயல்பானதும் கூட. 

அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர்கள் (Museum curators) தாங்கள் காட்சிப்படுத்தும் எல்லா கலைப்படைப்புகளையும் பொதுவாக பார்வையாளர்கள் விரும்புவார்கள் என்றும், அப்படைப்புகள் சார்ந்த சில விஷயங்களை மட்டும் எடுத்துரைத்தாலே போதும் என்றும் கருதுகிறார்கள். ஆனால் இது முற்றிலும் தவறான எண்ணம். ஏனென்றால் பலருக்கு, சில குறிப்பிட்ட வகைமையின் மீது முழுமையாக ஒவ்வாமை இருக்கிறது என்பதை அவர்கள் கவனிக்கத்தவறுகிறார்கள். துறவி புருனோவின் படத்தை நாம் ஒரு காப்பாட்சியருடன் பார்க்கும்பட்சத்தில், ஒரு காப்பாட்சியாளர் நமக்கு பல்வேறு உண்மை விவரங்களைச் சொல்லி, அவ்வோவியத்தை நாம் புரிந்துகொள்ள உதவுவார். அதாவது, இத்துறவிதான் பதினோராம் நூற்றாண்டில் கார்த்தூசியன் சபையையும் அதற்கென புதுச்சட்டங்களையும் நிறுவினார்; கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினத்திற்கு முந்தைய நாள் உறக்கத்தில் ஆழ்ந்த சீடர்களின் சித்தரிப்பாக, இடதுபுறத்தில் ஒருவர் உறங்கியபடி காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறார்; இந்த ஓவியம் பதினெட்டாம் நூற்றாண்டில் count Algarotti க்கு சொந்தமானதாக இருந்தது; குறிப்பாக அந்த மண்டை ஓடும் (கீழ் வலது), இறக்கைகளும் புகழ்பெற்ற ஒவியரான டிஷனுடன் (Titian) ஒப்பிடும் தரத்தில் சிறப்பாக வரையப்பட்டுள்ளது. இப்படியான தகவல்கள், சிலருக்கு வேண்டுமானால் உதவலாம்; ஆனால் இவ்வகையான படைப்புகளின்மீதே பொதுவாக அதிருப்தியுடனும், வெறுப்புணர்வோடும் இருக்கும் ஒருவருக்கு இவை எந்த வகையிலும் ஆர்வமளிக்காது.

அருங்காட்சியகங்கள், அவை காட்சிப்படுத்தும் அனைத்திலும் பெரும்பாலும் பார்வையாளர்களுக்கு ஏற்கனவே ஆர்வம் இருக்கும் என்று அனுமானிக்கிறது; அவர்களுக்கு ஒன்றிரண்டு மேலதிக விவரங்களை மட்டும் சொன்னாலே போதும் என்றும் கருதிவிடுகிறது. பொதுவாகவே அருங்காட்சியகங்கள் மதம் சார்ந்த படைப்புகளை நிறையவே காட்சிப்படுத்துகின்றன. ஆனால் மதசார்பற்ற, எதையும் அறிவியல் ரீதியாக அணுகும் நவீன பார்வையாளர்களுக்கு இவை எந்த வகையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பற்றி அவர்கள் பெரிதாக சிந்திப்பதில்லை. அவர்கள் மேட்டுக்குடியினரின் உருவப்படத்தை காட்சிப்படுத்துகின்றனர்; ஆனால் வர்க்க வேறுபாடுகள், தகுதிசார் ஜனநாயக (meritocratic democracies) நாடுகளில் இவை எப்படிப்பட்ட தீவிரமான எதிர்வினைகளைத் தூண்டும் என்பதை அவர்கள் கவனத்தில் கொள்வதில்லை. மூதாதைய தெய்வங்களை அழைப்பது, ஒப்பீட்டளவில் சிக்கலற்றதாக இருக்கும் என்று கருதி, ஆப்பிரிக்க கலைகளின் கண்காட்சிகளை அவர்கள் ஏற்பாடு செய்கிறார்கள். 

