சுழலும் உயிரினம் : ஜனார்த்தனன் இளங்கோ

பச்சை பஞ்சுருட்டி (Green bee-eater)

உலகில் அதிகபட்சமாக ஏறத்தாழ இருபதாயிரம் வகைப் பறவைகள் இருக்கலாம் என்று பெரும்பாலான ஆய்வுகள் தெரிவிக்கிறது. இந்தியாவில் சுமார் ஆயிரத்து ஐநூறு பறவைகளும், குறிப்பாக தமிழ்நாட்டில் அறுநூறு வகைப் பறவைகளும் இருக்கலாம். பறவைகளின் உலகத்தின்மேல் ஆர்வம் ஏற்பட்டு அவற்றை கவனிக்கத் துவங்கும் ஒருவருக்கு சவாலையும் அதே சமயம் சோர்வையும் ஒருங்கே ஏற்படுத்தும் எண்ணிக்கை இது. அப்படியான ஒருவருக்கு இவ்வளவு பறவைகளின் பெயர்களையும் அவை ஒவ்வொன்றைப் பற்றிய தனித்துவமான தகவல்களையும் எதற்காக அறிந்து கொள்ள வேண்டும் என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. ஒருபுறம் பறவைகளின் வகைபாட்டியலும் அவை ஒவ்வொன்றின் தகவல்களஞ்சியமும் பலவகைகளில் அறிவியல், சூழியல் சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு இன்றியமையாததாக இருக்கிறது. எனினும் இவையெல்லாம் பறவைகளை அவதானிக்கவும், ரசிப்பதற்கும் விரும்பும் ஒருவருக்கு எவ்வளவு தூரம் உதவுகிறது என்றும் சிந்திக்கவேண்டியுள்ளது.

பறவைகளின் உலகை விரிவாக அறிவதற்கு செலுத்தவேண்டிய உழைப்பில் இருந்து தப்பிக்கும் மார்க்கமாக இக்கேள்வியை எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஏனென்றால் துவக்கத்தில் பறவைகளைப் பற்றிய அறிவு சேகரத்தில் ஈடுபடத் தொடங்கும் ஒருவர் பலவகையான இடர்களை நடைமுறையில் எதிர்கொள்கிறார். பறவை பார்த்தலில் ஈடுபடத் துவங்குகையில் ஒருவருக்கு அது புத்தம்புதிதாக இருப்பதனாலேயே அந்தச் செயல்பாட்டின் மேல் ஒருவித ஈர்ப்பு உண்டாகிறது. எனினும் தொடர்ச்சியாக ஈடுபடும்போது ஒருகட்டத்தில் அவர் அந்த செயல்பாட்டில் உள்ள மெய்யான சிக்கல்களை எதிர்கொண்டாக வேண்டியிருக்கிறது. அவரை அதுவரையிலும் அழைத்துவந்த அந்த ஆரம்பகால ஈர்ப்பு அப்போது நழுவிச் சென்றுவிடுகிறது.

