என்னுடைய ஒரு நாள்- கல்பற்றா நாராயணன்

தமிழில்- அழகிய மணவாளன்

    ஐந்தரை மணிக்கு, வேட்டிதான் கட்டியிருக்கிறேன், போர்வையை அல்ல என்று லைட்டை போட்டு உறுதிசெய்துவிட்டு எழுந்திருக்கிறேன். செய்தித்தாள் கொண்டு வருபவரின் பைக் சத்தம்தான் என்னுடைய அலாரம். எந்த கை அவரை முடுக்கிவிட்டிருக்கிறது? அந்த அலாரம் என்று செட் செய்யப்பட்டது? இது எதுவும் எனக்கு தெரியாது. நேரம்தவறாமையின் தந்தை அவர். அவருக்கு கொரோனா வந்ததும் நேரம்தவறாமை என்னுடைய இயல்பல்ல என்று ஒரு நாளில் எட்டுமணிக்கும் அடுத்த நாள் ஒன்பது மணிக்கும் செய்தித்தாள் கொண்டுவந்த அவரது மகன் என்னிடம் சொன்னான். ”நீங்கள் எப்போது எழுந்திருந்தால்தான் என்ன? இங்கு கஷ்டப்படுவது நான்தானே” என்று என் மனைவியும் தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டாள். சோம்பேறித்தனமும், பொறுப்பின்மையும், தனிப்பட்டமுறையில் அவளை பொருட்படுத்தாமையையும்தான் என்னுடைய இந்த தீராத தூக்கம் என்று நான் தாமதமாக எழுந்திருக்கும் நாட்களில் அவள் உணர்ந்துகொண்டாள். பறவைகள்போல, பட்டாம்பூச்சிகளைப்போல அந்தந்த தருணங்களால் ஆனவள் அவள்.

செய்தித்தாளில் நான் முதலில் பார்ப்பது விளையாட்டு பகுதியைத்தான். ’தி ஹிந்து’வில் நான் முழுமையாக வாசிப்பது அதை மட்டும்தான். அவர்களிடம் விளையாட்டை அறிந்து எழுதும் கட்டுரையாளர்கள் உண்டு. என்னுடைய நாயகன் விராட் கோலி. அவர் இப்போது கிரிக்கெட்டின் எந்த வகைமையிலும் கேப்டனாக இல்லை என்றாலும், மைதானத்தில் அவர் இருக்கிறார் என்றாலே அவர்தான் நாயகன். கிரிக்கெட்டில் மட்டுமல்ல, ஹாக்கியிலும் வாலிபாலிலும் கபடியிலும் கூடைப்பந்திலும் எல்லாம் அவரை விளையாடாத கேப்டனாக (Non Playing Captain) தேர்வுசெய்யவேண்டும் என்று நானும் அனுஷ்கா ஷர்மாவும் நினைக்கிறோம். இவ்வளவு உயிராற்றல்கொண்ட வேறொரு நபரை நான் அறிந்ததில்லை. நான் படைப்பூக்கத்துடன் வெளிப்பட்ட நாட்களில் நான் எழுதியதை முழுக்க பரிசோதித்தால் அவர் என்னில் செலுத்திய ஆற்றலை புரிந்துகொள்ளமுடியும். சச்சின் டெண்டுல்கர் சதம் அடித்த நாட்களில், மிகச்சொற்பமான ரன்களில் வெளியேறிய நாட்களில் நான் ஆற்றிய மேடையுரைகளின் வரைபடம் உயர்வுதாழ்வுகளாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கும். ’ இன்று நல்ல formஇல் இருக்கிறார்’ என்று சொல்வதில் உள்ள formதான் ஏதோ ஒருவகையில் கவிதையின் வடிவமும்(form). அசாதாரணமான ஆற்றலால் உந்தப்பட்டு கிரிக்கெட் பேட்டை ஏந்தி நிற்கும் சச்சின் டெண்டுல்கரைப்போல எழுதும்போதும், மேடையில் உரையாற்றும்போதும், வகுப்பெடுக்கும்போதும் வெளிப்படவேண்டும் என்று அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதுவரை நான் விழைந்தேன். அவர் உச்சபட்ச படைப்பூக்கத்துடன் வெளிப்படும் நாட்களில் நான்கு இஞ்ச் நீளம்கொண்ட கிரிக்கெட் பேட் தேசிய நெடுஞ்சாலை அளவுக்கு நீளம்கொண்டதாக ஆகிவிடும். சச்சின் பந்தை அடிக்காமல் தவிர்க்கும் தருணங்களில்கூட கணப்பொழுதில் ஆராயப்பட்டு, அவரின் ஒப்புதலை வாங்கிக்கொண்டுதான் அது பின்வாங்குகிறது. ஈடுபாட்டில், ஒருமுகப்படுத்தலில், பொறுமையில், படைப்பூக்கத்தில், விழிப்புநிலையில் எல்லாம் எனக்கு சிறந்த விளையாட்டுவீரர்கள் தூண்டுதலாக இருந்திருக்கிறார்கள். விளையாட்டுவீரர்களும், அவர்களின் உறவினர்களும் இறந்துவிட்டால் அந்த தகவல் செய்தித்தாளின் விளையாட்டுபக்கத்தில்தான் வருகிறது என்பது வாழ்க்கை ஒரு விளையாட்டு என்று நினைக்கும் என்னை மயிர்கூச்செறிய வைக்கிறது.

