/

பற்றற்ற பறவை : கா.சிவா

'சொர்க்கத்தின் பறவைகள்' நூலை முன்வைத்து

2021- ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்ற  அப்துல்ரஸாக் குர்னா  எழுதிய நாவல்களில் ஒன்றான “Paradise” நாவல் லதா அருணாச்சலம் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு “சொர்க்கத்தின் பறவைகள்” என்ற பெயரில் வெளிவந்துள்ளது. 

     ஏறக்குறைய தமிழிலேயே எழுதி வெளிவரும் நூல்களுக்கு இணையாகவே மொழிபெயர்ப்பு நூல்களும்  வெளிவருவதை சில வருடங்களாக காணமுடிகிறது. குறிப்பாக எதிர் பதிப்பகமும் தமிழினி பதிப்பகமும் இதில் முன்னணியில் உள்ளன. மொழிபெயர்ப்பு நூல்களின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளதால் மொழிபெயர்க்கப்படுகிறதா அல்லது கிடைப்பதால் வாசகர்கள் விரும்புகிறார்களா என்பதை அறுதியிட்டுக் கூறுவது கடினம். 

       பொதுவாக இலக்கியத்தை வாசிக்க தூண்டுவது ஒரே உடலைக் கொண்ட வாழ்வில் பல வாழ்க்கையை வாழ்வதற்கான வாய்ப்பு உள்ளது என்பதுதான். அதாவது பௌதிகமான உடலுக்கு வாய்த்தது ஒரே வாழ்க்கைதான். ஆனால் அதற்குள் சதா அலைபாய்ந்து கொண்டிருக்கும் மாயமனதிற்கு பலநூறு வாழ்க்கைகளை வாழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவற்றை சாத்தியப்படுத்தி பரவசத்தையோ துயரையோ அளித்து அவற்றுள் திளைக்க வைப்பவை இலக்கியங்கள்தான். 

    அவற்றிலும் வேற்றுமொழி இலக்கியங்கள் காட்டும் இதுவரை அறியாத நிலக் காட்சிகளும் பண்பாடுகளும் பழக்கவழக்கங்களும் அவ்வப்போது பரவசங்களையும் சில வேளைகளில் மானுட தரிசனங்களையும் அளிக்க வல்லவை. இதை உணர்ந்தவர்கள்தான் மொழிபெயர்ப்புகளை நாடுகிறார்கள். 

   அவர்களுக்கு இதில் சில சிக்கல்களும் உள்ளன. அவற்றுள் முதன்மையான ஒன்று அதன் மொழிபெயர்ப்பு. மூல  ஆசிரியரின் பெயரையும் நூலின் பெயரையும் பார்த்து ஆர்வத்துடன் வாங்குபவர்களுக்கு     சில சமயங்களில் கல்கண்டு என வாயில் போட்ட கற்துகளாக கடிபட்டு பல் சேதாரமாவதுபோல மொழிபெயர்ப்பால் மனம் புண்படுவதும் உண்டு. சரியான மொழி பெயர்ப்பாளரால் மொழிபெயர்க்கப்பட்ட  சரியான நூல் கிடைக்கப் பெறுபவன் பாக்கியவான்தான். 

  நிற்க.  இப்போது சொர்க்கத்தின் பறவைகள் நூலைப் பற்றி பார்ப்போம். இந்நாவல் நூறு ஆண்டுகளுக்குமுன் தென்னாப்பிக்காவில் நிகழ்ந்தவற்றை யூசூப் என்ற வளரிளம்பருவ சிறுவனின் சில ஆண்டு வாழ்வின் மூலம் காட்டுகிறது. 

     பரந்த நிலப்பரப்பைக் கொண்ட ஆப்பிரிக்கா நாட்டில் அக்காலத்தில் நடந்த வர்த்தகத்தையும், அதனை மேற்கொள்ளும் வணிகர் அஜீஸ் அவ்வணிகத்தால் பெற்ற பலன்களையும், அவரின் வணிகத்திற்கு ஏற்படும் இடையூறுகளையும் மிக விரிவாகக் காட்டுகிறது நாவல்.  

    வணிகர் அஜீஸிடம் கடன் பெற்று திருப்பி செலுத்தமுடியாதவர்கள் தங்கள் மகனை அடிமையாக அவருடன் அனுப்புகிறார்கள். யூசூப் அவ்வாறு தந்தையின் கடனுக்காக அஜீஸிடம் செல்கிறான். முதலில் தன் வீட்டிற்கு முன்புறமுள்ள அவரது கடையில் ஏற்கனவே பணியாற்றும் கலீல் என்பவனுக்கு உதவியாளனாக நியமிக்கிறார் அஜீஸ்.