பறவைகளை கவனிக்கத் துவங்கி அவற்றின் எண்ணற்ற வகைமாதிரிகளைப் பற்றிய குறைந்தபட்ச அறிமுகம் ஒருவருக்கு கிடைத்தவுடன் அவரைச் சுற்றி ஏராளமான வகைப் பறவைகள் இருப்பது ஒரு திடுக்கிடல் போல அவருக்குத் தெரியவருகிறது. பேருந்திலோ, ரயிலிலோ செல்லும் போது அவர் கடந்து செல்லும் மின்கம்பங்களை கொஞ்சம் கவனித்துப் பார்கையில் அதன்மேல் கரிச்சான்(Ashy Drongo), பச்சை பஞ்சுருட்டி(Green bee-eater), வென்முதுகு சில்லை(White-rumped munia), உழவாரன்(Palm swift), பனங்காடை(Indian roller) என ஏராளமான அழகிய புள்ளினங்கள் அமர்ந்திருப்பதைக் காண்கிறார். பெருநகரங்களான சென்னையிலும், பெங்களுருவிலும் உள்ள எந்த அடுக்குமாடி குடியிருப்பிலும் அதிகாலை வேளையில் செவிமடுக்கும்போது அவரால் ஒரு குயிலோசையை நிச்சயம் கேட்கமுடியும். இவ்விதம் அவர் எங்கு சென்றாலும் பறவைகளின் உலகம் அவரை உரசியபடியே உடன் வருகிறது.  அதிலும் அவர் பறவைகளை பார்ப்பதற்கான பிரத்யோக ஈர்ப்பிடத்திற்கு(hotspot) செல்லும்போது, அவ்விடத்தை ஒருமுறை சுற்றி வருவதற்குள் அவருக்கு தெரியாத பத்து பதினைந்து புதிய பறவைகளையாவது பார்த்திருப்பார். இப்படிப் பார்க்கும் ஒவ்வொரு பறவையின் தோற்ற அடையாளங்களையும் தனித்தனியாக அவற்றின் பெயரை தெரிந்துகொள்வது வரை துல்லியமாக நினைவில் வைத்துக் கொள்வதே அவர் சந்திக்கும் மெய்யான முதல் இடராக இருக்கும். அதனால் துவக்கத்தில் இம்மாதிரியான கண்டறிதலுக்கு உதவும் சரியான பயிற்றுனரோ, நண்பர் குழுவோ அத்தகைய பயணங்களில் உடனிருப்பது அவருக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கிறது. தற்போதைய தொழில்நுட்ப வசதியில் ஒரு பறவையின் அங்க அடையாளங்களை, புகைப்படத்தை, அல்லது குரலைக் கொண்டு அடையாளம் காண்பது சுலபமாகி வருகிறது. எனினும் அறிமுகமில்லாத ஒரு பறவையை உடனிருப்பவரோடு விவாதித்துத் தெரிந்துகொள்ளும்போது அங்கு நிகழும் அனுபவப் பகிர்வு அப்பறவையைப் பற்றிய நினைவை நம்மில் கூடுதல் எடையுடன் பதியச் செய்கிறது.

பச்சை கதிர்குருவி (green warbler)

இதற்கு அடுத்தபடியாக ஒரு பொது வகைமைக்கு கீழுள்ள வெவ்வேறு வகைப் பறவைகளை பிரித்தறிவது மற்றுமொரு அசலான சிக்கல். எடுத்துக்காட்டாக கதிர்குருவிகளில்(warbler) ஏறத்தாழ ஒரேமாதிரியான உருவ அடையாளங்கள் கொண்ட பல பறவைகள் உள்ளன.  ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் பரவலாக காணப்படும் பச்சை கதிர்குருவியும்(green warbler), பழுப்பு-பச்சை கதிர்குருவியும்(greenish warbler) இதற்கு மிகச் சிறந்த உதாரணம். இவை இரண்டுமே ஆசிய-ஐரோப்பாவின் வேறு வேறு இடங்களில் இருந்து இந்தியத் துணைக் கண்டத்திற்கு வலசை வரும் பறவைகள். வெளித்தோற்றத்தில் உள்ள நுண்ணிய நிற வேறுபாட்டைத் தவிர்த்து பிற அனைத்தும் இவ்விரண்டு கதிர்குருவிகளுக்கும் ஒன்றுபோலவே இருப்பது. அதிலும் அவற்றின் வளரிளம்(juvenile) பருவத்தில் இந்த நிற வேறுபாடு இன்னும் மழுங்கலானது. நீண்ட காலம் வரை இந்த இரண்டுமே பழுப்பு-பச்சை கதிர்குருவியாகவே கருதப்பட்டு வந்தது. அவற்றைப் பற்றிய வாழிடம், வலசை இனப்பெருக்கம் ஆகிய தகவல்கள் திரட்டப்பட்டு தொடர் விவாதத்திற்கும் ஆராய்ச்சிக்கும் பின்னர் அவ்வினத்தின் கீழ் பரிணாம வளர்ச்சியில் மாற்றமடைந்த இருவேறு பறவைகள் அடங்கியிருப்பது கண்டறியப்பட்டது.

