பெருவனச் சருகுகள் : கார்த்திக் பிரகாசம்

மாலை ஐந்து மணி. மதுரை இரயில் நிலையத்தில் சென்னை விரைவு வண்டிக்காகக் காத்திருந்தேன். வழக்கமான தாமதத்திற்குப் பேர் போன அந்த ரயில், அன்று வழக்கத்தை விடவும் தாமதமாக வந்தது. சமூகத்தில் ‘நேரம் தவறாமை’ என்பது உருமாறிய தேய் வழக்காகிப் பல காலமாகிவிட்டது. ஆதலால் ரயில் தாமதத்திற்கெல்லாம் ஏமாற்றமடையவோ, குறைபட்டுக் கொள்ளவோ அவசியமில்லை என்ற பக்குவத்தை ஏற்கனவே அடைந்துவிட்டிருந்தமையால், எப்படியோ இரயில் வந்தால் சரி என்கிற மனநிலையில் லயித்திருந்தேன்.

நடைமேடையை தெப்பலாய் நனைத்திருந்தது மக்கள் கூட்டம். குடும்பத்தினருடன் சீக்கிரமாய் வந்துவிட்ட பயணிகள் சிலர் ஆங்காங்கே குட்டை போல் தேங்கியிருந்தனர். இன்ன காரணம் என்றில்லாமல் நடைமேடையின் இடப் பக்கமும், வலப் பக்கமுமாய் உலாத்திக் கொண்டு வழியில் நின்றிருந்தவர்களை இடித்துத் தள்ளிவிட்டுத் திரும்பிக்கூடப் பார்க்காமல் பரபரப்புடன் கடந்து சென்றது உதிரி கூட்டம். இவற்றையெல்லாம் காணும் போது, தமிழ்நாட்டின் எந்தவொரு மூலையில், எப்படியாகப்பட்ட  அசந்தர்ப்ப நேரத்தில் நின்றாலும் சென்னைச் செல்லும் ஜனத்திற்கு மட்டும் குறைவே இருக்காது என்று தோன்றியது.

நிர்வாகச் செயல்பாட்டில் இயல்பாக அரங்கேறும் குளறுபடிகளின் உத்தேச மறிந்து, அரசாங்கம் செயல்படுத்திய மிகப் பொருத்தமான திட்டங்களுள் இரயில் நிலையங்களில் இலவச வைஃபை திட்டம் அதிமுக்கியமானது. தாமதமாக வந்த பயணிகள் மட்டுமில்லாமல், சரியான நேரத்திற்கு வந்தவர்களுமே கூட வராத இரயிலைத் திட்டுவதையும், முற்றிலும் பொறுமையிழந்து அவர்களின் இரத்த கொதிப்பு எகிறுவதையும் தடுத்து முழுமூச்சாகக் காபந்து பண்ணிக் கொண்டிருந்தது இலவச வைஃபை எனும் ஆபத்பாந்தவன். விரலின் ரேக தடங்கள் அழிந்திடுமளவிற்குத் அலைப்பேசியின் தொடுதிரையைத் தேய்த்தும், மேல் கீழ் என இழுத்துத் தள்ளியும், சென்னையில் குடிநீர் விநியோகிக்கும் லாரிகளில் ஒழுகியே வீணாகும் தண்ணீரைப் போல யாதொன்றுக்கும் ப்ரோயஜனமில்லாமல் கழிவது குறித்த எந்த பிரக்ஞையுமின்றி காலத்தை விரயமாக்கிக் கொண்டிருந்தது மாண்புமிகு பொதுஜனம். அதிலொரு ஆஸ்தான பிரஜையாகக் காதில் ஹெட்செட்டை மாட்டிக் கொண்டு அம்மாய உலகில் நானும் மேயலானேன்.

சிறிது நேரத்தில் தோள்பட்டையில் யாரோ சுரண்டியதைப் போலிருந்தது. திரும்பிப் பார்க்காமலேயே அலைப்பேசியில் ஓடிக்கொண்டிருக்கும் காணொளியின் ஒலியைக் கூட்டினேன்.