இப்படியான கோணத்தில் யோசிப்பதையே கூட அவர்கள் சமூகத்தை குறைத்து மதிப்பிடுவதாகவோ, பொதுவான நம்பிக்கையின்மையின் வெளிப்பாடாகவோ கருதக்கூடும். ஏனென்றால் சந்தேகக்குரல் எழுப்புவதையே தவறென்று, பொதுமைபடுதுதல்போல சமூகமயமாக்கிவிட்டோம்; எனவே, விவேகமானவர்கள் ஏற்கனவே இதுபோன்ற விஷயங்களில் ஆர்வமாக இருப்பார்கள் என்ற தவறான அனுமானத்தை மேற்கொள்கிறோம். அவர்களில் பலருக்கு ஒரு சாதாரண பார்வையாளரின் கண்ணோட்டமே புலப்படுவதில்லை. சாதாரண பார்வையாளர் பொதுவாக, மதச்சார்பற்ற, ஜனநாயக நவீன கண்ணோட்டம் கொண்டவர்களாகவும், மாந்திரீக சிந்தனைகளில் அறிமுகமில்லாதவர்களாகவும் இருக்கிறார்கள். அருங்காட்சியகக் காப்பாட்சியர்கள் இத்துறையை சுயமாகத் தேர்ந்தெடுத்து அதிலேயே மூழ்கி இருப்பவர்கள் என்பதால், அவர்களது இந்த மனநிலையையும் நாம் எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது. 

அப்பாவித்தனமான ஆனால் பயனுள்ள கேள்விகளை எழுப்பும் சிறுவர்களை எதிர்கொள்ளாதவரையில், வெளிப்படையாக எதன்மீதும் தங்களது மனநிலையை பிரதிபலிப்பவர்களை அவர்கள் சந்திப்பதில்லை. ‘ஆப்பிரிக்க முகமூடிகளிளோ, இடைக்கால துறவிகளின் அச்சுறுத்தும் ஓவியங்களிலோ நீங்கள் ஏன் நேரத்தை வீணடிக்கிறீர்கள்?” பொதுவாக இவை என்ன? என்பவை போன்ற முக்கியமான அடிப்படைக் கேள்விகளை கேட்க இது சரியான தருணம் அல்ல என்று பலர் கருதிவிடுகிறார்கள். 

பொதுவாக, பணிபுரிபவர்கள் அவர்களுக்குள்ளான சிறு குழுக்களை உருவாக்கி, அந்த  வட்டத்திற்குள்ளேயே இயங்குவதைப் போலவே காப்பாட்சியர்களும் செயல்படுகிறார்கள். இத்துறையின் சிறப்பம்சம் மற்றவர்களுக்கும், பொதுவாகவும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அவர்கள் காலப்போக்கில் கணக்கில் கொள்ள தவறிவிடுகிறார்கள்.  இத்துறைக்கான அவர்களது தேர்வு எவ்வளவு வித்யாசமானது என்பதையும் மறந்துவிடுகிறார்கள். 

இவ்வாறு இருக்க, நமக்கு விருப்பமில்லாத கலை வகைமைகளில் ஈடுபட நமக்கு வேறெது உதவக்கூடும்? 

நாம் மேட்டுக்குடியினரை சுவாரஸ்யமானவர்களாக உணர கற்றுக்கொள்வது எப்படி? மதம் சார்ந்த படைப்புகளின் மீதான நம் ஒவ்வாமையைத் தவிர்ப்பது எப்படி? ஆப்ரிக்க கலைகளில் விருப்பத்தை கொணர்வது எப்படி?