ஆரம்பத்தில் நாம் பார்த்தது இரண்டில் ஒருவகை பச்சை கதிர்குருவி என்று தெரிந்து கொள்வதே போதுமானதாக இருக்கும். எனினும் இந்த பரிணாம பின்புலத்தை அறிந்துகொண்டபின் அதைத் துல்லியமாக எந்த வகை கதிர்குருவி என்று அடையாளம் காண்வேண்டிய விழைவு இயல்பாக உருவாகிவிடுகிறது. அவற்றிற்கு இடையிலான மிக நுணுக்கமான வேறுபாடுகளை அறிந்து கொண்டு அவற்றை கவனிப்பதும் தவிர்க்க முடியாததாகிறது. அதுபோல இதன் மறுஎல்லையில் பறவைகளைப் பற்றி திரட்டப்படும் தகவல்கள் துல்லியமாகும் தோறும் பறவைகளின் வகைபாட்டில் இத்தகைய புதிய பகுப்புகள் தொடர்ந்து உருவாகியபடி இருக்கிறது.

துவக்கத்தில் ஒரு இனமாக அடையாளப் படுத்தப்படும் பறவையானது நாளடைவில் அதன் சொந்த வாழிடத்தில் இருந்து இரு வேறு திசைகளில் இடம் பெயர்ந்தவாறு இருக்கிறது. இந்த வாழ்நிலை மாற்ற பயணத்தில் அவை இரண்டும் தொடர்ச்சியாக தனித்துவமான மாறுதல்களுக்கு உட்படுகிறது. ஒரு புதிய வாழிடத்தில் இவை மீண்டும் சந்திக்கும் போது இந்த சுழற்சி ஒரு சுற்றி முழுமையடைகிறது. இங்கு அவை இரண்டிற்கும் இடையே எந்தவித இனக்கமும் இருப்பதில்லை. அவை ஒன்றை ஒன்று அடையாளம் கண்டுகொள்கிறது, பரஸ்பரம் அழைப்புகளை, பாடல்களை மற்றொன்று அறிந்து கொள்கிறது. இந்த பழைய பரிச்சயம் தொடர்ந்தாலும் ஒன்றின் எதிர்பாலினம் மற்றொன்றை பொருட்படுத்தவோ கவரவோ செய்வதில்லை. அதோடு ஒன்றிற்கு எதிராக மற்றொன்று அதன் வாழிட எல்லைலையும்(territory) வலுவாக தற்காத்துக் கொள்கிறது. விளைவாக இரண்டிற்கும் இடையே எந்தவித புதிய தொடர்பும், இனப்பெருக்கமும் நிகழாமல் அவை இரண்டும் இருவேறு இனங்களாக நீடிக்கத் துவங்குகிறது. இத்தகைய பரிணமப் பண்பு கொண்ட புள்ளினங்கள் சுழல்-வடிவ உயிரினங்கள்(ring species) என்று அழைக்கப்படுகின்றன. அதாவது ஒரு உயிரினம் இரண்டாக பிளவுபட்டு சுழன்று வந்து ஒன்றை ஒன்று மீண்டும் சந்திக்கும் போது இரண்டும் வேறுபட்ட உயிரினமாக மாறிவிடுகிறது.

பறவைகளின் உட்தொகுப்புகளுக்குள் காணக்கிடைக்கும் இந்த பாங்கு பழங்குடி மனிதனின் வாழ்க்கை முறையை வலுவாக நினைவுறுத்துகிறது. வளரிளம் பருவத்தில் தன் குடியை விட்டு வெளியேரும் பழங்குடிகள் நாளடைவில் தனி இனக்குழுவாக மாற்றமடைவதும், அத்தகைய பிற இனக்குழுக்களோடு விலக்கத்தை கடைபிடிப்பதும் இதையொத்திருக்கிறது. இதை நவீன உலகிலுள்ள பல இனக்குழுக்களிலும் பண்புகளோடு இணைத்து யோசிப்பது இன்னும் சுவாரஸ்யமானது. உதாரணமாக அயர்லாந்தில் வசிக்கும் பெரும்பாண்மையான ஐரிஷ் இன மக்கள் அமெரிக்காவில் குடியேறிய அமெரிக்க-ஐரிஷ் இன மக்களோடு தங்களை அடையளப்படுத்திக் கொள்ளவோ, கலாச்சாரத்தை பகிர்ந்துகொள்ளவோ இன்றளவும் விரும்புவதில்லை.