மீண்டுமொரு சுரண்டல். இந்த முறை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக…

ஏதாவது சொல்லியிருக்கக் கூடும். ஹெட்செட் வெளியுலகத்துக்குக் காதை செவிடாக்கியிருந்ததால் ஒன்றும் கேட்கவில்லை.

எழுபது முதல் எண்பதுக்குள் வயதிருக்கும். ஒல்லியான உருவம். ஒடிசலான கன்னங்கள். சராசரிக்கும் மிகக் குறைவான உயரம். பருத்த கண்ணடிகளுக்குள் அலைக்கழிக்கும் வாழ்வில் அமைதியைத் தேடும் ஆந்தை விழிகள். தலையை மார்போடு கோர்த்துக் கட்டியது போன்ற கோழிக் கழுத்து. வளைதலின் துவக்கத்தில் முதுகுத்தண்டு. தடியில்லாமல் தடம் பதிக்கும் பாதங்கள். இடுப்பில் காவி வேட்டி. இடுப்பைத்தான் வேட்டி சுற்றியிருக்கின்றது என்று முழுமனதாக ஒப்புக் கொள்ள முடியாது. வேண்டுமென்றால் வேட்டியென்ற கொசுறுத் துணி இறுக்கிப் பிடிக்க முயன்று கொண்டிருந்த அங்கத்தை இடுப்பு என வைத்துக் கொள்ளலாம். நான்கு வேளை நன்கு உண்டு செரித்திடும் நல்ல உடல்வாகு உள்ள இரண்டு ஆட்கள் நுழைந்திடும் அளவிற்கு தொளதொளவென தொங்கும் சட்டை. மேலிருந்து பொத்தான் இடாமல், நான்காவது பொத்தானுக்கான துளையில் ஐந்தாவது பொத்தான் நுழைக்கப்பட்டுப் பழிப்பு காட்டும் சிறுமியின் வாயைப் போல் கோணல் மாணலாக இழுத்துக் கொண்டிருந்தது. தோளில் கந்தல் துண்டு. மூப்பிற்கான ஆரோக்கியமின்மை ஒளிவுமறைவின்றி பளிச்சென்று பிரகாசித்தது.

‘காசெல்லாம் இல்லை வேண்டுமென்றால் சாப்பாடு வாங்கித் தருகிறேன்’ யாசகம் வேண்டுபவரிடம் சொல்வதற்கெனவே பொதுப்புத்தியில் நிரந்தரமாய் பதிந்து போன பதிலுக்கான செதுக்கப்பட்ட முக பாவத்துடன், ஹெட்செட்டை ஒருபக்கமாகக் கழற்றிவிட்டு, என்ன ஐயா..? சொல்லுங்க என்றேன்.

“நான் சொல்ற நம்பருக்கு ஒரு போன் போட்டு தறீங்களா… ” அந்நியனிடம், அதுவும் தன்னைவிட மிக இளையவன் ஒருவனிடம் கையேந்தும் கூச்சம், துயரத்தில் தோய்ந்து நசநசத்து போயிருந்த குரலில் கணிசமாகக் கசிந்தது. பதிலுக்கு போனை நோண்டியவாறே அவரது பாக்கெட்டை நோட்டமிட்டேன். போன் வைத்திருப்பதாகத் தெரியவில்லை. காணொளியின் சுவாரசியத்தில் திளைத்திருந்த மனநிலையை வெடுக்கெனப் பிடுங்கிய கடுப்புடன், ‘ம்ம்ம். நம்பர் சொல்லுங்க..’ என்றேன். முதல் முறை போகவில்லை. மறுமுறை முயன்ற போது இணைப்பு கிடைத்தது. போனை அவரிடம் கொடுத்தேன். ஐம்பது கிலோ அரிசி சிப்பத்தைத் தோளில் சுமப்பது போலக் கரங்கள் நடுங்கின.

“ராசா.. தாத்தா பேசறேன்டா. நான் மதுரைக்கு வந்துட்டேன். இங்கிருந்து சென்னைப் போயி அப்படியே பாண்டிச்சேரி போயிடறேன். ஆயாவ நல்லபடியா பாத்துக்கோடா. சண்ட போடாதடா. பாவமடா அவ . அலோ.. அலோ.. அலோ..” பதிலேதும் சொல்லாமலேயே மறு பக்கத்தில் இணைப்பு துண்டிக்கப்பட்டது போலும். முதிய கண்களில் உப்புநீர் பெருகியது.