இவ்வகையான நமது பாதுகாப்புணர்வை முறியடிப்பதற்கான முக்கியமான முதல்படி, அதன் யதார்த்தத்தைப் பற்றி மிகவும் கவனத்தோடு அணுகுவதுதான்: பொதுவாக குறிப்பிட்ட வகைமைகளின்மீதோ விஷயங்களின்மீதோ நமக்கு எழுந்திருக்கக்கூடிய வலுவான எதிர்மறை பார்வைகள் எவ்வளவு இயல்பானது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அடுத்தபடியாக, உலகின் மிகவும் போற்றப்படும் கலைப் படைப்புகளில் சிலவற்றை உருவாக்கிய கலைஞர்களின் அந்நியமான மனப்போக்குடன் நாம் இசைவை அடைய முயற்சிக்க வேண்டும். தேவதூதர்கள் மனிதர்களுக்கு வாழ்க்கையை மாற்றும் அறிவுரைகளை வழங்க முடியும் என்று ரிச்சி (Ricci) உண்மையிலேயே நம்பினார். ஆப்பிரிக்க முகமூடியை உருவாக்கியவர்கள் அவர்களது கிராமத்தில் எந்த இளைஞன் தன் துணையை தேர்ந்தெடுக்கும் பருவத்தை எய்தியிருக்கிறான் என்பதை ஆதிசக்தி முடிவெடுக்கும் என்று நம்புகிறார்கள். ‘மேட்டுக்குடி உருவப்படத்தில்’ இருக்கும் அந்த பிரபு எல்லோரும் சமமாகவே படைக்கப்பட்டவர்கள் என்பதில் நம்பிக்கையற்றவராய், வழிவழியாக பூர்வீக அடிப்படையில் வரும் அதிகாரமே முறையானது என்று எண்ணினார். 

காட்சியகங்கள் இவற்றைப்பற்றி மிகவும் வெளிப்படையாக இருக்க வேண்டும்; அதாவது ‘இப்போது நாம் அறை 22-க்கு வந்திருக்கிறோம்’ என்றல்லாமல் ‘நீங்கள் இப்போது நுழையப்போகும் அறை சற்றே வித்தியாசமான விஷயங்களைக் கொண்டது’ என்று முன்னெச்சரிக்கைபோல அறிவிக்கவேண்டும். 

இந்த ’பாதுகாப்புணர்வை’ கடப்பதற்கான மூன்றாவது படி, அப்படைப்பை உருவாக்கிய கலைஞரின் மனப்போக்கிற்கும் நம்முடைய சொந்த மனப்பான்மைக்கும் இடையே உள்ள பலவீனமான இணைப்புப் புள்ளிகளைக் கண்டறிவதேயாகும். அவர்களது படைப்பு விசித்திரமானதாகவே தோன்றினாலும், அந்த படைப்பூக்கத்திற்கான ஒரு சிறுபகுதியை நம் சிந்தனையின்மூலம் கண்டறிந்து, நாம் தனிப்பட்ட முறையில் அவற்றோடு தொடர்புபடுத்திக்கொள்ள முடியும். உதாரனமாக ஒருவர், எப்போதோ ஒருமுறை, ஒரு நெரிசலான ரயிலில் பயணத்தின்போது இப்படியெல்லாம் நினைத்திருக்கக்கூடும். “உண்மையிலேயே நாம் எல்லோரும் ஒன்றுபோல்தான் இருக்கிறோமா? ஒவ்வொருவரது இயல்பும், குணாதிசயமும் எவ்வளவு மாறுபட்டதாக இருக்கிறது! ஒருவேளை இயற்கையாகவே மனிதர்களுக்குள் பாகுபாடுகள் இருக்கின்றனவோ? சிலர் மற்றவர்களைவிட மேம்பட்டவர்களாகவும், திறமைசாலிகளாகவும்தானே தெரிகிறார்கள்!”. இச்சிந்தனையின் தொடர்ச்சி அறுபட்டு, அதனால் எந்த பொருளும் எட்டப்படாமலேயே போய்விட்டிருக்கும்; சொல்லப்போனால் இன்றைய நவீன உலகின் சிந்தனைப்போக்கில் இச்சிந்தனைக்கு இடமேயில்லாமல் போய்விட்டது. இருந்தும், இதைப்பயன்படுத்தி, நமக்கும் ரிபிள்ஸ்டேல் பிரபுவுக்கும் (Lord Ribblesdale) இடையில் நாம் உருவாக்க விரும்பும் புரிதலுக்கு உருவமளிக்க முயலலாம். 

