டார்வினின் வால் – அறிவறிதலின் வரலாற்றுப் புகலிடம் : பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

தனது முகத்தில் வரலாற்று ஒப்பனையைக் களைந்து விடாத புதுக்கோட்டை
நகரில் வசிப்பவரான, ‘டார்வின் வால்’ எனும் சிறுகதைகள், குறுநாவல்களின் நூலை எழுதியவரான தூயன், தான் அன்றாடம் கடக்கும் ஒரு தெருவின் திருப்பத்தில் வரலாற்றின் துணுக்கு ஒன்றைக் காணும் வாய்ப்பைப் பெற்றவர். ஏரிக்கரையில் அல்லது தொழிற்சாலைமயமான நகரங்களில் வசிப்பவர்களைப் போல அல்லாமல் வடிந்து சென்ற வரலாற்றின் தற்கால சாட்சியங்களின் அருகே வசிப்பவர்கள் சற்றேனும் பழங்கதவின் தாழ்திறந்து உட்புக முனைவதற்கான வாய்ப்புகளின் விதைகள் அப்பிராந்தியத்தின் காற்றில், பேச்சாக, நினைவுகூரலாக, சின்னங்களாகத் தூவப்பட்டிருக்கும்.

தமிழ் இலக்கியத்தில் வரலாற்றுப் புனைவெழுத்தின் இரு திருப்பங்கள் : தூயன் இதுவரையிலும் ’டார்வினின் வால்’, ‘இருமுனை’ எனும் இரண்டு கதைத் தொகுதிகளும், கதீட்ரல் எனும் ஒரு நாவலும் எழுதியிருக்கிறார். இம்மூன்று நூல்களையும் ஒருசேர வாசிப்பவர்கள் அவருடைய படைப்புகளை அணுகுவதற்கு தமிழ் இலக்கியத்தில் வரலாறு எவ்வாறு புனைவாக்கம் செய்யப்பட்டதென்று அறிவது உதவியாக இருக்கும்.

தமிழில் வெகுஜன இலக்கியமே முதலில் வரலாற்றை தனது மூலப்பொருளாகக் கொண்டு படைக்கப்பட்டது. மாயூரம் வேதநாயம் பிள்ளை, ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ எழுதும் போது இலக்கியத்தில் வெகுஜன இலக்கியம் என்றும் தீவிர
இலக்கியம் என்றும் இரண்டாகப் பிரிந்திருக்கவில்லை. தீவிர இலக்கியத்தில் வரலாற்றுக் கதைகளை, புராணக் கதைகளை எழுதியவர்கள் உண்டு என்றாலும்
அவர்கள் அக்காலகட்டத்தில் மேலோங்கியிருந்த மதம், பொருளாதாரம், நிர்வாகத்தின் அடைப்படையில் அமைந்த இந்திய தேசிய உணர்வும், மொழியினால் கட்டமைக்கப்பட்ட அடிப்படை கொண்ட திராவிட உணர்வினாலும் உந்தப்பட்டு வரலாற்றை தங்களது படைப்புகளில் கையாண்டவர்கள் அல்ல.

இராஜா, இராணிக் காலத்துக் கதைகளாகவே தமிழ் வெகுமக்கள் இலக்கியத்தில் வரலாற்றுப் புனைவுகளை வாசித்தவர்கள் சொல்லிக் கொண்டார்கள். அவை எவையும் வரலாற்றை விமர்சனப் பூர்வமாக அணுகியவை அல்ல. ஆனால் இவையனைத்தும் காலனியத்தை தனது தற்காலமாகக் கொண்டவர்களுக்கு, அதனை வரலாறாக உள்வாங்க முடியாதவர்களுக்கு ஒரு கடந்த காலத் தொடர்ச்சியை உருவாக்கின. வெகுமக்கள் தங்களது வரலாற்றை அரசர்களின் வரலாறாகவே பார்த்தனர். தற்காலத்தின் அசாதரணமானவற்றைக் கூட நம்மால் வரலாறாக உருவகிக்க முடியாது. வரலாற்றை எப்போதோ நடந்தவற்றின் தொகுப்பாகவே நாம் கருதுகிறோம். இங்கே வேலை நடக்கிறது (WIP) என்பதைப் போல இங்கே வரலாற்றுப் பணி செய்யப்படுகிறது (HIP) என்று வேண்டுமானாலும் சொல்லலாம்.