சட்டென வாடிய அவரது முகத்தைப் பார்க்கச் சங்கடமாக இருந்தது. ‘இன்னொருவாட்டி போன் போட்டு தரேன் பேசுறீங்களா…’ எனக் கேட்டேன்

வேண்டாமென தலையாட்டி கைகூப்பிவிட்டு வார்த்தையேதும் கூறாமல் திரும்பி நடந்தார்.

ஒரு அடிக்கும் அடுத்த அடிக்கும் இடையே ஸ்திரமாக நிற்கக்கூட முடியாமல் தள்ளாடிடும் மூப்பில் அப்படியென்ன வீட்டையும், ஊரையும் விட்டு வெளியேறும் கொடும் சூழல்? கண்டிப்பாகச் சொத்து சம்மந்தப்பட்ட சங்கதியாக இருக்க வாய்ப்பில்லை. சிதைக்கப்பட்ட பாச உணர்வுகளால் சிதிலமடைந்த மனம் விரக்தியின் கரத்தை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு, உயிர் சுமக்கவே அல்லல்படும் மரணத்திற்கு அருகில் வந்துவிட்ட இவ்வயோதிக உடலைக் கருணையே இல்லாமல் அலைக்கழிக்கிறது. மீட்க முடியாத ஆற்றாமைக்குள் தள்ளி தனிமையால் அடைத்திருக்கிறது.

அவரருகில் சென்று, டீ காபி ஏதாவது சாப்பிடுறீங்களா? என்றேன்.

மறுப்பேதும் வராததால் பக்கத்திலிருந்த டீக்கடையில் இரண்டு டீ சொன்னேன்.

அவர் எதுவும் பேசவில்லை.

டீ வந்தது.

சூடாக உறிஞ்சி நாவைச் சுட்டுக்கொண்டதும் சட்டென கிளாசை பின்னுக்கு இழுத்து உதடுகளில் வழிந்த துளியை வெறுங்கையால் ஒத்தியெடுத்துவிட்டு தாழ்ந்த தலை நிமிராமல் ஆரம்பித்தார்.

ராசபாண்டி… ‘ராசப்பா’ன்னு கூப்புடுவோம். நாங்க தவமா தவமிருந்து பெத்த ஒரே மவளோட மகன். அவ பேரு ராசாத்தி. சமயபுர ஆத்தா மனுச பொறப்பெடுத்து வந்தா எப்பிடி இருக்கும். அப்பிடி தங்கமாட்டம் இருப்பா. அவ மொகத்த பார்த்தாலே, மனசுக்குள்ள மண்டிக் கெடக்குற பொறாமை, துரோகம், கோவம், வெறுப்பு, வன்மமெல்லாம் தன்னாலேயே பிச்சிக்கிட்டு வெளிய ஓடிரும். தெனமும் பாலும், தேனும் ஊத்தி அபிசேகம் மட்டும்தான் பண்ணல. மத்தபடி எங்க குலதெய்வம். பூமி பூஜை, பயிர் அறுவடை, கல்யாணம், தெரட்டி, காது குத்து, முளைப்பாரி எடுக்குறதுன்னு ஊர்ல எந்த நல்ல விஷயமா இருந்தாலும் அக்கம்பக்க ஜனங்களுக்கு அவதான் முன்ன நின்னு முதல்ல கைத்தொட்டு தொடங்கி வைக்கணும். பொழுது விடிஞ்சதுல இருந்து அந்தி சாயர வரைக்கும் ‘ராசாத்தி… கண்ணு’ ங்கற கொளஞ்செடுத்த குரல் கேட்டுட்டே இருக்கும். அவ கல்யாணத்தப்போ பாத்திருக்கணுமே, எல்லார் வீட்டு வாசல்லயும் பந்தக்கால் நட்டு, வாழை மரம் வெச்சி, மாவிலை தோரணம், சீரியல் பல்பு, கொழையலாம் கட்டி ஆடித் திருவிழா மாதிரி வீதியே ஜெக ஜோதியா இருந்துச்சு. தான் பெத்த பொண்ணுக்குக் கல்யாணம் பண்றாப்ள ஒவ்வொரு வீட்லருந்தும் போதும் போதுங்கற அளவுக்கு மனசார சீர் செனத்தி செஞ்சாங்க. மறு வீட்டுக்கு கிளம்பறப்ப எங்க குலதெய்வம் பொறந்த மண்ண விட்டு போகுதேன்னு மொத்த சனமும் ஊர் எல்லை வரைக்கும் கூட வந்து கண்ணீர் சிந்தி திரும்புச்சு. போதாத காலம். ஒரு விபத்துல மண்டைல அடிபட்டு புருஷன் உயிர் பிரிஞ்ச கொஞ்ச நேரத்துலேயே அவளும் உசுர விட்டுட்டா..