இதைப்போலவே, மத அடிப்படையிலான கலைப்படைப்புகளை அணுகும்போது, நமது கடவுள் நம்பிக்கையற்ற மனநிலையால், பொதுவாகவே ஆன்மீகம் சம்மந்தப்பட்ட விஷயங்களின்மேல் நமக்கு நம்பிக்கை இல்லாமல் இருப்பதினால் ஒரு விலக்கத்தை உண்டு செய்கிறது. இருந்தும் வாழ்வில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்திலாவது நாம் இவ்வாறு உணர்ந்திருக்கக்கூடும் “அச்சமும் கையறு நிலையும் அழுத்தும் இந்த்த் தருவாயில், தந்தையைப்போல ஒருவர் நம்மை ஆற்றுப்படுத்தமாட்டாரா, அணைப்பை அளிக்க மாட்டாரா” என ஏங்கியிருப்போம் – நாம் இப்போது எதிர்கொண்டிருக்கும் துன்பவியல் நாடகங்களை ஒருவர் முற்றிலுமாக மறையச்செய்து, நம் வாழ்க்கையை திருப்பியளிக்க வேண்டும் என்றும் எதிர்பார்த்திருப்போம். இப்படி சங்கடமான தருணங்களை கடந்தபின், நாம் அவற்றை ஒருபோதும் எண்ணத்துனிவதில்லை. இருந்தும் அவற்றை நாம் பிரக்ஞைக்கு கொண்டுவர முயற்சிக்கும்போதுதான், நமக்கு  அந்நியமாகப்படும் கலைப்படைப்புகளை சார்ந்து நம்முள் உண்மையான பரிவு உருவாகிறது. 

வேறுவகையில் சொல்வதானால், பார்வையாளர்கள் குறிப்பிட்ட சில வகைமைகளை புரிந்துகொள்ளச்செய்ய,  அவர்களது அனுபவம் சார்ந்த பலவீனத்தைக் கண்டறிந்து, காப்பாட்சியர்கள் அதற்குத் தக்கவாறு செயல்பட முயற்சிக்க வேண்டும். அதாவது ஆர்வத்தை தூண்டும் வகையில் அப்படைப்பையும், அதை உருவாக்கிய கலைஞரையும் பற்றிய, குறிப்பான விஷயங்களைக்கொண்டு அப்படைப்பின் மீதான சரியான மனச்சித்திரத்தை அடையும் வகையிலான தகவல்களை மட்டும் அவர்கள் பார்வையாளர்களுக்கு வழங்கலாம். 

முறையான வழிகாட்டல் கிடைக்கும்பட்சத்தில், நமக்கு இருக்கக்கூடிய குறுகிய அனுபவ எல்லையைகொண்டே நாம் இவ்வாறான படைப்புகளை உருவாக்கிய கலைஞர்களின் மனஓட்டத்தோடு இணையலாம். முதலில் நமக்கு அந்நியமாகப்படும் வகைமைகளின் மேலிருக்கும் நம் ‘பாதுகாப்புணர்வை’ விடுவித்துக்கொள்ளும் அதே நேரத்தில் நாம் நாமாகவும் உணர்வதை தக்கவைத்துகொள்ள வேண்டும். அதற்கான இன்னொரு வழி, கலைஞர்கள் ஒருவருக்கொருவர் மற்றவருடைய படைப்பை எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதை இனம் காண்பது. இதற்கு எடுத்துக்காட்டாக சில ‘தற்காப்பற்ற’ நடவடிக்கைகளை நாம் காணலாம். முதல் பார்வையில் லாஸ் மெனினாஸ் (Las Meninas) ஓவியத்தை, மிகுந்த  திறமை வெளிப்படும் நேர்த்தியான யதார்த்த கலைக்கு ஒரு சிறந்த உதாரணமாக சொல்லலாம்.

