”மரணத்தின் விளிம்புக்குச் செல்லும் வரையில் சூரிய அஸ்தமனத்தின் அருமை புரிவதில்லை” என்றான் ராஜேந்திரன். இருவரும் மலை உச்சியில் அமர்ந்திருந்தோம். சூரியன் இரவுக்குள் நுழைந்துகொண்டிருந்தது. காற்று இருவரையும் சுற்றிக்கொண்டு செல்வதை உடலில் இருந்து வெளிவரும் உஷ்ணம் உணர்த்தியது. சிறிதுநேரம் வானத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தவன், என் தோள்களின் மேல் கைகளைப்போட்டவாறு “உனக்கு புரிஞ்சுக்கிறதுக்கு ரொம்ப நாள் ஆகுண்டா” என்று சிரித்துவிட்டு, என்னிடமிருந்து கேள்விகளையோ பதில்களையோ எதிர்பாராதவனாய் எழுந்து நடக்கத் தொடங்கினான். பள்ளிப் புத்தகங்கள் காற்றில் பதிலை வாங்கிக்கொண்டிருப்பதுபோல் தோன்றியது.
ராஜேந்திரனுடனான எனது இருப்பு என்பது என் பெற்றோருடன் இருந்த நேரத்தை விட அதிகம். காலையில் பல் விளக்கி, குளித்து முடித்து பள்ளிக்கூட பையை எடுத்தால், இரவு தூங்குவதற்கு மட்டும் எனது இருப்பை வீட்டில் நிறுவவேண்டியிருக்கும். அதற்காக நான் வாங்கிய அடிகளும் உதைகளும் கணக்கில் வராதவை. அதே போல் ராஜேந்திரனும் இரவு என் வீட்டு வாசலில் என்னைத் தள்ளிவிட்டுச் செல்வது வரை கூடவே இருப்பான். இடைப்பட்ட நேரங்களில் காட்டின் அத்தனை நெளிவு சுழிவுகளையும் சொல்லிக்கொடுப்பான்.
காலையில் பள்ளிக்கூடத்திற்கு எல்லோரும் நேர்ப்பாதையில் செல்ல, இவன் மட்டும் என்னை மனிதர்கள் நுழையாத காட்டுப்பாதைகளில் அழைத்துக்கொண்டு செல்வான். அதன் மேடு பள்ளங்களையும், வளைவுகளையும் கணக்கெடுத்தவன் போல் நடக்கத் தொடங்குவான். செல்லும் வழியில் இருக்கும் செடிகளை உடைத்து நார் பிரிப்பவன், அருகே நிற்கும் மரங்களிலிருந்து குச்சிகளை ஒடித்து, அந்த நார்களைக் கொண்டு பாடை கட்ட தொடங்குவான். கட்டிய பாடையில் இலைகளைப் பறித்து மெத்தை அமைத்து, கட்டிய பாடைக்கு பிணம் வேண்டும் என்று சுற்றிச்சுற்றி அங்கிருக்கும் பூச்சி, பறவை, அணில், பாம்பு, ஒணான், பாம்பு ராணி, கரட்டாண்டி என ஒவ்வொன்றையும் தேடித் தேடி வேட்டையாடத் தொடங்குபவன், அதற்கான கருவிகளை (உண்டிவில், நரம்பு நூல்) எப்போதும் தன்னுடைய பையிலே வைத்திருப்பான். கொலை புரிவதிலும் சில நுட்பங்கள் வேண்டும் என்று சொல்பவன் எந்த நொடியிலும் பூச்சிகளை நசுக்கவோ, ஒணான்களைக் கற்களால் அடிப்பதோ இல்லை. தேர்ந்த கொலைகாரனின் உணர்வோடு, பூச்சியை பிடித்து அதன் மேல் கல்லைக் கட்டி தண்ணீர்க்குள் எறிந்துவிடுவான். பறவைகளின் இரு சிறகுகளை விரித்து மிகப்பெரிய கற்களை அதன் மேல் வைத்துவிடுவான். ஒணான், பாம்பு, அணில் எனக் காட்டில் அலைந்து கொண்டிருக்கும் எல்லா விலங்குகளையும் நரம்புச் சுருக்குப் போட்டுப் பிடித்து மரத்தின் கொப்புகளில் தூக்குக் கைதிகள் போல் தொங்கவிடுவான். மறுநாள் மீண்டும் அதே இடத்திற்குச் செல்பவன், அவை இறந்ததை உறுதிப்படுத்திக்கொண்டு அதற்கான எல்லா இறுதி மரியாதைகளையும் செய்யத் தொடங்குவான். உடல்வாகிற்கு ஏற்றவாறு குழிகளைத் தோண்டி அவைகளை உள்ளே வைத்து மண்ணால் நிரப்புபவன், அந்த மேட்டின் மேல் ஒரு பூவை கொண்டு வந்து வைப்பான். அவனுடன் சேர்ந்து எவ்வளவு சுற்றினாலும் என் கண்களுக்கு மட்டும் அந்த பூக்கள் தென்பட்டதே இல்லை. எல்லா சடங்குகளையும் நிறைவேற்றிவிட்டு சிறிது நேரம் கண்மூடி தியானிப்பான். அந்த நேரத்தில் அவனுடன் பேசுவதோ இல்லை அவனைப் பேச வைப்பதோ அவ்வளவு எளிதில்லை. அதுவரை என்னுடன் விளையாண்ட ராஜேந்திரனாக இருக்கமாட்டான். வேறு ஏதோ உலகத்தில் சஞ்சரிப்பதாகவே தோன்றும். வெறும் பார்வையாளனாக மட்டுமே நான் பார்த்துக்கொண்டிருப்பேன். தன்னுடைய பிரார்த்தனையை முடித்துவிட்டு அருகிலிருக்கும் குளக்கரையை நோக்கிச் செல்பவன், கால் நனைத்துவிட்டு சூரியனைத் தொழுதவாறு பள்ளியை நோக்கி நடக்கத் தொடங்குவான். இரையின் பின்னால் அலையும் கோழி போல் அவன் பின்னால் நடக்கத் தொடங்குவேன். எனக்கான வரைபடத்தை அவன் உருவாக்கிக்கொண்டே செல்வான். அதன் பாதையில் சற்று விலகினாலும் என்னைத் தொலைத்துவிடுவதற்கான அத்தனை சாத்தியங்களும் கண்முன்னால் நின்றுகொண்டிருந்தது.
பள்ளிக்கூடத்திற்கு இருவரும் எப்போதும் நேரம் தவறிச் செல்வதும், தலைமை ஆசிரியரிடம் அடிவாங்குவதும் அன்றாட நிகழ்வு. வகுப்பிற்கு நுழைந்ததும் யாருடனும் பேசாதவனாகக் கடைசி இருக்கையில் சென்று அமர்ந்துகொள்வான். அவனிடம் நட்பு ஏற்படுத்திக்கொள்வதற்காக எத்தனையோ பேர் ஏங்கிக்கொண்டிருக்க, யாரையும் கண்டுகொள்ளதவனாக அவன் அருகே என்னை அமரச் சொல்பவன், என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசமாட்டான். ஆசிரியர் கேட்கும் எந்த சுய கேள்விகளுக்கும் பதில் சொல்லாதவன், பாடம் சம்பந்தமாகக் கேட்கப்படும் எல்லாக் கேள்விகளுக்கும் பதில்களைக் காரண காரியங்களோடு விளக்குவான். ஆசிரியர்களோ தங்களின் அறிவு அவன் முன்னால் உடைந்து போவதைத் தாங்கமுடியாதவர்களாகச் சீக்கிரமாக உட்காரச் சொல்லிவிடுவார்கள். கேள்விகளையும் குறைத்துக்கொள்வார்கள். எங்கிருந்து இவ்வளவையும் இவன் தெரிந்துகொள்கிறான். புத்தகம் என்பது எப்போதும் அவனுக்கு தேவையில்லாத சுமையாகத்தான் இருந்திருக்கிறது. வகுப்பில் நுழைந்ததும் அதனைக் காலுக்குக் கீழே வைப்பவன், மாலை கிளம்பும்போது மட்டும் எடுத்துக்கொள்வான். வீட்டில் சென்று படிக்கிறானோ என்ற சந்தேகம் இருந்தாலும், அதற்கான வாய்ப்புகளும் இல்லை என்பதை அவன் என்னுடன் சேர்ந்து சுற்றும் நேரங்களில் தெரிந்துகொள்வேன். பள்ளியில் இருக்கும் எல்லோரும் அவன் மர்மத்தை ரசித்துக்கொண்டிருக்கும் அதே வேளையில் அந்த மர்மத்தின் ரகசியத்தை சிறிதேனும் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக, பள்ளி வாசலில் விற்கப்பட்டும் தின்பண்டங்களில் ஏதேனும் ஒன்று என் கைகளுக்குத் தினமும் கிடைத்துக்கொண்டே இருக்கும். நானும் அந்த பண்டங்களை சுவைத்தவாறு ரகசியத்தின் சிறு கீற்றை வெளியில் தெரியாதவாறு காப்பாற்றி வைத்துக்கொண்டேன். மாலை பள்ளி முடிந்தது எல்லோரும் வீட்டுக்குச் செல்லத் துவங்க, அவன் மட்டும் என்னை அழைத்துக்கொண்டு ஊரின் அடையாளமாக நின்றுகொண்டிருக்கும் மலையில் ஏறத் தொடங்குவான்.