செய்தித்தாளின் தலைப்புச்செய்திகளை புரட்டிப்பார்த்தேன், காலையில் நான் கவனத்துடன் வாசிப்பது ஜான் மின்ஃபோர்டடின் (John Minford) தாவோ தெ ஜிங் (Tao Te Jing). லாவோசியின் புத்தகங்களுக்கு உள்ளதிலேயே சிறந்த மொழிபெயர்ப்பும் பொழிப்புரையும் எழுதியது ஜான் மின்ஃபோர் தான். கிளி சீட்டை எடுப்பதுபோல ஏதோ ஒரு பக்கத்தை எடுத்து, அது எந்த அத்தியாயமோ அந்த அத்தியாயத்தை ஆரம்பத்திலிருந்து வாசிப்பேன்.

A ruler

Nourished by the Tao

Never takes up arms

Does no violence

He accomplishes

Without boasting

Without bragging

Without pride.

அதைத்தொடர்ந்து கீழே கொடுத்திருக்கும் விளக்கங்கள் ஒன்றை வாசித்தேன். Ultimate excellence lies not in winning every battle but in defeating the enemy without ever fighting. காந்தி லாவோசியை வாசித்திருக்கிறாரா என்று எனக்கு தெரியவில்லை. நெருக்கடிகளிலிருந்து மீள பகவத்கீதையை விட தாவோ தே சிங் (Tao Te Ching) அவருக்கு உதவியாக இருந்திருக்கும். நாமே முயன்று அணுக்கமானதாக ஆக்கிக்கொண்ட நூல் நம்மை இயல்பாகவே புரிந்துகொண்ட நூல் அளவுக்கு  நமக்கு துணையிருப்பதில்லை. தாவோ தெ ஜிங் எதிர்காலத்தில்  பிறக்கப்போகும் காந்திக்காக பல நூற்றாண்டுகள் முன்பே எழுதித்தயாராக இருந்த நூல். வழிதான் வழி என்று உணர்ந்த ஒருவருக்கான வழி.

பின்பு இரண்டோ மூன்றோ கவிதைகள் வாசிப்பேன். காலைநேரத்தை கவிதைகளாக மொழிபெயர்த்த பிறகு காலைநடை போகலாம். ” கவிதைகள் வாசிக்க காலைநேரம், உரைநடை வாசிக்கவேண்டும் என்று தோன்றினால் அது செய்தித்தாளில் கிடைக்கிறதே” என்று சொன்ன அப்போளினயரை (Guillaume Apollinaire) நினைத்துக்கொண்டு நான் உரைநடையை விலக்கிவைத்தேன். இன்று ஃபெர்னாடோ பெஸோவின் (Fernado Peso) தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளும், the Ecco anthology of international poetryயும், மாதவன் ஐயப்பத்தின் கவிதைகளும் மேஜைமேல் இருக்கின்றன. the Ecco anthology of international poetryயின் ஆரம்பத்தில் உள்ள பக்கங்களை புரட்டினேன். ஔசேப் மாண்டெல்ஸ்டரமின் (Oesip Mantlestram) கவிதை. மூன்றுவரிகள். அந்த வரிகள் வாசித்த என் கண்களை மட்டுமல்ல என் வாழ்க்கையையும் துளைத்தது.