Diego Velázquez, Las Meninas or The Family of Felipe IV, c.1656

ஒரு மென்மையான கலைஞர் ஒரு அரசரையும் அரசியையும் சுயஉருவப்படமாக வரைந்துகொண்டிருக்கிறார். அவர்களது உருவம் அக் கலைஞரின் பின்னாலுள்ள தொலைதூர கண்ணாடியில் மங்கலாக பிரதிபளிப்பதை நாம் கவனிக்கலாம். இளவரசியும் அவளது தோழிகளும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்- இவர்களிடமிருந்துதான் இவ்வோவியத்தின் தலைப்பை அமைத்திருக்கிறார். பளபளக்கும் ஆடம்பரமான ஆடைகளும், உடலமைப்பும் நேர்த்தியாக வரையப்பட்டுள்ளது. இவ்வோவியத்தை முதலில் பார்க்கும்போது, இது இருபதாம் நூற்றாண்டின் பிரசித்திபெற்ற படைப்புகளுக்கு நேர் எதிர் துருவத்தில் அமைந்திருப்பதாகவே கருதுவோம். 

பிக்காசோ (Picasso) போன்ற புதுமையான கருத்துருக்களுக்கும், பரிசோதனை முயற்சிகளுக்கும் பெயர்பெற்ற கலைஞருக்கு இவ்வோவியம் என்ன வழங்க முடியும்? – அதிலிருக்கும் எதை அவர் பொருட்படுத்தக்கூடும்? 1957 ஆம் ஆண்டின் பெரும்பகுதியை (அவருக்கு எழுபத்தைந்து வயதாக இருந்தபோது) பிக்காசோ ஏன் இந்த வரலாற்று பிரசித்திபெற்ற படைப்பை தன் பானியில் உருவாக்க நேரம் செலவிட்டார்?

Pablo Picasso, Las Meninas, 1957

இங்கு பிக்காசோவின் படைப்பூக்கம் என்னவாய் இருந்திருக்கும் என்பதை நாம் எப்படி கற்பனை செய்துபார்ப்பது? அவர் நினைத்த எதை இவ்வோவியத்தில் கொணர்ந்தார்? சுவாரஸ்யமாக, பிக்காசோ ஒரு செவ்வியல் படைப்பில் தஞ்சமடைவதை விரும்பியிருக்கிறார். அவ்வோவியம் புனிதமானது, அதை பெருமரியாதையோடுதான் அணுகவேண்டும், எனவே அது புது சோதனைகளுக்கு அப்பாற்பட்டது என்னும் வகையில் அவர் தன் சிந்தையை குறுக்கிக்கொள்ளவில்லை.  அவர் அதை பரிசோதிக்க முடிவுசெய்தார். அறியாமையாலும் நுட்பமின்மையாலும் வருந்தத்தக்க விளைவைகளை எதிர்கொள்வதைக் காட்டிலும், அவர் தன் சிந்தையை அதனுடன் விளையாட அனுமதித்தார், அதன் ஊடாக ஒரு நெருக்கமான பிணைப்பையும் ஏற்படுத்திக்கொண்டார். பிக்காசோவின் ஓவியத்தில் முற்றிலும் குழந்தைத்தனமான ஒரு அம்சம் உள்ளது. உண்மையாகவே அவரது குழந்தைகளான கிளாட்-டும் (Claude), பலோமா-வும் (Paloma) அந்த நேரத்தில் பத்து மற்றும் எட்டு வயதுடையவர்களாகத்தான் இருந்தனர். மேலும் அவர்கள்  பிக்காசோவின் ஓவியக்கூடத்திற்கு(studio) உள்ளேயும் வெளியேயும் ஓடி விளையாடிக்கொண்டிருந்திருக்கக்கூடும். முன்புறத்தில் வரையப்பட்டுள்ள நாய், சற்று கார்ட்டூன் பானியில் இருக்கிறது. கைகள் உடலில் இருந்து வெளியே ஒட்டிக்கொண்டிருக்கின்றன; கைகளே வெறும் விரல்களாகத்தான் தெரிகின்றன. 