மலை ஏறும் வரை எதுவும் பேசாதவன், மலையில் குகை போல் இருக்கும் ஒரு பாறையின் கீழ் என்னை உட்கார கட்டளையிட்டுவிட்டு தன்னுடைய வேட்டைகளைத் துவங்குவான். காட்டிற்கென்று ஒரு வேட்டை முறைபோல், மலைக்கு என்று பிரத்தியேக வேட்டைகளைக் கையாளத் துவங்குவான். கண்ணிகளை விரித்துவைத்துவிட்டு அதில் சிக்கும் பறவைகளின் உடலோடு கல்லைச் சேர்த்து கட்டுபவன் அவற்றை மலையின் உச்சியிலிருந்து தூக்கி எறிவான். வீசியவை தரையில் படும் ஒவ்வொரு ஒலிக்கும் அவன் உடல் விரல் மீட்ட தந்தி போல் அதிரத் தொடங்கும். அன்றைய நாளின் பலி முடிந்தது என்று உணரத் தொடங்கினால் தன் உடலைப் பாறையின் மேல் கிடத்துபவன், சூரியன் தன் நிறத்தை மாற்றிக்கொள்வதிலிருந்து நிலா தன் வெளிச்சத்தை அவன் மேல் பாய்ச்சுவது வரை அவற்றையேப் பார்த்துக்கொண்டிருப்பான். பிறகு எல்லாம் முடிந்த நிம்மதியுடன், என்னையும் அழைத்துக்கொண்டு கீழே இறங்கத் தொடங்குவான். இறங்குவது என்பதை விட ஓடத் தொடங்குவான் என்பதுதான் பொருத்தமாக இருக்கும். இருட்டு என்பது அவன் முன்னால் இல்லை என்பது போல் ஓடிக்கொண்டே இருப்பான். அவன் விழுந்துவிடுவதற்கான அத்தனை சாத்தியங்கள் இருந்தாலும், அப்படி ஒன்று அதுவரை நிகழ்ந்ததே இல்லை என்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
மலையின் அடிவாரத்தைத் தொட்டதும் கால்கள் தங்கள் ஓட்டத்தை நிறுத்திக்கொள்ள வீடுகளை நோக்கி நடக்கத் தொடங்குவோம். செல்லும் பாதையில் அவன் வீடுதான் முதலில் வரும் என்றாலும், அதைத் தவிர்த்தவனாக என் வீட்டின் பாதை வழியே அழைத்துச் செல்வான். ஊரில் இருக்கும் நாய்கள் எல்லாம் அவனைச் சுற்றிக்கொள்ள, அதை பூனையைத் தடவிக்கொடுப்பது போல் தடவிக்கொடுப்பான். அவைகள் எல்லாம் ஏதோ அவனுக்கு அடிமை என்பது போல் வால் குழைந்து உடல் குறுக்கி அவன் கால்களை நக்கத் தொடங்கும். அவனின் பின்னால் வந்துகொண்டிருக்கும் என்னை அவற்றின் கண்களுக்குத் தெரியாது போல் நடந்துகொள்ளும். ஊருக்குள் செல்ல செல்ல, ஊரின் எல்லா நாய்களும் அவனைச் சூழ்ந்துகொள்ளும். பகலில் ஒன்றுக்கு ஒன்று சண்டையிட்டு குதறிக்கொண்டிருக்கும் அவைகள் எல்லாம் அவன் முன்னால் தாங்கள் நீண்ட நாள் நண்பர்கள் போல் ஒன்றையொன்று கொஞ்சத் தொடங்கும். அவற்றின் கொஞ்சல்களோடு சேர்ந்து என் தெருமுனைக்கு வரை வரும் அவைகள், அவனின் கட்டளைபோல் தெருமுனையைத் தாண்டி வந்ததே இல்லை. அவனும் அதை தாண்டி வரமாட்டான். இருவரும் பிரிந்துகொள்ளும் வேளையில் என்னைப் பார்த்துச் சிரிப்பவன், நான் வீட்டிற்குள் செல்வது வரை தெருமுனையிலே நின்றுகொண்டிருப்பான். என் உருவம் மறைந்த அடுத்த நொடியில் தன் பாதுகாவலர்களை அழைத்துக்கொண்டு அவன் வீடு நோக்கி நடக்கத் தொடங்குவான்.
அவனுடனான காலைப் பொழுதுகளை இவ்வாறு முடித்துக்கொண்டு, அம்மாவிடம் அடியோ திட்டோ வாங்கிவிட்டு அழுதுகொண்டே இரவு உணவையும் முடித்துத் தூங்கத் தொடங்கினால், அன்றைய தினத்தில் கொலை செய்த பூச்சிகளும், விலங்குகளும் ராட்சத உருவத்தில் கனவில் நடமாடத் தொடங்கும். ”உருவத்தின் அமைப்பில் எதுவுமில்லை, தேவையெல்லாம் அந்த உருவத்தினை உடைப்பதற்கான வழிகள்தான்” என்று கூறிக்கொண்டு முன்னால் செல்பவன் அதன் உருவங்களை உடைப்பதற்கான எல்லா வழிகளையும் உருவாக்கத்துவங்குவான். அதற்கான பிரத்தியோக ஆயுதங்களை கனவின் பல்வேறு அடுக்குகளிலிருந்து எடுப்பவன், அவற்றைக்கொண்டு பூச்சிகளையும், விலங்குகளையும் வெட்டத் துவங்குவான். வெட்டிய பாகங்களை மரவெட்டும் தொழிற்சாலையின் மரங்கள் போல் அடுக்கிவிட்டு அவற்றின் தலைகளைக் குச்சியில் சொருகி அந்த மர அடுக்குகளின் மேல் வைப்பான். அவை பார்ப்பதற்குக் கோலத்தின் நடுவில் வைக்கப்படும் பூசணி போல் இருக்கும். அவ்வளவு உடல் உறுப்புகளை இழந்து நின்றபோதிலும் அவைகளின் கண்களில் எந்தவித பயமில்லாமல் அவனைப் பார்த்து முறைத்துக்கொண்டிருக்கும். அவற்றைப்பார்த்துச் சிரிப்பவன், கையில் இருக்கும் குண்டூசி கொண்டு அவற்றின் கண்களில் குத்தத் தொடங்குவான். அவற்றிலிருந்து வடியும் ரத்த துளிகளை தன் விரல்களில் எடுத்துச் சுவைக்கத் தொடங்குபவனின் உடலில் ரோமங்கள் எழுந்து நிற்கத் தொடங்கும். தியானத்திற்குச் சென்றுவிடுவான். நான் அதன் கண்களிலிருந்து வரும் ரத்த துளிகளையேப் பார்த்துக்கொண்டிருப்பேன். துளி நீர், ஓடை, கம்மாய், குளம், ஆறு, என மாறி பேரருவியாக என்மேல் பொழியத் தொடங்க, கதறியடித்துக்கொண்டு எழுவேன். இதற்கெனவே காத்திருக்கும் அம்மா அருகில் இருக்கும் துடைப்பத்தை எடுத்துக்கொண்டு ”பகல்ல புள்ள காடு மேடுனு சுத்துறது. நைட்டு ஆனா ஆத்தா அம்மாங்க வேண்டியது. மனுஷங்கள நிம்மதியா தூங்கவிடுறயா?” என்று திட்டிக்கொண்டே அடிக்கத் துவங்குவாள். கண்ணீர் மழையில் நனைந்தவனாகத் தூங்கத் தொடங்குவேன்.
மறுநாள் காலையில் அவனிடம் என் கனவுகளை விவரித்தால் அவனும் அதே கனவைக் கண்டதாகவும், அந்த கனவில் அவன் இடத்தில் நான் இருந்ததாகவும் சொல்லிச் சிரிப்பான். அதற்கான காரணம் என்ன? அதை எப்படிப் புரிந்துகொள்வது என எந்தவிதமான அறிதல்களும் இல்லாத காலம். பள்ளி முடிக்கும் வரை இருவருக்குமான பகலிரவு விளையாட்டுகளில் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடவில்லை. ஆனால் பள்ளி இறுதித் தேர்வு முடித்த மறுநாள் எங்களுக்கிடையே புது விளையாட்டொன்று உருவாகத் தொடங்கியது.