O lord, help me to live through this night

I am in terror for my life, your slave:

To live in Petersburg is to sleep in a grave.

சிலருக்கு அவர்கள் எங்கே இருக்கிறார்களோ அதுவே பீட்டர்ஸ்பெர்க். பீட்டர்ஸ்பெர்க்கை சுடுகாடாக ஆக்கியவர்கள் இங்கேயும் இருக்கிறார்கள் அல்லவா?

எனக்கு பிடித்த கவிஞர் மாதவன் அய்யப்பத்து.

என்னால் முடியவில்லை. நான் அர்ஜுனன் அல்ல, தளர்ந்துவிட்ட இந்த

கையில் உடைந்துபோன காண்டீபமும் நிலைக்கவில்லை

மேஜை மேல் இருப்பது வெறும் சிப்பிதான், அதை

நான்  தெய்வத்தன்மை கொண்டதாக ஆக்க ஆசைப்பட்டேன்.

நான் முழக்கும் சங்கொலியை கேட்டு

வானவர்கள் கூட விழிப்படைவார்கள் என்று மயங்கினேன்

என்ன ஒரு முட்டாள்தனம்,  என் முழக்கத்தை கேட்டு

என் தழும்புகள்கொண்ட உதடுகள் மட்டும் அந்திவானம்போல சிவந்தன

மாதவன் அய்யப்பத்து உயிருடன் இருக்கும்போதே அவரைப்பற்றி எழுதியிருக்க வேண்டியது. கவிஞர்களில் மிகமிக குறைந்த ஆட்களே கவிதை எழுதியிருக்கிறார்கள். நான் செய்யவேண்டியவற்றின் பட்டியலில் முதலில் இருப்பது மாதவன் அய்யப்பத்தை பற்றிய கட்டுரை. காலைநடைக்கு செல்லவேண்டிய நேரமும் ஆகிவிட்டது.

நான் ஒன்றொன்றரை மணிநேரம் நடப்பேன். ஒன்றொன்றரை1 நடத்தம் அது. எழுதி முடிக்காத கட்டுரைகள் அதுவரை கற்பனைசெய்திராத வடிவத்தில் மனதில் தோன்றும். தெளிவில்லாமல் இருந்தவை தெளிவாகும். கவிதைக்கான கருவோ, முழுகவிதையோ வானத்திலிருந்து உச்சந்தலையில் தெறித்துவிழும். நான் நடக்கும் வழியில் முகத்தை தூக்கிப்பார்க்கக்கூட நேரம் இல்லாதபடி அதிவிழைவுடன் புல்தின்று கொண்டிருக்கும் இறைச்சி மாடு என்னுடன் கவிதையில் எதிர்வினையாற்றுகிறது. நாளை நான் வரும்போது அது வெட்டப்பட்டு இறைச்சியாக ஆகியிருக்கும். அது அங்கே இருக்கப்போவதில்லை. மரணம் மிகமிக அருகில் இருக்கும்போதும் அது எவ்வளவு விழைவுடன் சாப்பிடுகிறது. எந்த தயக்கமும் இல்லை. தன் எல்லையில் இல்லாத ஒன்றைப்பற்றியும் அதற்கு எந்த பதற்றமும் இல்லை. மனிதனுக்கும் அப்படி இருந்தால் போதுமே? ஆதாம் ஏன் ஞானத்தின் கனியை சுவைத்தான்? இறக்கும்போது இறந்தால் போதாதா? எதிர்பாராத விதமாக ‘பொறாமை’ என்ற என் கவிதைக்கான வழியாக ஆனது அன்று நான் நடந்த வழி. ‘ நடுவில் இப்படி’ என்ற கவிதையும் வழியில் கிடைத்தது. இடையிடையே இப்படி ஏதோ கிடைத்துக்கொண்டே இருக்கிறது, காலைநடை முடிந்து  வீட்டிற்கு திரும்புவது புறப்பட்ட நான் அல்ல. கிடைத்துக்கொண்டே இருப்பவற்றை நோக்கிய பயணம் என்னை பரவசப்படுத்தியது.