பின்-காலனியக் கோட்பாடு எழுந்து, தமிழில் அதன் நுழைவு, கம்யூனிசக் கருத்தியலின் வீழ்ச்சியோடு இணைகிறது. அதனோடு பின்-நவீனத்துவமும், இலத்தின் அமெரிக்க கதையாடல் முறையும் நமக்கு அறிமுகமானதில் தமிழ் தீவிர இலக்கியம் வரலாற்றை முதன்முறையாக தனது படைப்புகளில் பொருண்மைப்படுத்துவதோடு, கதையாடலில் நவீனத்துவகால வரம்புகளை மீறும் சுதந்திரத்தையும் பெறுகிறது. காலனியத்தை சுரண்டலாகப் பார்க்கும் பார்வையே நமக்கு அப்போதுதான் கிடைக்கிறது. அசோகமித்திரன் ஹைதராபாத் சமஸ்தானப் பின்னணியில் எழுதி இருந்தாலும் அவரது படைப்புகள் எதிலும் ஆங்கிலேயர்களை, சுரண்டல்வாதியாகக் காட்சிப் படுத்துவதில்லை.

நாம் ஒன்றை சுரண்டல் என அறிவதற்கு முதலில் நாம் இவற்றை எல்லாம் கொண்டிருந்தோம் என்கிற உணர்வு எழ வேண்டும். நாம் கொண்டிருந்தவை நமக்கு வழங்கப்பட்டவற்றைக் காட்டிலும் மேலானவை அல்லது இணையானவை என்கிற உணர்வும். இவை இரண்டும் இல்லாவிடின் நாம் சுரண்டலை அறிய முடியாது. பின்-காலனியம் இவ்வாறு வரலாற்றை குறிப்பாக காலனிய வரலாற்றை அறிவதற்கான பயணத்திற்கு சாலையை அமைத்துத் தருகிறது. ஆரம்பகட்ட பின்-காலனிய படைப்புகளாக, கோணங்கியின் ‘பாதரஸ ஓநாய்களின் தனிமை’, பிரேம் ரமேஷின் படைப்புகள் சில, எஸ்.ராமகிருஷ்ணனின் ‘நெடுங்குருதி’ நாவல் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். காலனிய அறிவுருவாக்கம், பொருளாதார சுரண்டல் இவற்றை விவாதிப்பதோடு கீழை நிலத்திற்கென்று, குறிப்பாக இந்தியாவுக்கென்று ஓர் அறிவறிதல் முறைமை உண்டென விரிவாக விவாதித்தது பா.வெங்கடேசனின் ‘தாண்டவராயன் கதை’ நாவல். கீழைத்தேயம் எதிர் மேலைத்தேயம் எனும் பிரிவினை உருவானதில் கீழைத்தேயத்தின் தன்னிலை என்பது என்ன, அதனை எவ்வாறு அறிவது என்கிற உந்துதலில் படைப்புகள் எழ ஆரம்பித்தன. அதனைத் தீவிரமாக தனது படைப்புகளில் தொடர்ந்தவராகவே தூயனைப் பார்க்க முடிகிறது.

அவர் எழுதிய ஆண்-பெண் உறவின் நிலைகளைப் பேசும் கதைகளில் எனக்கு ஆர்வமில்லை. குறிப்பாக ‘டார்வினின் வால்’ எனும் தொகுப்பில் உள்ள ‘லாஸ்யம்’ எனும் கதை. ஆனால் மற்ற கதைகளான, ‘தீப்பற்றிய கனவுகள்’, ‘இந்திரஜாலம்’, ‘மேதகு வைஸ்ராய் திரு….’. ஆகிய கதைகளே அவரது படைப்பு மனதின் மைய அக்கறைகளைக் காட்டக் கூடியவை.