பரீட்சை முடிந்த கொண்டாட்டத்தின் அலுப்பில் சிறிது அயர்ந்து தூங்கியவனை அம்மாவின் சத்தம் எழுப்ப, கண்ணைக் கசக்கிக்கொண்டு வெளியே வந்தேன். என்னைத் தேடி முதன் முதலாக வந்த ராஜேந்திரனை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருக்க, அம்மாவோ அவளின் இத்தனை நாள் கோபத்தைக் கொட்டுவதற்காகக் கிடைத்த வாய்ப்பாக அவனைத் திட்டிக்கொண்டிருந்தாள். முகத்தில் திட்டு வாங்குவதற்கான எந்த பாவனைகளும் அவனிடத்தில் இல்லை. என்னைப் பார்த்துச் சிரித்தவன் “வாடா போலாம்” என்று சொல்லிவிட்டு நடக்கத் தொடங்கினான். அம்மா அம்புகளை என் மேல் ஏவத் தொடங்க, அவற்றைக் காற்றுக்கு இறைத்துவிட்டு பின்னால் ஓடத் தொடங்கினேன். ஏன் அப்போது அப்படிக் கிளம்பினேன்? அன்று மட்டும் கிளம்பாமல் இருந்திருந்தால் என் வாழ்க்கையில் எல்லாமுமே மாறியிருக்குமே! எது அவன் பின்னால் என்னை அழைத்துக்கொண்டு சென்றது. இன்று யோசித்தால் அதற்கு ஒரு பெயர்தான் இருக்கமுடியும், மரணம்.
கயிறு கட்டிய குரங்காய் அவன் பின்னால் தாவித் தாவி ஓடிக்கொண்டிருந்தேன். வழக்கம்போல் அவனுக்கான பாதையில் என்னை அழைத்துச் சென்றவன், ஊரின் வாசம் தீண்டாத அடர்ந்த காட்டிற்கு நடுவே, புற்களாலும், செடிகளும் சுற்றி வளைக்கப்பட்டிருந்த கிணற்றருகே தன் நடையை நிறுத்தினான். அங்கிருக்கும் கல்மேல் என்னை அமரச் சொன்னவன், சுத்தப்படுத்துவதற்கான கருவிகளைச் சுவர்களுக்குப் பின்னாலிருந்து எடுத்து கிணற்றைச் சுத்தப்படுத்தத் தொடங்கினான். நீண்டநாள் சேகரிப்பின் புதையல்களாக பழைய சேலைகளும், மரப்பாச்சி பொம்மைகளும், பிளாஸ்டிக் டப்பாக்களும் என ஒவ்வொரு முறையும் ஏதோ ஒன்று வெளியே குதித்துக்கொண்டே இருந்தது. அவனின் வேலை கடுமையாவது போல் தோன்ற, “உதவிக்கு வரட்டுமா?” என்று கேட்டவனிடம், புன்னகையை மட்டும் பதிலாகத் தெரிவித்துவிட்டு அழுக்கின் சிறு சுவடின்றி எல்லாவற்றையும் வெளியே அள்ளி எரிந்தான். மலையைச் சுருக்கி வைத்தவைபோல் என் முன்னால் அவைகள் குவிந்துகிடக்க, சூரியன் தன் முழுபலத்தைக் காட்டத் தொடங்கியது. வேலை எல்லாம் முடிந்தவனாகக் கருவிகளை அதற்கான இடத்தில் வைத்துவிட்டு, சூரியனை உற்றுப்பார்த்தான். அதன் மொத்த ஒளியையும் தனக்குள் சேகரிக்கத் தொடங்கியவன் “நண்பா விளையாட்டில் எப்போதும் பலி கொடுப்பவன், பலி ஆகிறவன் என இரண்டுதான் இருக்கமுடியும். அதை நாம் வெற்றி என்றும் தோல்வி என்றும் பிரித்துக்கொள்கிறோம். சமம் என்பதெல்லாம் மனது செய்யும் தந்திரங்கள். பலி கொடுக்கும்போது அடையும் இன்பத்தைப் பலி ஆகப்போவதில் அடையமுடியுமா என்ற கேள்விதான் என்னை அலைக்கழித்துக்கொண்டே இருந்தது. இதற்கான பதில் என்னவாக எல்லாம் இருக்கும் என்று தோன்றிக்கொண்டே இருக்க, அந்த விளையாட்டையும் விளையாடிவிடலாம் என்று முடிவுசெய்துவிட்டேன்.. அந்த விளையாட்டிற்குக் காலம் ஒரு சாட்சியாக நின்றாலும், அந்த காலத்திற்கு ஒரு சாட்சி தேவையல்லவா? அதற்காகத்தான் உன்னை இங்கு அழைத்துவந்தேன். நடுவரில்லாத விளையாட்டு என்பது எப்போதும் சுவராசியமற்றுதான் இருக்கும். நடுவர் நினைத்தால் வெற்றியைத் தோல்விக்கும், தோல்வியை வெற்றிக்கும் எளிதாகக் கைமாற்றிவிடமுடியும். என்னுடைய விளையாட்டின் முடிவை உன் கையில் கொடுத்துவிட்டு செல்கிறேன். மீண்டும் சந்திப்போம்”. எந்தவித அசைவுகளோ உதறல்களோ இல்லாதவனாக மேகத்தில் மிதப்பவன்போல் கிணற்றுக்குள் தன் உடலைச் செலுத்தினான். என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று புரிவதற்குள் எல்லாம் முடிந்து நீரின் சலனமும் அடங்கிவிட்டது. என் நிழல் எதிர்த்திசைக்கு செல்வது வரையிலும் அவன் வருவதற்காகக் காத்திருந்தேன். அவன் வருவதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை. நான் ஏன் அவனுடன் சேர்ந்து கிணற்றில் குதிக்கவில்லை. குதிப்பதற்கான மனது இல்லையா? குதித்தால் என்னையும் அவனுடன் சேர்ந்து விளையாட்டிற்குள் இழுத்துக்கொள்வான் என்கிற பயமா? கேள்விகள் முளைத்துக்கொண்டிருக்கப் பதிலேதும் இல்லாதவனாய் நின்றுகொண்டிருந்தவனின் கால்கள் ஊரை நோக்கி ஓடத் தொடங்க, மனதை நாய்க்குட்டியாய் அதன் பின்னால் ஓடவிட்டேன்.
கிணறு முழுவதும் ஆட்களால் சூழப்பட, நீச்சலில் கரைகண்டவர்கள் எல்லாம் தங்களின் தோல்விகளைத் தாங்கிக்கொள்ளமுடியாதவர்களாகக் கரைக்கு வரத் தொடங்கினார்கள். தீயணைப்புத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட, அவர்களும் தங்களின் கற்ற அறிவையெல்லாம் பரிசோதித்துப் பார்த்தார்கள். அவர்களும் தங்கள் தோல்வியை ஒத்துக்கொண்டவர்களாக கிளம்பிச் செல்ல, தண்ணீரில் நனைந்த எரிச்சலோ, தங்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை என்ற கோபமோ ஊரிலிருந்த எல்லோரும் என்னை விசாரிக்கத் தொடங்கினார்கள். அம்மாவுக்கோ அவர்களிடமிருந்து என்னை எப்படி மீட்பது என்பது தெரியாதவளாய் சுற்றிச் சுற்றி வந்தாள். சுற்றியிருந்த குப்பை குவியல்களும், என் கண்களும் தவிர வேறு சாட்சிகள் ஏதும் அற்றவனாய் அவர்கள் முன்னால் நின்றுகொண்டிருந்தேன். நம்பிக்கையின் எல்லா பக்கங்களும் விலகிக்கொண்டே செல்ல, மூன்று நாட்கள் காத்திருக்கலாம் என்று முடிவு செய்தவர்களாக அங்கிருந்து விலகிச் சென்றார்கள். மூன்று நாட்களும் உறக்கம், பசி என்பதனை மறந்தவனாக வெளியே எங்கும் செல்ல முடியாதவனாக வீட்டுக்குள் அடைந்துகொண்டேன். அம்மாவும் என்னுடன் சேர்ந்து காத்திருக்கத் தொடங்கினாள். மூன்றாவது நாள் விடியத் துவங்க, சிறியவர்களிலிருந்து பெரியவர்கள் வரை கிணற்றைச் சூழத் தொடங்கினார்கள். தண்ணீரில் மிதக்கும் ஒரு உருவம் தங்களுக்கு கிடைக்கும் என்று அன்றைய தினத்தின் எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு எட்டிப்பார்க்கத் தொடங்கியவர்களுக்கு, தூசி குப்பைகள் எல்லாம் துடைத்து சுத்தமாக்கப்பட்ட கிணற்றின் தரை வரை தெரிந்த தண்ணீர் எதிர்பட்ட தங்களின் ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ளாதவர்களாகக் கிணற்றைச் சுற்றிச் சுற்றி வந்தார்கள். அவன் தன் விளையாட்டினை துவங்கிவிட்டான் என்பது புரியத்துவங்கியது. ஒருவேளை ஊருக்குள் என் கால்கள் ஓடிக்கொண்டிருக்கும்போது கிணற்றிலிருந்து வெளியேறிச் சென்றிருப்பானோ? இல்லை அதற்கான எந்த சாத்தியங்களும் இல்லை. அவன் உடல் எடை இழந்து தண்ணீரில் மூழ்குவதை இந்தக் கண்கள்தானே பார்த்தது. யாரிடம் நான் இதைச் சொல்லி நம்ப வைக்கமுடியும். அவன் இருந்தால் ஒழிய அதற்கான எல்லா பழிகளையும் நான் ஏற்றுத்தான் ஆகவேண்டும் என்பதும் உணரத் தொடங்கியது. கேள்விகள் எதற்க்கும் பதில் இல்லாதவனாய் அவர்கள் முன்னால் நின்றுகொண்டிருக்க, அவர்களோ நான்தான் அவனை ஏதோ செய்துவிட்டுப் பொய் சொல்லுகிறேன் என்று கத்தத் தொடங்கினார்கள். காவல்துறைக்கு உடனே புகார் அளிக்கப்பட்டது. உண்மை அறியும் வழிகள் அனைத்தையும் என்னிடம் பரிசோதனை செய்தவர்கள் இறுதி முடிவாக என் அம்மாவை அழைத்து, நல்ல மனநல மருத்துவமனையாகப் பார்த்துச் சேர்த்துவிடுமாறு கூறிவிட்டுச் சென்றார்கள்.