வெலாஸ்குவேஸ் (Velázquez) ஒரு குழந்தையின் படத்தை வரைந்தார்; ஒரு குட்டி இளவரசி. வளர்ந்தவர்களுக்கிடையே, செல்வம் புழங்கும் சக்திவாய்ந்த உலகின் நடுவில், மிகவும் இனிமையுடனும் தன் அப்பாவித்தனத்துடனும் இருக்கும் குழந்தை. பிக்காசோ இந்த படைப்பை இன்னும் அப்பாவித்தனம் புலப்படும்படி மறுவுருவாக்கம் செய்துள்ளார். அவர் தன் ஸ்பானிய முன்னோடியின் படைப்பில் மறைந்திருக்கும் எளிமையையும், தன்னிச்சையான உணர்வையும் மீட்டெடுத்துள்ளார். பிக்காசோ, வெலாஸ்குவேஸின் ஆக்கத்தில் கவனத்தை ஈர்க்கும் செவ்வகங்களையும், முக்கோண வடிவங்களையும் கண்டு பெரும் வியப்படைந்துள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது. முந்தைய ஓவியத்தில், அந்த அறையின் வடிவமும் அதில் உள்ள பொருட்களின் வடிவங்களும் யதார்த்தமான சித்தரிப்புகளாகவே வெளிப்படுகின்றன. இருப்பினும், பிக்காசோ அந்த வடிவங்களுக்கு தன் பாணியில் ஒரு உயிர்ப்பை அளித்துவிடுகிறார். அதாவது, அவர் விரும்பிய ஒரு கருப்பொருளை எடுத்துக்கொண்டு அதை தன் பாணியில் விரிவுபடுத்தி இருக்கிறார் என்று சொல்லலாம். பிக்காசோ, வெலாஸ்குவேசின் படைப்பை அப்படியே நகலெடுக்க முயற்சிக்கவில்லை. அவர் அந்த படைப்பிற்குள் தன்னை இழந்துவிடாமல், அவர் அதனோடு அவராகவே இருந்திருக்கிறார் – எப்படி ஒரு நல்ல நட்பில், இரண்டு நபர்கள் ஒருவருக்கொருவர் அடுத்தவர் முன்னிலையிலும் அவர்களாகவே இருப்பார்களோ அப்படி. 

லாஸ் மெனினாஸ் (Las Meninas), சார்ஜென்ட் (Sargent) வரைந்த அந்த பிரபுவின் உருவப்படம், ஆப்பிரிக்க முகமூடி, ரிச்சி வரைந்த துறவி புருனோ(Saint Bruno) – இவற்றை முதலில் பார்க்கும்போது அவை நமக்கு சோர்வையோ எரிச்சலையோ ஏற்படுத்தக்கூடும். ஆனால் அவை நமக்குள் ஒரு உளவியல் வளர்ச்சி ஏற்பட வழிவகுக்கின்றன. அச்சுறுத்தும் விஷயங்களின் முன்னிலையில் நாம் எப்படி நாமாகவே உணர முடியும் என்பதைக் கண்டறியும் போதுதான் உண்மையில் வளர்ச்சி ஏற்படுகிறது. எந்த சூழலையும் சமாளிக்கும் திறன் பெற்றிருக்கும்போது தான் நாம் முதிர்ச்சி அடைகிறோம். அதாவது, முன்பு நம்மைத் தேவையற்ற பாதுகாப்புணர்வை நோக்கி அழுத்திய விஷயங்களையே நம் முன்னேற்றத்திற்காக பயன்படுத்திக்கொள்வது. 