உடற்பயிற்சி எனக்கு என்றும் பரிகாசத்திற்குரிய விஷயமாகவே இருக்கிறது. எந்த பலனும் இல்லாத செயலை உடற்பயிற்சி என்ற சொல்லால் சுட்டிய மலையாளப்பண்பாடு எனக்குள்ளே இருந்து சிரித்திருக்கலாம்2 . உடற்பயிற்சி பற்றி நான் ஒரு கவிதை எழுதியிருக்கிறேன்

நடப்பது எங்கேயும் சென்றுசேர்வதற்காக அல்ல

கீழே குனிவது எதையும் எடுப்பதற்காக அல்ல

பின்திரும்புவது பிடிக்காததை பார்த்து அல்ல

இல்லாத அம்மியில் அரைப்பது

இல்லாத இணையுடன் மகிழ்ந்திருப்பது

மாடியில் தனியாக நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது

உழைப்பு வேறு உடற்பயிற்சி வேறு. உழைப்பு விளைவுகளை ஏற்படுத்துகிறது, உழைக்கும் உடலை ஆரோக்யமானதாகவும் ஆக்குகிறது. அப்படிப்பார்த்தால் இயற்கை உழைப்பை வாழ்த்துகிறது என்றுதான் சொல்லவேண்டும். உழைப்பை அதன் உண்மையான அர்த்தத்திலிருந்து நீக்கிவிட்டது உடற்பயிற்சி, காலைநடை அந்த இழந்த அர்த்தத்தை மீண்டும் நிலைநிறுத்திவிட்டது. தோரோவும் நீட்சேயும் நான் நடக்கும்போது கூடவே நடக்கிறார்கள். (All truly great thoughts are conceived while walking- Frederick Neitzche).

’காலையுணவு தயாராகிவிட்டது’ என்றாள் மனைவி. ”உணவு தயாராகிவிட்டதா, தயாராகிவிட்டதா” என்ற கேள்வியாகத்தான் என் காலைநடையை அவள் நினைக்கிறாள். அவள் சாப்பிடக்கொண்டுவருவது எதுவாக இருந்தாலும், அதே தோசைதான் இன்றும் என்றாலும் அதை ஒவ்வொரு புதிய நாளும் இன்னும் சுவையுள்ளதாக ஆக்குகிறது. வாசிப்பறைக்கு போய் எழுதலாமா வாசிக்கலாமா என்று, To be or not to be என்று மனம் அலைபாயும்போது கீழே என் பிரியத்திற்குரிய களித்தோழன், இரண்டு வயதான நிதான் சந்திராவின் ’அச்சச்சா’(தாத்தா) என்ற விளி கேட்கிறது. நான் ’என்ன?’ என்று கேட்பதுவரை நீளும் அவனது அழைப்பு ஆரம்பித்துவிட்டது.  அவனின் குரல் கேட்டவுடன் என்னில் பரவும் கிலியை கவனித்தேன், அது இன்றுவரை யாரும் அனுபவத்திராத அளவுக்கு தீவிரமானது என்பதை உணரமுடிந்தது. மகன் அல்ல, பேரன் இருக்கிறான் என்றால் அந்த இரவில், காவலாளிகள் உறங்கினால்கூட சித்தார்த்தனால் வீட்டைவிட்டு வெளியேற முடிந்திருக்காது.

இரவில் அவன் சத்தம் கேட்டால் கட்டிலில் இருந்து கீழே விழுந்துவிட்டானா? அவன் அம்மாவும் அப்பாவும் தூங்கும்போது கதவைத்திறந்து மாடிப்படியிலிருந்து கீழே விழுந்த சத்தமா? என சாத்தியமான எல்லாவகையான பதற்றங்களும் அடையாத இரவுகள் எனக்கு அபூர்வமாக ஆகிவிட்டன. அவன் வந்த நாள் என் நினைவுக்கு வருகிறது. பயணக்களைப்பில் உடல்முழுக்க சிவந்திருந்தது.