அம்மாவோ கோவில் கோவிலாக அழைத்துப் போகத் தொடங்கினாள். தினம் ஒரு சாமி, தினம் ஒரு நேர்த்திக்கடன், தினம் ஒரு பூசாரி என அவளுடன் சேர்ந்து நானும் அலையத் தொடங்கினேன். ஊரின் பார்வைகள் படும் போதெல்லாம் குஞ்சை பருந்துகளிடம் பாதுகாத்துக்கொள்ளும் கோழியைப் போல் என்னை அரவணைத்துக்கொள்வாள். அவளின் கதகதப்பில் நானும் சிறிது நேரம் எல்லாவற்றையும் மறந்து நிற்பேன். ஊரின் பார்வைகளில் தன் மனதை அலைக்கழித்தவள், என்னுடன் அலைந்து கொண்டிருந்ததால் தன் உடலையும் அலைக்கழிக்கத் தொடங்கினாள். எனக்கான நேரத்திற்கு எல்லாவற்றையும் கொடுத்தவள் தனக்கான எந்த நேரத்தையும் கடைப்பிடிக்கவில்லை. அவள் உடை எடை குறையத் தொடங்க, அதைக் காண சகியாதவனாய் முதன் முறையாக ராஜேந்திரனை மனதுக்குள் திட்டத் தொடங்கினேன். அவனோ தன் விளையாட்டினை முடித்துக்கொள்வதற்கான எந்த வழிகளையும் காட்டாதவனாய் என் முன் மாபெரும் சுவராகி நின்றுகொண்டிருந்தான். நம்பிக்கைகள் எல்லாம் தொலைந்துபோனவனாய், வாழ்க்கையின் எல்லா திசைகளும் மூடிக்கொண்டதாய் உணரத்தொடங்கியவன் எதிரே பள்ளி இறுதித்தேர்வு முடிவுகள் வர, என்னுடைய எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு கயிறாக அதைப் பிடித்துக்கொண்டு இந்த ஊரைவிட்டு எவ்வளவு தூரம் செல்லமுடியுமோ அவ்வளவு தூரம் சென்றுவிடவேண்டும் என்று முடிவு செய்தேன். என் ஊரிலிருந்து ஒரு இரவு தொலைவில் கல்லூரியைத் தேர்ந்தெடுத்தேன். அம்மாவிடம் ஆசீர்வாதம் வாங்கியவனாக என்னுடைய பைகளை எல்லாம் எடுத்துக்கொண்டவன் எந்தக் காரணம் கொண்டும் இந்த ஊருக்குத் திரும்பிவிடக்கூடாது என்று தீர்மானித்துக்கொண்டேன்.
படிப்பு, நண்பர்கள், கொண்டாட்டம் எனக் கல்லூரி அதனுடைய பாதுகாப்பு பெட்டிக்குள் என்னை பத்திரமாக வைத்துக்கொண்டது. பெட்டி பத்திரமாக இருந்தாலும் திருடனுக்கு விரலளவு கம்பி போதும் என்பதை உணர்ந்தவனாக அவனின் வருகையை எங்கிருந்தோ எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். ராஜேந்திரன் என்ற பெயரை எங்கேனும் எதிர்கொள்ளும் நொடியில் என்னையும் அறியாமல் பள்ளி வயது சிறுவனாக மாறிவிடுவேன். உடலில் நடுக்கம் ஏற்படத் தொடங்கிவிடும். கல்லூரி வளாகத்தின் ஏதோ ஒரு மூலையில் இறந்துகிடக்கும் பறவைகளும் பூச்சிகளும் என்னுடைய தூக்கத்தைத் தொலைத்துவிடும். அன்றைய உறக்கத்தில் அவைகள் உலாவத்தொடங்கும். இவற்றில் தப்பிப்பதற்கான வழிகள் ஏதும் அற்றவனாய் அலைந்துகொண்டிருந்தவனுக்கு அம்மாவின் போன் மட்டுமே ஆறுதலாக இருந்தது. அதுவும் சில நாட்களுக்குத்தான். பறவைக்கூட்டம் ஒன்று எங்கள் வீட்டைச் சுற்றிவருவதாகவும், ஊரில் இருக்கும் கிணற்றைச் சுற்றி பூச்சிகள் அலைவதாகவும், இரவில் மலையின் மேல் உட்கார்ந்து ஒரு உருவம் எங்கள் வீட்டையே கவனிப்பதாகவும் என அவ்வப்போது அவள் கதை சொல்லத் தொடங்க, எந்த காரணம் கொண்டு ஊருக்குச் சென்றுவிடக்கூடாது என்பவனாக விடுமுறைத் தினத்திற்கான திட்டங்களை உருவாக்கத் தொடங்கினேன். நண்பர்களின் வீடுகளுக்குச் செல்வது, பகுதி நேர வேலையில் சேர்வது, அருகிலிருக்கும் ஆசிரமத்தில் தன்னார்வலனாகச் சேர்ந்துகொள்வது எனப் பலவழிகளையும் ஏற்படுத்திக்கொண்டேன். அம்மாவிற்கு என் முகத்தை ஒரு முறையேனும் பார்த்துவிடவேண்டும் ஏக்கம் இருப்பது போல் எனக்கும் அவள் முகத்தை ஒரு முறையேனும் பார்த்துவிடவேண்டும் என்று ஏக்கம் இருந்தாலும் “படிப்பு, தேர்வு” என்ற வார்த்தைகள் வைத்து அவளையும் ஏமாற்றிவிட்டு என்னையும் ஏமாற்றிக்கொள்வேன். அவளுக்கோ இதற்குப் பின்னால் இருக்கும் காரணங்களை நன்றாகவே புரிந்துகொள்வாள் என்பதும் எனக்குத் தெரியும்.
நண்பர்களின் ஊருக்கு வருவதற்கு அவர்களிடம் நான் வைக்கும் கோரிக்கை என்பது அங்குக் கிணறுகள் இருக்கக்கூடாது. கிணறு இல்லாத கிராமம் இல்லை என்பதால் என்னுடைய விடுமுறைகள் பெரும்பாலும் நகரங்களில் இருக்கும் நண்பர்களின் வீடுகளில் கழிந்துவிடும். நகரங்கள் பெரும்பாலும் பூச்சிகளுக்கும், பறவைகளுக்கு இடமளிப்பதில்லை என்பதால் சிறிது சுதந்திரமாகவே நடமாடத் தொடங்கினேன். ஆசிரமம் செல்லும்போது மட்டும் என்னையும் அறியாமல் சிறிது நடுக்கம் உண்டாகத் தொடங்க, அங்கிருக்கும் மனிதர்களின் நெருக்கும் என்னைச் சிறிது ஆசுவாசப்படுத்தியது. மனம், எண்ணம், உணர்வு என அவர்கள் என்னால் புரிந்துகொள்ள முடியாத மொழியில் பேசினாலும் மனதுக்குள் அமைதி குடிகொள்ளத் தொடங்கியது. அவ்வப்போது ராஜேந்திரன் எட்டிப்பார்க்க தொடங்கினாலும் அவனின் வருகை என்பது குறைந்துவிட்டது. கால ஒட்டத்தில் கல்லூரியும் தன்னுடைய பாதுகாப்பு பெட்டியைத் திறந்துவிடுவதற்கான நேரத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. இறுதி தேர்வு எழுதுவது என்பதை விட, தேர்வு முடிந்தால் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்ற பயம் என்னை சூழத் தொடங்க, அவற்றிலிருந்து மீள்வதற்கான எல்லா வழிகளையும் யோசித்து முட்டிமோதிக்கொண்டிருந்தேன். வெளியே செல்வதற்கான எந்த வழிகளும் இல்லாமல் நிர்க்கதியாய் நின்றவன் எதிரே வந்து இறங்கினாள் வித்யா. ஆசிரமத்தில் தன்னார்வலராக வந்து சேர்ந்தவள் என்னையும் சேர்த்து கவனித்துக்கொள்ளத் தொடங்கினாள். என்னிடம் இருந்த ஊரின் சுபாவம் ஒவ்வொன்றையும் ரசிக்கத் தொடங்கியவள், அவற்றை கடந்து செல்வதற்கான வழிகளையும் காட்டத் தொடங்கினாள். இருவரின் நேரத்தையும் எங்களுக்கான நேரமாக மாற்றிக்கொள்ளத் தொடங்கினோம். என் எண்ணத்தின் ஒவ்வொரு நூலையும் பட்டத்தைக் கவனத்துடன் பிடிக்கும் கைகள் போல் கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள். நானும் அவள் எண்ணத்தின் ஓட்டத்தினை கைப்பற்றிக்கொள்ளும் வித்தையைக் கைக்கொள்ளத் தொடங்கினேன். ராஜேந்திரன் ஏறக்குறையே மறைந்தேவிட்டான் என்று தோன்றியது.