வணிகர் அஜீஸ், அவர் ஊரை சுற்றி கிடைக்கும் விலையுயர்ந்த பொருட்களை பல வண்டிகளில் சேகரித்துக்கொண்டு, நாட்டின் பிற பகுதிகளுக்கு சென்று விற்பதை தொழிலாகக் கொண்டுள்ளார். இதற்கு   பல்வேறு சரக்குகள் கொண்ட மூட்டைகளை வண்டிகளில் ஏற்றிக்கொண்டு பல மாதங்கள் பயணம் செய்யவேண்டும். வண்டிகளை இழுப்பதற்கும் சரக்குகளை பாதுகாக்கவும்  இரக்கமற்ற நியாபரா முகமது அப்துல்லா வழிநடத்தும்  ஒரு பெரும் மனிதகூலிப்படை தயாராகிறது. வர்த்தகப் பயணம் இசை வாத்தியங்கள் ஒலிக்க கிளம்பிச் செல்லும். இன்னும் நாகரீகம் அடையாத காட்டுமிராண்டிகள் (நாவலில் வரும் பதம்) வசிக்கும் பகுதிகளில் இவற்றை பண்டமாற்றம் செய்துவிட்டு பல மாதங்களுக்குப் பின் இந்தப்படை இசையொலிக்க  திரும்பி வரும். 

     சில காலம் கடையிலேயே பணியாற்றிக் கொண்டிருந்த யூசூப்பை அடுத்ததடவை வர்த்தக பயணத்திற்கு அழைத்து செல்கிறார் அஜீஸ். உற்சாகத்துடன் பயணத்தில் பங்கேற்கும் யூசூப்பிற்கு நியாபராவைப் பார்க்கும்போது மட்டும் அச்சம் எழுகிறது. இந்த வர்த்தகப் பயணத்தின் பாதியிலேயே இடையில் இருக்கும் ஒரு கடையில் இவனை விட்டுவிட்டு செல்கிறார். ஓராண்டு அக்கடையில் பணியாற்றும் யூசூப்பை அடுத்த பயணத்தின்போது தன்னுடன் இணைத்துக் கொள்கிறார். 

    இந்தப் பயணம் பல இடையூறுகளை சந்திக்கிறது. பொருள் நஷ்டத்துடன் உயிரிழப்பும் ஏற்படுகிறது. முதல் முறையாக வணிகர் அஜீஸின் முகத்தில் கவலையும் மனச்சஞ்சலமும் வெளித்தெரிகிறது. இளமையின் வீரியத்தில் பிரகாசிக்கும் யூசூப்பை பலரும் இறையம்சம் பொருந்தியவன் எனக் கூறுகிறார்கள். ஆனால் பயணத்தில் உடன்வருபவர்கள் இத்தனை பயணத்தில் ஏற்படாத இன்னல்கள் இப்போது ஏற்படுவதற்கு யூசூப்தான் காரணம் என்கிறார்கள். வணிகர் இரு கூற்றுகளையுமே பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இவன்மேல் எப்போதும்போலவே அன்புடன் இருக்கிறார். 

       பெரும் நஷ்டத்துடன் உயிர் பிழைத்ததே பெரும்பாடு என்ற நிலையில் ஊர் திரும்புகிறார்கள்.  யூசூப் மீண்டும் வீட்டிற்கு முன் இருக்கும் கடையில் பணியாற்றுகிறான். வணிகர் ஒரு உதவியாளனுடன் இடையில் யூசூப் பணியாற்றிய கடையில் வைத்திருக்கும் மதிப்புமிக்க பொருட்களை எடுத்துவரச் செல்கிறார். யூசூப் வேலை நேரம்போக வீட்டைச் சுற்றியுள்ள தோட்டத்தில் வேலை செய்கிறான். அப்போது எஜமானியம்மா இளைஞனாக திரண்டு நிற்கும் இவனைக் கண்டு அவளின் தீராத  நோயைக் குணமாக்கக் கோருகிறாள். அதன்பின் வணிகரின் வீட்டினுள் முதல்முறையாக நுழையும் யூசூப் எஜமானியம்மாளின் பணியாளாகவும் வணிகரின் இரண்டாவது மனைவியாகவும் இருக்கும் ஆமினாவைக் கண்டு விருப்பம் கொள்கிறான். அதன்பிறகு நடப்பதை யதாரத்தமாகக் கூறி நாவல் முடிகிறது. 