”பிரிட்டிஷின் தந்திரம் என்ன தெரியுமா? இந்திய சமஸ்தானம் முழுக்க ஐரோப்பியக் குழந்தைகளைக் கருவுறச் செய்வது. அவை வளர்ந்ததும் ஐரோப்பா எங்கு என்றுதான் கேட்கும். அல்லது தன் பறங்கித் தாயைத் தேடி சீமைக்குப் புறப்படும். அங்கு நிச்சயம் அப்படியொருத்தி கிடைக்க மாட்டாள் இருந்தும் அழகான பறங்கியொருத்தியை மணந்து அவ்வெண்ணத்தை அடைந்து விடும்”. [பக். 101]

தூயனின் ‘இந்திரஜாலம்’ எனுக் கதையில் வரும் இந்தப் பத்தியை பூதக்கண்ணாடியாகக் கொண்டு அவரது படைப்புகளின் அக்கறையை நம்மால் பெரிதுபடுத்தி இனங்காண முடியும். காலனியம் என்பது வெறுமனே மேலைத்தேய அறிவு, மெய்யியல், அரசியல் முறைமை மட்டுமல்ல அது அழித்தொழித்த அல்லது ஊடுருவிய தன்னிலையின் அடையாள அழிப்பும் கூட என்பதை தூயன் விவாதிக்கிறார். கதீட்ரல் நாவலில் கூட இதைப் போன்ற விவாதம் வரும், வெறும் நிலத்தை வெற்றி கொள்வதில் என்ன இருக்கிறது?, ஒரு தன்னிலையை அழித்து அதனை தனது நகலாக மாற்றுவதே வெற்றி என.

இந்நூலின் இரண்டாவது கதையான ‘தீப்பற்றிய கனவுகள்’, கலைமனம் உடைய மேற்கத்திய தன்னிலையின் தாங்க-வொண்ணாத வெடிப்பையும், அதனை எவ்வாறு மரபின் வழிப்பட்ட கீழைத்தேய கலைஞன் சமாளிக்க முடிகிறதென்றும் ஆத்மநாம் எனும் ஓவியக் கலைஞனின் வழியாக விவாதிக்கிறது. தனது மரபின் நிழலில் தஞ்சமடையும் எவர் ஒருவரும், அவர் மேலைத்தேயரோ அல்லது கீழைத்தேயரோ அவர் தனது தன்னிலையின் அலைக்கழிப்பை மட்டுப்படுத்திவிட முடியும். மரபோடு ஒழுகுதல் எவ்வாறு நிபந்தனைக்கு உட்பட்டதோ அவ்வாறே சுதந்திரமும் நிபந்தனைக்கு உட்பட்டதே.

முதல் கதையான ‘டார்வினின் வால்’ சாதாரணமான மொழியில் எழுதப்பட்ட பல்வேறு வாசிப்பு சாத்தியங்களை மறைத்து வைத்திருக்கும் கதை. அதன் பெயரிப்படாத நாயகனின் தனிமையும், கூருவுணர்வும், மெய்யியல் மற்றும் அறிவியல் ஈடுபாடு ஓர் எலியைக் கொல்வதற்கு அதுவரையிலும் சிந்திக்கப்படாத ஒரு பொறியை உருவாக்கச் செய்கிறது. இக்கதையின் மேலடுக்கு தனது வீட்டில் தனது நிழலாகவே மாறிவிட்ட ஓர் எலியைக் கொல்வதாகத் தொடங்கினாலும், அதன் உள்ளடுக்கில் ஒரு தன்னிலை, அதன் அழிப்பு என விரிகிறது.

பொருண்மையாகத் தொடங்கி மீபொருண்மையான ஒரு தளத்திற்கு நகரும் கதையில் ஒரு சிறுமி வருகிறாள். கதையின் நாயகனும், அச்சிறுமியும் வரையும் எலிப்பொறி ஒன்று போலவே இருக்கிறது. அச்சிறுமிதான் சொல்கிறாள் அவன் உருவாக்கிய பொறி அவன் வசிக்கும் வீடே என்று. அப்போது கதையின் மூன்றாவது அடுக்கும் உருவாகத் தொடங்குவதை நுட்பமான வாசகர்கள் உணரலாம். சமூக நனவிலிக்கான ஏக்கம் மிகுந்த ஓர் உயிரியின் நினைவை அழித்து விட்டால் அது என்னவாக மிஞ்சும்? அது வெறும் உயிரியாக மிஞ்சும். மனிதர்களுக்கு மதம் அளித்த இடத்திலிருந்து அவர்களைக் கீழிறக்கி இவ்வுலகோடு, அவர்கள் உருவாக்கிய சமூக, பொருளாதார, சூழியல், பாலியல் நிலைமைகளாலும், அவர்களுடைய உறவு ஓர் உயிரினத்தின் (Species) உறவாகவே இயங்குகிறது என்பதை மார்க்ஸ், டார்வின், நீட்ஷே, ஃபிராய்ட் ஆகியோரது சிந்தனைகள் பேசின. இக்கதை சமூக, சூழியல் உறவுகளால் தன்னிலை உருவாகிறது என்கிற பார்வையும் கொண்டுள்ளது. தனது சூழலை மாற்றுவதின் மூலம் தன்னிலையில் உள்ளாகும் மாற்றத்தை எவ்வாறு அவதானிப்பது என்கிற பரிசோதனையின் சிக்கலையும் பேசுகிறது.