ஆஸ்பத்திரியில் நர்ஸ் குழந்தையை தூக்கச்சொல்லி என்னிடம் நீட்டுகிறார். உடல் பழகாத குழந்தைகளை கையில் எடுக்க எனக்கு அவ்வளவு அச்சம். எதை கையில் எடுத்தாலும் கைதவறி கீழே போட்டு உடைத்துவிடும் இயல்பு எனக்கு. நான் உடைத்த கண்ணாடி டம்ளர்களையும், பாட்டில்களையும் வைத்து ஒரு மொத்த வியாபாரக்கடை தொடங்கலாம். ஒளப்பமண்ண எழுதிய ’ கிறுக்கன்’ என்ற கவிதையை எண்ணிக்கொண்டேன். அந்த கவிதையில் தந்தையின் கையிலிருந்து தவறிவிழுந்து குழந்தை இறந்துவிடும். தந்தை பைத்தியமாக ஆகிவிடுகிறார். அவர் ஒவ்வொருநாளும் புதிய இடத்தில் தோன்றுகிறார். தன் கையிலிருந்து விழுந்து நொறுங்கிய குழந்தையின் தந்தையால் எங்கே நிலைத்திருக்க முடியும்? நர்ஸ் சிரிப்புடன் திரும்பிப்போய்விட்டார்.

ஒளப்பமண்ண

மனிதன் வளர்வது எப்படி என்பதை ஆராய்வதற்காக கடவுள் அளித்த வாய்ப்பாக எண்ணி நான் என் களித்தோழனுடன் சேர்ந்துகொள்கிறேன். அவனுக்கு ஒரு மாதமோ, ஒன்றரை மாதமோ ஆனபோது தன் முடியை கையால் பிடித்திழுத்து வலியில் கத்திய சந்தர்ப்பம் வாய்த்தது. கையால் இறுகப்பிடித்திருக்கும் முடியை கொஞ்சம் தளர்த்தினால் வலிக்காது என்று சொல்லியிருக்கலாம், என்னுடைய மொழி அவனுக்கு புரியும் என்றால். ஆனால், சீக்கிரமே அவன் வலியை கையாள ஆரம்பித்துவிட்டான். தளர்த்தியும் இறுகப்பிடித்தும் அவன் முடியை வைத்து விளையாடத்தொடங்கினான். ”கற்றுக்கொள்ளமுடிவதை கற்றுக்கொடுக்கமுடியாது” என்ற ஐயப்ப பணிக்கரின் கவிதைவரியின் அர்த்தத்தை நான் இந்த குழந்தைமனிதனிடமிருந்து அறிந்துகொண்டேன். அவனுடைய கடவுள் தன் சுயபொறுப்பில்தான் அவன் வளர்வதாக அவனை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார். யாரின் சொல்லையும் கேட்பதில்லை, முகத்தை பார்த்து நம்மை மயக்கும்படி சிரித்துக்கொண்டு செய்யக்கூடாதவைகளை செய்துகொண்டிருக்கிறான். புண்ணான கால்முட்டியில் தோல் காய ஒருநாள் இடைவெளிகூட அளிப்பதில்லை. இதோ அழுகிறான், விழுந்து முட்டியில் தோல் கிழிந்துவிட்டது. இன்று ஒரு புதிய விளையாட்டுடன் வந்திருக்கிறான். கோவிலில் செண்டைமேளம் பார்த்ததால். மரபெஞ்சில், சுவரில், அது முடிந்ததும் என் முகத்தைப்பார்த்து சிரித்து சிரித்து கண்ணாடி ஜன்னலிலும் ஆற்றலைத்திரட்டிக்கொண்டு செண்டை அடிக்கிறான்.