இளங்கலை முடித்து வேலைக்குச் சென்றுவிடலாம் என்றவனை, இதற்கு மேல் ஒரு உலகம் இருக்கிறதென்று அழைத்துக்கொண்டு சென்றாள். அதற்குள் என்னைத் தகவமைத்துக்கொள்ள அவள் எனக்கான எல்லா வழிகளையும் காட்டிக்கொடுத்தாள். மால், தியேட்டர், கடற்கரை, பயணம் என போகாத பொழுதை போக்கிக்கொள்வதற்கான எல்லா திறப்புகளையும் அறிமுகப்படுத்தினாள். அவளின் அரவணைப்புக்குள் முதுநிலை வகுப்பைப் படிக்கத் தொடங்கினேன். இரண்டு வருடங்களில் ஊருக்குச் செல்வதற்கான எந்த நிலைமையும் ஏற்படாதா அளவுக்குப் பார்த்துக்கொண்டாள். எல்லாவற்றிலும் கவனமாகவும், பொறுப்புடனும் இருக்கும் நான் ஊருக்கு மட்டும் ஏன் செல்வதில்லை என்பது வித்யாவுக்கும் புரியாத புதிராகவே இருந்தது. அவளிடம் அதற்கான காரணத்தைக் கேட்கவேண்டாம் என்ற நிபந்தனை விதிக்க, அதைப் பற்றி அவள் பேசுவதை நிறுத்திக்கொண்டாள். அம்மாவை நான் சென்றுதானே பார்க்கக்கூடாது, அம்மா என்னை வந்து பார்க்கலாமே என்று கூறியவள் அவளின் தொடர்புகளிலிருந்த நண்பர்கள் மூலமாக அம்மாவை ரயிலில் அழைத்துவந்தாள். அம்மாவை நகரத்தின் எல்லா இடங்களுக்கு அழைத்து சென்றவள், எனக்கான பொறுப்புகளையும் அவளே எடுத்துக்கொண்டாள். ரயில் நிலையத்திலிருந்து அவளை அழைத்துவருவதும், அதே நிலையத்திற்குச் சென்று அவளை ஏற்றிவிடுவது மட்டுமே எனக்காக அவள் இட்ட பணிகள். இரண்டு வருடங்களில் நான்கு முறை அவள் வந்து சென்றதும், ராஜேந்திரன் பற்றி இருவரும் ஒரு வார்த்தையும் பேசிக்கொண்டதில்லை.
படிப்பு முடிந்ததும் எங்கெல்லாம் அதற்கான வேலைவாய்ப்பு இருக்கிறது அதற்கு எப்படி விண்ணப்பிக்கவேண்டும் என ஒவ்வொன்றையும் பார்த்துக்கொண்டாள். தனியார் நிறுவனம் ஒன்றில் மதிப்புமிக்க பணி ஒன்று கிடைக்க, அம்மாவிற்கு போன் செய்து சொன்னேன். சொல்லிய செய்தியின் மகிழ்ச்சி முடிவதற்குள் ஊரில் இருக்கும் கிணற்றிலிருந்து என்னுடைய பெயரை சொல்லி யாரோ அழைப்பதாகவும், அதை ஊரில் இருக்கும் அனைவரும் கேட்டிருப்பதாகவும் கூறியவள் என்னைப் பார்த்து இருந்துகொள்ளுமாறு சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாள். குழம்பி போனவனாக போனை வைத்துவிட்டு உட்கார்ந்துவிட்டேன். அழிக்கப்பட்ட முள் காட்டிலிருந்து துளிர் விடும் முள்செடி போல் ராஜேந்திரன் மேலே ஏறத் தொடங்கினான். இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தின் எல்லைதான் என்ன? எப்படி இந்த ஆட்டத்தின் முடிவை எழுதப்போகிறேன். இந்த வாழ்க்கையை எப்படி வித்யாவுடன் மகிழ்ச்சியாகக் கழிக்கப்போகிறேன் எனப் பல கேள்விகளைத் தலைக்குள் கேட்டுக்கொண்டிருந்தவன் அருகே வித்யா வந்து அமர, அவள் கையையைப் பிடித்துக்கொண்டேன். குழப்பம் குறைவதுபோல் தோன்றியது. என் உணர்வுகளைப் புரிந்தவளாக, கேள்வி எதுவும் கேட்காமல் திருமணம் செய்துகொள்ளலாம் என்று மட்டும் சொன்னாள். அவள் ஏன் என்னிடம் காரணத்தைக் கேட்கமாட்டாள் என்கிற கோபம் அப்போது தோன்றினாலும் இதற்கு மேல் என் வாழ்வின் நிச்சயம் ஒரு நல்ல முடிவு இருக்கமுடியாது என்பவனாக நானும் சம்மதம் தெரிவித்தேன். அவள் வீட்டில் நிச்சயம் எதிர்ப்பு இருக்கும் என்பதை உணர்ந்தவர்களாக இருவரும் அங்கிருக்கும் ஒரு முருகன் கோவிலில் திருமணம் செய்துகொண்டோம். அம்மாவிடம் போனில் தகவலைத் தெரிவிக்க, ஊரிலிருக்கும் எல்லா கெட்டவார்த்தைகளையும் கொண்டு திட்டத்தொடங்கினாள். எனக்கோ வித்யாவுக்கோ அதன் பின்னால் இருக்கும் மகிழ்ச்சி மட்டுமே தெரிய இருவரும் அந்த வார்த்தைகளை நினைத்து இரவெல்லாம் சிரித்துக்கொண்டிருந்தோம்.
குடும்பம் என்ற கட்டமைப்பிற்குள் நுழைந்தவுடன் என்னை வளர்ப்பதற்காக அம்மா பட்ட இன்னல்கள் புரியத் துவங்கியது. எங்களுடன் அழைத்து வருவதற்கான எவ்வளவோ காரணங்களை விளக்கியும், வரமாட்டேன் என்பதில் அவள் பிடிவாதமாக இருந்தாள். அவள் என்னை நோக்கி வருவதற்கான எந்த காரணங்களையும் நான் அவளுக்குக் கொடுக்கவில்லை என்பதும் புரிந்தது. ஆறு வருடங்கள் ஒருவன் காணாமல் போனான் என்று சொன்னால் அவளைச் சுற்றி எவ்வளவு கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும், அவற்றை அவள் எப்படி எதிர்கொண்டிருப்பாள், அந்த கேள்விகளின் பின்னால் எத்தனை நாள் தன் தூக்கத்தைத் தொலைத்திருப்பாள். அவளிடம் இவ்வளவு நாள் பேசியும் ஏன் ஒரு நாள் கூட அவளிடம் மன்னிப்புக் கேட்கவில்லை என்று யோசித்தவனாக அவளுக்கு போன் செய்தேன். அவளோ அப்படி ஒன்று இருப்பதே நினைக்காதவளாக “எடுபட்ட பயலே… போய் தூங்கு” என்று சிரித்துக்கொண்டே போனை வைத்துவிட்டாள். அவளை எங்களுடன் தங்க வைப்பதற்கான எந்தக்காரணங்களும் இல்லாமல் அலைந்துகொண்டிருந்தவனுக்கு வித்யா கர்ப்பமாக இருக்கும் காரணத்தைக் கூற, எல்லாவற்றையும் தூக்கி எறிந்தவளாக ஓடோடி வந்தாள். வித்யாவின் நகர்வுகளை தன்னுடைய அறிவின் பலத்தாலும், அனுபவத்தின் பலத்தாலும் பார்த்துக்கொண்டாள். வித்யாவின் மருத்துவமனை சோதனை எல்லாம் வெறும் சம்பிரதாயமாக மட்டுமே இருந்தது. பிரசவத்தின் எந்த சிக்கல்களும் இல்லாதவாறு பார்த்துக்கொண்டவள், என் மகனை கைகளில் ஏந்தியவாறு என் அருகே வந்து நின்றாள். எங்களின் எல்லா தயக்கங்களும் அவன் ஒரு வடிகாலாக அமைந்துவிட்டான் என்பது புரியத் துவங்கியது. அவளின் உலகமாக அவனை மாற்றிக்கொண்டவள், வித்யாவுக்குத் தாய்ப்பால் கொடுப்பதைத் தவிர வேறு வேலை என்பதே இல்லாதவளாகப் பார்த்துக்கொண்டாள். அவனின் உடல் சுத்தத்திலிருந்து, உணவு வரைக்கும் ஒவ்வொன்றையும் நேரம் தவறாமல் கவனித்துக்கொண்டாள். அவனை வைத்து அவளை எப்படியாவது எங்களுடன் தங்க வைத்துவிடலாம் என்று