எவ்வளவு மாற்றங்களை கிரகித்துக்கொண்ட பின்னர் ஒரு உயிர் மற்றொரு இனமாகி வேறொன்றாகிறது? அல்லது பிறப்பெடுத்த உடனேயே ஒரு உயிரினம் வேறொன்றாகிவிடுகிறதா? ஒவ்வொரு உயிரினமும் இவ்விதம் எத்தனை சுழற்சிகளுக்கு உட்படுகிறது? இந்த சுழற்சியெல்லாம் எங்கிருந்து தொடங்கியிருக்கும்?

உலகின் முதல் உயிரினம் இரண்டாகச் சுழன்று, கணக்கிலடங்கா வகையில் பல்கிப்பெருகி இப்போது ஒரு முனையில் மனிதனாகவும் மற்றொரு முனையில் ஒரு பறவையாகவும் மாற்றம் கொண்டு இங்கு மீண்டும் சந்தித்துக் கொள்கிறது. அந்த பறவைக்கு எப்படியோ மனிதனைப் பற்றி தெரிந்திருக்கிறது, அதனால் தான் அது மனிதச்சுவடை அஞ்சி அவனை தன் உலகிற்கு வெளியே வைக்கிறது, இல்லையா? ஒருவேளை அதற்கு இது எல்லாமும் தெரியுமா? அவனுக்கு? அவனுக்கு ஏதேனும் தெரிந்திருக்கிறதா? தெரிந்ததுபோல நடந்துகொள்கிறானா? அவனால் எவ்வளவு தூரம் புரிந்துகொள்ள முடியும்? அவன் எப்படியும் எல்லாவற்றையும் புரிந்துகொண்டுவிடுவானா? இப்போது இருவருக்கும் இடையே எந்த இணக்கமும் இல்லையென்று தெரிகிறது. எனினும் பழைய பரிச்சயம் மட்டும் இன்னும் ஏதொவொரு விதத்தில் தொடர்கிறதென்று தோன்றுகிறது.

*

பழுப்பு-பச்சை கதிர்குருவி (greenish warbler)

மேற்கூறிய நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்ளும் ஒருவர் ஒருகட்டத்தில் சோர்வுற்று, பறவைகளை -அதைப் பற்றிய எந்தவொரு தகவலும் தெரியாமல்- வெறுமே ஒரு அழகிய உயிர் என்ற அளவில் பார்த்து ரசித்தாலோ புகைப்படம் எடுத்தாலோ போதும் என்று கருதிவிடவே வாய்ப்புள்ளது. எனினும் ஒரு பறவையை முதல்முறையாகக் காணும்போது அது என்ன பறவை என்று தெரிந்துகொள்வதற்காக நம்முள் திரண்டெழும் கிளர்ச்சி உணர்வுப்பூர்வமானது. இந்தக் கிளர்ச்சியை தொடர்ந்து அனுபவிப்பதே அதன் சிக்கல்களினால் உருவாகும் சோர்வைக் கடக்கும் மிகச்சிறந்த வழி. 