அவனது அகராதியில் நான்கைந்து வார்த்தைகள்தான். இப்போது அதையும் குறைக்கவேண்டும் என்ற கடும் முயற்சியிலிருக்கிறான். ’அம்ம’ என்று சொல்வான், அப்பா துஷாரின் முதலெழுத்தான  ’து’ என்ற ஓசையை கேட்டவுடனே ‘டூ டூ’ என்று சொல்ல ஆரம்பித்துவிட்டான். பக்கத்துவீட்டில் உள்ள பிரதீபன் என்ற நெருங்கிய நண்பனை அ என்று சொல்கிறான், அது எதனுடைய முதலெழுத்து என்று பிடிபடவில்லை. தண்ணீரை உ என்று சொல்கிறான், பிரியத்தின் அகராதியில்  தண்ணீர் ’உம்பம்’3 அல்லவா? இங்கு சுற்றத்தில் இருப்பவர்களிடம் எல்லாம் நல்ல நட்பு. பைக்கில் செல்பவர்களை மாமா என்று உரக்க கூப்பிட்டு அவர்களை அதிர்ந்து திரும்பிப்பார்க்கவைத்து பறக்கும் முத்தம் கொடுப்பான். அப்பா எங்கே போயிருக்கிறார் என்று கேட்டால் பைக்கின் ஹேண்டில்பாரை முத்திரையாக காட்டுவான். இமோஜிக்களை உருவாக்கியது இரண்டு வயதுள்ள ஏதோ படைப்பூக்கம்கொண்டவன் என்று இவன் என்னை எண்ணவைக்கிறான்; மேலே குறிப்பிட்ட அ வுடன் ரயில்வே கேட்டிற்கு அருகில் நின்று ரயிலுக்காக காத்திருப்பான். ரயில்வே கேட்டை சாத்தினால்தானே ரயில்வரும்? கேட்டை மூடச்சொல்லி கேட்மேனிடம் கத்துவான். கேட்டை சாத்தினால் ரயிலால் வராமல் இருக்கமுடியாது அல்லவா. பெண்கள் அனைவரும் அக்காக்கள், ஆனால் எப்போதும் அல்ல. பிஷாரிக்காவு கோவில் உற்சவத்தில் ஒரு சின்ன பெண்ணின் வீணைவாசிப்பு கச்சேரி நிகழ்ந்தது. அவளுக்கு நேர் முன்னால் சென்று அவன் ’அம்மம்மே’(பாட்டி) என்று கூப்பிட்டான். இந்த குரூரமான விமர்சனத்தில் அல்லது அங்கீகாரத்தில் அந்த பெண் தளர்ந்துபோய்விட்டாள், ஸ்வரஸ்தானங்கள் தவறிவிட்டன.

மதிய சாப்பாட்டிற்கான நேரமாகிவிட்டது. சாப்பிட்டதும் ஒரு குட்டித்தூக்கம். ருதாலி என்ற ஹிந்தி சினிமாவில் பூபனும் லதாமங்கேஷ்கரும் பாடிய பாட்டுகள் கேட்டுவிட்டு துயரடன்தான் இன்று தூங்கினேன். எழுந்தவுடனேயே சமையலறைக்கு போனேன். மாலைநேர தேநீரை நான்தான் தயாரிப்பேன். ஒரு அடுப்பில் பாலும் இன்னொரு அடுப்பில் தேநீருக்கான தண்ணீரையும் வைப்பேன். காதலிக்கும் பெண்கள் பால்காய்ச்ச வேண்டாம் என்று நான் எழுதியிருக்கிறேன். எந்த கணத்தில் எண்ணத்தில் மூழ்கிவிடுவோம் என்று உறுதியாக சொல்லமுடியாதவர்களும் பால்காய்ச்சக்கூடாது. தேநீர் தயாரிப்பது போன்ற சிரமமான வேலை பிறிதொன்றில்லை. பால் பொங்கி அடுப்பில் சிந்திவிட்டால் அதை துடைத்து சுத்தமாக்குவது எளிமையான வேலையில்லை.

சிலநாட்களில் இன்னும் நேரம் மிச்சமிருந்தால் நான் பாறப்பள்ளி கடற்கரைக்கு, கிண்டிலை(amazon kindle) எடுத்துக்கொண்டு செல்வேன். இன்று எழுதவேண்டியது வேறு இருக்கிறதே, அதனால் போகவில்லை. புகழ்பெற்ற மலையாள சேனலின் விவாத அரங்கில் கலந்துகொள்ள முடியுமா என்று கேட்டிருந்தார்கள். இப்போது அழைப்பது அந்த சேனலுக்கு  சொந்தமான பத்திரிக்கையின் துணைஎடிட்டர். நான் அந்த விவாதங்களில் கலந்துகொள்வதில்லை. அவரிடம் “ நான் முன்கோபம்கொண்டவன் அல்ல. ஆனால் சொன்னதை சொன்ன அர்த்தத்தில் புரிந்துகொள்ளாமல் எதிர்த்து வாதிடுபவர்கள் மீது கோபமோ, சங்கடமோ வராது என்று சொல்லமுடியாது” என்றேன். ’ஓகே’ என்று அவர் ஃபோனை வைத்தார்.