   சுருக்கமாக கூறியதில் சற்று குழப்பமாக இருக்கலாம். ஆனால் நாவல் மிக சுவாரசியமான வாசிப்பனுபவத்தைத் தருகிறது. பண்டமாற்று வர்த்தகம் பற்றி நாமும் அறிந்திருப்போம். ஆனால் பல வண்டிகளில் பொருட்களை கொண்டு சென்று மற்றொரு பொருளுக்கு மாற்றாக வணிகம் செய்வதை வாசிக்கும்போது வியப்பு தோன்றுகிறது. 

  அந்நாட்டில் சிறு சிறு பகுதிகளுக்கு தனித்தனி மன்னர்களும் தலைவர்களும் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான வழக்கங்களை கடைபிடிப்பவர்களாக உள்ளார்கள். குறிப்பாக ஒரு பகுதிக்கு வணிகர் குழு செல்லும் சமயத்தில் ஆற்றில் குளிக்கும் ஒரு பெண்ணை முதலை இழுத்துச் சென்றுவிடுகிறது. இந்த தீய நிகழ்விற்கு வணிகக்குழுவின் வருகைதான் காரணம் எனக்கூறி பெரும் இழப்பீடு கோரிப் பெறுகிறார்கள். இந்த சிற்றரசுகள் நம் சங்ககால சிற்றரசர்களின் ஆட்சியை நினைவூட்டுகிறது. ஆனால் இவை நூறாண்டுகளுக்குமுன் நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

   நாவலின் சிறப்பம்சம் என்பது வளரிளம் பருவத்திலிருந்து இளைஞனாக உருமாறும் யூசூப்பின் மன வளர்ச்சியை  தெளிவாக காட்டியுள்ளதுதான். நாவலின் தொடக்கத்தில் அஜீஸ் மாமாவிடமிருந்து கிடைக்கப்போகும் பத்து டாலருக்காக ஏங்குவது. கடையில் பணியாற்றும்போது கலீல் கூறுவதை முழுவதுமாக புரிந்துகொள்ள முடியாமல் தவிப்பது. பயணத்திற்கு நடுவே ஒருகடையில் தங்க நேரும்போது விசனப்படாமல் வாழப்பழகுவது,   வர்த்தகத்திற்கு செல்லும்போது வணிகரைப் பற்றி தெளிவாக புரிந்துகொள்வது. நாவலின் இறுதியில் அமீனாவின் மீது காதல்கொண்டு வெளியேற திட்டமிடுவது என வளர்ச்சிப் படிநிலைகள் நுணுக்கமாக சித்தரிக்கப்பட்டுள்ளன. 

    நாவலின் மற்றொரு பலம் கதை கூறலில் உள்ள பற்றற்ற தன்மை. நிகழ்வது எதையும் இது சரி அது தவறு என்ற எந்த சார்புநிலையும் எடுக்காமல் சம்பவங்களை மட்டும் விவரித்துச் செல்லும் பாங்கு. அங்கே இப்படி நிகழ்ந்தது எனக் கூறும் வரலாற்று ஆய்வாளனின் மொழி இதற்கு உதவுகிறது. ஆனால் இதுவே ஒருவகையில் பலவீனமாகவும் அமைகிறது. ஒரு படைப்பை வாசிக்கும்போது ஏதேனும் ஒரு பாத்திரத்தின்மேல் ஒன்றி வாசிக்கவே வாசகன் விரும்புவான். ஆனால் அதற்கு இந்நாவலின் கூறுமுறை இடம்கொடுப்பதில்லை. இதன் உணர்ச்சியற்ற மொழி இந்நாவலில் இடம்பெறும் பாத்திரங்கள் அனைவரிடமிருந்தும் சற்று விலகிநின்றே பார்க்கவைக்கிறது. 

   அதிலும் யூசூப்பின் பாத்திரம் எதன் மீதும் பற்று கொண்டுவிடாத மனநிலையுடன் படைக்கப்பட்டுள்ளது. தாய் தந்தையையோ கலீலையோ அல்லது இடையில் ஓராண்டு தங்கியிருந்த கடைக்காரரின் பெண்ணை பிரிந்தபோதோ யூசூப் எவ்வித துயரையும் அடைவதில்லை. ஒரு துறவியின் மனநிலையில் அடுத்ததென்ன என்பதை நோக்கி செல்பவனாக உள்ளான். இது நூலாசிரியரான அப்துல் ரஸாக் குர்னாவின் இயல்பாக இருக்கக்கூடும் எனத் தோன்றுகிறது. 