அடர்காட்டிற்கு பறவைகளைக் காண ஒரு நடை செல்கிறோம். அப்போது நமக்கு அறிமுகமில்லாத ஒரு புதிய பறவை மரஉச்சியில் இலைகளுக்கிடையே முன்னும் பின்னும் நகர்ந்து அமர்கிறது. உடனே நம் பைனாகுலரின் கண்கள் அதைப் பின்தொடர ஆரம்பிக்கிறது. அதே வேளையில் நம் செவிகளும் அந்த இடத்தின் ஒட்டுமொத்த ஓசையையும் கூர்ந்து கவனிக்கத் துவங்குகிறது. அப்பறவை எப்போது வேண்டுமானாலும் நம் கண்களை விட்டு மறைந்து சென்றுவிடக்கூடும் என்பதை நாம் உள்ளூர உணர்ந்திருப்பதால் நம்முடைய புலன்கள் அக்கணத்தில் தீவிரமாக விழிப்புநிலையில் செயலாற்றுகிறது. கிளையில் ஓரிடத்தில் அப்பறவை அமர்ந்ததும் அதுவரை சுழன்றுவந்த பைனாகுலர் அதன் மேல் கவிழ்கிறது. பறவையை இருத்திவைத்தலில் வெற்றியடைந்ததும் மனம் பின்வாங்கி இப்போது அதன் முழு கட்டுப்பாட்டையும் கண்களுக்கு வழங்குகிறது. பார்வைப்புலத்தில் நமக்கும் பறவைக்கும் இடையேயுள்ள பிற எல்லாவறற்றையும் பைனாகுலர் வடிகட்டி நம் கண்களின் முழு கவனத்தையும் பறவையின் மேல் குவிக்கிறது. தற்போது பறவையின் வெளித்தோற்றத்தில் உள்ள ஒவ்வொன்றும் துலக்கம் பெறத் துவங்குகிறது. அதன் கண்கள், மூக்கு, கால்கள், சிறகு என அதன் உருவ அமைப்பை, உடலின் நிற வேறுபாடுகளை, அவை அசையும் விதத்தை என்று அதன் ஒட்டுமொத்ததையும் நாம் ஒரே நேரத்தில் தனித்தனியாக கவனிக்கிறோம். கண்களின் வழியாக கிடைக்கத் துவங்கும்  தகவல்களைக் கொண்டு நம் மனம் அது என்ன பறவை என்று ஊகிக்க முயல்கிறது. திட்டவட்டமாக ஊகிக்க முடியாத பட்சத்தில் தொடர்ச்சியாக நம்முள் ஒப்பீடுகளும், அந்த ஒப்பீடுகள் சரியா தவறா என்னும் முடிவுகளின் விளைவாக மேலும் பல ஒப்பீடுகள் வரிசையாக நடந்தேறுகிறது. அதோடு இந்த தொடர் ஒப்பீடுகள் நம் கண்கள் மேற்கொண்டு கவனிக்க வேண்டியவற்றையும் முடிவு செய்தபடி இருக்கிறது. இவ்வாறு நம் புலன்களும் மனமும் அந்தத் தருணத்தில் நுட்பமாக விஷயங்களை நோக்கி படிப்படியாக ஆழ்ந்து செல்கிறது.

அதுபோல இங்கு பைனாகுலர் அல்லாமல் ஒரு காமிராவின் துணையுடன் ஒரு பறவையை முதன்முதலாகப் பார்க்கும்போது இதைப் போன்றதொரு அனுபவம் நமக்குள் ஏற்படுவது சந்தேகமே. ஏனெனில் புகைப்படத்தைக் கொண்டு சாவகாசமாக தெரிந்துகொள்ள முடியும் என்கிறபோது நம் புலன்கள் அதேயளவு விசைகொள்வதில்லை. கூர்ந்து கவனிக்கவேண்டிய தேவையோ, அப்படிக் காண்பவற்றை உடனடியாக ஆலோசனைக்கு உட்படுத்தவேண்டிய தேவையோ அப்போது இல்லாமல் போகிறது. இதனால் ஒரு பறவையைக் கண்ட அந்த முதற்கணம் நம்மில் அழுத்தமான எந்தவொரு விளைவையும் உண்டாக்குவதில்லை. காமிராவின் கோணத்திற்குள் அப்பறவையை இருத்திவைத்து புகைப்படம் எடுப்பதோடு அந்த அனுபவம் பெரும்பாலும் நின்றுவிடுகிறது.

கானுயிர்களை புகைப்படம் எடுப்பதென்பது அதனளவில் ஒரு தனித்த கலை. அதுபோல பறவைகளை புகைப்படம் எடுப்பதும் பலவகைகளில் அதன் அறிமுகத்திற்கு அவசியமானது. எனினும் பறவைகளை ரசிக்கவும் அவதானிக்கவும் முற்படும் ஒருவர் ஆரம்பகாலத்தில் காமிரா உண்டாக்கக்கூடிய இப்படியான எதிர்மறை விளைவுகளை கவனத்தில் கொள்வது அவசியம். அதே சமயம் ஒரு நல்ல பைனாகுலர் அருவருக்கு பொருத்தமான துணையாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

***

ஜனார்த்தனன் இளங்கோ

ஜனார்த்தனன் இளங்கோ, மென்பொருள் பொறியியலாளர். சொந்த ஊர் திருவாரூரைச் சேர்ந்த திருத்துறைப்பூண்டி. இலக்கியம் தவிர தத்துவம், கட்டிடக்கலை, பறவையியல் ஆகிய துறைகளில் ஆர்வமுண்டு.

உரையாடலுக்கு

Your email address will not be published.