நாம் உறுதியானவர்களாகவும், எளிதில் அதிர்ச்சியடையாதவர்களாகவும் மாறும்போது, சூழ்நிலைகளை உண்மையாக அவை எப்படி இருகின்றனவோ, அப்படியே கையாளும் திறன் பெறுகிறோம். ரோமானிய நாடக ஆசிரியர் டெரன்ஸுடன் (Terence) சேர்ந்து, ‘நான் ஒரு மனிதன்; மனிதர்கள் உணரும் எதுவும் எனக்கு அந்நியமானதல்ல’ என்று நாமும் சொல்லலாம். ஒருவரின் தனிப்பட்ட நேரடி அனுபவத்திலிருந்தும், கலாச்சாரத்திலிருந்தும் வெகு தொலைவில் உள்ள உணர்வுகளைக்கூட சுயமாக கண்டறிய முடியும் என்ற கருத்தைத்தான் இந்த மேற்கோள் அறிவிக்கிறது. 

நமக்கு அந்நியமாகத் தோன்றும் கலைப்படைப்புகள் தான் உண்மையில் மிகவும் மதிப்புமிக்கவை. ஏனென்றால் அவைதான் நமக்குப் பழக்கமான சூழலில், எளிதில் கிடைக்காத சிந்தனைப்போக்கையும் உணர்வெழுச்சிகளையும் நமக்கு அளிக்கின்றன. மேலும் ஒட்டுமொத்த மனிதத்தின் முழுவரைவும் நமக்கு கிடைக்க வழிவகுக்கின்றன. முற்றிலுமான மதசார்பின்மையையும், சமத்துவத்தையும் பேணும் கலாச்சாரத்தில் சில முக்கியமான சிந்தனைகளுக்கு இடமில்லாமல் போய்விட்டது. கலையுலகினால் சீண்டப்பட்டு, பயனுள்ள வகையில் மேம்படாதவரை, நம் அன்றாட நடைமுறையில், மரத்துபோய்விட்ட நம்முடைய முக்கியமான பகுதிகள் ஒருபோதும் தூண்டப்படுவதில்லை. 

அந்நியத்தன்மையை கொண்டிருக்கும் கலைப்படைப்புகள் நம்முள் ஒரு ஆன்மிக தூண்டுதலைக் கண்டறிய வழிவகுக்கிறது; நம் கற்பனையில் ஒரு மேட்டுக்குடி பிரபுவின் மனநிலையை புரிந்துகொள்ளச்செய்கிறது; ஒரு துவக்க சடங்குகளின் மீதான விருப்பத்தை ஊக்குவிக்கிறது. மேலும் இத்தகைய கண்டுபிடிப்புகள் நாம் யார் என்ற நமது உணர்வை விரிவுபடுத்துகிறது. நமக்கு தேவையான அனைத்தும் நம் கண்முன்னேயே இருப்பதில்லை. அந்நியமான விஷயங்களுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளமுடியும்போது நாம் ஒரு வளர்ச்சியை அடைகிறோம்; மேம்பட்டவர்களாக ஆகிறோம்.

***

தென்னவன் சந்துரு

வங்கித் துறை ஊழியரான தென்னவன் சந்துரு கலை இலக்கியம் சார்ந்த கட்டுரைகளில் ஈடுபாடுடையவர். மொழிபெயர்ப்பாளர். நவீன தமிழ் இலக்கிய வாசிப்பில் ஆர்வம் கொண்டவர்.

உரையாடலுக்கு

Your email address will not be published.