அப்துல் ரஸாக் குர்னா

     சொர்க்கத்தின் பறவைகள் நாவலின் மற்றொரு சிறப்பம்சம்  ஆண்களின் புற உலகமான வணிகத்தை மட்டும் கூறாமல் வீட்டிற்குள் அடைபட்டிருக்கும் பெண்களின் அகவுலகையும் சித்தரித்துள்ளதாகும். எஜமானியம்மா மற்றும் அமீனாவின் பாத்திரங்களின் உணர்வுகளும் உரையாடலும் நேர்த்தியாக சித்தரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக எஜமானியம்மா கூறுவதை அமீனா யூசூப்பிற்கு மொழிபெயர்க்கும் பகுதி சுவாரசியமானதாக உள்ளது. 

   என் மனதை மிகவுப் கவர்ந்த பகுதி வெள்ளையர்களைப் பற்றிய சித்தரிப்பு. அவர்களை சைத்தான்கள் என்றே பல பாத்திரங்கள் குறிப்பிடுகின்றன. அது உண்மை என்பதை வரலாறு உணர்த்திவிட்டது. ஆனால் வணிகர் அஜீஸ் பெரும் இக்கட்டில் மாட்டிக்கொண்டு அத்தனை செல்வத்தையும் இழந்து நிற்கும்போது ஜெர்மானியர்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. மனம் தளர்ந்திருந்த அஜீஸ் சற்று தெம்படைகிறார். அவருக்கு வெள்ளையர்களின் நீதியமைப்பு மீது நம்பிக்கை இருக்கிறது. அவர் எண்ணியதுபோலவே இவருக்கான நீதி கிடைக்கிறது. சைத்தான்களாக இருந்தாலும் நீதியை கடைபிடிப்பதில் உறுதி கொண்டவர்களாக உள்ளார்கள். இந்தியர்களும் இதற்காகத்தானே அவர்களை ஆதரித்து தங்களை ஆள்வதற்கு ஒப்புக்கொடுத்தார்கள் என்ற எண்ணம் தோன்றியது.  நாவலில் பெரும் ஆசுவாசம் அளித்த பகுதி இது. 

  நாவலில் அமைந்துள்ள மற்றொரு சுவாரசியமான விசயம் காலாசிங்கா என்ற பெயரிலான  இந்தியர் ஒருவரின் பாத்திரப் படைப்பு.   சீக்கியரான அவரை மகாராஷ்டிரத்தின் பனியாக்கள் என்றே ஆப்பிரிக்கள் அழைத்து கேலி செய்கிறார்கள். அவ்வாறு அழைக்கும்போது மனம் புண்படுகிறார் சிங். அவரின் பாத்திரம் அழகாக உருவாக்கப்பட்டுள்ளது. அவரது நடவடிக்கைகளையும் ஆன்மீகம் குறித்த அவரின் உரையாடல்களையும் வாசிக்கும்போது நூலாசிரியர் இந்தியர்களைப் பற்றி நன்றாக அறிந்துள்ளார் என்பதை உணரமுடிகிறது. 

   தமிழிலேயே எழுதப்படும் சில நூல்கள் சிக்கலான வாக்கிய அமைப்பு, பொருத்தமில்லா சொற்களென வாசிப்பவரை மூச்சடைக்க வைக்கின்றன. ஆனால், இந்நூலை   வாசிக்கும்போது ஓரிடத்தில்கூட சலிப்படைய செய்யாத வகையில் லதா அருணாச்சலத்தின் மொழிபெயர்ப்பு அமைந்துள்ளது. 

     முடிவாக,  புது நிலப்பரப்பையும், அறியாத வாழ்க்கை முறையையும் அலுப்பின்றி வாசிக்க வைக்கும்     சொர்க்கத்தின் பறவைகள் நூலை வாசிக்க வாய்த்தவர்களை பாக்கியவான்கள் என்றே கருதலாம். 

 நூல்: சொர்க்கத்தின் பறவைகள் 

ஆசிரியர்: அப்துல்ரஸாக் குர்னா 

மொழிபெயர்ப்பாளர்: லதா அருணாச்சலம் 

பதிப்பகம்: எதிர் வெளியீடு

கா. சிவா

விரிசல், மீச்சிறுதுளி, கரவுப்பழி ஆகிய மூன்று சிறுகதை தொகுப்புகளும் "கலைடாஸ்கோப்பினுள் ஓர் எறும்பு" எனும் கவிதைத் தொகுப்பும் "தண்தழல்" எனும் நாவலும் எழுதி வெளியிட்டுள்ளார்.

தமிழ்விக்கியில்

உரையாடலுக்கு

Your email address will not be published.