இரவில் நான் சிறுகதைகளை வாசிப்பேன். ஹரீஷ், என்.எஸ்.மாதவன், சக்கரியா, மேதில் ராதாகிருஷ்ணன், உண்ணி ஆர், பி.எஃப்.மேத்யூஸ், என்.பிரபாகரன், சுபாஷ் சந்திரன், ஸிஹாபுதீன் பொய்த்தும்கடவு, வினோய் தாமஸ்…. இப்படி யாரோ ஒருவரின் கதை. நேற்று ஹரீஷின் ‘ இறந்துவிட்டார்’ என்ற கதையை வாசித்தேன். அய்யோ என்ன ஒரு கதை!

—————————————————————–

  1. ஒன்றொன்றரை– மிகச் சிறப்பான
  2. எந்த நோக்கமும் இல்லாமல் செய்யப்படும் வீண்செயல்களை, எவ்வளவுமுயற்சி செய்தாலும் எந்த பலனையும் அளிக்காத செயல்களை மலையாளத்தில் ’வியாயாமம்’ (உடற்பயிற்சி) என்று சொல்வார்கள். ’வியா’ என்ற சொல்லுக்கு வீண் என்று பொருள். அடிப்படை தர்க்கமோ, தரவுகளோ இல்லாமல் அதீதமான ஊகங்கள் வழியாக சிந்திப்பதை ‘ஃபாவனா வியாயாமம்’ (கற்பனைப்பயிற்சி) என்று சொல்வார்கள்.
  3. உம்பம்– அம்மாக்கள் குழந்தைகளிடம் உரையாடும் மலையாளத்தில் தண்ணீர் ’உம்பம்’ என்று சொல்லப்படுகிறது.

ஈரோடு பெருந்துறையை சேர்ந்த அழகிய மணவாளன், கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். நாவல் கலை பற்றிய மலையாள நாவலாசிரியர் பி.கே.பாலகிருஷ்ணனின் விமர்சன நூலை "நாவலெனும் கலைநிகழ்வு" எனும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். இலக்கியத்திற்கு அப்பால் நிகழ்த்துகலையான கதகளியில் அவருக்கு ஆர்வமுண்டு.

7 Comments

  1. நன்றி அழகிய மணவாளன், கல்பற்றாவின் இந்தவகை எழுத்து மிகவும் பிடித்திருக்கிறது.

  2. கல்பற்றாவின் மொழிதலில் கூடிவந்திருக்கும் துல்லிய அவதானம், தேர்ந்த மொழிநடை, அவரது நிதானமான இந்த எழுத்து வாசிப்பின்பத்தை அளிக்கிறது. நன்றி, அழகிய மணவாளன்.

  3. நன்றி அழகிய மணவாளன். மொழிபெயர்ப்பில் என்ன ஒரு துள்ளல் ! வாழ்த்துக்கள்.

  4. கல் பற்றாவின் தொடு திரை மிகவும் பிடிக்கும். சரளமான மொழி பெயர்ப்பிற்கு நன்றி. வாழ்த்துகள்

  5. அந்த ஆசிரியரே தமிழில் எழுதியதுபோல என்பது பெரிய பாராட்டு. தொடர்ந்து இது போல மொழிபெயர்ப்புக்கு நேர்மையான கட்டுரைகளை தாருங்க அண்ணா.

    கல்பற்றாவின் அவதானிப்புகள்,.. காதலிக்கும் பெண்கள் பால் காய்ச்ச கூடாது போன்றவை இலகுவாக இருக்கின்றன. இந்த கட்டுரையே அவருடைய படைப்பு மேதமையில் இருந்து கனிந்து வரும் எழுத்து.

  6. மனதுக்கு மிக நெருக்கமாக இருக்கிறது இந்த கட்டுரை.. நன்றி

உரையாடலுக்கு

Your email address will not be published.