நானும் வித்யாவும் பேசிக்கொண்டிருக்க, அவன் நடக்கத் தொடங்கிய இரண்டாவது நாள் தான் ஊருக்குத் திரும்ப செல்வதாக கூறினாள். அவளுடன் வித்யாவும் நானும் எவ்வளவோ பேசிப்பார்த்தும், அவளுக்கு தன் ஊர் மட்டுமே உலகமாக இருந்தது என்பதைப் புரிந்துகொண்டோம். அவளின் உணர்வுகளுக்கு மரியாதை கொடுத்தவர்களாக அவளை ரயில் நிலையத்தில் அனுப்பிவிட்டு வீடு வந்து சேர்ந்தோம். வீட்டின் மாபெரும் சூனியம் ஒன்று சூழத் தொடங்கியது. அன்று இரவு முழுவதும் என் மகன் அழுதுகொண்டே இருக்க, அதனை எப்படி நிறுத்துவது எனத் தெரியாமல் இருவரும் குழம்பித்தான் போனோம். சாப்பாடு கொடுப்பது, தூங்க வைப்பது என எங்கள் அன்றாட செயல்கள் எல்லாமும் பாதிக்கப்படத் தொடங்க, அவளை வந்துவிடுமாறு கேட்டோம். பதில் ஏதும் கூறாதவளாக போனை வைத்துவிட்டவள். மறுநாள் காலை வித்யாவின் பெற்றோர்கள் வந்து சேர்ந்தார்கள். அம்மா அவர்களிடம் பேசியாதாகக் கூறியவர்கள், எங்கள் மகனை தங்களுடைய அரவணைப்புக்குள் எடுத்துக்கொண்டார்கள். நிம்மதி பெருமூச்சு விடத் தொடங்கினோம். வித்யாவின் உடல்நிலையும் தேறிவர, அவள் விண்ணப்பித்திருந்த அலுவலகத்திலிருந்து வேலைக்கும் அழைத்திருந்தார்கள். பொருளாதாரம் என்னும் வட்டத்திற்குள் ஏறத்தொடங்கினோம். அம்மாவுக்குத் தேவையான எல்லாவற்றையும் இணையதள வாயிலாகவோ, அஞ்சல் சேவை மூலமாகவோ செய்துகொடுத்தோம். அவளை எவ்வளவோ அழைத்துப் பார்த்தும் அவள் எங்களை நோக்கி வரமாட்டேன் என்பதில் பிடிவாதமாக இருக்கத் தொடங்கினாள். ஏன் என்ற காரணம் தெரியாமல் நானும் வித்யாவும் குழம்பித்தான் போனோம். அவளுக்குத் தேவை என்று எதுவும் இல்லை என்பதைப் புரிந்தவளாக அவளின் ஆசையான வீடு ஒன்றையும் கட்டிக்கொடுத்தோம். கிரகப் பிரவேசத்திற்கான ஏற்பாடுகளில் இருந்து, பத்திரிக்கை அடிப்பது வரை ஒவ்வொன்றையும் கவனத்துடன் வித்யா பார்த்துக்கொண்டாள். எல்லாம் முடிந்து கிரகப் பிரவேசத்திற்கு முதல்நாள் வித்யாவிடம் நாம் ஊருக்குச் செல்லவில்லை என்று சொல்ல, காரணம் புரியாதவளாக தங்களை மட்டுமாவது அனுப்புமாறு கூறினாள். ராஜேந்திரன் என்ற ஒற்றை வார்த்தையைத்தவிரக் குழந்தையின் உடல்நிலை, பள்ளியில் சேர்ப்பது அது இது என்று வாயில் தோன்றிய எவ்வளவோ காரணங்களைச் சொல்ல சொல்ல, தாங்கிக்கொள்ளமுடியாதவளாக என்னுடன் சண்டையிடத் தொடங்கினாள். முதன்முறையாக அவளின் முகத்தில் கோப ரேகைகள் படரத் தொடங்கியது. எல்லாப்பொய்களின் நுண்மைகளையும் கண்டவள் “திருந்தாத கேசு” என்று திட்டிவிட்டுச் சென்றுவிட்டாள்.
ராஜேந்திரனின் இருப்பை அவளிடம் எப்படி விளக்குவது? என் மகனின் ஒவ்வொரு இரவு அழுகையிலும், அவனின் குரலும் சேர்ந்து கேட்பதை அவளுக்கு எப்படி விளக்குவேன். அவனின் ஒவ்வொரு அசைவுகளையும் ரசித்துக்கொண்டிருப்பவன் எதிரே ராஜேந்திரனின் நிழல் பின்னால் அலைவதுபோல் தோன்றுவதை எப்படி விவரிப்பேன். என் மகனின் ஒவ்வொரு நடையிலும் ராஜேந்திரனின் துடுக்குத்தனத்தையும், எதையும் கண்டுகொள்ளாத ஆழ்ந்த அமைதியில் இருப்பதையும் எப்படி எடுத்துச்சொல்வேன். என் அம்மா அன்று சென்றதற்கான காரணமும் அதுதான் என்று நான் அவளுக்குப் புரிய வைப்பேன். என்னுடன் ஆடிய ஆட்டத்தை என் மகனுடன் அவன் விளையாடத் தொடங்கிவிட்டால்? அந்த விளையாட்டை என்னால் எப்படி நிறுத்தமுடியும். அதை நிறுத்துவதற்கான எந்த வழிகளும் என்னிடம் இல்லை. ஊருக்குச் செல்வது தொடர்பாக ஏதேனும் ஒரு காரணம் வைத்து, வித்யா சண்டையிடத் தொடங்க, இது அவனின் விளையாட்டுதானோ என்று கூட எண்ணத்தோன்றியது.
நான் அவளுக்கு எவ்வளவு விளக்கினாலும் அதைப் பூதம் மறைந்த கதையாகத்தானே எடுத்துக்கொள்வாள். ஊரில் இருக்கும் பேய்க்கதைகளில் ஒன்றாகத்தானே அவள் நம்பத் தொடங்குவாள். என் விளக்கங்களுக்கான எந்த சாட்சிகளும் இல்லாதவனாய் வெறும் வாய்க்கதையில் இருக்கும் அந்த நிகழ்வின் நம்பகத்தன்மையை அவள் எப்படிப் புரிந்துகொள்வான். கதையில் நடக்கும் மாயத்தினை ரசிப்பவள், அந்த மாயத்தின் பின்னால் இருக்கும் நிழலை எப்படி உணர்ந்துகொள்வாள். அதை அவளிடம் சொல்லிவிடலாம் என்று பலமுறை யோசித்துக்கொண்டிருந்தாலும், யார் கண்ணுக்கும் தெரியாமல் நான் ஆடிக்கொண்டிருக்கும் ஆட்டத்தில் அவளையும் சேர்த்துவிட்ட குற்ற உணர்ச்சியுடன் அலையக் கூடாது என்று முடிவு செய்தவனாக அவளிடம் எதுவும் சொல்லாமல், பதிலுக்குக் கத்த தொடங்க, வீட்டின் எல்லா வெளிச்சங்களும் இருளுக்குள் மூழ்கத் தொடங்கியது. இதுவரை பார்க்காத ஒருவனாய் என்னை அவள் பார்க்கத் தொடங்கினாள். ஊரிலிருந்து வந்த ஒருவனாக நான் மாறிக்கொண்டிருந்தேன் என்பதையும் உணரத் தொடங்கினேன். இந்த விளையாட்டின் முடிவுதான் என்ன? இது எங்கு வரை என்னை அழைத்துக்கொண்டு செல்ல இருக்கிறது? எங்கிருந்து நான் இந்த விளையாட்டைத் திசை மாற்ற முடியும் என எந்த முடிவுகளும் எடுக்கமுடியாதவனாய் அலைந்துகொண்டிருந்தேன். முடிவுகள் எதையும் நாம் எடுக்கமுடியாது என்பதும், எடுக்கப்பட்ட முடிவின் பின்னால் செல்வது மட்டுமே நமக்கு இருக்கும் கடமை என்று உணரும் விதமாக அன்று காலை தொலைப்பேசியில் அந்த செய்தி ஒலித்தது. அம்மா இறந்துவிட்டாள். அவளின் இறுதிச்சடங்கிற்கு வரவேண்டும்.
இப்பொழுதாவது நான் வருவேனா இல்லையா என்று வித்யா சண்டைபோட தொடங்க, அப்பா என்பவரைக் கண்ணில் பார்க்காதவனாக வளர்ந்தவனுக்கு எல்லாமுமாக இருந்த அவளை வழியனுப்புவது இந்த ஜென்மத்தில் என் பிறவிக்கடன் என்பதும், இனிமேல் நடக்க இருக்கும் எல்லா நிகழ்வுகளுக்கு நானே பொறுப்பு என்று முடிவுசெய்தவனாக இருவரையும் காரில் அழைத்துக்கொண்டு ஊருக்குக் கிளம்பினேன்.