ஆத்தாளும் அப்பனும் செத்த அன்னைக்கு மூக்கு சளிய சப்பிக்கிட்டு என் பொண்டாட்டி மடியிலேயே கெடந்தான். நால்ற வயசு வரைக்கும் மொல பால் குடிச்சவன். ராத்திரி தூக்கத்துல பெத்தவ ஞாபகத்துல காத்துலயே மார தேடுவான். ராத்திரி பூராவும் மடியிலேயே வெச்சிருப்போம். அன்னையிலிருந்து சொமக்குறோம். நல்ல பையனாட்டம் தான் இருந்தான் தம்பீ. அறிவுல கெட்டி. மொத ராங்க் வாங்குவான். முத்துகள ஒவ்வொண்ணா கோர்த்து வச்சாப்புல மணி மணியா இருக்கும் கையெழுத்து. பள்ளிக்கூடத்துல எல்லா வாத்தியாருங்களுக்கும் ராசபாண்டினா செல்லம். பத்தாவது முழு பரிச்சையில பள்ளிக்கூடத்துலயே மொத ஆளா வந்தான். அவன் கேட்டதெல்லாம் வாங்கி தந்து, ராஜா மாதிரி வெச்சு அழகு பாத்தோம். மேற்படிப்புக்குப் பக்கத்து ஊருல இருக்குறதுலயே ஒசத்தியான பள்ளிக்கூடத்துல சேத்துவிட்டோம். அப்பைலருந்துதான் தலகீழா போயிட்டான். பசங்களோட கெட்ட சகவாசம். வீட்டுக்குத் தெரியாம சிகரெட்டு புடிக்க ஆரம்பிச்சான். கிரிக்கெட்டு, கபடினு சுத்துனான். வீதி வீதியா போயி களி, பொரிமா உருண்டை வித்து வந்த காச சீட்டு வெளையாட திருடுனான். பன்னெண்டாவதுல பெயில். பெயில் ஆனதுக்கு அப்புறம் தெகிரியம் ஜாஸ்தி ஆயிடுச்சு. வீட்டுக்கு தெரியாம மறச்சி பண்ணத நேரடியாவே செஞ்சிட்டு திரிஞ்சான். ஏன்பா இப்டி பண்றேன்னு கேட்டா, கெட்ட கெட்ட வார்த்தையிலே ஏசிட்டு ராத்திரி சாராயம் குடிச்சிட்டு போதையில கைலிய தலைல உருமா மாறி கட்டிட்டு வருவான். ஏதோ கெட்ட நேரம் புள்ளயே போட்டு வாட்டுது. சீக்கிரமே மாறிடுவான்னு தெனமும் பல்ல கடிச்சிட்டு கெடந்தோம். எதுவுமே மாறல. சரின்னு ஒரு முடிவுக்கு வந்தோம். கேள்விக் கேக்க வீட்ல ஒரு பொம்பள ஒருத்தி இருந்தா வழிக்கு வருவான்னு கல்யாணத்துக்கு பொண்ணு பாக்க ஆரம்பிச்சோம். என் மக உயிரோட இருந்தப்ப, ‘ராசாத்திக்கு சம்மந்தி ஆகவே பொம்பள புள்ளைய பெத்தெடுக்கணும்னு சொன்னவைங்களாம் இப்போ மூஞ்சிக்கு நேரா சொல்லச் சங்கடப்பட்டு மூணாவது ஆள் மூலமா கைய விரிச்சாங்க. அவங்கள சொல்லியும் குத்தமில்ல. பையன் ஒழுங்கா இருக்கணுமே. எந்த பெத்தவங்கதான் தெரிஞ்சே புள்ளைய பாழுங்கிணத்துல தள்ளுவாங்க. கடைசில அவனே ஒருத்திய கைகாட்டுனான்.சாதி, குலம் எதப்பத்தியும் மறுவார்த்த பேசாம கட்டி வெச்சோம். அது என்னடானா, கொள்ளிவாய் பிசாசுக்குக் குள்ளநரி சகவாசம் கெடச்சாப்புள ஆய்டுச்சு.