தூயன் நமது தன்னிலைகளைக் கட்டமைத்திருப்பது காலனியம் என்கிற இடத்திலிருந்து காலனிய நீக்கத்தின் வழியாக நாம் காணக் கூடிய ‘இந்தியத்’ தன்னிலை எவ்வாறாக இருக்குமென்று அறிவதற்கு வரலாற்றைப் புகலிடமாகக் கொள்கிறார். தமிழில் பின்-காலனிய இலக்கியம் குறிப்பிட்ட அளவுக்கேனும் படைக்கப்பட்டுள்ளது. எனினும் பின்-காலனியக் கோட்பாட்டை, அரசியலை முன்னெடுப்பது, காலனிய நீக்கத்தை எவ்வாறு செய்வது என்பதில் ஒரு முடிவை எட்ட முடியாத சூழல் நிலவுகிறது (அது தேவையா என்பது தனி விவாதம்). தனது படைப்புகளில், இரண்டு எதிரெதிர் கலை, மெய்யியல் கோட்பாடுகளுக்கு இடையேயான வேறுபாடு, அறிவியல் மற்றும் உளவியல் சிந்தனைகளை விவாதிப்பதின் வழியாக தானொரு ‘இந்திய அன்னையைத்’ தேடுகிறவராகத் தெரிகிறார். தமிழ் இலக்கியப் பரப்பில் பின்-காலனிய இலக்கியம், கருத்தியல் இலக்கியத்திற்குப் பிறகு மற்றொரு அரசியல் எழுத்தாக எழுகிறது. தூயன்
அதற்குப் பங்களிப்பு செய்கிறவராக இருக்கிறார்.

டார்வினின் வால் – எதிர் வெளியீடு

பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

பாலசுப்ரமணியன் பொன்ராஜ், புனைவாசிரியர். கட்டுரையாளர். “துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை”, "சீமுர்க்" ஆகிய  சிறுகதைத் தொகுப்புகளின் ஆசிரியர்.

1 Comment

  1. நல்ல கட்டுரை. புறவயமான கூறுகளால், விரிவான சட்டகத்தில் ஓரளவு objective ஆக எழுதப்பட்டிருக்கும் இலக்கிய விமர்சனம். ஒரு நல்ல முன்மாதிரி என்றே தோன்றுகிறது. ஆனால் சில இடங்களில் எனக்கு உடன்பாடும் இல்லை.

    “தமிழில் பின்-காலனிய இலக்கியம் குறிப்பிட்ட அளவுக்கேனும் படைக்கப்பட்டுள்ளது. எனினும் பின்-காலனியக் கோட்பாட்டை, அரசியலை முன்னெடுப்பது, காலனிய நீக்கத்தை எவ்வாறு செய்வது என்பதில் ஒரு முடிவை எட்ட முடியாத சூழல் நிலவுகிறது”

    படைப்பாக்கத்தின் விசைகளை புரிந்துகொள்ள அதை முன்னெடுப்பாகவும், விவாதித்து முடிவுகட்டவேண்டிய விஷயமாகவும் ஆராய்வது எனக்கு உவப்பானவை அல்ல. அந்த அணுகுமுறை புனைவாக்கத்தின் சிக்கலான motivesஐ கொஞ்சம் எளிமைப்படுத்துகிறது என்பது என் எண்ணம். பின்காலனிய எழுத்தில் ஜெயமோகனின் வெள்ளை யானை,ஊமைச்செந்நாய், கயிற்றரவு போன்ற படைப்புகள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

உரையாடலுக்கு

Your email address will not be published.