காரைவிட்டு இறங்கியவன் எதிரே மாபெரும் வீடு ஒன்று நின்றுகொண்டிருக்க, வீட்டின் உள்ளே குளிர்பதனப் பெட்டியில் அம்மாவை வைத்திருந்தார்கள். வீட்டைச் சுற்றி பந்தலும், பந்தலுக்கு அடியில் சேர்களும், சேர்களில் ஆட்களும் என ஒரு திருவிழாவிற்கான கூட்டம் போல் தோன்றியது. அங்கிருந்த மொத்த கண்களும் என்னைக் கேள்வி கேட்பது போல் தோன்ற, வித்யாவையும் குழந்தையையும் முன்னால் அனுப்பிவிட்டு பின்னால் நடக்கத் தொடங்கினேன். காலங்கள் கடந்திருந்ததே தவிர, ஊர்க்காரர்களின் பார்வைகளில் எந்த மாற்றங்களும் நிகழ்ந்துவிடவில்லை. என் மனைவியையும், பையனையும் விசாரித்தவர்களின் கண்களில் எல்லாம் கிணற்று மேட்டில் பொய்சொல்லிக்கொன்று நின்றிருந்த சிறுவனாகத்தான் நான் தெரிந்துகொண்டிருந்தேன். என்னுடன் ஒருவர் கூட பேசவில்லை. இறுதி வேலைக்கான எல்லா கட்டளைகளையும், சடங்குகளையும் மாமா இழுத்துப் போட்டுப் பார்த்துக்கொண்டிருந்தார். அவரிடம் சென்று செலவுக்கான மொத்த தொகையையும் கையில் கொடுத்துவிட்டு அம்மாவின் அருகில் சென்றுவிட்டேன். ஒப்பாரி பாடல்களும், மேளதாளங்களும் என மாமா அதை ஒரு கொண்டாட்ட மனநிலையாக மாற்றத் தொடங்கினார். யார் யாரோ அம்மாவைத் தேடிவருவதும், அவள் அருகே உட்கார்ந்து அழுவதும் எனச் சென்றுகொண்டே இருந்தார்கள். என்ன செய்யவேண்டும், யாரிடம் பேசவேண்டும் என்று எந்த வழிகளும் தெரியாமல் வருபவர்களின் கையைப் பிடித்துக்கொள்வதும், அவர்களை பார்த்து கையெடுத்து கும்பிடுவதும் எனத் தொழிற்சாலை ஒன்றிலிருந்து கொண்டுவரப்பட்ட எந்திர மனிதனாகத்தான் என்னைப் பார்த்தேன். வித்யாவோ அம்மாவின் தலைமாட்டினில் உட்கார்ந்தவள், அவளைப் பார்த்துப் பார்த்து அழுதுகொண்டிருந்தாள். தான் எங்கிருக்கிறோம், ஏன் எல்லோரும் அழுகிறார்கள், பாட்டி ஏன் பெட்டியில் தூங்கிக்கொண்டிருக்கிறாள் என ஏதுவும் புரியாதவனாக என் மகன் அங்கு நடக்கும் எல்லாவற்றிற்கும் பார்வையாளனாக நின்றுகொண்டிருந்தான். சங்கு ஊதும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்க்க, அருகில் வந்த மாமா “கிளம்புவதற்கான நேரம் வந்துவிட்டது” என்றார். அம்மாவின் ஐஸ் பெட்டி கதவைத் திறந்தவர்கள், அவளின் மேல் குடம் குடமாகத் தண்ணீரை ஊற்றிவிட்டு, வந்திருந்த கோடிப் புடவை ஒன்றில் அவளைச் சுற்றிக் கட்டினார்கள். அதன் பிறகான சடங்குகள் எல்லா முடிக்கப்பட்டு, அவளைத் தூக்கி அங்கு நின்றுகொண்டிருந்த ரத வண்டியில் ஏற்றினார்கள். என் கையில் ஒரு பானைக் கொடுக்கப்பட்டது. மறுகையில் என் பையனைப் பிடித்துக்கொண்டேன். அம்மாவின் இறுதி ஊர்வலம் வெடி, மேளதாளங்களுடன் நகரத் தொடங்கியது. அதற்கு எதிர்ப்பாடலாக ஊர்வலப்பாட்டும், பெண்களின் ஒப்பாரிப் சத்தமும் கேட்கத் தொடங்கியது. இரண்டும் மாறி மாறி என்னை அலைக்கழிக்கத் தொடங்க, என் தோளுக்குப் பின்னால் கண்கள் ஒன்று பின்தொடர்வது போல் தோன்றத் திரும்பிப் பார்த்தேன். அம்மாவின் பார்வைதானோ என்று சில நிமிடங்கள் தோன்ற என் பையனின் கையை இறுக்கினேன். ஊர்வலத்தின் ஒவ்வொரு நகர்வும், கடலுக்கு அடியில் உரசிக்கொள்ளும் டெக்டோனிக் தகடுகள் போல் அதிரத் தொடங்கியது. பூகம்பம் வந்துவிடுவதற்கான எல்லா அறிகுறிகளும் தோன்றத் தொடங்க, திடீரென எங்கிருந்தோ ஒரு மயான அமைதி சூழத் தொடங்கியது. குழம்பிப் போனவனாகச் சுற்றிமுற்றிப் பார்க்க, அருகில் வந்த மாமா ”இது ஊர் எல்லை, இதற்கு மேல் பெண்களுக்கு அனுமதி இல்லை” என்றவாறு வித்யாவின் தலையில் மண் பானையை ஏற்றி அம்மாவின் ரதத்தைச் சுற்றிவரச் செய்தார்கள். ஒவ்வொரு வட்டத்துக்கும் அந்த பானையில் கத்தியால் கொத்திவிட, மூன்றாவது சுற்றை முடித்தவளாகக் குடத்தைத் தூக்கி தரையில் எறிந்தாள். ஒட்டுமொத்த பெண்கள் கூட்டமும் அவளைச் சூழ்ந்து கதறத் தொடங்கினார்கள். ரதம் நகரத் தொடங்க, மகனின் கையைப் பிடித்துக்கொண்டவனாக அந்த காட்டுப்பாதையில் நடக்கத் தொடங்கினேன். காட்டுப் பாதையில் எங்கிருந்தோ அவன் கொலை செய்த பூச்சிகளும், விலங்குகளும் என்னைப் பார்த்துக்கொண்டிருப்பது போலவும், அவற்றின் பின்னால் இருந்து எந்த நொடியிலும் அவன் வெளிப்பட்டுவிடலாம் என்ற பயம் உள்ளுக்குள் தோன்றத் தொடங்க, மகனின் கையை இறுக்கிப் பிடித்துக்கொண்டேன்.
ரதம் சுடுகாட்டை நெருங்குவதற்கான அறிகுறியா ஆலமரம் தெரியத் தொடங்க, அதன் விழுதுகள் எல்லாம் நரம்புகளில் தொங்கவிடப்பட்ட விலங்குகளாகத் தெரிய, கண்களை வேறுபக்கம் திருப்பிக்கொண்டேன். ரதமும் சுடுகாட்டை நெருங்க, அம்மாவைத் தூக்கி அடுக்கிவைக்கப்பட்டிருந்த கட்டையின் நடுவில் வைத்தார்கள். என்னை மூலையில் உட்காரவைத்து மொட்டையடித்து, கையில் அரிசியைக் கொடுத்து அவள் வாயில் போடுமாறு கூறினார்கள். தோளில் மண்பானையை ஏற்றி, மூன்றாவது சுற்றில் அதையும் உடைக்கச் சொல்லி, நெருப்புக்குச்சியை என் கையில் கொடுத்தவர்கள், கட்டைக்கு நடுவில் இருக்கும் கற்பூரத்தைப் பற்ற வைக்கச் சொன்னார்கள். சிறு நெருப்பு காற்றின் விசைக்கு ஏற்ப மெல்ல மெல்ல அனலாக உருவாகத் தொடங்கியது. அம்மா நெருப்பில் எரியத் தொடங்கினாள். அவளின் எல்லா கவலைகளையும் நெருப்புக்குத் தாரைவார்த்தவளாக உள்ளே படுத்திருக்க, அவளின் கவலைகள் எல்லாம் என்மேல் ஏறுவதுபோல் உஷ்ணத்தை உணரத் தொடங்கினேன். என மகனை இறுகி அணைத்துக்கொண்டேன். திரும்பிப் பார்க்காமல் செல்லவேண்டும் என்றோ யாரோ கத்திக்கொண்டிருக்க, ஒரு முறை அவளைப் பார்த்துச் சென்றுவிடவேண்டும் என்று முடிவெடுத்தவனாகத் திரும்பிப் பார்த்தேன்.