இப்போ வீடு வாச, காடு காணி எல்லாத்தையும் அவம்பேருக்கு மாத்தி எழுதிக்கிட்டு, போட்றத சாப்புட்டுட்டு வாய் பேசாம கெடக்கிருதா இருந்தா கெடங்க இல்லனா எங்கையாச்சும் போய் செத்து தொலைங்கங்றான். மார்லயும் தோள்லயும் தூக்கிபோட்டு வளத்த சில்வண்டு பையன், இன்னைக்கு நம்மள தெருநாய விட கேவலமா நடத்தும் போது அவன் ஊத்தற கஞ்சிய வெட்கமே இல்லாம குடிச்சிட்டு எப்பிடி தம்பீ அந்த வீட்ல உசிரு வாழ முடியும். அப்படி மரியாத இழந்து இந்த மானங்கெட்ட உசுர சொமக்கறதும் அவசியம்தானா.? கெழடு கெட்டையாகி ரெத்தம் சுண்டிருச்சு. ஆனாலும் நெஞ்சில ரோஷம் கெடந்து அணத்துதே தம்பீ. அதான் வந்துட்டேன்.

இரண்டு கிளாஸிலும் டீ அப்படியே இருந்தது. க்ளாஸிலிருந்து நடனமாடியபடி மேலெழுந்த புகை காற்றைப் பருகி பெருவெளியில் கரைந்தது.

அவளையும் வந்துருனுன்னேன். அடிச்சி ஒதச்சாலும் அவளுக்குப் பேர புள்ள பாசம் போகல. பாவி மனுஷிக்குக் காட்டுக்கு போற காலத்துல கட்டுனவன் மேல கொஞ்சூண்டு நம்பிக்க இல்லாம போய்டுச்சு. காடு, காணினு ஓடியாடி ஒழைச்ச ஒடம்பு. இப்போ நகரக்கூட தெம்பில்லாம கிழிஞ்ச பாய் மேல காய்ஞ்சி போன இஞ்சியாட்டம் கெடக்கா. அடிச்சி செத்தாலும், பசிச்சி செத்தாலும் இந்த மண்ணுலயே உசுரு போகட்டும்னு. செத்ததுக்கப்பறம் கௌரவமா சுடுகாட்ல தூக்கிப் போடவாவுது நாலு பேர் வேணுமேனுதான் அவள அங்கயே விட்டுட்டேன். வற்புறுத்தல. கண்மூடித்தனமா நேசிச்சிட்டா இதொரு பிரச்சனை தம்பீ. கடைசி காலத்துல பொண்டாட்டிக்கு முன்னாடி போய் சேந்தரனும்னு புருசனும், அவருக்கு முன்ன நான் போய்டணும்னு பொண்டாட்டியும் மனசுக்குள்ள வேண்டிகிட்டே நாள தள்ளனும். ஒருவிதத்துல பாத்தா சுயநலம்தான். ஆனா எனக்குமுன்ன மவராசி அவ போய்டணுக்குகிறதுதான் ஒவ்வொரு நாளும் அந்த கடவுள்கிட்டே நான் வேண்டிக்கறது. நாப்பத்தெட்டு வருஷமாச்சி. இதுநாள் வரைக்கும் கோவத்தலையும்கூட அவகிட்ட கை ஓங்குனது இல்ல.. கெழவின்னு கூட பாக்காம எட்டியெட்டி ஒதைக்கிறான். அவ அடி ஓத வாங்குறதே என்னால பாக்க முடியல. தடுக்குறதுக்கும் பலமில்ல. அப்புறம் புருஷன்னு ஒருத்தன் கூட இருந்து என்ன பிரயோஜனம்.

நீங்க எங்க போறீங்க..?

பால்ய சிநேகிதன் ஒருத்தன் இருக்கான். பேரு லட்சுமணன். சொல்லபோனா என்னோட கதை எவ்வளவோ பரவால்ல தம்பீ. பாண்டிச்சேரில ‘சருகுகள்’ ன்னு ஏதோவொரு முதியோர் இல்லத்துல இருக்கான். பாவம்.. அம்மா இல்லாத பொம்பள பசங்கள படிக்க வெச்சி, தனியாளா வளத்து ஆளாக்கி, மூணையும் நல்ல எடத்துல கட்டிக் கொடுத்து அவனோட பாரத்தையெல்லாம் எறக்கி வெச்சதும் பெத்ததுங்களுக்கு அப்பனே சொமயாயிட்டான்.

செத்த அப்பறம் ஒடம்புல இருக்க பாகத்தலாம் தானமா குடுக்க சம்மதம்னு ஒரு பாரம்ல கையெழுத்து போட்டா போதுமாம். சாகுற வரைக்கும் தங்கறது, சாப்பாடு செலவெல்லாம் அவங்களே கவனிச்சிப்பாங்களாம். மூத்த பொண்ணே பாரத்துல அப்பனோட கையெழுத்த போட்டு அந்த முதியோர் இல்லத்துல கொண்டு போயி விட்றுக்கா.

இரயில் வருவதற்கான அறிவிப்பைக் கணினி குரல் கரகரத்தது. கிறுக்குப் பிடித்தது போல் பரபரப்பானது நடைமேடை.

டீக்குக் காசை கொடுத்துவிட்டு, “கேக்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க, அதான் வேண்டாம்னு வந்துட்டிங்கல. அப்புறம் ஏன் போற எடத்த போன் பண்ணி சொன்னீங்க” என்றேன்.

முதிய முகத்தில் கசந்த புன்னகை சொட்டியது .

”எனக்குமட்டும் என்ன தம்பீ.. கடைசி காலத்துல பொறந்த மண்ணையும், பொண்டாட்டி, பேரனையெல்லாம் ஒதறி தள்ளிட்டு எங்கேயோ கண் காணாத இடத்துக்கு போயிடணுங்கிறது பெறவி வேண்டுதலா. என்னைக்காவது மனசு மாறி தப்பு பண்ணிட்டேன் தாத்தா.. மன்னிச்சுடுங்க. திரும்ப நம்ம வீட்டுக்கே வந்திடுங்க. உங்கள நல்லபடியா நான் பாத்துக்குறேன்னு புத்தி வந்து கூப்டறமாட்டானாங்ற நப்பாசை. நடக்குற எல்லாத்தையும் கடவுள்னு ஒருத்தன் பாத்துகிட்டுதான இருக்கான்”.

அஸ்தமிக்கும் சூரியனைக் கிழித்துக் கொண்டு பெரும் உஷ்ண மூச்சோடு வந்து நின்றது இரயில். நிழலைப் போலச் சலனமின்றி நகர்ந்தது அந்த உருவம்.

கார்த்திக் பிரகாசம்

சேலத்தை சேர்ந்த கார்த்திக் பிரகாசம் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். பல்வேறு இதழ்களில் இவரது கவிதைகள், சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன.

2 Comments

  1. இந்த கதையை படிக்கும்போது என கண்கள் குளமாகின என்ன சொல்வது பாசமிகு தாத்தா பாட்டி வளர்ப்பு குறை சொல்வதா அல்லது சுய புத்தி இல்லா வளர்ந்த பேரனை குறை சொல்வதா எப்படியோ இந்த கதை படித்த எனக்கு இதயம் கனத்தது கண்கள் ஈரமாகியது. .வாழ்த்துக்கள் கார்த்திக் பிரகாசம் அவர்கள்

  2. நிகழ்கால யதார்த்தம்…மனம் கனக்கிறது…முதுமை சிலருக்கு மட்டுமே வரம்… கார்த்திக் பிரகாசம் என் மாணவன் கார்த்திக் பிரகாசம் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்…

உரையாடலுக்கு

Your email address will not be published.