இந்த ஊரின் எல்லா நினைவுகளும் அவள் சாம்பலுடன் முடிந்துவிடும் என்று தோன்றியது. அவளின் சாம்பல் காற்றிலோ, நீரிலோ கரைந்துவிடுவதுபோல் இந்த ஊரின் எல்லா நினைவுகளையும் அதனுடன் கரைத்துவிடவேண்டும் என்று முடிவுசெய்தவனாக அங்கிருந்து வேக வேகமாக நகரத் தொடங்கினேன். எங்கிருந்தோ யாரோ பார்த்துக்கொண்டிருப்பது போல் தோன்ற, நிமிர்ந்து பார்த்தவன் எதிரே தூரத்தில் மாபெரும் மலை என்னைப் பார்த்துக்கொண்டிருந்தது. அவனும் அதில் நின்று என்னைப் பார்த்துக்கொண்டிருப்பானோ என்று தோன்ற, மகனின் கையை பிடித்து நடையின் வேகத்தைக் கூட்டினேன். வேகம் வேகம் கூட என் வேகத்திற்கு இணையாக இன்னொரு பாதத்தின் சத்தமும் கேட்கத் தொடங்கியது. திரும்பிப் பார்க்கக்கூடாது என்று தீர்மானித்தவனாய் நடக்கத் தொடங்கியவன் அருகே அந்த காலடியின் சத்தம் அதிகரித்துக்கொண்டே வர, ஆடுகள் ஒன்றையொன்று முட்டிக்கொள்ளும் அதிர்வு போல் தாங்கிக்கொள்ளமுடியாதவனாக, வருவது வரட்டும் எதிர்கொள்ளலாம் என்று முடிவுசெய்தவனாகத் திரும்பிப் பார்த்தேன். என் முன்னால் நிழல் உருவம் ஒன்று நின்றுகொண்டிருந்தது. முகம் முழுவதும் தாடியால் சூழப்பட்டு, அந்த தாடிக்குள் கனன்று கொண்டிருக்கும் இரு கண்களை மட்டும் பார்த்தேன். அந்தக் கண்கள்தான் நான் ஊரிலிருந்து இறங்கியதிலிருந்து அம்மாவை நெருப்புக்குக் கொடுத்துவிட்டு வந்தது வரைக்கும் என்னை பின் தொடர்ந்துகொண்டிருந்தது என்பதும் புரிந்தது. கற்பனையில் அந்த தாடியினை மழிக்கத் தொடங்க சிறிது சிறிதாக ராஜேந்திரனின் உருவத்தை அடைந்தது. அவன்தான் ஒருவேளை உயிருடன் வந்துவிட்டானோ என்று பதறிப்போய் நிற்க, அவன் இல்லை அது ராஜேந்திரன் உருவம் கொண்ட அவன் அப்பா என்பதை அவரின் நரைத்த கேசம் காட்டிக்கொடுத்தது. அவரையேப் பார்த்துக்கொண்டு நின்றேன். அவரும் என்னை பார்த்துக்கொண்டே நின்றார். என்ன நடக்கிறது என்று புரியாதவனாக இருவருக்கும் இடையில் என் பையன் நின்றுகொண்டிருந்தான்.
விளையாட்டு முடிவு நெருங்கிக்கொண்டிருக்கிறதா இல்லை இப்போதுதான் தொடங்கப் போகிறதா என்று குழம்பியவனாக அவரைப் பார்க்க, இரு கைகளையும் என்னை நோக்கி ஏந்தியவராக “என் மவன்ன எங்கப்பா?” என்று கேட்டார். இத்தனை நாள் இருந்த எல்லா இருள்களும் விலகுவது போல், உள்ளுக்குள் இருந்த குழப்பங்கள் எல்லாம் கண்ணீராக வடியத் தொடங்கியது. விடை இல்லா கேள்விகளுக்கு நான் எப்படி பதில் சொல்வது. விடையைக் கண்டுபிடிப்பதற்கு அவன் அல்லவா வேண்டும். அவனை எங்கே தேடுவது. அவன் எங்கு இருக்கிறானோ அங்கு தானே தேடவேண்டும். ஆம் அவன் அங்குதான் இருக்கிறான் என்று தூரத்திலிருக்கும் கிணற்றை நோக்கிக் கைநீட்டினேன். அவரோ என்னிடமிருந்து விடைபெற்றவராகக் கிணற்றை நோக்கி வேகமாகச் சென்றார். கண்களைத் துடைத்துக்கொண்டு பையனைப் பார்த்தேன். அவன் அங்கு இல்லை. பதறியவனாகச் சுற்றி எல்லா இடங்களிலும் தேட, தூரத்தில் ராஜேந்திரன் அப்பா ஓடிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். அவர் ஓடும் திசைக்கு நேர் திசையில் கிணற்றின் விளிம்பில் நின்று அவன் எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தான். விளையாட்டின் முடிவை நெருங்கிவிட்டேன் என்பது புரியத் தொடங்க அவனை நோக்கி ஓடத் தொடங்கினேன். அவனோ தனக்கான விளையாட்டை முடித்துவிட்டு வருபவன் போல் என்னை நோக்கி நடந்துவரத் தொடங்கினான். ஓடிச்சென்று அவனைத் தூக்கி கைகளில் ஏந்தியவன் அவன் உருவம் நிஜம்தானா என்று பலமுறை தடவிப்பார்த்துக்கொண்டேன். அவனோ எதுவும் தெரியாதவன் போல் “அப்பா யாருப்பா அந்த மாமா?” என்று கேட்டான்.
தூரத்தில் தெரியும் ராஜேந்திரனின் அப்பாவைப் பார்த்துக்கொண்டே, “அது மாமா இல்லப்பா தாத்தா”. என்றேன்.
“அவரு இல்லப்பா… நீயும் அந்த தாத்தாவும் பேசிக்கிட்டு இருக்கும்போது. ஒரு மாமா வந்து என்ன கிணத்துக்கு கூட்டிப்போச்சுல்ல, அந்த மாமா”. எங்கிருந்தோ நரம்பு அறுபடும் ஓசை கேட்கத்தொடங்கியது. வார்த்தைகளின் எல்லா சரடுகளும் மாட்டிக்கொள்வது போல் உணரத்துவங்க, மெதுவாக ”அந்த மாமா எங்கப்பா?” என்று கேட்டேன்.
“மாமா என்ன அங்க கூட்டிட்டுப் போச்சா. அங்க போனதும், இங்கேயே இரு. மாமா போய்ட்டு வந்துர்றேன்னு சொல்லிட்டு உள்ள குதிச்சுட்டாரு. வெளிய அவரு வருவாருனு பாத்துக்கிட்டே இருந்தேன்… அதுக்குள்ளையும் நீ வந்துட்டப்பா” என்று சொல்லிமுடிக்க, “ஐயோ” என்று அலறும் சத்தம் கேட்க, தூரத்தில் ராஜேந்திரனின் அப்பா கிணற்றில் விளிம்பில் மயங்கி விழுந்தார். அதிர்ந்தவனாக என் பையனைத் தூக்கிக்கொண்டு அவர் அருகே ஓடினேன். அவரை எப்படி எழுப்புவது என்று தெரியாதவனாக பையனை இறக்கிவிட்டு தொட்டி அருகே இருந்த தண்ணீரை இரு கைகளிலும் ஏந்தி அவரின் முகத்தில் தெளித்தேன். அவரின் முகத்தில் சிறு அசைவு ஏற்பட, அருகிலிருந்தவன் “அப்பா அப்பா அங்க பாரு” என்றான். நான் திரும்பிப் பார்த்தேன். “நான் சொன்னேன் பாரு அந்த மாமா கிணத்துல இருந்து வெளிய வந்துட்டாரு” என்று கைதட்டிக்கொண்டே சொன்னான். அவயங்கள் எல்லாம் ஒடுங்கியவனாக, கால் நரம்புகள் எங்கோ இழுத்துக்கொள்வதுபோல் தோன்றத் தொடங்க, நான் அவனைப் பார்த்துக்கொண்டே இருந்தேன்.
பள்ளி இறுதித்தேர்வு முடிந்து என்னை அழைத்துச் சென்ற அதே ராஜேந்திரனாக அவன் மிதந்துகொண்டிருந்தான். அவன் கைகளைச் சுற்றிப் பூச்சிகளும், உடலைச் சுற்றிப் பாம்புகளும், தலையைச் சுற்றிப் பறவைகளும் சூழ்ந்திருக்க, உதடு மட்டும் என்னைப் பார்த்துச் சிரிப்பது போல் தோன்றியது. சூரியன் மொத்த ஒரு ஒளியையும் அவன் மேல் குவிக்கத் தொடங்க பையனை இறுக அணைத்துக்கொண்டேன். தூரத்தில் எங்கிருந்தோ அழுகுரல்கள் கேட்கத் துவங்கியது.
மதிஅழகன்
திருநெல்வேலி மாவட்டம் தெற்கு அச்சம்பட்டி கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர். சென்னையில் பணிபுரிகிறார். எதிர் வெளியீடு பதிப்பகம் மூலமாக 2023-ம் ஆண்டு "ரோல்ஸ்ராய்ஸும் கண்ணகியும்" என்ற முதல் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.
மனநலம் பாதித்தத்தவரின் எண்ணங்களா?
நம்மை மீறிய சக்தியின் சூட்சும வெளிபாடா?
மொத்தத்தில் நல்ல சிறுகதை
இன்பத்தையும், துன்பத்தையும் இணைத்து இதயத்தின் ரசனையை மொழியுடன் கலந்து.. தீட்டும் ஓவியமாய்…
தென்றலுடன் தேன்மொழி பேசும் தமிழில் உணர்வுகளை உருவகமாக்கி வழங்கியதற்கு நன்றி
உலகத் தரமான சிறுகதை. மெய் சிலிர்த்தது.
நல்ல கதை. நேர்த்தியான மொழி மற்றும் சொல்முறை.